இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 05-03-2024

Total Views: 41042

இதயத்தில் ரயில் எஞ்சின் ஓட தரணியும் முகிலனும் மூச்சு வாங்க கீழே வந்து நின்றபோது மற்ற அறைகளில் படுத்திருந்தவர்களும் சத்தம் கேட்டு ஓடி வந்து நின்றிருந்தனர். மல்லிகாவின் அலறல் சத்தம் பக்கவாட்டு அறையில் கேட்க “என்னாச்சு…?” முகிலனை முந்திக்கொண்டு சத்தமிட்டபடி உள்ளே ஓடினான் தரணி. அங்கு கை கால்கள் வெட்டி வெட்டி இழுத்தபடி வாயில் நுரை தள்ள கண்கள் சொறுகிய நிலையில் கிடந்தார் பாட்டி. 


பெரிய இரும்பு சாவிக்கொத்தை அவர் உள்ளங்கையில் வைத்து இறுக்கி மூடி இழுத்துப் பிடித்தபடி அழுத நிலையில் அவர் அருகில் அமர்ந்திருந்தாள் பூச்செண்டு. பாட்டியை பார்த்து கலவரமான மனம் பூச்செண்டிற்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதில் நிம்மதி அடைந்ததை தரணியால் உணர முடிந்தது. ஆளாளுக்கு குய்யோ முய்யோ என்று சத்தமிட சட்டென சூழ்நிலையை உள்வாங்கி “முகில்… நீ போய் காரை எடு…” சத்தமான குரலில் கூறி பாட்டியை வேகமாக அள்ளித் தூக்கினான் தரணி.


“ஆம்புலன்ஸ்க்கு சொல்லலாமா…?” உடன் ஓடியபடியே மாணிக்கவேல் கேட்க “லேட்டாயிடும் மாமா… வெயிட் பண்ண முடியாது… நான் ஸ்பீடா ட்ரைவ் பண்ணுவேன்… ஹாஸ்பிடல் எங்கே இருக்குனு மட்டும் சொல்லுங்க…” ஓடியபடியே கூறிய தரணி அவசரமாய் பாட்டியை காருக்குள் போட்டு முகிலனை பக்கத்து இருக்கைக்கு தள்ளி தான் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.


பூச்செண்டும் மல்லிகாவும் உடன் பின்னே ஏறிக்கொள்ள செண்பகத்தை பின்னால் அமர்த்தி மணிவாசகம் ஒரு வண்டியிலும் மாணிக்கவேல் வேறொரு வண்டியிலும் காரை பின் தொடர்ந்தனர். போக்குவரத்தான சாலையிலேயே அனாயாசமாய் காரை விரட்டுவான் தரணி. போக்குவரத்து பெரிதும் இல்லாத சாலை ஆதலால் ஆம்புலன்ஸை போன்ற வேகத்துடன் காரை சீறிப்பாயவிட்டான். அவனது அதீத வேகத்தில் மற்றவர்களுக்கு மனதுக்குள் பயம் புரண்டாலும் பாட்டியை காப்பாற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தனர்.


“என்னாச்சு அத்த…? எல்லார் கூடவும் நல்லாதானே பேசிட்டு போய் படுத்தது… எப்படி திடீர்னு…?” பின்னால் திரும்பி கண்களில் கண்ணீருடன் கேட்டான் முகிலன்.


“ராத்திரிக்கு ரெண்டு தடவையாவது கொல்லைக்குப் போக எந்திரிக்கும்.. அதுக்குதேன் எந்திரிச்சு போயிருக்கு… வழுக்கி விழுந்துச்சா இல்ல கிறுகிறுப்பு வந்து விழுந்துச்சானு தெரியல… பூச்செண்டும் நல்லா தூங்கிட்டா போல… அவளும் கவனிக்கல… நான் கொல்லைக்கு போகலாம்னு எந்திரிச்சு அறைக்குள்ள போனப்போ கையை காலை இழுத்துட்டு கிடந்துச்சு… எம்புட்டு நேரமாச்சோ எதுவும் தெரியல… ஒரு சத்தமும் கேட்கலையே… ஐயோ அம்மா… என்னை பெத்த ஆத்தா… என்னை பாரு தாயி… நான் என்ன செய்வேன்…?” 


