இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 05-03-2024

Total Views: 33374

செந்தூரா 1

கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ், வெனிஸ் கடற்கரை, ஞாயிற்று கிழமை, மாலை சுமார் ஆறுமணியளவில் அந்திவானம் செந்தூரத்தை பூசிக் கொண்டு அழகாய் காட்சி அளித்தது.

ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் யுவன்களும் யுவதிகளும் அவரவர் இணைகளுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தனர்.

செந்தூரமித்ரன் அந்திவானத்தை ரசித்தபடி தன்னை மறந்து அதன் அழகில் லயித்துபடி நின்றிருந்தான்.

“மித்ரன்” என்று அழைத்தபடி அவன் அருகில் வந்தான் அவன் நண்பன் கவின்.

“இன்னும் எவ்வளவு நேரம் தான் இதையே பார்த்திட்டு இருப்ப? வாடா போய் கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாடிட்டு, போகலாம், நாளைக்கு நம்மளோட பிராஜெக்ட்டை பிரசன்டேஷன் செய்யணும் மறந்துட்டியா?” என்றான் கவின்.

அந்திவானத்திலிருந்து தன் கண்களை திருப்ப விருப்பமே இல்லாமல், “ச்சு, கொஞ்ச நேரம் இருடா” என்றான் மித்ரன்.

“டேய், அவனவன் வெளிநாடு வந்து ஒரு பிகரை கரெக்ட் பண்ணி ஜோடி ஜோடியாக சுத்திட்டு இருக்கான். நீ என்னடான்னா இங்கே வந்து ஐந்து வருஷம் ஆச்சு. ஒரு பொண்ணுக்கூட இல்லாமல் இருக்க. வார இறுதியில் வந்து இந்த அந்தி வானத்தை வெறிச்சு வெறிச்சு பார்க்கிறதுல உனக்கு அப்படி என்னடா சந்தோஷம்?

ஒரு வேளை சன்னியாசி ஆகப் போறியா?” என்றான் கவின்.

இப்போது திரும்பி பார்த்து நண்பனை முறைத்தான் செந்தூர மித்ரன்.

“இயற்கையை ரசிச்சா இப்படியெல்லாம் சொல்லுவியாடா?” என்றான் கவினை பார்த்து கடுப்புடன்.

“பாருடா, எத்தனை அழகாக பொண்ணுங்க, அவங்களும் இயற்கையின் படைப்பு தானே மச்சி, அவங்களையும் கொஞ்சம் ரசிக்கலாம் இல்ல?

நீயும் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் தானே, நானும் யாரையாவது பார்த்து பழக முடியும்?” என்றான் கவின்.

“நான் உன்னை யாரோடவும் பழகாதேனு சொன்னதாக நினைவில்லையே” என்றான் மித்ரன் எள்ளலாக.

“உன்னை மட்டும் தனியாக இருக்கவிட்டு நான் எப்படிடா போவேன், அதற்கு என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை” என்றான் கவின்.

“உனக்கு ஆள் கிடைக்கலைனு சொல்லு, ஒத்துக்கறேன். அதை விட்டுட்டு என்னை காரணம் காட்டாதே” என்றான் மித்ரன் கிண்டலான குரலில்.

“சரிசரி காலை வாராதே, அங்கே சறுக்கு நடனம் நடக்குது, வா அங்கேயாவது போகலாம்” என்று நண்பனை கையை பிடித்து இழுக்காத குறையாக இழுத்துச் சென்றான் கவின்.

அங்கே ஒரு பெண் மிகவும் நளினமாக உடலை வளைத்து நெளித்து சறுக்கிக் கொண்டே நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். 

அங்கே இருப்பவர்கள் அனைவரும் அவள் அழகிலும், நளினத்திலும் உடல் வளைவுகளிலும், நடன அசைவுகளிலும் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவள் சுழன்று கொண்டிருந்தாலும், அனைவரின் பார்வையும் தன் மேல் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள தன் கண்களை சுழற்றினாள்.

அனைவரும் கவின் உட்பட அவளையே ஆவென்று பார்த்துக் கொண்டிருக்க, ஒருவன் மட்டும் விட்டேத்தியாய் அவளை கவனிக்காமல் அந்திவானத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவன் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று, அவள் பல சாகசங்களை நிகழ்த்தினாள், அதைக் கண்ட அனைவரும் கைதட்டி ஆரவாரித்து விசிலடித்தனர் அந்த ஒருவனை தவிர.

புருவம் உயர்த்தி அவனை ஆழ்ந்து பார்த்தாள் அந்த மங்கை.

