இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 4 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 14-03-2024

Total Views: 24934

செந்தூரா 4



“என்னடா சொல்ற? திருமணம் ஆயிடுச்சா? பொய் சொல்லாதே! இளங்கலை முடிச்சிட்டு முதுகலை படிக்க இங்கே நீ வந்ததிலிருந்து நான் உன் கூடவே தானே இருக்கேன். எப்போ திருமணம் ஆச்சு” என்று நண்பனை உலுக்கினான் கவின்.


“நான் இங்கே வருவதற்கு முன்னாடியே என் திருமணம் நடந்துடுச்சுடா, என்னோட பள்ளிப்பருவத்தில் என்னோட தாராவை ஆத்தங்கரையில் வைத்து திருமணம் செய்துக்கிட்டேன். அந்த ஆத்தங்கரையும் அந்தி வானமும் தான் எங்களோட திருமணத்திற்கு சாட்சி” என்றான் மித்ரன் அந்த நாளின் நினைவுகளில்.

“என்னடா உளர்ற?” என்றான் கவின் “சின்ன வயசுல கல்யாணம் செஞ்சுகிட்டியா? அதுக்கு ஆத்தங்கரை சாட்சியா? ஒரு வேளை பொம்மை கல்யாணம் செஞ்சி சின்ன வயசில் விளையாடுவாங்களே, அதை தான் திருமணம் ஆயிடுச்சுனு சொல்றியா?” என்று பரபரத்தான் கவின்.


ஆராத்யா கவினை அல்லவா முறைத்துக் கொண்டு இருக்கிறாள். தவறான தகவல் அளித்ததாக நினைத்துக் கொள்வாளே! அவன் சொன்னது நிஜம் என்று நிருபிக்க எண்ணி கேள்வி கணைகளை தொடுத்தான்.


“மத்தவங்களை பொறுத்தவரை அது சின்ன பசங்க விளையாட்டு, ஆனால் எனக்கு அது தான் திருமணம், என் தாரா வயதாலும் மனசாலும் வளரட்டும்னு தான் காத்திருக்கேன். இதோ இந்த பிராஜெக்ட் வேலையை முடித்து விட்டு என் வீட்டிற்கு நான் வரப்போவதை தெரியப்படுத்தாமல் இந்தியாவிற்கு சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தரப்போகிறேன்.


போனதும் எங்களோட திருமணம் தான். அதற்கு பிறகு தான் இந்த கம்பெனி தொடக்க விழாவையே திட்டமிட்டு இருக்கேன்” என்றான் மித்ரன் கண்கள் மின்ன.


அதற்கு மேலும் அங்கே நிற்க பிடிக்காமல் அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் ஆராத்யா விருட்டென்று வெளியேறினாள்.


“மித்ரன், இப்படி ஒரு டிவிட்ஸ்டை உன் கிட்ட நான் எதிர்பார்க்கலடா, லாஸ் ஏஞ்சல்ஸ் வரைக்கும் வந்து உன்னோட திறமையை நிருபித்து ஒரு கம்பெனியை உருவாக்கும் நிலையில் இருக்கும் நீ, சின்ன வயசில் விரும்பின பொண்ணை நினைத்து இன்னமும் காத்திருக்கியா? என்னால் நம்பவே முடியலைடா? ஒரு நாள் கூட உன் காதலியிடம் நீ பேசி பார்த்தது இல்லையே?” என்றான் கவின் ஆச்சரியமாக.


“நான் அவளோட பேசிட்டு தான் இருக்கேன், ஆனால் காதல் வசனம் எல்லாம் பேசியது இல்லை. எங்கள் வீட்டில் ஏற்கனவே முடிவான திருமணம் என்பதால் கிணற்று நீரை போன்றவள் என் தாரா. நான் தான் அவள் படிப்பு முடியட்டும், அதற்குள் நான் சொந்தமாக தொழில் தொடங்கி கொள்கிறேன் என்று சொல்லி எங்கள் திருமணத்தை தள்ளி போட்டிருக்கிறேன்” என்றான் மித்ரன்.


