இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-06 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 15-03-2024

Total Views: 43175

அத்தியாயம்-06


அந்த பிரம்மாண்டமான வீட்டிற்குள் தம்பதியராய் நுழைந்தனர், அஞ்சனா மற்றும் யஷ்வந்த் கிருஷ்ணா. யஷ்வந்தின் குடும்பம், அஞ்சனாவின் குடும்பம் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் மட்டும் அங்கு கூடியிருந்தனர்.

ஆரத்தி எடுத்து வரவேற்று இருவரையும் அமர்த்தி பாலும் பழமும் கொடுத்து மற்ற சடங்குகளைச் செய்ய, அஞ்சனாவுக்கு சோர்வில் தூக்கம் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. 

மணமேடையில் அன்னையிடம் வாங்கி கட்டியதே இன்னும் அவளுக்கு மனம் ஆரவில்லை. இதில் மீண்டும் எதையேனும் கேட்டு திட்டுவாங்க வேண்டாம் என எண்ணியவள் கண்களால் அர்ஜுனைத் தேடிக் கொண்டிருந்தாள்.

அவள் கண்களின் அலைப்புறுதலைக் கண்ட யஷ்வந்த், 

“யாரைத் தேடுற?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி சற்றே குனிந்து வினவ, திடீரெனக் கேட்ட அவனது அடர்ந்த குரலில் லேசாய் அதிர்ந்து திரும்பினாள். யஷ்வந்த் தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி கேள்வியாய் நோக்க, அவனது ஒற்றைப் புருவத் தூக்கலை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்.

“உன்ன தான் கேட்டேன்” என்று மீண்டும் தனது கேள்வியால் அவளை நடப்புக்கு அவன் இழுத்து வர, சட்டென அன்னையின் வார்த்தைகள் நினைவு பெற்று தலையைத் தாழ்த்திக் கொண்டவள், “அ..அஜு” என்றாள். 

தான் நிமிர்ந்து சுற்றி முற்றி பார்த்தவன், “அவன் வெளிய இருக்கான்னு நினைக்குறேன். என்ன வேணும்?” என்று வினவ, “அ..அது” என்றவள் யஷ்வந்திடம் கூறலாமா வேண்டாமா எனப் பயந்தாள்.

“என்னனு சொல்லு” என்று சற்றே காட்டமாக அவன் குரல் வந்து விழ, 

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “டயர்டா இருக்கு” என்று மெல்லொலியில் கூறினாள். அவனிடமிருந்து எந்த சத்தமும் வராததால் பெண்ணவள் நிமிர்ந்து பார்க்க, அவன் அவளை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது கலைந்த தோற்றம், சிவந்த விழிகள், அதன் கீழே இழுவியிருந்த மை கரை, என அனைத்தையும் கண்டவன், “வா” என எழுந்து கொள்ள, சட்டென அவன் எழுந்ததில் மேலும் திடுக்கிட்டவள்,

 “அ..அம்மா” எனத் துவங்கும் முன் “உன்ன வானு தான் சொன்னேன்” என்று பற்களைக் கடித்துக் கூறியவன் முன்னே செல்ல அவன் பின்னே அமைதியாய் சென்றாள்.

சமையலறையிலிருந்து எதிர்ப்பட்ட அமுதா, “மாப்பிள்ளை எதும் வேணுங்களா?” என்று வினவ, 

“ம்ம்..” என்றவன் என்ன வேண்டுமெனக் கூறாது உள்ளே சென்றான். அமுதா மகளை நோக்க, அவள் பயத்தோடு “மா..மாமா” என்றபடி உள்ளே சென்றாள்.

யாழினியிடம் அவன் ஏதோ பேசிவிட்டு செல்ல, யாழினி அஞ்சனாவிடம் வந்து “சாரி அஞ்சு.. ரொம்ப டயர்டாயிடுச்சா? என்னை கூப்பிட்டிருக்கலாம்ல?” என்றாள். 

அஞ்சனாவுக்கு என்ன பேசவென்றே தெரியாது விழிக்க, வேறு ஏதும் பேச்சை வளர்க்காது அவளைக் கூட்டிக் கொண்டு முதல் தளத்தில் இருக்கும் தனதறைக்கு வந்தாள்.

