இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-04 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 07-03-2024

Total Views: 44923

பிரம்மாண்டமான அந்த பத்து மாடி கட்டிடத்தின் முன் சீறிக் கொண்டு வந்து நின்றது, யஷ்வந்த் கிருஷ்ணாவின் கருப்பு நிற லம்போர்கினி. அவனது மொத்த குடும்பமும் அங்கு கூடியிருக்க, அஞ்சனாவின் குடும்பமும் அங்கு வந்து சேர்ந்திருந்தது. 

யுவனா இன்டஸ்டிரீஸின் ஆடை வடிவமைப்பு நிறுவனங்களை ஆட்சி செய்துவரும் யஷ்வந்தின் ஒரு கிளைக்கடையே அது. 

தனது வண்டியை விட்டு இறங்கியவன், அவர்களுடன் உள்ளே செல்ல,

யமுனா “நாள் இல்லை.. எல்லாருக்கும் வேணும்ங்குற துணிய இப்பவே எடுத்துடுங்க. சம்மந்தி அஞ்சனாக்கு நிச்சயத்துக்கு கல்யாணத்துக்கு அப்றம் கம்பெனி பார்ட்னர்ஸ் எல்லாம் கூப்பிட்டு ஒரு ரிசப்ஷன் வைக்கனும் அதுக்கும் எடுத்துடலாம். இங்க எடுத்துட்டு போய் நகையும் பாத்துடுவோம்” என்றார்.

அர்ஜுன் இன்னுமே இந்த திருமணத்தை ஏற்காதமையால் ஒதுங்கியே நிற்க, யஷ்வந்த் யாருக்கு வந்த விருந்தோ என்பதைப் போல் அலைபேசியில் தன் உதவியாளருடன் பேசிக் கொண்டிருந்தான்.

யாழினியை விட அஞ்சனா கிட்டதட்ட ஐந்து வயது சிறியவள் என்பதால் யாழினியும் அஞ்சனாவும் நாத்தனார் அண்ணி என்பதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல தோழிகளைப் போல் நெருங்கியிருந்தனர்.

யாழினி அஞ்சனாவை விட நான்கு வயது மூத்தவள் என்பதால் அவளுக்கு அவ்வளவு எளிதில் அண்ணி என்று கூப்பிட வரவில்லை. ஆகவே அந்த பெயரிட்டே அழைத்தாள்..

“அஞ்சு இந்த புடவை பாரு” என்று யாழினி கூற,

 “ஒரு நிமிஷம்” என்றவள் அர்ஜுனைத் தேடினாள். அங்கு ஓரமாக அமர்ந்து அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் வந்தவள்,

 “ஏன் அஜு இப்படி தனியா தனியா வந்துடுற? வந்து எனக்கு சேரி செலெக்ட் பண்ணிதா” என்று கூற, 

“ப்ச்.. நான் வரலை அஞ்சு” என்றான்.

அவனது உதாசீனப் பேச்சு அவளுக்கு முகத்தில் அறைந்த உணர்வை கொடுக்க, அதை மறைக்கத் தெரியாமல் முகத்தில் பிரதிபலித்தவள் வதனம் கண்டு தன்னையே நிந்தித்துக் கொண்டவன்,

 “சாரி சாரி அஞ்சுமா.. ஏதோ நினைப்புல பேசிட்டேன் வா” என்று அவளை சமாதானம் பேசி அழைத்துச் சென்றான்.

அங்கு யாழினி ஒரு புடவையை எடுத்து பார்த்துவிட்டு தன் அண்ணனைப் பார்க்க அவன் இன்னும் அலைபேசியில் தான் இருந்தான்.

 'ம்கும்.. அஞ்சனாவை கட்டிக்குறதுக்கு இவருக்கு இந்த வினோத் அண்ணாவை கட்டிவைக்கலாம் போல..’ என்று அவள் நொந்துக் கொள்ள அர்ஜுன் மற்றும் அஞ்சனா அவ்விடம் வந்தனர்.

