இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
யாவும் நீயாய் மாறிப்போனேன் 1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK011 Published on 12-03-2024

Total Views: 23756


1


"நான் சொல்றதை கேட்கமாட்டீங்களா நீங்க? அப்படி என்ன கட்டாயம் அங்க போய் ஆகணும்னு, சும்மா பிரண்டு பொண்ணோட கல்யாணம் போகணும்னு என்னை டென்ஷன் பண்ணாதீங்க, பிரெண்டே போய் சேர்த்துட்டார். இனி நீங்க போனா என்ன போகலைனா என்ன? யார் உங்களை கேட்க போறாங்க?"என்று அந்த வீட்டின் ஹாலில் நின்று சத்தம் போட்டு கொண்டிருந்தார் பிரேமா. அந்த வீட்டின் குடும்ப தலைவி.


"சரோஜா வீடு தேடி வந்து பத்திரிகை வச்சு கல்யாணத்துக்கு வந்துருங்கன்னு  அழைச்சிருக்கு பிரேமா, நான் போய் தான் ஆவேன். நாம கஷ்டப்படுற நிலமைல  அவனோட நிலத்தை வித்து அவன் குடுத்த அந்த பணத்தோட உதவியால தான் இப்போ நம்ம இந்த நிலைமையில இருக்கனும். நம்ம கொஞ்சம் நல்லாருக்கோம்னு பழசை மறக்க கூடாது. உனக்கு வர இஷ்டம் இல்லனா நீ வர வேணாம், இருந்துக்கோ நான் போய் தான் தீருவேன்"என்று பதிலுக்கு அவரும் சற்று தன்மையாகவே எடுத்துரைத்தார் ஆனந்தன்.அப்போதும் அவர் சம்மதிக்கவே இல்லை.


"உங்களுக்கு புரியுதா இல்லையாங்க ஏற்கனவே உடம்பு முடியாம இருக்கீங்க? அவ்ளோ தூரம் ட்ராவெல் பண்ணி உங்களுக்கு ஏதாச்சும் ஆயிட்டா நாங்க என்ன பண்ணுவோம்?"என்று அவர் மேலும் என்று மூக்கை உறிஞ்சினார்.


நான் தனியா போகல,பசங்களை கூட்டிட்டு போறேன்" என்றவர்  அதுவரை அவர்களின் சண்டையை தலையில் கைவைத்து பார்த்து கொண்டிருந்த அவரின் இளைய மகன்கள் மித்ரனையும் நித்தினையும் பார்க்க  , தந்தையின் பார்வை தங்களிடம் திரும்புவதை உணர்ந்தவர்கள் அன்னையிடம் திரும்பி "ம்மா நாங்க காலேஜ் போய்ட்டு வரோம். டைம் ஆகிடுச்சு, எக்ஸாம் வேற இருக்கு"என்றவாறே ஓட்டமும் நடையுமாக வாசலை நோக்கி ஓடிய இருவரும் புருவம் சுருக்கி ஆராயும் பார்வையுடன் அவர்களை பார்த்தவாறே  கம்பீரமாய் நடந்து வந்த தமையனை கண்டதும் அவர்களின் கால்கள் பின் வாங்கியது சற்றே...

ஆனந்தனின் இதழ்கள் "ஆதர்ஷ்"என்று முனுமுனுத்தது.

"எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும்?"என்று அவர்களை நோக்கி வினா தொடுக்க...

"அண்ணா அது காலேஜ் எக்ஸாம் இருக்கு, டைம் ஆகிடுச்சு"என்று மித்ரன் தாயிடம் கூறியது போலவே அடித்து விட, அதை கேட்ட ஆதர்சன் "அப்படியா சண்டேஸ் கூட எக்ஸாம்ஸ் வைக்கிறாங்களா என்ன... அதுவும் காலைல ஏழு மணிக்கு ?"என்று புருவமுயர்த்தி சற்றும் பதறாமல் நிதானமாய் கேட்க, என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் விழித்தவர்கள்  தொங்கிப்போன முகத்துடன் சோபாவில் சென்று அமர்ந்து விட்டனர்.

ஆதர்ஷன் ஆனந்தன், பிரேமாவின் மூத்தமகன்.இருபத்தி ஏழு வயது ஆனந்தனின் கார்மெண்ட்ஸ் தொழில் முழுவதையும் பார்த்துக்கொள்கிறான். அவன் எதுக்கு முடிவுகள் எப்போதும் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருக்கும். பெற்றோர் சொல் தட்டாதவன்.மித்ரன், நித்தின் இரட்டையர்கள் கல்லூரி முதல் வருடம் படிக்கும் மாணவர்கள். இவர்களுக்கு ஒரு மகள் ராகினி திருமணம் முடிந்து கணவருடன் இதே ஊரில் இருக்கிறாள்.