அறைக்குள் நுழைந்த அஞ்சனா, விழிகள் விரிய அவ்வறையை நோக்க, வாசலிலேயே அதிர்ந்து நின்ற அண்ணியைக் கண்டு சிரித்துக் கொண்ட யாழினி, 

“என்னாச்சு அஞ்சு?” என்றாள்.

 “அண்ணி.. உங்க ரூம் ரொம்ப அழகா இருக்கு. ஃபுல்லா லாவன்டெர் அன்ட் வைட் கலர் காம்போல செம்மயா இருக்கு” என்று உற்சாகமாய் அஞ்சனா கூற,

 “எனக்கும் மையூக்கும் லாவன்டர் கலர் தான் ரொம்ப பிடிக்கும் அஞ்சு. அப்பா பாத்து பாத்து ஒவ்வொன்னும் எங்களுக்கு பிடிச்ச மாதிரி செய்தது” என்று கூறியவளது கடைசி வரிகள் சற்றே ஏக்கத்தோடு முடிந்தன.

சுவற்றில் தொங்கும் தந்தையின் புகைப்படத்தை யாழினி நோக்க, “அவங்க தான் மாமாவா அண்ணி?” என்று அஞ்சனா வினவினாள். 'ஆம்' என்று தலையசைத்தவள் தன்னை சரிசெய்து கொண்டு, 

“சரி சரி நான் என்னோட டிரெஸ் தரேன். நீ மாத்திட்டு ரெஸ்ட் எடு” என்று தனது உடை ஒன்றை கொடுத்துவிட்டுச் சென்றாள். 

சிலமணிநேரம் கழித்து மால்யதாவும் யாதவனின் மனைவி அக்ஷராவும் கதவைத் தட்ட, தட்டுத் தடுமாறி விழித்து எழுந்து வந்து கதவைத் திறந்தாள். அவளது கலைந்து தூங்கி வழிந்த முகம் கண்டு சிரித்த மால்யதா அக்ஷராவை நோக்க, அதே புன்னகையுடன், 

“அடடா.. தூக்கம் பத்தலை போலயே” என்று கூறவும் மால்யதா ஒரு ஆசுவாச பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

தன் சிவந்த கண்களைத் தேய்த்துக் கொண்ட அஞ்சனா “காலைலயே சீக்கிரமே எழுந்துட்டேன் க்கா. அதான் கண்ணெல்லாம் எறியுது” என்று கூற, 

“நேரம் ஆச்சுடா. குளிச்சுட்டு வந்து இந்த புடவைய கட்டிக்கோ” என்று அக்ஷரா அனைத்தையும் கட்டிலில் வைத்தாள்.

‘மறுபடியும் புடவையா?’ என அதிர்ந்து கண் திறந்த அஞ்சனா மால்யதாவை நோக்க, “குளிச்சுட்டு வாடா” என மால்யதா கூறினாள். 

சிறு தலையாட்டலுடன் அவள் குளித்து வர, மால்யதா உபையத்தில் அழகுபட அந்த புடவையைக் கட்டி முடித்தாள். இருவரும் கீழே வர, சொந்தங்கள் யாவரும் புறப்பட்டிருந்தனர். இரு வீட்டார் மட்டுமே கூடியிருக்க, அஞ்சனா வீட்டாரும் கிளம்புவதற்கு தயாராக இருந்தனர். 

அஞ்சனாவைக் கூட்டிக் கொண்டு தோட்டத்திற்கு வந்த அர்ஜுன் “அஞ்சு.. எனக்கு தெரியும் நீ சின்ன பொண்ணு தான். உன் வயசுக்கு மீறிய ஒரு பொறுப்பை அம்மா உனக்கு ஏற்படுத்திட்டாங்க. ஆனா நீ புரிஞ்சுக்காத தெரிஞ்சுக்காத பலதும் இன்னும் இருக்கு. இனி உன் லைஃப்ல உனக்கு சுயமா முடிவுகள் எடுக்க நீ பழகிக்கனும். எல்லாத்துக்கும் அஜுவைத் தேடக் கூடாது. நாலு பேர கலந்து ஆலோசிச்சு செய்யுற விஷயம் வேற, சின்ன சின்ன விஷயங்கள் கூட அஜுகிட்ட கேட்குறது வேறடா. 

