இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 27-02-2024

Total Views: 41083

“ஆரம்பத்திலேயே கிளியர் பண்ணி இருக்க வேண்டிய விஷயத்தை காலத்தை கடத்தி காம்ப்ளிகேட் பண்ணி வச்சுட்டேன்னு நினைக்கிறேன்… கிராமத்து பெரியவங்க சில விஷயங்கள்ல ஃபிக்ஸ் ஆயிட்டாங்கன்னா அதை மாத்திக்க மாட்டாங்கன்னு டவுன்ஷிப்ல வளர்ந்த எனக்கே தெரியும்… நீ எப்படி அதை தெரிஞ்சுக்காம போன…? ஆரம்பத்திலேயே சில விஷயங்களை தெளிவுபடுத்தி இருக்கணுமா வேண்டாமா…?” தரணியின் அழுத்தமான வார்த்தைகளில் பெரிதும் துணைக்குற்றான் முகிலன்.


“ஏன்டா என்னென்னவோ சொல்லி பயமுறுத்துற…?”


“பயமுறுத்தலடா… ஃபேக்டை சொல்றேன்… பெரியவங்க மனசுல ஆழமா ஆசை வளர்றதுக்கு முன்னால நீ சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லி இருக்கணுமா வேண்டாமா…? அப்படி என்ன உனக்கு ஒரு அலட்சியம்…?” தரணியின் கண்களில் கோபம்.


“அலட்சியம் இல்லடா… இப்போ என்ன அவசரம்னு நினைச்சேன்…”


“உனக்கு அவசரம் இல்லாம இருக்கலாம்… பூச்செண்டு வீட்ல அவசரம் இல்லாம இருக்குமா…? பெரியவங்களுக்கு ஆசை இல்லாம இருக்குமா…?”


“இப்போ என்ன சொல்ல வர்ற…?” புரியாமல் தலையை கீறினான் முகிலன்.


“அப்பத்தா பேச்சை ஆரம்பிக்கிறதுக்கு முன்னால நீ விஷயத்தை பேசிடு…”


“தரணீஇஇ…” சத்தமாய் வெளிவந்த குரலில் பயம்தான் அதிகமாய் தொக்கி நின்றது.


“என்னடா… பயமா இருக்கா…?” கண்களை சுருக்கி அழுத்தமாய் கூர்ந்தான் தரணி.


“எ..எல்லாரும் எ..எப்படி எ..எடுத்துப்பாங்கன்னு தெரியலடா… ஏ..ஏதாவது பிரச்சனை பண்ணிட்டா…?” பயத்தில் அதிகமாக வியர்த்தது. அவனை துளைக்கும் பார்வை பார்த்தபடியே அழுத்தமான அடிகளுடன் நெருங்கி வந்து எதிரில் நின்றான் தரணி.


“இவ்வளவு பயம் இருக்கிறவனுக்கு வேற மாதிரியான ஆசைகள் வந்திருக்கக் கூடாது… சின்ன வயசுல விளையாட்டா பேசி இருந்தாலும் நீ வேலைக்கு போனதுக்கு அப்புறம் சீரியஸாதானே பேசுறாங்க… மத்தவங்ககிட்ட இல்லைன்னாலும் பூச்செண்டு கிட்டயாவது நீ விஷயத்தை பேசி இருக்கணும்தானே… ஏன் அவகிட்ட எதுவுமே சொல்லல…?” தரணியின் கண்களில் கோபத்தின் சாயல் அதிகரித்தது.


