இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 14-03-2024

Total Views: 39912

புயல் மழை அடித்து ஓய்ந்தது போல் வீடு முழுக்க மயான அமைதி. ஆளுக்கு ஒரு பக்கமாக தலையில் கை வைத்து அமர்ந்திருந்தனர். செண்பகத்தின் விசும்பல் சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. உயிர் போகும் நிலையில் இருந்த பாட்டி பேரதிர்ச்சியில் தெளிவாய் எழுந்து அமர்ந்திருந்தார். இதுதான் ஷாக் ட்ரீட்மென்ட் போலும். முகிலன் செய்த காரியத்தை ஏற்க முடியாமல் தவித்து உழன்று கொண்டிருந்தார் மணிவாசகம். பாட்டியின் அருகில் அமர்ந்தான் தரணி.


“என்னை மன்னிச்சிருங்க அப்பத்தா… உங்க ஆசையை கனவை எல்லாத்தையும் நான் மாத்திட்டேன்… எ..எனக்கு வேற வழி தெரியல…” கலக்கமாய் பேசியவனின் கரத்தை பற்றிக் கொண்டார் பாட்டி.


“உன்னை எதுக்குய்யா நான் மன்னிக்கணும்…? என் குடும்ப கவுரவத்தை காப்பாத்தி இருக்க… ஊர் முன்னாடி அவமானப்பட்டு கேவலப்பட்டு நிக்காம எங்க எல்லாரையும் பாதுகாத்து இருக்க… இந்த பொசகெட்ட பய செஞ்ச காரியம் மட்டும் இம்புட்டூண்டு வெளியே கசிஞ்சிருந்தாலும் நாங்க அம்புட்டு பேரும் உத்தரத்துல தொங்க வேண்டியதுதேன். என்ன… ரெண்டு நாளைக்கு உன்னை கண்டபடி பேசுவாய்ங்க… ரெண்டு தடவை தோரணையா இந்த ஊருப் பக்கம் வந்துட்டு போனேன்டா அப்புறம் மணக்க மணக்க பேசுவாய்ங்க… உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்ல ராசா…” அவன் கன்னத்தை பாசமாய் வருடினார். குற்ற குறுகுறுப்பில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த முகிலனை திரும்பிப் பார்த்தார்.


“எலேய்… எடுபட்ட பயலே… செய்யறதை எல்லாம் செஞ்சுபுட்டு இப்போ கொறத்தனமா ஒக்காந்து என்னத்துக்கு ஆகப் போகுதாம். போயி உங்கப்பன் உங்காத்தா கால்ல விழு… வெள்ளாமைக்கு முன்ன வெதச்சுட்டு வந்து நிக்கிறியே… ஊரான் பெத்த புள்ளையோட பாவத்த சொமந்தா இந்த குடும்பமே பாழா போயிரும். எல்லாம் சரியாகட்டும் மொல்ல வளந்துக்கலாம்டு வயித்துல இருக்கிற கரு காத்திருக்காது… அந்தப் புள்ள யாரு என்னன்டு வெவரத்தை இப்பவாச்சும் வாய தொறந்து சொல்லுடா…”


பாட்டியின் பழைய குரல் ஓங்கி ஒலித்தது. மெல்ல தலை நிமிர்ந்த முகிலன் தரணியில் முகம் பார்க்க “நான் சொல்றேன் அப்பத்தா…” என்றவன் தானே சொல்லத் தொடங்கினான்.


