இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 07-03-2024

Total Views: 39413

பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீரான வேகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தது அந்த கார். முகத்தில் அறைந்து செல்லும் காற்றின் ஓசையைத் தவிர வேறு எந்த சத்தமும் இல்லை. முழுக்க முழுக்க அசாத்திய நிசப்தம். காரில் பயணித்துக் கொண்டிருந்த மூவரின் முகங்களிலும் இறுக்கம். ஓட்டுநர் இருக்கையில் தரணிதரன்… அருகில் முகிலன்… பின் இருக்கையில் கழுத்தில் தொங்கிய புத்தம்புது மஞ்சள் தாலியும் நெற்றி வகிட்டில் குங்குமமும் கைநிறைய கண்ணாடி வளையல்களுமாய் புதுமணப் பெண்ணிற்கே உரித்தான அம்சங்கள் நிறைந்திருந்தாலும் முகத்தில் துளியும் மகிழ்ச்சி இல்லாதவளாக பூச்செண்டு. கலங்கும் கண்களை அடிக்கடி துடைத்துக்கொண்டாள். அவளது கலக்கத்தை முகிலனும் தரணியும் கவனித்தபடிதான் வந்தனர். அவர்களும் மகிழ்ச்சியை தொலைத்தவர்களாகத்தானே பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பயணம் எப்போது முடியும்…? இந்த இறுக்கம் எப்போது தளரும்…? என்னும் நிலையில் மூவரும்.


“கொஞ்ச நேரம் நான் ட்ரைவ் பண்றேன்டா… நீ மாறி உட்காரு…” சூழ்நிலையை சிறிதாவது மாற்றினால்தான் சீரான சுவாசமே வரும் என்று தோன்றியது முகிலனுக்கு. 


வேண்டாம் என்று தலையை மட்டும் ஆட்டி பயணத்தை தொடர்ந்தபடி இருந்தான் தரணிதரன். மாலை வேளையில் பெங்களூருவின் தனித்துவமான சீதோசன வரவேற்புடன் தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி அப்பார்ட்மெண்டிற்குள் காரை நுழைத்து நிறுத்தி இருந்தான் தரணி.


இரண்டு பெட் ரூம் வசதி கொண்ட ஃபிளாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒன்றாகவே வசிக்கின்றனர் இருவரும். கார் டிக்கியில் இருந்து இரண்டு பெரிய சூட்கேஸ்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர். அவர்கள் முன்னால் செல்ல அமைதியாக அவர்களை பின்தொடர்ந்தாள் பூச்செண்டு. மின்தூக்கியின் வழியே நான்காவது தளத்தை அடைந்து தங்களது ஃபிளாட்டை நோக்கி நடந்தனர்.


சூட்கேஸை இறக்கி வைத்த தரணி சாவி கொண்டு வீட்டை திறக்க “அடடே… தம்பிங்க வந்தாச்சா…?” குரல் வந்த திசையில் மூவரும் திரும்பினர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த நடுத்தர வயது தம்பதியர் சிரித்த முகங்களாய் நின்றிருந்தனர். தரணியும் முகிலனும் வலிய புன்னகைக்க கண்கள் தாழ்ந்தபடி அமைதியாக நிற்கும் பூச்செண்டை அழுத்தமாய் ஆராய்ந்தனர் இருவரும்.


“நீங்க மட்டும்தான் வந்தீங்களா தம்பி… பெரியவங்க யாரும் வரலையா…?” அந்த பெண் கேட்க “அடுத்த வாரம் வருவாங்க…” அதிராமல் பதில் அளித்தான் முகிலன்.


“கல்யாணம் முடிஞ்சு புதுமணத் தம்பதிகளா வந்திருக்கீங்க… அப்படியே உள்ளே போயிடாதீங்க… ஆரத்தி எடுத்துட்டு போகலாம்…” உரிமையாய் கூறிய அந்த பெண்மணி “ஒரு நிமிஷம் இருங்க… வந்துடறேன்…” என்று கூறி வேகமாய் தனது வீட்டிற்குள் நுழைந்து அரை நிமிடத்தில் கையில் ஆரத்தி தட்டுடன் வந்திருந்தார்.


