இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 07-03-2024

Total Views: 28893

செந்தூரா 2


ஆக்ரோ டெக்னாலஜி இன்டஸ்ட்ரி ஒரு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறை. 


கடல் போன்ற பெரிய பரப்பளவில் வானளவு உயர்ந்து நின்றது அந்த மிகப்பெரிய கட்டிடம். அந்த கம்பெனியின் பங்குதாரர்கள் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். அன்று நடக்க இருந்த முக்கியமான கூட்டத்திற்கு அனைத்து பங்குதாரர்களும் கட்டாயம் வரவேண்டும் என்று அழைக்கப்பட்டிருந்தார்கள்.


ஒவ்வொருவராக காரில் வந்து இறங்கி மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மித்ரன் தன்னுடைய பிரத்தேயக அறையில் அமர்ந்துக் கொண்டு தன் மடிக்கணிணியிருந்த கோப்புகளை பென்டிரைவில் சேகரித்துக் கொண்டிருந்தான்.


“எல்லாம் ரெடி தானே மித்ரன்?” என்று கேட்டபடி வந்தான் கவின்.


“ஆமாம்டா, எல்லாரும் மீட்டிங் அறைக்கு வந்து விட்டார்களா?” என்றான் மித்ரன்.


“வந்துட்டே இருக்காங்க, உன்னை நம்ம எம்டி சார்லஸ் பாண்டே தான் கூட்டிட்டு வரச் சொன்னார்” என்றவன் “மச்சான் ஆல் தி பெஸ்ட் டா, இதற்காக தானே இரவு பகல்னு பார்க்காமல் ஓயாம உழைச்சிட்டு இருந்த. உன் லட்சியம் நிச்சயம் நிறைவேறும்” என்று நண்பனின் கைகளைப் பற்றிக் குலுக்கினான் கவின்.


“தேங்க்ஸ் கவின், இந்த மீட்டிங் வெற்றிகரமாக முடிஞ்ச பின்னாடி, நான் முதலில் எங்க ஊருக்கு போகணும்டா, ஐந்து வருடமாக அவங்களை பார்க்காமல் போனில் மட்டுமே பேசிட்டு இருந்துட்டேன். மீட்டிங் முடிஞ்சதும் முதல் வேலை இந்தியா போக விசா ஏற்பாடு பண்ணி டிக்கெட் புக் பண்ணணும்டா” என்றான் மித்ரன்.


எப்போதும் பிராஜெக்ட் பற்றியே பேசுபவன் முதல் முறையாக தன் குடும்பத்தை பற்றி பேசவும் நண்பனை ஆச்சரியமாக பார்த்தான் கவின். தாய் தந்தையோடு ஒரு தங்கை இருப்பதாக சொல்லி இருக்கிறான். இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த தங்கை திருமணத்தைக் கூட ஸ்கைப் வீடியோவில் தான் பார்த்தான்.


தன் குடும்பத்தை பிரிந்து வாடுவதைப் போல அவன் எப்போதும் சொன்னதே இல்லை. வார இறுதியில் வெனிஸ் கடற்கரையில் அந்தி வானத்தை வெறிப்பதோடு சரி. 


தன்னையே ஆச்சரியமாக வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்த கவின் முகத்தருகே சொடுக்கிட்டான்.


“என்ன மச்சி நேற்று இரவு தூங்கலையா? கண்ணை திறந்து கொண்டே தூங்கிறே” என்று கண் சிமிட்டினான் மித்ரன்.


“ஐந்து வருடம் வெளிநாட்டில் இருந்துவிட்டு கட்டை பிரம்மச்சாரியாகவே தன் சொந்த ஊருக்கு போகும் ஒரே இளைஞன் நீயாகத்தான் இருப்ப மச்சி” என்றான் கவின்.


