இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 12-03-2024

Total Views: 40745

திடீரென மாணிக்கவேலுவும் மல்லிகாவும் அருகில் வர தரணி மற்றும் முகிலனின் உயிர் துடித்து நின்று மீண்டது. இப்படி ஒரு சூழலில் அவர்களை எதிர்பார்க்கவில்லையே…


“மா..மா..மாமா…” தரணியின் குரல் வறண்டு வெளிவந்தது.


“நாலஞ்சு நாளா இவே முகமும் சரியில்ல பூச்செண்டும் கலகலப்பு இல்லாமதான் இருக்கா… அவசரமா கல்யாணம் ஏற்பாடு ஆனதால இப்படி இருக்காகன்டு நினைச்சேன்… ஆனாலும் இன்னைக்கு பூரா என் மனசுக்குள்ள ஏதோ சரியில்லேன்டு தோணுச்சு… தூக்கம் புடிக்கல… செத்தவடம் வெளியில போய் உட்காரலாம்னு ரெண்டு பேரும் வந்தோம்… அப்போதான் கண்ணை தொடச்சிக்கிட்டே இவே மாடி ஏறி போறதை பார்த்தோம்… செத்த நேரத்துல நீங்களும் வேகமா போனீக… என்னமோ தப்பா இருக்குன்டு நாங்களும் வெரசா மேலே வந்தோம்… இவே பேசின எல்லாத்தையும் கேட்டோம். உசுரே கூட்டை விட்டு போன மாதிரி இருக்கு தம்பி… என் தங்கச்சி வயித்துல இப்படி ஒரு சல்லிப் பய பொறந்திருக்கியான்… இந்த குடும்பத்தை சந்தி சிரிக்க வச்சுட்டானே… டேய்ய்ய்…” 


முதலில் ஆற்றாமையுடன் பேசிக் கொண்டிருந்தவர் பின் கோபத்தில் கண்கள் சிவக்க முகிலனை ஆத்திரம் தீர அடித்தார். தரணியால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை… ஒரு கட்டத்தில் அவரை இழுத்துப் பிடித்து நிறுத்தினான்.


“என்னை விடுங்க தம்பி… இவே என்ன சாகிறது…? நானே இவனை கொன்னு போட்டுடறேன்… காவாலிப் பய… இவே இந்த குடும்பத்துக்கு இனி தேவை இல்ல… ஊமையா இருந்து அம்புட்டையும் மறைச்சு என் புள்ள வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துப்புட்டானே…” தன் தலையில் அடித்துக் கொண்டு கதறினார் மாணிக்கவேல்.


“விடிஞ்சா கல்யாணம்… ஊரே தெரண்டு வந்து நிக்கும்… என் புள்ளை கல்யாணம் நின்டு போச்சுன்டா அவ வாழ்க்கையே வீணா போயிருமே… என் புள்ளையை ஊரை தூத்துமே…” வாய்விட்டு புலம்பி அழுதார்.


“மாமா… பூச்செண்டு எந்த தப்பும் பண்ணலையே… அவளை யாரும் எதுவும் பேச முடியாது…” அழுதவரின் கைகளை பற்றிக் கொண்டு ஆறுதலாக பேசினான் தரணி.


“இந்த ஊரைப் பத்தி உங்களுக்கு தெரியாது தம்பி… குத்தம் யாரு செஞ்சிருந்தாலும் பொம்பள தலையிலதேன் விடியும்… எட்டு வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரிதேன் கல்யாணத்துக்கு மொத நாள் மாப்பிள்ளை வேற ஒருத்தி கூட ஓடிப் போயிட்டியான்… தப்பு அவேந்தான் செஞ்சான்… ஆனா ராசியத்தவ கல்யாணத்துக்கு தகுதியத்தவன்டு சொல்லி அந்த புள்ளைக்கு இன்னி வரைக்கும் கல்யாணம் நடக்கல… மீறி நடந்தா கட்டிக்கப் போறவனுக்கு என்னமாச்சும் ஆயிரும்டு கத கட்டி அவ வாழ்க்கையையே நிர்மூலமாக்கி உட்கார வச்சுருச்சு இந்த ஊரு… எங்க புள்ளைக்கும் அந்த நிலைமை வந்திடுமே… என் புள்ளையை இனி யாரு கட்டுவா…? இந்த பாவிப் பய பண்ணுன தப்பு என் புள்ளையை பலியாக்கிருச்சே…” தலையில் அடித்துக் கொண்டு அழுதார் மல்லிகா.