“என்னடா சொல்ற? ஏற்கனவே முடிவான திருமணமா? முறைப் பெண்ணா?” என்றான் கவின்.

“ஆமாம்டா, என்னோட அத்தை மகள், என் அப்பாவின் தங்கை மகள் தான் தாரிகா” என்றான் மித்ரன் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே


“மச்சி, உன்னை சாமியார்னு நினைச்சேன். இப்போ பார்த்தால் உன் சின்ன வயசிலயே ரொமான்ஸ் தொடங்கிடுச்சு போலயே?” என்று சிரித்தான் கவின்


“ஆமாம்டா, அவளுக்கு உண்மையாக இருக்கணும்னு நினைச்சு தான் இது நாள் வரை நான் எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்த்தது இல்லை. என்னை நெருங்க விட்டதும் இல்லை. ஆனால் ஆராத்யா வந்து திடீர்னு காதலிக்கிறதாக சொன்னதும் ஷாக் ஆயிட்டேன்” என்றான் மித்ரன்.


அப்போது தான் கவின் ஆராத்யாவை தேடினான். அவள் எப்போதோ கிளம்பி விட்டாள் போலும். அவள் கைப்பையை கூட காணவில்லை. ஒருவேளை கோபித்துக் கொண்டு போய்விட்டாளோ என்று பதறினான் கவின்.


“மித்ரன், இப்போ ஆராத்யாவை எப்படிடா சமாளிக்கிறது? அவ வேற கோவிச்சிட்டு போயிட்டா போலயே?” என்றான் கவின் வருத்தமாக.


“இதுல கோவிச்சுக்க என்ன இருக்குடா? நான் என்ன அவளிடம் ஆசை வார்த்தை சொல்லியா ஏமாத்திட்டேன்? அவளாக ஏதோ நினைச்சிட்டால் நான் என்ன செய்ய முடியும்? விடு சொல்லிக்கலாம்” என்றான் மித்ரன் விட்டேற்றியாக.


“இல்ல மச்சி, எனக்கு எதுவோ சரியாப்படலை. அன்றைய மீட்டிங்கில் சார்லஸ் கூட உன்னையும் ஆராத்யாவையும் ஒரு மாதிரி பார்த்தார். எனக்கு என்னவோ அவர்கூட உனக்கு ஆராத்யாவை திருமணம் செய்து வைக்க விரும்பறார்னு தோணுது. 


ஆராத்யாவோட அப்பாவிற்கும் இதில் ஆர்வம் இருக்கலாம். அதனால் தான் மொத்த பங்கையும் அவர்களே வாங்கி கொள்வதாக சொல்லிட்டாங்கனு நினைக்கிறேன்” என்றான் கவின் யோசனையுடன்.


“என்னடா சொல்ற? என்னோட திறமையையும், செயலியையும் பார்த்து அவங்க இந்த பங்குகளை வாங்கலைனு சொல்றியா?” என்று கேட்டான் மித்ரன் கோபமாக.


“அப்படி சொல்லலைடா, முதலில் எல்லாம் உன்னோட திறமை மற்றும் திட்டத்தை பார்த்து தான் சம்மதம் சொன்னாங்க. அதன் பிறகு தான் அவர்களுக்குள் மனக்கணக்கு போட்டுக் கொண்டது போல் எனக்கு தெரிந்தது” என்றான் கவின் சமாதானமாக.


“அப்ப சரி. கேட்டால் என் மறுப்பை சொல்லிக் கொள்ளலாம். ஆனால் என்னை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது” என்றான் மித்ரன் அழுத்தமாக.


