இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -11 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 06-03-2024

Total Views: 32939


பந்தை எடுத்துக் கொண்டு வந்தவர்கள் வந்ததும் "எங்கடா பூனை?"  என்றான் யுகி.

"அவ பந்து வந்த ஸ்பீடைப் பார்த்து பயந்து வீட்டுக்கு ஓடிட்டா" என்றவன் "நீ பாலைப் போடு" என்றான்.

"இவன் தான் புள்ளைய மிரட்டி இருப்பான்" என முனைவிக் கொண்டே பந்தை வீசினான் யுகி,

வளவனுக்கு  நந்தன் மேல் இருக்கும் வெறுப்பு, பயம், கோவம் இதெல்லாம் யுகிக்கு இருந்ததில்லை அண்ணனும் தம்பியும் சரமாரியாக அடித்துக் கொள்வார்கள்.

அன்று நிலா போனப் பின்பு அரைமணி நேரம் விளையாடி இருப்பார்கள். ராஜி வந்து சாப்பிட அழைக்கவும் விளையாட்டு அத்தோடு முடிந்தது.

சாப்பிட்டு வந்ததும் மணிமேகலை அவருடன் வேலை செய்யும் ஆசிரியர் வீட்டிற்கு ஏதோ பொருளைக் கொடுக்கச் சொல்லி யுகியை அனுப்பி வைத்தார்.

"அம்மா நான் மட்டும் தனியா போகணுமா?" என்று சிணுங்கியவனை வளவனையும் உடன் அழைத்துச் செல்ல சொல்லிவிட்டார்.

"வளவா கொஞ்சம் என்னோட வறியா பெரியப்பட்டி வரைக்கும் போகனும் போய்ட்டு வருவோம்"

"ம்ம் சரி வரேன் இரு" என்றவன் அவனது சைக்கிளை எடுத்து வர இருவரும் சேர்ந்து அங்கு சென்றுவிட்டனர்.

உடன் விளையாண்டவர்களும் அங்கு இல்லாததால் தன்னுடைய கிரிக்கெட் மட்டையையும்,பந்தையும் எடுத்து வந்து நிலாவின் வீட்டின் முன் நின்றான் நந்தன்.

அவ்வளவு எளிதில் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட மாட்டான், இன்று என்ன நினைத்தானோ, "வியா" என்று கத்தினான்.

அவன் மட்டும் தான் அவளை அப்படி அழைப்பான், "இது என்ன? வியா ஆயான்னு கூப்பிட்டுட்டு வாய் நிறைய நிலான்னு கூப்பிடவேண்டியது தானே" என கிருஷ்ணம்மாளே சொல்லிருக்கிறார், இருந்தாலும் அவன் மாற்றிக் கொண்டது இல்லை.

சத்தம் கேட்டதும் உள்ளே இருந்து வந்தாள், ராஜிக்கு இன்று தான் வேலைக்கு விடுமுறை என்பதால் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.

நந்தன் அழைக்கிறான் என்றாலே நிலாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்துவிடும்.

அண்ணா என்று கூட அழைக்க மாட்டாள்.ஒருதடவை அண்ணா என்று அழைத்து அதற்கும் அடி வாங்கியிருக்கிறாள்

என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வாங்க போங்க என்பதோடு நிறுத்திக் கொள்வாள்.

பத்து வயது பெண்ணுக்கு அந்த அளவிற்கு அறிவு இருந்தது. வளவனைப் பார்த்து வளர்வதால் அவனுடைய சுயமரியாதை அவளுக்கும் கடத்தப்பட்டிருந்தது.

"சொல்லுங்கண்ணா ஹா சாரி சொல்லுங்க." இதை சொல்லும் போதே குரல் நடுங்கியது 

"வந்து பால் போடு."

"என்னது நானா?"

"நீதானே விளையாடணும்னு ஆசைப்பட்ட வா."

"இல்லை அண்ணா வெளிய போயிருக்கான் வந்ததும் விளையாடலாம்"'என நடுங்கியவாறே சொன்னாள்.

அவளது நடுக்கம் நந்தனுக்குள் ஆனந்தமாக இருந்தது.

