இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 25-02-2024

Total Views: 40131

“அப்பா .. இன்னும் சாப்பிட வராம என்ன பண்ற…?” காலை உணவுக்கான பதார்த்தங்களை உணவு மேஜையில் எடுத்து வைத்தபடி தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


“நான் நேரமா தோட்டத்துக்கு வந்துட்டேம்மா..‌ கரும்புக்கு தண்ணி பாய்ச்சணும்… நீ ஒரு பாத்திரத்தில போட்டு எடுத்துட்டு வந்து கொடுத்துடு…”


“மாமாவோட ஃபிரண்டை உன்கூடதான் தோட்டத்துக்கு அனுப்பி வைக்க சொன்னாங்க… உன் மாமனார் வீட்டு மாளிகையில தன்னந்தனியா உக்காந்து அந்த மனுஷன் என்ன பண்ணுவாரு…? நீ வந்து சாப்பிட்டுட்டு அவரையும் கூட கூட்டிட்டு போ…”


“கரும்புக்கு தண்ணிய பாய்ச்சிட்டு அப்படியே வாழைக்கு திருப்பி விடணும்… நான் இங்ஙன இருந்தாதான் சரியா இருக்கும்… நீ சாப்பாட எடுத்துக்கிட்டு அந்த பையனையும் கூட கூட்டிட்டு வா… மத்தியானம் வரைக்கும் என் கூட இருக்கட்டும்… அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேர வீட்டுக்கு வந்துடறோம்…”


“கதையெல்லாம் கருத்தா சொல்லு… மொத்தத்துல என்னைய அலைய விடணும்… சரி நான் வரேன்… வையி…” சலிப்பாய் பேசி ஃபோனை வைத்தவள் மாடியை திரும்பிப் பார்த்தாள்.


‘இந்த பனைமரம் இன்னும் என்ன பண்ணுது…? வயிறு வேற பசிக்குது… அது வர்றதுக்கு முந்தி நான் உக்காந்து தின்னா தப்பா நினைச்சுரும்... சட்டுபுட்டுனு வந்தா சாப்பிட குடுத்து தோட்டத்தில கொண்டு போய் விட்டுட்டு அப்படியே கௌரியோட திராட்சை தோட்டத்துக்கு போயிடலாம்… இன்னைக்கு திராட்சை வெட்டி எடுக்குறாங்க… ஃபிரஷா புடுங்கிட்டு வந்துடலாம்…’ நாக்கில் எச்சில் ஊற சப்பு கொட்டியபடி அமர்ந்திருந்தவளை இன்னும் பத்து நிமிடங்கள் காத்திருக்க வைத்து கீழே இறங்கி வந்தான் தரணிதரன்.


உடம்பை ஒட்டிய நீல நிற டீ சர்ட்… முழங்கால்களைத் தாண்டிய பெர்முடாஸ் அணிந்து காற்றில் அலைபாய்ந்த கேசத்தை கோதியபடியே நடந்து வந்தவனை குறுகுறுவென பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பூச்செண்டு.


‘நெடுநெடுன்னு நெட்டமாடு மாதிரி இருந்துக்கிட்டு அர டவுசர் போட்டுக்கிட்டு வருது… அவுக ஊர்ல அலையுற மாதிரியே இங்கேயும் அலையணுமா…’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. இதுவே முகிலனாக இருந்திருந்தால் மனதில் நினைத்ததை கூறி உருவியும்கூட விட்டிருப்பாள்.


“ஒரு ஆம்பள குளிச்சு கெளம்பி வர்றதுக்கு இம்புட்டு நேரமா…?” அவனுக்கு உணவினை எடுத்து வைத்தபடியே கூறியவளை ஏறிட்டுப் பார்த்தான்.