லைஃப் நீ நினைச்சுட்டு இருந்தபோல ரொம்ப சின்னது இல்லை அஞ்சு. அதுல நீ தெரிஞ்சுக்க வேண்டிய அத்தியாவசிய விஷயங்களே இன்னும் நிறைய இருக்கு. ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ கல்யாணம் கணவர் என்பது உன் லைஃப் முழுக்க உன்கூடவே இருக்கப் போற ஒரு பந்தம். அதனால உனக்கு தோன்றுறதை அவர்கூட ஷேர் பண்ணு. யாருக்காகவும் அவர்கிட்ட நடிக்க மட்டும் செய்யாத. நீ நீயா இரு” என்று நீளமாகப் பேசினான்.

“ஏன் அஜு இப்படி சொல்ற? கல்யாணமானா உன்கிட்ட நான் எதுவும் கேட்க கூடாதா?” என்று அஞ்சனா கலக்கமாக வினவ, 

‘ஐயோ பாப்பா.. உனக்கு நான் எப்படி புரியவைப்பேன்..?’ எனக் கலங்கிய அர்ஜுன், “அப்படி இல்லைடா. எல்லாத்துக்கும் ஒருத்தரை சார்ந்து இருக்கக் கூடாதுனு சொல்றேன். நாளைபின்ன உன்கிட்ட ஏதாவது கேட்டா அஜுவ கேட்டு சொல்றேன் அஜுவ கேட்டு சொல்றேன்னு சொல்லாம அதோட சாதக பாதகங்கள ஆராய்ஞ்சு நீயா முடிவெடுக்க பழகுனு சொல்றேன். அஜு எப்பவுமே உன்கூட தான் இருப்பேன். ஆனா என்னிக்கும் அஜு உனக்கு பலவீனமா இருக்கக் கூடாதுனு தான் நான் ஆசைப்படுறேன்” என்றான்.

அவன் கூறியது அத்தனை தூரம் அவளுக்கு விளங்கவில்லை என்றாலும் ‘தானாக சிந்தித்து தனித்து முடிவெடுக்க பழக வேண்டும்’ என்பதை மட்டும் புரிந்து கொண்டாள். புரிந்து கொண்ட செய்தி அவளுக்கு அத்தனை உவப்பானதாக இல்லை. இத்தனை வருடங்கள் ‘அஜு.. அஜு' என அவனையே சுற்றி, அவனையே சார்ந்து வாழ்ந்தவளுக்கு திடீரென திருமண பந்தம், சுயசிந்தனை என்ற செய்தியெல்லாம் பயத்தையே தற்போது விளைவித்தது.

அதில் கண்கள் கலங்கப் பெற்றவள் அர்ஜுனை அணைத்துக் கொண்டு “எனக்கு பயமா இருக்கு அஜு” என்று கூற, அதில் அதிர்வும் கலக்கமும் ஒருசேரப் பெற்றவன் தங்கையை ஆதரவாய் அணைத்து, 

“ஒன்னுமில்லடா பாப்பா. நீ எதுவும் பெருசா நினைக்காத. உன்னை உன் யஷு மாமா நல்லா பாத்துப்பாரு” என்று கூறினான்.

இதைக் கூற அர்ஜுனுக்கு துளியும் விருப்பமில்லை. இன்னும் சொல்லப் போனால் யஷ்வந்தின் மீது அவனுக்கு எந்த அபிப்ராயமும் இல்லை, ஆனால் ஏனோ அவனைக் கண்டால் கோவம் மட்டும் கிளர்ந்தெழுந்தது. இத்தனை சிறு பிராயத்தில் என் தங்கையை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டு செல்கின்றானே என அவனையும் அறியாது அவன் மனம் ஊமையாய் கதறியதன் வெளிப்பாடே அது. இவ்வாறான பிடித்தமின்மை இருந்தபோதும் அஞ்சனாவின் வாழ்வே இனி யஷ்வந்திடம் எனும்போது யஷ்வந்தையாவது அவள் நம்பி அவ்வீட்டில் இருக்க வேண்டுமே என்றுதான் அவ்வாறு கூறினான்.

அர்ஜுனை அணைத்துக் கொண்டு அழுதவள், “கிளம்பப் போறியா அஜு? இனிமே எப்ப வருவ? என்னை பார்க்க அடிக்கடி வருவியா?” என்று வினவ, அவனுக்கு கண்களில் கண்ணீர் புகுந்துவிட்டது.