எப்படியோ சொந்த நாட்டில் மித்ரனோட சேர்ந்து தொழில் செய்யலாம் என்று இருந்த கவினுக்கு ஆராத்யாவின் காதலால் என்ன நடக்குமோ? அவளின் தந்தையும் மாமனும் பங்குகளை வாங்க மறுத்து விட்டால் என்ன செய்வது? என்று கவினுக்கு கவலையாக இருந்தது.


ஆனால் மித்ரன் எந்த கவலையும் இல்லாமல் சாப்பிட்டு முடித்து பில்லை செட்டில் செய்து விட்டு கிளம்பினான். 


“கவின் நீயும் என்னுடன் இந்தியாவிற்கு வாயேன், அப்படியே என்னோட திருமணத்திலேயும் கலந்துக்கிட்டது போல இருக்கும்” என்றான் மித்ரன்.


“சரிடா, எனக்கும் சேர்த்து விமான டிக்கெட் புக் பண்ணு” என்ற கவின் யோசனையில் ஆழ்ந்தான்.


ஆராத்யாவின் வீட்டில், கோபமாக உள்ளே நுழைந்த மகளை பார்த்து புருவம் உயர்த்தினார் சங்கரபாண்டியன். அவளின் காலணி மூலைக்கு ஒன்றாக பறந்தது. கைப் பையை அங்கிருந்த குஷனில் விசிறியடித்துவிட்டு தன் அறைக்கு சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்தாள்.


ஒருவனால் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. கோபத்தில் உச்சியில் இருந்தாள் ஆராத்யா.


சங்கரபாண்டியனும் அவர் மனைவி பிலோமினாவும் ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டனர். ஆராத்யாவின் அறைக்குள் போக எத்தனித்த பிலோமினாவை தடுத்தார் சங்கரபாண்டியன்.


“இரு மினி, நான் போய் பேசறேன்” என்று சொல்லிவிட்டு மகளின் அறைக்குள் சென்றார்.


அவள் அருகே கட்டிலில் அமர்ந்தவர் அவளின் தலையை கோதியபடி, “என்னடா ஆரா? என்னாச்சு என் செல்ல மகளுக்கு?” என்று கொஞ்சினார்.


அப்படியே திரும்பி தந்தையின் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டு “டாடி” கதறி அழுதாள் ஆராத்யா. பதறி போனார் சங்கரபாண்டியன்.


“என்னடா? என்னாச்சு? ஏன் அழற? இன்னைக்கு மித்ரனை பார்க்க போறதாக தானே சொல்லிட்டு போன? அவன் எதாவது உன் கிட்ட மிஸ்பிகேவ் பண்ணானா?” என்று கேட்டார் பல்லை கடித்தபடி


“சேச்சே, அப்படி எல்லாம் இல்ல டாடி” என்றவள் மீண்டும் கேவினாள்.


“அப்போ எதுக்கு அழறனு சொல்லிட்டு அழுடா, டாடிக்கு பதட்டமாக இருக்கும் இல்ல?” என்று அவளின் தலையை கோதினார்.


“டாடி நான் மித்ரனை லவ் பண்றேன்” என்றாள். “சரி அதனால் என்ன? நாங்க உன் ஆசையை மறுக்க போறோமா என்ன?” என்றார் தந்தை.


“ஆனால் மித்ரன் என்னோட ஆசையை மறுத்திட்டார் டாடி” என்றாள் தந்தையின் முகத்தை பார்த்து, “”என்ன? உன்னை போய் மறுத்தானா?” என்றார் சங்கரபாண்டியன் நம்பமுடியாமல்.


“ஆமாம் டாடி, சின்ன வயசிலிருந்து யாரையோ லவ் பண்ணாராம், அதனால் என்னை வேண்டாம்னு சொல்லிட்டார்” என்றாள் ஆராத்யா.


