இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 11-03-2024

Total Views: 39962

விடிந்தால் முகிலன் பூச்செண்டு இருவருக்கும் திருமணம். பாட்டியின் உடல்நலனை மனதில் கொண்டு துரிதமாகவும் உடனடியாகவும் அனைத்தும் ஏற்பாடாகி இருந்தது. அத்துடன் வீடே அரண்மனைபோல் இருப்பதால் வீட்டில் வைத்தே திருமணம் என்று முடிவாகி இருந்தது. மண்டபத்தில் வைத்து விமரிசையாக செய்ய ஆசை இருந்தாலும் பாட்டியின் கவலைக்கிடமான நிலை மற்றும் மிகக் குறைந்த கால அளவினை கணக்கிட்டு அனைத்தும் இன்ஸ்டன்டாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தன. உள்ளூரில் உள்ள சொந்த பந்தங்கள் நட்பு வட்டங்கள் அனைவருக்கும் வாய் அழைப்பு மட்டும்… நெருங்கிய வெளியூர் உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. வீட்டின் பெரியவர்கள் கல்யாண வேலையில் பிஸியாகி நிற்காது பம்பரம்போல் சுழன்று கொண்டிருக்க இளையவர்கள் பொம்மைகளாக மாறி நடப்பவற்றை வேடிக்கை மட்டுமே பார்த்தபடி இருந்தனர்.


அனைத்துமே கைமீறிப் போயிருந்தது. இறுதி ஆசை என்ற பிரம்மாஸ்திரத்தை பாட்டி பிரயோகப்படுத்தி விட்டதால் ஊமையாய் மாறி இருந்தாள் பூச்செண்டு. உணர்ச்சிகள் தொலைத்த ஜடமாய் மாறி இருந்தான் முகிலன். இவர்கள் இருவரையும் தாண்டி மீராவையும் எண்ணி கவலையுடன் உழன்று கொண்டிருந்தான் தரணி. அன்றைய நாளின் நடுநிசி தாண்டிய நேரம்… தரணியில் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது… விடிந்தால் மூவரின் வாழ்க்கை திசை மாறப் போகிறது… எதனையும் தடுக்க முடியாத சூழ்நிலை… அதற்கான உரிமையும் தனக்கு இல்லை. 


முகிலனின் வெளிறிய முகத்தை பார்க்கவே முடியவில்லை… பூச்செண்டு கண்ணில் தட்டுப்படவே இல்லை… அறையே கதி என அடைந்து கிடந்தாள்… மீரா இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்ற பயம் வேறு… அனைத்தையும் தாண்டி இன்னும் ஏதோ ஒன்று… சரியாக விளக்கம் பெற முடியவில்லை… ஆனால் ஏதோ புதுவிதமான ஒரு வலி… உயிரை உருவி எடுப்பது போல் சுரீர் சுரீர் என இதயத்தை ஊசி கொண்டு குத்துவது போல் இடைவிடாத அவஸ்தை. முகிலன் பிடித்தம் இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் நுழையப் போகிறான் என்பதை தாண்டி தனக்கு பிடித்தமான ஒன்று கைநழுவிப் போவதுபோல் ஓர் அவஸ்தை. எண்ணமே புதிராய் இருந்தது… ஆனால் அந்த அவஸ்தையை புரிந்து கொள்ள முடிந்தது. இதுதான் என்று சரி வர புரியாமல் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்.


“Dharani… relax… everything will be alright… don't complicate anything…” முனுமுனுப்பாய் தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டான். 


உறக்கம் வராமல் புரண்டு படுத்தவன் பக்கத்து படுக்கை காலியாக இருப்பதை அப்போதுதான் கவனித்தான். முகிலன் அங்கு இல்லை… இவன் எங்கே…? இரவு படுக்கைக்கு வரும்போது அவன் முகத்தில் நிறைய கலவரத்தை கண்டிருந்தான். அவனது வேதனை புரிந்தது… ஆனாலும் எதுவும் செய்ய முடியாதே… இந்த நேரத்தில் அவன் இல்லாமல் போக மெலிதாக இதயத்தில் பயம் பிடித்துக் கொண்டது. ஏதேனும் விபரீதமாக முடிவெடுத்துவிட்டால்…? திக்கென்ற அதிர்வுடன் வேகமாய் அறையில் இருந்து வெளியேறினான்.