ஆளுக்கு ஒரு திசையில் தள்ளி தள்ளி நிற்க “புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நில்லுங்க…” சிரிப்பு மாறாமல் கூற ஒருவித தயக்கத்திற்குப் பின் இணைந்து நின்றனர் இருவரும். ஆரத்தி சுற்றி நெற்றியில் திலகம் இட்டு விலகி நின்றவர் “தம்பி… உங்க மனைவி கைப்பிடிச்சு வலது காலை எடுத்து வச்சு ரெண்டு பேரும் உள்ளே போங்க…” சம்பிரதாயமும் அக்கறையுமாய் கூறினார்.


அதன்படி பூச்செண்டின் கைப்பிடித்து வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான் தரணிதரன். அவளும் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைய வெளியில் இருந்த சூட்கேஸ் இரண்டையும் இரு கைகளில் தூக்கியபடி அவர்களை பின்தொடர்ந்து நுழைந்தான் முகிலன். தன் கை பிடித்திருந்தவனிடம் இருந்து விரல்களை விலக்கிக் கொண்டு மெல்ல நடையிட்டு ஜன்னலின் அருகே சென்று நின்று தொலைவை வெறிக்கத் தொடங்கினாள் பூச்செண்டு. அவளை அழுத்தமாய் பார்த்திருந்த தரணியில் தோளில் கை வைத்தான் முகிலன்.


“மீரா வந்துட்டு இருக்காடா… நம்ம மூணு பேருக்கும் சமையல் பண்ணி எடுத்துட்டு வர்றா…” மெல்லிய குரலில் கூற “ம்ம்…” ஒற்றை பதிலுடன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் தரணி. ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி வெறுமனே கண்களை வெளியில் ஓட்டியபடி இருந்த பூச்செண்டின் அருகில் நெருங்கினான் முகிலன். 


“அ..அம்மு…” அவள் தலை வருட விரல்களை நீட்ட வேகமாய் தலையை பின்னால் நகர்த்திக் கொண்டவள் “நான் எங்கே தங்கணும்…?” சுவற்றைப் பார்த்தபடி கடுகடுப்புடன் கேட்டாள்.


இடது பக்க அறையை கைகாட்டியவன் “அதுதான் தரணியோட ரூம்… நீயும் அங்கேயே தங்…” மீதி வார்த்தைகளை கேட்க அவள் அங்கு நிற்கவில்லை. அவன் கைகாட்டிய அறைக்கு நேர் எதிர் அறைக்குள் நுழைந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்த முகிலனின் பொருட்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்தன. 


குளித்து முடித்து டி-ஷர்ட் ட்ராக் பேண்ட்டுடன் வெளியே வந்த தரணி சில நொடிகளில் நிலவரம் புரிந்து கொண்டவனாய் அமைதியாய் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான். தனது சூட்கேஸை நகர்த்தியபடி அறைக்குள் நுழைந்தவள் கதவை தாழிட்டுக் கொள்ள இடுப்பில் கைவைத்து உதடு குவித்து மூச்சுவிட்ட முகிலன் தானும் தரணியின் அருகில் சென்று அமர்ந்தான்.


“என்னடா… வந்து உக்காந்துட்ட… உன் திங்ஸை எல்லாம் எடுத்துட்டுப் போய் என் ரூம்லயே வை… இனி நீயும் நானும் ஒரே ரூம்தான்…” டிவியை ஆன் செய்து சேனலை மாற்றியபடியே கூறினான் தரணி.


“அ..அவ சங்கடம் தீர்ற வரைக்கும் அந்த ரூம்ல இருக்கட்டும்டா… அ..அப்புறம் உன் ரூமுக்கு ஷிப்ட் ஆயிடுவா…” ஆதரவாய் தரணியில் கையை பற்றிய முகிலனை திரும்பி துளைக்கும் பார்வை பார்த்தான் தரணி.


“எ..எதுக்குடா அ..அப்படி பார்க்கிற…?” ஒருவித சங்கடத்துடன் நெளிந்தான் முகிலன்.


