இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -10 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 04-03-2024

Total Views: 33923

அவன் சென்ற அரைமணி நேரத்தில் ஷாலினி பெரிய பெண்ணாகிவிட்டாள் என செய்தி வர வளவன் முகம் பூப் போல மலர்ந்தது.

ஆனால் அதன்பிறகு வளவனுக்கும் நிலாவுக்கும் நிறைய கெடுப்பிடிகளைப் போட்டார் கிருஷ்ணம்மாள் என்பது வேறு விஷயம்.

இனி ஷாலினியோடு வளவன் பேசக்கூடாது, அவர்கள் வீட்டிற்கு வெளியேக் கூட வரக்கூடாது, எதிரில் பார்க்கும் போது வாங்க போங்க என்று தான் ஷாலினி வரை அழைக்க வேண்டும். இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ஒரு கொத்து அடிமைகளை எப்படி நடத்துவார்களோ அதைவிட மோசமாக  நடத்தினார்.

இதெல்லாம் மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாதவாறுப் பார்த்துக் கொண்டார்.

ஊர் வியக்க ஷாலினிக்கு சீர் நடந்தது. நந்தன் பெரிய மனிதன் போல் முன்னாள் நின்று அனைத்து வேலைகளையும் ஓடி ஓடிச் செய்தான்.

நிலாவின் குடும்பத்திற்கு துணிகளை எடுத்துக் கொடுத்து அவர்களுடன் வைத்துக்கொண்டார் மார்த்தாண்டம் அதில் வேறு உறவுகளுக்கு கடும் வயிற்றெரிச்சல், வளவனிற்கும் நிலாவிற்கும் தானே தெரியும் அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று. வெளியே பார்க்கும் போது அனைத்தும் அழகாக தான் தெரியும் உள்ளே சென்று பார்த்தால் தான் அதன்  கஷ்டங்களை புரிந்துக் கொள்ள முடியும் அப்படி தான் வளவன் நிலாவின் வாழ்க்கையும் இருந்தது.

"அதெப்படி உங்களுக்கு இணையா நாங்க இருக்கும் போது, இணையான இல்லாம கீழ இருக்கவீங்கள கூட்டிட்டு வந்து கூட வெச்சிப்பிங்க?" என போகும் போது கிருஷ்ணம்மாளிடம் வகையும் தொகையுமா பற்ற வைத்துவிட்டு சென்றனர்.

ஏற்கனவே கிருஷ்ணம்மாள் பயங்கரமாக ஆடுவார், இதில் சலங்கையை வேறு கட்டி விட்டுச் சென்றால் சொல்லவா வேண்டும்?.

என்றும் இல்லாமல் இன்று அதிகம் பேசினார் வார்த்தைகளால் நிலாவின் குடும்பத்தைக் கொடுமையாக தாக்கினார்.

பொறுமை இழந்த மார்த்தாண்டமும் மணிமேகலையும்

"இங்க பாரும்மா உனக்கு புடிக்கலைன்னா நீ பேசாம விலகி நின்னுக்கோ, எங்களுக்கு புடிச்சிருக்கு பேசறோம் நீ இப்படி பேசி புள்ளைங்க மனசுலையும் நஞ்ச விதைக்கற, ஏற்கனவே நீ இப்படி பேசி பேசி தான் நந்தன் உன்னைய மாதிரியே நடந்துக்குறான், மீதி இருக்கப் பசங்களையும் கெடுத்து வைக்காத" என்று முடிவாக சொன்னவர்,"இதுக்கு மேல பேசறதா இருந்தா பிரச்சனை வேற மாதிரி போகும் சொல்லிட்டேன்" என கத்திவிட்டு சென்றுவிட்டார்.

மார்த்தாண்டம் கத்தியதற்கும் சேர்த்து வளவனையும் நிலாவையும் காய்ச்சி எடுத்தார்.

