இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 26-02-2024

Total Views: 16776

பகுதி 9 

அமரனின் கவனிப்பில் தொழில் மேலும் மேலும் வளர்ந்தது. சிறிய கடையை பெரியதாக்கினான். 

அது வரை அமரநாதனை பெரிதும் மதிக்காமல் இருந்த கோமதிக்கு அவனது இந்த வளர்ச்சி கண்ணை உறுத்தியது. அண்ணன் மெதுவாக தொழிலில் இருந்து ஒதுங்குவதும் தெரிந்தது. அப்படி நடந்தால் அந்த வீட்டின் கட்டுப்பாடு அமரனின் கைக்கு சென்றுவிடும். அவன் மீது எந்த பிடிப்பும் கோமதிக்கு இல்லாத நிலையில் கோமதியின் பாடு திண்டாட்டமாக இருக்கும். இதற்கு அவர் கண்டுபிடித்த தீர்வு மீனாட்சியை அமரனுக்கு திருமணம் செய்து வைத்து அந்த வீட்டின் மீது தனக்கு இருக்கும் பிடியை இறுக்கிக் கொள்ளுவது தான்.

அதை செயல்படுத்தவும் தொடங்கினார். அண்ணனிடம் உரிய வயது வந்த பிறகு மீனாட்சிக்கும் அமரநாதனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது போல பேசினார். 

சூட்டிகையான தன் தங்கை பெண் தன் வீட்டிற்கு மூத்த மருமகளாக வருவதில் காசிநாதனுக்கு சந்தோசம் தான். எனவே அவரும் ஒப்புதலாக பேசினார்.

கோமதி எதிர்பாராத விதமாக அவருக்கு எதிர்ப்பு மீனாட்சியிடம் இருந்து வந்தது.

"அம்மா நான் இப்போதைக்கு கல்யாணம் செஞ்சுக்க போறது இல்லை. எனக்கு இன்னும் படிக்கணும் வேலைக்கு போகணும். அதுக்கு அப்புறமும் நான் அவரை கல்யாணம் செய்துக்க மாட்டேன்." அன்று அமரன் திட்டியதற்கு பிறகு அவனை அத்தான் என்று மற்றவர்களிடம் கூட சொல்வதை தவிர்த்து இருந்தாள் மீனாட்சி.

"ஏன்? அவனுக்கு என்ன குறை? எங்க அண்ணன் வீட்டுக்கு மருமகளா போனா காலத்துக்கும் எந்த கஷ்டமும் இல்லாம இருக்கலாம்."

"என்னால என் படிப்பை வச்சே கஷ்டமில்லாம வாழ முடியும்."

"நீ இருப்ப. எங்க வாழக்கை?"

"உங்களையும் என்னால பார்த்துக்க முடியும் மா. அதுக்காக இந்த கல்யாணம் வேண்டாம்." கெஞ்சினாள் மீனாட்சி. அவளுக்கு அமரன் தான் உயிர் என்றாலும் அவன் மனதில் தான் இல்லாத போது அவனை திருமணம் செய்து கொண்டால் அவன் வாழ்வும் பாழாகும் தன் வாழ்வும் பாழாகும் என்று பயந்தாள் மீனாட்சி.

"அதெல்லாம் இப்போ பேசலாம். நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா முடியுமா? அதுவே எங்க அண்ணன் வீடு அப்படினா நானும் உரிமையா இருப்பேன். அதனால இது தான் சரி. நீயா எதையும் முடிவு செய்யாம பெரியவங்க சொல்லுறதை கேளு." அதட்டி பேசினார் கோமதி.

மீனாட்சி கடைசி ஆண்டு ஆரம்பித்த போது திடீர் மாரடைப்பால் காலமானார் விநாயகம். அதுவரை அவரால் மீனாட்சியின் வாழ்வில் எந்த நல்லதும் நடந்திராத போதும் தந்தை என்ற உறவு இல்லாதது அவளுக்கு வலிக்கத்தான் செய்தது. விநாயகத்தின் மறைவிற்கு பின் தன்னுடனே வந்து இருக்குமாறு தங்கையை வலியுறுத்தினார் காசிநாதன்.

அப்படி செய்தால் அபிராமிக்கும் அமரனுக்கும் பிடிக்காது என்று தெரிந்திருந்த மீனா வேறு விதத்தில் அதற்கு முட்டுக்கட்டை போட்டாள். தனக்கு பழகிய இடத்தில இருந்து படிப்பது தான் பிடித்திருக்கிறது என்று அடம் பிடித்து அங்கேயே இருந்துவிட்டாள். சரி இன்னும் ஒரு ஆண்டு தானே அதற்கு பின் இவர்கள் கல்யாணத்தை செய்து விட்டு ஒரு வழியாக இடம் பெயரலாம் என்று கோமதியும் விட்டுவிட்டார்.