“அவ சும்மா என்கூட விளையாடுவா… வம்பிழுப்பா… ஆனா ரொம்ப பாசமா இருப்பா… நானும் அப்படித்தான்டா… பூச்செண்டு மேல எனக்கு நிறைய பிரியம் இருக்கு… ஆனா அது பாசம் மட்டும்தான்…”


“தெரியுது வெங்காயம்… அதை ஏன் அவளுக்கு புரிய வைக்கல…? பெரியவங்களை விடு… அவங்க ஓல்ட் ஜெனரேஷன்… ஒன்னுக்குள்ள ஒன்னா குடுத்துக்கணும் எடுத்துக்கணும்னு நினைக்கிறது சகஜம்தான்.‌‌.. பூச்செண்டு படிச்ச பொண்ணு… நம்ம ஜெனரேஷன்… அவகிட்ட நீ ஓப்பனா பேசி இருக்கணும்தானே…”


“அவ மனசுல என்மேல விருப்பம் இருக்கும்னு நான் நினைச்சதே இல்லடா… அவ அந்த மாதிரி நடந்துக்கிட்டதும் இல்ல… உன்கிட்ட ஏதாவது சொன்னாளா…?” முகிலனின் முகத்தில் கலவரம்.


“சொல்லல… ஆனா பேசினதை வச்சு தெரிஞ்சுக்கிட்டேன்… அதோட அப்பத்தான் உங்க கல்யாணத்தை பத்தி பேசும்போது ஆட்சேபணை சொல்லாம அமைதியாதான் இருந்தா…”


“இப்போ என்னடா பண்றது…?” தெளிவில்லாமல் நின்றான்.


“இப்போ வந்து கேளு… வேலையை முடிச்சுட்டு தப்பிச்சு ஓடுறதிலேயேதான் எப்பவும் குறியா இருந்திருக்க… யார்கிட்டயும் எதையும் சொல்லாம பின்னால பாத்துக்கலாம்னு குருட்டு தைரியத்துல இருந்திருக்க… என்ன மாதிரியான ஆட்டிட்யூட் உனக்கு…? எனக்கு புரியலடா…” தன் பின்னந்தலையில் அழுந்த கை வைத்தபடி மெல்ல நடை பயின்றான் தரணி.


“கொஞ்ச நேரம் எல்லார் கூடவும் பேசி பழகுன வகையில பூச்செண்டுதான் இந்த வீட்டு மருமகளா வரணும்னு எல்லாரும் நினைக்கிறாங்கன்னு என்னால ஈஸியா உணர முடிஞ்சது. நீ எப்படி இவ்ளோ அசட்டையா இருந்தேன்னுதான் தெரியல… எல்லா விஷயத்திலேயும் உனக்கு அசட்டை அதிகம்தான்டா…” வருத்தத்துடன் கூறினான்.


“நான் என்ன பண்ணினா சரியா இருக்கும்…?” நண்பனிடம் தீர்வு கேட்டு கலக்கமாய் நின்றான் முகிலன்.


“முதல்ல பூச்செண்டை தனியா கூப்பிட்டு உனக்கும் மீராவுக்கும் இடையில இருக்கிற காதலைப் பத்தி சொல்லு… பக்குவமா பேசி புரிய வை… மூனு வருஷமா காதலிக்கிறவன் அத்தை பொண்ணுகிட்ட ஒரு பிரண்டா நினைச்சுகூட சொல்லி இருக்கலாம்… அட்லீஸ்ட் அவளாவது மனசுல ஆசையை வளர்க்காம இருந்திருப்பா… ஏன்டா சொல்லல…? அவ பாவம் இல்லையா…” தரணியின் மனம் பூச்செண்டிற்காக இரங்கியது… முகிலனின் அசட்டையால் அவள் அதிகம் பாதிக்கப்படுவாளோ என்ற வேதனைதான் அவனுக்கு.


“வீட்ல போட்டு கொடுத்துடுவாளோன்னு பயத்துலதான்டா சொல்லல…” தலை கவிழ்ந்தபடி முகிலன் கூற சட்டென ஆவேசமாய் அவனை அடிப்பதற்கு கை ஓங்கி இருந்தான் தரணி. நீ அடித்தாலும் வாங்கிக் கொள்கிறேன் என்ற ரீதியில் பாவமாய் பார்த்தபடி முகிலன் நிற்க தன்னை மெல்ல கட்டுப்படுத்தி ஓங்கியிருந்த கைகளை கீழே இறக்கி கொண்டான்.