ஆறடிக்கும் மேலான உயரம், நன்கு சிவந்த நிறம், பார்த்ததும் கவர்ந்திழுக்கும் வசீகரமான முகத்தோற்றம். அடர்ந்த கருகருவென்ற மீசை, அவன் சிவந்த நிறத்திற்கு மேலும் மெருகேற்றியது. லேசாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி.

உடற்பயிற்சியால் முறுக்கேறி இருந்த புஜங்கள், அவன் அணிந்திருந்த சிவப்பு நிற டீசர்ட் அவனின் திண்ணிய மார்பை தெளிவாக காட்டியது. பார்வையோ காந்த பார்வையாக வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கே விண்ணை பிளக்கும்படி கேட்ட கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அவன் செவிகளை சென்றடைந்தது போல தெரியவில்லை.

அப்படி என்ன தான் அங்கே பார்க்கிறான் என்று அவளும் தன் ஆட்டத்தை சற்று நிதானமாக்கி வானத்தை நோக்கினாள்.

வானம் செந்நிறமும் நீலமும் கலந்த வர்ணஜாலத்தில் அழகாய் தான் இருந்தது. அதற்காக இப்படியா அங்கேயே வெறித்துக் கொண்டிருப்பான்? ஒரு வேளை வானத்தில் எந்த தாரகையாவது இவன் கண்களுக்கு மட்டும் தெரிகிறாளோ? அவனையே என்று ஆராய்ச்சியாக பார்த்தாள் அந்த யுவதியும்!

சிறிது நேரத்தில் அங்கே இருட்ட தொடங்கவும் அந்திவானச் சிவப்பு மெல்ல கருநீல நிறத்திற்கு மாறத் தொடங்கியது. அதன் பின்பே சுயத்திற்கு வந்தவனாய் நண்பன் கவினை அழைத்தான் மித்ரன்.

“கவின் கிளம்புடா, கொஞ்ச நேரம் டென்னிஸ் கோர்ட்டில் போய் விளையாடிட்டு போவோம்” என்றான்.

கவினோ நண்பனின் பேச்சை கவனிக்காமல் பரவச நிலையில் இருந்தான். அவன் பார்வை வேறு இடத்தில் நிலைக் குத்தியிருந்தது. நண்பனின் பார்வையை தொடர்ந்து தன் பார்வையையும் செலுத்தினான்.

அங்கே நடனமாடி முடித்திருந்த பெண், இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை கவினை பார்க்கிறாளோ? கவினும் அப்படித்தான் நினைத்திருப்பான் போலும், அவன் விட்ட ஜொள்ளில் வெனிஸ் கடற்கரை நிரம்பி வழிந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

நண்பனின் தோள்களைப் பற்றி உலுக்கினான் மித்ரன். “டேய் வாடா, டென்னிஸ் கோர்ட் போகலாம்?”

“ச்ச்சு, என்னதான் உனக்கு பிரச்சனை? மனுசன ரசிக்க விடுடா” என்று தன் தோள்களின் மேலிருந்த நண்பனின் கையை தட்டி விட்டான் கவின்.

“சொல்லுவடா சொல்லுவ, நான் இயற்கையை ரசிச்சிட்டு இருக்கும் போது மட்டும் என்னை நீ தொல்லை செய்து இவ்வளவு நேரம் என்னை தொணதொணனு பேசி டென்னிஸ் விளையாடலாம்னு இங்கே கூட்டிட்டு வந்தே. இப்போ என்னை சொல்றியா?” என்றான் மித்ரன் கடுப்புடன்.

அந்த யுவதி மேல் இருந்த பார்வையை திருப்பாமல் கவின் தன் நண்பனுக்கு பதில் சொன்னான், “எது நீ ரசிச்சதும் நான் ரசிப்பதும் ஒண்ணா? அந்த பொண்ணை பாருடா, சும்மா எப்படி இருக்கா? இப்படி ஒரு பெண்ணை நீ ரசிச்சிட்டு இருந்தால், நானே உன்னை தொல்லை செய்யாமல் உனக்கு தனிமையை கொடுத்து போயிருப்பேன்.

எப்போ பார்த்தாலும் அந்தி வானத்தையே வெறிச்சு பார்த்திட்டு இருக்கறது. போடா, போய் அதையே இன்னும் கொஞ்ச நேரம் ரசிச்சிட்டு இரு, நான் அதுவரைக்கும் இந்த பொண்ணிடம் பேசப் பார்க்கிறேன்” என்றான் கவின்.