“அப்போ  நீ பிரம்மச்சாரி இல்லையாடா?” என்றான் மித்ரன் ஆராய்ச்சியாக நண்பனைப் பார்த்து


“அது..அது..” என்று தலையை சொரிந்தான் கவின் “மச்சி மீட்டிங்கிற்கு நேரமாச்சு போகலாமா?” என்றான் பேச்சை மாற்றும் பொருட்டு.


“அப்போ என்னை கழட்டி விட்டு, வேலையிருக்குனு தனியாக போனது எல்லாம் இதுக்குதானா?” என்று புருவம் உயர்த்தினான் மித்ரன்.


ஹிஹி என்று மொத்த பல்லையும் காட்டி சிரித்து மழுப்பியபடி, நண்பனின் கைகளைப்பற்றி மீட்டிங் அறைக்கு இழுத்துச் சென்றான்.


அந்த மிகப் பெரிய அறையில் நடு நாயகமாக இருந்த நீண்ட மேஜையை சுற்றி சுமார் ஐம்பது நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. அனைவரும் ஏற்கனவே வந்து அமர்ந்து விட்டிருந்தனர்.


“எக்ஸ்கியூஸ் மீ” என்றபடி உள்ளே நுழைந்தவனை சார்லஸ் வரவேற்றார். அங்கிருந்தவர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தார்.


“இந்த இளைஞன் பெயர் செந்தூரமித்ரன். இவனை என்னோட கம்பெனியில் வைத்துக் கொள்ளவே எனக்கு கொள்ளை ஆசை. ஆனால் சொந்த முயற்சியில் விவசாயத்திற்காக ஒரு செயலியை உருவாக்கியுள்ளான். அதை ஒரு பன்னாட்டு நிறுவனத்தோடு சேர்ந்து செயலாற்றுவதே அவனின் லட்சியம்.


அவனின் ஈடுபாட்டையும் வேலைத் திறமையையும் பார்த்து அவன் தொடங்க போகும் கம்பெனிக்கு நான் ஒரு பங்குதாரராக இருக்க போவதாக ஏற்கனவே ஒத்து கொண்டேன்.


இப்போது அவனின் பிரசன்டேஷனை பார்த்துவிட்டு, விருப்பம் உள்ளவர்கள், புதிதாக தொடங்க இருக்கும் கம்பெனிக்கு பங்குதாரராக சேர்ந்துக் கொள்ளலாம்” என்றார் சார்லஸ்


அனைவரும் ஆமோதிப்பாக தலையாட்டினர், அந்த சமயம் ஒரு பெரியமனிதர் உள்ளே நுழையவும் சார்லஸ் அவரை ஓடி சென்று வரவேற்றார்.


மித்ரனை அழைத்து, “மித்ரன், இவர் சங்கரபாண்டியன், என் நண்பர் மற்றும் என் தங்கையின் கணவர்” என்றார் சார்லஸ்.


மித்ரனின் பார்வையில் தெரிந்த ஆச்சரியத்தை புரிந்துக் கொண்ட சார்லஸ், “நண்பனாக அடிக்கடி நாங்கள் சந்தித்தபோது என் தங்கை பிலோமினா இவன் மேல் காதல் கொண்டதால், நான் இவனை பேசி சம்மதிக்க வைத்து திருமணத்தையும் நடத்தி வைத்து விட்டேன். இப்போது இவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள்” என்றார் சார்லஸ் பெருமையாக.


மரியாதை நிமித்தமாக சங்கர பாண்டியனை வணங்கி கை குலுக்கினான் மித்ரன். அவர் சென்று அமர்ந்ததும் மித்ரன் கவினை அழைத்து தன் பாக்கெட்டில் இருந்த பென்டிரைவ் எடுத்து அவன் கையில் கொடுத்து இணைப்பை கொடுக்க சொன்னான்.


கவினும் இணைப்பை கொடுத்து  முடிக்க, மீட்டிங் தொடங்க ஆயுத்தமானான் மித்ரன்.


அப்போது சங்கரபாண்டியன் “ஒரு நிமிஷம்” என்றார் சத்தமாக.


