இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 11-03-2024

Total Views: 27958

செந்தூரா 3


செந்துர மித்ரனின் பிராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்ததால், செயலி கட்டமைப்பிற்கான பணிகளை தங்கள் பிரிவில் பணிபுரியும் ஐடி ஊழியர்களிடம் பிரித்துக் கொடுத்தான் மித்ரன். கவினை மேற்பார்வையிட சொல்லி விட்டு, தான் புதியதாக தொடங்கவுள்ள பன்னாட்டு கம்பெனி அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து அதை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க தொடங்கினான்.


ஆராத்யா, “எக்ஸ்கியூஸ் மீ” என்றபடி அவன் அறையில் நுழைந்தாள்.


“வாங்க ஆராத்யா” என்று தலை நிமிராமல் சொன்னவன் தன் வேலையிலேயே மும்மரமாக இருந்தான்.


சற்றுநேரம் அவன் வேலை செய்து முடிக்கட்டும் என்று அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவனையே ரசித்து பார்த்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஒரு மணி நேரம் கடந்து விட்டதாக கடிகாரம் மணி அடிக்கவும் தான் தன்னிலை உணர்ந்தாள்.


அவள் வந்ததைகூட மறந்து விட்டான் போலும், எழுந்து அவன் அருகில் சென்றாள், அவன் காதருகே அவளின் மூச்சுக் காற்று படுமாறு குனிந்தவள், அவனின் பிரத்யேக நறுமணத்தை நன்றாக சுவாசித்தாள். தன்னையும் மீறி அவன் கன்னத்தில் முத்தமிட அவள் இதழ்கள் துடிக்க அவனை கன்னத்தை நோக்கிச் சென்றாள்.


ஏதோ சந்தேகம் கேட்கவென்று உள்ளே வந்த கவின் அவர்கள் இருவரின் நெருக்கத்தையும், ஆராத்யாவின் எண்ணமும் எளிதில் புரிந்துக் கொண்டான்.


கதவை திறந்து உள்ளே வந்த கவினை மட்டும் விழி உயர்த்தி கவனித்த மித்ரன் ஆராத்யாவின் வரவையே மறந்திருந்தான், அவள் அவனருகில் இருப்பதையும் உணராமல் மீண்டும் மடிக்கணிணியில் மூழ்கினான். உள்ளே வந்த கவின் சத்தம் எழுப்பாமல் அப்படியே திரும்பி வெளியேற எத்தனித்தான்.


“ஏய் கவின்! என்ன ஏதோ சொல்ல வந்துட்டு அப்படியே சொல்லாமல் போறே?” என்றான் விழியை மட்டும் உயர்த்தி.


“இல்ல, நான் தவறான நேரத்தில் வந்துட்டேன். சாரி, நான் அப்புறமா வருகிறேன்” என்றான் கவின் ஆராத்யாவை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டே.


கவினின் வரவால் ஆராத்யா தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து நின்றிருந்தாள். கவினின் பேச்சும் பார்வையும் குழப்ப, தன் அருகே இருப்பவளை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தான் மித்ரன்.


இவள் இங்கே நின்று என்ன செய்கிறாள்? என்று தோன்ற அவளை நோக்கி என்ன என்பது போல புருவம் உயர்த்தினான்.


“நான் வந்து ஒரு மணிநேரம் ஆகுது மித்ரன். நீங்களா எதாவது பேசுவீங்கனு பார்த்தால் நான் வந்ததே மறந்து வேலை செய்துட்டு இருந்தீங்க. அதனால் என்ன தான் அப்படி செய்யறீங்கனு உங்க அருகில் வந்து லேப்டாப்பை பார்த்தேன்” என்றாள் ஆராத்யா.


“சாரி மிஸ்.ஆராத்யா, முக்கியமான வொர்க், அதான் உங்களை சரியாக கவனிக்கலை. என்ன சாப்பிடறீங்க?” என்று உபசரித்தான் மித்ரன்.


“ஜஸ்ட் ஆரா என்று கூப்பிடுங்க. நீங்க உங்க வேலையை பாருங்க. வேலை முடியற வரைக்கும் நான் காத்திருக்கேன்” என்றபடி அவன் எதிரில் வந்து அமர்ந்தாள்.


