இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 29-02-2024

Total Views: 25960

பகுதி 10 

இத்தனை ஆண்டுகளில் மீனாட்சியின் அன்பில் ஆளுகையில் அந்த வீடு வசப்பட்டு இருந்தது. அவர்கள் திருமணம் முடிந்த மறுநாள் அபிராமி அவர் அண்ணன் மனைவியுடன் பேசுவது ஏதேர்ச்சியாக மீனாட்சியின் காதில் விழுந்தது.

"என்னமோ போங்க அண்ணி. இவங்க அம்மா இத்தனை வருஷம்ஆட்டி வச்சா. இப்போ இல்லாதவங்கள பத்தி பேச கூடாது தான். ஆனா அவ பொண்ணு இவ இப்போ இந்த வீட்டுக்கே மருமகளா வந்திருக்கா. இவளால இன்னும் என்னென்ன கஷ்டம் நான் படணும்னு இருக்கோ."

"கவலை படாதீங்க அண்ணி. எனக்கு என்னவோ இந்த பொண்ணை பார்த்தா அப்படி தெரியலை."

"என்னமோ... நீங்க சொல்றீங்க நானும் கேட்டுக்குறேன்." அலுத்தபடி அபிராமி சொல்லவும் அந்த நிமிடம் மீனாட்சி உறுதி பூண்டாள். ஒரு நாளும் தன்னால் இந்த வீட்டில் பிரச்சனை வரக் கூடாது என்று. இன்று வரை அதில் அவள் உறுதியாகவும் இருக்கிறாள். அவளுக்கு அதிகம் கஷ்டம் இல்லாமல் அடுத்து வந்த பார்கவியும் ஒன்றிவிட எப்போதாவது விசேஷங்களில் பிரச்சனை செய்யும் சில்லுண்டுகள் தவிர அவள் உறுதியை குலைக்க எதுவும் பெரிதாக நடந்துவிடவில்லை.

யாரேனும் அவளை ஏதாவது சொன்னால் காசிநாதன் தான் குதிப்பார். அப்போதெல்லாம் மீனாவிற்கு சிறிதாக ஆசை தலை தூக்கும். ஏதேனும் ஒரு கட்டத்தில் அமரன் தனக்காக நிற்க மாட்டானா என்று. ஆனால் மண்டையில் ஓங்கி அடிப்பது போல ஒவ்வொரு முறையும் அவன் ஒதுங்கியே நின்றான். இத்தனைக்கும் அவர்கள் பேசியது இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதை பற்றி தான் அதிகம். அது அவனையும் குறிக்கும் தானே. ஆனால் அவனோ யாராவது எப்படியாவது பேசட்டும் என்று இருந்துவிடுவான்.

*******

அன்று திருமண பட்டு எடுத்துவிட்டு வீட்டினருக்கும் துணிமணி எடுத்தனர். இப்போதைய கலாச்சாரம் போல தம்பதிகளுக்கு ஒரே நிறத்தில் எடுத்தனர். 

மாதம் அதிகமாக தொடங்கி இருந்தாலும் பார்கவி ஆர்வமாகவே எல்லாவற்றையும் அலசிக் கொண்டு இருந்தாள். மீனா மேம்போக்காகவே பார்த்துக் கொண்டு இருந்தாள். யார் பார்த்து ரசிக்க அவள் கட்டுவது என்று அலுப்பாக இருந்தது. ஏனோ இப்போதெல்லாம் அவள் வாழ்வை நினைத்து சிறிது அலுப்பும் சலிப்பும் வரத்தான் செய்கிறது. அது ஒரு வேளை சக ஜோடிகளாக தேவா கவி மற்றும் விசு நந்தாவை பார்ப்பதனால் இருக்கலாம். உடனேயே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். தனக்கு எந்த விதத்தில் குறை? மாமியார் கொடுமை குடித்துவிட்டு அடிக்கும் கணவன் என்று தன்னை விட எத்தனையோ பெண்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள். தன்னை ராணி போல வைத்திருக்கும் புகுந்த வீட்டில் இருந்து கொண்டு அலுத்துக் கொள்ளலாமா? தலையை சிலுப்பிக் கொண்டு புடவைகளில் கவனம் செலுத்தினாள். அவன் பார்க்காவிட்டால் என்ன? நமக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்வோம். என் சந்தோசம் என் கையில் என்று நினைத்தவள் ஒரு மயில் கழுத்து நிற சேலை வெள்ளி மயில்கள் நெய்தது அதை தேர்ந்து எடுத்தாள்.

"சூப்பர் கா. நானும் இத்தனை சேலை பார்த்தேன். இது என் கண்ணுல படலையே." என்று சேலையை ஆசையாக வருடினாள் பார்கவி.

"உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்கோ கவி. நான் வேற எடுத்துக்கிறேன்."

"சே சே. நான் நல்லா இருக்குனு தான் சொன்னேன். எனக்கு இந்த நிறம் சரி வராது. நீங்க இப்போ எனக்கு பாருங்க வாங்க."

மருமகள்களின் ஒற்றுமையை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டு இருந்த அபிராமி அடுத்து வருபவளும் இப்படியே ஒத்து போய் விட்டால் நல்லது என்று எண்ணிக் கொண்டார்.