அந்த யுவதியும் தூரத்திலிருந்த இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அருகில் இருந்த தோழிகளிடம் அவள் உரையாடிக் கொண்டிருந்தாலும் அவளின் பார்வையோ இவர்களின் பக்கம் தான். 

கவினுக்கோ வானத்தில் பறப்பது போல. அவளும் தன்னை போல தான் தோழிகளை தவிர்க்க முடியாமல் தவிக்கிறாள் போலும். அவளுக்கோ மித்ரன் அவளை ஒரு முறை ரசித்து பார்த்து விட்டு இருந்தால் கூட நிம்மதியாக இருந்திருக்கும்.

அழகி போட்டிக்கான அனைத்து தகுதியும் இருக்கும் அவள் பார்வைக்காக அனைவரும் காத்திருக்கும் போது இப்படி ஒரு இளைஞன் அவளை கண்டு கொள்ளாமல் இருப்பதா? எப்படியோ போகட்டும் என்றும் விடமுடியவில்லை. அத்தனை ஆணழகனாக இருந்தான். முதல் பார்வையிலேயே அவன்மேல் மையல் கொண்டு விட்டாள்.

அந்த அழகனின் உடன் இருக்கும் நண்பன் தான் இவளை பார்த்து இளித்துக் கொண்டு இருக்கிறான். அவனோ இவளை கண்டுகொள்ளாதது ஏனோ ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு.

“கவின் இருட்ட தொடங்கிடுச்சு. நீ இங்கேயே பார்த்து ஜொள்ளிட்டு வா, நான் டென்னிஸ் கோர்டில் இருக்கேன்” என்றான் மித்ரன் கடுப்புடன்.

கவின் “ம்ம், சரி மச்சி, நீ கிளம்பறத்துக்குள்ள நான் அங்கே வந்திடுறேன்” என்றான் பார்வையை திருப்பாமலே.

‘இவனை எல்லாம் திருத்த முடியாது’ என்று தலையை சலிப்பாக உலுக்கிக்கொண்டு அங்கிருந்து நகர போனான். அவன் போகிறான் என்று தெரிந்ததுமே, அவள் இவர்களை நோக்கி கையை ஆட்டினாள்.

கவினும் தன் பங்கிற்கு அவன் கைகளை ஆட்டவும், அவள் இவர்களை நோக்கி வந்தாள்.

அவள் வருவதை பார்த்த கவின், நண்பனின் கைகளைப் பற்றி நிறுத்தினான். “மித்ரா, போகாதடா. அந்த பொண்ணு என்னிடம் பேச வருவது போல தெரியுது. ஒரு பொண்ணு வந்து பேசினாலே அள்ளு விட்டுடும். இவ வேற பேரழகியாக இருக்காள். கொஞ்ச நேரம் எனக்கு சப்போர்ட்டா நில்லுடா” என்றான் கவின்.

“டேய் இதுக்கெல்லாமாடா சப்போர்ட்டா இருக்க முடியும்? விடுடா என்னை” என்று நண்பனிடமிருந்து கைகளை உருவிக் கொண்டு அவன் திரும்பவும் அவள் இவர்களை நெருங்கவும் சரியாக இருந்தது.

“ஹாய், தி இஸ் ஆராத்யா!” என்று மித்ரனிடம் கையை நீட்டினாள்.

மித்ரன் ஒன்றும் புரியாமல் கவினை பார்க்க, கவினோ அதிர்ச்சியில் ஆவென்று வாயை பிளந்தபடி நின்றிருந்தான்.

அவள் அப்படியே அவனை நோக்கி தன் கைகளை நீட்டிக் கொண்டிருக்கவும், மரியாதை நிமித்தமாக அவனும் கைக் கொடுக்க வேண்டிய கட்டாயம். நண்பனிடம் பார்வையால் மன்னிப்பு கோரியபடி, அவளிடம் கைக் குலுக்கினான்.

“நீங்க சவுத் இண்டியன்ஸ் தானே? எங்க அப்பாவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். தமிழ் நல்லாவே பேசுவேன்” என்றாள் கொஞ்சும் தமிழில்.

மென்மையாக புன்னகைத்து, “இது என்னோட நண்பன் கவின், இவனுடன் பேசிட்டு இருங்க. நான் இப்போ வரேன்” என்று நழுவ பார்த்தான் மித்ரன்.

நண்பனை மெச்சுதலாக பார்த்தான் கவின். ஆனால் ஆராத்யாவோ, “உங்களைப் பற்றிச் சொல்லவே இல்லையே” என்றாள்.