யோசனையுடன் மகளைப் பார்த்தவர், “சின்ன வயசில தானே லவ் பண்ணியிருக்கார், இந்த ஐந்து வருடத்தில் அந்த பெண்ணே இவரை மறந்து இருக்கலாம். இங்கே இருந்தவரையில் மித்ரன் ஒரு பெண்ணிடமும் பழகியது இல்லனு சார்லஸ் சொல்லியிருக்கான். நானும் சார்லஸ்ம் அவரிடம் பேசறோம் நீ கவலைப் படாதே” என்றார் கனிவாக.


தந்தை சொன்னதும் சற்றே மனம் தெளிந்தவளாய் எழுந்து அமர்ந்தாள் ஆராத்யா, “நிஜமாகவா சொல்றீங்க? ஆனால் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தவர் எப்படி டாடி என்னை ஏத்துக்குவார்?” என்றாள் கண்களை துடைத்துக் கொண்டே.


“அவரோடது பப்பி லவ், எல்லாருக்கும் வந்து போறது தான், அதையே அவர் சீரியசாக எடுத்துட்டு இருக்காருனு நினைக்கிறேன். எடுத்து சொன்னால் புரிஞ்சுப்பார்னு தான் எனக்கு தோணுது. இந்த விஷயத்தை என்கிட்ட விடு, நான் பார்த்துக்கிறேன். நீ கவலை படாமல் சந்தோஷமாக இருக்கணும், புரியுதா?” என்றார் மகளின் தலையை செல்லமாக ஆட்டியபடி


“ஓகே டாடி” என்று புன்னகைத்தபடி தந்தையை கட்டிக்கொண்டாள் ஆராத்யா.


அன்று இரவே சங்கரபாண்டியன் சார்லஸிடம் விஷயத்தை போனில் தெரிவித்தார். “ஓகே சங்கர் நீயும் நாளைக்கு ஆபிஸ் வந்திடு, இரண்டு பேருமாக சேர்ந்து மித்ரனிடம் பேசுவோம்” என்றார் சார்லஸ்


மறுநாள் மித்ரனை இருவரும் அழைத்து பேசினார்கள். “மித்ரன் நீங்க ஏன் ஆராத்யாவை திருமணம் செய்துக்க கூடாது? பிசினஸ்ல மட்டும் பார்ட்னராக இல்லாமல் வாழ்க்கையிலும் பார்ட்னாராக சேர்ந்தே பயணிக்கலாமே? உங்க இரண்டு பேருக்கும் ஜோடி நல்லாவே இருக்கும்” என்றார் சார்லஸ்.


“சாரி சார், நான் ஏற்கனவே கமிட்டட். இதில் எந்த மாற்றமும் இல்லை. சொந்த விஷயமாக இல்லாமல் தொழில்சார்ந்த விஷயம் என்றால் மேற்கொண்டு பேசலாம்” என்றான் மித்ரன் அழுத்தமான குரலில்.


“இப்படி சட்டென தூக்கி எறிந்து பேசினால் எப்படி மித்ரன்?” என்றார் சங்கர பாண்டியன்.


“அப்படி இல்லை சார், தொழில் சார்ந்த உங்களின் கேள்விக்கு பதில் அளிக்க கடமை பட்டிருக்கேன், ஆனால் சொந்த வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை எடுக்க நான் விரும்பவில்லை. என் அத்தை மகள் தாரா தான் என் மனைவி” என்றான் அழுத்தமாக.


“நீங்கள் இல்லாத இந்த ஐந்து வருடத்தில் அந்த பெண், வேறு யாரையாவது காதலித்திருக்கலாம் இல்லையா?” என்ற சங்கர பாண்டியனை முடிக்க விடாமல் எட்டி அவர் சட்டையை பிடித்திருந்தான் மித்ரன்.


“மித்ரன், என்ன இது? நான் உங்க கிட்ட இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. கன்ட்ரோல் யுவர் பிஹேவியர்” என்று அதட்டினார் சார்லஸ்.


