இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 23-02-2024

Total Views: 19563


பாகம்-4

அவனைக் கண்டதும்தான் இவளுக்கு உயிரே வந்தது.

காவலர் இவளிடம் பேசும்போது பிரதீப்  எதுவும் குறிக்கிடவில்லை. அமைதியாகவே காவலரை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் போனை வைத்து சுற்றிக் கொண்டே அவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்தான். 

அமைச்சரின் மகன் என்றால் சும்மாவா? அதிலும் முதல்வருக்கு நம்பிக்கையான வலது கரம். தினசரிகளில் அவர் பெயர் வராத நாட்கள் அனேகமாக இல்லை. 

"பிரதீப் பார்த்த பார்வையில் சர்வமும் ஒடுங்கித்தான் போனது அந்த இன்ஸ்பெக்டருக்கு, எச்சில் முழுங்கியவரின் வாயில் வார்தைகள் வரவில்லை. சுதாரித்துக் கொண்டார்.

"நீங்க  இவங்களுக்கு?"

"என்னவா இருந்தா என்ன? என்ன கேக்கணுமோ கேட்டுட்டு அனுப்புங்க அவங்க ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்காங்க"

அவனின்  அதிகாரத் தோணியில்  அடங்கி விட்டார் அவர்.

"இட்ஸ் ஓகே மேடம். நீங்க போங்க எதுவா இருந்தாலும் நானே நேர்ல வரேன்"

நீரு வெளியில் செல்ல பாஸ்கர் கண் ஜாடை காட்டி விட்டு வெளியில் வந்து ஆவலுடன் இணைந்து  கொண்டான். காரின் அருகில் இருவரும் பிரதீப்புக்காக காத்திருந்தனர்.

"நிரஞ்சனா கிட்ட பேசறது என்கிட்டையே பேசற மாதிரி. பார்த்து நடந்துக்குங்க இன்ஸ்பெக்டர்" மிரட்டும் தோணியில்  சாதாரணமாக சொல்லிச்  விட்டு சென்றான். 

மீசையை ஒரு விரலால் நீவி விட்டு மறு கையால் வேட்டியின் நுனியை பிடித்துக் கொண்டு வந்தவனை பார்த்ததும் நிரஞ்சனாவுக்கும் பாஸ்கருக்கும் அத்தனை கோபம்(இத்தனை அம்சமான ஆறடி நாயகனை கோபமாக பார்த்தாளா ? நான் மயங்கித்தானே போகிறேன்)

அவள் முறைத்தாலும் பாஸ்கர் அமைதியாகவே இருந்தான்.

"நீங்க ரெண்டு பேரும்  என்னோட வண்டில  ஏறுங்க. ட்ரைவர் உன்னோட வண்டிய  வீட்டுல விட்டுடுவார்"

"இல்லடா நாங்க ரெண்டு பேருமே இப்ப ஆபிஸ் தான்  போகணும்

"ஓகே வாங்க ஏறுங்க" அவர்களையும் அழைத்துக் கொண்டு அவன் சென்ற இடம் ஒரு நல்ல ஹோட்டல். 

அப்போதுதான் இருவருக்குமே உணவு என்பதே நினைவிற்கு வந்தது. பாஸ்கராவது பரவாயில்லை. நீருவின்  நிலை தான்  ரொம்ப மோசம். அவளுக்கு ஆடர் செய்ததை வேகமாக உண்டு முடித்தவன் பிரதீப்பின் தட்டையும் சேர்த்து உண்டாள்  இருவருமே ஆச்சர்யமாக அவளை பார்த்தார்கள். அத்தனை உணவு அவளுக்கு தேவை பட்டது போலும் இப்போதுதான் முகம் சற்று தெளிந்திருந்தது. கை கழுவி விட்டு முகம் அலம்பிக் கொண்டு வந்தாள் .

மீண்டும் காரில்  அலுவலகத்திற்கு பிரயாணம்.

"என்னடி! ஒன்னுமே  பேச மாட்டங்கற?" 

