இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 02-03-2024

Total Views: 40718

அன்றைய இரவு உணவின்போது பூச்செண்டை தவிர்த்து குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் இருந்தனர். எந்நேரமும் பாட்டியுடனும் முகிலனுடனும் வம்பிழுத்து வாயளந்து கொண்டிருப்பவளைக் காணாது தரணியின் கண்கள் சுழன்று தேடின.


“அப்பத்தா .. பூச்செண்டு எங்கே…?” முகிலனே கேட்டிருந்தான்.


“என்னாங்கடி இது அதிசயத்திலேயும் பேரதிசயம்… அழகு போல வச்ச பேரை இப்போதான் சொல்லி கூப்பிடணும்னு தோணுச்சா என் பேராண்டிக்கு… அவ இருந்து இதை கேட்டிருந்தா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்பாளே… கலா மக சடங்காயிட்டா… மேலுகோப்பு பண்ண போயிருக்கா…” காலை நீட்டி அமர்ந்து அவர்களுக்கு பரிமாறியபடியே பதில் அளித்தார் பாட்டி. சிறிது நேரத்தில் மல்லிகாவின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.


“சொல்லுடி…….. ஏன்…? ஏன்டி…?..... அடி நாங்க இங்க இருக்கோமே……… ஏன் இங்க வர்றதுக்கு என்ன…?...... ஏ… பூச்செண்டு…”


அவருடன் பேசியது யார் என தெரிந்தது. அவர் போனை பார்த்துக் கொண்டிருந்த விதத்திலேயே பேசும்போதே இணைப்பை துண்டித்திருக்கிறாள் என்றும் புரிந்தது. தரணியும் முகிலனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


“என்னத்த…?” முகத்தை சுருக்கிக் கொண்டிருந்தவரிடம் கேட்டான் முகிலன்.


“தீட்டு வீட்ல எப்பவும் சாப்பிட மாட்டா… இங்கே வருவான்டு பார்த்தா வீட்டுக்கு போறாளாம்… நேத்து கூப்பிட்டதுக்கு கூட வர மாட்டேன்டு சொன்னா… இன்னைக்கு என்ன கேடோ நேரா வீட்டுக்கு போறேன்டு சொல்றா… அங்கே ஒன்னும் ஆக்கி வைக்கல…” மகள் சாப்பிடாமல் படுத்து விடுவாளோ என்ற கவலை அவருக்கு.


“அவளுக்கு என்ன ஆக்கி அரிக்க தெரியாதா…? பசி பொறுக்க மாட்டா… என்னத்தையாவது செஞ்சு சாப்பிட்டுத்தான் படுப்பா… விடு…” உண்டு முடித்த உணவுப் பாத்திரங்களை நகர்த்தியப்படியே கூறினார் பாட்டி.


“ரவைக்கு இங்கனயே தங்கிக்கலாம்னு பார்த்தோம்‌‌… அவ அங்கே போறேங்கிறா… தனியா விட முடியாதும்மா… நாங்க கிளம்புறோம்… இந்தாங்க… நாம கிளம்பலாம்… எந்திரிங்க… அவளும் வீட்டுக்கு வந்திருப்பா…” தன் கணவரை அழைத்தபடியே உடனடியாக வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தார் மல்லிகா.


“அத்த… நீங்களும் மாமாவும் இங்கேயே இருங்க… நான் போய் பூச்செண்டை கூட்டிட்டு வரேன்…” வேகமாக எழுந்தான் முகிலன்.


“விடு முகிலு… இந்நேரத்துக்கு மேல அவ இங்கே வந்து என்ன பண்ணப் போறா… எங்கன படுத்தாலும் ஒறங்கத்தான் போறோம்… நாங்க அங்கேயே போறோம்…”


“அவேந்தேன் போய் கூட்டியாறேன்னு சொல்றாய்ன்ல… கூட்டியாறட்டும் விடு… நீங்க இங்கனதான இருங்க… செல முக்கியமான விஷயம் பேசணும்…” என்ற பாட்டி உரல் உலக்கையும் வெற்றிலையுமாய் தூணோரம் கால் நீட்டி அமர்ந்து கொண்டார். முகத்தில் ஒருவித கலவரத்துடன் தரணியை பார்த்தான் முகிலன். அவனும் புரியாத குழப்பநிலையில் இவனைப் பார்த்தான்.