“நான் டெய்லி வருவேன்டா பாப்பா. நாம தினமும் காலேஜ்ல மீட் பண்ணுவோம் தானே. எதுக்கு அழற? நாம தினமும் பார்த்துக்கலாம்” என்று கரகரத்த குரலில் கூறியவன் புறங்கையால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“நான் உன்ன மிஸ் பண்ணுவேனே அஜு.. நம்ம ரூம், பில்லோ ஃபைட், உன் ஸ்டோரி டெல்லிங் எல்லாம்.. எல்லாம் மிஸ் பண்ணுவேன்” என்று அவள் அழுகையோடு கூற,

 “பாப்பா.. அஞ்சுமா.. ஒன்னுமில்லடா” என்று அவளை சமாதானம் செய்தான். 

“சாரிடாமா.. சாரிடா பாப்பா.. அழாதடா” என்று கண்களில் கண்ணீரோடு அர்ஜுன் கூற,

 “ப்ராமிஸா டெய்லி வருவியா அஜு?” என்று கேட்டாள்‌. 

“கண்டிப்பாடா.. ப்ராமிஸா வருவேன்” என்று அவளுக்கு வாக்குறுதிகள் கொடுத்து அவள் கண்ணீரைத் துடைத்தவன் அவளைத் தன் தோள் வளைவில் இருத்தி உள்ளே கூட்டி வந்தான். 

அஞ்சனாவின் குடும்பம் கிளம்புவதற்கு ஆயத்தமாய் நிற்க, அமுதா மகளை கண்ணீரோடு அணைத்துக் கொண்டார். ஏற்கனவே அர்ஜுனைப் பிரியப் போகும் சோகத்தில் இருப்பவள் அன்னை அழுததும் மீண்டும் அழுதுவிட, ‘அழ அழ கல்யாணம் செஞ்சு வச்சுட்டு இப்ப கட்டிபிடிச்சு ஆறுதல் வேற' என அர்ஜுன் மனதோடு அன்னையை திட்டிக் கொண்டான்.

“ச்சு.. அழக்கூடாது.. அம்மா உன்னை காட்டுலயா விட்டேன்? சந்தோஷமா இருக்கனும். மாப்பிள்ளையையும் அவங்க குடும்பத்தையும் அனுசரிச்சு நடந்துக்கனும். அர்ஜுன் தினமும் வருவான். நீயும் நினைச்சா அங்க வந்துடப்போற” என்று அமுதா கூற, ‘இவங்களும் தானே அழுதாங்க.. இப்ப என்னை இப்படி சொல்றாங்க’ என்று நினைத்தபடியே திருதிரு விழியோடு அவள் தலையாட்டினாள்.

அனைவரையும் சென்று அணைத்துக் கொண்டவள் தன் அண்ணன் மகன் அத்வைத் மற்றும் அக்கா மகள் அதிதியை அணைத்துக் கொள்ள, 

“அத்தை இனிமே எனக்கு கதை சொல்ல அங்க வரமாட்டியா?” என்று அத்துவும் “அப்ப கண்ணாமூச்சிக்கு ஆள் குறைஞ்சுடுமா?” என அதிதியும் கேட்டனர்.

'ஏதூ.. கண்ணாமூச்சியா? சரியா போச்சு.. கல்யாணம் பண்ணிகிட்டு இவகூட கண்ணாமூச்சி தான் ஆடனும்போல’ என்று யஷ்வந்த் நினைத்துக் கொள்ள,

 “அத்தை அடிக்கடி வருவேன்டா அத்துகுட்டி.. சித்தி வாரா வாரம் வரும்போது அதி குட்டிகூட எல்லாம் விளையாடுறேன்” என்று குழந்தைகளுக்கு சமாதானம் கூறினாள்.

அப்படியிப்படியென பேசி கிளம்ப ஆயித்தமானவர்கள் வாசலைக் கடப்பதற்கே ஒருமணி நேரமாகிருந்தது. 

கலக்கத்தோடு சென்றவர்களுக்கு கைகாட்டியபடி நின்ற அஞ்சனாவின் முகம் வாடி வதங்கியிருக்க, 

“அஞ்சு பீ கூல்.. தினமும் காலேஜ்ல அவனைப் பார்க்கலாம்.. நினைச்ச நேரம் உங்க வீட்டுக்கு நீ போயிட்டும் வரலாம்” என்று யாழினி ஆறுதல் படுத்தி உள்ளே அழைத்து வந்தாள்.