மூத்தமகனை கண்டதும் சற்று தெம்பு வர பெற்றவர் "பிரேமா நான் ஆதர்ஷனை கூட்டிட்டு போய்ட்டு வந்துறேன்"என்றவர் மகனிடம் வந்து "ஆது கண்ணா அப்பாவோட குமாரபாளையம் வரைக்கும் போலாம் கூட வர்றியா?"என்று கேட்க, அவர் கூறிய ஊரின் பெயரை கேட்டதும் அவனுக்கு உள்ளுக்குள் சாரல் அடித்தது.

பொள்ளாச்சியில் இருந்து சிறு தொலைவில் உள்ள ஊர் அது, அது தான் ஆனந்தனுக்கும் சொந்த ஊர். ஆதர்ஷனுக்கு மிகவும் பிடித்த இடம் அது தான். தொழிலுக்காக அவர் ஈரோட்டுக்குக்கு இடம் மாறினாலும் அவருக்கு பிரியமான ஊர் அது. ஆதர்ஷனின் பதினைந்து வயது வரை அங்கு தான் இருந்தனர். அவன் அவ்வப்போது அங்கு சென்று வருவான் அவனின் உடமையும் உயிரும் அங்கு தான் இருந்தது. தந்தை கேட்டதும் அவன் தலை தானாய் ஆடியது.

பிரேமா "அவன் எதுக்கு? ஏதோ தொழில் விஷயமா ஊருக்கு போய்ட்டு ஒரு வாரம் கழிச்சு புள்ள இப்போ தான் ஊருக்கு வரான், அவனுக்கு ஓய்வு வேண்டாமா? நான் உங்களையே போக வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். இதுல அவனை வேற கூப்பிடுறிங்களா?"என்று கணவரிடம் எகிறியவர் இளையமகன்கள் இருவரிடமும் திரும்பி "ரெண்டு பேரும் அப்பா கூட போய்ட்டு வாங்க?"என்று கூற, அவர்களோ "நோ மா நாங்க போகல, அந்த வில்லேஜ்க்கு, எங்களுக்கு பிடிக்காது"என்று கோரசாக கூற ஆதர்ஷன் இருவரையும் முறைக்க அவர்கள் தலைகுனிந்தனர்.

ஆனந்தன் "நீங்க ரெண்டு பேரும் அந்த ஊர்ல தான் பிறந்தீங்க நியாபகம் இருக்கா? இப்போ அது வில்லேஜ் ஆகிருச்சு, உங்களுக்கு என்னைக்கும் பழசை மறக்க கூடாது "என்று அவர்களிடம் கூறியவர் மூத்தமகனை பார்க்க "அங்க ஊர்ல ஒரு விசேஷம் கண்ணா போகலாமா"என்று கேட்க, அது என்ன என்று கூட கேட்காதவன் அங்கு செல்லும் மகிழ்வில் "ஒரு டுவெண்ட்டி மினிட்ஸ் பா, குளிச்சுட்டு வந்துறேன்"என்று வேகமாய் ஓட பிரேமா ஒரு வித ஆராயும் பார்வையுடன் அவனின் நடவடிக்கைகளை கவனித்தார்.

அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பி இருந்தனர் தந்தையும் தனையனும்...

வண்டியை ஓட்டிகொண்டிருந்தவன் பொள்ளாச்சிக்கு பக்கம் சென்றதும் "அங்க என்ன பங்க்சன் பா"என்று கேட்க...

ஆனந்தன் "அது சரி ஊருக்கு போற ஆர்வத்துல அது எதையும் கேட்கல, இங்க வந்து கேட்கிற நீ "என்று மகனை செல்லமாக கடிந்து கொண்டவர் "நம்ம வேலு இருக்கான்ல அவன் மக செவ்வந்திக்கு இன்னைக்கு கல்யாணம்"அதைக்கேட்டவனின் முகம் கோபத்தில் ஜொலிக்க, கைகள் அசுர வேகத்தில் வண்டியாய் செலுத்த தொடங்கியது.

ஆனந்தன் "இன்னும் டைம் இருக்கு கண்ணா நீ மெதுவா போ"என்று அவனின் வேகத்தில் அரண்டு போனவராக கூற, வண்டியின் வேகம் மட்டுப்பட்டாலும் அவனின் ஆத்திரம் அடங்கவே இல்லை.


அங்கே...

ஊர் கூடியிருந்தது அந்த திருமணத்துக்காக ஆனால் மணமகளின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை.இருபத்திரண்டு வயது பெண்பாவை. மஞ்சள் நிறத்தில் தெய்வீக அழகுடன் ஜொலித்தாள். கிராமத்து அழகி. அவளின் கைகளில் இடுக்கி கொண்டாள் அந்த விஷ பாட்டிலை, யாருக்கும் தெரியாமல்...

மணமகளின் தாய் சரோஜா தான் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தார். ஆனாலும் அவரின் பார்வை வாசலையே தொட்டு மீண்டு கொண்டிருந்தது. பெரிய அளவுக்கு இல்லையென்றாலும் அளவாக அதில் எந்த குறையும் இல்லாமல் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.