அதன்பிறகு அவன் தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கையில் அமர்ந்தான்.


“உங்களோட இந்த பிசினஸ்க்கு முக்கால்பாகம் பங்குதாரர்களாக இருக்கிறோம். நாங்கள் கேட்கும் இந்த ஓரே வேண்டுகோளை உங்களால் அதைக் கூட நிறைவேற்ற முடியாதா?” என்றார் சங்கரபாண்டியன்.

“சாரி சார் பிசினஸ் வேற, சொந்த விஷயம் வேற. உங்க மகளை திருமணம் செய்துகிட்டா தான் நீங்க பங்குதாரர்களாக இருக்கமுடியும் என்றால் உங்களோடு இந்த பிசினஸ் கூட எனக்கு வேண்டாம்” என்றான் மித்ரன் திட்டவட்டமாக.


ஒரு ஓரமாக நின்றுக் கொண்டு இவர்களின் சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்த கவினும் சார்லஸ்ம் மித்ரனின் இந்த பதிலில் அதிர்ந்து போய், “மித்ரன்” என்று கத்தி விட்டிருந்தனர்.


இறுக்கமான முகத்துடன் அவர்களை திரும்பி பார்த்தான் மித்ரன். இந்த ஐந்து வருடங்களாக மித்ரன் கவினுடன் அதிகமாக பேசியிருந்தது இந்த பிராஜெக்ட்டை பத்தி தான். அப்படிப்பட்ட நல்ல வாய்ப்பை ஒரு நொடியில் எடுத்தெறிந்து பேசுகிறானே என்று கவின் பதட்டமடைந்தான்.

சார்லஸ் கூட மித்ரனின் கடின உழைப்பை அருகில் இருந்து பார்த்தவர் தானே. இப்போது தங்கை மகளை பார்ப்பதா? மித்ரனின் கடின உழைப்பை பார்ப்பதா? என்று அவருக்குமே சங்கடமாக இருந்தது.


மித்ரனின் அருகில் வந்த கவின் அவன் தோளில் கைப்போட்டு, “பட்டென்று எதையும் யோசிக்காமல் வார்த்தையை விடாதே மித்ரன். நிதானமாக யோசித்து பிறகு முடிவெடு, அதற்கு பிறகு இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம்” என்றான் கவின்


“இதில் யோசிக்க எதுவுமே இல்லை, தாரா தான் என் மனைவி. என் திறமையை பார்த்து என்னுடன் தொழில் செய்வாதானால் செய்யட்டும். இல்லையென்றால் பரவாயில்லை. பணத்திற்காக விலை போக நான் தயாராக இல்லை” என்றான் மித்ரன் தீர்க்கமான குரலில்.


“இத்தனை வருட உழைப்பை வீணாக்கி, உன் லட்சியத்தை அந்த பெண்ணிற்காக விட்டுத் தர போகிறாயா? அப்படி என்ன அந்த பெண் உயர்ந்தவள்? அவள் என் பெண்ணை விட அவள் என்ன பேரழகியா? இல்லை பெரிய பணக்காரியா?” என்று கேட்டார் சங்கரபாண்டியன் மனது தாங்காமல்.


“ஒப்பிட்டு பார்க்க முடியாதவள் தான் என் தாரா, சிறு வயதிலிருந்தே ஏன் அவள் பிறந்ததிலிருந்தே அவளை என் மனைவியாக தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் என்னிடம் சொல்லி வளர்த்தார்கள். அதனால் அந்த எண்ணம் எப்போதும் மாறாது” என்றான் மித்ரன்.


“என்னடா சொல்றே?” என்று கேட்டான் கவின். அப்போது தான் வந்த ஆராத்யாவும் மித்ரனின் கடைசி வார்த்தைகளை கேட்டு அப்படியே நின்றிருந்தாள்.


மித்ரன் தன் காதலியைப் பற்றி சொல்ல தொடங்கினான்



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post