இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -9 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 29-02-2024

Total Views: 33415


"அண்ணா உனக்கு எடுக்கலையா எடுத்துக்கோ." என்றாள் தங்கை.

"இல்லடா அம்மு இருக்கட்டும் இன்னும் ரெண்டு மாசத்துல பிறந்தநாள் வரதுல அதுக்கு எடுத்துக்கறேன்" என்று முடித்துவிட்டான்.

அவன் முகத்தில் தான் எத்தனை எத்தனை சந்தோசம் தன் உழைப்பில் தாய் தங்கைக்கு துணி, அவர்களும் நல்ல துணி உடுத்தப் போகிறார்கள் என்ற மகிழ்ச்சி அதை தாயாக ராஜி உணர்ந்து பூரித்துப் போனார்.

நாளை நான் இல்லை என்றாலும் கூட தன் மகன் மகளைப் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கை மலைப் போல் உண்டானது.

தாயும் தங்கையையும் அங்கே அமர வைத்துவிட்டு பில் போடப்போனான் வளவன்.

அந்த இடத்தில் அழகான குட்டி கவரிங் செயின் இருந்தது. அதைப் பார்த்ததும் அவன் கண் முன் சிரிக்கும் குரல் தோன்ற உடனே அதையும் வாங்கிக் கொண்டான்.

மூவரும் சந்தோசமாக துணியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.

"அம்மா சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரவா இல்லை ஹோட்டல் போய் சாப்பிடலாமா.?"

"இல்லை தம்பி வீட்டுக்குப் போய்டுவோம்."

"ஒருநாள் கடையில சாப்பிடலாம் தப்பில்ல வாங்க" என மூவருக்கும் சேர்த்து புரோட்டா வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

மீதம் இருந்த பணத்தை உண்டியலில் போட்டுவிட்டு அன்று இரவு உணவையும் உண்டு முடித்தவர்கள் படுத்து உறங்கினர்.

அடுத்த நாள் அழகாக விடிந்தது,

"அம்மா இன்னைக்கு  தான் தேர்கடைக்கு கடைசி தெரியுமா?"

"அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்? "

"நானும் வாரம் வாரம் கூட்டிட்டுப் போக சொல்லிக் கேட்டுட்டே இருக்கேன் இன்னிக்கு போலாம் நாளைக்குப் போலாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே தவிர கூட்டிட்டுப் போக மாட்டிக்கிறீங்க இன்னைக்கு கூட்டிட்டுப் போகல நான் சாப்பிடவே மாட்டேன்"

"டேய் யுகி வர வர அடம் அதிகம் பிடிக்க ஆரம்பிச்சிட்ட. பொறவு குச்சி எடுத்தேன் வெச்சிக்கோ வெளுத்து விட்டுருவேன் "

"தினத்திக்குமா கூட்டிட்டுப் போறீங்க. வருஷம் ஒரு தடவை வரது அதுக்குக் கூட கூட்டிட்டுப் போக மாட்டிங்களா "

"போய் உன் அப்பாகிட்ட கேளு. நானா வெளியே சுத்திட்டு இருக்கேன்."

"அப்பா போலாம்னு சொன்னா ஓகேவா உனக்கு "

"மொதல்ல கேளுடா"

"கேட்டுட்டு வரேன்" என தந்தையிடம் ஓடினான்.

மார்த்தாண்டம் கடைக்கு கிளம்ப கண்ணாடியின் முன் நின்று தலைவாரிக் கொண்டிருந்தார்.

"அப்பா"

"சொல்லுடா"

"இன்னைக்காவது தேர்க்கடைக்குக் கூட்டிட்டுப் போங்கப்பா.."

"சாயங்காலம் நேரமா வரப் பார்க்கறேன்டா."

"இப்படி தான் போன வாரமும் சொன்னிங்க"

"இந்த வாரம் சரியா வரேண்டா."

"நம்ப மாட்டேன் சத்தியம் பண்ணுங்க."

