இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு..4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 23-02-2024

Total Views: 41650

“என்ன கெழவி…? தூங்காம வாட்ச்மேன் வேலை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க… உன் மாமனார் கட்டின வீட்டை கள்ளன் தூக்கிட்டு போயிருவான்னு பயமா…?” நக்கலாய் பேசியபடியே பாட்டியை நெருங்கி வந்தாள் பூச்செண்டு.


“என் வீட்டை எந்த கள்ளன் தூக்கப் போறாய்ன்… உன்னையத்தேன் எவனாவது தூக்கிட்டு போயிருப்பானோன்டு வாசல காத்து ஒக்காந்து கிடக்கேன்… ஊரே அடங்கிப் போயிருச்சு… அப்படி என்னத்த மேலுகோப்பு பண்ற மேலுகோப்பு… ஙொப்பன் குறுக்க ஒடிச்சு வீட்டில போட்டிருந்தா நீ துள்ளிக்கிட்டு திரிய மாட்ட…” கோபத்தில் பொரிந்தார் பாட்டி.


“என்ன கெழவி…? வாய் வாய்க்கா வரப்பு வரைக்கும் நீளுது… என் அயித்த சமையல தின்னு உனக்கு கொழுப்பு ரொம்பத்தான் கூடிப்போச்சு… எல்லாத்தையும் குறைக்கச் சொல்றேன் இரு…” 


வண்டி சாவியை சாவிகள் மாட்டப்பட்டிருக்கும் இடத்தில் மாட்டி திரும்பி நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தவளை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி.


“ஏன் கொழுப்பு கொறையிற மாதிரி நீதேன் ஆக்கி அரிச்சுப் போடு பாக்கலாம்… மெப்பனையா மினுக்கிக்கிட்டு என் மகளையும் ஏமாத்துற என் மருமகளையும் ஏமாத்துற… நீ இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நான்தேன்டி உனக்கு மாமியா… கூட கூட பேசுற இந்த வாய கொன்னிப் போக வைக்கலேன்னா நான் கொழந்தவேலு பொண்டாட்டி இல்ல…”


தண்டட்டி பலவாக்கிலும் ஆட தலையை வெட்டி வெட்டி பேசிய பாட்டியை பார்த்து தரணிக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. அவன் உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பதை பூச்செண்டும் கவனித்தாள்.


“என்ன… பக்கத்துல பாடிகார்ட் உக்காந்திருக்கிற திமிரா…? ரெண்டு நாள்ல எல்லாரும் கிளம்பி ஓடிருவாக… மூக்குப்பொடி வேணும் சுருட்டு வேணும் பொகல வேணும்னு பொழுதுக்கும் என்கிட்டதான் வரணும் கெழவி… பொகலக்குள்ள கொள்ளுப் பட்டாச திணிச்சு கொடுத்துருவேன் பாத்துக்க… அப்புறம் உன் புச்சன்கிட்ட பொடிநடையா கிளம்ப வேண்டியதுதான்…” 


தன் சடையை தூக்கி முன்னால் போட்டு அதனை சுழற்றி ஆட்டியபடியே பேசியவளை இதழ் விரிந்த ரசனைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்தவள் “இந்த பனைமரம் ஏன் படுத்து தூங்காம இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்கு…” தனக்குள் முணுமுணுத்து அன்று காலை அவன் மடியில் அமர்த்தலாய் அமர்ந்திருந்த அந்த கோலம் கண்களுக்குள் ஓட பட்டென்று முகம் மாறி அவனை கீழ்கண்ணால் பார்த்தபடி மெல்ல அடிவைத்து உள்ளே நடந்தாள்.


“அடங்காத சிறுக்கி… இவகிட்ட என் பேரன் என்ன பாடுபடப் போறானோ… ஆனாலும் இவ கொட்டத்த அடக்க அவேந்தேன் சரியான ஆளு…” என்ற பாட்டி பெரிய கொட்டாவியை விட்டு “சரிய்யா… நீ ஏன் உட்கார்ந்து கெடக்க…? பசப்பி படுக்கப் போயிட்டா… நீயும் போய் படு…” என்றவர் கொசுவத்தை உதறியபடியே “எப்பா… கருப்பா…” என்றபடி எழுந்து சற்றுத் தள்ளி இருந்த கட்டிலில் சென்று படுத்துக் கொண்டார். மாடிப்படியை ஒட்டி பக்கவாட்டில் தனது போனை சார்ஜரில் போட்டபடி நின்றிருந்தாள் பூச்செண்டு.


