இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வஞ்சிக்காதே வசீகரா -8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK012 Published on 10-03-2024

Total Views: 20451


பாகம்-8 
 பரிசாக அந்த விளக்குடன் வந்த தாளில் அவள்  பெயர் எழுதவில்லை. ஆனால்  அது யார் என்பதை அவன் மனம் கண்டுக் கொண்டது.  அந்த வரிகளையே உற்றுப் பார்த்தான். மனதில் ஏதோ ஒரு பரவசம். அவாளாலா ? ஆம் ! சட்டென ஒத்துக் கொண்டதே மனம். மூளை? யாரு? தாலி கட்டின ஒடனேயே மாலையை  அவிழ்த்து வச்சுட்டுப் போனாளே அவ தான ? பல முக்கியமான விஷயங்களை மறக்க வைக்கும் மூளை இந்த நேரத்தில் டான் என்று குப்பைகளைக் கிளறியது. நல்ல வேளை! பழைய குப்பையில் இருந்து நாற்றம் வரும் முன்பே அன்னை அழைத்து  விட்டாள் .
"ஏன்டா செந்தில்! கடை திறந்து இன்னும் நீ கோவிலுக்குப்  போய் ஒரு அர்ச்சனை கூட பண்ணல. இந்த அர்ச்சனை சாமான் எல்லாம் வாங்கி வச்சுருக்கேன். ஒடனே போயிட்டு வந்து டிபன் சாப்பிடு"
"சரி மா !" என்னதான் முறைப்படி பூஜை செய்து கடை திறந்திருந்தாலும் தனியாக ஒரு முறை கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். இப்போது இருக்கும் கோபத்திற்கு, அவனுக்கும் கோவிலுக்குச் சென்றால் மனதிற்கு நன்றாக இருக்கும் என்றேத்  தோன்றியது. தெரு முனையில் இருக்கும் பிள்ளையார்  கோவிலுக்குச் சென்றான். ஏதோ கெட்ட சம்பவம் . கோயில் மாலையில்தான் திறப்பார்களாம். சரி என்று வீட்டிற்கு வந்தவனுக்கு மனம் ஏதோ போல இருந்தது. மனதை மாற்றிக் கொண்டு  வண்டியை எடுத்தவன் வேறு ஒரு  கோவிலுக்குப் போனான். அது ஒரு பெருமாள் கோயில். முதலில் இருந்த முருகனுக்கு மூத்தோனை வணங்கி விட்டுப்  பிறகு கொடி மரத்தை விழுந்து வணங்கினான். நேரே தாயாரை பார்க்கப் போனான். "எப்பவுமே கோவில்ல முதல்ல அம்மனை  பார்த்துட்டு அப்புறமாத்தான் மத்த சாமிய பார்க்கணும்" . இவன் அன்னை சொல்லிக் கொடுத்திருந்தாள்.  
அங்கே மாகாலஷ்மி சன்னதியின் அருகில் யார் அது? அவளேதான். எதை மறக்க  அவன் கோவிலுக்கு வந்தானோ அங்கே அந்தத் தேவையே இல்லாமல் போனது. அம்பாளை பாவமாய் பார்த்தான். அவளோ "மகனே யாரு கிட்ட?" புருவம் உயர்த்தினாள் .
"ஹாய்! "
"யாருப்பா?" தலையை நிமிர்த்தினாள் நிரஞ்சனா.
செந்தில் தான் தன்னையும் அறியாமலேயே ஹாய்  சொல்லி இருந்தான்.
"ஓ! செந்திலா?.இதை கொஞ்சம் புடிங்களேன்.  தனது கைப்பையை அவனிடம் நீட்டினாள் .
"குடுங்க நான் வேணா செய்யறேன். ட்ரெஸ்  அழுக்காயிடும்" இவன்தான் கேட்டான் 
" பரவால்ல இருக்கட்டும்" பிடிவாதமாய் அவளே அங்கே இருந்த நீரை எல்லாம் துடைப்பத்தால்  தள்ளி விட்டு பிறகு மாபின்னாலும் துடைத்து விட்டு கைக் கழுவிக் கொண்டு வந்தாள் . அவள் செய்த வேலை மிகவும் பாந்தமாக இருந்தது. நிச்சயம் புதிதாக வேலை செய்வது போல  இல்லை. பழக்கப் பட்டது போலத் தான் இருந்தது. ஒரு சொட்டு நீர்த் துளிக் கூட அவள் உடையிலும் சரி, தன் உடையிலும் படவே இல்லை. மனதில் மெச்சினான். 
