இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 01 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 11-03-2024

Total Views: 29347

காதலொன்று கண்டேன்!

தேடல்  01


இரவுகள் விசித்திரமானவை.பலருக்கு நினைவேதுமின்றி உறக்கத்தை அள்ளித் தந்திடும்.சிலருக்கு நினைவுகளை கொடுத்தே அந்த உறக்கத்தை இழுத்துப் பறித்திடும்.

வன்மிகு நினைவுகளால் பல நாள் உறக்கத்தை தொலைத்தவன் தான் அவனும்.ஆனால்,அன்றைய இரவில் சில அழகிய நினைவுகள் அவனின் நிகழை தமக்குள் கட்டியிழுத்து சுருட்டிக் கொண்டிருக்க விழி மூடாமல் விட்டத்தை பார்த்தவனின் இதழ்களினோரம் சிறு புன்னகையும் கசிந்திருந்தது.

அவளின் காதல்,அவனின் இறுகியிருந்த இதயத்தை இறுகப்பற்றி இழுத்தெடுத்து இறுக்கம் தளர்த்தி இளகிடச் செய்து இதம் தந்திட அதன் பிரதிபலிப்பாய்
இளநகையை தத்தெடுத்திருந்தன,
அவனிதழ்கள்.

விழி திறந்தால் அவள் நினைவு..
இமைத்தாழ் இட்டால் அவள் பிம்பம்..
கனவுகளையும் நினைவுகளையும் களவாடும் இந்தக் காதல் சுகமான இம்சையாய்த் தான் தெரிந்தது,அவனுக்கும்.

புரண்டு புரண்டு பார்த்தவனுக்கு உறக்கம் வரும் சாயலே புலப்படாதிருக்க தலையணையை வைத்து கட்டிலில் சாய்ந்து கொண்டான்,
கொஞ்சம் சரிவாகவே.

இரவு விளக்கு மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்க மெல்லிய வெளிச்சமே பரவியிருந்தது,அந்த விசாலமான அறையில்.

விரல்களை கோர்த்து பின்னந்தலையில் வைத்தவனுக்கு ஏனோ அவள் வரவின் பின் அவனின் வாழ்க்கை மொத்தமும் மாறிப் போன உணர்வு தான்.

அவளின்றி அவன் வாழ்க்கை ஒன்றும் அத்தனை கடினமாய் இருக்கவில்லை.
மகிழ்வுக்கும் சுவாரஷ்யத்துக்கும் கூட அந்த வாழ்க்கையில் பஞ்சம் இருக்கவில்லை.
ஆனால்,அவனில் இருந்த வெறுமை அவள் அருகாமையில் தொலைந்து போகும் மாயை என்னவென்று அவனுக்குப் புரியவேயில்லை.

அவளின்றி வாழ்ந்தான் தான்.வாழாமல் இல்லை.ஆனால்,இப்போது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும் உணர்வு.மனம் முழுக்க நிறைந்திருப்பதாய் ஒரு நினைவு.

எழுந்து சென்று தன் பையில் இருந்த டயரியை எடுத்தவனின் இதழ்கள் மீண்டும் புன்னகைத்துக் கொண்டன.

விளக்கைப் போட்டு விட்டு சாவகாசமாய் அமர்ந்து கொண்டவனுக்கு அந்த தினக்குறிப்பை புரட்டிடும் போதோ நினைவுகள் நிழலாடி ஒரு வித சிலிர்ப்பை தந்தன.

அவளைப் பற்றி நினைப்பதை எல்லாம் கிறுக்கி வைத்திருக்கும் இந்த தினக்குறிப்பின் தாள்கள் கூறும் சாட்சியம் போதும் அவனின் காதலுக்கு.

அவள் மீதான அவனின் உணர்வுகளை காதல் என்ற ஒற்றை வார்த்தைகளுக்குள் அடக்கி விட முடியாவிடினும் அதைத் தவிர பொருத்தமான பெயரும் இல்லையே.

அவளின்றி அவனுக்கு நொடிகள் நகர்வதில்லை போல அவள் பெயரை சுமக்காது அவனின் தினக்குறிப்பின் தாள்களும் புரட்டப்படுவதில்லை.

ஏதும் இல்லாது போய்விடின் வெறுமனே பெயரையாவது கிறுக்கி விட்டு..
ம்ஹும் கிறுக்கல் எழுத்துக்களில் நேர்த்தியாய் முடிந்த வரை அழகாய் எழுதி விட்டுத் தான் ஓய்ந்திடும் அவன் விரல்கள்.

இத்தனை பைத்தியக்காரத்தனமாய் அவனாலும் காதலிக்க முடியும் என்று அவன் உணர்வதே அவளைக் காதலிக்கும் பொழுது தானே.
ஏனோ அந்த உணர்வுகள் எல்லாம் புதிதாக இருந்தது.

