இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -12 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 08-03-2024

Total Views: 33302

அன்றைய சண்டைக்குப் பின்பு வளவன் அங்கு செல்வதையே நிறுத்தி இருந்தான், இவர்களை தேடி தான் யுகியும் ஷாலினி வந்துவிட்டு போவார்கள்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை வரும் ராமன் வந்திருந்தார் கையில் தின்பண்டங்கள் இருந்ததே தவிர ஆறுமாதம் உழைத்த உழைப்பிற்கான பணம் இருக்கவில்லை.

"எய்யா காசு ஏதாவது இருந்தா குடு புள்ளையும் இப்போவோ அப்போவோன்னு இருக்கு பெரிய புள்ளையாக்கிட்ட கழுத்துல போடறதுக்காகவாது ஒரு செயின்னு வேணும் வாங்குவோம்".

"என்கிட்ட ஏது பணம்?, நீ வேற ஏண்டி நானே லாட்டரி சீட் வாங்குனா பணம் வரும்னு பணத்தை எல்லாத்தையும் அதுல போட்டுட்டு, திங்கறதுக்கு கூட காசு இல்லாம இங்கன வந்துருக்கேன் காசு வேணுமாம்ல" என்று நக்கலாக சிரிக்க,

அவரை தவிர வேற யாருக்கும் சிரிப்பு வரவில்லை.

'நல்லவேளை இந்த மனுஷன் கூடவே இல்லாமல் எப்போ ஒருதடவை வந்து உயிரை வாங்கிட்டு போறான் கூடவே இருந்திருந்தால் இவனைப் பார்த்து பையனும் கெட்டுப் போயிருப்பான், நான் சம்பாரிக்கற பணத்துலையும் லாட்டரி சீட் வாங்கறேன்னு உயிரை வாங்கிருப்பான்' என எண்ணி நிம்மதி பெருமூச்சு தான் விட முடிந்தது ராஜியால்.

ராமனால் அந்த குடும்பத்திற்கு சலிப்பைசாக் கூட புரோஜனம் என்பது இல்லை.

ஆறு மாதம் கழித்து வந்தவன்,  வளவன் பணம் சேர்த்து வைத்திருந்த உண்டியலை எடுத்துகொண்டு ஓடிவிட்டார்.

மது மட்டும் போதையில்லை, மாது, சூதாட்டம், லாட்டரி சீட் என அனைத்தும் போதை தான், இந்த தடவை வெற்றி கிடைத்துவிடும், இந்த தடவை லாட்டரி விழுந்து விடும், என ஒவ்வொரு தடவையும் செய்த தப்பையே திரும்ப திரும்ப செய்யச் சொல்லும். அந்த தப்பை தான் ராமனும் செய்தான்.

பெயர் மட்டும் தான் அந்த ராமனின் பெயர், அவருடைய ஒரு குணாதியம் ஒன்றுக் கூட இல்லை.

"அம்மா இங்க இருந்த உண்டியல் எங்கம்மா?".

"அந்த ஆளு தூக்கிட்டுப் போய்டுச்சா?, போறப்ப பம்பிட்டே போனான் அப்போவே சுதாரிச்சி கேட்டுருக்கணும்" என வந்தவர், அங்கு உண்டியல் இருந்த இடம்  காலியாக இருக்க, ஐயோ படுபாவி நாயி ஆறு மாசம் கழிச்சி வந்தும் ஒத்த ரூபாய் பணம் கொண்டு வராம பையனோட உண்டியலை தூக்கிட்டுப் போயிட்டானே இவனெல்லாம் நல்லா இருப்பானா? " என கீழே அமர்ந்து  தலையில் அடித்துக்கொண்டே அழ ஆரம்பித்து விட்டார்.

"நல்ல வேளைம்மா, போன வாரம் தான் சீட்டுக் கட்ட பணம் இல்லன்னு சொன்னியேன்னு உண்டியலை உடைச்சேன் இல்லனா லம்பா போயிருக்கும்" என்று பெருமூச்சு விட்டான்.

"இதுல எவ்வளவு போட்டுருந்த?"

"நூறு ரூபாய் இருக்கும்ன்னு நினைக்கிறேன்"

"இவனாலா ஒரு அப்பன். பிள்ளைங்களுக்கு குடுக்கறதை விட்டுட்டு பிள்ளைங்க காசை திருட்டுட்டு போறானே இனி வரட்டும் வூட்டுக்குள்ளையே விடக்கூடாது..அப்படியே தொரத்தி அடிக்கறேன் வராதே ஆடிக்கு ஒருதடவை அமாவாசைக்கு ஒருதடவையின்னு, அதுலயும் வீட்டு செலவுக்குன்னு பணம் கொடுப்பான்னு பார்த்தா புள்ள சேர்த்து வெச்சிருக்கப் பணத்தை தூக்கிட்டு போறானே இவனாலா அப்பனா?"  என ராஜி கண்ணீர் மல்க தன் கவலை புலம்பலாக புலம்பி தள்ள.