"சாரி!  என்னால உங்களுக்கும் லேட்டு"  சொல்லிக் கொண்டே கைப் பையை வாங்கி கொண்டாள் .
"பரவால்ல" இருவரும் சேர்ந்தே தான் சாமி கும்பிட்டார்கள். அர்ச்சனைக்குப்  பெயர் சொல்லும்போது இவள் பெயரையும் சேர்த்துக் கொண்டான். 'தன்  நட்சத்திரம்  நினைவிருக்கிறதா?' அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. 
அவனுக்கு கழுத்தில் மாலையை போட்ட பட்டர்  இவளுக்கும் கையில் பூ  கொடுத்தார். 
அவனே இவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். அவளேத் தாலியை நீட்டினாள் . அவர்கள் எதையும் யோசித்து செய்யவில்லை. எல்லாம் தானாகவேத்தான் நடந்தது.  எல்லா  சன்னதியையும் வணங்கி விட்டு இருவரும் ஓரிடத்தில் வந்து அமர்ந்தார்கள். தனக்கு கொடுத்த பூவை சிறியதாக எடுத்துக் கொண்டவள் மீதத்தை அவனிடம் கொடுத்தாள். "இந்தாங்க! உங்க வீட்டுல கொடுங்க"
மேலே ஒரு ரோஜா, கீழே சிறிய அளவு  மல்லிகை. பெரியதாக எல்லாம் அவள் முடி வைத்திருக்கவில்லை. இந்த அளவு பூவுக்குப் அந்த அளவு முடி போதும் . 
"பெரிசா முடி வளர்க்க ஆசை இல்லையா?"
"இல்லப்பா ! அத மைண்டைன் பண்ணற அளவுக்கெல்லாம் நான் சமத்து இல்ல"
"அதோட அபிஷியலா போட்டுக்க  குட்டி கேட்ச் கிளிப். குளிக்கப்  போக பெரிய கேட்ச் கிளிப். இதோ இந்த மாதிரி கோவிலுக்குப் போக ரெண்டு கால் பின்னல். வேற என்ன வேணும்?" தோள்  குலுக்கி புன்னகையுடன் சொன்னாள் . 
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. என்ன அந்த கம்மல்ல ஒரு குட்டி ஜிமிகி இருந்தா இன்னும் நல்லா  இருக்கும்"
"ஓ! அப்படியா ? வாங்கி குடுங்க போட்டுக்கறேன்"
அவனுக்கு என்ன சொல்ல வேண்டும் என்றுத்  தெரியவில்லை. 
"வாங்கிக் கொடுத்தாப் போச்சு" சொன்னவன்  சட்டென பேச்சை மாற்றினான்.
"நீங்க ரொம்பப் பாந்தமா வேலை செய்யறீங்க. இருந்தாலும் எதுக்கு நீங்க  அந்த வேலை  
செய்யணும் எங்கிட்ட கொடுத்திருக்கலாமே?"
"ஏன்? நான் மட்டும் என்ன தனி? பணமா ? கடவுளுக்கு முன்னாடி நாம எல்லாருமே சமம் தான்" அவளிடம் எந்த அலட்டலும் இல்லை. வெகு இயல்பாக இருந்தாள் .
"எப்பவுமே இந்த கோவிலுக்கு வருவீங்களா ?" அவள்தான் கேட்டாள்.
"இல்ல! கடை திறந்து இன்னும் கோவில்ல அர்ச்சனை பண்ணவே இல்ல. அதான் அம்மா போயிட்டு வரச் சொன்னாங்க. பக்கத்துல இருக்கற கோவில் மூடி இருக்கு. அதான் இங்க வந்தேன். கடை திறந்தது  ஏன் எனக்கு சொல்லல?அவள் கேட்பாளோ? சங்கடமாக இருந்தது. ஆனால் அவள் கேட்கவில்லை.
"நீங்க?"