ஏன் இந்த நொடி கூட தொழில் வட்டாரத்தில் யாரேனும் புன்னகை உறைய பருவ வயதுப் பையன் போல் தடுமாறித் தவிக்கும் அவனைப் பார்த்திருந்தால் உறைந்திட்டாலும் அதிசயம் இல்லை.
வெளியில் அவன் காட்டும் முகம் அப்படியல்லவா..?
அதில் யாரைத் தான் பிழை சொல்ல..?

இந்த நொடி கூட அவளைப் பற்றி தான் கிறுக்க முயன்று கொண்டிருந்தன,அவன் விரல்கள்.வார்த்தைகள் வரவில்லை.
ஆனால்,மனதுக்குள் வர்ணங்களால் ரங்கோலி.

ஆழமான எதையும் உணரத்தான் முடியும்.
உணர்வதை யாருக்கும் உணர்த்திட முடியாது.அது போன்று தான் அவன் காதலும்.

அந்த உணர்வின் ஆழம் அவனும் அந்த இறைவனும் அறிந்தது.
அவளிடம் காலம் முழுக்க நில்லாமல் காதல் மொழி பேசினாலும் அவனின் காதலை அவளுக்கு உணர்த்தி விட இயலாது.

அப்படியொரு காதல்.
அவளுக்கே அவளுக்கென அவளுக்கு மட்டுமென ஆழமாய் முதலும் முடிவுமாய் ஒரு காதல்.

"லவ் யூ.." என்கின்ற வார்த்தைகளும் அவனின் விழிமொழியும் அவளுக்கு காதலை உரைத்திடும்.ஏன் கொஞ்சமே கொஞ்சமாய் உணர்த்திடவும் கூடும்.
ஆனால்,முழுதாய் உணர்த்த..?

அவன் காதலை முழுதாய் உணர்த்தி அதன் ஆழம் காண அவனுக்கும் அவளுக்கும் எத்தனை பிறவிகள் தேவைப்படுமோ..?
யாரறிவர்..?

சிறு புன்னகை மின்ன தினக்குறிப்பின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தவனின் அலைபேசி சத்தமிட யோசனையுடன் கையில் எடுத்தவனின் மனதில் ஒரு வித அமைதியின்மை.

தோழன் தான் அழைத்திருந்தான், அந்த அர்த்த ராத்திரியில்.

"ஹலோ சொல்லு மச்சான்.." அழைப்பை ஏற்று அவன் சொன்ன மறுநொடி மூச்சு விடாமல் பேசி முடித்த தோழனின் வார்த்தைகளில் உறைந்து போனான்,ஒரு கணம்.

அடுத்த மூன்று மணிநேரத்தில் தன் வீட்டில் இருந்தான்,அவன்.

பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தவனை காண உள்ளம் வலித்தது,தோழனுக்கு.
அவனுக்கு ஆறுதல். சொல்ல தோழன் வார்த்தைகளை தேடத் தான் வேண்டும்.

கருகியிருந்த உடலை வெறித்தவாறு அமர்ந்திருந்தவனின் விழிகள் சிவந்திருக்க அவன் முகத்தில் இருந்த அழுத்தம் தோழனை உலுக்கி எடுத்தது.

அதற்குள் காவல் துறையினர் வந்து உடலை எடுத்துக் கொண்டு சென்ற பின்னும் அவனிடம் அசைவில்லை.பயமாய் இருந்தது,தோழனுக்கு.
அடித்தாவது அழ வைக்க வேண்டும் என்கின்ற எண்ணம்.

அவளின் தோழி ஒருத்தி கதறி தீர்த்துக் கொண்டிருக்க ஒரு கணம் அவள் மீது படிந்தது,அவனின் பார்வை.

மறு கணமே உயிர்த்தோழனை உயிரை உருக்கும் வலியுடன் பார்த்தான்,
அவன்.அந்த விழிகளில் தெரிந்த வலியில் தோழன் மனதால் செத்து விட்டிருக்க தோழனின் கண்களும் கலங்கிற்று.

"ம..மச்சீ..அது என்..என்னோட மித்து இல்..இல்லல.." ஒட்டு மொத்த ஜீவனையும் ஓரிரு வார்த்தைகளில் தேக்கி அவன் கேட்டிட அந்த நீர் கட்டியிருந்த விழிகளில் நீயாவது இல்லையென்று சொல்லி விடேன் என்கின்ற இறைஞ்சலுடன் சிறு மன்றாடல்.

