இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 15-03-2024

Total Views: 38890

முந்தைய நாட்களில் நினைவுகளில் முழுதாய் தன்னை மூழ்கடித்து நின்று கொண்டிருந்தவனை கைப்பேசி அழைப்பு கலைத்தது. அவனது அன்னை அனுசுயா அழைத்திருந்தார். எடுத்து காதில் வைத்தான் தரணி.


“அம்மா…”


“ஊருக்கு போய்ட்டீங்களா தரணி…”


“ஈவினிங்தான் வந்தோம்மா… வீட்லதான் இருக்கோம்…”


“என்ன பண்றா என் மருமகள்…?”


“ஹான்… இருக்கா… தூங்கிட்டான்னு நினைக்கிறேன்…”


“சாப்பிட்டீங்களா…?”


“மீரா சமையல் பண்ணி எடுத்துட்டு வந்திருந்தா… எல்லாருமே சாப்பிட்டோம்…”


சில வினாடிகள் மௌனம்.


“அ..அம்மா…” தயக்கமாய் வெளிவந்தது அவன் குரல்.


“சொல்லுப்பா…”


“எ..என்மேல உ..உங்களுக்கு வருத்தமோ கோபமோ இல்லையா…?” சங்கடமாய் கேட்டான்.


“நடந்த விஷயங்களை எல்லாம் நீதான் தெளிவா சொன்னியே… நிறைய பேரோட வாழ்க்கையை காப்பாத்தி கொடுத்திருக்க… சமயோசிதமா யோசிச்சு நல்ல முடிவுதான் எடுத்திருக்க… நமக்காக மட்டுமே வாழறதை தாண்டி மத்தவங்களை பத்தியும் அதிகமா அக்கறை எடுத்துக்கிற மனசு இந்த காலத்துல பெரும்பாலானவங்களுக்கு கிடையாது. அதுல என் பையன் தனித்துவமா இருக்கிறது எனக்கு சந்தோசம்தான்…”


“ஆனா என்னோட கல்யாணத்தைப் பத்தி உங்களுக்கு நிறைய கனவுகள் இருந்திருக்கும்… அதை என்னால நிறைவேத்த முடியலையேன்னு வருத்தமா இருக்கும்மா…”


“என்ன பண்றது…? நாம நினைக்கிற மாதிரியே எல்லாமே நடந்திடாது… எதிர்பாராத சம்பவங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கையே…”


“அ..அப்பா… அப்பா ரொம்ப வருத்தப்பட்டாராம்மா… எனக்கு அவர்கூட பேசவே சங்கடமா இருக்கு…” நிஜமான வருத்தத்துடன் வெளிவந்தது அவன் குரல்.


“உண்மையை சொல்லணும்னா அவருக்கு வருத்தம்தான்… ஆனா உன் மேல் கோபம் இல்ல… நிலைமையை புரிஞ்சுக்கிட்டார்… உனக்கு விமரிசையா கல்யாணம் பண்ணனும்னு நிறைய கனவுகள் வச்சிருந்தார்… அதனால வந்த வருத்தம்… அப்பா பக்கத்துலதான் இருக்கார்… பேசுறியா…?”


“அ..அம்மா நா..நான்…” அவன் தயங்க “பேசு…” சொன்னவரின் போன் கைமாறி இருந்தது.


“ஹலோ…” கரகரப்பாய் எதிர்முனையில் அவன் தந்தை முத்துராமனின் குரல்.


“அ..அப்பா… சா..சாரிப்பா… நான் உங்களை ரொம்ப வேதனை படுத்திட்டேனா…?” இவனது குரலில் அதிகமான வேதனை இருந்தது.


“இல்ல தரணி… அம்மா சொன்ன மாதிரி கொஞ்சம் வருத்தம்தான். ஆனா உன் மேல கோபம் எல்லாம் கிடையாது… என் பையன் எதையும் நிதானமா யோசிச்சுதான் செய்வான்… அந்த நம்பிக்கை எனக்கு எப்பவும் உண்டு…”


“தேங்க்ஸ்ப்பா… both of you are such a great parent… I love you…” தரணி நெகிழ்ந்து கூற எதிர்முனையில் முத்துராமனின் மெலிதான சிரிப்பு சத்தம் கேட்டது.


“சின்ன வயசுல இருந்தே உனக்கு நிறைய அன்பை எங்களால கொடுக்க முடியல… ரெண்டு பேருமே வேலைக்கு போனதால உன்னை பக்கத்துல இருந்து கவனிச்சுக்க முடியாமதான் ஹாஸ்டல் லைஃப் கொடுத்தோம். பிரிவுத்துயர் உனக்கு மட்டும் இல்ல தரணி… எங்களுக்கும்தான்… ஆனா சூழ்நிலை அதுக்கு பழகிக்க சொல்லுச்சு… உனக்கு ஒரு பெஸ்ட் ஃபியூச்சர் கொடுக்கணும்னா நல்ல எஜுகேஷன் கொடுக்கணும்னுதான் சில விஷயங்களை ஏன் பல விஷயங்களை விட்டுக் கொடுத்தோம். இப்போ நீ நல்ல வேலையில இருக்க… யாரையும் எதிர்பார்க்காத வருமானத்தையும் ஏற்படுத்திக்கிட்ட… அப்பா அம்மாவா அந்த விஷயத்துல உன்னை சரியா வழிநடத்திட்டோம். எங்களோட ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ்ல இழந்ததை எல்லாம் மீட்டெடுத்துக்கணும்னு ஆசை எங்களுக்கும் இருக்கு. உன்கூட வந்து இருக்கணும்… எங்க மருமகள் பேரன் பேத்திங்களோட நேரத்தை செலவிடணும்… இந்த ஆசைகள்தான் இப்போ எங்க மனசுல இருக்கு. உன் கல்யாணத்துல ஆரம்பிச்சு எங்களோட ஆசைகள் ஒவ்வொன்னா நிறைவேத்திக்கணும்னு நினைச்சோம். பட் அது மட்டும் மிஸ் ஆயிடுச்சு…”