உணவு வேளை அன்று அமைதியுடனே முடிய, சம்பிரதயாத்திற்காக ஒரு பால் செம்பைக் கொடுத்து மருமகளை அனுப்பி வைத்தார் யமுனா. அந்த வீட்டின் கட்டுமான யுக்தியை கண்டு வியந்தபடி நடந்தவள் சட்டெனத் திரும்பி யாழினி அவள் அறை நோக்கி செல்வதைப் பார்த்து “அண்ணி” என்று அழைத்தாள்.

அவள் அழைப்பில் திரும்பிய யாழினி, “என்னடா?” என்க, 

“யஷு மாமா ரூம் எது?” என்று கேட்டாள். 

சன்னமான சிரிப்புடன் அவளிடம் வந்தவள், 

“சாரி உனக்கு எதுவுமே காட்டலைல? கீழ உள்ள நுழைஞ்சதும் ரைட் சைட் முதல் ரூம் யாதவண்ணா அக்ஷரா அண்ணியோட ரூம். அதுக்கு பக்கத்துலயே குழந்தைகளுக்கு ஸ்டடிரூம் அன்ட் ப்லே ரூம் இருக்கும். அதுக்கடுத்த ரூம் அம்மாவோடது. லெஃப்ட் சைட் ரெண்டு கெஸ்ட் ரூம், அப்பறம் கிட்சன், அதுக்கடுத்து பூஜ ரூம் இருக்கும். மேல முதல் ரூம் என்னோடது. அடுத்தது மினி லைப்ரேரி இருக்கும். அண்ணாக்கு எனக்குலாம் புக்ஸ் படிக்குற பழக்கம் உண்டு. அதனால யஷ்வா அண்ணா தான் அந்த லைப்ரேரி அமைச்சது. அந்த லாஸ்ட் கார்னர்ல உள்ளது அண்ணா ரூம்” என்று நீளமாக கூறி முடித்தாள்.

அஞ்சனாவுக்கு தலையே கிறுகிறுத்து விட்டது. 'ரூம் எங்கேனு கேட்டது குத்தமா?’ என்ற எண்ணம் தோன்ற, அவள் எண்ணம் புரிந்தவளாய் சிரித்த யாழி, “சாரி அஞ்சு.. நாளைக்கு பொறுமையா சுத்தி காட்டுறேன்.. இப்போ போ” என்று அனுப்பி வைத்தாள்.

சிறுதலையசைப்போடு சென்றவள் அந்த அழகிய வேலைபாடுகள் கொண்ட கருப்பு நிற தேக்குமரக் கதவின் முன் வந்து நின்றாள். மற்ற பெண்களாக இருந்திருந்தால் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க, நெஞ்சம் தடதடக்க, இமை சிறகடிக்க நின்றிருப்பர்.. நம் நாயகி தான் வளர்ந்த குழந்தையாயிற்றே.

எவ்வித பதட்டமும் இன்றி அவள் கதவை தட்ட, எந்த எதிர்வினையும் இல்லை. மெல்ல தானே கதவைத் திறந்தவள் உள்ளே வர, முழுதும் கருப்பு வெள்ளை கலவையில் அசரடிக்கும் ஆளுமையோட இருந்தது அவ்வறை.

தேக்கு மரம், பீங்கான் அலங்காரப் பொருட்களே அவ்வறையை அலங்கரித்திருந்தது. பொதுவாக கருப்பு நிறம் எதிர்மறை ஆற்றலைக் கொடுக்கும் என்று கருதி அறைகளுக்கு அந்நிறம் பூசமாட்டர் என்று மனையியல் பாடங்களில் படித்த நினைவு எழுந்தது.

ஆனால் அவ்வறை எதிர்மறை ஆற்றலுக்கு பதிலாக வியப்பையே கொடுத்தது. அத்தனை இறுக்கத்தோடும், சிரிக்க மறந்த இதழ்களோடும் வளைய வந்தவன் எத்தனை கலாரசிகனாக உள்ளான் என்பதை அவன் அறை துள்ளியமாய் எடுத்துக் காட்டியது.