மயங்கிய நிலையில் பூச்செண்டின் மடியில் தலை வைத்து கிடந்தவரின் காலை வருடியபடி சத்தமிட்டுக் கதறினார் மல்லிகா. சுவாசம் இருக்கிறதா என்பதை அவ்வப்போது தொட்டுப் பார்த்தபடி வந்தாள் பூச்செண்டு. முகிலன் வழிகாட்ட பத்தே நிமிடங்களில் மதுரையின் அந்த பெரிய மருத்துவமனையின் முன் காரை கொண்டு வந்து நிறுத்தி இருந்தான் தரணி. உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பாட்டி. அடுத்த 15 நிமிடங்களில் மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்… ஆளாளுக்கு அழுதபடி இருக்க முகிலனும் தரணியும் சமாதானம் செய்தபடி இருந்தனர். இந்த நிலையிலும் முகிலனை பார்க்கவோ அவனிடம் பேசவோ விரும்பவில்லை பூச்செண்டு. அழுதபடி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் வெளியே வந்தார் மருத்துவர்.


“ஃபிட்ஸ் வந்ததால ஒரு கையும் காலும் செயலிழந்த மாதிரி தெரியுது… இப்படியேதான் நீடிக்கும்னு சொல்ல முடியாது… குணமாயிடும்னு கேரண்டி கொடுக்கவும் முடியாது… வயசானவங்க இல்லையா… இப்போதைக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல… திரும்பவும் ஃபிட்ஸ் வந்திடக் கூடாது… அது ரொம்ப முக்கியம்… மயக்கம் தெளியட்டும்… இன்னொரு டெஸ்ட் பார்த்துட்டு நிலவரம் என்னன்னு தெளிவா சொல்றேன்…” அனைவருக்குள்ளும் பீதியை கிளப்பிவிட்டுச் சென்றார் மருத்துவர். மறுநாள் ரிப்போர்ட் வந்திருந்தது.


“நான் சொன்னதுதான்… ஒரு கை ஒரு கால் செயல்படல… நரம்புகள் எல்லாம் இழுத்துக்கிட்டதனால ரொம்ப பலவீனம் ஆயிட்டாங்க… அவங்களோட ஆசைகள் எதாவது இருந்தா நிறைவேத்தி வையுங்க… ஒன்னு சந்தோஷத்துல குணமடையலாம். இல்லைன்னா ஆசை நிறைவேறின நிம்மதியில சந்தோசமா கண்ணை மூடலாம்… இதை ஒரு டாக்டரா இல்லாம சகமனுஷனா சொல்றேன்… மருத்துவத்தை மீறின சில விஷயங்கள் இருக்கு… அதனாலதான் சொல்றேன்…” மருத்துவரின் வார்த்தைகள் அனைவருக்குள்ளும் வேதனையை படரச் செய்தது.


“மருந்து மாத்திரைகளால சரி பண்ண முடியாதா டாக்டர்…?” வடிந்த கண்ணீரை துடைத்தபடியே கேட்டார் மணிவாசகம்.


“அதுவும் கண்டிப்பா குடுப்போம்… அதைத் தாண்டி நான் சொன்ன விஷயத்தையும் பண்ணுங்க… இரண்டு நாள் இங்கே ட்ரீட்மென்ட்ல இருக்கட்டும்… அதுக்கு அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்…” பாதி நம்பிக்கையை மட்டுமே கொடுத்திருந்தார் மருத்துவர். 


பாட்டி கண்விழித்திருந்தார். ஆனால் பேச முடியவில்லை… பயம், மிரட்சி, கவலை, வயோதிகம் என்று பல விஷயங்கள் ஒன்று கூடியதால் கண்களில் கண்ணீர் மட்டுமே வடிந்தது. கண்கள் பரிதவிப்புடன் எதையோ சொல்ல துடித்துக் கொண்டிருந்தன. அதன்பின் ஆள் மாற்றி ஆள் அருகில் இருந்து அவரை பார்த்துக் கொண்டனர். முகிலனும் தரணியும் விடுமுறை நாட்களை நீடித்தனர்.


“என்னால உனக்கும் சேர்த்து கஷ்டம்டா… நீ வேணா கிளம்புடா… நான் பார்த்துக்கிறேன்…” சோகமாய் கூறிய முகிலனின் கையை ஆதரவாய் பற்றிக் கொண்டான் தரணி.