மெரூன் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள்… சந்தன நிற துப்பட்டாவை கழுத்தைச் சுற்றி சுருக்கிடுவதுபோல் போட்டு முன்பக்கமாக இடுப்புவரை இருபுறமும் வழிய விட்டிருந்தாள். முதுகுவரை அடர்ந்திருந்த அடர்த்தியான கூந்தலை பின்னலிட்டு கொஞ்சமே கொஞ்சம் மல்லிகைப்பூ சூடி இருந்தாள். இரு புருவங்களுக்கு இடையே அளவான மெரூன் நிற ஸ்டிக்கர் பொட்டிற்கு மேலே நேர்த்தியாய் கீறிவிட்ட அமைப்பில் சந்தனம் வைத்திருந்தாள். அந்த வட்ட முகத்திற்கு அந்த சந்தனக் கீற்று கூடுதல் பொலிவைத் தந்தது. தன்னையும் மீறி ரசனையாய் அவளை வட்டமிட்ட அவனது கண்கள் மயில் தோகை போன்று விரிந்திருந்த அந்த அடர்ந்த இமைகளில் மையம் கொண்டு நின்றன.


நாற்காலியில் அமராது தன் அருகில் நிற்பவனை நிமிர்ந்து பார்த்தாள் பூச்செண்டு. கண்களில் மையிட்டு மயிலிறகிற்கு கூடுதல் வர்ணம் பூசியது போல் இன்னும் கூடுதல் வசீகரம்… அந்த கண்களையே ஆழ்ந்து பார்த்திருந்தான் தரணிதரன்.


‘ஹப்பா… என்னா கண்ணு இது…? இந்த கண்ணு அழகா…? இல்ல அந்த இமைதான் அவ்வளவு அழகா…?’ அவசரகதியில் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தான்.


“எப்போ பார்த்தாலும் கனவிலேயேதான் இருப்பீங்களா…? காலையில கனவு கண்டு என் விரலை உடைச்சீங்க… இப்போ கண்ணை குத்தப் போறீங்களா…? உங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையாதான் இருக்கணும் போல இருக்கே…” 


அவள் பேச்சில் தன்னை நிதானித்துக் கொண்டவன் “ஓ சாரி… நீங்க பயப்படற மாதிரி நான் ஒன்னும் மோசமான ஆளு இல்லைங்க… உ..உங்க கண்ணுல ஏதோ ஒட்டி இருந்த மாதிரி இருந்தது… அ..அதான் பார்த்தேன்…” சமாளித்தபடியே உணவு உண்ணும் இருக்கையில் அமர்ந்தான்.


“வெரசா சாப்பிடுங்க… என் அப்பாவுக்கும் டிபன் எடுத்துட்டு போகணும்… உங்களையும் கூட்டிட்டு போகணும்…” இட்லியும் பணியாரமும் காரச்சட்னியும் சாம்பாருமாக அவனுக்கு பரிமாறினாள்.


“நீங்க சாப்பிட்டீங்களா…?” பணியாரத்துடன் காரச் சட்னியை ருசித்தபடியே கேட்டான்.


“விருந்தாடிய சாப்பிட வைக்காம சாப்பிடற பழக்கம் எங்களுக்கு இல்ல…” சாம்பாரை எடுத்து அவன் தட்டில் ஊற்றியபடியே பதில் அளித்தாள்.


“டைம் ஆயிடுச்சுங்க… நீங்களும் சாப்பிடுங்க… எல்லாம் பக்கத்துலதானே இருக்கு… அப்படியே பரிமாறிக்கலாம்…” என்றபடியே தன் அருகில் இருந்த தட்டை எதிரில் நகர்த்தி வைத்தான் தரணி. 

சிறுகுடலும் பெருகுடலும் வயிற்றுக்குள் அடிதடி நடத்திக் கொண்டிருக்க மறுக்காது தானும் எதிரில் அமர்ந்து தனக்கு தேவையானவற்றை பரிமாறி உண்ணத் தொடங்கினாள் பூச்செண்டு.


“டிபன் நீங்கதான் பண்ணினீங்களா…?” சாம்பாரில் ஊறி இருந்த இட்லியின் சுவையில் லயித்தபடியே கேட்டான்.