“அஞ்சு போய் அண்ணாவை கூட்டிட்டு வாடா” என்று யாழி கூற,

 “ம்ம் ஓகே அண்ணி” என்று திரும்பியவள் சட்டென யாழினி புறம் திரும்பி “அவங்களை நான் என்னனு கூப்பிட?” என்று கேட்டாள். 

அவள் கேட்டதில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட யாழினி, “மாமானு கூப்பிடு” என்க, அர்ஜுன் சட்டென யாழினியை நோக்கினான்.

 “ம்ம் சரி அண்ணி” என்று அஞ்சு செல்ல, 

சிரித்தபடி “ஏன் க்கா?” என்று அர்ஜுன் வினவியதில் தானும் சிரித்துக் கொண்டு, 

“சும்மா ஃபன் பண்ணுவோம்” என்று கூறினாள்.

அங்கு யஷ்வந்திடம் சென்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க, ‘அம்மாடி.. எவ்ளோ ஹயிட்டா இருக்காரு’ என்று எண்ணிக் கொள்ள, அவள் மனசாட்சியோ ‘அவர் அவர் வயசுக்கு நார்மல் ஹைட் தான் தங்கம்.. நீ தான் குட்டை’ என்று காலை வாரியது. 

தன்னருகே யாரோ வந்து நின்ற அரவத்தில் திரும்பியவன், மஞ்சள் நிற அணார்கலி சுடிதாரும், கையில் உடைக்கு ஏற்ற நிறத்தில் கலகலவென கண்ணாடி வளையல்களும், காதில் பெரிய ஜிமிக்கியும் என்று புசுபுசுவென இருந்தவளைக் காண, அன்று போல் இன்றும் கலர் கோழிகுஞ்சு தான் நினைவுக்கு வந்தது. 'என்ன?’ என்பது போல் அவன் ஒற்றை புருவம் உயர்த்த, ‘பேசி முடிச்சாச்சா?’ என்று சைகை செய்து கேட்டாள்.

அவளையே பார்த்தபடி “சரி அப்பறம் கூப்பிடுறேன் வினோத்” என்று அவன் அழைப்பை வைக்க,

 “யஷு மாமா.. அண்ணி கூப்பிட்டாங்க” என்றாள். 

அவளது ‘யஷு மாமா' என்ற அழைப்பில் ‘மாமாவா? கலர் கோழிகுஞ்சுக்கு குசும்ப பார்த்தியா' என்று எண்ணியபோதும் அப்படி அழைக்காதே என்றெல்லாம் கூற அவனுக்கு தோன்றவில்லை. 

“ம்ம்” என்றவன் அவளோடு செல்ல, யாழினி, 

“அண்ணா வாண்ணா.. அஞ்சுக்கு புடவை செலெக்ட் பண்ணு” என்று கூறினாள். 

‘புடவை விஷயத்தில் தன் அண்ணனைவிட கலாரசிகன் யாரும் இருக்க இயலாது’ என்று யாழினி தன் அண்ணனைப் பற்றி அதிகம் பெருமை பேசியதுண்டு. அவன் செய்யும் தொழிலே அதுதானே? ரசித்து செய்யும்போது தான் ஒரு வேலை சுமையாகத் தோன்றாது என்ற கருத்துக்கு இணங்க, மேலை நாடுகள் சென்று ஆடை வடிவமைப்பு கலைகளில் பட்டம் பெற்று வந்தவன் அதை விரும்பி ரசித்து செய்ததாலேயே தொழிலை கையில் எடுத்தவுடன் அசுர வளர்ச்சி  கண்டான்.

