இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-05 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 09-03-2024

Total Views: 44103

அத்தியாயம் -05


அந்த மண்டபம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நிச்சயம் ஐநூறுக்கும் மேற்பட்டோர் அங்கே திரண்டிருப்பர் என்று கூறுமளவு அப்பெரிய மண்டபம் முழுதும் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது. 

பேச்சு சலசலப்பு, மேள தாளம், பாட்டிசை என்று அனைத்து ஒலியும் சேர்ந்து எதையும் உருப்படியாக கேட்க இயலாதபடி தான் இருந்தது. ஆதித்ரன் மணப்பெண்ணின் அண்ணன் என்ற பொருப்பில் நின்று அனைத்து வேலைகளையும் ஓடி ஓடி செய்து கொண்டிருக்க, யாதவனும் மணமகனின் அண்ணன் என்ற முறையில் வந்தவர்களை வரவேற்றும் பந்தியில் சென்று தாங்கள் நிறுவகித்து இருந்த  ஒப்பந்த ஊழியர்கள் சரியாக வேலை செய்கின்றனரா என்று பார்த்துக் கொண்டும் இருந்தான்.

அந்த விசாலமான மணமேடையில் மூன்று ஆள் அமரும் அளவு அகலமுள்ள ஓமகுண்டம் எரிந்து கொண்டிருந்தது. அதன் முன் தனது பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமே உருவாய் அமர்ந்திருந்தான் யஷ்வந்த் கிருஷ்ணா.

கூர்மையான விழிகள் ஓமகுண்டத்தை பார்த்த வண்ணம் இருக்க, அழுத்தமான இதழ்கள் மெல்ல முனுமுனுப்பாய் ஐயர் கூறிய மந்திரங்களைக் கூறிக் கொண்டிருந்தன. திருமணத்தில் ஏனோ அவனுக்கு தற்போது வரை நாட்டம் இருந்ததில்லை. தனது வேலை தொழில் என சுற்றிக் கொண்டிருப்பவனிடம் தாய் அடிக்கடி திருமணப் பேச்சு எடுப்பது பிடிக்காததால் தான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று கூறி இருந்தான். ஏனோ என்ன காரணம் என்றே தெரியாமல் அவனுக்கு இந்த திருமணம் முடியாது என்ற சொல்லைக் கூறும் எண்ணத்தைக் கொடுக்கவில்லை.

ஒருவேளை தன் உடலின் தேவைக்கான தேடலாய் இதை ஏற்றுக் கொண்டோமோ என்ற எண்ணம் தோன்றியபோது அஞ்சனாவின் முகம் அவன் கண்முன் வந்து சிரித்தது. அந்த முகத்தின் சிரிப்பு ஒன்றே அவனுக்கு அடித்துக் கூறியது நிச்சயம் தான் உடல் தேவைக்காக இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று. அதற்காகவே திருமணம் செய்ய விளைவதாய் இருந்தால் தனக்கு எந்த எண்ணமும் தோன்றாத அஞ்சனாவை திருமணம் செய்ய சம்மதித்திருக்க மாட்டானே!?

இங்கு யோசனையுடன் அவன் தன் பணிகளையும் செய்து கொண்டிருக்க, அங்கு மணமகள் அறையில் கடமையே கண்ணாக பிரியாணியை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்தாள் அஞ்சனா.

அவ்வறைக் கதவில் சாய்ந்து நின்றபடி சிரித்துக் கொண்டிருந்த அர்ஜுன் மனமும் இன்னும் இந்த திருமணத்தை மனதாற ஏற்கவில்லை தான். எனினும் திருமணம் வரை வந்துவிட்டதற்கு பின்னரும் பாரா முகம் காட்டுவது சரியன்று என்று புரிந்து கொண்டு நடப்பதை ஏற்கும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டான். அதற்காக அவன் யஷ்வந்தை தன் தங்கையின் கணவன் என்ற முறையில் ஏற்றுக் கெண்டான் என்றால் அதுதான் இல்லை.

இவன் இவ்வாறு சிந்தனையில் இருக்க, திருமணம் செய்ய உள்ளவளோ சற்றும் அந்த பக்குவமின்றி அமர்ந்து உண்டு கொண்டிருந்தாள். விரதம் என்றதுமே அர்ஜுனிடம் ஒரு மூச்சு புலம்பிவிட்டாள். மனம் கேட்காமல் அவளுக்காக பிரியாணி வாங்கி வந்தவன் தங்கையுடன் தனியே பேச வேண்டும் என அதையும் இதையும் கூறி மணமகள் அறையில் இருந்தோரை வெளியே துரத்திவிட்டு அவளுக்கு அதை நீட்டினான்.