“வர்றதுக்கு லேட் ஆகும்னா வீட்டு பெரியவங்களுக்கு ஒரு போன் பண்ணி சொல்லலாமே…” கணீர் என்ற கம்பீரக் குரலில் வேகமாய் திரும்பினாள்.


மாடிப்படியின் கைப்பிடியின்மேல் சாய்ந்து கைகட்டியபடி நின்றிருந்தான் தரணிதரன். கண்கள் சுருக்கி அவனை பார்க்க அவனோ புன்னகை முகமாக நேர்கொண்டு அவளை பார்த்திருந்தான்.


“நீங்க வர்ற வரைக்கும் பாட்டி பதட்டமாதான் இருந்தாங்க. அவங்க கவலைப்படறதிலேயும் நியாயம் இருக்குதானே… சிட்டிஸ்ல பத்து மணி சாதாரண நேரம்தான்… ஆட்கள் நடமாட்டம் இருந்துட்டே இருக்கும்… ஆனா உங்க ஊர் எட்டு மணிக்கு எல்லாம் அடங்கிருது… நடமாட்டமே இருக்கிறதில்ல… நீங்க தனியா வர்றது பாதுகாப்பு இல்லைங்கிற பயம்தான் அவங்களுக்கு…” சீராக அதிராமல் பேசியவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


‘முனிக்கு இப்படி ஒரு நிதானமான ஃபிரண்டா…? தடதடன்னு எல்லாத்துலயும் அவசரத்தனம் புடிச்சு ஆடும் முனி… இவரு இவ்வளவு நிதானமா தெளிவா பேசுறாரு…’ தனக்குள் தோன்றிய ஆச்சரியத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பதிலும் கூறாமல் அமைதியாகவே நின்றாள்.


“நீங்க தைரியமான பொண்ணாவே இருக்கலாம்… நல்ல விஷயம்தான்… ஆனாலும் ரொம்ப லேட் ஆகுற மாதிரி தெரிஞ்சா யாரையாவது துணைக்கு கூப்பிட்டுக்கோங்க… அட்வைஸ் பண்றதா எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க… மனசுக்கு தோணினதை சொன்னேன்…” 


அதே புன்னகையுடன் கூறி இரண்டு படிகள் மேல ஏறியவன் மீண்டும் நின்று திரும்பி “But you are so interesting… உங்க பேச்சு ஆக்டிவிட்டீஸ் எல்லாமே very pretty… நான் பார்த்த பொண்ணுங்கள்ல நீங்க வித்தியாசமா இருக்கீங்க… I like it…” சொன்னவன் அழுத்தமாய் அவளை ஒரு பார்வை பார்த்து வேகமாய் மாடி ஏறி இருந்தான்.


“ஹான்…” வாயை திறந்தபடி மாடியையே பார்த்தபடி நின்றிருந்தாள் பூச்செண்டு.


“என்னத்த புடிச்சதாம் இந்த பனைமரத்துக்கு…? தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷ்ல பேசிக்கிட்டு அரையும் குறையுமா துணி போட்டு சுத்துவாளுக அவங்க ஊர்ல… அதனால என்னை பார்த்தா வித்தியாசமா தெரியும் போல… ஆனாலும் நம்ம முனி மாமாவுக்கு இந்த பனைமரம் பொருந்தாத பிரண்டுதான்… ரொம்ப நல்ல மாதிரி தெரியிறார்…” தனக்குத்தானே பேசியபடி அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


மறுநாள் அதிகாலையிலேயே அவளை எழுப்பி அமர வைத்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார் செண்பகம்.


“நாங்க எல்லாரும் செத்த நேரத்துல மதுரைக்கு கிளம்பிருவோம்டி… உங்கப்பா தோட்டத்துக்கு போயிட்டு இங்கேதான் சாப்பிட வருவாரு… காலையிலத்துக்கு பலகாரம் செஞ்சு வச்சுட்டேன்… மதியத்துக்கு எதையாவது செஞ்சுரு… அந்த தரணி தம்பி இங்கேதான் இருக்கும்… சாப்பிட கூச்சப்பட்டுக்கிட்டு இருக்கப் போகுது… உன் மாமேங்கிட்ட பேசுற திமிரு பேச்ச அதுகிட்ட காட்டிராத… பதுவுசா நடந்துக்க… ரெண்டு நேரத்துக்கும் சாப்பிட குடுத்திரு… உன் அப்பா கூட தோட்டத்துக்கு போறேன்னு சொல்லி இருக்கு… இல்லேனாலும் மொக்கச்சாமியை வரச் சொல்லி அவே கூட தோட்டத்துக்கு அனுப்பி வை… அது பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கிட்டு பொழுத போக்கிரும்… நாங்க சாயங்காலம் வந்துருவோம்…” செண்பகம் பேசிக் கொண்டே போக தூங்கி விழுந்தபடியே அரைகுறையாய் காதில் வாங்கிக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


“ஏ… கேன கழுத… பேசறது காதுல விழுகுதா இல்லையா…?” அவள் தலையில் தட்டினார்.