“அவ்வளவூ பயம் இருக்குல்ல… அப்புறம் என்ன டேஷ்க்கு நீ எல்லாம் லவ் பண்ற…? ஒருத்திக்கு ரெண்டு பொண்ணுங்க மனசுல ஆசையை உருவாக்கி வச்சிருக்க… உன்னை எல்லாம் என்ன பண்ணினா தகும்…?” சீற்றம் குறையாது பேசியவன் “இனியும் லேட் பண்ணாம இன்னைக்கே இந்த விஷயத்தை வீட்ல உடைக்கிற… புரியுதா…” என்றான் கண்களை உறுத்து விழித்து கோபமாய்.


“யா..யாரும் ஒ..ஒத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா…?” பயத்துடன் எச்சில் கூட்டி விழுங்கினான் முகிலன்.


“பூச்செண்டு கழுத்துல தாலிய கட்டு…” தலையை கோதியபடியே சாதாரணமாய் சொன்னான் தரணி.


“டேய்ய்… அப்போ மீரா…? நாங்க ரெண்டு பேரும் எந்தளவு லவ் பண்றோம்னு உனக்கு தெரியும்தானே… தெரிஞ்சுமா இப்படி சொல்ற…?”


“அப்போ வீட்ல உண்மையை சொல்லு… எப்படிற்னாலும் சொல்லித்தானே ஆகணும்… இவ்வளவு தொடை நடுங்கியா இருக்கிறவன் காதல்ங்கிற கட்டமைப்புல சிக்கி இருக்கவே கூடாது… நீ ஜாலியா ஊர் சுத்துறதுக்கும் கடலை போடறதுக்கும் ஒரு ஆள் தேவைப்பட்டது இல்லையா…?” மீண்டும் கொந்தளித்தான் தரணி.


“டேய் தரணி… நான் மீராவை சின்சியரா லவ் பண்றது நிஜமா உனக்கு தெரியாதா…? அவமேல காதல் வந்தப்போ முதல்ல உன்கிட்டதானடா சொன்னேன்‌‌… இப்பவும் எங்களுக்குள்ள சண்டையா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் நீதானே எங்ககூட இருக்கிற… நீயே என்னை தப்பாதான் புரிஞ்சு வச்சிருக்கியாடா…” வேதனையுடன் பேசினான் முகிலன்.


“என்னோட கோபம் எல்லாம் பூச்செண்டு கிட்ட எதுவுமே சொல்லாம இருந்திருக்கியேன்னு தான். நான் உனக்காக கவலைப்படல… நீ பயந்து ஒதுங்கி நின்னாலும் பறந்து வந்தாவது மீரா உன் சட்டையை பிடிப்பா… தைரியமாக உன் குடும்பத்தில தனக்காகவும் தன் காதலுக்காகவும் பேசுவா… அவ காதலை அவ காப்பாத்திக்குவா… எனக்கு தெரியும்… ஆனா பூச்செண்டை நெனச்சாதான்டா எனக்கு கவலையா இருக்கு… அவ மனசு நொறுங்கிடுவாளோன்னு சங்கடமா இருக்கு… அவளை நினைச்சுதான் நேத்துல இருந்து நான் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்…”


பேச்சை நிறுத்தி தன் தாடையை அழுந்த தேய்த்தபடி படுக்கையில் அமர்ந்தான் தரணி. அவனது முகத்தையே சங்கடமாய் பார்த்தபடி அமைதியாய் நின்றிருந்தான் முகிலன். நிமிர்ந்து அவனது முகத்தை ஏறிட்ட தரணி 


