இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 02-03-2024

Total Views: 23802

“சீக்கிரம் இந்த வீட்டை விட்டு வெளியேற தயாராகுங்க” என்று வக்கீல் மனோகர் சொல்ல

“வக்கீல் என்ன ஆயிடுச்சு இப்போ தெளிவா சொல்லுங்க..” என்று சுரேந்தர் கேட்க 

“சார் இந்த சொத்து எல்லாம் உங்க அண்ணன் அவர் பொண்ணு பெயர்ல எழுதி வைச்சு அதுக்கு கார்டியனா அவரோட தம்பி தங்கச்சி அதாவது நீங்களும் சுகந்தி மேடமும் இருக்கிற மாதிரி எழுதி இருந்தாரு. தெரியும்ல..” வக்கீல் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே

“அதான் தெரியுமே வக்கீல்… அதான் இப்போ அபிலாஷாவே தனக்கு சொத்து வேணாம்னு போய்ட்டாளே…” கிருபாகரன் சொல்ல

“அவங்களால அப்படி சொல்லிட்டு போக முடியாது சார். ஒருவேளை அபிலாஷா இந்த சொத்தை நிராகரிச்சா இது முழுக்க முழுக்க ஆசிரமத்துக்கு சேர்ந்திடும். அப்படி தான் சுகுமாரன் சார் எழுதி வைச்சிருக்காரு. இந்த விஷயம் எனக்கே ரீசன்டா தான் தெரிஞ்சது. 

எங்க சீனியர் எனக்கே தெரியாம அவ்வளவு சீக்ரெட் மெய்டன் பண்ணிருக்காரு.” என்று மனோகர் சொல்ல

“ஐயோ என்ன ஏதுன்னு முழுசா சொல்லுங்க வக்கீல் சார்… எனக்கு வயித்துல புளியை கரைக்குது..” ரூபவதி சொல்ல

“மேடம்… இந்த யமுனா இன்டஸ்ட்ரீஸ் அது சம்பந்தமான சொத்துக்கள் இந்த வீடு எல்லாமே உங்க கணவரோட அண்ணன் தன்னோட சுயசம்பாத்தியத்துல உருவானது. அது அவரோட உயிருக்கு ஆபத்து இருக்குனு தெரிஞ்ச நிமிஷமே சொத்துக்களை தன்னோட மகளுக்கு முழுமையா சேரும் படியும், மகள் அபிலாஷா அனுபவிக்க முடியாத பட்சத்தில் இந்த சொத்துக்கள் முழுக்க ஆசிரமத்துக்கு சேர்ந்திடும்னு எழுதி வைச்சிட்டாரு. 

அப்பறம் எதிர்பாராத விதமா அவரும் அவரோட மனைவியும் விபத்துல மாட்டி மனைவி ஸ்பாட் அவுட் ஆகிட்டாங்க இவர் உயிருக்கு போராடின நிலைல எங்க சீனியரை ஹாஸ்பிடல் வரவைச்சு ஒரு உயில் எழுதிருக்காரு…” என்று ஒரு நொடி இடை நிறுத்த

“அப்படி என்ன எழுதினாரு எங்க பெரிய அண்ணன்?” சுகந்தி கேட்க

“அதுவந்து அபிலாஷாக்கு நீங்க கார்டியன் தான்… பட் சொத்து எல்லாம் நிர்வகிக்கிற உரிமை அபிலாஷாக்கு இருக்கு. அவங்களுக்கு இருபத்தைஞ்சாவது பிறந்தநாள் முடிந்த உடனே இந்த சொத்துக்கள் குறித்து எந்த முடிவா இருந்தாலும் அபிலாஷா தனித்து முடிவெடுக்கலாம். ஒருவேளை இந்த சொத்துக்கள் தனக்கு வேண்டாம்னு அவங்க முடிவு பண்ணினா அடுத்த நிமிஷமே இது மொத்தமா ஆசிரமத்துக்கு சேர்ந்திடும்.

ஒருவேளை அபிலாஷாக்கு இருபத்தைஞ்சு வயசு ஆகும் முன்னவே கல்யாணம் நடந்திருந்தா இந்த சொத்துக்கள் கணவன் மனைவி அதாவது அபிலாஷா அவங்க கணவர் ரெண்டு பேருக்கும் சொந்தமாகும். முடிவெடுக்கும் அதிகாரம் உரிமை சரிசமமா இருக்கும். இதுதான் அந்த உயில்ல இருந்தது.