"இல்லடா ரொம்ப சோர்ந்து போய்  இருக்கேன். எங்கேர்ந்து எப்படி ஆரம்பிக்கணும் ஒண்ணுமே புரியலடா" 

" விடு அதான் நான் வந்துட்டேனில்ல எதுக்கு கவலை படற?"

"ஆமா ! எதுக்குடா அவ்ளோ லேட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த?

"சும்மாதான். லேசான சிரிப்புடன் லேசாக கண்ணடித் தான். 

அந்த அழகான சிரிப்புக்கு பரிசாக நன்றாக  மொத்து  வாங்கினான்.  

"எருமை! எருமை !அந்த  ஆளு பாஸ்கரையும் வெளில அனுப்பிட்டான் .என்ன எப்படி பார்த்தான் தெரியுமா? உயிர் போயிடாதான்னு இருந்தது"

தோழியின் பிஞ்சு விரல்கள் நன்றாகவே அடி  கொடுத்தது. இங்கே நான் இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். மற்ற பெண்களைப்  போல பிஞ்சு விரல்கள் மென்மையான விரல்கள் இது எதுவும் என்  நாயகிக்கு பொருந்தாது. அதற்காக பெண்ணாக இருந்தாலும்  அவள் ஆண்  பிள்ளை போல வளர்க்கப்பட்டவளும் இல்லை. கதை நகர நகர நீங்களே புரிந்து கொள்வீர்கள். 

"வலிக்குது. நிறுத்துடி"

"அது சரி நீ எதுக்கு கல்யாணதுக்கு வரல? பாஸ்கர் தன் பங்கிற்கு ஆரம்பித்தான்.

"நான்தான் சொன்னேனில்ல? ரொம்ப அர்ஜண்டான போர்ட் மீட்டிங். ஸ்கிப் பண்ண முடியல. எப்படியாவது தாலி கட்டறச்சே ஓடி வந்துடலான்னு பார்த்தா அந்த  வயசான பெரியவங்க சீக்கிரம் முடிச்சாதானே?"

"ஏதேதோ காரணம் சொல்லு. ஆகக் கூடி உங்க குடும்பத்துலேர்ந்து யாருமே வரல . வெரி ஹாப்பி"

உண்மையில் அவர்கள் யாருக்கும் இந்த திருமணத்தில் அத்தனை இஷ்டம் இல்லை . மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கலாம். சாதாரண குடும்பம் என்பது கூட பிரச்சனை இல்லை. அவர்கள் வெகு சாதாரணம் என்பது தான் பிரச்சனை.

அதற்கு இவள் சொன்ன சமாதானம், 

"நான் பெரிய வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போனா அங்க எல்லா வசதியும் இருக்கும். ஆனா அன்பு கிடைக்காது. சாதாரண வீடுன்னா என்னை கைல வச்சு தாங்குவாங்க"உண்மையில் அவள் அதைத்தான் விரும்பினாள் . அவள் செந்திலின் புகைப்படத்தை பார்த்ததுமே ஓகே சொல்லி விட்டாள் . அதற்குக்  காரணம் நல்ல மனிதர்கள். நேர்மையான குடும்பம், அதையும் தாண்டி தந்தை இல்லாத குடும்பம். இவன் ஒருவனே தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறான். அடுத்து திருமணம் செய்து முடிக்க இரு தங்கைகள். அப்படிப்பட்டவனுடன் சேர்ந்து தோள் கொடுக்க  ஆசைப்பட்டாள். உடன் பிறந்தவர்கள் சொந்த பந்தம் என்று யாரும் இல்லாததால் பொறுப்புகளை ஏற்க ஆசை பட்டாளோ ?அவளுக்கு எதற்கு இந்த மாதிரி எண்ணம்? ஏனோ அவனை பார்த்ததுமே ஒரு ஈர்ப்பு. இவன் எனக்கானவன். நான் இவனுக்குத் துணை. இவர்களின் குழந்தைகள் நாத்தனார்களின் பிள்ளைகள். வீடு முழுவதும் மனிதர்கள். ஏதேதோ யோசித்தாள் . அவள் மனம் என்ன நினைக்கிறது? எதற்காக ஏங்குகிறது?  அவளுக்கே புரியாதது, நமக்கா  புரிந்து விடும்? மனித மனம். வேகமானது. எதையோ யோசித்தாள் . அவள் நினைத்தது ஆசைப்பட்டது நடக்குமா? 