“அந்த பொண்ணு பேரு மீரா… மூனரை வருஷமா எங்க ஆபீஸ்லதான் வேலை பார்க்கிறா… சொந்த ஊர் திருச்சி… அம்மா அப்பா கிடையாது… ஒரு ஹோம்லதான் வளர்ந்தா… நல்லா படிக்கிற பொண்ணுன்னு ஸ்பான்சர்ஷிப்ல பிஇ முடிச்சு கேம்பஸ் செலக்சன் மூலமா எங்க ஆபீஸ்ல வேலை கிடைச்சது..‌ கை நிறைய சம்பாதிக்கிறா… திறமையான பொண்ணு… ரொம்ப நல்ல கேரக்டர்… யாருமே இல்லாம தனியா வளர்ந்தவ… முகிலுக்கும் அவளுக்கும் மூனு வருஷமா காதல்… ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் மனப்பூர்வமா விரும்பறாங்க… அதை தாண்டி எப்பவும் உங்க குடும்பம் உங்க ஒற்றுமை இந்த கிராமம் உங்க ஒவ்வொருத்தரோட கேரக்டர் இப்படி எல்லாத்தையும் விருப்பமா பேசுவான் முகில். சோ கூடுதலா தனக்கு இப்படி ஒரு அன்னியோன்யமான குடும்பம் வேணும்னு மீராவுக்கும் ஆசை. தப்பு நடந்துட்டதால அந்த பொண்ணோட கேரக்டரை நீங்க யாரும் தப்பா நினைச்சிடக் கூடாது… முகில்மேல உள்ள அபரிமிதமான நம்பிக்கைதான் இதுக்கு காரணம்… இவனும் தப்பானவன் கிடையாது… சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இவனை தப்பு பண்ண தூண்டிருச்சு… மீராவை ஏமாத்தணும்னு இவனும் நினைக்கல…”


அனைத்தையும் விளக்கி தனது நண்பனையும் அவனது காதலியையும் விட்டுக் கொடுக்காமல் பேசிய தரணியின் மேல் அனைவருக்குமே இன்னும் கூடுதலாய் மதிப்பு உயர்ந்தது.


“உன்னை மாதிரி ஒருத்தன் சிநேகிதனா இருந்தும் இந்த பிக்காலிப் பயலுக்கு புத்தி ஏன் இப்படி போச்சு…?” ஆற்றாமையுடன் தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டார் பாட்டி. தன் மகனின் செயலை ஜீரணிக்க முடியாமல் இன்னும் அழுது கொண்டிருந்த செண்பகத்திடம் திரும்பினார்.


“இந்தா செம்பகம்… எதுக்குடி ஒப்பாரி வச்சுக்கிட்டே கெடக்கிற… கலியாணம் முடிஞ்ச வீட்டில கண்ணீரும் கம்பலையுமா இருந்தா நல்லாவா இருக்கு… சின்னஞ்சிறுசுக  நல்லபடியா வாழ வேணாமா…? இனி நீ எம்புட்டு அழுதாலும் நடந்ததை மாத்தவா முடியும்… மருமகளை கொண்டு வர்றதுக்கு முன்னாடியே உன்னை பாட்டி ஆக்கிப்புட்டாய்ன் உன் மகே… இனி அடுத்து ஆக வேண்டியதைத்தேன் பாக்கணும்… இனியும் தாமசம் பண்ணாம ஊரு சனம் வாயை மெல்லுறதுக்கு முன்னால இவே கல்யாணத்தை முடிச்சுடணும்…” தெளிவான முடிவிற்கு வந்திருந்தார் பாட்டி.


“அந்தப் புள்ளைய பத்தி இம்புட்டு நல்லவிதமா தரணி சொன்னதுக்கு அப்புறம் நாம ரோசனை பண்ண ஒன்னும் இல்ல… அப்படி நெலைமையில உன் மகே வைக்கல… அடுத்து ஆக வேண்டியதைப் பாரு…”


“எம்மா… அந்தப் புள்ள வாயும் வயிறுமா  இருக்கு… எம்புட்டு நா தள்ளிப் போய் இருக்குன்டு தெரியல… ஊரு சனம் வெரலை விட்டு கணக்கு பாக்குமே…” மல்லிகா மெல்லிய குரலில் பாட்டியிடம் கூறி இருந்தாலும் முகிலனின் காதில் தெளிவாய் விழுந்தது.