ஆனா சீனியர் லாயர் கோபாலன் உங்ககிட்ட மட்டும் இல்ல என்கிட்டயே அபிலாஷாக்கு இருபத்தைஞ்சு வயசு ஆனப்பிறகு மொத்த சொத்தும் அவங்க பெயருக்கு மாறிடும் அப்படிங்கிறதையே மறைச்சு அபி கணவனுக்கு சொத்துல சம உரிமை உண்டு அவர் சொல்றது போல தான் நடக்கும்னு சொல்லிட்டு இருந்திருக்காரு. 

எனக்கு இந்த விஷயம் இப்போ தான் தெரியவந்தது. உங்களை நேர்ல பார்த்து சொல்லலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க அபிலாஷா இந்த வீட்டை விட்டு போற மாதிரி பண்ணிட்டீங்க… அவங்க இந்த சொத்து வேண்டாம்னு போனா உங்களுக்கும் இங்க தங்கவோ சொத்து சுகம் அனுபவிக்கவோ உரிமை இல்லை…” என்று முழுதாக சொல்லி முடிக்க மூர்ச்சையாகி போயிருந்தனர் நால்வரும்.

“என்னங்க இது இப்படி எல்லாம் சொல்றாரு?” ரூபவதி அதிர்வாக கேட்க

“சார் நான்தான் ரெண்டு வருஷம் முன்னவே அபி மேடம்க்கு உங்களுக்கு ஃபேவரா ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைங்கனு சொன்னேன். ஆனா யாருக்கு ஃபேவரா னு உங்களுக்குள்ள நடந்த சண்டையில நீங்க தள்ளிப்போட்டே போனீங்க.. இப்போ எல்லாம் முடிஞ்சது.” என்று வக்கீல் சொல்ல

“இதுக்கு தான் எங்க பையன் முகிலை கல்யாணம் பண்ணிக்கிறதை பத்தி அபிக்கிட்ட பேசுன்னு எத்தனை தடவை சொன்னேன் அண்ணா… நீதான் உன் பொண்டாட்டி பேச்சை கேட்டு வேற மாப்பிள்ளை பத்தி பேசி மொத்தமா கெடுத்துட்ட…” சுகந்தி மொத்த பழியும் இவர்கள் மீது போட

“ஆமா… இல்லாட்டி மட்டும் அவ உன் பையன கட்டிக்க தயாரா இருந்தாளா? அவதான் யாரோ ஒருத்தனை காதலிக்கிறேன்னு அதுக்காக எல்லா சொத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு போற அளவுக்கு இருந்தாலே…” என்று ரூபவதி சண்டையை தொடங்க

“இப்படி சண்டை போட்டு தான் முதல் வாய்ப்பை இழந்தாங்க..‌ இப்போ ரெண்டாவது வாய்ப்பும் சண்டையில விடப்போறாங்க…” என்று மனோகர் சலிப்பாக சொல்ல

“ச்ச்.. போதும் நிறுத்துங்க உங்க சண்டையை அப்பறம் வைச்சுக்கலாம். வக்கீல் சார் முதல் வாய்ப்பு ரெண்டாவது வாய்ப்புனு சொன்னீங்களே… என்ன அது?” என்று கிருபாகரன் கேட்க

“சார் முதல் முறை அபிலாஷா உங்ககூட இருக்கும் போதே அவங்களுக்கு உங்களுக்கு ஆதரவான ஒருத்தரை கல்யாணம் பண்ணி உங்க கட்டுப்பாட்டுல வைக்க தவறிட்டீங்க… இப்போ அவங்க வாய் வார்த்தையா தானே சொத்து வேணாம்னு போயிருக்காங்க…

அவங்களும் அவங்க கணவரும் நேரடியா எங்க சீனியர் கோபாலன் சாரை பார்த்து பேசும் முன்ன நீங்க அவங்களை உங்க பாசவலைக்குள்ள கொண்டு வரனும். உங்களுக்கு சொத்தை அனுபோக பாத்தியம் எழுதித்தர அவங்க சம்மதிக்கனும். அதுக்கு இன்னும் கொஞ்சம் எஃபர்ட் போட்டு நடிக்கனும். அது உங்களுக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல.. அதான் இத்தனை வருஷம் நடிச்சிருக்கீங்களே…” என்று மனோகர் சொல்ல

“சரி இன்னைக்கே போனா சந்தேகம் வரும்… ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு போய் பேசலாம்…” என்று சுரேந்தர் சொல்ல சரி என்று விட்டு கிளம்பினார் வக்கீல்.