“ஆனால் ஏன் காத்திருக்கணும்? என்னிடம் என்ன கேட்கணும்னு வந்தீங்களோ சொல்லிட்டு கிளம்பலாமே?” என்றான் மித்ரன் புருவம் உயர்த்தி.


“அது ஆபிசில் வைத்து எல்லாம் சொல்ல முடியாது. வேலையை முடிச்சிட்டு என்னை எங்காவது வெளியில் கூட்டிட்டு போங்க, அப்போ சொல்றேன்” என்றாள் மர்மாக சிரித்தபடி.


ஆனால் தான் ஏன் அவளோடு செல்ல வேண்டும் என்று தோன்றவும் மறுப்பாக எதையோ சொல்ல வந்த மித்ரனை அழைத்தான் கவின்.


“மித்ரன், கொஞ்சம் ஊழியர்கள் இருக்கும் தளத்திற்கு வர்றீங்களா? அவங்களுக்கு கோடிங்ல் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறதாக சொல்றாங்க” என்றான் கவின்.


“ஓகே ஆரா. நீங்க வெயிட் பண்ணுங்க. நான் என்னனு பார்த்திட்டு வரேன்” என்று சொல்லி விட்டு கவினுடன் சென்றான் மித்ரன்.


அறையைவிட்டு வெளியே வந்ததும், “மித்ரன், அந்த பொண்ணு கூப்பிட்டால் மறுக்காமல் அவ கூட போய்ட்டு வா” என்றான் கவின்.


“ஏய் என்னடா சொல்ற? அவள் யாருனு தெரியுமில்ல? இந்த கம்பெனி முதலாளியின் தங்கை பெண், முக்கிய பங்குதாரரான சங்கரபாண்டியனின் ஓரே செல்ல பெண். அவளை எப்படிடா நான் அழைத்துச் செல்ல முடியும்?” என்றான் மித்ரன்.


“அதையே தான் நானும் சொல்றேன். அவளாக உன்னை அழைத்தால் அதற்கு மதிப்பு கொடுத்து அவளுடன் செல்வது தான் மரியாதை. இந்த ஊரில் இது எல்லாம் சகஜம் தானே. ஒரு பிரண்ட்லியாக தானே கூப்பிடுறா? ரொம்ப பிகு பண்ணாமல் போய்ட்டு வாடா” என்றான் கவின்.


சிறிது நேரம் யோசித்தவன், “சரி நீயும் வருவதென்றால் ஒன்றாக செல்வோம்” என்றான் மித்ரன். அவன் இதற்கு ஒத்துழைத்ததே மிகப் பெரிய விஷயம் என்று கவினும் அவனை மேலும் வற்புறுத்தவில்லை.


மித்ரன் ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று அவர்களின் சந்தேகத்தை கேட்டு தெளிவு படுத்தினான். சில பெண்கள் வேண்டுமென்றே அவன் அருகாமைக்காக சந்தேகத்தை கேட்டு கொண்டே இருந்தனர். மித்ரனும் சலிக்காமல் அவர்களுக்கு விளக்கம் சொல்லி விட்டு தன் அறையை நோக்கி நகர்ந்தான்.


பின்னால் வந்த கவினோ, “ஒரு பொண்ணு விடாமல் உன்னை அப்பட்டமாக சைட் அடிக்கிறாளுங்க, நீயும் கண்டு கொள்ளாமல் கெத்தை அப்படியே மெயின்டைன் பண்ற! எப்படி மச்சி? உன் இடத்தில் வெறோருத்தன் இருந்திருந்தால் ராஜ வாழ்கை வாழ்ந்திருப்பான்” என்று பெருமூச்சு விட்டான் கவின்.


நண்பனுக்கு புன்னகையையே பதிலாகச்  சொல்லி விட்டு அறைக்குள் சென்றான் மித்ரன். அதன் பிறகு ஆராத்யாவும் அவனை தொல்லை செய்யாமல் அந்த அறையின் மூலையில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி தன் கைப்பேசியில் மூழ்கிவிட்டாள்.