சிறிது நேரம் அமைதியாக வந்தவள் கார் சிக்கனலில்  நிற்கவும் அமைதியாக அவன் தோளில்  சாய்ந்து கொண்டாள் . அது மட்டும்தான் அவளுக்குத் தெரியும். அப்படியே உறங்கி இருந்தாள் . அப்போது மட்டும் அல்ல. அடுத்த சில வாரங்களே  அப்படித்தான். பிரதீப்பின் தோளிலும்  பாஸ்கர் தோளிலும்  சாய்ந்து உறங்கி விடுவாள் . நேரம் போனது. நாட்கள் கடந்தது எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை. அதனுடன் சேர்ந்து அவளுக்கு நடந்த திருமணமும் நினைவில் இல்லாமல் போனது. முதலில் எல்லாம் செந்திலிடம் அவன் அன்னையிடம்  பேச வேண்டும் என்று நினைத்தவளுக்கு அடுத்த சில நாட்கள் எப்படி போனது என்பதே தெரியாமல் போய்  விட்டது.

நிரஞ்சனாவின் அன்னையாலும் அவளிடம் பேச முடியவில்லை. அவள் எப்போது எங்கிருக்கிறாள்  என்பதே தெரியாமல் போனது.

'நாமளே போய்  தனியா பேசிட்டு வந்துரலாமா?' யோசித்துக் கொண்டிருந்தார். 

அலுவலகம் எரிந்தது ஒரு புறம் என்றாலும் அந்த காவலாளிகள் மருத்துவமனையில் இருந்து நல்ல படியாக வீடு திரும்ப வேண்டும். அவளுக்கு இருந்த டெங்ஷனில் தலை வெடிக்காமல் இருந்ததே பெரிய விஷயம். ஒருவர் வீடு திரும்பி விட்டார் மற்றொருவர் மருத்துவமனையில் தான் இருக்கிறார். இந்த சம்பவத்தை செய்தவர்கள் ஒரு வேளை  அந்த காவலாளியையும் ஏதாவது செய்து விட்டால்? அது வேறு பயமாக இருந்தது. போலீஸ் பாதுகாப்பு போட்டார்கள்தான். இருந்தாலும் மனதின் மூலையில் ஏதோ ஒருவிதமான பயம் .

அலுவகத்தில் ஓரளவு நிலைமை சரியாகத் தொடங்கி இருந்தது. ஆனால் பிரீதிங் ஸ்பேஸ் என்பார்களே அந்த அளவுக்கு அவள் இன்னும் வரவில்லை. ஒரு நாள் மாலையில்  அன்னை கால் செய்தாள் .

"நீ எங்க இருந்தாலும் என்ன பண்ணிட்டு இருந்தாலும் எல்லாத்தையும்  தூக்கி போட்டுட்டு ஒடனே வா!"

"ஓகே மாம்"

காரில் கிளம்பினாள்.

அலுவலகம் விட்டு வெளியில் வந்தவள் வீட்டிற்குச்  செல்ல வலது புறம் திரும்ப வேண்டும். பாஸ்கரிடம் இருந்து அழைப்பு  வந்தது. மீண்டும் யூ டர்ன் போட்டு அலுவலகமே வந்தாள் . அங்கே ஒரு பெண் காவல் இருந்தார். பிரதீப்பின் உதவியால் இவள் கேஸு  விஷயம் வேறு ஒருவருக்கு மாற்றப் பட்டிருந்தது. 

"நீங்க  சந்தேகப்பட்டது சரி தான் மேடம். தீ விபத்து ஏற்படுத்தினது அந்த ராஜ வேலுதான். ஆனா அவனை புடிச்சு உள்ள வைக்க சரியான ஆதாரம் சிக்க மாட்டேங்குது  " என்று ஆரம்பித்து அவருக்கு இருந்த சில சந்தேங்கங்களை கேட்டு தீர்த்துக்   கொண்டார்.