“இப்போதான்டா நான் உன்கூட இருக்கணும்… அவங்க எனக்கும் அப்பத்தாதான்… பெரியவங்க எல்லாருமே ரொம்ப தடுமாறிப் போய் இருக்காங்க… உன் ஒருத்தனால சமாளிக்க முடியாது… நானும் கூட இருக்கேன்… லேப்டாப் கையிலதானே இருக்கு… அவசரமான வேலைகளை இங்கே இருந்தே பார்த்துக்கலாம்… ஒன்னும் பிரச்சனை இல்ல…”


முகிலனுக்கு தைரியம் கூறியதோடு அதனை செயலிலும் காட்டினான் தரணி. பெரியவர்களுக்கு ஆறுதல் சொல்வது… வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அழைத்து வருவது… மிரட்டியாவது அவர்களை உண்ண வைப்பது… தைரிய வார்த்தைகள் கூறுவது… பாட்டியுடன் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது என்று முகிலனை தாண்டி தரணியின் செயல்கள் அனைவருக்குமே ஆச்சரியத்தையும் அனுசரணையையும் அளித்தன. பூச்செண்டு மட்டுமே ஒட்டாமல் அமைதியாக ஒதுங்கிக் கொள்வாள். தரணியிடம் மட்டுமே பொதுவாக சில பொழுதுகள் பேசுவாள்… முகிலனிடம் அதுவும் அறவே இல்லை.


தரணி தன்னுடன் இருப்பதை பெரும் பலமாக நினைத்தான் முகிலன். மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்து மறுநாள் டிஸ்டார்ஜ் செய்யப்பட்டார் பாட்டி… பலகீனமான குரலில் பேச ஆரம்பித்திருந்தார்… மகளும் மருமகளும் உடனிருந்து உணவும் மருந்துகளும் கொடுத்து நல்லவிதமாக கவனிக்கத் தொடங்கினர். எந்நேரமும் நடமாட்டமும் வாய் ஓயாத பேச்சும் வம்பிழுப்பமாய் திரியும் பாட்டி படுக்கையில் முடங்கிப் போனதில் மொத்தக் குடும்பமும் உடைந்து போனது. பாட்டியிடம் எந்நேரமும் வம்பு இழுத்தாலும் அவர் படுக்கையில் விழுந்ததில் அதிகம் பாதிக்கப்பட்டது பூச்செண்டுதான். அவளுக்கு பாட்டியின் மேல் பாசம் அதிகம்… பல நேரங்களில் அவர் மடியில் படுத்து கதை பேசியபடியேதான் உறங்கிப் போவாள். எந்நேரமும் பாட்டியின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டாள் பூச்செண்டு.


நான்கு நாட்கள் ஓடி இருந்தன. முகிலனும் தரணியும் மடிக்கணினி மூலம் தங்கள் வேலைகளை வீட்டில் இருந்தபடியே பார்த்துக் கொண்டனர். மல்லிகாவும் மாணிக்கவேலுவும் கூட தங்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயேதான் இருந்தனர். அன்று இரவு உணவின்போது அனைவரும் கூடத்தில் அமர்ந்திருந்தனர். பாட்டிக்கான உணவை தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் பூச்செண்டு.


அவரை தூக்கி சாய்ந்த நிலையில் அமர வைத்தவள் உணவு ஊட்ட தயாராக “ஏத்தா… எல்லாரும் சாப்பிட்டாகளா…?” நலிந்த குரலில் கேட்டார் பாட்டி.


“எல்லாரும் சாப்பிட்டாங்க… நீ சாப்பிடு… மாத்திரை போடணும்…” உணவை அருகே கொண்டு செல்ல அதனை ஒரு கையால் தடுத்தவர் “எல்லாரையும் இங்கே வரச் சொல்லு… நான் பேசணும்…” குரல் ஓய்ந்து ஒலித்தாலும் அழுத்தம் கூடியிருந்தது.


“அம்மாச்சி… முதல்ல சாப்பிடு… வளவளத்த வாய் சும்மாவே இருக்காதா… பேசாம சாப்பிடு…” மெலிதாக கடுகடுத்தாள் பூச்செண்டு.


அவள் பேச்சை காதில் வாங்காமல் “மணி… மல்லி…” உள்ளிருந்தபடியே அவர் உரத்து குரல் கொடுக்க “அடங்க மாட்ட கெழவி நீயி… இரு… போய் கூட்டிட்டு வாரேன்… கத்தி தொலையாத… ஒடம்புக்கு ஆகாது…” சிடுசிடுவென கூறியவள் எழுந்து சென்று அனைவரையும் அழைத்து வந்தாள்.