“என் பெயர் செந்தூர மித்ரன், பிரண்ட்ஸ் மித்ரன்னு கூப்பிடுவாங்க, நாங்க இங்கே இருக்கிற ஆக்ரோ டெக்னாலஜி இன்டஸ்ட்ரியில் பிராஜெக்ட் ஹெட்டாக இருக்கோம். சும்மா வார விடுமுறையை கழிக்க இங்கே வந்தோம்” என்றான் மித்ரன்.

அவன் அந்த கம்பெனியின் பெயரைச் சொன்னதும் ஆராத்யாவின் கண்கள் பளிச்சிட்டது. மேலும் ஏதோ சொல்ல போனவளை தடுத்தான் மித்ரன்.

“மிஸ் நாங்க கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாடிட்டு கிளம்பலாம்னு இருக்கோம், நீங்க தப்பா எடுத்துகலைனா நாங்க கிளம்பறோம். இல்லை என்றால் என் நண்பன் கவின் உடன் பேசிட்டு இருங்க, அவன் நல்லா கம்பெனி கொடுப்பான்” என்றான் மித்ரன்.

நண்பனின் நேர்மையை மனதிற்குள் மெச்சிக் கொண்டாலும், மித்ரன் அருகில் அவனை வைத்து பார்த்தால் அவள் கண்களுக்கு கவின் எல்லாம் ஒரு ஆளாக தெரியுமா என்ன? ம்ம் என்று மனதிற்குள் நினைத்தபடி அமைதியாக நின்றிருந்தான் கவின்.

“மித்ரன், நானும் நீங்க விளையாடறதை பார்க்கலாம் தானே? எதுவும் தொல்லை செய்ய மாட்டேன்” என்றாள் ஆராத்யா கொஞ்சலாக.

என்ன சொல்லி அவளை தவிர்ப்பது என்று தெரியாமல் சலிப்புடன் நண்பனை பார்த்தான் மித்ரன். “ஆராத்யா, நீங்க வாங்க நாம் எல்லாரும் ஒண்ணாவே போகலாம்” என்றான் கவின்.

அவள் சந்தோஷமாய் தன் தோழிகளையும் அழைக்க போனாள்.

“என்ன கவின், நீ ஏன் அவளை கூப்பிட்ட?” என்றான் மித்ரன்.

“விளையாட்டை பார்க்கறதுக்கு யாருக்கும் உரிமை இருக்கு. அந்த பொண்ணு நல்லா பெரிய இடத்து பொண்ணு போல இருக்கா. பார்த்தா பார்த்திட்டு போறா. நாம் விளையாடிட்டு கிளம்புவோம் மச்சி” என்றான் கவின்.

“சாரிடா, அந்த பொண்ணு உன்னிடம் பேசாமல் என்னிடம் பேசுவாள்னு நான் எதிர்பார்க்கலை” என்றான் மித்ரன் வருத்தமான குரலில்.

“விடு மச்சி, உன்னை பக்கத்தில் வச்சிட்டு ஓவர் கான்பிடன்டில் நான் தான் கொஞ்சம் ஓவரா கற்பனை பண்ணிட்டேன் போல. நான் பல்பு வாங்கினதை மட்டும் மறுபடியும் சொல்லி சொல்லி என்னை குத்திக் காட்டாதேடா” என்றான் கவின் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு

அவன் சொன்ன விதத்தில் பக்கென்று சிரித்து விட்டான் மித்ரன். வாய்விட்டு சிரித்த நண்பனை முறைத்தான் கவின். ஆராத்யா அதற்குள் தன் தோழிகளுடன் இவர்களிடம் வந்தாள்.

அவர்களை அழைத்துக் கொண்டு நண்பர்கள் டென்னிஸ் கிளப்பிற்கு சென்றார்கள். அங்கே சென்றதும் மித்ரன் உடை மாற்றிக் கொள்ளும் அறைக்கு சென்றான். ஆராத்யா கவினை பார்த்து, “நீங்க போகலையா” என்றாள்.

“ஹிஹி.. உங்களுக்கு கம்பெனி கொடுக்கலாம் என்று இங்கேயே இருக்கேன்” என்று சமாளித்தான். பின்னே அவனுக்கு அவ்வளவாக ஆட வராது. இந்த பெண்கள் வரவில்லை என்றால் சும்மாவாச்சும் மித்ரனுடன் விளையாடி இருப்பான். இந்த பெண்கள் எதிரில்  இப்போது விளையாடி இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் விட அவன் தயாராக இல்லை.