"யுகி என்ன பழக்கம் இது?, சின்ன சின்ன விஷயத்துக்கு சத்தியம் வாங்கிட்டு, சின்ன விஷயத்துல ஆரம்பிக்கிறது தான் கடைசியில பெரிய விசியத்துக்கும் வந்து நிற்கும். இனி சத்தியம் கேட்ட பல்லை தட்டிக் கையில குடுத்துடுவேன்."

"அப்போ நீங்க கூட்டிட்டுப் போனா நான் எதுக்கு சத்தியம் கேக்கப் போறேன்"

"உனக்கு வாய் அதிகமாகிடுச்சுடா ஈவினிங்  ரெடியா இருங்க நேரமா வந்து கூட்டிட்டுப் போறேன்,.உங்க அம்மாவையும் ரெடியா இருக்க சொல்லு."

"ம்ம்" என்றவன் மேலும் தயங்கி நிற்க.

"இன்னும் என்னடா அதான் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டேன்ல?"

"அப்பா பூனையும்."

"டேய்  எப்போ பாரு பூனை பூனைன்னு சொல்லிட்டு திரிஞ்ச வாயை கிழிச்சிடுவேன்" இவ்வளவு நேரமும் யுகியும் மார்த்தியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தவன் பூனை என்ற பெயர் வந்ததும் பொங்கி விட்டான்.

"நந்து என்ன பேச்சி இது."

"அப்பா அவங்க வந்தா ஒண்ணுமே வாங்க மாட்டாங்க, அவங்கள விட்டுட்டு எங்களுக்கும் நீங்க எதுமே வாங்கி தரமாட்டீங்க"

"அதுக்குன்னு  இப்படி பேசுவியா.?"

"அந்த பரதேசிக் கூட்டம் எதைப் பார்த்தாலும் வேண்டா வேண்டாம்னு சொல்லிட்டு கடைசியில ரெண்டு அப்பளத்தை வாங்கி தின்னுட்டு வரும், அதுங்க கூட வந்தா ஒண்ணுமே வாங்க முடியாதுப்பா" .என்று நந்தன் கத்த அவன் கன்னம் நெருப்பாக எரிந்தது.

மார்த்தாண்டம் தான் அடித்து இருந்தார்.

"அவ்வளவு சீக்கிரம் பிள்ளைங்களை மிரட்டும் ரகமில்லை. எப்போவாது  ஒருதடவை அடித்தாலும் வெளுத்து வாங்கிவிடுவார். இன்று நந்தனை அடி வெளுக்கும் நிலையில் தான் இருந்தார்.அந்த அளவிற்கு அவன் பேசியதில் கோவம் ஏற்பட்டிருந்தது.

"இனி ஒருதடவை பரதேசி கூட்டம் அது இதுன்னு பேசிப் பாரு தோலை உறிச்சி தொங்கவிட்டுடறேன், வயசு ஆக ஆக யாரையும் மதிக்கிறது இல்லை, சாயங்காலம் அவங்களும் தான் வருவாங்க  யாராவது கிளம்பி இருக்காம இருந்திங்க வந்து  பின்னி எடுத்துடுவேன்" என வெளியே வந்தவர் மணிமேகலையிடம் "ராஜிகிட்ட சொல்லிடு" என்று சென்று விட்டார்.

மணி என்ன சொன்னார்? சரி என்றாரா? இல்லை அவர்கள் எதற்கு என்று கேப்பாரா? என எதையும் கேக்கவில்லை, சென்றுவிட்டார்.

மார்த்தாண்டம் சொன்னதை வார்த்தை மாறாமல் ராஜியிடம் சொல்லிவிட்டவர். "கிளம்பி ரெடியா இருங்க ராஜி. வளவன் கிட்ட சொல்லிடு எங்க வீட்டுல நந்தனா?, உங்க வீட்டுல வளவன் ரெண்டு ரெண்டு துருவம், இதுங்களாலையே நம்ப பிரிஞ்சிப் போனாலும்  சொல்றதுக்கில்ல" என தலையில் அடித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

அவர் போனதும் வளவனிடம் பேச நேரம் பார்த்துக்கொண்டியிருந்த ராஜி. அவன் தங்கைக்கு தலை சீவி விடுவதைப் பார்த்ததும் புன்னகைத்துக் கொண்டே அவன் அருகில் சென்று நின்றார்.