தரணி மட்டும் சற்று ஒதுங்கி வெளியிலேயே நின்று கொள்ள “வா ராசா… நீயும் என் பேரந்தேன். நீயும் இங்குட்டு வா…” கனிவு பொங்க அழைக்க முகிலனின் அருகில் தானும் வந்து நின்று கொண்டான்.


“முகிலு…” பாசத்தை தேக்கி அழைத்தவர் ஒற்றை கரத்தை நீட்ட வேகமாய் வந்து அழுத்தமாய் பற்றிக் கொண்டான முகிலன். கடகடவென பாட்டியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.


“அழாத அப்பத்தா… உனக்கு ஒன்னும் இல்ல… பழையபடி சீக்கிரமாவே எந்திரிச்சு நடமாட ஆரம்பிச்சிடுவ… நீ செஞ்சு குடுக்குற கோலா உருண்டை எனக்கு வேணும்… நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோம்… தைரியமா இரு…” அவரது கண்களை துடைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டான்.


“அது இனி நடக்குமான்டு தெரியல சாமி… குருக்கு உடைஞ்சு விழுந்த கெழவி திரும்ப எந்திரிச்சு நடமாடுவேன்னு தோணல… பிள்ளைகளுக்கு கஷ்டத்தை குடுக்காம போய் சேர்ந்திடணும்…” பிசிறடித்த குரலில் கூறினார்.


“எம்மா… ஏம்மா இப்படி எல்லாம் பேசுற…? உனக்கு ஒன்னும் இல்ல… கண்டதையும் நினைக்காத…” இடைபுகுந்து பேசியபடி மறுபுறம் வந்து அமர்ந்தார் மணிவாசகம்.


“அந்த ஏமன் வந்து நின்னா யாரால தடுக்க முடியும்…? விதி எத்தனை நாளைக்குன்டு யாருக்கு தெரியும்…? என் உசுரு போறதுக்குள்ள என் ஆசையை மட்டும் நிறைவேத்தி புட்டிகன்டா சொகமா கண்ணை மூடிருவேன்…” முகிலனின் கைக்கு அழுத்தம் கொடுத்தார் பாட்டி.


“உனக்கு என்னம்மா கொற…? என்ன செய்யணும்…? சொல்லு நாங்க செய்யறோம்…” உறுதியான குரலில் கூறினார் மணிவாசகம்.


“வேற என்னத்த கேட்க போறேன்… என் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணம் பண்ணி பாக்கணும்… அவுக ரெண்டு பேரையும் மணக்கோலத்தில பார்த்துட்டா அது போதும் எனக்கு… இனி நான் பொழச்சு எந்திரிப்பேன்டு எனக்கு நம்பிக்கை இல்ல… எப்ப வேணாலும் என் உசுரு போயிரும்… அதனால இவுக கல்யாணத்தை வெரசா முடிச்சுப்புடு மணி… அந்த ஆசையை மட்டும் நிறைவேத்தி வச்சிரு ராசா… அதை பாத்துட்டா நிம்மதியா கண்ணை மூடிருவேன்… இல்லேன்னா இந்த கட்ட வேகாது…”


தழுதழுத்த குரலில் பேசியவர் அழவும் தொடங்கியிருந்தார். அனைவருக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நெஞ்சம் பதைபதைக்க சற்றுத் தள்ளி நின்றிருந்த பூச்செண்டின் முகம் பார்த்தான் முகிலன்… அவளோ பாறை போன்ற இறுகிய முகத்துடன் கண்களை நிலத்தில் பதித்திருந்தாள். சட்டென திரும்பி தரணியின் முகம் பார்த்தான். நான் என்ன செய்வேன் என்ற பரிதவிப்பு முகிலனின் கண்களில் தெரிந்தது… தரணியோ கீழுதட்டை அழுந்த கடித்தபடி நிர்மலமான முகத்துடன் முகிலனை எதிர்கொண்டான்.


“அத்தை நீங்க வெசனப்படுற அளவுக்கு உங்களுக்கு ஒன்…” மாணிக்கவேல் பேச்சை தொடங்கியபோதே வேகமாய் இடைமறித்தார் பாட்டி.


“இல்லேங்க… எனக்கு நம்பிக்கை இல்ல… நான் இனி பொழைக்க மாட்டேன்… என் பேரன் பேத்தி கல்யாணத்தை வெரசா நடத்தி வச்சு என்னை யோகமா அனுப்பி வைக்க போறீகளா…? இல்ல வேகாத கட்டையா போடப் போறீகளா…?” பிடிவாதத்தில் பாட்டியின் நலிந்த குரல் ஓங்கிய குரலாய் மாறி இருந்தது.