“பதினஞ்சு நாள்தான் அதிகமாயிருக்கு அத்த… நேத்துதான் டாக்டர் கன்ஃபார்ம் பண்ணி இருக்கார்…” உணர்ச்சி வேகத்தில் கூறியவன் சுற்றிலும் இருந்தவர்கள் அள்ளி வீசிய நெருப்புப் பார்வையில் உடல் முழுக்க வெப்ப வீச்சு தாக்க மீண்டும் தலையை தாழ்த்திக் கொண்டான்.


“கணக்கு சொல்றியோ கணக்கு… காவாலி பயலே… உன்னை இந்த கட்டையாலேயே கணக்கு பாக்கிறேன்…” தண்டட்டி ஆட சீற்றமாய் பேசிய பாட்டி பிடிமானத்திற்காக வைத்திருந்த நீண்ட குச்சியை எடுத்து அவன் முதுகில் ஒரு போடு போட்டார். தரணிக்கு சட்டென சிரிப்புதான் வந்தது. 


சிரிப்பை உதட்டுக்குள் அடக்கி “அப்பத்தா… அவனை விடுங்க… நேத்து இருந்து நிறைய அடி வாங்கிட்டான்… அவனுமே ரொம்ப கில்ட்டியாதான் இருக்கான்…”


“என்னது..?? கிள்ளிட்டே இருக்கானா…? உன்னை எதுக்கு கிள்ளுறியான்…? அதன் ஒரு அப்பாவி புள்ளய கிள்ளி வச்சு இப்போ வயித்த தள்ளிக்கிட்டு நிக்க வச்சிருக்கானே… பாடாவதி பய… எந்திரிக்க மாட்டாம கெடக்கேன்… இல்லேன்டா அப்படியே நிமிண்டிப்புடுவேன் நிமிண்டி…”


பாட்டி பழைய ஃபார்மிற்கு வந்திருக்க அவரது பேச்சில் இறுக்கம் தளர்ந்து மாணிக்கவேலுவும் மல்லிகாவும் கூட தரணியோடு சேர்ந்து சிரித்தபடி இருந்தனர்.


“கெழவி… தப்பு என்மேல இருக்கிறதால வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்து இருக்கேன்… இல்லேன்னா நீ பேசுற பேச்சுக்கு தண்டட்டியோட சேர்த்து ரெண்டு காதையும் அத்து அரைக்காதோட சுத்த விட்ருவேன். என் செல்லக்குட்டிகூட முதல்ல கல்யாணம் முடியட்டும்… அதுக்கப்புறம் உன்னை கிள்ளியே கொல்றேன்…” முணுமுணுவென வாய்க்குள் முனகியபடி அமர்ந்திருந்தான் முகிலன்.


“மணி… செம்பகம்… இன்னும் வெசனப்பட்டு உக்காந்து என்ன பண்ணப் போறீக…? அடுத்த சோலிய பாக்கணும்… கல்யாணமான பிள்ளைகள உக்கார வச்சு பாலும் பழமும் குடுங்க… ஏ மல்லி… புள்ளைகள உன் வீட்டுக்கு கூட்டிட்டு போயி அங்கேயும் பாலும் பழமும் குடு… மறுவீடு அழைச்சிட்டுப் போற சோலியையும் நாளைக்கே முடிச்சுப்புடு… நேரங்காலமா இவுக ஊருக்கு கெளம்பி போகட்டும்… அடுத்த நல்ல நாளா பாத்து அந்த புள்ளைய இந்த வீணா போனவனுக்கு பரிசம் போட்டு நாளை கடத்தாம கல்யாணத்தை முடிச்சிடுவோம்…”