"இதற்கு மேல் அந்தப் பக்கமே போகக்கூடாது  போறதா இருந்தா நீ போய் அந்த கிழவிக்கிட்ட வாங்கி கட்டிட்டு வா,நான் போமாட்டேன் என்ன நினைச்சிட்டு இருக்காங்க அடிமையைக் கூட இப்படி நடத்த மாட்டாங்க. அவங்களுக்கு நான் எதுக்கு அடிமையா இருக்கனும் இருக்கறதா இருந்தா நீ அடிமையா இருந்துக்கோ" என ராஜியிடம்  உறுதியாக சொல்லிவிட்டான்.

அடுத்த வாரமே அந்த ஊரின் கோவில் திருவிழா வந்தது. ஷாலினி பெரியப் பெண்ணாகி ஒரு மாதம் கூட ஆகாததால் இந்த முறை நந்தனின் குடும்பம் கோவில் திருவிழாவில் கலந்துக் கொள்ளவில்லை.

அவர்கள் கலந்துக்கொள்ளாதப் போது சந்தோசமாக திருவிழாவைக் கொண்டாடமாட்டார்களா வளவனும்  நிலாவும், எப்போ எப்போ என காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பு லட்டுப் போல் கிடைக்கவும் அதைப் பயன்படுத்திக் கொண்டனர்.

திருவிழா முடிந்த  இரண்டு நாளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியானது.

அதில் வளவனை விட நந்தன் 10 மதிப்பெண்கள் அதிகம் வாங்கி மாநில அளவில் முதல் இடம் பிடித்திருந்தான்.

வளவன் பள்ளி அளவில் முதல் இடம் பிடித்திருந்தான்.

வளவனை விட அதிக மதிப்பெண் வாங்கிருந்த நந்தனுக்கு மாநிலத்தில் முதல் இடம் பிடித்ததை விட, வளவனை விட அதிகம் வாங்கியது தான் உள்ளுக்குள் அவ்வளவு சந்தோசம்.

வளவனே தானாக சென்று நந்தனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல, நந்தன் என்ன நினைத்தானோ வளவனை  இழுத்து அணைத்துக் கொண்டான்.

நந்தன் அணைப்பான் என வளவன் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியாகி விட்டான் வளவன்.

தன்னையும்  வாங்க போங்க என மரியாதையாக தான் அழைக்க வேண்டும் என  சொல்லும் நந்தனா தன்னை அணைத்தது  இன்னும் ஆச்சர்யமாக தான் இருந்தது..

"விஜய்!!!".என ஆச்சரியமாக வளவன் நந்தனைப் பார்க்க.

"உன்னால தாண்டா நான் ஸ்டேட் பர்ஸ்ட் வந்தேன், என்றவன், உள்ளுக்குள் 'நீ எங்க என்னைய விட மார்க் அதிகம் வாங்கிடுவியோன்னு பயந்து பயந்து படிச்சியே பர்ஸ்ட்  வந்துட்டேன்' என  சொல்லிக்கொண்டான். பாதி உண்மையை மறைத்து மீதி உண்மையை அவனிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டான்.

கோவமாக இருந்தாலும்,பாராட்டலாக இருந்தாலும் நந்தனிடம் இருந்து நேரடியாகவே வந்துவிடும். வளவனால் தான் முதல் மதிப்பெண் வாங்கிருயிருக்கிறோம் என அவன் மீது இருந்த கோவம் சற்று குறைந்து இருந்தது,ஆனால் நிலாவைப் பார்க்கும் போது முகத்தில் தானாகவே வந்து கடுமை வந்து அமர்ந்துக் கொள்கிறது.

மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்திருந்தாலும் மணிமேகலை நந்தனிடம் பேசவில்லை, அவனும் தானாக சென்று தாயிடம் தன் சந்தோசத்தைப் பகிர்ந்துக் கொள்ளவில்லை.

'அவனோட சந்தோசத்தைக் கூட என்கிட்ட சொல்லணும்ன்னு நினைக்கவில்லையே' என தாயும், 'இவ்வளவு மார்க் வாங்கியும் என்கிட்ட பேசலைல'  என மகனும் ஒருவரை விட்டு ஒருவர் தள்ளியே நிறுத்தி இருந்தனர்.