 இந்த நான்கு ஆண்டுகளில் தன் மாமன் குடும்பத்தை சார்ந்து வாழ்வதை தவிர்க்க வேண்டும் என்றால் படிப்பு தான் ஆயுதம் என்று முடிவு செய்து தன்னால் ஆன வரை கல்லூரி படங்கள் மற்றும் அதற்கு ஒட்டிய பிற கோர்ஸுகள் என்று தன் தகுதிகளை வளர்த்துக் கொண்டு இருந்தாள்.  இதனால் காம்பஸிலேயே மீனாட்சிக்கு நல்ல வேலை பெங்களூரில் கிடைத்தது. மாதம் அரை லட்சம் ஆரம்ப சம்பளம் என்றார்கள். ஆனால் அண்ணன் வீட்டு சொத்தின் மீது கண் வைத்திருந்த கோமதிக்கு இதில் கண் நிறையவில்லை. படிப்பு முடிந்தவுடன் அந்த வேலையில் சேர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள் மீனாட்சி.

மீனாட்சி கடைசி பரீட்சை முடித்துவிட்டு வந்த அன்று எதிர்பாராதவிதமாக விபத்து ஒன்றில் சிக்கினார் கோமதி. 

கோமதி சாலையில் காய் வாங்க நடந்து செல்லும்போது ஒரு வண்டி மோதி கீழே விழுந்தார். 

முதலில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் எதற்கும் இருக்கட்டும் என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் தலையில் அடி பட்டதில் மூளையின் உள் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அவர் பிழைப்பது கடினம் என்றும் சொல்லிவிட்டார்கள்.

தனக்கு முடிவு நெருங்கிவிட்டது என்று உணர்ந்த கோமதி அண்ணனிடம் அழுதார். 

"உன்னை நம்பி தான் என் மகளை விட்டுட்டு போறேன். அவளை பார்த்துக்கிறது உன் கடமை அண்ணா."

"என்ன கோமு. நீ சொல்லி தான் அது எனக்கு தெரியுமா? நீ கவலையே படாதே. அவள் என் பொறுப்பு." என்று கண்ணீருடன் கோமதியை சமாதானம் செய்த காசிநாதன் அங்கே நின்றிருந்த அமரன் மீனாட்சி இருவரையும் அவர்கள் எதிர்பாராத போது ஒன்றாக நிற்க வைத்து "அவ என் வீட்டு மருமக. அமரன் பொண்டாட்டி. நீ கவலையே படாதே" என்றார். அந்த வார்த்தை தந்த நிம்மதியில் நிரந்தர உறக்கத்தை தழுவினாள் கோமதி.

தாயையும் இழந்து அனாதையாக போகிறோம் என்று தன்னிரக்கத்தில் அழுது கொண்டிருந்த மீனாட்சி காசிநாதனின் வார்த்தையில் அதிர்ந்து நிமிர்ந்தாள். அவள் பார்வையை சந்தித்த அமரனின் விழிகள் வெறுப்பை உமிழ்ந்தன.

கோமதியின் பதினாறாம் நாள் காரியம் முடிந்த கையுடன் மீனாட்சி அமரநாதன் திருமண பேச்சை தொடங்கினார் காசிநாதன். திருமணம் ஆகாமல் மீனாட்சி அங்கே தொடர்ந்து இருப்பது ஊர் வாய்க்கு அவலாகும் என்று எண்ணியவர் விரைவிலேயே அவர்கள் திருமணத்தை நடத்த வேண்டும் என்றார்.

சாகும் தருவாயில் ஒருவருக்கு கொடுத்த வாக்கு என்று இது எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் நின்றான் அமரன். 

மகன் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று கவலை இருந்தாலும் அபிராமியாலும் எதுவும் சொல்ல முடியவில்லை. தங்கையை இழந்த துக்கத்தில் இருக்கும் கணவனிடம் எப்படி உன் தங்கை மகள் வேண்டாம் என்று சொல்லுவது?

மீனாட்சியோ வேண்டவே வேண்டாம் என்று மாமனிடம் மறுத்தாள்.

"மாமா எனக்கு வேலை இருக்கு. இன்னும் ரெண்டு மாசம் தான். கால் லெட்டர் வந்ததும் நான் பெங்களூருக்கு போய்விடுவேன். அதுக்கு அப்புறம் ஊர் என்ன சொல்லும்?"

"மீனா உனக்கும் அமரனுக்கும் கல்யாணம் அப்படினு எப்பயோ முடிவு செஞ்சது தானே? இப்போ ஏன் வேண்டாம்னு சொல்ற?"

"மாமா முடிவு செஞ்சது நீங்களும் அம்மாவும். எனக்கோ அவருக்கோ இதுல விருப்பம் இருக்கானு நீங்க கேட்கவே இல்லையே."