என்னவென்று புரியாமல் புருவம் சுருக்கியவனை பார்த்து, “என் மகளும் இந்த கம்பெனியின் போர்ட் மெம்பர் தான், இதோ சில நிமிடங்களில் வந்து விடுவாள். ப்ளீஸ் காத்திருங்க” என்றார் சங்கரபாண்டியன்.


மித்ரன் சார்லஸை பார்க்க, அவரும் கண்களால் இமைத்தட்டி காத்திருக்கும்படி சொன்னார்.


“எக்ஸ்கியூஸ் மீ, தாமதத்திற்கு மன்னிக்கவும்” என்று சொல்லிக்கொண்டு ஒருத்தி உள்ளே நுழைவதை கண்ட கவின் வாயடைத்து போனான். மணிக்கட்டில் இருந்த தன் கைகடிகாரத்தை கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன். அவனுக்கு நேரத்தை வீணடிப்பது பிடிக்கவே பிடிக்காது.


கடிகாரத்தில் கவனத்தை பதித்திருந்த நண்பனின் தோள்களில் இடித்தான் கவின். என்ன என்று கேட்டவனை, பார்வையால் அந்த அறைக்குள் வந்து கொண்டிருந்தவளை காட்டினான் கவின்.


சிவப்பு நிற வெல்வெட்டால் ஆன ஆடை உடலை ஒட்டியிருந்தது, கையில்லாத அந்த நீண்ட ஆடை அவளின் நுனிக்கால் வரை இருந்தாலும் ஒரு பக்கம் மட்டும் நீளமாக வெட்டப்பட்டிருந்தது. அந்த இடைவெளியில் அவளின் வெண்ணிற தொடை பளிச்சென்று தெரிந்தது. சிவப்பு நிற வெல்வெட்டிற்கு இடையே அவளின் வெண்ணிற வெல்வெட் தொடை கண்ணை பறித்தது.


ஹை ஹீல்ஸ் போட்டு கொண்டு ஒயிலாக நடந்து வந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.


அவள் நேற்று இரவு அவனோடு உரையாடியவள். பெயர் கூட என்னவோ சொன்னாளே! என்று யோசித்துக் கொண்டிருந்தவனை அதிகம் யோசிக்க விடாமல் அவளே அவன் அருகில் வந்து மீண்டும் அவனை நோக்கி கை நீட்டினாள்.


“ஐ யம் ஆராத்யா, எப்படி இருக்கீங்க மித்ரன்” என்றாள்.


“ஹலோ ஸ்வீட்டி, உனக்கு மித்ரனை முன்னாடியே தெரியுமா?” என்றார் சார்லஸ் வியப்புடன்.


“எஸ் அங்கிள்” என்று மேலும் ஏதோ சொல்ல போனவளை இடைமறித்து, “மிஸ்டர் சார்லஸ் ஏற்கனவே பத்துநிமிடம் வீணாகி விட்டது, மீட்டிங்கை தொடரலாமா?” என்றான் பொறுமையிழந்து.


“ஓ யெஸ்” என்ற சார்லஸ் “மித்ரனுக்கு நேரம் விரயமாவது பிடிக்காது டார்லிங் நாம் அப்புறம் பேசலாம்” என்றார் கிசுகிசுப்பாக


“ம்” என்றபடி தனக்கான இருக்கையில் போய் அமர்ந்தாள் ஆராத்யா. அந்த கம்பெனியின் முதலாளியே இவனுக்கு கீழ்படிகிறார் என்றால் இவன் அழகன் மட்டும் அல்ல, திறமையானவனாக வும் இருக்க கூடும் என்று அவன் பேச்சை ஆழ்ந்து கேட்ட துவங்கினாள்.