“விளையாட்டுத்தனத்தை தாண்டி தெளிவான பொண்ணுதான் பூச்செண்டு. நீ பக்குவமா பேசினா அவ புரிஞ்சுக்குவா… இப்பவே அவளை கூப்பிட்டு பேசு… என் மாமாகூட நான் பாசமா மட்டும்தான் பழகினேன்… அவரை நான் வேற மாதிரி நினைக்கலேன்னு அவளே வீட்ல பேசிட்டா உன்னோட பிரச்சனை பாதி முடிஞ்சிடும்… அதுக்கப்புறம் உன் காதல் விவகாரத்தை வீட்ல பேசு… இதெல்லாம் இனியும் தாமதம் இல்லாம நடக்கணும்… இது எதையும் பண்ணாம இங்கே இருந்து தப்பிச்சு ஓடினா போதும்னு எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்துட்டு ஓடி இன்னும் அந்தப் புள்ள மனச கெடுத்தே நானே உன்னை கொன்னுடுவேன்…” விரல் நீட்டி எச்சரித்தவன் ஹேங்கரில் மாட்டப்பட்டிருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்.


“நான் கொஞ்சநேரம் அப்படியே வெளியே போறேன்… பூச்செண்டை மேலே வரவழைச்சு பேசு…” அழுத்தமாய் கூறி அங்கிருந்து நகர்ந்தான்.


“தரணி…” தொண்டை வறண்டு ஈனஸ்வரமாய் முகிலனின் குரல்… இன்னும் என்னடா என்று திரும்பிப் பார்த்தான் தரணி.


“நீயும் என் கூட இருடா… எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்… நான் எந்த இடத்திலாவது பேச முடியாம தடுமாறினா நீ அவகிட்ட எடுத்து சொல்லலாமே.. என்னைவிட நீ தெளிவா பேசுவியே…” தயக்கமாய் பேசியவனை எரித்து விடுவதுபோல் பார்த்தான் தரணி.


“நரிச்சின்னக்கான்னு நையாண்டியா பேர் மட்டும் வைக்கத் தெரிஞ்சதில்ல… இதுக்கு மட்டும் நான் எதுக்கு…? உன் பிரச்சனையை நீதான் சரி பண்ணனும்…” சிடுசிடுவென சீறினான்.


“நானே பேசுறேன்டா… நீ கூட மட்டும் இருந்தா போதும்… மனசுக்கு ஒரு தைரியம் கிடைக்கும்… ப்ளீஸ்டா…” கண்கள் சுருக்கி கெஞ்சினான். 


சில வினாடிகள் யோசித்தவன் கண்களை அழுந்த மூடித் திறந்து சரி என்று தலையசைத்து படுக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். தனது கைப்பேசியை எடுத்த முகிலன் பூச்செண்டிற்கு அழைத்து மாடிக்கு வரும்படி கூறி தரணிக்கு சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான்.


“எதுக்கு முனி மாமா திடீர்னு வரச் சொன்ன…? என்ன விஷயம்…?” குதித்துக் கொண்டு அவன் முன்னே வந்து நின்றாள் பூச்செண்டு. கண்கள் அலைப்புற தன் பின்னங்கழுத்தை தேய்த்தபடி அமர்ந்திருந்தான் முகிலன்.


“மாமா..  சீக்கிரமா என்னன்னு சொல்லு… கலா அக்கா மக சடங்காயிட்டாளாம்… அவளுக்கு மேக்கப் பண்ண வரச் சொல்லி இருக்காங்க… நான் போகணும்…” ஒரு இடத்தில் நில்லாது கையை காலை ஆட்டியபடியே பேசியவளை கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தரணி.


“பூச்செண்டு…” அதிராது அமைதியாய் வெளிவந்த முகிலனின் குரலில் மேஜை மேல் இருந்த அவனது கைக்கடிகாரத்தை எடுத்து தன் கையில் கட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தவள் படக்கென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.