"உனக்கு அமரன் மேல உயிர்னு எனக்கு தெரியும்."

அதிர்ந்து அவரை பார்த்தாள் மீனா.

"என்ன அவ்வளவு அதிர்ச்சி. உன்னை தூக்கி வளர்த்தவன் மா நானு. உன் மனசுல இருக்குற ஆசை எனக்கு தெரியாதா? அதே நேரம் அமரன் உன் மேல கொஞ்சம் கோவமா இருக்கான்னும் தெரியும். ஆனா அதெல்லாம் மேல் பூச்சு தான். கல்யாணம் ஆகி உன்னோட அன்பை அவன் பார்த்தான்னா தானா மாறிடுவான்."

"மாமா..."

"இதுக்கு மேல பேசாத மீனா. என்னால உன்னை வேளியூருக்கெல்லாம் அனுப்ப முடியாது. அதுக்கும் மேல வேற குடும்பத்துல கல்யாணம் செஞ்சு கொடுத்து அவங்க உன்னை எப்படி பார்த்துப்பாங்கனு பயந்துக்கிட்டும் இருக்க முடியாது. எல்லாத்துக்கும் மேல உங்க அம்மாவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன். நீ என் மூத்த மருமகனு. அதையும் என்னால மீற முடியாது. இந்த மாமா மேல உனக்கு இருக்குற பாசம் உண்மைன்னா பேசாம நான் சொல்ற அன்னைக்கு மணமேடையில வந்து உட்கார்."

மீனாவின் ஆசை கொண்ட மனம் ஒரு வேளை இது தான் தன் மனம் கொண்டவனோடு வாழ கிடைக்கும் வாய்ப்போ? ஒரு வேளை திருமணம் நடந்தால் மாமா சொன்னது போல அவன் மனம் மாறிவிடுமோ என்று எண்ணியது. 

ஆனால் நடந்ததோ வேறு. அவர்கள் திருமண இரவில் இருவரும் சந்தித்தபோது கூண்டு புலி போல நடந்து கொண்டிருந்த அமரநாதன் இவளை பார்த்ததும் சீறினான்.

"நீ நினைச்சதை சாதிச்சிட்டே இல்லை? எங்க அப்பவே ஏமாத்தி கடமை அது இதுனு என் கையையும் கட்டிப் போட்டு. ஆனா ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ. நீ சூழ்ச்சி செஞ்சு இந்த வீட்டுக்கு வேணும்னா மருமகளா வந்து இருக்கலாம். ஆனா ஒரு நாளும் என் பொண்டாட்டியாக முடியாது. என் மனசை மாத்த முயற்சி பண்ணுறேன் அது இதுனு நைட்டில சுத்துறது எங்க அப்பா கிட்ட சொல்லுறதுனு எதாவது செஞ்சே...." என்ன செய்வான் என்று சொல்லாமலே அவளுக்கு ஒரு போர்வையும் தலையணையும் தரையில் எடுத்து வீசிவிட்டு தூங்குவதற்கு படுத்துக் கொண்டான்.

மீனாட்சிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தன்னை பேசவேவிடாமல் இத்தனை ஆண்டு கோவத்தை மனதில் போட்டு வைத்திருப்பவனிடம் என்ன சொல்லுவது? காலம் தான் அவன் மனதை மாற்றும் என்று முடிவு செய்து ஒதுங்கி இருக்க தொடங்கினாள். ஆயிற்று ஆறு ஆண்டுகள் முடிய போகின்றன. இது வரை மீனாட்சி செய்த எதுவுமே அமரனின் மனதை தொட்டதாக தெரியவில்லை. 

சிறு வயதில் இருந்தே மெத்தையில் படுத்து பழகியவளுக்கு தரையில் தூங்குவது கடினமாக இருந்தது. அதனால் சில நாட்களிலேயே ஒரு மெத்தையை வாங்கி தரையில் போட்டு விட்டாள். அதை ஒரு வடக்கத்திய பாணியில் அலங்கரித்து வைத்ததால் அது ஏதோ அலங்காரத்துக்கு அவர்கள் அறையில் இருப்பதாக பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்வார்கள். பார்த்தவன் உதட்டை பிதுக்கி விட்டு சென்றான்.

இவர்களுக்குள் நடக்கும் இந்த பனிப் போர் வீட்டினருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாள் மீனாட்சி. அமரனும் அவளை கண்டுகொள்ளாமல் இருந்தானே தவிர வருந்தும் படி எதுவும் செய்யவில்லை. அதுவே போதும் என்று அவன் மனதை தொட எத்தனையோ விதங்களில் முயற்சி செய்கிறாள் மீனாட்சி. ஆனால் அந்த கல் தான் கரையவில்லை.


Leave a comment


Comments


Related Post