“எம்மா… எதா இருந்தாலும் நாளைக்கு காலையில சாவகாசமா பேசிக்கலாம்… உடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி வலிக்குது… படுத்தாதேன் சரியா இருக்கும்… மாப்பிள்ளையும் வெரசா தூங்குற மனுஷன்‌.. உனக்குத்தேன் ஒறக்கம் வராது… விடிய விடிய வேணாலும் பேசுவ… எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்…” உடலை முறுக்கியபடியே கொட்டாவியுடன் எழுந்து நின்றார் மணிவாசகம்.


“விடிஞ்சதும் தோட்டத்துக்குச் சேவ கெளம்பிருவீக… அப்புறம் எங்கன ஒக்காந்து பேசுறது…? செத்தவடம் பேசுறதுக்குள்ள ஒனக்கு என்ன அப்படி ஒரு ஒறக்கம் வருது…? சடைந்து கொண்டார் பாட்டி.


“முக்கியமான விஷயம்னாலே அதைத் தொட்டு இதைத் தொட்டு நெறைய பேசணும்… எல்லாருமே அலைஞ்சு திரிஞ்சு வந்திருக்கோம்… தலைவலின்னு செண்பகம் வேற மாத்திரையை போட்டுட்டு படுத்திருக்கா… காலையில நாங்க யாரும் எங்கேயும் போகல… இங்கேயே இருக்கோம்… நீ என்ன பேசணுமோ பேசு… சரியா…”


பாட்டியும் வேறு வழியின்றி சரி என்று தலையாட்ட முகிலனின் ரத்த அழுத்தத்தை தற்காலிகமாக குறைத்திருந்தார் மணிவாசகம்.


“அப்போ நீ போயி அவளை கூட்டியாந்துரு முகிலு… இவுக இங்கனயே இருக்கட்டும்… வீட்டுக்கு போனா காலையில அவுக சோலிய பார்க்க கெளம்பிருவாக… நான் பேச வேண்டியதை நாளைக்கு பேசியே ஆகணும்…”


பாட்டி ஒரு முடிவுடன்தான் இருந்தார். இழுத்து பெருமூச்சுவிட்டு வண்டி சாவியுடன் வெளியேறினான் முகிலன். தரணி மாடியறைக்குச் சென்றிருந்தான்.. மற்றவர்கள் அனைவரும் படுக்கச் சென்றிருந்தனர்… மல்லிகாவின் வீட்டிற்குள் முகிலன் நுழைந்தபோது கட்டிலில் உள்ள சோபாவில் படுத்திருந்தாள் பூச்செண்டு. நெற்றியின் மேல் கையை மடக்கிய நிலையில் வைத்து மல்லாக்கப் படுத்திருந்தவள் அரவம் கேட்டு கையை விலக்கிப் பார்த்தாள். முகிலனை பார்த்து எவ்வித உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாது மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். குறும்பும் சிரிப்பும் மிளிரும் அந்த முகம் மொத்தமாய் வாடி இருப்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டான் முகிலன்.


“அம்மு…” பிரியமான நேரங்களில் செல்லமாய் அவளுடன் விளையாடும்போது இப்படி அழைப்பது வழக்கம்… அவளிடம் அசைவில்லை.


“சாப்பிட வராம இங்கே வந்து தனியா உக்காந்து என்ன பண்ற…? வா… நம்ம வீட்டுக்குப் போகலாம்…” அவனது மென்மையான குரலில் படக்கென கண் திறந்தவள் அவனை ஆழமாய் அர்த்தப் பார்வை பார்க்க அவனோ சங்கடத்துடன் கண்களை திருப்பிக் கொண்டான். சில நொடிகள் அவனையே உறுத்துப் பார்த்தவள் முதுகு காட்டி புரண்டு படுத்துக் கொண்டாள்.