அவள் பெயரைச் சொல்லி அழைத்ததெல்லாம் பழங்காலம்… மிகவும் சிறுவனாக இருந்தபோது… அவன் வைத்த பட்டப் பெயரை வைத்துதான் எந்நேரமும் அழைப்பான். அடிகளும் திட்டுக்களும் அவளிடம் கிடைத்தாலும் அதுதான் இன்றுவரை தொடர்கிறது… வெளியில் பிடிக்காதது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அந்தப் பெயர் அவளுக்கு பிடித்துப் போனது பழகியும் போனது என்பதே நிஜம். இன்று திடீரென பெயர் சொல்லி அழைக்கிறான்… அத்தோடு எந்நேரமும் அவளிடம் மட்டும் குறும்பு கொப்பளிக்கும் அந்த கண்களும் வம்புக்கு இழுக்கும் சிரிப்பும் இன்றி முகம் கன்றி சங்கடமாய் அவளை பார்த்தபடி அமர்ந்திருப்பவன் அவளுக்கு புதிதாய் தோன்றினான். சில நொடிகளில் வித்தியாசத்தை கண்டு அவனிடம் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டவள் வேகமாய் அவனை நெருங்கி அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து அவன் கரங்களின் மேல் தன் கரத்தை வைத்தாள்.


“என்னாச்சு மாமா…? ஏன் ஒரு மாதிரியா இருக்க…? ஏதாவது பிரச்சனையா…? வஜ்ரவேல் மாமா தேவையில்லாம பிரச்சனை பண்ணி நம்மளை கோர்ட்டுக்கு இழுக்க பார்க்கிறாரே… அதை நினைச்சு கவலைப்படுறியா… அதெல்லாம் பாத்துக்கலாம் விடு…” அவள் கடைசி வார்த்தையை சொல்லி முடிக்கும் முன் இல்லை என்று வேகமாய் தலையசைத்தான் முகிலன்.


“வேற என்ன…? உன் கண்ணெல்லாம் கலங்குற மாதிரி இருக்கு… என்னன்னு சொல்லு மாமா…” கனிவும் ஆறுதலமாய் பேசிக் கொண்டிருப்பவளை ஆண்கள் இருவருமே வேதனையுடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். 


தன் கரத்தின் மேல் கரம் வைத்திருந்தவளின் விரல்களை அழுத்தமாய் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன் “நா..நான் சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீ சங்கடமோ வேதனையோ படக்கூடாது… மா..மாமாவோட மனசை புரிஞ்சுக்கணும்… மத்தவங்களை விட நீதானே என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்க… மா..மாமாவை புரிஞ்சுக்கிட்டு மாமாகூட நிப்பியாடி…” குரல் கமற கேட்டவனை குழப்பமாகவே பார்த்திருந்தாள்.


“ரொம்ப பீடிகை போடுறியே மாமா… எதுவா இருந்தாலும் சொல்லு‌...” அவள் அழுத்தமாய் கூற அவன் தரணியின் முகத்தை திரும்பிப் பார்க்க அவனோ பூச்சண்டைத்தான் வேதனை வழிய பார்த்துக் கொண்டிருந்தான்.


முகிலன் கூறப்போகும் வார்த்தைகளை கேட்டு அவள் மனம் துடிக்கப் போவதை எண்ணி அவளைவிட கூடுதலாய் துடித்துக் கொண்டிருந்தான். அவளுக்காக இந்த பாழும் மனம் ஏன் இப்படி துடித்து கதறுகிறது என்று புரியவில்லைதான்… ஆனாலும் அவள் ஏற்கப் போகும் வலியை காண முடியாமல் பரிதவித்தது மனம்.


“அங்கே என்ன பார்வை…? சொல்லு மாமா… எனக்கு நேரம் ஆகுது…” முகிலனின் கவனத்தை திருப்பினாள்.


“பூச்செண்டு… நா..நான் எ..என்கூட வே..வேலை பா..பார்க்கிற ஒ..ஒரு பொ..பொண்ணை மூ..மூனு வருஷமா ல..ல..லவ் பண்றேன்…”


திக்குவாயன் போல் திக்கித் திணறி ஒருவாராக சொல்லி முடித்தவன் அவளையே மிரட்சியுடன் பார்த்தான். சற்று முன்வரை புன்னகையில் மலர்ந்திருந்த அவளது முகம் பட்டென வாடிய மலராய் கூம்பிவிட அவன் கைகளுக்குள் இருந்த தனது கைகளை மெல்ல விலக்கிக் கொண்டாள் பூச்செண்டு. மண்டியிட்ட நிலையில் அப்படியே அமர்ந்து தரையை வெறிக்கத் தொடங்கினாள்.