தேக்கு மரத்தை இழைத்து, அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டு செதுக்கப்பட்ட கட்டில், பீரோ என அனைத்திலும் கருப்பு வெள்ளைக் நிறங்களின் சாயலே. அறையில் நடுநாயகமாய் இருந்த ராஜ தோரணை கொண்ட கட்டிலின் தலைப்பகுதிக்கு மேலிருந்த சுவற்றில் ஐந்தடி உயரத்தில் மாட்டப்பட்டிருந்தது, அவன் புகைப்படம்.

அவனுக்குப் பிடித்த கருப்பு வெள்ளை கோர்ட் சூட் அணிந்து சுவற்றில் ஒரு காலை குற்றி மறுகாலை தரையில் ஊன்றி, இரு கைகளையும் கால்சட்டையின் பைகளில் நுழைத்து, தலையை லேசாய் திருப்பிய வண்ணம் அவன் நின்றிருந்த தோரணையை இமைக்க மறந்த நிலையில் வியப்பாய் பார்த்து நின்றாள்.

என்னவென்று புரியாத உணர்வில் அவளுள்ளம் தடுமாற, உடைமாற்றும் அறைக் கதவு திறக்கப்பட்ட சத்தத்தில் திரும்பினாள். 

டிராக் பேண்ட் மற்றும் பணியன் அனிந்து தலை துவட்டியபடி வந்தவன் அஞ்சனாவைக் கண்டு தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேள்வியாய் நோக்க, மீண்டும் அதை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

தனிச்சையாய் அவள் தன் ஒற்றை புருவம் மட்டும் உயர்த்தி முயற்சித்து முகத்தை மேலும் கீழும் சுழித்து சுருக்க, அதை கண்டு அடக்கமாட்டாது பக்கென சிரித்தான், யஷ்வந்த்.

அதில் மேலும் வியந்தவள், “உங்களுக்கு சிரிக்க வருமா யஷு மாமா?” என்று கேட்டுவிட்டு சட்டெனத் தன் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

 “ஏன்? நான் சிரிக்கவே மாட்டேன்னு யாரும் உனக்கு சொன்னாங்களா?” என்று யஷ்வந்த் வினவ, பதட்டத்துடன் “இல்ல இல்ல” என்றாள்.

 “அப்றம்?” என மீண்டும் அந்த ஒற்றைப் புருவத் தூக்கலுடன் அவன் வினவ, 

“அ..அது நீங்க சிரிச்சு பார்த்ததே இல்லை. அதான்..” என்றவள், அப்புகைப்படத்தை கை காட்டி, “அதுல கூட சிரிக்கவே இல்லையே” என்றாள்.

தானும் அப்படத்தைத் திரும்பிப் பார்த்தவன் தன் தோள்களைக் குலுக்கிக் கொள்ள, அப்படியே நின்றாள். மீண்டும் அவள்புறம் திரும்பியவன், ஒற்றைப் புருவம் உயர்த்தி ‘என்ன’ என்க, அந்த பால் செம்பை நீட்டினாள். அதையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன், “எனக்கு பால் பிடிக்காது” என்க, 

“எனக்கும் பிடிக்காது. கீழ போய் குடுத்துட்டு வந்துடவா?” என்றாள்.

'ஏதே?’ என்றபடி அவளை நோக்கியவன் “அங்க வை” என்று கூற, சிறு தலையாட்டலுடன் அதை வைத்தாள். சென்று துண்டை உலரப் போட்டுவிட்டு வந்தவன், “வா” என்க,

 “எங்க மாமா?” என்றாள். 

அவள் கரம் பற்றியவன் “இது பாத்ரூம், இது டிரெஸிங் ரூம்” என்றபடி அவ்வறைக்குள் அவளுடன் நுழைந்தான். “உன்னோட டிரஸஸ் எல்லாம் வந்துடுச்சு. நாளைக்கு உனக்கு ஏற்றபோல அடுக்கி வைச்சுக்கோ” என்று யஷ்வந்த் கூற, “ம்ம்” என்றபடி திரும்பியவள் ஒரு சிறு கப்போர்டைப் பார்த்து விழிகள் விரிய நின்றாள்.