அதே நேரம்  சரியாய் உள்ளே வந்தனர் ஆதர்சனும் ஆனந்தனும், சரோஜா ஓடி சென்று இருவரையும் வரவேற்றவர் "அண்ணா எங்க நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சு பயந்துட்டேன், அவரும் இல்லை, நீங்களாச்சும் முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பிங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன், தாமதமாகவும் கொஞ்சம் பயந்து போய்ட்டேன்"என்றவர் ஆதர்ஷனிடம் திரும்பி "என்ன மருமகனே இந்த அத்தையை நியாபகம் இருக்கா, நல்லாருக்கியாயா"என்று நலம் விசாரித்தவர் அவர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வந்து கொடுக்க, ஆனந்தன் "நம்ம வீட்டு கல்யாணம், நாங்க வராம இருப்போமா, வேலு இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்"என்று நண்பனுக்காக வருந்தியவர் சரோஜாவிடம் "நீ போய் ஆகற வேலையை பாருமா, ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லு நானும் செய்றேன்"என்று கூறி எழ...

சரோஜா "அண்ணா இல்லை நீங்க உட்காருங்க, எந்த வேலையும்  இல்லை, நீங்க வந்ததே எனக்கு சந்தோசம்"என்று கூறினார்.

அவரிடம் ஒரு நகைபெட்டியை கொடுத்த ஆனந்தன் "இதுல இருக்கறதை மருமகளுக்கு போட்டு விடுமா"என்று கூற, அவரோ பதறி போனார்.

"அண்ணா இதெல்லாம் வேணாங்க நீங்க வந்ததே போதும்ங்க"என்று கூறி மறுக்க,"என் மருமகளுக்கு நான் சீர் செய்ய கூடாதா, வாய்வார்த்தைக்காக தான் என்னை அண்ணான்னு கூப்பிடுறியா இதை பிடி முதல்ல போய் செவ்வந்திக்கு போட்டு விடு"என்று அனுப்பினார்.

நடந்தவற்றை பார்வையாளனாக மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதர்சன்.

அதற்குள் கூட்டத்தில் ஒரு சலசலப்பு திருமணம் நடக்க இருந்த மண மகன் அடுத்த ஊர் பெண்ணை காதலித்து இருக்க, அவனை மிரட்டி இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து இருந்தனர் அவனின் பெற்றோர், அவன் ஊரை விட்டு ஓடியிருந்தான் தன் காதலியுடன்...

சரோஜா தான் கத்தி தீர்த்தார், மகளின் வாழ்வை நினைத்து, மணமேடைக்கு அருகே அமைதியாய் நின்றிருந்தவளின் மனமோ அத்துணை மகிழ்வாய் இருந்தது அந்த நொடி...

ஆதர்சன் தலை நிமிரவே இல்லை.

ஆனந்தனும், ஊர்காரர்களும் மாப்பிள்ளை வீட்டாருடன் சண்டை போட்டு அவர்களை தொரத்தி விட்டு இருக்க அழுதுகொண்டிருந்த சரோஜா,"ஐயோ அண்ணா பார்த்தீங்களா? என் பொண்ணு நிலைமைய, இனிமேல் இவளை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க என் பொண்ணு இப்படி அவமானப்பட்டு நிக்கிறாளே, இனிமேல் இந்த ஊர்ல நாங்க எப்படி மானத்தோட வாழ்வோம். என் புருஷன் அந்த மகராசன் இருந்திருந்தா என் பொண்ணு இப்படி நின்றுப்பாளா, ஐயா மகாராசா நானும் உன் பொண்ணும் உன் கூடவே வந்துடுறோம், எங்கள கூட்டிகய்யா"என்று அழுதவள், மகளின் கைகளை இழுத்து கொண்டு உள்ளே செல்ல போக, அவர் செய்ய இருந்த விபரீதம் அப்போது தான் புரிய அனைவரும் அவளை தடுத்து நிறுத்தினர்.

அந்த ஊரில் இருந்தா பெரியவரோ "ஏன் தாயி நாங்கல்லாம் இருக்கமே உன்ர மவளை அப்படியே விட்டுருவோமா, இதே மூகூர்த்தத்துல நல்ல பையனா பார்த்து செவ்வந்திக்கு கண்ணாலத்தை முடிச்சு வைக்குறோம்"என்று கூற, ஆனந்தன் நடந்த அதிர்ச்சியில் இருந்தவர் ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்து "ஆதர்ஷா வந்து மணமேடைல உட்காரு"என்றவரின் குரலில் அவனின் இதயம் தாளம் தப்பி துடித்தது.

செவ்வந்தி நிமிர்ந்து அவனை பார்க்க அவனோ அவளை அனலாக எரித்து கொண்டிருந்தான். அவன் மனம் துடிக்க, 'என்னை மன்னிச்சுடு மைனா' என்று தன் உயிரானவளிடம் மன்னிப்பு வேண்டியவன் வந்து அமைதியாய் அமர்ந்தான் மண மேடையில்...








Leave a comment


Comments 1

  • N Nila iniya
  • 3 months ago

    ஆரம்பமே அதிரடியாக இருக்கிறது மா சூப்பர் ❤️❤️❤️😘😀❤️❤️❤️😘😘😘


    Related Post