கண்களில் கோடி நட்சத்திரத்தின் மின்னலோடு அதை வாங்கியவள் கடமையே கண்ணாக உண்டு முடித்தாள். 'ஹப்பாடி' என்று கைகழுவி வந்தவளுக்கு நீரைக் கொடுத்தவன், 

“ஓகேவா?” என்க

“லவ் யூடா அஜு. இப்ப தான் கண்ணு தெளிவா இருக்கு” என்று கூறினாள்.

அதில் இரட்டையனவன் சிரித்துக் கொள்ள, தன் அலைபேசியை அவனிடம் நீட்டியவள், 

“ஒரு ஃபோட்டோ எடுடா அஜு” என்றாள். 

“அதான் வெளிய அத்தனை கேமராமேன் செட் பண்ணிருக்காங்களே அஞ்சு. இன்னும் நான் வேற எடுக்கனுமா?” என்று அர்ஜுன் வினவ, 

“ப்ச் அதெல்லாம் அவர்கூட சேர்த்து தானே எடுப்பாங்க. நான் டிபி வச்சுக்க என்னை மட்டும் ஒன்னே ஒன்னு எடுத்து குடு அஜு” என்று அவள் கூற, 

‘ஆண்டவா..’ என்று நொந்து கொண்டவன் அவள் கேட்டதையும் செய்து கொடுத்தான்.

வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்க, அவளது அணிகலன்களை சரிசெய்தவன் “ஓகே?” என்று வினவ, “ம்ம்” என்று தலையசைத்தாள். சென்று அர்ஜுன் கதவைத் திறக்க, ஆத்ரிகாவும் மால்யதாவும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.

“என்னடா பண்றீங்க? அங்க பொண்ண கூப்பிடுங்கன்னு ஐயர் ரெண்டு தடவை கூப்பிட்டுட்டாரு” என்று ஆத்ரிகா கூற, 

“அஞ்சு ரெடியா?” என்று மால்யதா கேட்டாள்.

 “நான் ரெடி தான் அண்ணி” என்று அஞ்சு கூற, 

“ஒரு நிமிஷம்” என்ற அர்ஜுன் அஞ்சுவிடம் சென்றான்.

அஞ்சனா அவனைப் புரியாது பார்க்க, தனது சட்டையிலிருந்து ஒரு சின்ன சங்கிலியை எடுத்தான். அதில் இதய பெண்டென்ட் வைத்து அதன் மேல் ‘A’ என்ற எழுத்து செதுக்கப்பட்டிருந்தது. அதை விழி விரிய பார்த்தவளுக்கு போட்டு விட்டவன் பெண்டென்டை திறக்க, இருவரும் எடுத்துக் கொண்ட ஒரு சுயமி பாதி பாதியாய் இரண்டு பக்க இதயத்திலும் இருந்தது.

“அஜு.. ரொம்ப அழகா இருக்குடா” என்று அஞ்சு கூற, மெல்லிய சிரிப்பைக் கொடுத்து, 

“நானே கூட்டிட்டு வரேன்” என்றவன் அஞ்சனாவின் ஒருபுறம் நின்று கொண்டான். மால்யதா மறுபுறம் நின்றுகொள்ள, மெல்ல நடையிட்டு தங்கத்தேர் போல் மணமேடை ஏறினாள் அஞ்சனா.

யஷ்வந்தின் அருகே அவள் அமர்ந்துகொள்ள, அய்யர் கூறும் மந்திரங்களை தானும் உடன் சேர்ந்து கூறினாள். ஐயர் கொடுத்த அர்சதையை அக்னியில் சேர்க்க அவள் கைநீட்டிய நேரம் யஷ்வந்தும் குனிய, அவள் உண்ட பிரியாணியின் மணம் அவன் நாசியைத் தீண்டியது.

அதில் சட்டென தன்னவளைத் திரும்பிப் பார்த்தவன் உள்ளுக்குள் பொங்கி வந்த சிரிப்புக்கு சம்மந்தமே இல்லாது தன் முகத்தை அமைதியாய் வைத்தபடி அவள் புறம் மெல்ல சரிந்து,

 “நல்லா சாப்டாச்சு போல?” என்க, அதிர்ந்து அவளவனைத் திரும்பிப் பார்த்தாள் அஞ்சனா.

அதில் லேசாய் இதழ் பிரியாத புன்னகையை உதிர்த்தவன் அவள் மட்டும் அறியும் வண்ணம் கண்ணடித்து விட்டுத் திரும்ப, அதில் மேலும் விழிகள் விரிய அவனை நோக்கியவள், ‘அச்சுச்சோ போச்சே’ என்றெண்ணிக் கொண்டாள்.