நால்வரும் அஞ்சுக்கு புடவை பார்க்க, அழகிய மஞ்சள் நிறத்தில் கரும் நீல நிற கரை வைத்து, தங்கத்தில் மாங்காய் வடிவம் நெய்யப்பட்ட புடவை ஒன்று எடுத்து அர்ஜுனும், மயில் கழுத்து நிறமும் மருதாணி நிறமும் கொண்ட, கையில் கொஞ்சும் கிளியின் அபிநயம் பிடித்த நாட்டியப் பெண்மணி நிற்பதைப் போன்று நெய்யப்பட்ட புடவையை யஷ்வந்தும் நீட்டினர்.

சட்டென ஒரே நேரத்தில் இருவரும் புடவையை நீட்ட, இரு புடவைகளின் அழகும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் இருந்தது. அதில் திகைத்துப் போன அஞ்சனா, 

“ரெ..ரெண்டுமே அழகா இருக்கு..” என்று இழுக்க,

 “ஒன்னும் பிரச்சினை இல்லை மினிகிட்டி.. ரெண்டும் எடுத்துடு. அர்ஜுன் எடுத்ததை நிச்சயத்துக்கு கட்டிக்கோ, அண்ணா எடுத்ததை ரிசப்ஷனுக்கு கட்டிக்கோ” என்று யாழினி கூறினாள்.

அதன்படியே சரியென்று இரண்டையும் எடுத்தவள் அழகிய அடர் சிவப்பு நிறத்தில் அடர் பச்சைநிற கரையிட்ட தங்க ஜரிகைகள் கொண்ட கைத்தரி சேலை ஒன்றை திருமணத்திற்கு தேர்வு செய்து கொள்ள, அனைவரும் அவரவருக்கான உடைகளையும் எடுத்து முடித்தனர். 

யமுனா நகைக்கடைக்கு செல்லலாம் என்று கூற, 

“அம்மா நான் வந்து என்ன பண்ண போறேன்? நீங்க போங்களேன்” என்று யஷ்வந்த் அன்னையிடம் பொறிந்தான். 

“யஷ்வா.. ஒரு அம்மாவா உன் கல்யாணத்துல இப்படி செய்யனும் அப்படி செய்யனும்னு எனக்கும் நிறையா ஆசை இருக்காதா? சும்மா கிளம்புறேன், கிளம்புறேன்னு சொல்லாதடா” என்று யமுனா கெஞ்ச, இதழ் குவித்து பெருமூச்சை இழுத்துவிட்டு அவர்களோடு சென்றான்.

சில நிமிடங்கள் கடையை அலசி ஆராய்ந்து புடவைக்கு ஏற்றார் போலவே நகைகளும் எடுக்கப்பட அனைவரும் மனநிறைவுடன் வெளியே வந்தனர். 

அமுதாவிடம் வந்து கல்யாண விவரங்கள் பேசிய யமுனா, அங்கே யாழினியுடன் பேசிச் சிரிக்கும் அஞ்சனாவைப் பார்த்து லேசான புன்னகையுடன், 

“சம்பந்தி ஒன்னு கேட்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க” என்க,

 “ஐயோ என்ன சம்பந்திம்மா பெரிய வார்த்தையெல்லாம்?” என்று அமுதா பதறினார்.

“யஷ்வா கூட அஞ்சனா கொஞ்சம் வெளிய போயிட்டு வரட்டுமே. கல்யாண பரபரப்புல அவங்களுக்குனு பேசிக்க ஏதும் நேரமே இல்லை” என்று யமுனா கேட்க, அமுதாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. 

இங்கு வருவதற்கே தன் மகளை அமர்த்தி ஒருமணி நேரம் ‘ஓடக்கூடாது, குதித்து குதித்து நடக்கக்கூடாது, சத்தமாக பேசக்கூடாது' என்று ஆயிரம் அறிவுரை கூறியல்லவா கூட்டி வந்தார்.

