இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 22-02-2024

Total Views: 22915

பகுதி 8 

ஐந்தாம் மாதம் கோமதி தன் வீட்டிற்கு போன பிறகு தான் மூச்சு விட முடிந்தது அபிராமியால்.  அதற்குள் தேவநாதனும் கொஞ்சம் வளர்ந்து இருந்ததால் தூக்கமும் பரவாயில்லமால் இருந்தது.

நாட்கள் நகர நகர கோமதியின் மூலம் மட்டும் இல்லாமல் மீனாட்சியின் ரூபத்திலும் பிரச்சனைகள் வர ஆரம்பித்தன.

மீனாட்சி படிப்பில் விளையாட்டில் என்று எல்லாவற்றிலும் முதலாக இருந்தாள். எல்லாருமே முதல் மதிப்பெண் எடுத்தால் கடைசியில் இருப்பது யார் என்று ரகம் தேவநாதன். காசிநாதன் எப்போதுமே மீனாட்சியையும் தேவநாதனையும் ஒத்து பார்த்து அவனை திட்டுவார். அபிராமிக்கு கோபமாக வரும். தன் கையாலாகாத கோபத்தை அபிராமி மீனாட்சியின் மீது வெறுப்பாக வளர்த்துக் கொண்டார். 

குழந்தைகளுக்கே உரித்தான இயல்பாக மீனாட்சி அமரநாதன் மற்றும் தேவநாதன் செய்யும் குறும்புகளை காசிநாதனிடம் போட்டுக் கொடுத்து அவர்களுக்கு திட்டு வாங்கி கொடுத்து மகிழுவாள். இதில் விசுவநாதன் விதிவிலக்கு. அவன் அவளுடன் சேர்ந்து அண்ணன்களை போட்டுக் கொடுத்ததால் அவன் மட்டும் அவளுக்கு நண்பன். இவர்களுக்கு வீட்டிலேயே இருந்த எட்டப்பன். மொத்தமாக அவள் அந்த வீட்டிற்குள் வந்தாலே அபிராமி அமரன் மற்றும் தேவாவிற்கு கோபம் வருமளவிற்கு அவர்கள் உறவு இருந்தது. 

இதில் அமரனுக்கு ஜோடி மீனா என்று ஏதோ ஒரு பாட்டி ஒரு விசேஷத்தில் சொல்லப் போக அது அப்போது பதின் பருவத்தை தொட்டுவிட்டு இருந்த அமரனுக்கு கோபத்தை தர பத்து வயது மீனாவிற்கு குஷியாக இருந்தது. அதன் முழூ அர்த்தம் புரியாமலே நீ தான் என் ஜோடி என்று சொல்லியே அமரனை வேறுப்பேற்றுவாள்.

பிள்ளைகள் இப்படி சண்டை போட்டுக் கொண்டு இருக்க அந்த பக்கம் விநாயகத்தின் சோம்பேறி தனத்தினால் அவர்களுக்கு என்று கொடுத்த சொத்து அனைத்தும் கரைந்துவிட்டது. அதனால் தங்கை வீட்டு செலவும் காசிநாதனின் பொறுப்பு என்றானது. சரி ஏதோ தங்கைக்கு செய்துவிட்டு போகிறார் என்று அபிராமி இருந்தாலும் இது தான் சாக்கு என்று அண்ணனிடம் விலையுர்ந்த பொருட்களை கோமதி கேட்டு வாங்குவதும் அதை சில மாதங்களிலேயே விநாயகம் விற்று அந்த பணத்தை யாரிடமாவது ஏமாந்து வருவதும் வாடிக்கையானது. அதிலும் கோமதியிடம் ஒரு நகை கூட தங்கவில்லை. 

இந்த நிலையில் பூப்பெய்தினாள் மீனாட்சி. அந்த நேரத்தில் நடந்த நிகழ்வுகள் அவள் வாழ்க்கையில் அவள் குணத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தன. அவள் மாறி இருந்தாலும் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல அவள் மீதான அபிப்ராயங்கள் அமரனுக்கோ அபிராமிக்கோ மாறவில்லை. அவளுடன் அதே வகுப்பில் படித்த தேவநாதன் அவள் மாற்றங்களை உணர்ந்து அவளுக்கு ஒரு நல்ல தோழனாக மாற தொடங்கினான். 