இரவு ஏழு மணிக்கே வேலையை முடித்து சோம்பல் முறித்தவன், அப்போதே ஆராத்யாவை பார்த்தான். இன்னுமா இவள் கிளம்பவில்லை? “ஆரா, ஏன் இவ்வளவு நேரம் காத்திருக்கீங்க? இன்னொரு நாள் எங்காவது சென்றிருக்கலாம் தானே?” என்றான் 


“இல்ல மித்ரன் உங்க கிட்ட பேசணும்” என்றவளை பார்த்து புருவம் சுருக்கி, “என்ன சொல்லுங்க?” என்றான். “இங்கே எல்லாம் சொல்ல முடியாது, என்னை வெளியில் கூட்டிட்டு போங்க” என்றாள் அழுத்தமாக. நெற்றியை அழுந்த தேய்த்தபடி “சரி வாங்க போகலாம்” என்றான்.


அவன் எழுந்து நடக்கவும் அவனோடு சென்றவள் அவன் முழங்கைகளில் தன் கைகளை இணைத்துக் கொண்டாள். அவள் கையை நாசூக்காக விலக்கியபடி லிப்டில் நுழைந்தான். அவளும் அவனோடு நுழைந்தவள் வைத்த கண் வாங்காமல் அவனையே குறுகுறுவென பார்த்தாள். அவள் பார்வையை தவிர்க்க எண்ணி கவினை போனில் அழைத்து பேசினான்.


அவர்கள் கீழே சென்றதும் கவின் கருப்பு நிற பிஎம்டபுள்யூ காரில் இவர்களுக்காக காத்திருந்தான். மித்ரன் முன்பக்க சீட்டில் அமரவும் வேறு வழியில்லாமல் ஆராத்யா பின்பக்க சீட்டில் அமர்ந்தாள். 


கண்ணாடி வழியே கவினைப் பார்த்து முறைத்தாள். சங்கடமாக நெளிந்தபடி சத்தமில்லாமல் வாயை அசைத்து “சாரி” என்றான். உன் சாரி எல்லாம் வேண்டாம் என்பது போல தலையை திருப்பிக் கொண்டாள் ஆராத்யா.


“கவின் ஏற்கனவே நேரம் ஆகி விட்டதால் எதாவது ரெஸ்டாரன்ட்டில் வண்டியை நிறுத்து, பசிக்கிறது அப்படியே சாப்பிட்டுக் கொண்டே ஆராவிடம் என்ன விஷயம் என்று கேட்டுக் கொள்வோம்” என்றான் மித்ரன்.


ஆராத்யாவின் முகம் சுருங்கி போனது, ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ளாமல் ஏதோ பிசினஸ் மீட்டிங் போல நடந்துக் கொள்கிறோனே என்று உள்ளுக்குள் கோபமாக வந்தது. இருந்தாலும் அதை முகத்தில் காட்டாதவாறு அமர்ந்திருந்தாள்.


மூவரும் ரெஸ்டாரன்டில் நுழைந்து தனியாக இருந்த மேஜையை தேர்ந்தெடுத்து அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். ஆராத்யா கவனத்துடன் மித்ரனின் அருகில் அமர்ந்தாள். கவினே அவர்கள் மூவருக்கும் ஆர்டர் செய்தான். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே மித்ரன் ஆராத்யாவிடம் என்ன விஷயம் என்று கேட்டான்.


“மித்ரன் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் தனிமையில் சொல்லணும். இப்படி எல்லாரும் இருக்கும் இந்த ரெஸ்டாரண்டில், அதுவும் எதிரில் ஒரு மூன்றாம் நபரை வைத்துக் கொண்டு அதை எல்லாம் சொல்ல முடியாது” என்றாள் கடுப்புடன்.


அவள் பேசியது கவின் மனதை சுருக்கென்று தைக்க, சாப்பிடுவதை விட்டு அப்படியே எழுந்தான். “ஆரா! என்ன இப்படி பேசிட்டிங்க. கவின் ஒண்ணும் மூணாவது மனுஷன் இல்லை. அவனுக்கு தெரியாமல் நீங்க எந்த விஷயமும் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. கவின்! நில்லுடா நானும் வரேன்” என்றபடி மித்ரனும் கோபமாக எழுந்தான்.