"விடும்மா அந்த ஆளை நம்பி தான் நம்ப இருக்கமா என்ன?, போய் தொலையட்டும் இனி வந்தா உஷாரா இருப்போம்" என்று சொல்லிவிட்டு பள்ளிக்குச் சென்று விட்டான்.

காலங்கள் வேகமாக ஓடியது நிலா தன் தொடக்கப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்நிலை பள்ளியில் சேர்ந்தாள்.

நந்தனின் புதிய வீடும் வேகமாக வளர்ந்தது. அதில் எந்தக் குறையையும் மார்த்தாண்டம் வைக்கவில்லை.

நந்தனுக்கு தான் புது புது ஆசைகள் அணிவகுக்கும். இருசக்கர வாகனம் ஓட்டிப் பழகியவனுக்கு,  மார்த்தியிடம் புது வண்டி வாங்கி தர சொல்லி  பிடிவாதம் பிடித்தான்.

யுகி இவனைப் போல் ஒரு சதவிகிதம் கூடயில்லை. எதையும் கேக்க மாட்டான் இருப்பதை வைத்து சந்தோசம் காண்பவன் அவன். கையில் இருந்தாலும் யார் கேட்டாலும் கொடுத்துவிடும் ரகம்.வீட்டில் ஒன்று அப்படி இருந்தால் மற்றொன்று இப்படி தானே இருக்கும்.

"அப்பா  எனக்கு புதுசா பைக் வேணும்.. வாங்கிக் குடுங்க"

"இப்போ எதுக்கு தம்பி பைக், படிச்சி முடி அப்புறம் வாங்கிக்கலாம்"

"இல்லை அப்புறம் கேட்டாலும் இதை தான் சொல்லுவீங்க இப்போவே வாங்கிக் குடுங்க."

"உன் அவசரத்துக்கு எதையும் வாங்கிக் குடுக்க முடியாது தம்பி".

"அப்போ உங்க பைக்கையாவது குடுங்க"

"லீவுனாலே எடுத்து ஓட்டிக்கோ" என முடித்துவிட்டார்.

வண்டியில் மீது ஏற்பட்ட ஆசையில் வண்டி கிடைக்கும் போதெல்லாம் சிட்டாக பறந்தான்.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை  காலையில் நந்தனின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.நந்தன் தான் அழைப்பை எடுத்தான் 

"ஹெலோ யாரு?".

"ராஜி இருக்காங்களா?" 

"நீங்க யாரு.?"

"அவங்களோட நாத்தானார் ஜானகி பேசறேன்னு சொல்லுங்க"

"கட் பண்ணிட்டு பத்து நிமிஷம் கழிச்சிக் கூப்பிடுங்க ஆமா ஏதாவது அவசரமா?" என்றான் அவரது குரலில் இருந்த பதட்டத்தைப் பார்த்து.

"ஆமா தம்பி எங்க அண்ணா ஆக்சிடண்ல இறந்துட்டாரு" என்று அந்தப் பக்கம் அழுக.

'யாரோ இறந்துட்டாங்க'  என்று எண்ணியவன்,  "சரிங்க சொல்லிடறேன்" என அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

"சரி சொல்லிடுவோம் இல்லனா இதுக்கு வேற தாம் தூம்ன்னு குதிப்பான் அந்த வள்ளு" என்று எண்ணிக் கொண்டே வெளியே வர.  "நந்து" என்றார் மார்த்தாண்டம்

"ம்ம் சொல்லுங்கப்பா"

"கட்டுகம்பி வரலையின்னு சொன்னாங்க,  ஒரு எட்டு கடை வரைக்கும் போய் பார்த்துட்டு வா"

"வண்டி தறீங்களா? போய்ட்டு வர்றேன்".

"வண்டில போறதுன்னா இவனுக்கு எரோப்பிளைன்ல போறது மாதிரி இருக்கும் போல" என்று முனவிக் கொண்டு சாவியை எடுத்து நீட்டினார்.

வண்டி என்றதும் நந்தனுக்கு அனைத்தும் மறந்து போனது, இறந்தது நிலாவின் அப்பா என்ற எண்ணம் கூட இல்லாமல் சாவியை வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்து விட்டான்.

அவன் வருவதற்குள் ஜானகி ஐந்து முறை அழைத்துவிட்டார், ஆனால் யாரும் எடுக்கவில்லை. இப்போது தான் அலைபேசி அதிகம் புழக்கம் இருக்கிறது.அப்போதெல்லாம் தொலைபேசி தான். யாரோ ஒருவர் தான் அலைபேசி வைத்திருந்தனர்.

அன்று ஞாயிறு என்பதால் அனைவரும் புதிய வீட்டில் இருந்த வேலையை செய்துக் கொண்டிருந்ததால் யாரும் போனை எடுக்கவில்லை.

இங்கு ஜானகிக்கு யாரும் போனை எடுக்காததால் ரத்தம் அழுத்தம் உயரத் தொடங்கியது.
என்னதான் தன் அண்ணன் வீட்டிற்காக எதுவும் செய்யவில்லை என்றாலும் இறந்த மனிதனுக்கு ஒரு சடங்கு சம்பிராதாயத்தைக் கூட இவர்களால் செய்ய முடியாதா? என்ற கோவம்.