அமரநாதன் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு சென்னைக்கு சென்றான். அவன் இல்லாத அந்த நாட்களில் தான் அவன் மீது தனக்கு இருந்த உணர்வுகளை புரிந்து கொள்ள தொடங்கினாள் மீனா. ஆனால் இந்த அன்பிற்கும் காதலுக்கும் எந்த அளவிற்கு அவனிடம் இருந்து எதிரொலி இருக்கும் என்று அவளுக்கு தெரியாததால் அதை தன் மனதின் உள்ளேயே புதைத்துக் கொண்டாள். கோமதி அபிராமி பனிப் போர் அப்படியே தொடர்ந்தது. இப்போது வளர்ந்துவிட்ட மீனாவிற்கு அம்மாவின் செய்கைகள் பிடிக்கவில்லை. ஆனால் அவளால் தடுக்கவும் முடியவில்லை. தன் பெயர் சொல்லி கோமதி காசிநாதனிடம் நகைகள் வாங்குவதை பார்த்த மீனாவிற்கு கோபம் வந்தது. நேரே காசிநாதனிடமே சென்று பேசினாள்.

"மாமா எனக்கு எதுக்கு இப்போ நகை வாங்கிட்டு இருக்கீங்க?"

"இது ஏதடா? இந்த வயசு பொண்ணு கேட்குற கேள்வியா? நீ போடுறதுக்காகவும் அதை நாங்க பார்த்து ரசிக்கவும் தான்." என்று செல்லமாக சொல்லி சிரித்தார் காசிநாதன்.

"அதோட ஏன் நிறுத்திடீங்க? எங்க அப்பா அதை வித்து சீட்டாடனும் சேர்த்து சொல்லுங்களேன்." என்று கோபம் குறையாமல் பேசும் பதினெட்டு வயது மீனாவையே உற்று பார்த்தார் காசிநாதன்.

"மீனா குட்டி. இதெல்லாம் பெரியவங்க விஷயம். நீ பாட்டுக்கு ஜாலியா இரு. தேவையில்லாததை மனசுல போட்டு குழப்பிக்காதே." என்று தாய்மாமனாக கண்டித்தார்.

"மாமா நான் ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை. எனக்கு எல்லாம் புரியுது. உலக நடப்பும் தெரியும்."

"தெரியுது இல்லை? அப்போ வீட்டுல வயசு பொண்ணு இருந்தா அவளுக்கு நகை வாங்கி சேக்குறது வழக்கம் தானே? நாளைக்கு உனக்கு கல்யாணம்னு வந்த தேவைன்னு உனக்கு தெரியாதா? இதுல உனக்கு என்ன இப்போ?"

"வாங்குறீங்க சரி. எங்க சேர்க்குறீங்க? அது எல்லாம் வீணா தானே போகுது."

"அதுக்கு என்னமா பண்ண முடியும்? என் தங்கச்சி பாவம் அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை." பெருமூச்சுவிட்டார்.

யாரு? உங்க தங்கச்சி? பாவம்... அதை நீங்க மட்டும் தான் மாமா நம்பனும் என்று மனதில் நினைத்தவள் வெளியில் சொல்லவில்லை.

"மாமா நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?"

"சொல்லுடா தங்கம். உனக்கு இல்லாத உரிமையா?" வாஞ்சையுடன் சொன்னார்.

"உங்களோட ஆதங்கம் எனக்கு புரியுது. வாங்காம இருக்க உங்களால முடியலை. வாங்குங்க. ஆனா என்கிட்டயோ அம்மா கிட்டயோ குடுக்காதீங்க. நீங்களே வச்சுக்கோங்க. நாளைக்கு எப்போ தேவைபடுதோ அப்போ மொத்தமா குடுங்க. உங்க ஆசையும் நிறைவேறும். இப்படி அப்பாகிட்ட ஏமாறவும் வேணாம். செலவும் மிச்சமாகும்."