இன்னும் அவளை தனியே வேறு அனுப்ப வேண்டுமா? என்று அவர் பதற, 

“கொஞ்ச நேரம்தான்.. யஷ்வா கூட போயிட்டு வரட்டும்” என்று யமுனா கூறவும், அதற்குமேல் தடுத்துப் பேச முடியவில்லை அவரால். சரியென தன் மகளிடம் வந்தவர், 

“அஞ்சு.. மாப்பிள்ளை கூட போ. எங்கயோ வெளிய கூட்டிட்டு போறாங்களாம்” என்று அமுதா கூற, 

“எங்கம்மா?” என்றாள். 

“தெரியலைடா.. அவங்க கூப்பிடுறாங்க நீ போ” என்று அமுதா கூற, 

“அஜு நீயும் வரியா?” என்று கேட்டாள். 

'ம்க்கும்' என்று நொந்து கொண்ட அர்ஜுன் தன் அன்னையை முறைக்க, 

‘ஐயோ ஆண்டாவா’ என்று நொந்து கொண்டவர், 

“அவனெல்லாம் வேணாம் நீ மட்டும் போ” என்று மகளை துரத்தி வைத்தார்.

அங்கு அன்னை அஞ்சனாவை அழைத்து வெளியே செல்லக் கூறியதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாதவன் சிறு தோள் குலுக்கலுடன் வண்டியில் அமர, யமுனாவிடம் பேசிவிட்டு அவன் வண்டியில் வந்து அமர்ந்தாள் அவன் கோழிக்குஞ்சு.

அமைதியெல்லாம் பெயருக்கும் பழக்கப்படாத அஞ்சனாவுக்கு அவனுடன் என்ன பேசவென்றும் தெரியவில்லை, அமைதியாக இருக்கவும் முடியவில்லை. 

“அக்ஷரா அக்கா பையன் வரலையா யஷு மாமா?” என்று அவள் வினவ, 

“அவன் ஸ்கூல் முடிச்சு அவங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டான்” என்றான்.

“ஓ..” என்றவள் அவன் ஏதும் கேட்பான் பேச்சை தொடருவான் என்று எதிர்ப்பார்க்க, அவனிடமிருந்து எந்த பேச்சுமில்லை. “எங்க போறோம் மாமா?” என்று மீண்டும் தயக்கத்தோடு அவள் வினவ, 

அவள் தன்னோடு பேச முயற்சிப்பதைப் புரிந்துக் கொண்டவன், “உனக்கு எங்க போகனும்?” என்று கேட்டான்.

சற்றே யோசித்தாள் “பீச் போகலாமா?” என்று வினவ, “ம்ம்..” என்றவன் வண்டியை பீச் நோக்கி செலுத்தினான். 

சில நிமிடங்களில் கடற்கரையை அடைந்தவன் வண்டியை நிறுத்த, ஆர்வத்துடன் துள்ளிக் கொண்டு ஓடியவள் தனது ‘லெக்கின்’ கால்சராயை ஏற்றிவிட்டு கடலில் கால் நனைத்து குதூகலித்தாள்.

வண்டியை நிறுத்திவிட்டு அவளிடம் வந்தவன் அரவத்தில் சட்டென திரும்பியவள் அப்போதே அன்னையின் அறிவுரை நினைவு பெற்று மருண்டு விழித்தாள். துள்ளிக் குதித்த விழிகள் திடீரென மருட்சியில் விறைத்ததைக் கண்டு

 “என்னாச்சு?” என்று அவன் வினவ, “அ.. அது.. நான் பீச்ச பார்த்த ஆர்வத்துல எக்ஸைட் ஆயிட்டேன்” என்று திணறினாள்.

“சோ வாட்? (அதனால் என்ன?)” என்றவன் அவள் கண்களை ஏறிட்டு “யாரும் எதும் சொன்னாங்களா?” என்று வினவ, 

“அம்மா திட்டுவாங்க.. காலைலயே ஓடக்கூடாது குதிக்கக் கூடாது சிரிக்கக்கூடாதுனு அவ்வளவு அட்வைஸ் பண்ணித்தான் கூட்டி வந்தாங்க” என்று பாவம் போல் கூறினாள்.