“அம்மு… சொன்னா கேளு… அத்தையும் மாமாவும் அங்கேயே படுத்துட்டாங்க… உன்னை இங்க தனியா விடமுடியாது… வா… வீட்டுக்குப் போகலாம்… சாப்பிடாமக்கூட ஏன் இப்படி வீம்பா படுத்திருக்க…? எந்திரி…” அவள் கையை மென்மையாய் பற்றினான். வேகமாய் அவன் கையை உதறி துள்ளிக் கொண்டு திரும்பினாள் பூச்செண்டு.


“உன் வேலை என்னமோ அதை பார்த்துட்டு போ… பாசம் இருக்கிற மாதிரி சும்மா வந்து நடிக்க வேணாம்…” சீற்றமாய் பேசியவளை வேதனையுடன் பார்த்தான் முகிலன்.


“உ..உன்கிட்ட நா..நான் நடிக்கிறேனா…? உ..உன் மேல இருக்கிற பாசம் பொய்யின்னு நினைக்கிறியாடி…?” அவனுக்கு தொண்டை அடைத்தது.


“ஆமா… எல்லாமே பொய்தான்.?. நீ ரொம்ப உண்மையானவன்னு நினைச்சு நான்தான் ஏமாந்து போயிட்டேன். உன்னை பத்தி முழுசா புரிஞ்சுக்காம என் மாமாவை பத்தி எல்லாமே எனக்குதான் தெரியும்னு திமிரோட சுத்திட்டு இருந்துட்டேன்… நீ என்னை ஏமாத்திட்ட மாமா…” கடைசி வார்த்தையை சொல்லும்போதே நா தழுதழுத்து முகத்தை மூடிக்கொண்டாள்.


அவளது பேச்சில் முகிலனுக்கும் கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவள் கண்ணீரை அவன் தாங்க மாட்டான். காதல் வந்ததில்லை… ஆனால் பாசம் அதிகம்… அன்பு கொண்ட மனம் அவள் அழுகையை காண முடியாமல் தவித்தது.


“அம்மு…” தவிப்புடன் முகத்தை மூடி இருந்தவளின் விரல்களை விலக்கி அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த நிலையில் கண்ணீரை தேக்கியிருந்த கண்களை பார்த்தபடி அவள் கன்னங்களை கைகளில் ஏந்தி இருந்தான்.


“நீ அழுதா மாமாவால தாங்க முடியாதுடி… இங்கே பாரு…” அவள் முகத்தை அழுத்தமாய் நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தான்.


“சின்ன வயசுல இருந்து ஒன்னாவே தானே வளர்ந்தோம்… என்னை நீ புரிஞ்சுக்கவே இல்லையா…? உன்னை நான் நிறைய வம்பிழுப்பேன்… நாம ரெண்டு பேரும் நிறைய சண்டை போடுவோம்… அடிச்சு மல்லுக்கட்டி உருளுவோம்… எல்லாத்தையும் தாண்டி நாம ஒருத்தர ஒருத்தர் என்னைக்குமே விட்டுக் கொடுத்துக்க மாட்டோம்… என் நரிச்சின்னக்கா என் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கான்னு எனக்குத் தெரியும்… நானும் உன்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு உனக்கும் தெரியும்… ஆ..ஆனா அது பாசம் மட்டும்தான்டி பவுனு… ஒரு அப்பா தன் புள்ள மேல வச்சிருப்பாரே… அந்த மாதிரி…” 


“நீ என் மனசுல இருக்குற… என் செல்லக்குட்டியா… ஆனா நான் உனக்கு கொடுத்து வச்சிருக்கிற இடம் வேறடா… உன்னை என் மனைவியா நான் விளையாட்டாகூட யோசிச்சதில்ல அம்மு… நீயும் அப்படித்தான் இருப்பேன்னு நினைச்சேன்… இத்தனை வருஷத்துல என் பார்வையில என்னைக்காவது காதல் தெரிஞ்சிருக்கா… பாசமா பாக்குறதுக்கும் காதலா பாக்குறதுக்கும் வித்தியாசம் தெரியாதவளா நீ… வீட்டுப் பெரியவங்க என்ன வேணா ஆசைப்படலாம்… அது தப்புன்னு சொல்ல முடியாது… ஆனா நமக்குள்ள அப்படி ஒரு இன்டிமேசி வந்து இருக்கணும்… அந்த மாதிரி நாம ரெண்டு பேருமே இருந்ததில்லையே…” 