"மச்சான்..அது உன்னோட மித்து தான் டா..அவ இனிமே வர மாட்டா.." கத்திக் கொண்டு தோழனை கட்டிக் கொள்ள தோழன் சொன்ன வார்த்தைகளை கேட்டவனின் விழியோரத்தில் இருந்து ஒற்றைக் கண்ணீர்த் துளி வழிந்தோடிட நினைவு தெரிந்த நாளில் இருந்து இரண்டாவது முறையாக அழுதவனோ மயங்கிச் சரிய திகைத்து நின்றனர்,அனைவரும்.

               ●●●●●●●●●

நடுநிசி தாண்டிய நேரம்.
அந்த வீதியில் ஓடிக் கொண்டிருந்த காரின் கண்ணாடியில் தலை வைத்து சாய்ந்து இருந்தவளின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

இலக்கின்றி பார்வை இருட்டில் திரிந்து கொண்டிருக்க எதையோ தேடிக் கொண்டு திரிந்தது என்னவோ உண்மை தான்.

அவளின் மனதில் இருப்பது அவனுக்கான தேடல் மட்டுமே.
அவனை எங்கே சென்று தேடுவதென்று தெரியாமல் தான் அந்த இருட்டில் அவள் விழிகள் சுழன்று கொண்டிருந்தன,போலும்.

அவளின் நிலமையைக் கண்ட தோழிக்கு மனம் பாரமாக வண்டியோட்டிக் கொண்டிருந்த தன் கணவனைப் பார்க்க அவனோ கண்களை மூடித் திறந்து ஆறுதல் சொன்னான்,மனைவிக்கு.

ஒரு திருப்பத்தை வண்டி கடந்த தருணம் கனவில் இருந்து விழித்தது போல் கத்தினாள்,அவள்.

"அண்ணா..வண்டிய நிறுத்துங்கண்ணா..அண்ணா.." என்க அவளின் சத்தத்தில் வண்டி சட்டென்று நின்றது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடியவளைக் கண்டு அதிர்ந்து விட்டிருந்தாள்,
தோழி.

அவளின் செயலில் பயந்து மற்றைய இருவரும் அவள் பின்னூடு இறங்கி ஓட அவளோ எதையோ துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள்,எதுவும் புரியாது.

அந்த இருளில் தெரிந்த அந்த உருவத்தில் மட்டுமே நிலைத்திருந்தது,அவள் பார்வை.

ஐந்து நிமிடங்களுக்கு மேலாக ஓடியிருப்பாள்.
அவள் ஓட்டம் நின்றது என்னவோ தனக்கு முதுகு காட்டி திரும்பி நின்றிருந்த ஆடவனின் பின்னே தான்.

"பாஸ்ஸ்ஸ்ஸ்"அவளின் ஏக்கமான அழைப்பு முன்னே நின்றிருந்தவனின் செவியை ஊடுருவி அவன் தேகத்தை சிலிர்க்கச் செய்திருக்க அந்த ஆடவனின் விழிகளும் விரிந்து கொண்டன.

உடைந்த குரலில் உள்ளத்தை ஊடுருவும் வலியுடன் அவனுக்கான காதலை பறைசாற்றிக் கொண்டு உயிரின் அடி ஆழத்தில் இருந்து ஒரு அழைப்பு.
அவளின் ஒட்டுமொத்த ஏக்கங்களும் அவளின் அவனுக்கான தேடலும் அந்த அழைப்பில் நிரம்பியிருந்தன,என்றால் மிகையல்ல.

புருவம் சுருக்கி பார்த்தவாறு திரும்பினான்,அந்த ஆடவன்.அவன் முகம் காட்டும் வரை கடந்திட்ட ஒவ்வொரு நொடியும் அவளுக்கு மீள்ஜனனம் தான்.

அவனாய் இருக்க வேண்டும்..
அவனாய் இருக்க வேண்டும்..
படபடவென இதயம் அடித்துக் கொள்ள மனமும் இதழ்களும் கடவுளிடம் கோரிக்கை வைத்தன.

வேகப் பெருமூச்சுக்கள் வெளியாகின.
சுவாசம் அழுந்தி அடைத்துக் கொண்டது.
அவனுக்காக துடிக்கும் இதயம் எம்பிக் குதித்தது.இனம் புரியா பதட்டத்தில் நெற்றியிலும் கழுத்திலும் வியர்வைத் துளிகள் அரும்பின.

பயத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொள்ள தொண்டைக்குழி ஏறி இறங்கியது.விழத் துடிக்கும் விழிநீரை இமைகள் சிமிட்டி அடக்க முயன்றன.அவனுக்கான காதலையும் தேடலையும் அவன் பிரிவின் வலியையும் அவள் விழிகள் ஒருசேர பிரதிபலித்துக் கொண்டு நிற்க மனதைத் தாண்டி அவள் ஆன்மாவும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

"பாஸ்ஸ்ஸ்ஸ்.." அவள் மீண்டும் அழைக்க முன்னே நின்றிருந்தவனின் இதழ்கள் மெலிதாய் விரிய சுவாரஷ்யம் நிரம்பிய விழிகளுடன்  திரும்பியவனைக் கண்டவளின் விழிகளில்அப்பட்டமான ஏமாற்றம்.
அடிக்கடி நடப்பது தான் என்றாலும் உயிர்த்துடிக்கும் வலியைத் தான் உணர்ந்து உடைகிறாள்,ஒவ்வொரு தடவையும்.