“அத்தையே எல்லா வேலையும் முடிச்சு வச்சிட்டு போயிடுச்சு… மத்தியானத்துக்கு நான்தான் செய்யணும்…” கன்னத்தின் ஓரத்தில் பணியாரத்தை அதக்கியபடி பேசியவள் அவன் கவனத்தைக் கவர தவறவில்லை.


“அப்போ மதியம் உங்க சமையலா…?” 


நக்கலாய் கேட்டானா பயமாய் கேட்டானா விருப்பமாய் கேட்டானா என்று தெரியாத முகபாவத்துடன் இருந்தவனை உறுத்துப் பார்த்தவள் “நாங்களும் நல்லா சமைப்போம்… முட்டை கொழம்பு வச்சு மொளகு சீரக ரசமும் தொட்டுக்க கத்திரிக்கா வதக்கலும் பண்ணித் தாரேன்… அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கங்க… ரவைக்கு அத்தை வந்து இன்னும் வக்கனையா செஞ்சு தரும்…” வெள்ளந்தியான அவளது பேச்சு இன்னும் கூடுதலாய் அவனை ஈர்த்தது.


“நீங்க சொன்ன ஐட்டம்ஸே ஹெவியாதானே இருக்கு… எனக்காக மெனக்கெட வேண்டாம்… ஏதாவது சிம்பிளாவே பண்ணிடுங்க…”


“எனக்கும் முட்டை கொழம்பு ரொம்ப புடிக்கும்… இந்த அத்தையும் அம்மாவும் முட்டையை உடைச்சு ஊத்தி கொழம்பையே சொதப்பி வச்சிடுவாக… இன்னைக்கு எனக்கு புடிச்ச மாதிரி செஞ்சு திருப்தியா சாப்பிடலாம்னு இருக்கேன்… உங்களுக்காக தனியா ஒன்னும் சிரமப்படல…” அவள் பேசியதை கேட்டவன் பட்டென வெடித்து சிரித்தான்.


“You are very interesting… my god…” சிரிப்பினூடே சொன்னவனை சாதாரணமாய் பார்த்து சாப்பிடுவதில் குறியானாள்.


“நீங்க என்ன…? திடீர்னு வாங்க போங்கன்னு கூப்பிடுறீங்க… சில நேரம் வா போ ன்னு கூப்பிடுறீங்க… ஒருநேரம் நிதானமா பேசுறீங்க… ஒரு நேரம் விளையாட்டுத்தனமா பேசுறீங்க..” அடுத்த சுவாரசியத்தை அவனிடம் கூட்டி இருந்தாள்.


“நான் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க…?” அவன் கண்களில் ஒருவித ஆர்வம்.


“வாங்க போங்கன்னு கூப்பிட வேணாம்… உங்களைவிட வயசு மூத்த பொம்பள மாதிரி தோணுது… என் மாமா வயசுதான உங்களுக்கும்… வா போன்னே கூப்பிடுங்க…”


“ம்…சரி… அப்புறம்… நிதானமா இருக்கணுமா…? விளையாட்டுத்தனமா இருக்கணுமா…?” 


எந்தப் பெண்ணிடம் இத்தனை எதிர்பார்ப்புடன் பேசி இருக்கிறான்…? கண்ணில் எதையோ காட்டி நெருங்கி வரும் பெண்களையும் பார்வையால் தடுத்து ஒரு எல்லையோடு நிறுத்தி விடுவானே… இவளிடம் மட்டும் நெருக்கம் காட்டத் துடிக்கும் மனதின் மாயம் அவன் மூளைக்கு எட்டி இருக்கவில்லை என்பதே நிஜம்.


“ரெண்டுமே வேணும்… ரெண்டும் கலந்து இருந்தாதான் வாழ்க்கை தெளிவா சந்தோஷமா இருக்கும்…” பட்டென அவளிடம் இருந்து பதில் வந்தது.


“பார்றா… ரொம்ப நல்லாவே பேசுற… அப்போ என்னோட கேரக்டர் ஓகேதான் இல்லையா…?”