“பெரியவங்க தேவையில்லாத ஆசையை உன் மனசுல விதைச்சாலும் நீ என்னை மாதிரிதான் யோசிப்பேன்னு நினைச்சேன்… ஆனா நீயும் அவங்களை மாதிரியே யோசிச்சிட்டியா…? முன்னமே சில விஷயங்களை உன்கிட்ட பேசி இருக்கணும்… நானும் அசால்டா இருந்துட்டேன்… தப்புதான்… தரணி கூட என்னை நிறைய திட்டினான்… இப்ப கூட நம்ம கல்யாண விஷயம் பேசுறதுக்குத்தான் அத்தை மாமா ரெண்டு பேரையும் வீட்டிலேயே இருக்க சொல்லி இருக்கு அப்பத்தா… அதுக்கு புரியாது… ஆனா நீ புரிஞ்சுக்கோ தங்கோ… என் மனசுல மனைவிங்கிற இடத்தை நான் மீராவுக்கு தான் கொடுத்திருக்கேன்… நீ இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு அழுதுட்டு இருந்தா என் நிலைமை இன்னும் மோசமாயிரும்டி… ஒரு கட்டாயமான சூழ்நிலையில என்னை கொண்டு வந்து நிறுத்திடாதே கண்ணம்மா… உன் கையிலதான் எல்லாமே இருக்கு… மாமா மனசு உனக்கு புரியுதா…?” 


தன் கண்களும் கலங்கி நிற்க மீண்டும் தன் மனதை அவளிடம் தெளிவாக விளக்கி இருந்தான் முகிலன். அவளோ கண் சிமிட்டாது அவனைப் பார்த்தபடி இருந்தாள். அந்த பார்வைக்கான சரியான அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. கோபமா…? வெறுப்பா…? இயலாமையா…? காதல் கைவிட்டுப் போன கதறலா…? என்னவென்று புரிந்து கொள்ள முடியாத பார்வை.


“வீட்டுக்கு போகலாம் அம்மு…” அவளது கன்னங்களை மென்மையாய் வருடியபடியே கூற அவன் கைகளை வேகமாய் தட்டிவிட்டு கோபமாய் எழுந்தவள் எதுவும் பேசாது அதே வேகத்துடன் வெளியேறி தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள். 


மண்டியிட்ட நிலையிலேயே சில கணங்கள் அமர்ந்திருந்தவன் “சாரிடி… என்னை மன்னிச்சிரு… என்னால மன்னிப்பு மட்டும்தான் கேட்க முடியும்… ஆனா கல்யாணம் பண்ணிக்க முடியாது அம்மு… என்னை புரிஞ்சுப்பியா…” சத்தமாய் தனக்குத்தானே கூறிக் கொண்டவன் தன் வண்டியை கிளப்பிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.


அவன் வருவதற்குள் தன்னுடைய அறைக்குள் நுழைந்து முடங்கிக் கொண்டாள் பூச்செண்டு. அவள் புரிந்து கொள்வாள்… அவளுக்கான இடைவெளி வேண்டும் என்று எண்ணியவனாய் மாடி ஏறி இருந்தான். நடந்த விபரங்களை தரணியிடம் கூறினான்… அவனிடம் எந்த பதிலும் இல்லை… இறுக்கமான அவனது முகமும் முகிலனுக்கு வேதனையை கொடுத்தது.


“அவளை மாதிரியே நீயும் இருந்தா என்னடா அர்த்தம்…? யாருமே பண்ணாத பெரிய பாவச்செயலையா நான் பண்ணிட்டேன்… காதலிக்கிறது அவ்வளவு பெரிய தப்பாடா…? நீங்கெல்லாம் நடந்துக்கிறதை பார்த்தா ஏதோ பெரிய தப்பு பண்ணின குற்றவாளி மாதிரி மனசு குறுகுறுக்குது…” சலிப்பும் எரிச்சலுமாய் பேசியவனை கொலைவெறியுடன் பார்த்தான் தரணி.


“ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுற… காதலிக்கிறது தப்பு இல்லடா… உன் காதலால இன்னொரு பொண்ணு பாதிக்கப்படக்கூடாது… நீ சொல்லாம மறைச்ச விஷயம் பூச்செண்டை தானே ரொம்ப பாதிச்சிருக்கு… வீட்ல எல்லாருக்கும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற ஆசை இருக்கிறது உனக்குத் தெரியும்… உனக்கு அந்த எண்ணமே இல்லாத பட்சத்துல அந்த பொண்ணுகிட்ட நீ பேசி இருக்கணும்தானே… எல்லா விஷயமும் கைமீறி போனதுக்கு அப்புறம் இப்போ இத்தனையும் பேசுற… இதை முன்னாடியே பண்ணியிருக்கலாமே…” குறையாத கோபத்துடன் சத்தமிட்டான் தரணி.


“அய்யோ… சரிடா… இதையேதான் நேத்துல இருந்து சொல்ற… தப்புதான்… நான் அசால்டா இருந்தது தப்புதான்… அதுதான் இப்போ அவகிட்ட பேசிட்டேனே… இன்னும் தெளிவா அவகிட்ட விளக்கிட்டேன்… அவளோட மனசுக்கும் கஷ்டமாதான் இருக்கும்… எனக்குப் புரியுது… ஆனா அவ நிலைகுலைஞ்சு போற ஆள் கிடையாது… தெளிவான பொண்ணு… கொஞ்ச நாள் கோபமா இருப்பா… அப்புறம் சரியாயிடுவா… நாளைக்கு அப்பத்தா பேச்சை ஆரம்பிக்கும்போது அவளே என்னை வேண்டாம்னு சொல்லிருவா பாரு…” நம்பிக்கையுடன் பேசினான் முகிலன்.


“நல்லது நடந்தா எனக்கும் சந்தோஷம்தான்… யாராலயும் யாரும் பாதிக்கப்படக்கூடாது… மொத்தத்துல நாளைக்கு எல்லாத்தையும் தெளிவா பேசிடு… திரும்பவும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி நின்னா நானே எல்லாத்தையும் பேச வேண்டியது இருக்கும்… எனக்கு மீராவோட வாழ்க்கையும் ரொம்ப முக்கியம்…” விரல் நீட்டி எச்சரித்து படுக்கையில் படுத்துக் கொண்டான் தரணிதரன்.


விழி பிதுங்கி அமர்ந்திருந்தான் முகிலன். மீராவின் இடத்தில் பூச்செண்டை நினைத்துப் பார்க்கவே முடியாது… அப்பத்தா பேச்சை ஆரம்பிக்கும்போது பூச்செண்டு வாயை திறந்து தனக்கு சாதகமாக பேசுவாளா…? அவள் பேசத் தவறினாலும் தரணி நிச்சயமாய் பேசுவான்… அவன் தைரியமானவன்… தனது காதல் விவகாரம் அம்பலமாகியே தீரும்… என்றாவது ஒருநாள் தெரிய வேண்டிய விஷயம்தான்… ஆனால் உடனடியாக வெளிப்படும் நிலை எனும்போது வீட்டினரின் எதிர்வினை எப்படி இருக்குமோ என்று நினைத்து உள்ளூர பயம் எழத்தான் செய்தது. விடியலை நினைத்து விதிர்விதிர்த்து படுத்திருந்தான் முகிலன்… நெடுநேரம் உறக்கமில்லை.


தன்னை மறந்து கண்ணயர்ந்த நடுநிசி தாண்டிய வேளையில் “அய்யோ…” என்ற மல்லிகாவின் உயிரைப் பிளக்கும் சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்த நண்பர்கள் இருவரும் கலவரத்துடன் இதயம் தடதடக்க கீழே இறங்கி ஓடினர்.


(தொடரும்)


Leave a comment


Comments


Related Post