மித்ரன் பேச தொடங்கினான், “நான் உருவாக்கி இருக்கும் செந்தூரன் என்ற இந்த செயலி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட பரப்பளவு கொண்ட நிலத்திற்கு எவ்வளவு விதைகளை விதைக்கலாம், எவ்வளவு உரம் தேவைப்படும், எந்த மாதிரியான விளை பொருளுக்கு எந்தெந்த இயற்கை பூச்சி கொல்லிகளை பயன் படுத்தலாம் என்று இதில் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.


அதுமட்டுமில்லாமல் அவர்களின் நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு எந்தெந்த விதைகளை பயன்படுத்தி விளைச்சலை ஏற்படுத்தலாம் என்று தெரிந்துக் கொள்ளலாம்” என்றவனை இடையிட்டார் சங்கரபாண்டியன்.


“இந்த விஷயம் எல்லாம் அவங்களுக்கே தெரிஞ்சு இருக்குமே, இதுக்கு எதுக்கு செயலி?” என்றார்.


“நல்ல கேள்வி சார், முந்தைய தலைமுறையினருக்கு இதைப்பற்றி அனுபவ அறிவும் கேள்வி ஞானமும் இருந்தது. இப்போது இருக்கும் தலைமுறையினர் பலருக்கு விவசாயம் பற்றிய புரிதல் இல்லை. எல்லாரும் வேறு வேலை தொழில் என்று சென்று விட்டார்கள்.


விவசாயம் என்பது முக்கியம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு சில பேர் விவசாய நிலங்கள் வாங்கறாங்க. ஆனால் அதில் எப்படி? என்ன பயிரிடுவது? அதை எல்லாம் எங்கே சென்று வாங்குவது? வேலைக்கு ஆட்களை எப்படி அழைப்பது? என்று பல நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.


அதற்கான எல்லா தீர்வும் இந்த செயலி மூலம் அவர்களுக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு என்னென்ன பொருட்கள், எவ்வளவு தேவை என்பதை தேடுதல் என்ஜின் மூலம் அவர்கள் இதில் தெரிந்து கொண்டாலும், அந்த பொருட்களை நம்முடைய செயலிலேயே அவர்கள் ஆர்டர் செய்யலாம்.


வேலைக்கு ஆட்கள் தேவை என்றாலும் அவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். அதே சமயம் வேலை செய்யும் ஆட்களும் தங்களின் விவரங்களை இதில் பதிவிட்டுக் கொள்ளலாம். பல்வேறு இடங்களில் இருக்கும் நிலமில்லா விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதோடு, குத்தகைக்கும் வழி செய்து கொடுக்கலாம்” என்றான் மித்ரன்.


“அதுமட்டுமில்லாமல் காலநிலை, மற்றும் தட்பவெப்பநிலை சார்ந்த முன்அறிவிப்புகளும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதையும் இந்த செயலி அறிக்கைகளாக அவ்வப்போது வெளியிடப்படும்” என்றான்.


“நீங்க சொல்வதை பார்த்தால் இதற்கு செயலி மட்டும் போதாது, அதற்கான விதைகள், உரங்கள், மனிதவளம் வழங்கும் நிறுவனமாகவும் இருக்க வேண்டும் போலவே?” என்றனர் வேறு சிலர்.


“ஆமாம், பலபேர் விவசாயத்தை கைவிடுவதற்கு முக்கிய காரணம், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்வது கடினமான காரியம் என்பதால் தான். இவற்றை எளிதாக்குவது தான் என் வாழ்க்கையின் லட்சியம். விதைகளை பண்டமாற்று முறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்து உலகளவில் விவசாயத்தை ஒன்றிணைப்பதே நம் நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்கும்” என்றான் மித்ரன்.


“மித்ரன் உங்க ஐடியாலஜி நல்லா இருக்கு, பாராட்றோம். ஆனால் செயலி மூலம் இணையத்தின் வழியாக என்னென்ன பயன்கள் தரமுடியுமோ அதை மட்டும் தருவோம். மற்றபடி நீங்க சொல்வது எல்லாம் பேசுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும் நடைமுறையில் மிகவும் சிக்கலானது. 