“இனி இந்த படுபாவிக்கு என் புள்ளையை நான் கட்டித்தர மாட்டேன்… என் புள்ள வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு… இனி நாங்க ஏன் உசுரோட இருக்கணும்…? மல்லி… விடிஞ்சா ஊரு முன்னால மொத்த குடும்பமா அவமானப்பட்டு நிக்கப் போறோம்… அந்த கொடுமை வேணாம்… நாம இனி உயிரோட இருக்கக்கூடாது… நம்ம புள்ளைக்கும் விஷத்தை குடுத்துட்டு நாமளும் போய் சேர்ந்திடுவோம்… இவே ராசாவா வாழட்டும்…” ஆவேசமாய் பேசிய மாணிக்கவேல் மல்லிகாவின் கையை பற்றிக் கொண்டு வேகமாய் நடக்க அவரது கையை அழுந்தப் பற்றி நிறுத்தினான் தரணி.


“மாமா ப்ளீஸ்… ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க…? இவன் செஞ்ச தப்புக்கு நீங்கல்லாம் ஏன் தண்டனையை அனுபவிக்கணும்…?” கண்களில் வேதனையுடன் அவரைப் பார்த்தான்.


“நாங்க மட்டுமா சாகப் போறோம்… எல்லா வெவரமும் தெரிஞ்சு மொத்த குடும்பமும் அடுத்தடுத்து நாண்டுக்கிட்டு சாகத்தான் போகுது… ஊரே காறி துப்பினதுக்கு அப்புறம் என் தங்கச்சியும் மாப்பிள்ளையும் மட்டும் உசுரோட இருந்துடுவாகளா… நாங்க முந்திக்கிறோம். அம்புட்டுத்தேன்… எங்களை விடுங்க…” அவர் தன் கையை உதறியபடி துள்ளினார்.


“உங்க யாரையும் நான் சாக விடமாட்டேன் மாமா… இந்த குடும்பம் அழிஞ்சு போறதை என்னால வேடிக்கை பார்க்க முடியாது… பெரிய அசிங்கம் நடந்து இந்த ஊர் முன்னால எல்லாரும் தலை குனியறதைவிட ஒரு சின்ன சங்கடத்தோட சலசலப்போட இந்த பிரச்சனையை மொத்தமா தீர்க்க முடியும்… நீங்க சம்மதிச்சா…” அழுத்தமாய் பேசியவனை புரியாமல் பார்த்தார் மாணிக்கவேல்.


“முகிலுக்கு என்ன உறவும் உரிமையும் கொடுத்தீங்களோ அதே உறவோட உரிமையோடதானே இந்த 15 நாளா உங்கள்ல ஒருத்தனா மாறி நிக்கிறேன்… உங்க எல்லாரையும் உறவு வச்சு உரிமையோடதானே கூப்பிடுறேன்… என்னையும் இந்த குடும்பத்துல ஒருத்தனா நினைச்சீங்கன்னா பூச்செண்டு கழுத்துல நாளைக்கு நான் தாலி கட்டுறேன்…” பிசிறின்றி பேசியவனை அனைவரும் பேச்சற்று அதிர்ச்சியுடன் பார்த்தனர்.


“போனா போகுது நான் வாழ்க்கை கொடுக்கிறேன்னு எண்ணத்தோட சொல்லல மாமா… மனப்பூர்வமா யோசிச்சுதான் இதை சொல்றேன்… இப்போதைக்கு இந்த விஷயம் நம்ம வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்… வேற மாதிரி விபரீதம் ஆயிடும்… காலையில மணவறையில மாப்பிள்ளையா இவன்தான் உட்கார்ந்திருப்பான்… ஆனா தாலி கட்டுறது நானா இருக்கும்… எல்லாருக்கும் அதிர்ச்சியாதான் இருக்கும்… ஊர்க்காரங்க அப்படி இப்படி என்னை பேசத்தான் செய்வாங்க… ரெண்டு நாள்ல அதை எல்லாம் மறந்துட்டு போயிடுவாங்க… நம்ம வீட்டு ஆளுங்ககிட்ட ஆற அமர மத்த விஷயங்களை எடுத்து சொல்லுவோம்… என்னை பொருத்தவரைக்கும் பிரச்சனையும் பூகம்பமும் வீட்ல வந்தாலும் எந்த உயிர் சேதமும் வரக்கூடாது… மீரா அவ வயித்துல இருக்கிற குழந்தையையும் சேர்த்துதான் சொல்றேன்…”


தெள்ளத் தெளிவாக நிதானமாய் பேசியவனை இறுக தழுவிக் கொண்டார் மாணிக்கவேல். எங்கிருந்தோ வந்தான்… நட்பிற்காக… நண்பன் குடும்பத்தின் மேல் கொண்ட நேசத்திற்காக… அவர்கள் குடும்ப மானத்தையும் பலரது உயிரையும் காப்பாற்றுவதற்காக… அவன் எடுத்த முடிவில் நெகிழ்ந்து போன மாணிக்கவேல் அவன் காலில் விழப்போக பதறித் தூக்கி நிறுத்தினான் தரணி.