“இது மட்டும்தான் உங்க கேரக்டர்னு எனக்கு எப்படி தெரியும்…? ஆனா முனி மாமா ஃபிரண்டு… நல்லவராத்தான் இருப்பீங்க…”


“உனக்கு உன் மாமாவை ரொம்ப பிடிக்குமா…?” கேட்டவனின் குரலில் சொல்ல முடியாத ஏதோ ஒரு தவிப்பு.


“ஆமா… ரொம்ப ரொம்ப புடிக்கும்… எந்நேரம் பார்த்தாலும் சண்டைக்கோழிக மாதிரி சண்டை போடுறதால புடிக்காதுன்னு நினைச்சுறாதீக… என் மாமாமேல எனக்கு உசுரு… என் மாமாவும் அப்படித்தான்…” 


சொன்னவளின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்புபோல் பிரகாசித்துக் கொண்டிருக்க அவனது மனமோ சட்டென இருளடைந்த கோட்டையாய் மாறியது போன்ற உணர்வு. இனம் புரியாத ஒரு வலி… அதனை தாண்டிய தவிப்பு… அதன்பின் அவன் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மாணிக்கவேலுவிற்கு தேவையான காலை உணவை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொண்டு தரணியை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி இருந்தாள் பூச்செண்டு.


உணவுக் கூடையை ஸ்கூட்டியில் மாட்டி வண்டியை திருப்ப “வண்டியிலேயே போறோம்… நடந்தே போகலாமே…” என்றவனிடம் “நீங்க நடப்பீங்க… என்னால நடக்க முடியணுமே…” தோட்டத்துக்கு மூனு கிலோமீட்டர் போகணும்… வந்து ஏறுங்க…” என்றபடி முன்னால் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.


“நான் வேற ஓட்டடுமா…? டபுள்ஸ் போறதுக்கு உங்களுக்கு சிரமமா இருக்கப் போகுது…”


“ட்ரிபிள்ஸே போவேன்… அதெல்லாம் நம்பி உக்காரலாம்… உங்களை பத்திரமாக கொண்டு போய் விட்டுடுவேன்…” தனது துப்பட்டாவை சரிசெய்தபடியே கூறியவளைப் பார்த்து மீண்டும் அவனது இதழ்களில் புன்னகை.


பச்சைப் பசுமைகளும் கலப்படமற்ற காற்றும் நீரோட்டத்தினால் ஈர மண்ணின் வாசனையுமாய் கண்களும் நாசியும் இயற்கையுடன் இணைந்து போக நெருக்கமாய் அவளது வாசனை அவனுக்குள் இன்னும் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்க அந்த செம்மையான தார் சாலையில் அவர்களது பயணம் அவன் மனம் முழுக்க மீண்டும் இதம் பரப்பியது. அவனை தோட்டத்தில் இறக்கிவிட்டு தந்தையிடமும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள் பூச்செண்டு.


மாணிக்கவேலுவும் வளவளவென தரணியிடம் நிறைய பேசியபடி தோட்டத்தை சுற்றி காட்டிக் கொண்டிருந்தார். அனைத்தும் ரசனையான பேச்சுக்கள்தான்… கிராமத்தவர்களுக்கே உரித்தான அதே வெள்ளந்தியான எதார்த்த குணம்… வாய்க்கு வாய் எங்க முகி என்று முகிலனை அடிக்கடி பேச்சுக்குள் இழுத்துக் கொண்டார். அதில் அவரது பாசமும் உரிமையும் அப்பட்டமாய் தெரிந்தது… நேரம் போனதே தெரியவில்லை… மதியம் 2 மணியைப் போல் இருவரும் வீடு வந்தனர்.


உணவு எப்படி இருக்குமோ என்ற எண்ணம் மாறி இப்படியும் இருக்குமா என்று ஆச்சரியப்பட வைத்தாள் பூச்செண்டு. பாட்டியின் சமையல் ஒரு வகையில் ருசி என்றால் இவளது சமையல் வேறுவிதமான ருசி. “சமையல் சூப்பர்…” மனதார பாராட்டினான் தரணி. 