துணிமணி முடிந்து அதற்கு ப்ளௌஸ் தைக்க கொடுத்துவிட்டு இவர்கள் கிளம்ப இரவு ஏழு மணி ஆகிவிட்டது. காசிநாதன் கணக்குகளை பார்க்க அவர் அறைக்கு சென்றுவிட்டார்.

"இதுக்கு மேல வீட்டுக்கு போய் எப்படி சமைப்பீங்க? இங்கயே ஹோட்டல்ல சாப்பிட்டு போங்க." என்றான் அமரன்.

"பாருடா அண்ணனுக்கு அண்ணி மேல அக்கறையை." என்று விசு கேலி பேசவும் தனக்காகவா சொன்னான் என்பது போல திரும்பி பார்த்தாள் மீனா.

"ஆமாம் பின்ன மாசமா இருக்குறவளுக்கு பசிக்காதா? தேவா இதை நீ தானே யோசிச்சு சொல்லி இருக்கனும்." என்று கண்டிப்பான குரலில் அமரன் சொல்லவும் அதுதானே பார்த்தேன் என்று எண்ணியபடி கடையில் பார்வையை சுழலவிட்டாள். 

"அது... அண்ணா... மீனா எல்லாத்தையும் பார்த்துக்குவா... அது தான்." என்று தேவா இழுக்க "அந்த குழந்தைக்கு அப்பா நீயா மீனாவா? எல்லாத்தையும் அவளே பார்த்துக்க? உனக்கு பொறுப்பு வேணாம்?" என்று காய்ந்தான் அமரன்.

என்னவாயிற்று இவனுக்கு இன்று? வீட்டினர் எல்லாருமே குழப்பமாக பார்க்க அப்போது அங்கே கடை சூப்பர்வைசர் உடையில் ஒரு பெண் வந்தாள்.

"என் டூட்டி முடிஞ்சுது அமர். இப்போ உங்க வீட்டு ஆளுங்களை எனக்கு அறிமுகம் செஞ்சு வைக்கலாம் தானே?" என்று உரிமையான குரலில் கேட்டாள்.

இது யார் இவள்? இது வரை இவர்களுக்கு தெரியாத புதிய முகம் இவ்வளவு உரிமையுடன் அமரனிடம் பேசுகிறாள். 

அமரன் தயங்கவும் "நீ விடு. நானே என்னை அறிமுகப் படுத்திக்கிறேன். நான் சுப்ரியா. அமர் கூட ஒண்ணா படிச்சு அதுக்கு அப்புறம் ஒண்ணா ஒரே கம்பெனில வேலையும் பார்த்தோம். கொஞ்ச வருஷம் வேற வேற ஊருல வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்போ ஒரு மாறுதலுக்காக இங்கே அமர்க்கு அசிஸ்டன்ட் மாதிரியான ஒரு வேலையில் சேர்ந்து இருக்கேன். நீங்க அபிராமி அம்மா, இது மீனா, இது தேவா, இது பார்கவி, இது விசு. சரி தானே நான் சொன்னது?" படபடவென பேசுபவளையே வெறித்துப்பார்த்தனர் வீட்டினர். எல்லாரயும் தெரிந்து வைத்திருக்கிறாள். ஆனால் இவர்களுக்கு அவளை தெரியலையே.

"சரியாய் சொன்னீர்கள் சுப்ரியா. நைஸ் டு மீட் யூ. ஒரு நாள் வீட்டுக்கு வாங்க சாவகாசமா பேசலாம். இப்போ எங்களுக்கு கிளம்புற நேரம் ஆச்சு. பை."
 என்று மரியாதையாகவே அங்கிருந்து கிளம்பினாள் மீனா.

அமரன் சொன்னது போல ஒரு ஹோட்டலில் அமர்ந்து வேண்டியது வர வைக்கும் வரை யாரும் பேசவில்லை. 

சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள் பார்கவி "யாரு மீனாக்கா அது? எதோ ரொம்ப ஸ்டயிலா இருந்தா மாதிரி இருந்தாங்க. நம்ப ஊரு மாதிரி இல்லையே."

அவளுக்கு எப்படியும் அமரன் மீனாவிடம் தன் தோழியை பற்றி சொல்லி இருப்பான் என்ற நம்பிக்கை.

"தெரியலை கவி நானும் இன்னைக்கு தான் பார்க்குறேன். எனக்கு அந்த மஞ்சுரியன் தாயேன்." என்று சாதரணமாகவே கடந்துவிட்டது போல காண்பித்துக் கொண்டாலும் மீனாவிற்கு வலிக்க தான் செய்தது.

கணவனுக்கு தோழி. அவள் சொல்வதை பார்த்தால் கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல். ஆனால் அவள் யாரென்றே தெரியவில்லை தனக்கு. அது சரி. தன்னை பற்றி எல்லாம் கணவனுக்கு தெரியுமா என்றால் அதுவும் இல்லை. கணவனுக்கு இந்த வீட்டினருக்கு தெரியாத எத்தனையோ ரகசியங்கள் தன்னிடம் இல்லையா. அது போல இதுவும் ஒன்று என்று கடந்து விட முயன்றாள் மீனா. ஆனால் சுப்ரியாவின் முகமா அவள் அருகாமையில் அமரனின் முகத்தில் வந்த பாவங்களா எது என்று தெரியாமல் ஏதோ ஒன்று அவளை மனதின் ஒரு ஓரத்தில் உறுத்த தொடங்கியது.


Leave a comment


Comments


Related Post