“அய்யோ மாமா… என் தலையில பாவத்தை சுமத்திராதீங்க… இப்பவும் சொல்றேன்… மனப்பூர்வமாதான் பூச்செண்டை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன்… நீங்க யார்கிட்டயும் எதையும் காட்டிக்காம அமைதியா இருங்க… எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்…” 


முகிலனிடம் சொன்ன அதே நம்பிக்கை வார்த்தையை மாணிக்கவேலிடமும் கூறினான். இன்னும் நிறைய சமாதானங்களும் ஆறுதலும் கூறி அவர்களை அனுப்பி வைத்தவன் முகிலனையும் தேற்றி கீழே அழைத்துச் சென்றான்.


பொழுது விடிந்தது… திருமண பரபரப்பில் அனைவரும்… முகிலனை வற்புறுத்தி கிளம்ப வைத்து தானும் குளித்து தயாரானான் தரணி. அடிக்கடி கலக்கமாய் தன் முகம் பார்க்கும் நண்பனை அழுத்தமான பார்வையால் அமைதிப்படுத்தினான். வீட்டின் கீழே உள்ள அகன்ற முற்றத்தில் மணமேடை போடப்பட்டிருக்க உள்ளூர் கூட்டம் சிறிது சிறிதாக வந்து கூடியிருந்தது. மணமகன் கோலத்தில் முகிலன்… உடன் மாப்பிள்ளை தோழனாய் தரணி மணமேடைக்கு வந்திருந்தனர். ஹோம குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டு புரோகிதர் மந்திரங்கள் கூறியபடி இருக்க மெலிதான அலங்காரத்துடன் அழைத்து வரப்பட்ட பூச்செண்டு முகிலனின் அருகில் அமர்த்தப்பட்டாள். 


பாறை போல் இறுகி இருந்த அவள் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை மொத்தமாய் அழிந்து போயிருந்தது. தன் மாமனின் மனதில் வேறொருத்தி இருக்கிறாள் என்று தெரிந்த நொடியில் இருந்தே சிரிப்பை தொலைத்தவள் அவனது வாரிசும் சம்பந்தப்பட்டவனின் வயிற்றில் கருவாக உருவாகியுள்ளது என்பதை அறிந்தால் என்ன நிலைக்கு ஆளாவாள்…? நினைக்கும்போதே நண்பர்களின் நெஞ்சம் பகீர் என்றது. சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டபடி மணவறையின் முன் வந்து அமர்த்தப்பட்டார் பாட்டி.


கலக்கமாய் நின்றிருந்த மாணிக்கவேல் மல்லிகாவிடம் நான் இருக்கிறேன் என்று கண்மூடித் திறந்து அவர்களையும் அமைதிப்படுத்தினான் தரணி. அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று புரோகிதரின் கைக்கு வந்த திருமாங்கல்யம் மணமகனின் கைக்கு மாறும் முன் அக்னி குண்டத்தில் புகைமூட்டம் அதிகமானது. கபகபவென அனைவரின் கண்களிலும் புகை சூழ்ந்து எரிச்சலை கொடுக்க புகையை தாண்டி மணமக்களின் உருவம் கண்களுக்கு புலப்படாமல் போனது. மாங்கல்யம் தந்துனானேனா என்ற புரோகிதரின் சத்தமான குரலும் கெட்டிமேள ஒலியும் மட்டுமே கேட்க அட்சதை தூவியபடி திருமணம் முடிந்ததா என்று கண்களை தேய்த்தபடி அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க… புகையின் வீரியம் குறைந்து பூச்செண்டின் கழுத்தில் மூன்றாவது முடிச்சை நிதானமாய் போட்டுக் கொண்டிருந்த தரணி தென்பட்டான். முகிலன் அருகில் நின்ற நிலையில் அவர்களுக்கு அட்சதை தூவிக் கொண்டிருந்தான். மாணிக்கவேலுவும் மல்லிகாவும் கண்களில் நீருடன் இன்பமும் துன்பமும் கலந்த மனநிலையில் அட்சதை தூவி ஆசீர்வதித்தனர்.


முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் பிரதிபலிக்காது தனக்கு தாலி கட்டிக் கொண்டிருப்பவனை விழி விரித்து அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு. அதிர்ச்சி அடைந்த கூட்டம் நெஞ்சில் கை வைத்து நிலைத்த பார்வை பார்க்க… முகிலனின் பெற்றோர் சிலையாய் மாறி இருக்க… கண்கள் விரிந்த நிலையில் மூச்சு விடவும் மறந்து உறைந்த நிலையில் அமர்ந்திருந்தார் பாட்டி. 


தாலி கட்டி முடித்து பூச்செண்டின் கையை பற்றியபடி மேடையில் இருந்து இறங்கி நேராக பாட்டியிடம் சென்ற தரணி “நானும் உங்க பேரன்தானே அப்பத்தா… எனக்கு பூச்செண்டை பிடிச்சிருக்கு… அதான் தாலி கட்டிட்டேன்… எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க…” சிறிதும் குற்ற குறுகுறுப்பின்றி கூறியவன் தன்னவளையில் இழுத்துக் கொண்டு அவர் காலில் விழுந்திருந்தான்.


இந்த பெரும் அதிர்ச்சி பாட்டியின் உயிரை காவு வாங்கி விடுமோ என்ற அச்சம் தரணிக்கும் முகிலனுக்கும் எழாமல் இல்லை. ஆனால் பாட்டியைப் பற்றி மட்டுமே கவலைப்பட முடியாதே… நிறைய உயிர்கள் அவர்களுக்கான வாழ்க்கை என்று அனைத்தையும் ஆலோசிக்கும்போது நடப்பது நடக்கட்டும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. பாட்டியின் இறுதி ஆசை என்பதால்தான் உணர்வுகளை தொலைத்து ஊமை ஆகினர் முகிலனும் பூச்செண்டும். தரணியும்கூட தான் கொண்ட கொள்கையில் பின்வாங்கி நின்றிருந்தான். ஆனால் மீராவின் வயிற்றில் வளரும் கரு நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்தை தரணிக்கு தோற்றுவித்தது.


கலவரமுற்றாலும் பாட்டி ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை… அடிதடியே நடந்தாலும் நிதானமாய் எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம்… அவனது மிகப்பெரிய மன பலம் பூச்செண்டின் பெற்றோர் மனமார சம்மதித்து அவன்புறம் நின்றது. இது போதுமே… மற்றவர்களை சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமாக களத்தில் குதித்திருந்தான் தரணி. வழக்கம்போல் ஊர் மொத்தம் வாயில் விரலை வைத்தபடி கூடி கூடி பேசி சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க


“டேய்ய்ய்… சண்டாளா…” என்று முழக்கமிட்டபடி ஓடி வந்த மணிவாசகம் தரணியை கடந்து முகிலனின் சட்டையை கொத்தாய் பிடித்து தூக்கி இருந்தார். இது தனக்கு நடக்கும் என்று தரணி எதிர்பார்த்திருக்க எதிர்மறையாய் முகிலன் முருங்கைக் காயாய் அவர் கையில் தொங்கிக் கொண்டிருந்தான்.


“கூட்டு களவாணித்தனம் பண்ணி இப்படி ஒரு காரியம் பண்ண வச்சியாடா…? நீ ஒதுங்கி நின்னு தாலியை இவனுக்கு விட்டுக்கொடுக்கிறேனா என்னடா அர்த்தம்…? எதனால இப்படி ஒரு துரோகத்தை பண்ணின…? ஊரை கூட்டி என்னை அசிங்கப்படுத்திட்டீங்களேடா ரெண்டு பேரும்… பச்சை மண்ணு கழுத்துல எவனோ ஒருத்தனை தாலி கட்ட வச்சிட்டியே… எம்மா… இந்த கொடுமையை நீ பாக்குறதுக்கு அன்னைக்கு விழுந்தப்பவே செத்துப் போயிருக்கலாமே…” கால்கள் துவழ தரையில் மண்டியிட்ட நிலையில் விழுந்து அழுதவரை மாணிக்கவேலுவும் மல்லிகாவும் தேற்றி தூக்கினர்.


அளவுகடந்த அதிர்ச்சியும் அளவுகடந்த வேதனையும் இதயம் முழுக்க பரவி விட்டால் ஒரு கட்டத்தில் மரத்துப்போகும். கண்ணீர் வராது… வெறுமையான பார்வை மட்டுமே சுழலும்… அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள் பூச்செண்டு. என்ன நடந்தது என்பதை மூளை ஏற்றுக் கொள்ளவே நிமிடங்கள் பிடித்தன. அவளை ஓரக்கண்ணால் பார்த்து அவளது மனநிலையை புரிந்து கொண்ட தரணியின் மனம் அவளுக்காக வெகுவாய் இரங்கி வலி கொண்டு வருந்தியது. ‘என்னை மன்னிச்சிடு பொக்கே…’ மானசீகமாய் மனதுக்குள் மன்னிப்பு கேட்டான். கூட்டமாய் நின்றிருந்த ஊராரின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட திசையில் யாரும் அறியாமல் கண்களால் சைகை காட்டினான் தரணி.