ஒரு தொழிலதிபர் தன் பணத்தை லாபம் கருதி தான் முதலீடு செய்ய முடியும். உங்க சமூக அக்கறைக்கு எங்கள் பணத்தை நாங்க இழக்க தயாராக இல்லை” என்று வெளிப்படையாகவே தங்களுடைய மறுப்பை கூறினர், மற்றவர்களும் அதையே ஆமோதிக்க மித்ரனின் முகம் இறுகியது.


சங்கர பாண்டியன் மட்டும் எழுந்து நின்று கை தட்டினார். “வெல்டன் மித்ரன். உங்களை பத்தி சார்லஸ் சொல்லும் போது கூட, அதிகமாக உங்களைப்பற்றி பேசியே அறுக்கிறாரே என்று நினைத்திருக்கிறேன்.


உங்களோட சமூக அக்கறையும், அதை செயல்படுத்த உங்க படிப்பை பயன்படுத்தியதோடு அதன் மூலம் உங்களுக்கான ஒரு தொழிலையும் யோசித்து சரியான முறையில் கையாண்டு இருக்கீங்க! ரியலி பிரில்லியன்ட் வொர்க்” என்று மனதார பாராட்டி கைத்தட்டினார்.


அதன் பின்னரே அனைவரும் கை தட்டினார்கள். அப்போதே ஆசுவாசம் அடைந்தான் மித்ரன்.


“நானும் சார்லஸும் உங்களுடைய பெரும்பாலான பங்குகளை வாங்கி கொள்கிறோம்” என்று சங்கர பாண்டியன் முடிக்கவும் மற்ற அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.


அதற்குள் ஆராத்யா தன் தந்தையை அழைத்து எதுவோ கூறினாள், அவரும் அவளுக்கு சம்மதமாக தலையை ஆட்டியவர், மித்ரனை அழைத்தார்.


“மித்ரன், நிறைய பங்குதாரர்கள் வேண்டாம். நாங்களே இதற்கான முக்கால் பங்கு பணத்தையும் முதலீடு செய்கிறோம். சார்லஸ் மற்றும் நான் உன்னோட கம்பெனிக்கு சைலன்ட் பார்ட்னராக இருப்போம், ஆராத்யா ஆக்டிவ் பார்ட்னராக இருப்பாள். அவள் இந்தியாவில் நடக்கும் கம்பெனிக்கு வந்து உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் உதவி செய்வாள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?” என்றார் சங்கர பாண்டியன்.


அதற்குள் சார்லஸ், “ஓ மை ஸ்வீட்டி உன்னோட அழகி போட்டி பிரப்பரேஷன் எல்லாம் என்னாச்சுடா? நீ நம்ம மித்ரனோட சேர்ந்து வேலை செய்யப் போறியா? என்னால நம்பவே முடியலையே? எப்போ என் மருமகளுக்கு பொறுப்பு வந்தது என்று என் தங்கை சொல்லவே இல்லையே?” என்று சொல்லி விட்டு ஏதோ ஹாஸ்யம் போல ஹோவென்று சிரித்தார்.


“அங்கிள்…” என்று காலை உதறி பூமியில் உதைத்தபடி “பாருங்க டாடி இந்த அங்கிளை… என்னை எப்படி கிண்டல் பண்றாருனு” என்றாள் ஆராத்யா.


“மாமன் மருமகள் நடுவில் நான் என்ன பேசுவது? நீயாச்சு, உன் மாமாவாச்சு” என்றவர் மித்ரனிடம் மேலும் சில விவரங்களை கேட்க தொடங்கினார்.