மித்ரினின் இப்படி எடுத்தெறிந்து பேசுவான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஆராத்யா பதறியபடி, “அய்யோ மித்ரன், கவின் இரண்டு பேரும் கொஞ்சம் உட்காருங்க. நான் சொன்னது உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிச்சிடுங்க. ப்ளீஸ் உட்காருங்க” என்றாள் கெஞ்சுதலாக.


கவின் நண்பனை பிடித்து இழுத்து அமர வைத்தான், பின்பு அவனும் அமர்ந்து உண்ண தொடங்கினான். சிறிது நேரம் மூவருமே பேசிக் கொள்ள வில்லை. கவின் தான் ஆராத்யாவை பார்த்து பேசும் படி சைகை செய்தான்.


“மித்ரன், ஐ யம் இன் லவ் வித் யூ” என்றாள் ஆராத்யா


“வாட், கம் அகெய்ன்” என்று அதிர்ச்சியாக கேட்டான். “உங்க காதில் சரியாக தான் விழுந்தது. நான் உங்களை விரும்புறேன். கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்படறேன்” என்றாள் ஆராத்யா மித்ரனின் கண்களை நேராக பார்த்து.


“என்ன இது ஆரா, டீன் ஏஜ் பிள்ளைங்க மாதிரி? நீங்க என்னை பார்க்கிறது இது மூன்றாவது தடவை. நான் யாரு என்னனு தெரியாமல் எப்படி இவ்வளவு பெரிய முடிவை எடுப்பீங்க? நான் உங்க மனதை கலைக்கற மாதிரி நடந்துக் கொண்டதாக எனக்கு நினைவில்லை, ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் என்னை மன்னிச்சிடுங்க. உங்க மனதை வேறு திசையில் மாற்றிக் கொள்ளுங்கள், உங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்” என்றான் மித்ரன் நிதானமான குரலில்.


“உங்களை பார்த்த முதல் நாளே சொல்லியிருக்க வேண்டியது. இதுவே ரொம்ப லேட் மித்ரன். என்னை திருமணம் செய்துக்கறதுல உங்களுக்கு என்ன தடை? என்னை வேண்டாம் என்று நிராகரிக்க ஒரு காரணம் கூட உங்களிடம் இருக்க முடியாது. என்னிடம் அழகு இல்லையா? அறிவு இல்லையா? அந்தஸ்து பணம் தான் இல்லையா? எது இல்லையென்று என்னை மறுக்க போகிறீங்க?” என்றாள் ஆராத்யா.


“உன்னிடம் எல்லாம் இருக்கிறது, அதனால் தான் உனக்கு வேறு நல்ல துணை கிடைக்கும் என்கிறேன், கவின் என்னடா பார்த்துட்டு சும்மா இருக்க? இவங்களுக்கு புரிய வைடா” என்றான் மித்ரன் இப்போது கவினை பார்த்து.


இருவரின் உரையாடலையும் மெளனமாக கேட்டுக் கொண்டிருந்த கவின் நண்பனை பார்த்து, “மித்ரன், ஆரா நியாயமாக தானே கேட்கிறாங்க? உனக்கு காதல் என்றால் தானே அலர்ஜி. ஆராவை நீ ஏன் திருமணம் செய்துக்க கூடாது? சார்லஸ் சாரும் சங்கரபாண்டியன் சாரும் சந்தோஷமாக உங்களுக்கு திருமணம் செய்து வைப்பாங்க.


இந்தியாவில் ஆரம்பிக்கும் தொழிலை நீயும் ஆராவும் சேர்ந்தே செய்யலாம். ஆரா உனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவள். நீ ஏன் அவளை திருமணம் செய்துக்க கூடாது?” என்றான் கவின்.


“என்னடா கவின் நீயும் என் நிலைமை புரியாமல் பேசிட்டு இருக்க? எனக்கு ஏற்கனவே திருமணம் ஆயிட்டுச்சிடா. நான் எப்படி ஆராவை திருமணம் செய்துக்க முடியும்?” என்றான் மித்ரன்.


அவன் பேச்சில் வாயடைத்து போய் கவினும் ஆராத்யாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள்.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post