என்னதான் கை நிறைய சம்பாதித்தாலும் மெஸ் உணவும் அலுவலக கேண்ட்டீன் உணவும் பசியை போக்கி இருந்தாலும் ருசிக்கு நாவு ஏங்கித்தான் கிடக்கும். தனிமையில் வேலையில் இருக்கும் பேச்சிலர்ஸ் நிலைமை கொடியதுதான்… சாக்ரிஃபைஸ்ட் வாழ்க்கைதான்… இரண்டு நாட்களாக ருசி மிகுந்த கிராமத்து உணவு நாவின் சுவை நரம்புகளை நாட்டியம் ஆட வைத்துக் கொண்டிருக்கிறது… ரசம் என்றாலே விஷம்போல் பார்த்து ஒவ்வாமை போல் முகம் சுருக்கி நகர்த்தி வைத்து விடுவான் தரணி.


“இந்த ரசத்தை ஊத்தி சாப்பிடுறதுக்கு கொஞ்சம் விஷத்தை குடிச்சிட்டு படுத்திடலாம்…” என்பான். இன்று ரசத்தின் வாசமும் அந்த சுவையும்… ஆஹா… உறிஞ்சி உறிஞ்சி குடித்தான்.

‘இந்த கையிலும் நிறைய வித்தை இருக்குது…’ தனக்குள் எண்ணி சிரித்துக் கொண்டான். 


உண்டு முடித்து அருகில் இருந்த அறையில் சென்று படுத்த மாணிக்கவேல் அடுத்த நிமிடமே குறட்டை ஒலியை எழுப்பி இருக்க முகிலனிடம் இருந்து தரணிக்கு அழைப்பு வந்தது. அவனிடம் பேசி முடித்து பூச்செண்டிற்கு போனை கொடுக்கச் சொல்லி இருந்தான்.


“முனி மாமா…” என்றபடி முகம் மின்ன போனில் பேசிக் கொண்டிருந்தவளைத்தான் விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருந்தான் தரணி. போனில் கூட இருவருக்கும் சண்டைதான்… அவன் ஒன்று சொல்ல இவள் ஒன்று சொல்ல… ஆனால் அந்த முகத்தில் தெரிந்த பிரகாசம்… மகிழ்ச்சி… விரிந்த மயிலிறகு கண்களில் தெரிந்த பரவசம்… தரணிக்குள் ஏதேதோ முறிந்து விழுவதைப் போன்ற உணர்வு. காரணம் புரியவில்லை… ஆனால் வலித்தது… இதயம் முழுக்க சொல்ல முடியாத அவஸ்தை… இதுவரை இந்த மனம் எந்த பெண்ணிற்காகவும் இத்தனை அவஸ்தைகளையும் வலியையும் அனுபவித்ததாய் நினைவில்லை. 


பார்த்து இரண்டு நாட்கள் னதான் ஆகிறது. ஆனாலும் முகிலனுடனான அவளது சிரிப்பும் பேச்சும் செல்லச் சண்டையும் அவனுக்குள் காயங்கள் ஏற்படுத்துவதாய்… மீண்டும் தோட்டவெளிகளில் சுற்றலாம் என்று எண்ணியிருந்தவன் மனச்சுமை தாக்க அமைதியாக மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான். விடாமல் தவிக்கும் தன் மனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு தன்னைத்தானே கடிந்து கொண்டும் பலனில்லை… அகன்ற சாளரத்தின் வழிய வந்து முகம் வருடிய இயற்கை காற்றில் தன்னை மீறி கண் அயர்ந்தான். மாலை 5 மணி வாக்கில் மதுரை சென்ற அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். சோர்வாய் மாடிக்கு வந்த முகிலன் உடையைக் கூட மாற்றாது படுக்கையில் பொத்தென விழுந்தான்.