அதில் சற்று அதிர்ந்து போனவனுக்கு பின்பு ஆத்திரமாக வர, ‘ஒரு சின்ன பொண்ணை எப்படி இப்படி பொம்மை போல ட்ரீட் பண்ண தோனுது இவங்களுக்கு?’ என்று மனம் பொருமியது.

அவள் உயரத்திற்கு குனிந்தவன், “லுக் மீ” என்க, மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள். கலக்கம் தேங்கிய அவள் விழிகள் கண்டு, 

“யார் என்ன சொன்னாலும் அதை கண்மூடித்தனமா ஏத்துக்காத. நான் உனக்கு ஹஸ்பென்டாகப் போறேன். என்கிட்ட நீ நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல் யாரும் உன் இயல்பை மாத்திக்க சொன்னா உன் யஷு மாமாக்கிட்ட நீ நடிக்க வேண்டிய அவசியமில்லைனு சொல்லு” என்று கூற, மந்திரத்திற்கு கட்டுப்பட்டதைப் போல் தலையசைத்தாள்.

“ம்ம்.. போ” என்று அவன் கூற, “தேங்ஸ் யஷு மாமா” என்றுவிட்டு மீண்டும் அலைகளிடம் ஓடினாள். அவளைப் பார்த்து ஒருபெருமூச்சு விட்டுக் கொண்டவனுக்கு ஆயாசமாக இருந்தது. உண்மையைச் சொல்லப்போனால் அவளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் கூறினானே தவிர அவளிடம் அவனுக்கு எந்த உணர்வுகளும் இல்லை. சாதாரணமாக ஒரு ஆணுக்கு பெண்ணிடம் எழும் சாதாரண இனக்கவர்ச்சி கூட அவளிடம் அவனுக்கு தோன்றவில்லை. 

அவளைப் பற்றி நினைத்தால் கலர் கோழிகுஞ்சும், குழந்தைத்தனமும் தான் தோன்றவே, அவனுக்கே இந்த வாழ்வு தங்களுக்கு என்ன வைத்திருக்கின்றதோ! என்று இருந்தது. 

‘எந்த உணர்வுமே இல்லாமல் எப்படி இவளைத் திருமணம் செய்ய சம்மதம் கூறினோம்? திருமணம் வேண்டாம் என தனது தொழில் வாழ்வில் மூழ்கிக் கிடந்த தான் மாயம் போல இவளுடனான திருமணத்திற்கு ஏன் சம்மதம் கூறினோம்?’ என்று அவன் நினைக்கவுமில்லை, நினைத்திருந்தாலும் காலம் அவனுக்கு தற்போது பதிலளிக்கப் போவதுமில்லை.

அவளை ஒரு பல்பொருள் அங்காடிக்குக் கூட்டிச் சென்றவன் “ஏதும் வாங்கிக்குறியா?” என்று வினவ,

 “இல்ல வேணாம் மாமா” என்றாள். 

'அம்மா திட்டுவாங்க.. அதானே’ என்று எண்ணி பெருமூச்சு விட்டவன் அவளைக் கூட்டிக் கொண்டு ஒரு கடைக்குள் சென்றான்.

அவளுக்கு அழகிய கருநீலநிற மதுபாலா சுடிதார் எடுத்துக் கொடுத்தவன், அதே நிறத்தில் ஜிமிக்கி மற்றும் கண்ணாடி வளையல் வாங்கினான். அவளைப் பார்த்த இரண்டே முறையிலும், நகை கடையில் தன் அன்னை தங்க வளையல் வாங்கித் தந்தபோது வெகுளியாய் தனக்கு கண்ணாடி வளையல் மீதுள்ள பிடித்தம் கூறியது வைத்தும் அவளுக்கு ஜிமிக்கி மற்றும் கண்ணாடி வளையல் மீது பித்து என்று புரிந்துக் கொண்டான்.