அதிகாலை 6:00 மணிக்கு முகூர்த்தம் என்பதால் முன்னதாகவே அனைவரும் படுக்கைக்குச் சென்று இருந்தனர். வீடு அமைதியாக இருந்தது… திருமண வீடு இருளாக இருக்கக் கூடாது என்பதால் வீடு முழுக்க அனைத்து விளக்குகளும் பளிச்சென எரிந்து கொண்டிருந்தன. மெல்ல நடையிட்டு ஒவ்வொரு இடமாக முகிலனை தேடினான் தரணி. எங்கும் அகப்படவில்லை. ‘லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடி போயிட்டானா…?’ மனம் ஏதேதோ சிந்தித்தது. இறுதியாக மொட்டை மாடிக்கு ஓடினான். கைப்பிடிச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தபடி தொலைவை வெறித்துக் கொண்டிருந்தவனை பார்த்த பிறகுதான் மூச்சே சீரானது… அவனை நெருங்கி தோள் தொட்டான்.


ஸ்பரிசம் பட்டு வேகமாய் திரும்பியவன் முகம் முழுக்க கண்ணீர்… ஏற்கனவே நிறைய அழுதிருப்பான் போலும்… கண்கள் வீங்கி சிவந்திருந்தன… அருகில் தன் ஆருயிர் நண்பனை கண்டவன் ஊமையாய் உகுத்துக் கொண்டிருந்த கண்ணீர் உடைப்பெடுக்க அவனை இறுக்கி அணைத்து சத்தமிட்டு அழுதான். அவனது வெடித்து வெளிவந்த அழுகையில் அவனது அளவுகடந்த வேதனை அப்பட்டமாய் தெரிந்தது… தரணிக்கும் கண்கள் கலங்கின… அவன் மேல் மெலிதான கோபமும் எழுந்தது. அவனது அசட்டை தானே இத்தனை பிரச்சனைக்கும் காரணம்… இத்தனை காதலை மனதில் சுமந்திருப்பவன் முன்கூட்டியே தன் குடும்பத்தினரிடம் கூறியிருக்க வேண்டாமா…? பாதிப்பு இவனுக்கு மட்டும் அல்லவே… பூச்செண்டு மீரா என்று கூடுதலாய் இரு பெண்களும் அல்லவா பாதிக்கப்படப் போகிறார்கள். ஆனாலும் தன் நண்பனை தேற்றியாக வேண்டிய கட்டாயம்.


“முகில்… என்னடா இது…? எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்குடா…” அவன் முதுகை வருடினான்.


“மீ..மீ..மீரா…” அடுத்து பேச முடியாமல் அழுதான்.


“புரியுது… அவகிட்ட நான் பேசுறேன்…”


“அ..அவ எ..என்கூட பே..பேசினா…” வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்தபடியே கூறினான்.


“எ..எல்லாத்தையும் சொல்லிட்டியா…?” படபடப்பு தொற்றிக் கொண்டது.


“நா..நான் பேசுறதுக்கு முன்னாடி அ..அவ எல்லாத்தையும் பேசிட்டா…”


“அவளுக்கு இங்கே நடக்கிற எதுவும் தெரியாதே.. அப்புறம் எப்படி…?” கேள்வியாய் புருவம் வளைத்தான் தரணி.


“இ..இது வே..வேற வி..விஷயம்…” முகிலனின் குரல் உள்ளடங்கி இருந்தது.


“வேற விஷயமா..? அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ற அளவுக்கு எல்லாம் அவளுக்கு யாருமே கிடையாதே‌‌. அப்புறம் என்ன…?” 


இதுவரை கவலை படிந்திருந்த முகிலனின் கண்கள் தற்போது குற்ற உணர்ச்சியுடன் தரணியை ஏறிட்டன.


“என்னடா… என்ன விஷயம்…?” சற்று குரல் உயர்த்தி கேட்டான் தரணி.


“மீ..மீரா… மீ..மீரா…” எச்சில் கூட்டி விழுங்கினான்.


“டேய்… என்னோட பல்ஸை ஏன் அதிகப்படுத்துற…? என்னன்னு சொல்லித் தொலையேன்டா…” தரணியின் இதயம் எக்குத்தப்பாய் துடித்தது.


“மீ..மீரா க..கன்சீவா இருக்காடா…” தரையை பார்த்தபடியே இரங்கிய குரலில் கூற “வ்வாட்…” உச்சபட்ச அதிர்ச்சியில் சத்தமிட்டு கத்தி இருந்தான் தரணி.