கோவிலில் அம்மன் சன்னதி முன்பு மாலையோடு வந்து நின்றனர் அபிநந்தனும் அபிலாஷாவும்… அபியின் தோழிகள் கேலியில் அவளை சிவக்க வைக்க அக்சயா அண்ணனை ஓட்டிக் கொண்டு இருந்தாள். 

பார்வதி பூஜைக்கு உரிய அனைத்தும் எடுத்து தர கோவில் ஐயர் மாங்கல்யத்தை அம்மன் காலடியில் வைத்து மந்திரங்கள் ஓதி எடுத்து தர அனைவரும் ஆசி வழங்க தாலியை வாங்கி அபிலாஷா கழுத்தில் இரண்டு முடிச்சிட மூன்றாம் முடிச்சு அக்சயா போட செல்வி. அபிலாஷா சுகுமாரன் திருமதி அபிலாஷா அபிநந்தனாக மாறினாள்.

பின்னர் ஐயர் குங்குமம் வைக்கச் சொல்ல பெண்ணவள் கழுத்தை சுற்றி உச்சி வகுட்டிலும் நெற்றியிலும் வைத்து விட்டு திருமாங்கல்யத்திலும் வைத்து விட்டான்.

“பெரியவா கால்ல விழுந்து வணங்குங்கோ” என்று சொல்ல பார்வதி பவியின் அம்மா மற்றும் வந்திருந்த சில பக்கத்து வீட்டினரில் தொண்ணூறை தொட்ட ஜோடிகள் இருக்க அவர்களிடமும் ஆசி வாங்கி கொண்டனர் நந்தனும் அபிலாஷாவும்.

“பொண்ணும் பையனும் கோவில் பிரகாரத்தை மூணு தடவை சுத்தி வாங்கோ…” என்று சொல்ல மணப்பெண் தோழியாக கீர்த்தனா மணமகன் தோழனாக சதீஷ் உடன் வர மற்றவர்கள் கோவில் பிரகாரத்திலேயே அமர்ந்து விட்டனர். 

என்னதான் கீர்த்தனா சதீஷ் உடன் வந்தாலும் இவர்களை விட்டு நான்கடி தள்ளி தான் நடந்தனர். புது மணமக்களுக்கு தனிமை தர நினைத்தே மற்ற தோழிகள் உடன் வரவில்லை. ஆனால் அபிலாஷா வெட்கத்தில் தலை குனிந்தபடி வர அபிநந்தன் ஒன்றிரண்டு முறை ஓரக்கண்ணால் அவளை பார்த்தான். மற்றபடி இருவரும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவே இல்லை. 

பார்வதி முதலில் சொன்னது போலவே பக்கத்து உணவகத்தில் வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து வந்தவர்களை அனுப்பி வைத்தனர்.

இப்போது அபிநந்தன் குடும்பம் அபிலாஷா தோழர்கள் மற்றும் பவியின் அம்மா என்று இருக்க கீர்த்தனா சதீஷ் பைக்கில் வர மற்றவர்கள் இரண்டு ஆட்டோவில் அபிநந்தன் இல்லம் வந்து சேர்ந்தனர்.

ஆரத்தி எடுத்து மணமக்கள் உள்ளே அழைக்கப் பட அபிலாஷாவை சாமிப்படம் முன்பு விளக்கேற்ற சொன்னார் பார்வதி. அது முடிந்து “கீர்த்தனா அக்சயா பால் பழம் எடுத்து வந்து கொடுங்கம்மா..” என்று சொல்ல இருவரும் சேர்ந்து செய்தனர்.

கீர்த்தனா ஏற்கனவே அபிநந்தன் வீட்டிற்கு வந்து சென்ற பழக்கம் இருப்பதால் அவளுக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஆனால் பவி ஜெனி இருவருக்கும் ‘ஒற்றை படுக்கையறை உள்ள வீட்டில் எப்படி அபிலாஷா தங்குவாள்..‌?’ என்று அவளின் வசதி தெரிந்தவர்களாக குழப்பம் கொள்ள அதை கவனித்த பவியின் அம்மா அவளை வெளியே அழைத்து விசாரிக்க

“அம்மா எப்படிம்மா இந்த சின்ன வீடு… அவளோட வசதிக்கு இது எப்படி பொருந்தும்.” என்று கேட்க