அவள் பார்வை செல்லும் திசை பார்த்தவன், “ஏ கேட்கனும்னு நினைச்சேன் இது என்னது?” என்று வினவ, “என்னோட கண்ணாடி வளையல், ஜிமிக்கி வைக்குற கப்போர்ட் மாமா” என்றபடி அதைத் திறந்தாள். 

அழகழகாய் அனைத்து நிறங்களிலும் கண்ணாடி வளையல் அதற்கு ஏற்ற நிறத்தில் ஜிமிக்கிகள் இருந்தன. “எனக்கு கண்ணாடி வளையல்னா ரொம்ப பிடிக்கும். டிரஸ்ஸுக்கு மேட்சிங்கா கண்ணாடி வளையலும் ஜிமிக்கியும் போட்டுப்பேன். அதனால அதை மட்டும் வைக்குறதுக்கு ஆதியண்ணா அவங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி இதை செய்து வாங்கிட்டு வந்தாங்க. நான் எடுத்தா கலைச்சுடுவேன். அஜு தான் பாத்து எதையும் கலைக்காம எடுத்துத் தருவான்” என்று அவள் அதை பார்த்தபடி கூற, அவள் கண்களில் அந்த கண்ணாடி வளையலுக்கான ஆசையின் மினுமினுப்பு தெரிந்தது.

இவையெல்லாம் யஷ்வந்துக்கு முற்றிலும் புதிது. அவன் வீட்டில் கண்ணாடி வளையல் அணியும் பெண்களே இல்லையே! அண்ணியும் அம்மாவும் தங்க வளையல், தங்கைகள் பிரேஸ்லெட், கைக்கடிகாரம், இல்லையேல் ஒரே ஒரு பட்டையான அலங்கார வளையல் அலங்கரித்த கரங்கள் தான் அவன் கண்டதுண்டு. அஞ்சனாவின் இந்த ஆசையைக் காண புதுவிதமாக இருந்த போதும் அவன் இதழ்களை மெல்ல  புன்னகை செய்தன.

பின் அவ்வறையிலிருந்து வெளியேறிய பிறகு, மற்றொரு கதவைத் திறந்தவன், “இது என்னோட ஆஃபிஸ் ரூம். பிஸ்னஸ் சம்மந்தமான எல்லாம் இங்க இருக்கும்” என்று கூற, அனைத்தையும் சிரத்தையோடு கேட்டுக் கொண்டு தலையாட்டினாள். பின் பால்கனிக்கு வந்தவன் அமைதியாய் நிலாவை நோக்க, சுற்றிலும் இருந்த மலர்செடிகளைப் பார்த்தவளுக்கு உற்சாகமாக இருந்தது.

'இத்தனை இறுக்கமான ஒருவனுக்குள் மென்மையான எண்ணங்களும் உள்ளதே’ என்று ஆச்சரியம் அவற்றைப் பார்த்தால் தோன்றும். 

“பால்கனி ரொம்ப அழகா இருக்கு யஷு மாமா” என்று தேக்குமர ஊஞ்சலில் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு அவள் கூற, அவளைத் திரும்பிப் பார்த்தவன் இதழ் பிரியாது புன்னகைத்துக் கொண்டான்.

சில நிமிடங்களில் இருவரும் அறைக்குள் நுழைய, தனது வளையல்களைக் கழைந்து மேஜையில் வைத்துக் கொண்டிருந்தாள். ஆடவன் அவளைப் புருவம் சுருக்கிப் பார்க்க, அவனைத் திரும்பிப் பார்த்தவள், “தூக்கம் வருது மாமா. தூங்கும்போது உடைஞ்சுடும்ல.. அதான்” என்றாள்.

“உள்ள அந்த கப்போர்டல வைச்சுடு அஞ்சனா” என்று அவன் கூற, சரியென அதை வைத்துவிட்டு வந்தாள். வந்தவள் அப்படியே அவனைப் பார்த்தபடி நிற்க, “நீ படு.. எனக்கு வேலை இருக்கு” என்றவன் வேலை அறை நோக்கி செல்ல, “குட் நைட் யஷு மாமா” என்றாள்.

அதில் அவளைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன், “குட் நைட்” என்றுவிட்டு உள்ளே செல்ல, பஞ்சு மெத்தை கட்டிலில் விழுந்தவள் சில நொடிகளிலேயே உலகம் மறந்து உறங்கிப் போனாள்.


Leave a comment


Comments


Related Post