“எத்த… போறதுனா கெளம்பி போத்த… சும்மா பாடம் நடத்திக்கிட்டு… அவர் என்ன கொழந்தையா…? கைய புடிச்சு ஊர சுத்திக் காட்ட… உன் மகனுக்கே பாடம் நடத்துற அளவுக்கு தெளிவானவர்தான்… சோறுதானே… மத்தியானம் ஆக்கி வச்சிடறேன்… என்னைய கொஞ்ச நேரம் தூங்க விடுறியா…” தலையை சொரிந்தபடியே சொன்னவள் தலையோடு போர்த்தி படுத்துக் கொண்டாள்.


‘இவள நம்பி அந்த புள்ளைய விட்டுட்டு போகணுமா…? இப்பவே ஆக்கி வச்சா காஞ்சு போயிரும்னு பார்த்தா இவ அந்த புள்ள வயித்த காய போட்டுருவா போல தெரியுதே… அண்ணேங்கிட்ட சொல்லி கெளப்புக்கு கூட்டிட்டு போக சொல்ல வேண்டியதுதேன்…” சத்தமாகவே முனகியபடி வெளியேறியவர் கிளம்பும் பணியில் இறங்கி இருந்தார்.


“டேய் தரணி… உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே… நாங்க வர ஈவினிங் ஆயிடும்… கவர்மெண்ட் செக்டார்… எப்படினாலும் லேட் பண்ணிடுவாங்க… நீ சமாளிச்சுக்குவியா…?” குளித்து கிளம்பி தனது கைச்சட்டையை முழங்கைவரை மடித்தபடியே கேட்டான் முகிலன்.


“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா… நான் ஜாலியா இந்த ஊரை சுத்திட்டு செமையா ஒரு vlog ரெடி பண்ணலாம்னு இருக்கேன்…” படுக்கையில் படுத்த நிலையில் காலாட்டியபடியே பதில் அளித்தான் தரணி.


“பண்ணு பண்ணு .. நான் இடையில கால் பண்றேன்… நரிச்சின்னக்கா வீட்லதான் இருப்பா… அவளை வேணா கூட கூட்டிட்டு போ… ஒரு vlog என்ன ஒன்பது vlog ரெடி பண்ணலாம்…” சிரித்தபடியே முகிலன் கூற தானும் சிரித்தபடி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் தரணி.


“இன்னைக்கே வேலை முடிஞ்சுட்டா ரொம்ப சந்தோஷம்… நாளைக்கு ஒரு நாள் இருந்துட்டு அடுத்த நாள் ஊருக்கு ஓடிடலாம்…” கண்ணாடியின் முன் நின்று இடவலமாய் தன் முகத்தை அழகு பார்த்து தன் தலையை சரி செய்தபடியே கூறியவனை சில வினாடிகள் அழுத்தமாய் பார்த்திருந்தான் தரணி.


“இங்கே இருக்கிறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா முகில்…?” தலையணையை எடுத்து தன் மடியில் வைத்து கைகளை கோர்த்துக் கொண்டவனை திரும்பிப் பார்த்து புன்னகைத்தான் முகிலன்.


“அப்படி இல்லடா… அந்த அளவுக்கு நமக்கு வொர்க்லோட் அங்கே அதிகம் ஆயிடும்… நமக்குத்தானே பிரஷர்…”


“டேய்… என்கிட்டேயேவா…? நம்ம ஒர்க்கை இங்கே இருந்து கூட பண்ணலாம்… வீ கேன் அட்ஜஸ்ட்… இந்த வீட்டுக்கு ஒரே பையன் நீ… பெத்தவங்க கூட மத்தவங்க கூட இன்னும் டைம் ஸ்பென்ட் பண்ணுடா… இப்படி எல்லாம் உயிரை கொடுக்கிற சொந்தங்கள் இப்போ கிடையாது… நாம பெங்களூர் போயிட்டா அங்கே மெக்கானிக்கல் லைஃப்தான்… எப்பவோ இங்க வர்ற… இவங்களையெல்லாம் ஏங்காம சந்தோஷப்படுத்திட்டு வா…”


“சரிங்க ப்ரொபசரே… உங்க விரிவுரையை ஆரம்பிச்சுடாதீங்க… நான் கிளம்புறேன்… காலையில உனக்கு கம்பெனி கொடுக்க மாமா வந்துருவார்… அவர்கூட ஜாயின் பண்ணிக்கோ… நரிச்சின்னக்கா கிட்ட சூதனமாவை இரு… வாயை கொடுத்து மாட்டிக்காதே…” பேசியபடி அறையை விட்டு வெளியேறி கீழே சென்றிருந்தான் முகிலன்.