மீண்டும் அவள் புறம் சரிந்தவன், “போதும் பார்த்தது” என்றதும் சட்டெனத் திரும்பிக் கொண்டவளுக்கு அவளையும் அறியாமல் முகமெல்லாம் குப்பென சிவந்துவிட்டது. அவளருகே அமர்ந்து மாலையை சரி செய்தபடி, 

“என்னாச்சு அஞ்சுமா?” என்று மால்யதா வினவ, அஞ்சு பதில் கூறுவதற்குள், 

“குழந்தை மாதிரி பேந்த பேந்த முழிக்காத அஞ்சு. உனக்கு கல்யாணம் நடக்குது. ஒழுங்கா ஐயர் சொல்ற மந்திரத்தை சொல்லு. சும்மா நிமிந்து நிமிந்து பாக்காத” என்று அமுதா மெல்லொலியில் ஒரு அதட்டலைப் போட்டார்.

அதில் சட்டென முகம் வாடிய நாத்தனாரைப் பார்க்க மால்யதாவுக்கு பாவமாய் போக,

 “அத்தை அவ சின்ன பொண்ணு தானே எதுக்கு அதட்டுறீங்க..” என்றுவிட்டு, 

“நீ ஃப்ரீயா இருடா” என்றாள். அப்போதும் அதே முகவாட்டத்துடன் பொதுவாய் தலையசைத்தவள் குனிந்துக் கொள்ள, இவர்கள் உரையாடலைக் கேட்கப் பெற்ற யஷ்வந்துக்கு அமுதா மீது கோபமாக வந்தது.

அவரை ஏதும் பேசிவிடும் நோக்கத்துடன் ஆடவன் நிமிர்ந்து பார்க்க, அங்கு அமுதாவைக் கூட்டிக் கொண்டு மேடையின் ஓரம் சென்ற அர்ஜுன் அவரைத் திட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.

 “உங்க இஷ்டத்துக்கு கல்யாணத்தை வச்சுட்டு அந்த சின்ன பொண்ண நோகடிக்காதீங்கமா. இப்பகூட இந்த கல்யாணத்தை நிறுத்த எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. நான் சொன்னா அஞ்சு அடுத்த செகேண்ட் மேடைய விட்டு வந்துடுவாங்குறத புரிஞ்சுக்கோங்க” என்று அர்ஜுன் திட்ட,

 “அ..அஜு.. ஏன்டா இப்படி பேசுற? நான் என்ன அவளை திட்டவா செஞ்சேன்? எல்லாரும் பாக்குறாங்க இவ அவரையே ஆனு பார்த்துட்டு இருக்காளேனு தான் சொன்னேன்” என்று மகனை சமாளிக்க முடியாது திணறினார்.

அர்ஜுனுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதும், அர்ஜுன் சொல்தான் அஞ்சனாவுக்கு வேதவாக்கு என்பதும் திருமணம் நிச்சயமான சில தினங்களிலேயே யஷ்வந்த் தெரிந்து கொண்டிருந்தான். தற்போது அவர்கள் பேசியது கேட்காதபோதும் அவன் என்ன பேசியிருக்கக்கூடும் என்று யஷ்வந்தால் யூகிக்க முடிந்தது. அதில் ஒருபுறமாய் இதழ் விரித்து புன்னகைத்துக் கொண்டவன் மீண்டும் தன் பணியைத் தொடர, சில நிமிடங்களில் ஐயர் அந்த பொன் தாலியை அவனிடம் நீட்டினார்.

அதை தன் கைகளில் ஏந்தியவன் அஞ்சனாவைத் திரும்பிப் பார்க்க, ஓமத்தின் எரிச்சலில் கண்கள் கலங்கி சிவந்து தலை தாழ்த்தியபடி அமர்ந்திருந்தாள். 

‘இத்திருமணத்தில் விருப்பம் இருந்ததோ இல்லையோ? இனி இவள் என்னவள். இவளின் உடல் பொருள் ஆவி அனைத்திற்கும் நானும் பொறுப்பு' என்றெண்ணியவன், “அஞ்சனா” என்க, சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் கண்களோடு தன் கண்களை உறவாட விட்டவன், அந்த பொன் தாலியை அவள் சங்குக் கழுத்தில் அணிவித்து அவளைத் தன் சரிபாதியாய் ஆக்கிக் கொண்டான்.

அவன் கண்களில் தன் எண்ணங்களைத் தொலைத்திருந்த பாவையவளுக்கு அப்போது தெரியவில்லை இந்தக் காளையவன் தன் காந்தனாக மாறிட அவனுக்கு மட்டுமே தான் குழவியாக மாறப்போகும் நாள் வரவுள்ளது என்று.


Leave a comment


Comments


Related Post