விபத்து நடந்ததும் சுற்றி இருப்பவர்கள் மருத்துவமனையில் ராமனை சேர்த்து இருக்க,  ராமனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனையில்லையே உயிர் பிரிந்து விட்டது. அவரிடம் இருந்த டைரியில் ஜானகி நம்பர் தான் முதலில் இருந்ததால் அதற்கு அழைத்து விசயத்தை சொல்லிவிட்டனர்.அவர்கள் சொல்லும் போது ராமன் இறக்கவில்லை, ஜானகியின் விபத்துதானே என தன் கணவனுடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். போன உடனே ராமன் இறந்த செய்திதான் கிடைத்தது, ஜானகியின் கணவனுக்கு தெரிந்த மருத்துவர் என்பதால் உடல்கூறு ஆய்வு எதுவும் செய்யாமல் உடலைக் கொடுத்துவிட்டனர்.

ராஜி தான் போனை எடுக்க வேண்டாம் என சொல்லிருப்பாள் என்று எண்ணியவர், மருத்துவமனையில் இருந்து தன் அண்ணனின் உடலை வாங்கிக் கொண்டு நேராக வளவன் வீட்டிற்கே கிளம்பி வந்துவிட்டார்.

வண்டி கிடைத்த சந்தோசத்தில் மார்த்தாண்டம் சொன்ன வேலையை செய்துவிட்டு அங்கிருந்து ஊரைச்  சுற்றக் கிளம்பிச் சென்று விட்டான் நந்தன்.

காடு கரை கம்மா என நண்பர்களுடன் சுற்றி விட்டு மதியத்திற்கு மேல் தான் வீடு வந்து சேர்ந்தான் அவன் வரும் போதே அந்த தெருவில் கூட்டம் அதிகமாக இருக்க

"என்னாச்சி?" என்பது போல தான் உள்ளே வந்தான்.அப்போதுக் கூட போன் வந்தது நந்தனின் நியாபகத்திற்கு வரவில்லை.

அங்கு ஒரே ஆர்ப்பாட்டமாக இருக்க என்ன என்று தெரியாமல் தள்ளி நின்றான் நந்தன்.

நந்தனைப் பார்த்ததும் மார்தாண்டம் ஏண்டா இப்படி பண்ணுன என்று அனைவருக்கும் முன் இழுத்துப் போட்டவர் பெல்ட்டை கழட்டி  அடி விலாசிவிட்டார்.

"நான் என்னப்பா பண்ணேன்?"

"எதுக்குடா போன் வந்ததை சொல்லவே இல்ல!.என்றதும் தான் நந்தனுக்கு  அழைப்பு வந்ததே நியாபகம் வந்தது.

"அப்பா அது பைக்ல"என்று முடிப்பதற்குள் மார்த்தாண்டம் அடி வெளுத்துவிட்டார்.

"உன்னால இங்க எவ்வளவு பிரச்சனைன்னு தெரியுமா? நம்பல நம்பி சொன்னா அதை சொல்றதுக்கு கூடாது உனக்கு வலிக்குதா? என்ன பையன் நீ?! என சொல்லி சொல்லி அடிக்க, அவன் அலறவும், நந்தன் அடிவாங்குவதைப் பார்க்க முடியாமல் குறுக்கே வந்து விழுந்தாள் நிலா.

"மாமா..அவங்க என்கிட்ட சொல்லிட்டு தான் போனாங்க நான் தான் விளையாடற முசுவுல மறந்துட்டேன் அவங்கள அடிக்காதீங்க" என்று அழவும். எல்லோரும் இப்போது நந்தனை விட்டு நிலாவைப் பிடித்துக் கொண்டனர்.

"சரி விடுங்க சின்ன புள்ளைக்கு நல்லது கெட்டது என்ன தெரியும், ஏதோ விளையாட்டு தனமா பண்ணிடுச்சு விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்காம மாறி மாறி அடிச்சிட்டு இருந்தா சரியாப் போய்டுமா என்ன? "  ஏதோ ஒரு குரல் சத்தம் போட,  நிலாவை விட்டுவிட்டு அவளது தந்தைக்கு இறுதிக் காரியம் செய்யத் தொடங்கினர்.


Leave a comment


Comments 1

  • F Fajeeha Fathima
  • 3 months ago

    எப்பவுமே உங்களோட கதை படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா உணர்வு பூர்வமா அடுத்து என்ன நடக்குமோ? என்ற கேள்வியோட சலிப்பு தட்டாம இன்ட்ரெஸ்டிங்கா படிக்கிற மாதிரி இருக்கும் நந்தா அந்த புள்ள நிலாவை போட்டு அந்த பாடு படுத்தினியே இப்போ பாரு உன்னை வந்து காப்பாத்துறதே அவ தான்.. வளவன் கேரக்டர் உண்மையிலே ரொம்ப நல்லா இருக்கு அக்கா டெய்லி யூடி கொடுங்க அக்கா இது என்னோட பணிவான வேண்டுகோள் ☺️🙏


    Related Post