மாதங்கள் ஓடியது. பதினோராம் வகுப்பு சேர்ந்து விட்டனர்.

முட்டை துடைக்கும் வேலைக்குச் சென்று பணம் பார்த்துவிட்ட வளவனுக்கு இன்னும் ஏதாவது குடும்பத்திற்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்க, உடனே இரவு உணவகம் பார்த்து பகுதிநேர வேலைக்கு சேர்ந்து விட்டான்.நிலா  ஐந்தாவது செல்லத் தொடங்கிவிட, எந்த பிரச்சனையும் இன்றி நாட்கள் சென்றது.

"அண்ணா இதுப் போதும் விடு... எதுக்கு பெருசா எடுத்துட்டு காசை வீண் பண்ணனும்" என கையில் இருந்த கொலுசை காதின் அருகில் வைத்து ஆட்டிப் பார்த்தாள் நிலவியா..

ஜல்ஜல் என்ற ஓசை மனதை நிறைக்க, முகம் மலர்ந்து போனது நிலாவிற்கு..

"என்கிட்ட பணம் இருக்கு அம்மு, இன்னும் கொஞ்சம் பெருசா போட்டுகிட்டா நல்லா சத்தம் கேக்கும்ல.. நீ போடற ஒரே ஜுவல்ஸ் இந்த கொலுசு மட்டும் தான் அதுக்கும் ஏன் வேண்டான்னு சொல்ற?" என்றான் பதினாறு வயதே ஆன வளவன்..

இரவு உணவத்தில் வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தில் தங்கைக்கு கொலுசு வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசையில் தாயையும்,தங்கையையும் அழைத்துக் கொண்டு நகைக் கடைக்கு வந்துவிட்டான்..

"இதுவே போதுண்ணா" என்றவள் காலில் வைத்து அழகுப் பார்த்தாள்..

ராஜி கொலுசை மகளின் காலில் போட்டுவிட, வளவன் பணம் கொடுத்ததும் மூவரும் கடையில் இருந்து வெளியே வந்தனர்..

அன்று இரவு முழுவதும் நிலா காலை ஆட்டி ஆட்டி கொலுசில் சத்தத்தை உருவாக்கி மனம் மகிழ்ந்தாள்.

நிலா ஒவ்வொரு தடவை காலை ஆட்டும் போதும் வளவன் அவ்வளவு சந்தோஷப்பட்டான். அவர்களுக்கு இதுபோன்ற சின்ன சின்ன  விஷயம் தான் வாழ்க்கையை அழகாக எடுத்துச் செல்கிறது. வேலைக்குச் சென்று பணம் சாம்பாரித்து வீடு கார் பங்களா என்று வாங்க வேண்டும் என்ற ஆசையில்லை, கொலுசு, உடை, இனிப்பு, இரவு உணவு இதை வாங்கினாலே அன்று அவர்களுக்கு தீபாவளி தான்.

அடுத்த நாள் ஞாயிறு..

ராஜி உணவு சமைத்துக் கொண்டிருக்க.. வீதியில் விஜயநந்தன்,யுகேந்திரன், வளவன் , இன்னும் சிலபேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டியிருந்தனர்.
ஷாலினிக்கு கிரிக்கெட்டில்  எல்லாம் பெரிதாக ஆர்வமில்லை அதனால் வீட்டிலையே இருந்துக் கொண்டாள்.

இவர்கள் விளையாட்டை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவிற்கு தான் அவர்களுடன் தானும் விளையாட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

"அண்ணா.. நானும் வர்றேன் என்னையும் சேர்த்துக்க" என வளவனின் கையை சுரண்டினாள்.

"பாப்பா .. உனக்கு விளையாடத் தெரியாது , பால் வேற மேல பட்டுடும், தள்ளிப் போய் பாரு" என்று தங்கையிடம் கத்திவிட்டு மட்டைப் பிடித்திருந்த விஜயநந்தனுக்கு பந்தை வீசினான்..