“Come again….” கண்கள் சுருக்கி முகிலனை அழுத்தமாய் பார்த்தபடியே மீண்டும் கேட்க “மீ..மீரா பிரக்னண்டா இ..இருக்கா… எ..என் குழந்தையை வ..வயித்துல சு..சுமக்கிறா…” கடகடவென கண்ணீர் உருண்டு தரையில் விழ தழுதழுத்த குரலில் கூறியவனின் சட்டையை தாவிப் பிடித்திருந்தான் தரணி.


“பாவி… படுபாவி… அந்த அப்பாவி பொண்ணை கர்ப்பம் ஆக்கிட்டியாடா…?” குரல் உடைய கேட்க குற்ற உணர்ச்சி குறுகுறுக்க அமைதியாய் தலை கவிழ்ந்து நின்றிருந்தான் முகிலன்.


“பொறுக்கி நாயே…” பல்லை கடித்து உறுமியவன் அவனது இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான். அமைதியாக அனைத்தையும் வாங்கிக் கொண்டான் முகிலன்.


“எப்படிடா…? எப்படி இந்த அளவுக்கு மட்டமா இறங்கின…? அவளுக்கு யாருமே இல்ல என்ன வேணா பண்ணலாம்னு தைரியமா இந்த வேலை பண்ணிட்டியா… அவ உடம்புக்கு ஆசைப்பட்டுதான் காதல்னு போலித்தனமா அவளை ஏமாத்தினியா…”


“தரணீஈஈ…”


“உன் மேல எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தா அவளையே உனக்கு கொடுத்திருப்பா… இப்போ அவளை கர்ப்பமாக்கி அவ வாழ்க்கையும் கெடுத்து இன்னொரு பெண்ணோட வாழ்க்கையையும் கெடுக்கப் போற… நீ எல்லாம் மனுஷனாடா…? உன்ன…” மீண்டும் உச்சியில் வெறியேற முகிலனை சரமாரியாக அடித்தான்.


“உடம்பு வெறி புடிச்ச மிருகமாடா நீ… கல்யாணத்துக்கு முன்னால ஒரு பொண்ணு மேல கை வைக்கிறேனா நீ எந்த அளவு கேடுகெட்டவனா இருப்ப… உன்னை என் நண்பன்னு சொல்லிக்கவே நான் வெட்கப்படுறேன்…” கொத்தாய் பிடித்திருந்த முகிலனின் சட்டையிலிருந்து கைகளை உதறி தன் தலையை அழுந்த கோதினான் தரணி. நிலைகொள்ளாமல் உடல் நடுங்க இங்கும் அங்கும் நடையிட்டான்.


“ஏன்டா இப்படி பண்ணினே…?” கோபம் ஆற்றாமையாய் மாறி இருக்க “பாவம் இல்லையாடா மீரா…” சொன்னபடியே அவன் உச்சி முடியை அழுத்தமாய் பிடித்து இழுத்தான்.


“என்னை அடிச்சே கொன்னுடு தரணி… எனக்கும் வாழ பிடிக்கல… அதுக்கான தகுதியும் எனக்கு இல்ல… நீ நினைக்கிற மாதிரி மீராவை உடம்பு மேல ஆசைப்பட்டு காதலிக்கலடா… மனசார விரும்பினேன்... இப்பவும் என் மனசு முழுக்க அவதான் இருக்கா… அவ மேல இருக்கிற அளவு கடந்த காதல்னாலதான் எல்லை மீறிட்டேன். தப்புதான்… பெரிய தப்புதான்… இப்படி விபரீதமாகும்னு நான் நினைக்கலடா… என்னைக்கா இருந்தாலும் அவதான் என் மனைவின்னு உரிமையில அப்படி நடந்துக்கிட்டேன்… அ..அவ பிரக்னண்டா இருக்கிற விஷயம் இப்போதான் எனக்கு தெரியும்… இந்த விஷயம் என் வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சா அப்பத்தா மட்டும் இல்ல மொத்த குடும்பமும் தூக்குல தொங்கிடும்… நா..நான் என்ன பண்ணட்டும்…?” முகத்தில் அடித்துக் கொண்டு அழுதவன் வேகமாய் தன் கண்ணீரை துடைத்து இறுக்கமாய் நிமிர்ந்தான்.