"அவன்ங்க வர நேரமாகும் நீ வா."

"எனக்கு போடத் தெரியாது" என கையைப் பிசைய, 

"அதெல்லாம் கத்துக்கலாம், வான்னு சொன்னேன்" என குரல் கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக இதற்கு மேல் மறுத்தால் இந்த கொடுரூற மிருகம் தன்னை தாக்கிவிடும் என்று பயந்து வாங்க கையை நீட்டினாள்.

அவள் தோல்வியில் இவன் கண்கள் மின்னியது.

பந்தை வீசத் தெரியாத பிஞ்சை படுத்தி எடுத்துவிட்டான்.

"பால் அங்க போய்டுச்சே"

"போய் எடுத்துட்டு வா"

"அங்க பூச்சிலா இருக்கும்ன்னு அம்மா சொல்லிருக்காங்க"

"அப்போ என்னையக் கடிச்சா பரவாயில்லையா?"

"ரெண்டுப் பேரும் போக வேண்டாமே" என வேகமாக அவளிடம் இருந்து வந்தது வார்த்தைகள்

"வா ரெண்டுபேரும் போவோம்" என மட்டையால் பின்னாடி ஒரு அடி வைத்தான்.

எதற்கு அடிக்கிறான் என்றே தெரியவில்லை.

அழுதுக் கொண்டு நந்தன் கூடச் செல்ல, புதருக்கு உள்ள கிடந்த பந்தை எடுத்தவன் ஐயோ எதோ கடிச்சிருச்சி என்று கையை உதறினான்.

சிணுங்கலாக அழுதுக் கொண்டிருந்தவள் கத்தி அழுக ஆரம்பித்து விட்டாள்.

"வாங்க அத்தைகிட்ட சொல்லி ஆஸ்பத்திரி போவோம் வாங்க" என நந்தன் கையைப் பிடித்து இழுத்து வேகமாக அழ,அதைப் பார்த்து நந்தன் விழுந்து விழுந்து சிரித்தான்.

ஒருவரின் அழுகையில் சிரிப்பவனை எதில் சேர்ப்பது என்று புரியாமல் அந்த பிஞ்சு பாவமாக பார்த்து வைத்தது.

"ஏன் சிரிக்கிறிங்க அப்போ எதும் கடிக்கலையா?"

"இல்லை.." என்றவனின் பார்வை நிலா பிடித்து இருந்த கைக்குப் போக, அவன் பார்வை போன திசையைப் பார்த்ததும் பட்டென்று கையை எடுத்துவிட்டாள்.

அந்த நிமிடம் அவள் கற்ற பாடம் இவனிடம் தனியாக மட்டும் சிக்கிடக்கூடாது என்பது தான்.

அதன்பிறகு நந்தனைக் கண்டாலே தலைத் தெறிக்க ஓடிவிடுவாள். சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காது என்பது போல்.

நாட்கள் வேகமாக ஓடியது. மார்த்தாண்டத்தின் தொழிலில் நல்ல முன்னேற்றம்.அவர்களின்  இரண்டு ஏக்கர் நிலம் ஒன்றில் பைபாஸ் சாலை வருகிறது என அதற்கு பாதியை எடுத்துக் கொண்டனர் அதற்கு  கேஸ் போட்டிருந்தார் மார்த்தாண்டம் அதுவும் இவர்களுக்கு சாதகமாக வந்துவிட அதில் வந்த பணமும் கையில் இருக்க 

 இருக்கும் பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டலாம் என முடிவு செய்தனர்.

ராஜி சிட்டால் வேலைக்குச் செல்வதால் அவர் மூலம் மேஸ்திரியிடம் பேசிவிட்டனர்.,

அந்த தெருவில்லையே வீடு அமைந்தால் தான் கட்டும் வீட்டைப் பார்த்துக் கொள்ள முடியும் என வீட்டை தேட.. மார்த்தாண்டத்துடன் படித்த ராஜாராம் என்றவரின் கூரை வீடு ஒன்று கிடைத்தது.