நந்தன் அடித்த பந்து அருகில் இருந்த முட்புதரில் போய் விழவும், அதை தேடிச் சிலர் சென்று விட்டனர்..

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கல்லில் அமர்ந்திருந்த நிலாவைப் பார்க்க ஒரு மாதிரி இருந்தது யுகேந்திரனுக்கு..

"பூனை வா... விளையாடலாம்.."

"இல்ல வேண்டா, அண்ணா திட்டுவான்"

"அதலாம் திட்ட மாட்டான், வா" என்று கையைப் பிடித்து அழைக்க..

அதைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தனுக்கு  புசுபுசுவென்று கோவம் வந்தது.

"டேய் அவளை எதுக்குடா கூப்பிடற? அவளுக்கு என்ன விளையாட தெரியும்?"   என யுகியின் கையை பிடித்து இழுத்தவன்.நிலாவைப் பார்த்து முறைத்தான்.

அந்தப் பார்வையில் நடுங்கிப் போன நிலா.. யுகிப் பிடித்திருந்த கையை விலக்கி விட்டு "நான் வரல விடுங்க" என்று மீண்டும் அதே இடத்தில் சென்று அமரப் போனாள். அவளை இழுத்துப் பிடித்த யுகி

"உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன் இந்த வாங்க போங்களா அவன் கிட்ட வெச்சிக்கோ என்கிட்ட வெச்சிகாதன்னு.. சொன்னா புரியாதா உனக்கு?அவன் சொல்லிட்டு போறான், நீ வந்து பீல்டிங் பண்ணு கொஞ்சம் விளையாட்டு புரிஞ்சதும் பேட்டிங் பண்ணலா"என்று வலுக்கட்டாயமாக அழைக்கவும்  நந்தனைப் பார்த்து பயந்துக்கொண்டே யுகியின் பின்னால் வந்து நின்றாள்.

அதற்குள் பந்தைக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டான் வளவன்..

"பந்து வந்துடுச்சி எல்லாம் ரெடியா நில்லுங்க .. பூனை நீ அங்கப் போய் நில்லு,பந்து உங்கிட்ட வந்தா மட்டும் புடி" என்று ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு யுகி கீப்பராக சென்று நின்றுக் கொண்டான்.

இதை நந்தனின் விழிகள் குரோதமாக பார்த்தது.'நான் இவ்வளவு சொல்லியும் நீ அவளை விளையாட வைக்கறியா..?அவளும் வந்து நிக்கறன்னா என் மேல இருக்கற பயம் கொறஞ்சுடுச்சிடுன்னு தானே அர்த்தம்.. பேசிக்கறேன்' என்று வன்மம் கொண்டான் பதினாறே வயதான விஜயநந்தன்.

வளவன் பந்தை வீச நந்தன் பந்தை நிலாவைப் பார்த்துக் கொண்டவன் பந்தை நிலாவை நோக்கி வேகமாக அடித்தான்.

அவன் அடித்த 
பந்தைப் பிடிக்க வேண்டியளோ பந்து வரும் வேகத்தைப் பார்த்து கண்களை இறுக மூடிக் கொண்டு!அம்மாஆஆஆஆஆஆ" என கத்த, பந்து நிலாவின் காதை உரசிக்கொண்டுச் சென்று முட்புதரின் நடுவே விழுந்தது.

"ஏய் நீதானே பந்தை புடிக்கல போய் நீயே எடுத்துட்டு வா" என  நந்தன் கண் மூடி நின்றவளிடம் சொடக்கிட்டு கூறினான்.

அவனைக் கண்டாலே பேயைப் பார்த்ததுப் போல் பயப்படுவாள் இதில் அவள் முன் சொடக்கிட்டு ஐயன்னார் கணக்காக நின்றால் சொல்லவா வேண்டும் நந்தன் என்றாலே பேய் என முடிவு செய்தே விட்டாள்


நந்தன் முன் வந்து நின்ற வளவன்..