“ஐயா முகிலு… உன் அப்பத்தா ஆசைய நிறைவேத்தி வச்சு சந்தோஷ முறையா எனக்கு நெய் பந்தம் புடிப்பாயா சாமி… இல்ல வெசனத்தோடவே என்னை வேக போடப் போறியா…?”


நெருப்புத் தணலில் நிற்க வைத்து சத்தியப் பிரமாணம் கேட்க இதயம் முழுக்க கண்ணாடிக் கற்களால் கீறிவிட்டதைப் போன்று வலி கொண்டான் முகிலன். முடியாத ஒன்றை செய் என்றால் என்ன செய்வது…? பாட்டி திருமண பேச்சை எடுக்கப் போகிறார் என்று பயந்து கிடந்த வேளையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து போயிருக்க இப்போதைக்கு இந்த பேச்சு இல்லை என்று ஒருவித நிம்மதியுடன் இரண்டு நாட்களாகத்தான் நிம்மதியாகவே சுவாசிக்க ஆரம்பித்தான். பூச்செண்டையும் எப்படியேனும் சமாதானம் செய்து மீராவிடம் வீடியோ காலில் பேசவைக்கலாம் என்று ஏதேதோ எண்ணத்தில் இருந்தான். ஆனால் பாட்டி அவனை கத்தி முனையில் நிற்க வைப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை. 


தனது இறுதி ஆசையை யாசகமாய் கேட்டு உயிரை இழுத்து பிடித்துக் கொண்டிருக்கும் பாட்டியிடம் தன் மனநிலையை விளக்க முடியாத பரிதாபமான சூழ்நிலையில் இருந்தான். மூளை செயல்பட மறுத்து உறைந்து போய் இருந்தது. தரணியும் இப்படி ஒரு சூழலை முகிலன் எதிர்கொள்வான் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை. மீரா விஷயத்தை பேச ஆரம்பித்து ஏதேனும் எதிர்வினையான விளைவு ஏற்பட்டுப் போனால் என்ன செய்வது என்றுதான் அவனும் யோசனையில் இருந்தான். ஆளாளுக்கு ஒவ்வொரு சிந்தனையிலும் குழப்பத்திலும் இருக்க பாட்டியின் பிடிவாதமும் அழுகையும் ஆசையும் ஒரு கட்டத்தில் பெரியவர்களை தலையசைக்க வைத்தது.


இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களிடம் சம்மதம் கேட்க வேண்டும் என்ற எண்ணமே எழாமல் போனது. ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் வீட்டின் மூத்த பெண்மணியின் நியாயமான இறுதி ஆசைதானே என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள மடமடவென திருமண வேலைகள் ஆரம்பமாகின. வார்த்தைகளை மறந்தவளாய்… உற்சாகமும் சிரிப்பும் வளவளத்த பேச்சும் முற்றிலும் துறந்தவளாய் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் பூச்செண்டு. 


தரணியை கட்டிக்கொண்டு கதறி அழுதான் முகிலன். பாட்டி ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்தால் தானே பக்குவமாக அனைத்தையும் தெளிவாய் விளக்கலாம் என்று எண்ணியிருந்தான் தரணி. ஆனால் மீரா முகிலன் காதல் விஷயமே அவரை கொல்லும் நிலைக்கு ஆளாக்கி விடுமோ என்று அஞ்சியே வாயை இறுக பூட்டிக் கொண்டான்… மொத்தமாய் கையறுநிலை.


“முகில்… எல்லாமே கைமீறி போயிருச்சுடா… இனி நாம பண்றதுக்கு எதுவுமே இல்ல… மீரா படிச்ச பொண்ணு… அவ எல்லாத்தையும் புரிஞ்சுக்குவா… நான் அவகிட்ட பேசுறேன்… நீ இந்த கல்யாணத்தை ஏத்துக்கிறதை தவிர வேற வழி இல்ல… காலப்போக்கில எல்லாமே மாறும்… இனி பூச்செண்டுதான் உன்னோட வாழ்க்கை… அதை ஏத்துக்க தயாராயிடு…”


விடிந்தால் திருமணம் என்னும் நிலையில் தரணியின் வார்த்தைகளும் மொத்தமாய் உருக்குலைக்க உடைந்த சிதிலமாய் சலனமற்று அமர்ந்திருந்தான் முகிலன்.


(தொடரும்)


Leave a comment


Comments


Related Post