அதில் ஏழுப் பேர் வரிசையாக படுத்து உறங்க தான் சரியாக இருக்கும் இவர்களின் பொருட்களை வைக்க இடம் போதாது என்ற நிலை உருவாக 

உடனே மார்த்தாண்டம் அதிகம் யோசிக்காமல், அதிகம் தேவைப்படாதப் பொருட்கள்.
ஆடம்பரப் பொருட்கள், சோபா ஒரு பீரோ, பிரிட்ஜ், அனைத்தும் அருகில் இருந்த அக்கம் பக்கத்து வீட்டில் வைத்து விட்டார்.

இவர்களுக்கு தேவையான ஒரு பீரோ, கட்டில், படுக்கை, டிவி இதர பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டனர்.

இந்த அளவிற்கு எளிமை வரும் என பிள்ளைகள் நினைத்தில்லை இதற்கும் பழகட்டும்  என மணிமேகலையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"அம்மா இவங்க வீடு கட்ட நம்ப எதுக்கும்மா மண்ணு சுமக்கணும், நீ பண்றதுலா ரொம்ப ஓவரா இருக்கும்மா"  என்று ராஜியிடம் கத்திக் கொண்டிருந்தான் வளவன்.

ஆமாம், வீட்டிற்கு வாணி பறித்து கடைக்கால் கட்டி விட்டனர். அந்த குழியை நிரப்ப மண் போட வேண்டும் அல்லவா?,  அதை தான் ஒரு ஞாயிறு அன்று அனைவரும் சேர்ந்து செய்வோம் என ராஜி குடும்பத்தையும் விடாமல் கிருஷ்ணம்மாள் அழைத்திருந்தார்.

ராஜியால் முடியாது என மறுக்க முடியவில்லை, அன்று ஒருநாள் தான் தனக்கு வளவனுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும், அதிலும் வேலை வாங்கினால் எப்படி என்று தோன்றாமல் இல்லை. ஆனால் அவர்களைப் பகைத்துக் கொண்டு இங்கு வாழ்வது என்பதே அரிது என்று தான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டுப் போனார்.

அவர் அடிமையாக இருக்கலாம் எதற்காக பிள்ளைகளும் அடிமையாக இருக்க வேண்டும் வளர்ந்து வரும் பிள்ளைகளும் அவர்களை சுற்றி இருக்கும் சமூகமும் தான் ஒரு குழந்தை எப்படி உருவாக வேண்டும் என முடிவு எடுக்கிறது.

ஒருத்தர் சொல்வதற்கு எல்லாம் சரி சரி என தலையை ஆட்டிக் கொண்டிருந்தால் அவர்கள் கொட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். அது தெரியாமல் ராஜி கொட்ட கொட்ட குனிந்துக் கொண்டே இருந்தார்.அதனால் அவர் பிள்ளைகளும் குனிய வேண்டிய சூழ்நிலை உருவானது.

வேறு வழியில்லாமல் ராஜி தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மண் அள்ள சென்றனர்.

மிகப்பெரிய வீட்டிற்கு அஸ்திவாரம் போட்டிருந்தனர். மிகப்பெரிய ஹால், மூன்று படுக்கை அறை, சமையலறை, டைனிங்ஹால் மூன்று குளியலறை என மிகப்பெரிய வீடு.

அந்த ஊரிலையே இப்போது வரைக்கும் அவர்கள் கட்டும் வீடு தான் மிகப்பெரிய வீடு, அந்த வீட்டைச் சுற்றி எல்லாம் கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளுமாக இருந்தது.

டிவி பார்க்க வேண்டும் என யுகியும் ஷாலினியும் மண் அள்ள வரவில்லை,

ராஜி புள்ளைங்களை அங்க விட்டு இந்தப் பக்கம் வா என மார்த்தாண்டம் கத்த, ராஜி ஒருபக்கம் சென்று விட்டார்.

வளவன், நந்தன்,நிலா கிருஷ்ணம்மாள் ஆகியோர் வீட்டின் ஒருப்பக்கமும் மணிமேகலை மார்த்தாண்டம், ராஜி மூவரும் மற்றொரு பக்கமும் இருந்து மண்ணை அள்ளி குழியை நிறைத்தனர்.