"அந்த சி சி டீவி புட்டேஜுல பார்த்த ஆளு?

"இல்ல  மேடம்! அவனோட  முகம் தெளிவா அதுல பதிவாகல. நிறைய கேமராக்கள் இருந்தாலும் உஷாரா எதுலயும் தன்னுடைய முகம் பதிவாகாத மாதிரி அவன் மாஸ்க் போட்டுட்டு வந்திருக்கான். அதுவும் டைரக்ட்டா  நாம கண்டுபிடிச்சுடக் கூடாதுன்னு பர்தா போட்டிருக்கான். அவனோட உயரம், நடை உடல் மொழி இது வச்சு பார்க்கும்போது தான் அவன் ஒரு பெண்ணுக்கு பதில் ஆணாக இருப்பானோன்னு சந்தேகமா இருக்கு" 

"உங்களால முடியுமா? இல்ல வேற ஏதாவது ஹெல்ப் தேவைன்னாலும் சொல்லுங்க. நானே கமிஷனர்கிட்ட பேசறேன்" 

அந்த  பெண் காவலர் பேசுவது எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவரின் திறமை மீது அவளுக்கு சிறிது சந்தேகம் வரத்தான் செய்தது . அலுவலகத்திற்கு வருபவர்களை நேர்காணல்  செய்யும் போது அவர்களின் நடை, உடை, பாவனை , உடல் மொழி எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வது தான் இங்கேயும். அந்த அனுபவம்  கூட அவரைப் பற்றி சட்டென மனதில் எடை போடக் காரணமாக இருக்கலாம். 

"அப்டின்னு எதுவும் தேவை இல்லை மேடம். சப்போஸ் தேவைன்னா நானே என்னுடைய ஹயர் அபிஷியல்ஸ் கிட்ட பேசறேன்". சொல்லி விட்டு டேபிளில் வைத்திருந்த தொப்பியை எடுத்துக் கொண்டவர், 

"தேவை ஏற்படும்போது நீங்க ஸ்டேஷனுக்கு வந்து தான் ஆகணும் மேடம்"

"கண்டிப்பா"  சொல்லியபடியே ஆமோதிப்பாக தலை அசைத்து அவளின் அறைக்  கதவு வரை வந்து வழி அனுப்பி வைத்தாள் . மீண்டும் வந்து தன் இருக்கையில் அமர்ந்து லேசாக சாய்ந்தபடி கண் மூடி சாய்ந்து தன்  பழைய நினைவுகளைக் கண் முன் கொண்டு வந்தாள் .

யார் இந்த ராஜ வேலு?

இவளுக்கு அறிமுகமாகி மிஞ்சிப்  போனால் ஒரு வருடம் ஆகி இருக்கும். தந்தையின் இறப்பில் வந்து நின்றவன். ஏனோ அவன் முகத்தை பார்த்ததும் அன்னையின் முகம் வெளிறி விட்டது. அதற்கான காரணம் இவளுக்கு பிறகு வந்த நாட்களில்  அன்னையே சொன்னது சிலது. தானாக தெரிந்து கொண்டது பலது. அப்படி அவள் தெரிந்து கொண்ட பல விஷயங்களை அவள் அன்னைக்கு சொல்லவில்லை. 

ராஜ வேலுவும் நிரஞ்சனாவின் அன்னையும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். ராஜவேலுவுக்கு பூரணி மீது ஒரு கண் அல்லது ஒரு தலை காதல் என்று அவர் பெயர் சூட்டினார்.  இவரோ திரும்பியும் பார்த்ததில்லை. 