"அடிக்கடி கோவிலிலுக்கு வர்றதில்ல. பட் இன்னிக்கு காலைல எழுந்ததுலேர்ந்தே மனசுக்கு ஒரு மாதிரி சங்கடமாவே இருக்கு"
"ஓகே "
"கிப்ட் புடிச்சிருந்துதா? நல்லா இருக்கா ? அம்மா என்ன சொன்னாங்க?"
இவன் முகம் அருகில் அவள் முகம். அழகாய் புருவம் உயர்த்தினாள் .
"ம்! வீட்டுல எல்லாருக்குமே புடிச்சிருக்கு"
"உங்களுக்கு?"
"எனக்கும்தான்"
"தேங்க்ஸ்"
"எதுக்கு?"
"புடிச்சுருக்குன்னு சொன்னதுக்கு"
சட்டென மணியைப் பார்த்தவள், 
"ஓகே செந்தில்! எனக்கு இன்னிக்கு ஒரு இம்பார்ட்டன்ட்டான மீட்டிங் ஒன்னு இருக்கு. நான் சீக்கிரம் போகணும். நாம அப்புறம் பார்க்கலாம்"
அவசரமாகக் கிளம்பினாள். 
"நானும் கடைக்குப்  போகணும்" இருவரும் சேர்ந்தே செருப்பைப் போட்டுக் கொண்டார்கள். 
மெல்லிய வார் வைத்த தங்க நிற செருப்பு அவளின் பாதங்களுக்குப் பொருத்தமாக  இருந்தது.  அவளின் ஆடையும் நகப் பூச்சும்  ஒரே நிறத்தில் இருந்தன. விரல்களைப்  பார்த்தான்  அவனின் மெட்டி இல்லாமல் வெறுமையாக இருந்தது.இவன்  மனதிற்கு ஏதோ சங்கடமாக இருந்தது. வலிய முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அவளும் அவனின் பாதங்களைத்தான் ரசித்துக் கொண்டிருந்தாள். பிரவுன், கருப்பு சேர்ந்த ரெக்ஸின் செருப்பு. அவனின் கால் நிறத்திற்கு பொருத்தமாகவே இருந்தது. அவனின் நிறம் மாநிறம்தான். இருப்பினும் கால்கள் சற்று வெளுப்பாகவே இருக்கும்.  கைகளும்தான். அந்த கைகளில் கன்னம் வைத்துக் கொள்ள ஆசை வந்தது. மாற்றிக் கொண்டாள். அவளின் கைப்  பேசி அழைத்தது.
"என்ன பாஸ்கர்?" 
"வாட்?"
"பை " சொல்லி விட்டு வண்டியை எடுக்கப் போனவன் அவளின் முகக் கலவரத்தைப் பார்த்து அருகில் நின்றுக் கொண்டான்.
நிச்சயம் ஏதோ பெரிய பிரச்சனைதான். 
"என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?"
"ஆமாம்! செந்தில் ! புதுசா ஒரு பங்களாவுக்கு நாங்க வேலை பார்த்துகிட்டு இருக்கோம். அதுக்கு தேவையான சாமான்களைக்  கொண்டு போன லாரி கட்டுப்பாட்ட இழந்து ரோட்டுல தடுப்பு சுவர் மேல மோதி நிக்குது. நல்ல வேளை ட்ரைவர் உயிருக்கு ஆபத்து இல்ல. வேற எந்த உயிர் சேதமும் இல்ல"
"சரி! பொருள் எல்லாம்?"
"சேப்  தான்"
"இப்ப உங்க ஆளுங்க அங்க யாரு இருக்கா ?"
"பாஸ்கர்"
"இப்ப பொருளை எப்படி கொண்டு போகப் போற?"
"இதோ எங்களோட வழக்கமான ட்ராவல்சுக்கு ட்ரைப் பண்ணறேன்"
கால்  செல்லவில்லை. வேகமாக செயல் பட வேண்டிய நிலை.
"லைன் போகல செந்தில். உங்களுக்கு யாராவது தெரியுமா?"
"இரு பதட்டப் படாத. என்னோட கடைக்கு வர்ற வண்டி இருக்கு. அது ஓகே வா? நிறைய பொருள் இருக்கா?"