பதினொரு வயது பிள்ளையின் தலையில் ஒரு காரைசட்டி மண்ணைத் தூக்கி தலையில் வைத்தார் கிருஷ்ணம்மாள் அதில் நிலாவின் கழுத்து பரதம் ஆடியது.

"முடியலைன்னா கீழேப் போட்டுட்டு அம்மு, எதுக்கு அவ்வளவு தூக்கி வைக்கறீங்க ஆயா அவ சின்ன பொண்ணு இவ்வளவு தூக்க முடியுமா?! என்ற சண்டைக்குப் போய்விட்டான் வளவன் நிலாவின் நிலையைப் பார்த்ததும் கோவம்  பட்டென்று வந்துவிட்டது.

"என்னடா குரல் ஒசறது?"

"ஒசறாம என்ன பண்ணும்? சின்ன புள்ளைக்கு எவ்வளவு அள்ளி குடுக்கணும்ன்னு கூட தெரியாதா உங்களுக்கு.?"

"உன் தங்கச்சி மட்டும் தான் பெருசா செய்யறாளா? ஏன் என் பேரன் பேத்திங்க  பண்றதுலாப் பார்த்தா வேலை மாதிரி தெரியலையா உனக்கு?.

"அவங்க வீட்டுக்கு அவங்க பண்றாங்க நாங்க எதுக்கு பண்ணனும்?" என பட்டென்று கேட்டுவிட்டான்.

"டேய் என்னடா ஆயாவ எதிர்த்து பேசற?" என நந்தன் சண்டைக்கு வர.

"இங்க பாருங்க நந்தன் பாப்பாவால இவ்வளவு மண்ணையெல்லாம் தூக்க முடியாது, அவ வேண்டாம்னு சொன்னாலும் ஆயா கேக்க மாட்டிக்கிறாங்க, இவ்வளவு தூக்கி விட்டா அப்புறம் நாங்க செய்ய மாட்டோம் சொல்லிட்டேன்" என்றவன் அவனது மண்ணையும் நிலாவின் மண்ணையும் கீழே தள்ளி கொட்டிவிட்டான்.

வரும்போதே கோபத்துடன் வந்தவனுக்கு, இங்கு அவர்கள் நடத்தும் விதம் மேலும் கோபத்தைக் கொடுக்க என்றும் இல்லாமல் இன்று வளவன் ஆடி தீர்த்துவிட்டான்.

நந்தன் எதுமே பேசாமல் நிலாவைப் பார்க்க,அவளுக்குள் பயம் ஊற்று எடுத்தது

"அங்க என்ன பார்க்கறீங்க நான் சொன்னதுல என்ன தப்பு?" என்றவன் "உங்க வீட்டுக்கு நீங்க அள்ளிக் கொட்டுங்க எங்களால முடியாது" என நிலாவின் கையைப் பிடித்து "வா அம்மு போலாம்" என அழைத்துச் சென்று விட்டான்.

அவன் போனதும் நந்தன் ஏதோ வேலை இருக்கிறது என கிளம்பிவிட ரணகளம் பண்ணிவிட்டார் கிருஷ்ணம்மாள்.

"என்ன பையனை வளர்த்து வெச்சிக்க பெரியவீங்கன்னு கொஞ்சம் கூட மட்டு மறுவாதி இல்லாம பேசறான். கொஞ்சம் சேர்த்து மண்ணு அள்ளிக் குடுத்துட்டேன்னு இந்த ஆட்டம் ஆடிட்டு போறான்.இவ்வளவு வேண்டான்னு சொன்னா நான் என்ன வேணும்னே தூக்கி வைக்கப் போறனா?" என்றார் கோவமாக.

ராஜிக்கு தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை மகன் பக்கம் தான் நியாயம் இருக்கும் என யாரும் சொல்லி தெரிய தேவையில்லை அவருக்கே தெரியும், அதை எப்படி சொல்வது என கையை பிசைந்துக் கொண்டு நின்றார்


Leave a comment


Comments


Related Post