“அவளோட சங்கடம் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் தீராது… அந்த மாதிரி நீயோ நானோ நடந்துக்கல… அவளை சமாதானப்படுத்துற முயற்சியில இறங்கி செருப்படி வாங்கிடாதே… அவளை அவ போக்குல விட்டுடு… அவ மனசுக்குள்ள ஆயிரம் கொந்தளிப்பு இருக்கு… அதெல்லாம் எப்போ குறையுமோ தெரியாது‌… என் மனைவிங்கிற உரிமையோட நான் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… இந்த வீட்ல அவ சந்தோசமா சுதந்திரமா இருக்கணும்… அதுக்கு என்ன பண்ண முடியுமோ அதை நாம பண்ணுவோம்…” தெளிவாக பேசிய தன் ஆருயிர் நண்பனை ஆரத்தழுவிக் கொண்டான் முகிலன்.


“தரணி… You are such a great man…உயிர் காப்பான் தோழன்னு சொல்லுவாங்க… அது உனக்குதான்டா பொருந்தும்… எனக்காக நீ எவ்வளவு பெரிய வேலை பண்ணியிருக்க… யாருக்குடா இப்படி ஒரு மனசு வரும்…? என் உயிர் உள்ளவரைக்கும் நான் உனக்கு கடமைப்பட்டு இருக்கேன்டா… இன்னைக்கு வேணா பூச்செண்டு மனசுல வருத்தம் இருக்கலாம்… ஆனா சீக்கிரமே மனசு மாறி உன்னை மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதை நினைச்சு மனசார சந்தோஷப்பட போறா பாரு…” உணர்ச்சிப் பெருக்காய் பேசியவனை புன்னகையுடன் பார்த்தான் தரணி.


“ரொம்ப பொங்காதடா… ஏற்கனவே நிறைய பொங்கிட்ட… விடு… மீரா வர்றாளா லேட் ஆகுமான்னு கேளு‌… வர்ற வழியில கூட எதுவுமே வேணாம்னு அடமா வந்துட்டா… கண்டிப்பா பசியோட இருப்பா… இல்லைன்னா நானாவது போய் கடையில் ஏதாவது வாங்கிட்டு வரேன்…”


“உங்க சம்சாரம் பட்டினியா இருக்குறதுல அவ்வளவு சங்கடமாண்ணா… இதோ வந்துட்டேனே…” குதூகலமாய் ஒரு குரல் பின்னால் ஒலிக்க இருவருமே திரும்பினர்.


ஒடிசலான தேகத்துடன் நல்ல சிவந்த நிறத்தில் களை பொருந்திய அழகான முகத்துடன் கையில் ஒரு பெரிய கூடையுடன் நின்றிருந்தாள் மீரா. அவளை பார்த்த நொடியில் முகிலனின் கண்களில் பரவசம்… அதனை கவனித்தவள் தானும் அவனை ஒரு பார்வை பார்த்து வெட்கச் சிரிப்புடன் உணவுக் கூடையை எடுத்துச் சென்று டைனிங் டேபிளில் வைத்தாள்.


“முகில்… பொக்கே எங்கே…? நான் பார்க்கணும்…” தன் கண்களை சுழற்றினாள்.


“அவளை பொக்கேன்னு கூப்பிட்டு வச்சிடாத… தரணி ஒரு தடவை கூப்பிட்டு நங்கு நங்குன்னு கொட்டு வாங்கி இருக்கான்… அவ பேரை முழுசா சொல்லிக் கூப்பிடு… நடந்தது எல்லாம் உனக்கு தெரியும்… அவளைப் பத்தி உன்கிட்ட நிறைய சொல்லி இருக்கேன்… இப்போதைக்கு நீதான் அவளை கேரிங்கா பார்த்துக்கணும்… எங்க ரெண்டு பேர் மேலயும் பயங்கரமான கோவத்துல இருக்கா… அவ ஏதாவது உன்கிட்ட கோபமா நடந்துக்கிட்டாலும் எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி… போகப் போக சரியாயிடுவா…” கெஞ்சும் குரலில் கூறி அவளது விரல்களை அழுத்தமாய் பற்றிக் கொண்டான் முகிலன்.


அழகாய் புன்னகைத்து அவன் கன்னத்தை இதமாய் வருடியவள் “கவலைப்படாதீங்க… அவ இனிமே என்னோட தங்கச்சி… ஒரு பொண்ணா அவளோட மனநிலையை என்னால நல்லா புரிஞ்சுக்க முடியும்… நிச்சயமா அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் முகில்… அவகிட்ட பேசி அவ மனசை மாத்த முயற்சி பண்றேன்… தரணி அண்ணா கூட நெருங்கி பழக ஆரம்பிச்சா அவருடைய குணமும் புரியும்… அவ சீக்கிரமே சகஜம் ஆயிடுவா… அதுக்கப்புறம்தானே நாம நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்… எல்லாம் சரியாயிடும்…” ‌ ஆறுதல் வார்த்தைகள் கூறியவளை ஆசையாய் இடுப்போடு வளைத்து அவள் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டான் முகிலன்.