"நான் போய் எடுத்துட்டு வர்றேன்ங்க" என்று ஓடினான்..

இப்போதெல்லாம் மரியாதையாக தான் அழைக்க வேண்டும் கட்டளை போட்டிருக்கிறான் நந்தன் வயது ஆக ஆக தான் என்ற அகந்தையும் பணக்காரன் என்ற ஆணவமும் தன் பிரிவு தவிர மற்ற பிரிவினர் தன் காலுக்கு கீழ் என நினைக்கும் எண்ணமும் அதிகம் ஆகியிருந்ததே தவிர சிறிது கூட குறைந்ததுப் போல் தெரியவில்லை.

இதனாலயே வளவனும் நிலாவும் இவர்களை விட்டு நாலு அடி தள்ளி  இருந்த இடைவெளியை நாற்பது அடியாக  மாற்றிக் கொண்டனர்..

எப்போதும் வளவனும் சரி யுகியும் சரி நந்தனை விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். அவனும் கண்டுக் கொள்ள மாட்டான். அவனுக்கு என்று ஒரு தனிக் கூட்டம் இருக்கும் அவர்களுடன் தான் எப்போதுமே சுற்றுவான், இன்று அந்த கூட்டம்  ஊரில் இல்லை அதனால் தான் இவர்களுடன் வந்து சேர்ந்துக் கொண்டான்.

"ஏய்" என வளவனை பார்த்து நந்தன் கர்ஜிக்க,  வளவனின் கால்கள் அந்த இடத்திலையே ஆணி அடித்ததுப் போல் நின்றது.

"உன்கிட்ட சொன்னனா.?" என்று நிலாவைப் பார்த்துக் கொண்டே வளவனிடம் கேட்டான்.

"பாப்பாவால முள்ளுக்குள்ள கையை விட முடியாதுங்க.. அதுக்காக தான் நான் போறேன்னு" என்று இழுத்தவனை நோக்கி நந்தனின் கண்கள் திரும்பவே இல்லை.நிலாவிடமே நிலைத்திருக்க

"இதுக்கு தான் அண்ணா உன்னைய விளையாட்டுக்கே சேர்த்துகிறது இல்லை.. எல்லோராடையும் சேர்ந்து விளையாடறதா இருந்தா மட்டும் விளையாட்டுக்கு வா..இல்லனா வராத.. வளவா இரு நானும் வர்றேன்" என்று அவனுடன் யுகியும் சேர்ந்து பந்தை எடுக்கப் போய்விட்டான்.

நிலாவின் அருகில் சென்ற  நந்தனோ  "நான் வேண்டான்னு சொல்லியும் அவன் சொன்னான்னு வந்து நிக்கிற" என்று நிலாவின் தலையில் ஓங்கி ஓங்கி கொட்டினான்.

பத்து வயது சிறுமியால் நந்தனின் அடியை தாங்க முடியவில்லை கீழே அமர்ந்து அழுதாள்.

அவள் முன் ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவன்..

"ஸ்ஸ்ஸ்.... சத்தம் வந்துச்சி கொன்னுடுவேன்,இனி அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான்னு நான் சொல்றதை மீறி வந்து நின்ன தோலை உறிச்சிடுவேன் ஜாக்கிரதை"என மிரட்ட.. முட்டைக்கண்ணை விரித்து மழுங்க மழுங்க விழித்தது அந்த சிறிய மொட்டு.

"என்ன சரியா?"

"ம்ம்"

"என்ன ம்ம்?,சொல்லு வருவியா..?"

"மாட்டேன்"

"வீட்டுக்குப் போ.."

"விட்டால் போதும்" என ஓடிவிட்டாள் பெதும்பையவள்

அதில் உள்ளுக்குள் கர்வப் புன்னகை சிந்தினான் விடலையவன்.


Leave a comment


Comments 1

  • L Lakshmipriya
  • 4 months ago

    Nice..... happen like this everywhere.....valavan nd yugi s so gud


    Related Post