"வளவா"

"சொல்லும்மா"

"மணியக்கா வந்துட்டுப் போச்சி"

"என்னவாம்."

"தேர்க்கடைக்கு சாயங்காலம் போறாங்களா?"

"போகசொல்லு யார் வேண்டானது "என்றவன் "பாப்பா தலையை ஆட்டமா வை.. இப்படி ஆட்டிட்டு இருந்தா எப்படி தலை பின்றது" என்றான் சாந்தமாக.

சின்ன வயதிலையே நிலாவிற்கு முடி அதிகம், இரட்டை சடையை பின்னி மடித்துக் கட்டினாலே தோளைத் தாண்டித் தொடும். அப்படி இருக்கும் முடியை ராஜி நேரமாக வேலைக்குப் போகும் நேரங்களில் சரியாக பராமறிக்கத் தெரியாமல்  கஷ்டபடுவாள்.

தனியாக தலைவார தெரியாமல் சீப்பை எடுத்துக் கொண்டு வீடு வீடாக செல்வாள். அவள் போகும் நேரத்தில் தான் அனைவரும் வீட்டு வேலையில் மும்முரமாக இருப்பார்கள்.அதனால் யாரும் சீவிவிடாமல் இருக்க பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு ஏனோ தானோ என்று இவளே சீவிக் கொண்டு பள்ளிக்கு ஓடுவாள்.

"ஏன் நிலா இப்படி தலை சீவியிருக்க யார் சீவுனா?,  வீட்டுக்கு வந்தா நான் சீவி விட்டுருப்பேன்ல" என மணிமேகலைக் கூட கேட்டுவிட்டார். அங்கு சென்றால் நந்தன் இருப்பானே அவனுக்கு பயந்தே அங்கு செல்ல மாட்டாள்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு தங்கைக்கு தலை வாரிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சடைப் பின்ன கற்றுக் கொண்டான் வளவன்.

அதை இன்று செயல் படுத்திக் கொண்டிருக்க ராஜி இவ்வாறு வந்து சொல்லவும் கோபம் வந்துவிட்டது.

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நான்தான் அவங்ககூட எங்கையும் போகக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல முடியாதுன்னு சொல்லிடுங்க. இல்லையா கையில காசு இல்லைனு சொல்லுங்க நம்ப இந்த வருஷம் போகலைன்னாலும் பராவாயில்ல."

அப்படி சொன்னா நான் போட்டுக்கறேன் ஆகற காசை அப்புறம் குடுன்னு சொல்லுவாங்க.

ஏம்மா இப்படி இருக்க. ஏதாவது சொல்லி சமாளிக்க தெரியாதா.அவங்களா கையில பணத்தை வெச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம சுத்தற கேஸ்.. நம்ப ஒரு ரூபாயினாலும் யோசிச்சி யோசிச்சி செலவு பண்ற கேஸ்,ரெண்டுபேருக்கும் ஒத்து வராதும்மா" 

"கூப்புடும் போது போகாம இருந்தா மரியாதையா இருக்காதுப்பா ஒரு தடவை போய்ட்டு வந்துடலாம் அம்மா பணம் வெச்சிருக்கேன் நம்ப செலவு பண்ணிப்போம். அவங்க வாங்கறதை வாங்கட்டும் நம்ப வேடிக்கை தானே பார்க்கப் போறேன், சரின்னு சொல்லு ராசா நீயும் அந்த நந்தன் தம்பி மாதிரி பண்ணாதப்பா" என்று பார்வையால் கெஞ்ச.

தாயிக்காக செல்ல  வேண்டும் என சரி என்று தலையசைத்து விட்டான்.

முன்னாள் அமர்ந்திருந்த நிலாவிற்கு நந்தன் குடும்பம் என்றதும் தேர்க்கடைக் கூட எட்டிக்காயாக கசந்து போனது.