ம்க்கும்… தரணியின் தொண்டை செருமும் சத்தத்தில் இருவரும் விலகிக் கொள்ள “இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குதாடா… போய் பூச்செண்டை சாப்பிட வரச் சொல்லு…” சொன்னபடியே டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் தரணி.


“நானா…? என் மேலதான் ஏகப்பட்ட வெறியில இருக்கா… உன் பொண்டாட்டிதானே… நீயே போய் கூப்பிடலாமே…” நழுவப் பார்த்தவனை தீயாய் முறைத்தான் தரணி.


“கோபமாவாவது உன்கூட பேசுவா… என்கிட்ட அதுவும் பண்ண மாட்டா… முகத்தை திருப்பிட்டு போயிடுவா… நீயே போய் கூட்டிட்டு வா…”


இருவரும் மாறி மாறி நீ நீ என்று கூறிக் கொண்டிருக்க “யாரும் போக வேணாம்… நானே போய் கூட்டிட்டு வரேன்…” என்ற மீரா பூட்டி இருந்த அறை கதவை தட்டினாள். சிறிது நேரம் காத்திருக்க வைத்துதான் கதவை திறந்தாள் பூச்செண்டு. சிரித்த முகமாய் எதிரில் நிற்பவளை தலை முதல் கால் வரை ஆராய்ச்சியாய் பார்த்தாள்.


“ஹாய் பூச்செண்டு… நான்தான் மீரா….” சினேகச் சிரிப்புடன் அவள் கூற அடுத்த நொடி பூச்செண்டின் முகத்தில் பல்வேறு மாற்றங்கள்… ஏதேதோ உணர்வுப் போராட்டங்கள்… கீழ் உதட்டை அழுந்த கடித்தபடி தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி நின்றவளின் மன ஓட்டங்களை புரிந்து கொண்டாள் மீரா. மெல்ல நெருங்கி ஆதரவாய் அவள் தோள்பற்றிக் கொண்டாள்.


“உன் வாழ்க்கை மாற்றம் அடைஞ்சதுக்கு நான் காரணமானதை நினைக்கும்போது வருத்தமாதான் இருக்கு… ஆனா அதைவிட சந்தோசம் அதிகமா இருக்கு… ஏன் தெரியுமா…? என் முகில் எனக்கே கிடைச்சுட்டார்ங்கிற சந்தோஷம் இல்ல… தரணி அண்ணா உன்னோட கணவனா மாறி இருக்காரே அதை நினைச்சு… நாலு வருஷமா அவரை எனக்கு தெரியும்… ஒரு நல்ல வாழ்க்கை துணை உனக்கு கிடைச்சிருக்கு பூச்செண்டு… அதை நீயே சீக்கிரம் உணருவ… சாப்பிடாமலே டிராவல் பண்ணி வந்தியாம்… உனக்கு என்ன பிடிக்கும்னு முகில்கிட்ட கேட்டு அதைத்தான் எனக்கு தெரிஞ்ச வரையில சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்… வா… சாப்பிடலாம்…”


பல நாட்கள் பழகியவள் போல் எதார்த்தமாய் உரிமையாய் பேசி அவள் கையைப் பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு உணவு மேஜையை நோக்கி நடந்தாள் மீரா. தரணியும் முகிலனும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிர் இருக்கையில் பூச்செண்டை அமர வைத்தாள்.


“மீரா… அவளை இங்கே உட்கார வை… நான் எழுந்துக்கிறேன்…” என்றபடியே தனது இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட முகிலனை பூச்செண்டு பார்த்த பார்வையில் எச்சில் விழுங்கியபடி மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டான் முகிலன். 