“இதுக்கு ஒரே தீர்வுதான்… எல்லாரையும் கொன்னு என் மீராவையும் கொன்னு காலம்பூரா ஒரு பிணமா என்னால வாழ முடியாது… நான் செஞ்ச தப்புக்கு நான்தான் தண்டனை அனுபவிக்கணும்… பேசாம நான் செத்துப் போயிடறேன்…”


வெறி வந்தவன் போல் பேசியவன் வேகமாய் ஓடிச் சென்று கைப்பிடிச் சுவற்றின் மேல் ஏற சடுதியில் நிலவரம் உணர்ந்து புயலான பாய்ந்து சென்று அவனை தாவிப் பிடித்து கீழே இறக்கி இருந்தான் தரணி.


“என்ன விடுடா…” நான் சாகணும்… இல்லேன்னா நீயே என்னை கொன்னுடு…” 


பைத்தியக்காரன் போல் கத்தியவனை தள்ளி இழுத்துச் சென்று ஓரமாய் அமரவைத்தான் தரணி. தன் தலையில் மடீர் மடீர் என அடித்தபடி முகிலன் சத்தமிட்டு அழுது கொண்டிருக்க தரணியின் கோபம் குறைந்து அவன் மேல் இரக்கம் பிறந்தது. கீழ் உதட்டை கடித்தபடி அமைதியாக சில நிமிடங்கள் நின்றவன் முகிலனின் அருகில் சென்று அமர்ந்து அவன் தோளில் கை வைக்க தன் நண்பனின் கழுத்தை கட்டிக்கொண்டு சிறு குழந்தை போல் இன்னும் கூடுதலாய் அழுதான் முகிலன்.


அந்த அழுகையில் பொய்யில்லை..

 தன் மேல் தான் கொண்ட கோபம் தெரிந்தது… மீராவிற்கான காதல் தெரிந்தது... தன் குடும்பத்தினரின் மேல் கொண்டிருந்த நேசம் தெரிந்தது… அனைத்தையும் தாண்டி இயலாமை தெரிந்தது‌.


“ஆரம்பத்தில இருந்தே உனக்கு எல்லா விஷயத்திலும் அவசரமும் அசட்டையும் தான்டா… உன்னோட இந்த கேரக்டரை மாத்திக்கோன்னு பல தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேன்… இப்போ பாத்தியா எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்குன்னு…” தரணியின் குரல் முழுக்க ஆதங்கமும் வேதனையும் மட்டுமே.


“காதல்ல கண்ணியமும் கட்டுப்பாடும் இருக்கணும்டா… அப்படி இல்லைன்னா அந்த நேசம் அசிங்கப்பட்டுதான் நிக்கும். காலம்பூரா தீராத பழிச் சொல்லை கொடுத்திடும்… இப்போ நீ பண்ணி வச்சிருக்கிற வேலையால உன் கேரக்டர் மட்டுமில்ல மீராவோட கேரக்டரும் சேர்ந்து அசிங்கப்படாதா… அவ பாவம் இல்லையா…?” 


பூச்செண்டிற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்த தரணியின் மனம் மீராவிற்காக இப்போது அதிகமாக வருந்தத் தொடங்கியது. கைகள் இரண்டையும் கோர்த்து குனிந்து நிலையில் அமைதியாக அமர்ந்திருந்தான் முகிலன். தன் தாடையை தேய்த்தபடி அழுத்தமான யோசனையுடன் எங்கோ வெறித்திருந்த தரணி தனக்குழ் ஏதோ எண்ணமிட்டு ஏதோ தீர்மானித்து ஒரு முடிவுடன் ஆழ்ந்த மூச்செடுத்தான்.


“சரி வா… கீழே போகலாம்… இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும்… ஒரு மணி நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு நீ ரெடியாகு…”


“த..தரணி… நா..நான்…” கண்கள் அலைப்புற வேதனையுடன் பார்த்தான் முகிலன்.


“நான் பாத்துக்குறேன்டா… எந்திரி…”


“என்ன பாக்கப் போறீங்க தம்பி…?” உடைந்த கமறிய குரல் பக்கவாட்டில் இருந்து கேட்க திடுமென்ற அதிர்வுடன் இருவரும் வேகமாய் திரும்பினர்.


கண்ணில் நீருடன் அங்கு நின்று இருந்தார் மாணிக்கவேல்… அருகில் புடவை தலைப்பால் வாய்மூடி சத்தமின்றி அழுதபடி மல்லிகா… தரணியும் முகிலனும் அதிர்ச்சியுடன் தன்னிச்சையாய் எழுந்து நின்றனர்.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post