குழந்தைகள் விரும்புவதே இதுபோன்ற சின்ன சின்ன நிகழ்வுகளை தான் அதையே வெறுக்க வைத்து விட்டான் நந்தன்.

அவனுடன் போகும் போது  ஏதாவது பொருள் வாங்கினாலும், "ஓ காசு கையில  ஈஸியா பொறலும் போல, அப்பனும் பக்கமா வந்துட்டு போன மாதிரி தெரியலையே, வேற எப்படி காசு வந்துருக்கும்?" என நக்கல் பேசுவதுப் போல் கேவலப் படுத்துவான், எதுவும் வாங்காமல் விட்டாலும், "இந்த பரதேசி கூட்டத்துக்கிட்ட இந்த மாதிரி காஸ்ட்லி பொருள் வாங்க ஏது பணம்?"என கிண்டல் செய்வான், எப்படி பார்த்தாலும் போகும் போது சந்தோசமாக  போனாலும் வரும் போது அந்த சந்தோசம் இருக்காது என நன்றாக தெரியும்.அதற்கு எதற்கு போக வேண்டும் என்ற  எண்ணம் தான் நிலாவிற்கு

வறுமை எதைக் கற்றுக் கொடுக்கிறதோ பக்குவத்தையும் சுயகவுருவத்தையும் கண்டிப்பாக கற்றுக் கொடுத்துவிடும்.

அன்று மாலை மார்த்தாண்டம் வீட்டுற்கு வந்ததும் அனைவரும் இரண்டு கிலோமீட்டர் நடந்தே தேர்க் கடைக்குச் சென்றனர்.

யுகி,ஷாலினி, வளவன், நிலா நால்வரும் ஒரு கூட்டணி, ராஜியும் மணியும் ஒரு கூட்டணி , நந்தனும் மார்த்தாண்டமும் ஒரு கூட்டணி.. மூன்று கூட்டணியாக  பிரிந்து நடந்து சென்றனர்.

நடந்து செல்வதால் கிருஷ்ணம்மாள் வரவில்லை என்று விட்டார்.

ராஜி குடும்பத்தை  தங்கள் குடும்பத்துடன் அனுப்ப விருப்பமில்லை, மார்த்தாண்டம் கிளம்ப சொல்லி காலையிலையே சொல்லி சென்றதால் வேறு வழியின்றி அமைதியாக இருந்துக் கொண்டார். அதுவும் அவரின் மகனுக்கு முன்பு மட்டும் தான்.ராஜியின் முன்பும் சரி வளவன் முன்பும் சரி தேள் போல் கொட்டிக் கொண்டே தான் இருந்தார்.தேளின் குணமே அதுதானே 

நால்வர் சேர்ந்த கூட்டணி பொருட்கள் எதையும் வாங்காமல் கண் பார்வையிலே மனதை நிறைத்துக் கொண்டு வந்தனர்.

"ராஜி இந்த வயசு தான் எதைப் பார்த்தாலும் வாங்கணும்னு நினைக்கற வயசு இதுலையே உன் பசங்க ஒன்னையும் கேக்கக் கூட மாட்டிக்கிறாங்க நல்லா வளர்த்து வெச்சிருக்கப்  போ".

"நான் வாங்கிக்க தான் சொல்றேன்க்கா அவங்க தான் வேண்டாம்னு சொல்றாங்க "

"அதான் நானும் சொல்றேன் பொதுவா பசங்க கேட்டு நம்ப வேண்டாம்ன்னு சொல்லுவோம், ஆனா உன் பசங்க தான் நீ வாங்கிக்க சொன்னாலும் வேண்டாம்னு சொல்றாங்க அம்மா கஷ்டம் தெரிஞ்சி வளர புள்ளைங்க பாரு நாளைக்கு நல்லா வருவாங்க."

"என்னமோ அக்கா நான் இவ்வளவு கஷ்டப் படறதும் இதுங்க ரெண்டுக்கும் தான் ஒன்னுக்குகூட அவங்க அப்பன் புத்தி வந்துரக் கூடாது அப்படி வந்துடுச்சு அப்புறம் இவ்வளவு காலமும் கஷ்டப்பட்டது வீண் இது மேல நான் இருந்து என்னப்பண்ணப் போறேன், தூக்குல தொங்க வேண்டியது தான் அக்கா."