"எனக்கு உங்களை பிடிக்கலை. நான் ராஜசேகரைத் தான் விரும்பறேன்"  தெளிவாக சொல்லி விட்டார். அதே போல கல்லூரி முடித்து வேலை பார்க்க ஆரம்பித்து இருவரும் வாழ்வில் ஒன்றாக இணைத்தார்கள். பூரணி வீட்டில் பெரிய வசதி இல்லை. அதனால் ராஜசேகர் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜா பணம் பார்த்தவர்களாக இருந்தாலும் ஜாதி அந்தஸ்தில் அவர்கள் சற்று குறைவுதான் அதனால் பூரணி வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்று நினைத்தார்கள் ஆனால் சரியாகவில்லை. ராஜவேலுவோ ராஜசேகருக்கு தன்னை விட பணம் அதிகம் என்றதால் தான் பூரணி தன்னை நிராகரித்தாள் என்று ஒரு எண்ணம். இல்லை இல்லை ஒரு விதமான தாழ்வு மனப் பன்மை. சில காலம் மன விரக்தியில் சுற்றிக் கொண்டிருந்தவர் பிறகு கோவையில் ஏதோ ஒரு மில்லில் வேலை பார்த்தான். முதலாளியின் மனம் கவர்ந்தவர் அவன் பெண்ணின் மனதையும் கவர்ந்து விட்டான் போலும்.பூரணி அளவுக்கு அவள் அழகு இல்லை. ஆனால் பணம் இருந்ததே!  திருமணம் நடந்தது. இருந்தாலும் ராஜ வேலுவால் பூரணியை மறக்க முடியவில்லை. மனதில் அவள் இருந்தாலும் உடலால் மனைவியுடன் இணைந்தார். விளக்கை அணைத்து  இருளில் நடக்கும் மாயம். அங்கே மனம் தான் அழகாக மறைந்து விடுமே! அடுத்த பத்தாவது மாதம் அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது. நல்ல அழகு. உலகில் அனைத்தையும் சாதித்து விட்ட மமதையில் இருந்தார். ஒரு முறை சென்னை வந்தபோது அவர் காரில் வர பூரணி பேருந்தில் அமர்ந்திருந்தாள். பெரிய வசதி இல்லை என்றாலும் அவளின் அழகு?எந்த பணத்திற்காக தன்னை வேண்டாம் என்று ஒதுக்கினாளோ  இன்று அந்த பணம் இல்லாமல் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறாள். மனம் மகிழ்ந்தது. காதல் கொண்ட மனம் அல்லவோ?