காசிநாதனுக்கு மருமகளை பார்த்து பெருமை தாங்கவில்லை. எத்தனை பெண்கள் இந்த வயதில் இத்தனை பொறுப்போடு இருப்பார்கள்? தங்கையிடம் அவர் பெருமையாக சொல்லவும் மகளை முறைத்தார் கோமதி.

"அப்போ இப்போ போற விசேஷத்துக்கு எல்லாம் என்ன செய்வே?"

"அது தான் இப்போ விதவிதமா கலர் கலரா வருதே அதுல வாங்கி போட்டுக்குறேன்."

"நம்ம வீட்டு பொண்ணு கில்ட் நகை போடுறதா? பாருங்கண்ணே இவ பேசுறதை. இதுல நீங்க அவ புத்திசாலின்னு வேற சொல்லுறீங்க." அலுத்துக் கொண்டார் கோமதி.

"அம்மா இப்போ என் வயசு பொண்ணுங்க எல்லாம் அப்படி தான் போடுற ட்ரெஸ்ஸுக்கு மேட்சா போடுறாங்க. எனக்கும் அப்படி இருக்க தான் ஆசை. அவ்வளவு தான்." என்று விட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

"அவ சொல்லுறது தான் சரி கோமு. நானும் வாங்குறது எல்லாம் இந்த மனுஷன் வித்து செலவு செஞ்சுடறாரேன்னு கவலையா இருந்தேன், இப்படி செஞ்சா நீ ஆசை படுற மாதிரி நிறைய நகை சேர்க்க முடியும்." என்று சொல்லி எழுந்து சென்றார் காசிநாதன். அண்ணனின் மீது கோமதிக்கு இருந்த பிடி லேசாக நழுவி மீனாட்சியின் கையில் அப்போது முதல் செல்ல தொடங்கியது.

மருமகள் புத்திசாலி. அவளுக்கு எதிலும் பொறுப்பாக யோசித்து நடந்து கொள்ள தெரியும் என்ற கருத்து காசிநாதன் மனதில் பதிந்து போனது. ஏற்கனவே செல்ல மருமகள் இப்போது அவருக்கு ஒரு ஆலோசகராகவும் மாற தொடங்கினாள்.

தாய் தந்தை சரி இல்லாத மீனாட்சிக்கு தாய்மாமன் மீது எப்போதுமே உயிர் தான். அவர் அவளை சமமாக மதித்து பேசவும் அவருடன் மிகவும் ஒன்றி போனாள் மீனாட்சி. இந்த மாமன் வீட்டில் அவள் மனதை கவர்ந்த அமரனுடன் வாழும் வாழ்க்கையை பற்றி கனவுகளோடே கல்லூரி நாட்களை கடத்தினாள். 

இந்த நிலையில் அமரனை தொழிலில் உதவி செய்ய வருமாறு வற்புறுத்தி வேலையை விட வைத்து அழைத்து வந்திருந்தார் காசிநாதன். வேண்டா வெறுப்பாக ஊருக்கு திரும்பி வந்த அமரன் கண்களில் முதலில் பட்டது மீனாட்சி தான்.

அந்த வயதிற்கே உண்டான குறும்பு தலை தூக்க "அத்தான்... என்னத்தான்.." என்று கேலியாக பாடினாள்.

ஏற்கனவே கடுப்பில் இருந்த அமரன் இதில் இன்னும் கடுப்பேறி  “அடிச்சு பல்லெல்லாம் உடைச்சுடுவேன். அத்தான் பொத்தானு சொல்லிக்கிட்டு இந்த வீட்டு பக்கம் வந்தே... இனி ஒரு நாளும் நீ என்னை அப்படி சொல்லி நான் கேட்க கூடாது." என்று கண்களை உருட்டி விரல் நீட்டி எச்சரித்துவிட்டு போனான்.

கண் கலங்க சென்றவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் மீனாட்சி.


Leave a comment


Comments


Related Post