தானும் அவள் அருகில் வேகமாய் மடிந்து அமர்ந்தவன் “த..தங்கம்… எ..என்னை புரிஞ்சுக்கோடி… உன்மேல மாமாவுக்கு நிறைய பாசம் இருக்கு… என் உயிரையே உன் மேல வச்சிருக்கேன்… ஆ..ஆனா அது ஒரு அண்ணனுக்கு தங்கச்சி மேல வர்ற மாதிரி… ஒரு அப்பாவுக்கு பொண்ணு மேல வர்ற மாதிரி… நெருக்கமான தோழி மேலே தோழனுக்கு வர்ற மாதிரி அதே பாசமான உணர்வு மட்டும்தான்டி… அதைத் தாண்டி மாமா உன்னை வேற மாதிரி பார்த்ததில்ல செல்லம்… நீ எ..எப்பவுமே என் செல்ல நரிச்சின்னக்கா தான்… ஆ..ஆனா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்னைக்குமே நினைச்சது இல்லடி… பெரியவங்க தேவையில்லாத ஆசைகளை உன் மனசுல உருவாக்கி இருந்தா அந்த எண்ணத்தை தூக்கி போட்டுடு செல்லம்மா… உனக்கு என்னை விட பத்து மடங்கு உயர்வான ஒருத்தனை நானே கொண்டு வந்து உன் கண்ணு முன்னாடி நிறுத்துறேன்… அ..அப்பத்தா நம்ம கல்யாண விஷயமா பேச்சை ஆரம்பிச்சா மாமாவை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது நான் அப்படி பழகலைன்னு ஸ்ட்ராங்கா சொல்லிருடி… நீ..நீ ஸ்ட்ராங்கா சொன்னாதான் அடுத்து என்னோட விஷயத்தை ஸ்ட்ராங்கா நான் பேச முடியும்…”


முதலில் தயங்கினாலும் பேச்சை ஆரம்பித்தவுடன் வேகமாய் வந்துவிழும் நீர்வீழ்ச்சிபோல் தன் மனதில் இருந்த அனைத்தையும் பிசிறின்றி கூறி முடித்திருந்தான் முகிலன். சில நொடிகள் அங்கு அசாத்திய அமைதி… கண்கள் தரையை வெறித்து இருந்தாலும் ரத்தம் சுண்டி வெளிறிப்போன முகத்துடன் இறுக்கமான இதழ்களுடன் களை இழந்து பொலிவிழந்து பாறைபோல் இறுகி இருந்த முகத்தில் தெரிந்த அவளது வேதனையை முகிலனை விட தரணி அதிகமாய் கண்டு கொண்டான். அவளது வேதனை தாங்கிய முகம் இதயத்தில் வலியை ஏற்படுத்த வேகமாய் கண்களை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். முகிலனின் முகத்திலும் வேதனை.


“செ..செல்லக்குட்டி…” அன்பொழுக அழைத்தபடி அவளது கரத்தினைப் பற்ற வெடுக்கென உதறி எழுந்தவள் நெருப்பை வாரி இறைக்கும் விழிகளால் அவனைப் பார்த்து மயிலிறகு இமைகளை நனைத்து வெளியேறிய கண்ணீரை கண்களைச் சிமிட்டி உள்ளிழுத்து அங்கிருந்து வேகமாய் வெளியேறி இருந்தாள்.


துடிக்கும் அவள் இதயத்தின் வலிகளை முகிலன் உணர்ந்ததைவிட 100 பங்கு அதிகமாக உணர்ந்து அந்த கண்ணீர் கண்களில் கலக்கமுற்று அவளுக்காக தன் உள்ளத்தில் வலி கொண்டான் தரணிதரன்.


(தொடரும்)

 


Leave a comment


Comments


Related Post