ஊருக்குத் திரும்பியவர் மனைவியுடன் சில காலம் சந்தோசமாக இருந்தார். சில காலம்தான். குழந்தைக்கு ஆர்ட்டிஸம் என்று தெரிந்தபோதுதான் உலகமே இடிந்து தலையில் விழுந்தது போல இருந்தது. சில வருடங்கள் மட்டுமே உயிருடன் இருந்த குழந்தை  என்னால் முடியாது என்று மரித்துப் போனது. மனைவி மனம் தளர்ந்தாள். அவளை ஆற்றி தேற்றி அணைத்து ஆறுதல் சொன்னதில் அடுத்தது பிறந்தது . குழந்தை நல்ல விதமாகவே பிறந்து வளர்ந்தது. அப்படித்தான் நினைத்தார்கள் வளர வளரத்தான் புரிந்தது. அவனுக்கும் ஐ கியூ  குறைவு என்பது. தெரிந்த நாள் முதல், மனைவி மீது ஒரு விதமான எரிச்சல் கோபம் எல்லாம் வந்தது. மகனும் மகளும் அப்படி பிறந்ததில் இவருக்கு என்ன பங்கோ அதே தான் அவளுக்கும் என்பதை மனம் ஏற்கவில்லை.  தான் இத்தனை துக்கப்படும்போது அவள் கணவனுடன் சந்தோசமாக வாழ்வதா?இன்னும் அந்த நேரத்தில் ராஜா சேகர் பணத்தில் புகழில் கொடி  கட்டிப் பறந்த காலம்.இவருக்கோ வயிற்றெரிச்சல். முதலில் சின்ன கோபம். வருத்தம். அவளை திருமணம் செய்திருந்தால்  தனக்கும் நல்ல விதமாக  குழந்தை பிறந்திருக்குமோ மனதில் ஒரு சிறு ஏக்கம்.  நாட்கள் மாதங்களாய்  மாதங்கள் வருடங்களாய் வளர ஆத்திரமும் பொறாமையும் கூடவே சேர்ந்து வளர்ந்தது. பூரணியை பழி தீர்க்க கிளம்பினார். விதி அவரை முந்திக் கொண்டது. ராஜசேகர்  கட்டிக் கொடுத்த ஒரு பெரிய அடுக்ககம் சென்னையில் வந்த சிறு நில நடுக்கத்திலேயே இடிந்து விழுந்தது. இவர் நம்பி  வேலையை ஒப்படைத்தவர்கள் நன்றாகவே இவரை ஏமாற்றி இருந்தார்கள். நஷ்டம் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம். பிரச்சனைகள் பூதாகாரமாய் வந்து நின்றது. பணத்திற்கு அடுத்து என்ன செய்வது? நிலைமையை எப்படி சமாளிப்பது? மூளை யோசித்தது. என்னால் முடியாது. இதயம் வேலை நிறுத்தம்  செய்து விட்டது. அந்த நிலையை இவரும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார். வீடு வாங்கி இருந்தவர்களை இப்போதே எங்கள் பணம் எங்களுக்கு வேண்டும் என்று கேஸ் போட வைத்தார். வழக்கையும் விரைவாக முடிக்க துரிதப் படுத்தினார்.இரு பெண்கள் என்னதான் செய்வார்கள்? நிரஞ்சனா அப்போது எம் பீ ஏ படித்துக் கொண்டிருந்தாள். படிப்பை அப்படியே நிறுத்தி விட்டு வந்தவள்தான். பிரதீப்பின் தந்தை லிங்கமும்  ராஜ சேகரும் சிறு வயது நண்பர்கள். பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு உதவி செய்து ஆதரவுக் கரம் நீட்டி லிங்கத்தின் பெற்றோரையும் சமாதானப்படுத்தி இன்று அவர் ஒரு பெரிய ஆளாக வந்து நிற்பதற்குக் காரணம் ராஜசேகர்தான். நண்பன் என்று சொன்னாலும் அவன் தான் தனக்கு ஒரு பெரிய அண்ணன்  போல,என்று சொல்லிக் கொண்டிருந்த லிங்கம்தான் அண்ணனின் பொறுப்புகளை ஏற்று நடத்தினார். இருந்தாலும் கம்பனி மூழ்கி விட்டது. கெட்டுப்  போன பெயரை மீட்டெடுக்க முடியவில்லை . அதனால் தான் நிரஞ்சனா இந்த இன்டீரியர் கம்பனியை தொடங்கியது. வேலையில்  ஆர்வம் இருந்தது. தொழிலும் நன்றாகவேத் தெரியும். நல்ல நண்பர்கள், அவள் மீது இருந்த நம்பிக்கை நம்பிக்கையான வேலை ஆட்கள் எல்லாம் சேர்ந்து ஓரளவு முன்னேறி விடலாம் என்று நினைத்தாள். அதையும் மீறி குறுகிய காலத்தில் நன்றாகவே வளர்ந்து விட்டாள் .பூரணி வாழ்வு அத்தோடு முடிந்தது  என்று ராஜவேலுவால்  நிம்மதி அடைய முடியவில்லை. மகள் வளர்ந்து நிற்கிறாள். அவளை எப்படி அழிப்பது? அழிப்பது என்றால் உயிருடன் விளையாடுவது மட்டும்தானா? வேறு விதத்தில் ?யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவு சாதுர்யமாக வேலையை முடித்திருந்தார் ராஜவேலு. 

தொடரும்....



Leave a comment


Comments 2

  • அஸ்வதி
  • 3 months ago

    ராஜவேலு நீ தான் எதிரியா ? ஏன்யா, ஒரு தலையா காதலிச்சு அந்த பொண்ணு உன்னைக் கட்ட சம்மதிக்கலன்னா இப்படி தான் தில்லு முல்லு பண்ணுவதா? பாவமில்லை அவள்.

  • அஸ்வதி
  • 3 months ago

    ராஜவேலு நீ தான் எதிரியா ? ஏன்யா, ஒரு தலையா காதலிச்சு அந்த பொண்ணு உன்னைக் கட்ட சம்மதிக்கலன்னா இப்படி தான் தில்லு முல்லு பண்ணுவதா? பாவமில்லை அவள்.


    Related Post