இரவில் பாட்டி கூறிய ஒரு விஷயத்தை முகிலனிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தவன் பேச்சு சுவாரஸ்யத்தில் மறந்திருந்தான். இந்த நொடிதான் அந்த விஷயம் ஞாபகம் வந்தது.


‘எப்படி சமாளிப்பான்…? என்ன சொல்லி சமாளிப்பான்…?’ ஏதேதோ யோசனையுடன் கண்களை சுழற்றியவன் இழுத்து பெருமூச்சுவிட்டு படுக்கையை விட்டு எழ மனமின்றி மீண்டும் படுத்துக் கொண்டான். படுத்தவன் உறங்கியும் போனான்.


கலகலவென சில்லறைகளை சிதறவிட்டதுபோல் சிரித்தபடி ஓடிக் கொண்டிருந்தாள் அவள். தென்னை, வாழை, கரும்பு என்று சுற்றிலும் பசுமையை மட்டுமே சுமந்திருந்த அந்த வனப்பு மிகுந்த தோட்டப்பகுதிக்குள் தாவணியை இழுத்து சொருகி தரையில் வழிந்து விழுந்த பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு விரித்துவிட்ட அடர்ந்த கூந்தல் காற்றோடு காதல் மொழி பேசி நாட்டியம் ஆட மான்குட்டியாய் குதித்து ஓடிக் கொண்டிருந்தாள்.


“ஏய்… நில்லு… நில்லுடி…” கம்பீரம் கலந்த காந்தக் குரல் ஒன்று அவள் முதுகில் பின்னே துரத்தியபடி… வேட்டியை ஒற்றைக் கையால் தூக்கிப் பிடித்தபடி கைகளில் சிக்காமல் துள்ளி ஓடும் மான்குட்டியை துரத்தும் வேடனாய் வசீகரமாய் அவன்.


“முடிஞ்சா புடிச்சுப் பாரு…” தேனில் குழைத்த குரலில் சவால்விட்டு சிரிப்பு முத்துக்களை சிதறவிட்டபடி தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாள்.


மரங்களைக் கடந்து குறுகிய நீரோடை ஒன்று எதிர்ப்பட ஒரு நொடி தாமதித்து நின்றவள் முழு முழுக்க காட்டாமல் பக்கவாட்டில் திரும்பி அவன் தன்னை நெருங்கிவிட்டான் என்பதை உணர்ந்து பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகி வேகமாய் தண்ணீருக்குள் குதித்து கைகளை விசிறியபடி வேக நடையுடன் முன்னேற… துரத்தி வந்தவன் தானும் தண்ணீருக்குள் குதித்து விசிறிய கைகளில் ஒன்றை தாவிப் பிடித்திருந்தான்.


அவன் ஸ்பரிசத்தில் ஓட்ட நடை நின்றுபோய் சிலையானாள் அவள். அவள் கைப்பற்றிய மகிழ்ச்சியில் சிரிப்புடன் சிலிர்ப்பும் சேர்ந்து சில நொடிகள் தானும் உறைந்து நின்றான். அவள் தப்பிச் செல்லா வண்ணம் அழுத்தமாய் அவள் கைப்பற்றி தன் கையோடு கோர்த்துக் கொண்டான்.


“தப்பிச்சா ஓடுற… உன்னை விடமாட்டேன்… இப்ப மட்டும் இல்ல… எப்பவுமே…” நீரோடையின் சலசலத்த ஓசையைத் தாண்டி சத்தமாய் கூறியிருந்தான்.


“அய்யய்யோ… இது என்ன வம்பா போச்சு… இந்தாங்க… உங்களைத்தான்… அய்யோ… என் கையை விடுங்க… என் விரல் எலும்பை எல்லாம் உடைச்சிராதீங்க… யாத்தே… யோவ்… விடுய்யா கையை…” சத்தமிட்டு கத்தியவளின் குரல் காதில் ஒலிக்க அடுத்த நொடி ஆஆஆ என்ற அலறலுடன் எழுந்து அமர்ந்தான் தரணீதரன்.