இந்த செருப்படி உனக்கு தேவையா என்பதுபோல் தரணி அவனை திரும்பி பார்க்க… ஹிஹி… ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து மீராவின் முறைப்பையும் வாங்கிக் கொண்டான். அனைவருக்கும் மீரா பரிமாறினாள். அவளிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் உதாசீனமாகவோ கோபமாகவோ நடந்து கொள்ளவில்லை பூச்செண்டு. அந்த வகையில் அனைவருக்கும் நிம்மதிதான். அவள் பரிமாறிய உணவையும் ஆட்சேபணை இன்றி அமைதியாக உண்டு முடித்து மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


“மீரா… நீயும் சாப்பிடு… டைமாச்சு…” கை கழுவியபடியே கூறினான் தரணி.


“நான் கிளம்பும்போதே சாப்பிட்டுதான் வந்தேண்ணா…” உண்டு முடித்த பாத்திரங்களை ஒதுங்க வைத்தபடியே பதில் அளித்தாள்.


“ஆட்டோலயா வந்த…?”


“ஆமாண்ணா…”


“கேப் புக் பண்ணி வந்திருக்கலாமே…” என்றவன் கையை திருப்பி நேரம் பார்த்தான்.


“நீ தனியா போக வேண்டாம்… லேட் ஆயிடுச்சு… முகில்… கார் எடுத்துட்டு போய் மீராவை டிராப் பண்ணிட்டு வந்திடு…”


“கொஞ்ச நேரம் பூச்செண்டு கூட பேசிட்டு போறேண்ணா…”


“அவ தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்… நாளைக்கு நீ வந்து அவ கூட இரு… இப்போ கிளம்பு…” எப்பொழுதும் அவனிடம் இருந்து வெளிப்படும் அதே நிதானமும் அக்கறையும். கார் சாவியை எடுத்துக் கொண்டு மீராவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் முகிலன்.


“டேய்…” வாசல்வரை சென்றவன் தரணியின் அழைப்பில் திரும்பினான்.


“மீரா வீட்டுக்கு போக இங்கிருந்து 20 நிமிஷம்தான் ஆகும்… 40 நிமிஷத்துல நீ இங்கே இருக்கணும்… காட் இட்…” உத்தரவாய் கூறியவனை பரிதாபமாய் பார்த்தான் முகிலன்.


“பத்து நிமிஷம் கிரேஸ் டைம் கொடுக்கலாமே…” கெஞ்சலாய் கேட்டான்.


“பத்து நிமிஷம் கிடைச்சா நீ என்ன கிழிப்பேன்னு எனக்கு தெரியும்… அஞ்சு நிமிஷம் லேட்டா வந்தாலும் உன்னை செருப்பாலேயே அடிப்பேன்…” சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு ஆட்டியபடியே கூறியவனை முறைத்து பார்த்தபடி நின்றிருந்தான் முகிலன்.


“நான் உனக்கு கொடுத்த டைம் ஸ்டார்ட் ஆகி ரெண்டு நிமிஷம் ஆயிடுச்சு… இன்னும் 38 நிமிஷம்தான் டைம்…” தன் தாடையை தேய்த்தபடியே கூற “எல்லாம் என் நேரம்…” தலையில் அடித்துக் கொண்டு சிரித்தபடி அருகில் நின்றிருந்த மீராவின் கையை பற்றிக் கொண்டு வேகமாய் அங்கிருந்து வெளியேறினான் முகிலன்.


செல்பவர்களை மெலிதான புன்னகையுடன் பார்த்திருந்தவனின் முகம் அடுத்த நொடி மாறியது. இறுக்கி சாத்தப்பட்டிருந்த பூச்செண்டின் அறையில் கண் பதித்தான். அங்கேயே சில வினாடிகள் விழிகள் நிலைகுத்தி நின்றிருந்தன. எழுந்து கொண்டவன் தன் அறைக்குள் இருந்த பால்கனியில் சென்று நின்றான். இரவு நேர காற்று இதயத்திற்கு இதம் சேர்ப்பதாய் முகத்தை வருடிக் கொடுத்தது.


கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டில் நுழைத்து தலையை சற்று அண்ணாந்த நிலையில் கண்மூடி நின்றான். பதினைந்தே நாட்களில் அவனது வாழ்க்கையில்தான் எத்தனை மாற்றங்கள்…? நினைத்துக்கூட பார்க்காத நிகழ்வுகள்… மனம் அன்றைய நாளை நோக்கி ஓடியது.


(தொடரும்)



Leave a comment


Comments


Related Post