அவன் வாங்கித் தந்தவற்றை விழிகள் விரியப் பார்த்தவள், “எனக்கு கண்ணாடி வளையல்னா ரொம்ப பிடிக்கும் மாமா.. எல்லா டிரெஸ்ஸுகும் மேட்ஜிங்கா வச்சிருக்கேன். அதை வைக்கவே ஆதி அண்ணா எனக்கு ஒரு டிராயர் வாங்கி தந்தாங்க” என்று கூற, 

“ம்ம்” என்ற தலையாட்டலுடன் அவற்றைத் தந்தான்.

அங்கேயே இரவு உணவை முடித்துவிட்டு அவளைக் கூட்டிக் கொண்டு அவள் வீட்டை நோக்கி பயணமானவன் சித்தம் முழுதும் ‘இந்த திருமணம் சரிதானா?’ என்பதையே யோசித்தது.

அந்த யோசனையோடே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் சித்தம் கலைத்தது, பொத்தென தோள்மீத சாய்ந்த பஞ்சு மெத்தையின் ஸ்பரிசம். 

சட்டெனத் திரும்பிப் பார்த்தவன் தோளில் தலை சாய்த்து நித்திரையில் இருந்தது அந்த மெலுகு பொம்மை. காலை முதல் ஒவ்வொரு கடையாக அழைந்த அலைச்சலில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்த தூக்கம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ள, அப்படியே தூக்கத்தோடு அவன் தோள் சாய்ந்திருந்தாள்.

அவளிடமிருந்து தன் பார்வையைத் திருப்பிக் கொண்டு வண்டியை ஓட்டியவன் சித்தம் மீண்டும் யோசிக்கத் துவங்கியது, ஆனால் சிறு மாற்றமாய் முந்தைய சிந்தனை கலைந்து, அவள் பற்றிய சிந்தனை குடிகொண்டது.

வீடு வந்தவுடன் அவளைத் திரும்பிப் பார்க்க, வண்டி நின்றதில் மெல்ல கலையத் துடித்த தூக்கம் கொடுத்த எரிச்சலில் தன் மூக்கை தூக்கத்தோடு கசக்கிக் கொண்டாள். சிறு குழந்தையின் செயலாய் அதை ரசித்தவன் இதழில் மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள, அவள் புசுபுசு கன்னங்களில் தனது முரட்டுக் கரத்தை மெல்லவே உரசித் தட்டினான். 

ஆனால் அவளோ அவன் புஜங்களைக் கட்டிக் கொண்டு இன்னும் வாகாய் படுத்துக் கொள்ள, “அஞ்சனா..” என்று மீண்டும் அவளை எழுப்பினான்‌. அதில் மெல்ல கண்விழித்தவள் அவனைக் கண்டு பதறி விலக, “கூல்.. நான் தான். உன் வீடு வந்துடுச்சு” என்று கூறினான்.

அப்போதே தன் அன்னையைப் பற்றிய நினைவு வர, அவன் வாங்கிக் கொடுத்த உடையை ஒருவித கலவரத்துடன் பார்த்தாள். பின்னிருக்கையில் இருந்த பையை எம்பி எடுத்து அவளிடம் நீட்டியவன், “நான் உனக்கு யாரு?” என்று வினவ, “ய..யஷு மாமா” என்றாள்.

“ம்ம்.. உன் மாமா வாங்கிக் கொடுத்தாங்கனு சொல்லு” என்று அதைக் கொடுக்க, சின்ன தலையசைப்புடன் வண்டியை விட்டு இறங்கினாள். வீட்டு வாயில் வரை சென்றவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பார்வை சந்திப்பில் பதறியவள் விறுவிறுவென உள்ளே செல்ல, அதில் தானும் சிரித்துக் கொண்டவன் புறப்பட்டான்.


Leave a comment


Comments


Related Post