அவன் கள்ளத்தனத்தை சரியாக கண்டுபிடித்திருந்தாள் ஆராத்யாவின் தோழிகளில் ஒருத்தி. “ஆரா, ஒருவேளை சாருக்கு ஆட வராதோ என்னவோ” என்று சொன்னாள். அவள் சொன்னதும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் கொல்லென்று சிரிக்கவும் சங்கடத்துடன் எழுந்து சென்றான் கவின்.

“ஷட் அப்” என்று தோழிகளை அதட்டியவள், “கவின் ஐயம் வெரி சாரி பார் மை பிரண்ட்ஸ் பிஹேவியர் (தோழிகளின் நடத்தைக்கு மன்னிப்பு கோரினாள்). நீங்க என் பக்கத்திலேயே வந்து உட்காருங்க ப்ளீஸ்” என்றாள் ஆராத்யா.

கொஞ்ச நேரம் பிகு செய்து விட்டு, பின்பு அவளருகில் போய் அமர்ந்தான் கவின். அவள் மெல்ல மித்ரனைப் பற்றி விசாரித்தாள்.

“மித்ரனும் நானும் மாஸ்டர்ஸ் படிக்க இங்கே வந்தோம், அப்போ தான் இரண்டு பேரும் நண்பர்களானோம். படிச்சு முடிச்சிட்டு வேலையில் சேர்ந்து பிராஜக்டை தனியாக பிரோகிராம் செய்ற அளவிற்கு வந்துட்டோம். மித்ரனுக்கு அவன் ஊரிலேயே MNC பன்னாட்டு நிறுவனம் வைக்கணும்னு ஆசை. நானும் அவனோட வொர்க்கிங் பார்ட்னர்ஷிப்ல செய்யலாம்னு இருக்கேன்” என்றான் கவின்.

“கவின், மித்ரன் கமிட்டெடா? சிங்கிளா?” என்று கேட்டாள்.

“எனக்கு தெரிந்த வரைக்கும் அவன் சிங்கிள் தான். இங்கே இருந்த இந்த ஐந்து வருடத்தில் அவனுக்கு ஒரு பெண் தோழியும் இல்லை” என்றான் கவின்.

“ஒரு வேளை அவர் சொந்த ஊரில் இருக்கலாம் தானே?” என்றாள் ஆராத்யா.

“எனக்கு தெரிந்தவரையில் இல்லை, அப்படியிருந்தால் அவன் அடிக்கடி போன் பேசியிருப்பானே? எப்பவும் அவன் வீட்டிற்கும், அத்தை வீட்டிற்கும் தான் பேசுவான். எனவே பையன் முரட்டு சிங்கிள் தான். ஏன் கேட்கிறீங்க?” என்றான் கவின்.

“இல்ல, சும்மா ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கலாமே…” என்று இழுத்தாள் ஆராத்யா 

மனதிற்குள் எங்கோ ஒரு வலி தோன்றினாலும் “எங்கிருந்தாலும் வாழ்க” என்ற நிலைக்கு சென்று விட்டான் கவின்.

“மித்ரன் நிச்சயமாக சிங்கிள் தான், நீங்க தாராளமாக முயற்சி செய்யலாம். உங்க அழகு அவனை கமிட்டடா மாற்றும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்” என்றான் கவின்.

செந்தூரமித்ரன் பெரும்பாலும் தன் சொந்த விஷயங்களை கவினுடன் பகிர்ந்து கொள்ளாததால், நண்பன் சிங்கிள் என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லிக் கொண்டிருந்தான் கவின். ஆனால் உண்மை அதுவல்ல!

மித்ரன் உடைமாற்றிக் கொண்டு, அரைக்கால்சட்டையும் கையில்லாத பனியனும் அணிந்து வந்தான். அதில் அவன் படிக்கட்டு தேகம் அப்பட்டமாக தெரிந்தது. முறுக்கேறி இருந்த அவன் கைகளையும் அவனையும் வெளிப்படையாகவே சைட் அடித்தனர் ஆராத்யாவும், அவள் தோழிகளும்.

கொஞ்ச நேரத்தில் மித்ரன் விளையாட ஆரம்பிக்கவும், அனைவரும் விளையாட்டில் தங்கள் ஆர்வத்தை செலுத்தினர். ஆனால் ஆராத்யா மித்ரனின் அங்க அசைவுகளை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் ஆக ஆக, அவளின் ஆசை தீயாக கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 

என்ன ஆனாலும் சரி எப்படியாவது அவனை அடைந்தே தீருவது என்று முடிவெடுத்து விட்டாள் ஆராத்யா.

செந்தூர மித்ரனின் முடிவு என்னவாக இருக்கும்?

(தொடரும்)



Leave a comment


Comments


Related Post