"ஏய் என்ன வார்த்தை சொல்ற அதெல்லாம் அப்படி இருக்க மாட்டாங்க. கம்முன்னு இரு"

"அந்த நம்பிக்கையில தான் உடம்புல உசுரு ஒட்டிட்டு இருக்கு  வளவன் கஷ்டம் தெரிஞ்ச பையன் நிலாவும் அப்படி தான் இருக்கா"

"பொறவு என்ன உனக்கு.தங்ககட்டியாட்டம் ரெண்டை பெத்து வெச்சிட்டு இன்னும் உனக்கு கவலை வேறையா?"என்றதும் தான் ராஜியின் மனம் சற்று அமைதியானது.



"பூனை உனக்கு இந்த பாசி நல்லா இருக்கும் வாங்கி தரட்டுமா?"

"உன் தங்கச்சிக்கு நீ வாங்கிக் குடு,என் தங்கச்சிக்கு எனக்கு வாங்கிக் குடுக்க தெரியும்."என வளவன் பட்டென்று சொல்லிவிட 

"வாங்கி கொடுக்கறேன்னு சொன்னது ஒரு குத்தமாடா.?" என்றான் 

"ஆமா குத்தம் தான்,என்னமோ உங்க காசுல தான் நாங்க வாழற மாதிரி பேசுறது.நீங்க இல்லைன்னா நாங்க என்ன செத்தாப் போயிடுவோம்!

"இங்க வந்தும் சண்டைப் போட்டுக்காதீங்க. நீ எனக்கு எது நல்லா  இருக்குமோ அதை சொல்லு யுகி, அண்ணா வாங்கி குடுப்பான் பிரச்சனை முடிஞ்சது.

" எல்லோரும் நிலாக்கு வாங்குறதுக்கே அடிச்சிக்கோங்க. என்னய யாரும் கண்டுக்காதீங்க"  என்று ஷாலினி முகத்தை திருப்ப.

"நீ உன் பூனையைப் பாரு நானும் ஷாலுவும் அந்த ராட்டினத்துக்கு போய்ட்டு வரோம்" என்ற வளவன் ஷாலினியின் கையைப் பிடித்துக் கொண்டு ராட்டினத்தின் அருகில் போனான்.

பெரிய பெரிய ராட்டினம்  சுற்ற ஆசை தான் ஆசையை விட பயம் அதிகம் இருக்க, போவதா வேண்டாமா என நால்வருமே கபடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

நந்தனுக்கு அவர்கள் நால்வரும் ஒன்றாக சுற்றுவது சுத்தமாக பிடிக்கவேயில்லை அதுவும் வளவன் ஷாலினியின் கையை பிடிக்கும் போது எரித்து விடுவது போல் பார்ப்பான்.

ராட்டினம் சுற்றிவிட்டு இரண்டு அப்பளத்தை வாங்கி நால்வரும் பாதி பாதி பங்கிட்டு சாப்பிட்டு விட்டு. ராஜி, மணியுடன் இணைந்துக் கொண்டனர்.

"அம்மா போலாமா நைட் ஆகிடுச்சு.."

"போலாம் யுகி இன்னும் நந்து வாங்கி முடிக்கல அப்பாகிட்ட சண்டைப் போட்டுட்டு இருக்கான்  வாங்கட்டும் அப்புறம் போலாம்."

'அப்படி என்ன வாங்கியிருக்கிறான்?'என பார்க்க அவர்கள் அருகில் செல்ல.  டெனிஸ் பேட், கால்பந்து,வீடியோ கேம், என கையில் பிடிக்க இடம் இல்லாத அளவிற்கு வாங்கிருந்தான்.

காலையில் அடித்ததற்காக  இது என புரிந்து போனது யுகிக்கு 

மார்த்தாண்டம் யுகியைப் பார்த்ததும் "வாடா உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ."என்றார்.