மீண்டும் உணர்கையில் வலிக்கவில்லை என்றால் நிச்சயம் பழகிப் போயிருக்கும்.
ஆனால்,பழகிப்போனவை எல்லாம் மறுமுறை உணரப்படும் போது வலிக்காமல் இருப்பதில்லையே.

நிறைந்திருந்த விழிநீர் அணை கடக்க பட்டென மறுபுறம் திரும்பியவளின் இதழ்களில் விரக்தியின் உச்சமாய் முறுவலொன்று தோன்ற அப்படியே சரிந்து மடங்கி அமர்ந்து விட்டிருந்தாள்,அந்த புதியவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு.

புறங்கையோ கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்க நீர்த்திரள் இன்னும் வற்றியபாடில்லை.

மூச்சிறைக்க ஓடிவந்த தோழிக்கு அவள் உடைந்து அமர்ந்திருந்த தோற்றம் அத்தனை வலியைத் தர மனதளவில் தளர்ந்து தான் போனாள்,தோழியும்.

அவளின் காதல் தோழிக்கு பெரும் பைத்தியக்காரத்தனமாய்த் தான் தோன்றியது.
எத்தனை முறை சொல்லியும் கேட்காமல் அவன் தான் வேண்டுமென்று அடம் பிடிப்பவளை என்ன தான் செய்திட அவளும்..?

அழுது கொண்டிருந்தவளின் அருகே வந்து தானும் மடங்கியமர்ந்து அவள் முகம் நிமிர்த்தி விட்டாள்,ஒரு அறை.

தோழியை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்து விட்டு அவள் அழத் துவங்க நின்றிருந்த ஆடவர் இருவருக்கும் அப்பட்டமான அதிர்வு.

"ஏன் டீ இப்டி இருக்க..? பைத்தியமா உனக்கு..?
உன் மனச அவர் கிட்ட சொல்லாம நீ எப்டி அவரு உன்ன தேடி வருவார்னு நம்பற..?
பைத்திமயாடி நீ..? புரிஞ்சுக்கோமா..இப்ப அவர் மனசுல வேறொரு பொண்ணு இருக்கு..புரிஞ்சிக்கோ..அவரு இப்போ அந்த பொண்ணத் தான் விரும்புறார்..அவர் வாழ்க்கைல உனக்கு எடம் கெடயாது..புரியிதா..?" விம்மி விம்மி அழுதவளின் கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு தோழி சொன்ன ஒவ்வோரு வார்த்தையும் அவளுக்குள் ஆழமாய் உள்ளிறங்கி அத்தனை வலித்தது.

வலிப்பவரை விட அந்த வலியை யாரால் தான் உணர்ந்திட முடியும்..?
நிதர்சனம் அவளுக்கும் புரியத் தான் செய்கிறது.
ஆனால்,மனம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமே..?

அழுது கொண்டே எழுந்து காரை நோக்கி நடந்தவளின் நடையில் இருந்த தொய்வு அங்கிருந்த மூவருக்குமே புரியாமல் இல்லை.

"சாரி..சார் அவ ஏதோ தெரியாம இப்டி நடந்துகிட்டா..சாரி.." அந்தப் புதியவனிடம் தோழி மன்னிப்பு கேட்க அவளிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு தோழியைப் பார்த்து புன்னகைத்தவனின் மனதில் அவளைப் பற்றி எண்ணம் தான் மின்னி மறைந்து கொண்டிருந்தது.

"ஏதாச்சும் லவ் மேட்டரா..?இப்டி ஒடஞ்சு போய் இருக்காங்க..?"

"ஆமா சார்..ஒரு சின்ன ப்ராப்ளம்..ரொம்ப நன்றி சார்..அவளுக்கு ஏதும் திட்டாம விட்டதுக்கு.."

"ஹா இட்ஸ் ஓகே..ஆனா அவங்கள பாக்கவும் பாவமா இருக்கு..டேக் கேர்..அவங்க எமோஷனலா ரொம்ப வீக்கா இருக்காங்கன்னு தோணுது.."

"ஓகே சார்..தேங்க் யூ.." என்றவர்கள் விடை பெற தூரத்தில் தெரிந்த அவளின் புள்ளி உருவத்தை ஒரு கணம் தொட்டு விட்டு மீண்டன,அவன் விழிகள்.

தேடல் நீளும்.

2024.03.11


Leave a comment


Comments


Related Post