அடுத்தடுத்து ஆணைகளை பிறப்பித்து தெளிவாய் திட்டமிட்டுக் கொடுக்கத் தொடங்கினார் பாட்டி. முதல்நாள் வரை இருக்குமோ போகுமோ என்று இருந்தவர் இந்த திடீர் கல்யாணத்தில் முற்றிலுமாக மாற்றம் அடைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தரணியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் என்பதை அவரது பேச்சும் செய்கையும் தெளிவாக உணர்த்தின. இருக்கும் நிலவரத்தைப் பார்த்தால் இன்னும் இரண்டு நாட்களில் எழுந்து நடமாட ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சிறிது சிறிதாக வீட்டில் இருந்த இறுக்கமான சூழ்நிலையும் சற்று இலகுவாக மாறியது. நடந்து கொண்டிருந்த கலவரத்தில் அனைவரும் மறந்துபோனது பூச்செண்டைத்தான்.


“டேய்… பொக்கே எங்கடா…?” தன் மனையாளை காணாது முதலில் தேடியது தரணிதான்.


“அவ வெடுக்கு வெடுக்குன்னு அப்பவே ரூமுக்கு போயிட்டா…” முகில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேகமாய் நடந்து அறையை எட்டிப் பார்த்தான் தரணி. அவனுக்கு முதுகு காட்டி மெத்தையில் படுத்திருந்தாள் பூச்செண்டு. அவன் பின்னே சென்பகமும் மல்லிகாவும் நுழைந்தனர்.


“இவள எப்படி சமாதானப்படுத்துறதுன்டு தான் தெரியல…” ஆயாசமாய் மூச்சுவிட்டார் மல்லிகா.


“நீங்க போங்க… நாங்க இவள கூட்டிட்டு வர்றோம்…” மருமகனாக மாறிவிட்டதில் தரணியிடம் மரியாதையும் கூடி இருந்தது. அவனுக்கு சங்கடமாக இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை. அறைக்குள்ளே ஏதோ சமாதான பேச்சு வார்த்தைகளும் பூச்செண்டுவின் அழுகையும் மாறி மாறி கேட்டது. பின் ஒருவழியாக அவளை வெளியே அழைத்து வந்து பாட்டியின் அருகே அமர வைத்தனர். தன் பேத்தியின் தலையை ஆதுரமாய் வருடினார் பாட்டி.


“என்ன பெத்தாளு… அழாதடி தங்கோ… உனக்குண்டு தரணியத்தேன் அந்த ஆண்டவே முடிச்சு போட்டிருக்கியான்… தங்கம் பெத்த புள்ள இவே… ராசாவட்டம் ஒருத்தன்தேன் உன் புருஷன்னாகி இருக்கியான்… இவனும் என் பேரந்தேன்.‌. உன்னை கலங்காம காப்பாத்துவியான்டு எனக்கு நம்பிக்கை இருக்கு ராசாத்தி… மனச தெகிரியப்படுத்திக்க… உன் மாமன்தேன் உனக்குன்டு உன் மனசுல இந்த கிழவி ஆசைய வளர்த்திருந்தா என்ன மன்னிச்சுக்க தாயி… இவனும் உன் மாமன்தேன்… தொட்டு தாலி கட்டிட்டியான்… அடிச்சாலும் புடிச்சாலும் இனி அவேந்தேன் உன் புருஷன்… நீ படிச்ச புள்ள… இந்த பய காத்துல பறக்கவிட்ட கௌரதைய நீ மீட்டு கொடுத்துரு தாயி… இந்த கல்யாணத்தை ஏத்துக்க சாமி… புடிக்கல முடியாதுன்டு சொல்லிடாத ராசாத்தி… ஊரே கேவலமா தூத்திரும்… தரணியோட பொண்டாட்டியா உன்னை மாத்திக்கிட்டு வாழணும் என்ன பெத்த ஆத்தா… செய்வியா தங்கோ…”


குரல் கமற கண்களில் நீர்முட்ட பேசினார் பாட்டி. தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அவரை ஏறிட்டுப் பார்த்தாள் பூச்செண்டு.