"எனக்கு எதுவும் வேண்டாம். இதெல்லாம் இவனுக்கா இல்லை மூணுப்பேருக்குமா?"

"வா தருவேன் பார்த்துட்டு இருப்ப, போடா.என்னோடதுல கையை வெச்ச கையை உடைச்சிடுவேன்."

"நந்து அப்டிலாம் சொல்லக்கூடாது மூணுப்பேருக்கும் தான் வாங்குனேன்  விளையாடும் போது சேர்ந்து விளையாடுங்க."என முடித்துவிட்டார்.

அனைவரும் இரவாகி விட்டதால் பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.


ஆசையாக வாங்கிய செயினை எடுத்துப் பார்த்த வளவன் , இன்னும் அதை உரிய இடத்தில் சேர்க்கவில்லை என்ற நியாபகம் வரவும் 

"ஷாலு" என்றான்.

"வள்ளு".

"இந்தா நேத்து டிரஸ் எடுக்க கடைக்குப் போனோமா, அங்க இதைப் பார்த்ததும் உனக்கு வாங்கணும்னு தோணுச்சு" என செயினை அவளிடம் கொடுத்தவன், "அத்தைக்கிட்ட நான் சொல்லிடறேன் நீ உங்க ஆயாவுக்கு தெரியாம வெச்சிக்கோ" என்றான்.

அவர்கள் பின்னாடியே வந்த யுகி

"ஏண்டா அவளுக்கு மட்டும் தான் செயினா எனக்குலாம் எதுவும் இல்லையா?" என யுகி கேக்கவும்

"உனக்கு வாங்கிக் குடுத்தா உன் ஆயா கண்டுபிடிச்சிடும்ல அதான்  நீ வா நம்ப போய் வாங்கிப்போம்" என்றான்

"பரவாயில்லை நான் சும்மா தான் கேட்டேன் பணத்தை ரொம்ப செலவு பண்ணாத, அத்தைக்கு உதவிக்கு குடுத்துடு"

"அம்மா வேண்டாம்னு சொல்லிடுச்சி அதனால உண்டியல தான் போட்டு வெச்சிருக்கேன்" என்றவன் ஷாலினி போட்ட செயினைப் பார்த்தான்.

அவளுடைய சங்கு கழுத்திற்கு அழகாக இருந்தது.

"இதை வெச்சி உன்னோட அண்ணனனும் ஆயாவும் ஏதாவது ஓரண்டையை இழுத்துடப் போறாங்க பார்த்து வெச்சிக்கோ தங்கம்'

"ம்ம் நிலாவுக்கு என்ன வாங்குன.?"

"அம்முக்கு டிரஸ் எடுத்தோம்"

'ஒ எனக்கு வெறும் செயினு, அவளுக்கு மட்டும் டிரசா? " என முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள.

"உனக்கு இது வாங்கி தரதே பெருசு போடி உள்ளே" என யுகி மிரட்டினான்.

"புள்ளைய எதுக்கு மிரட்டற யுகி. இருக்கற பணத்தை உண்டியல போட்டுட்டேன்டாம்மா அடுத்த தடவை வர பணத்துல உனக்கும் டிரஸ் எடுத்துக்கலாம் சரியா" என அவளது கன்னம் பிடித்துக் கொஞ்ச..

அந்த கொஞ்சலில் கூட அவள் முகம் சரியில்லாமல் இருந்தது.

"என்னடாம்மா இன்னும் வள்ளு மேல கோவமா.?"

"இல்ல, எனக்கு வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு" என்றவள் வீட்டைப் பார்த்து ஓடினாள்.

"நீயும் கூடப் போ யுகி அவளுக்கு என்னவோ தெரியல பாரு ஆயாக்கிட்ட சொல்லி ஏதாவது குடுக்கச் சொல்லு" என அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் சென்ற அரைமணி நேரத்தில் ஷாலினி பெரிய பெண்ணாகிவிட்டாள் என செய்தி வர வளவன் முகம் பூப் போல மலர்ந்தது


Leave a comment


Comments


Related Post