“போன வேலை எல்லாம் முடிஞ்சதாடா...?” 


ஒரு குட்டி தூக்கம் போட்டு முகம் கழுவி வந்த தரணி கேட்க “90 பெர்ஸண்ட் முடிஞ்சது… ஒரு டாக்குமெண்ட் மட்டும் முடிக்க முடியல… என் அப்பாவோட பெரியப்பா பையன் தேவையில்லாம வம்பு பண்ணி தகராறு பண்றாரு… அது எங்களோட இடம்தான்… ஆனா எனக்கும் உரிமை இருக்குன்னு சொல்லி கோர்ட்டில ஸ்டே ஆர்டர் வாங்கி வச்சிருக்காரு… எங்களுக்கு சாதகமாதான் தீர்ப்பு வரும்… டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எங்க சைடுல பக்காவா இருக்கு… ஆனா உடனடியா முடியாது… இன்னொரு தடவை வரும்போது அந்த வேலையை பார்த்துக்கலாம்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன்…” தனது கைச்சட்டையை தளர்த்தியபடியே பதில் அளித்தான்.


“ஏதாவது ப்ராப்ளமா இருந்தா இருந்து முடிச்சிட்டே போகலாமேடா…”


“ரெண்டு நாள்ல முடியிற விஷயம்னா இருக்கலாம்… இன்னும் எத்தனை நாள் ஆகும்னு தெரியல… அத்தையோட பங்கை தெளிவா பிரிச்சாச்சு… தேவைப்படுற டாக்குமெண்ட்ஸ்ல நானும் கையெழுத்து போட்டுட்டேன்… இந்த ஒரு பிரச்சனைதான்… வக்கீல்கிட்ட பேசியாச்சு… அவர் சொல்லும்போது திரும்ப வந்தா போதும்… நாளைக்கு ஒரு நாள் இங்கே இருந்துட்டு அடுத்த நாள் கிளம்பிடலாம்டா…” கிளம்புவதிலேயே குறியாக முகிலனின் பேச்சு. ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்தான் தரணி.


குளியலறை செல்வதற்காக முகிலன் எழுந்து கொள்ள “அப்பத்தா வேற சில ஐடியாஸ்ல இருக்காங்க முகில்… அது உனக்கு தெரியுமா…?” எங்கோ பார்த்தபடி சத்தமாய் பேசிய தரணியின் குரலில் நின்றவன் புருவம் சுருக்கி அவனை குழப்பமாய் பார்த்தான்.


பார்வையை திருப்பி அவன்மேல் பதிய வைத்தவன் “உனக்கும் பூச்செண்டுக்கும் மேரேஜ் பண்ற விஷயமா இன்னிக்கோ நாளைக்கோ பேச்சை எடுக்கப் போறாங்க…”


சர்வ சாதாரணமாய் ஒரு சிரிப்பு சிரித்து “அப்பத்தா எப்போ பாத்தாலும் அதைத்தான் சொல்லிட்டு அலையும்… இன்னைக்கு நேத்தா அதை நான் கேட்கிறேன்… அத்தை பொண்ணு மாமா பையன்னா இந்த மாதிரி பேசுறது சகஜம்தானே… அதையெல்லாம் ஈஸியா கடந்துட்டு போயிடணும்டா…” சாதாரணமாய் தோளை குலுக்கி சொல்லி நகர முயன்றவனின் கரத்தை அழுத்தமாய் பிடித்து நிறுத்தினான் தரணி.


“அப்படியெல்லாம் ஈஸியா கடந்து போக முடியாதுடா… உன்னோட ஒட்டுமொத்த குடும்பமும் பூச்செண்டைதாதான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவோட இருக்காங்க… அது உனக்கு தெரியுமா…? பூச்செண்டும் கூட உன் மேல விருப்பமா இருக்கா… அது உனக்கு தெரியுமா…?”


“த..ர..ணி…” அதிர்வுடன் பார்த்தான் முகிலன்.


(தொடரும்)






Leave a comment


Comments


Related Post