“போங்க போங்க… இன்னும் என்ன வேடிக்கை…? பெரிய இடத்தில இதெல்லாம் சகஜம்… கல்யாணம் முடிஞ்சிடுச்சு… பந்தி பின்னால நடக்குது… போய் வயிறார சாப்பிட்டு கிளம்புங்க பாக்கலாம்… யாரும் இங்கே கூட்டம் போடக்கூடாது…” 


தோரணையாய் சத்தமிட்டபடி கூட்டத்தை அங்கிருந்து களைத்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர் சிலர். மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட தரணிக்கு நம்பகமான ஆட்கள் அவர்கள். கூட்டம் கலைக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்தது.


“மச்சா… என்னை மன்னிச்சிடுங்க… உங்க புள்ளைக்கு இப்படி ஒரு துரோகம் நடக்கும்னு நான் நினைக்கல…” மாணிக்கவேலை கட்டிக்கொண்டு அழுதார் மணிவாசகம்.


“அழாதீங்க மாப்ள… இங்கே எந்த துரோகமும் நடக்கல… எங்க சம்மதத்தோடதான் தரணி பூச்செண்டு கழுத்துல தாலி கட்டினார்…” அமைதியான குரலில் மாணிக்கவேல் கூற அதிர்ச்சியுடன் அவர் முகம் பார்த்தார் மணி வாசகம.


முகிலனோ அடுத்து நடக்கப் போகும் உரையாடலையும் அதைத்தொடர்ந்து நடக்கப் போகும் சம்பவங்களையும் நினைத்து உடல் வெடவெடக்க ரத்தம் சுண்டிப் போய் நடுக்கமாய் நின்றிருந்தான். இத்தனை நேரமும் தரணியின் முகத்தையும் முகிலனின் முகத்தையும் மாறி மாறி அவதானித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்த பாட்டியின் திடமான பார்வையும் கலங்காத முகபாவனையும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தாமல் இல்லை. அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான் தரணி.


“அப்பத்தா…” ஆதுரமாய் அழைத்தபடி அவர் கைப்பற்றினான்.


“இந்த பய என்ன கேப்பமாரித்தனம் பண்ணி வச்சிருக்கியான்…? சொல்லு தரணி… இவன காப்பாத்ததான என் பேத்தி கழுத்துல நீ தாலி கட்டின… உன் மூஞ்சில தப்பு தெரியல… தெளிவுதான் தெரியுது… ஆனா இவே மூஞ்சியில அம்புட்டு தப்பும் தெரியுது… என்னத்த பண்ணி வச்சிருக்கியான்…?”


வயதான மூதாட்டி முக பிரதிபலிப்புகளை வைத்தே அழகாய் அனைத்தையும் கண்டுகொள்ள தரணியால் ஆச்சரியம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.


“அ..அப்பத்தா...” தொண்டை வறள தானும் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான் முகிலன். பாவ மன்னிப்பு கோரும் குற்றவாளிபோல் இருந்தது அவன் தோற்றம். அவன் தலைமுடியை கொத்தாய் பிடித்தார் பாட்டி.


“என்ன திருட்டுத்தனம்டா பண்ணின…?” கண்களை உருட்டி மிரட்டலாய் கேட்டார். அவரிடம் இருந்து அவனை விலக்கி தன் பின்னே நகர்த்தி நிறுத்திய தரணி தொண்டையைச் செருமி அவனுக்கும் மீராவுக்குமான காதலில் தொடங்கி அவள் கர்ப்பமானதுவரை அனைத்தையும் கூறி முடித்தான்.


அதன் பிறகு நடந்ததெல்லாம் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் பலத்த ரீரெகார்டிங்கில் உணர்வுக் குவியலும் கதறலுமாய் காட்டப்பட்ட கதாபாத்திரங்கள் போன்ற நிலைமைதான். சலசலத்த பேச்சுக்களும் அழுகையும் கதறலும் சீற்றமும் சமாதான பேச்சுக்களுமாய் பலவித ரசாபாசங்கள் நடந்தேறின. பல்வேறு உணர்வு போராட்டங்களுக்கு மத்தியில் எவ்வித உணர்வுகளையும் காட்டாது பொம்மை போல் தனித்து அமர்ந்திருந்தவள் பூச்செண்டு மட்டுமே.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post