விவரம் கேட்டுக் கொண்டு அவசரமாக அவனும் வண்டியில் கிளம்பினான். 
"செந்தில்! ப்ரசாதத்தை வீட்டுல கொடுத்துட்டு அம்மாகிட்ட சொல்லிட்டுப் போங்க" அந்த நிலையிலும் சொல்லி அனுப்பினாள் .
"சரி!  எனக்கு பாஸ்கர்  நம்பரும் லொகேஷனையும் ஷேர் பண்ணிடு, அப்டியே நான் வரேன்னு பாஸ்கர் கிட்டயும் சொல்லிடு"
"யா! ஷியூர்"
இருவரும் அவசரமாய் பிரிந்து அவரவர் வேலைகளை பார்க்கச் சென்றார்கள்.
"பாஸ்கர்! என்னடா ஆச்சு?"
அவன் நிலையை விளக்கினான் .
"சரி! போலீஸ் பார்மாலிட்டீஸ் எல்லாம் நீ பார்த்துக்கோ. உனக்கு ஹெல்ப்புக்கு செந்தில் அங்க வராரு"
"செந்தில்? எந்த செந்தில்?
"ம்! என்னோட ஹஸ்பண்ட் செந்தில்" லேசாக பல்லைக் கடித்தாள் . 
அவசரமாக அலுவலகம் சென்றவள் மீட்டிங் வேலைகளை அவள் பார்த்துக் கொண்டாள் . இங்கே இந்த வேலைகளை பாஸ்கரும் செந்திலும் பார்த்துக் கொண்டார்கள்.
முதலில் எல்லாம் செந்திலுக்கு பாஸ்கர் மீது பெரியதாக எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால்  இப்போது ஓரளவு நல்ல எண்ணம் வர ஆரம்பித்தது.
ஒரு வழியாக எல்லாம் முடிந்து பொருட்களும் அந்த பங்களாவிற்கு நல்ல படியாகவே வந்து சேர்ந்து விட்டது.
"வாங்களேன் செந்தில்! லன்ச் முடிச்சுட்டு போலாம்"
பாஸ்கரும் செந்திலும் வெளியில் மதிய உணவை முடித்துக் கொண்டார்கள். அலுவலகத்தில் இருந்த பாஸ்கரின் உணவை நிரஞ்சனா எடுத்துக் கொண்டாள் .
உணவு உண்ணும்போது இருவருக்கும் ஓரளவு பேச முடிந்தது. அவரவர் குடும்பத்தைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். பாஸ்கருக்கு ஏற்கனவே செந்தில் பற்றி தெரியும். இருப்பினும் அவன் வாய் மூலமாகவே கேட்டுத்  தெரிந்துக் கொண்டான். செந்திலின் பேச்சும் நடவடிக்கையும் நல்ல விதமாகவே இருந்தது. 'பணத்தை பாக்காம குணத்தை பார்த்திருக்கா' தோழியை மனதில் மெச்சிக் கொண்டான் பாஸ்கர். அதே சமயம் அவர்களின் பிரிவும் மனதிற்கு சங்கடமாகத் தான் இருந்தது. அன்று பிரிந்து விடலாம் என்று பத்திரத்தில் கையெழுத்துக் கேட்டவர் இன்று நிரஞ்சனாவிற்காக உணவை மறந்து நிற்கிறாரே ? நிச்சயம் மண்டை குழம்பியது.
இரவில் வந்து படுத்த நிரஞ்சனாவிற்கு  மனம் முழுவதும் அவனே வந்து நின்றான். ஏனோ அவனிடம் பேச வேண்டும் போல இருந்தது.
"இப்ப கால் பண்ணா தப்பா எடுத்துப்பாரோ?" பலமுறை யோசித்து வேண்டாம் என்று முடிவெடுத்தாள் . செந்திலோ அவள் தனக்கு நிச்சயம் அழைப்பாள் எனக் காத்துக் கொண்டிருந்தான். 
"நானே பண்ணா  என்ன? "யோசித்தான் 
"ச ! ஏதோ சாக்கு வச்சு பேசறான்னு நினைக்க மாட்டா ?"
அவனும் அவளுக்கு அழைக்கவில்லை.
மறு  நாள் காலை,
தொடரும்........


Leave a comment


Comments


Related Post