“அபி அப்படி எதுலயும் அவசரப்பட்டு முடிவு எடுக்கிறவ கிடையாது பவி. ஏற்கனவே இந்த தம்பி வீட்டுக்கு வந்திருக்கா… அவளால இங்க அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும்னு தோணவும் தானே இந்த தம்பிகூட கிளம்பி வந்திருக்கா… அதெல்லாம் அபி புரிஞ்சு நடந்துப்பா… இல்லாட்டியும் கூட நாம பொறுமையா வேற வீடு பார்த்து இவங்க குடிபோறது பத்தி பேசலாம். விடு.” என்று அமைதி படுத்தி உள்ளே சென்றனர்.

மாலை வரை பேசிக் கொண்டு இருந்தவர்கள் அதன் பின்னர் கிளம்புகிறேன் என்று சொல்ல ஜெனி பவி அவளின் அம்மாவிற்கு “அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போங்க.” என்று விடை கொடுத்த பார்வதி கீர்த்தனாவை மட்டும்

“அம்மாடி உங்க வீடு பக்கத்துல தானே… அதுவந்து நைட்டுக்கு அபியை தயார் பண்ணனும். அச்சு சின்ன பொண்ணு.. இல்லாட்டி அவளே பார்த்துக்கட்டும்னு விட்டுடுவேன்..” என்று பார்வதி சொல்ல 

“அம்மா இதுக்கு எதுக்கு இப்படி தயங்குறீங்க? நைட்டுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டே நான் கிளம்பறேன்.” என்று சொல்லிய கீர்த்தனா சதீஷை அழைத்து அலங்காரம் செய்ய பூ பழங்கள் மற்றும் இனிப்புகள் வாங்கி வரச் சொன்னாள்.

மாலை மங்க மையல் கொள்ளச் செய்யும் இரவும் வந்தது. அறையை தயார் செய்து விட்டு சதீஷ் அபிநந்தனோடு வெளியே அளவளாவி கொண்டு இருக்க அபிக்கு அதே அறையில் வைத்து லேசாக ஒப்பனைகள் செய்து அதிக கேலியில் அவளை சிவக்க வைத்திருந்தாள் கீர்த்தனா. பார்வதி வர எழுந்து காலில் விழ

“இருக்கட்டும் ம்மா” என்று தூக்கி விட்டவர் “கீர்த்தனா அங்க பால் காய்ச்சி வைச்சிருக்கேன். எடுத்து உள்ளே வைச்சுடுமா…” என்று சொல்ல அவளும் செய்தாள்.

“அம்மாடி.. என் பையன் எங்களை மட்டுமே யோசிச்சிட்டு அப்படியே இருந்திடுவானோனு ரொம்ப பயந்தேன். எப்படியோ அவன் வாழ்க்கையை மாற்ற நீ வந்திருக்க.. அவன் யார்க்கிட்டேயும் எப்போதும் மனசு விட்டு பேசவேமாட்டான். ஆனா மனசுக்குள்ள எல்லார் மேலயும் அன்பும் பாசமும் நிறைய இருக்கும். நீதான் புரிஞ்சு நடந்துக்கனும்.’ என்று பார்வதி சொல்ல

“கண்டிப்பா ம்மா.. நீங்க எதிர்பார்க்குற மாதிரி நந்தனை நான் முழுசா புரிஞ்சு நடந்துப்பேன்.” என்று அவர் கையை பிடித்து வாக்கு தருவது போல கூறிட கீர்த்தனா பாலோடு வந்தாள்.

“நீ அங்கே வைச்சுட்டு தம்பிகிட்ட சொல்லி நந்தாவை வரச்சொல்லு ம்மா…” என்றிட

“சரி அபி நாங்களும் அப்படியே கிளம்பறோம். ஆல் த பெஸ்ட்…” என்று தோழிக்கு வாழ்த்து சொல்லி விட்டு வெளியே சதீஷிடம் அபிநந்தனை அறைக்கு செல்ல சொல் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு கிச்சனில் இருந்த மீத வேலைகளை செய்து கொண்டு இருந்த பார்வதிக்கு சற்று உதவி விட்டு விடை பெற்று சென்றனர் கீர்த்தனா சதீஷ்.

அபிநந்தன் அறைக்குள் செல்ல புதுவித பரவசத்தோடு சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள் அபிலாஷா.

தொடரும்…




Leave a comment


Comments


Related Post