கையை தேய்த்தபடியே மலங்க மலங்க விழித்தான். இடுப்பில் ஒரு கையும் மறு கையில் காபி கோப்பையுமாய் அவனை முறைத்த நிலையில் அவள்… காபி கோப்பையால் சூடு வைத்ததால் பதறி எழுந்திருக்கிறான் பையன்… பாவம்… கனவில் இருந்து இன்னும் விடுபடவில்லை போலும்.


“ப்ச்… கனவா…?” சலித்துக் கொண்டான்.


“பேக் போர்ஷன் அவ்ளோ அழகா இருந்தது… முகத்தை பார்க்கிறதுக்கு முன்னால கனவை கலைச்சு விட்டுட்டாளே படுபாதகி…” எரிச்சல் மண்ட அவளை முறைத்திருந்தான்.


“எதுக்கு சூடு வச்சே…?” கோபமாய் கேட்டான்.


“நீங்க எதுக்கு என் விரல் எலும்பை எல்லாம் உடைச்சீங்க…?” முறைத்தபடி தானும் பதிலளிக்க குழப்பமாய் கண்கள் சுருக்கினான்.


‘அடக்கடவுளே கனவோட நிஜத்தை கலந்துட்டேன் போல…’ சட்டென்று முகத்தில் அசடு வழிய அவளை பார்த்து சிரித்து வைத்தான்.


“காபி கொடுக்கலாம்னு வந்தா கையை உடைக்கப் பார்க்கிறீங்க… நல்ல ஆளுதான்… இந்தாங்க… காபியை பிடிங்க…” புருவம் நெறிய காபி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.


ஜன்னல் வழியே தழுவிச் சென்ற தென்றலின் சுகந்தத்தை அனுபவிக்கும் முன் பில்டர் காபியின் வாசம் நாசியில் ஏறி வேறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த “வாவ்…” என்றபடி கண்மூடி ரசித்து காபி பருகினான்.


சில நொடிகள் அவனை ஆராய்ந்து திரும்பிச் சென்றவளை “ஹலோ…” என்று அழைக்க வேகமாய் திரும்பியவள் “என் பேரு ஹலோ இல்ல…” என்றாள் கோபமாய்.


“காபி ரொம்ப நல்லா இருந்தது பூங்கொடி…” புன்னகை இதழ்களுடன் கூறினான்.


“என் பேரு பூங்கொடி இல்ல…” இப்போது எரிச்சலாய் கூறியிருந்தாள்.


“ஹான்… பூங்கோதை…”


பல்லைக் கடித்து முறைத்தாள்.


“பூங்குழலி…?” புருவம் ஏற்றி கேள்வியாய் பார்த்தான்… அவளோ உதட்டை சுழித்து கண்கள் சுருக்கி கடுகடுப்பாய் பார்த்தாள்.


“இல்லையா… அப்போ பூங்கொத்து… பூச்சரம்… இந்த மாதிரி ஏதோ ஒன்னு…” கைகளை விரித்தபடி கூறியவனை அடிக்க ஏதாவது பொருள் கண்களில் தென்படுகிறதா என்று கண்களை சுழலவிட்டாள்.


“அதுவும் இல்லையா… பூந்தென்றல்… பூவிழி…” தலையை அண்ணாந்து பூவில் ஆரம்பிக்கும் பெயர்களாக சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தவனை கொலை வெறியுடன் நெருங்கினாள்.


அவன் கையில் இருந்த காலியான காபி கோப்பையை வெடுக்கென பிடுங்கி நங்கென்று அதனைக் கொண்டே தலையில் குட்ட “ஸ்ஸ்…அம்மா…” என்றவன் பரிதாபமாய் பார்த்தபடி தலையை தேய்த்தான்.


“என் பேரு பூச்செண்டு… இதை தவிர வேற என்னென்னமோ சொல்றீங்க…” கொதித்துப் போய் பேசியவளை குட்டிய இடத்தை தடவியபடியே பார்த்தவன் 


“ஓஓ… ஆமால்ல… பூச்செண்டு… வெரி பெக்கியூலியர் நேம்… அப்படி என்ன பேருக்கு பஞ்சமா போயிருச்சுன்னு இந்த பேரை வச்சிருக்காங்க உனக்கு…” பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி கூறியவனை தீயாய் முறைத்தவள் கை முஷ்டியை மடக்கி உதட்டை குவித்து விரல்களில் ஊதி அவன் தலையில் குட்டுவதற்கு கை ஓங்க “எம்மாடியோவ்… ஆளை விடு பொக்கே…” என்றபடி வேகமாக எழுந்து குளியலறை நோக்கி ஓடி இருந்தான் தரணிதரன்.


(தொடரும்)





Leave a comment


Comments


Related Post