“உன் பேரன் தரங்கெட்டுப் போன மாதிரி நானும் தரங்கெட்டு நடந்துக்குவேன்னு நெனச்சியா அம்மாச்சி… என்னால உங்க யாரோட கௌரவமும் கலங்கப்பட்டுப் போகாது… உங்க எல்லாரோட கையிலயும் நான் இப்போ பொம்மை… என்னை நீங்க எல்லாரும் எப்படி வேணாலும் ஆட்டுவிக்கலாம்… நீ உன் பேரனைத்தேன் சரியா வளத்தல‌… உன் பேத்தியை சரியாத்தான் வளர்த்திருக்க… நான் எந்த தப்பும் பண்ணிர மாட்டேன்… என்னை நம்பு…”


இறுக்கிப் பூட்டியிருந்த இதழ்கள் படபடவென வார்த்தைகளைக் கொட்டின. இப்படியாவது வாயைத் திறந்தாளே என்ற நிம்மதி தரணிக்கு… எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று பெரியவர்கள் தங்களுக்குள் சமாதானமாக பேசிக் கொண்டனர். தனது ஒற்றைக் கையால் பூச்செண்டின் கன்னத்தை இழுத்து அழுத்தமாய் எச்சில் முத்தமிட்டார் பாட்டி.


“தரணி… உங்க அப்பா அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணுவாக…?” கவலையுடன் கேட்டார் மணிவாசகம்.


“இனிமேதான் பேசணும்ப்பா… அதிர்ச்சி ஆவாங்கதான்… ஆனா என் நிலைமையை புரிஞ்சிப்பாங்க… நான் பேசி சமாளிச்சுக்கிறேன்… நீங்க ஃபீல் பண்ணாதீங்க…”


அவன் சாமர்த்தியசாலி… நிதானமானவன்… அவனது செயல்பாட்டில் இருக்கும் நியாயங்கள் சிலநாட்கள் பழகிய நமக்கே புரியும்போது பெற்றவர்கள் அவனை புரிந்து கொள்ளாமல் போவார்களா…? ஏற்றுக் கொள்வார்கள்… அனைவரின் மனதிலும் நம்பிக்கை பிறந்தது. அதன்பின் சம்பிரதாயமாக சில சடங்குகள் பாட்டியின் ஆசைப்படி நடந்தேறின. மீண்டும் பொம்மைபோல் அனைத்திற்கும் அமைதியாய் ஒத்துழைத்தாள் பூச்செண்டு. தரணியின் முகத்தையோ முகிலனின் முகத்தையோ திரும்பிக்கூட பார்க்கவில்லை.


இரவு உணவிற்குப்பின் சாந்தி முகூர்த்த ஏற்பாடுகள் பற்றி மெல்லிய குரலில் தன் மகள் மற்றும் மருமகளிடம் பேசிக் கொண்டிருந்தார் பாட்டி. அங்கு வந்து நின்ற பூச்செண்டை அவர் கவனித்திருக்கவில்லை.


“ஏய் கெழவி… கல்ல தூக்கி தலையில போட்டு கொன்னேபுடுவேன்… ஒத்த கையும் ஒத்த காலும்தான் உருப்படியா இருக்கு… தனித்தனியா உடைச்சு போட்டுருவேன்… ஒழுங்கு மரியாதையா வாயை மூடிக்கிட்டு படுத்து தூங்கிரு… எதையாவது ஏற்பாடு பண்ணச் சொல்லி என் வெறியை கிளப்பின இன்னைக்கே உன்னை பரலோகத்துக்கு பார்சல் பண்ணிடுவேன்…” 


விரலை ஆட்டி கண்களை உருட்டி பழைய பூச்செண்டாய் மாறி பாட்டியை மிரட்டிக் கொண்டிருந்தவளை மாடிப்படி சுவற்றில் சாய்ந்து நின்றபடி கணவன் என்ற உரிமையுடன் ரசித்து புன்னகைத்துக் கொண்டிருந்தான் தரணி.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post