“மித்ரன் இன்னும் பங்குதாரர்கள் வேணுமா? உங்களால் பணம் முதலீடு செய்ய முடியுமா?” என்று கேட்டார்


“சார், ஊரில் எங்களோடதும் நிறைய சொத்துக்களும் தொழில்களும் இருக்கு. நானே கூட தனியாக செய்ய முடியும். ஆனால் மொத்த சொத்தையும் பன்னாட்டு நிறுவனத்தில் பணயம் வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அதுமட்டும் இல்லாமல் அது எல்லாம் பூர்வீக சொத்துக்கள். அதனால் உங்களுக்கு சரியாக என்னுடைய முதலீடும் இருக்கும்” என்றான் கனிவான குரலில்.


“எல்லாம் இருந்தும், இத்தனை எளிமையாக இருக்கிற உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மித்ரன்” என்று அவன் தோளில் கைப்போட்டார் சங்கரபாண்டியன்.


தந்தை மித்ரன் தோள்மேல் கைப்போட்டு பேசிக் கொண்டிருந்ததை ஆர்வமாக பார்த்தாள் ஆராத்யா. அப்படியே மாமனும் மருமகனும் பேசிக் கொண்டிருப்பது போல தோன்றியது. இப்போது பார்வை மித்ரனை அளவெடுத்தது.


நேற்று எளிமையான டீசர்டடில் இருந்தவன், இன்று கோட் சூட் அணிந்திருந்தான். கம்பெனி முதலாளிக்கான அனைத்து அங்க லட்சணங்களும் அவனுக்கு இருந்தது. உடலை கட்டுகோப்பாக வைத்திருக்கிறான், ஆணழகனாக இருக்கிறான். அறிவில் சிறந்தவனாக இருக்கிறான், முக்கியமாக பெண்கள் விஷயத்தில் நெறிதவறாதவனாக இருக்கிறான், இதைத் தவிர ஒரு பெண்ணிற்கு வேறு என்ன வேண்டும் என்று கண்களால் அவனை கபளீகரம் செய்துக் கொண்டு தன் மன ஓட்டங்களை கட்டுப்பாடின்றி ஓட விட்டாள் ஆராத்யா.


தங்கை மகள் தன் அருகே இருந்தாலும், அவள் பார்வையும் மனமும் அவர் பேச்சில் ஒன்றவில்லை என்பதை புரிந்துக் கொண்ட சார்லஸ், ஆராத்யா பார்வை போகும் திசையை பார்த்தார். அங்கே மித்ரனும் சங்கரபாண்டியனும் வெகு சிரத்தையாக பேசிக் கொண்டிருந்தனர்.


ஆராத்யாவின் பார்வையோ மித்ரன் மேல் ஆர்வத்துடன் பதிந்திருந்தது. அவருக்கு தெரியாதா? இருபத்தைந்து வருடங்களுக்கு முன் அவர் தங்கை பிலோமினாவும் இப்படித்தான் சங்கரபாண்டியனை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். பிறகு காதல் என்று வந்து நின்றாள்.


தங்கை மகளும் அதையே தான் செய்கிறாள். கூடிய சீக்கிரமே அவன் மேல் காதல் என்று வந்து நிற்க போகிறாள் என்று புரிய சார்லஸின் முகம் புன்னகையில் மலர்ந்தது.


இவை அனைத்தையும் தனியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த கவினுக்கும் நன்றாக புரிந்தது. மித்ரனிற்கு ஆராத்யாவை திருமணம் செய்து வைக்க சார்லஸ் இப்போதே முடிவெடுத்துவிட்டார். இனி இந்த பிராஜெக்ட்டும் நல்லபடியாக முடியும் என்று கவினும் சந்தோஷப்பட்டான்.


இவர்களின் மனக் கணக்குகளைப் பற்றி அறியாமல் செந்தூரமித்ரனும் சந்தோஷமாகவே சங்கர பாண்டியனுடன் பேசிக் கொண்டிருந்தான்.


(தொடரும்)


தொடரைப் படித்து விட்டு கமெண்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ், கதையின் போக்கு உங்களுக்கு பிடித்திருக்கா என தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன். like and comment pls




Leave a comment


Comments


Related Post