தந்தை மனம் விட்டு பேசிய விஷயங்களில் தரணியின் மனம் கூடுதலாய் கரைந்தது. இழுத்துச் செல்லும் வாழ்க்கையின் ஓட்டத்தில் பல விஷயங்களை சேக்ரிஃபைஸ் செய்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் இன்றைய பெரும்பாலான மனித சமூகம் தள்ளப்பட்டு இருக்கிறது. அன்பும் ஆசையும் நிறைய இருந்தாலும் எதார்த்த வாழ்வின் எந்திர சுழற்சியில் பல விஷயங்கள் ஏக்கங்களாக இதயத்திற்குள் நின்று போய் விடுகின்றன. சிலருக்கு காலம் கடந்து அவற்றை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சிலருக்கு வாழ்நாள் முழுக்க கிடைப்பதே இல்லை. 


தரணியின் பெற்றோரும் ஆகச்சிறந்த பெற்றோர்தான். அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஒற்றை மகனை விடுதி வாழ்க்கையிலேயே வாழ வைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருந்தான். முகிலனைப் பற்றி பேசும்போதெல்லாம் அவனது குடும்பப் பின்னணி அந்த கிராமத்து வாழ்க்கை போன்றவற்றை சிலாகித்துப் பேசுவான் தரணி. அவனது பேச்சுக்களில் அவனுக்குள் புதைந்திருக்கும் ஏக்கங்களை பெற்றோர்கள் நன்றாகவே உணர்ந்தும் கொள்வர். இன்று அதே குடும்பத்தில் ஒரு பெண்ணை மனைவியாக மகன் ஏற்றுக்கொண்டதில் அவனது நெடுநாள் ஏக்கம் இனியாவது தீருமே என்ற நிறைவுதான் ஏற்பட்டது.


அன்பை வாரி கொடுக்கும் சொந்த பந்தங்களுடன் அவன் வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடங்கியதில் மகிழ்ச்சியே. ஆனால் மருமகள் தன் மகனை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லையே… இந்த பிணக்கு விரைவில் சரியாக வேண்டுமே என்ற கவலையும் இருந்தது. அவளது மனநிலை என்னவாக இருக்கும் என்பதை கல்வியறிவு நிறைந்த அந்த பெற்றோர் நன்றாகவே புரிந்து கொண்டனர். அத்துடன் தங்களின் மகனின் குணநலனும் தெரியும்… விரைவில் அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையும் எழுந்தது.


“அப்பா… பூச்செண்டோட போட்டோ அனுப்பினேனே… பார்த்தீங்களா… உங்க மருமகளை உங்களுக்கு பிடிச்சிருக்கா…?” சற்று இலகுவாகி பேசத் தொடங்கியிருந்தான் தரணி.


“பேர் மட்டும் இல்ல… பேருக்கு ஏத்தபடியே எங்க மருமகளும் அம்சமா இருக்கா… உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா… லட்சுமி கடாட்சியமான அழகான பொண்ணு… அந்த வகையில எங்க மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு தரணி…”


“தேங்க்ஸ்ப்பா…” இதழ்களோடு சேர்ந்து கண்களும் சிரித்தன.


“தரணி…*


“சொல்லுங்கப்பா…”


“கல்யாணத்தைதான் எங்க கண்ணுல பார்க்க முடியல… உங்களை மாலையும் கழுத்துமா ஒரு ரிசப்ஷன் வச்சாவது பாக்கணும்னு ஆசையா இருக்குடா… எங்களுக்காக மட்டுமில்ல… நம்மளை சுத்தி இருக்கிற சொந்தகாரங்களுக்காகவும் இதை பண்ணனும் இல்லையா…”


“புரியுதுப்பா… உடனடியா முடியுமான்னு தெரியல… அ..அவ இப்போ இருக்கிற மனநிலையில இதுக்கு ஒத்துக்குவாளான்னு தெரியல… கொஞ்சநாள் போகட்டுமே…”


“ரொம்பவும் லேட் பண்ணிடக் கூடாது இல்லையா…”


“அடுத்த வாரம் அவங்க வீட்டு ஆளுங்க எல்லாரும் இங்கே வராங்க… முகிலன் மீரா கல்யாணத்தை உடனே நடத்தியாக வேண்டிய கட்டாயம்… அதோட பூச்செண்டோட அப்பாவும் அம்மாவும் உங்களை பார்க்க ஊருக்கு வரணும்னு சொன்னாங்க… அநேகமா நாளைக்கு வருவாங்க…”


“இப்போதான் சம்மந்தி என்கூட போன்ல பேசினார் தரணி…”


“அப்படியா…!” ஆச்சரியமாய் கண்கள் விரிந்தான் தரணி.


“அவங்களை எதுக்கு அலைய வைக்கணும்…? எங்களுக்கும் எங்க மருமகளை பாக்கணும்… அவங்க அங்கே வரும்போது நாங்களும் அங்கே வந்துடறோம்… முகிலனோட கல்யாணம் உன்னோட ரிசப்ஷன் எல்லா விஷயங்களையும் நேரிலேயே பேசிக்கலாம்… அதோட மருமகளும் இந்த நாலஞ்சு நாள்ல கொஞ்சம் சகஜம் ஆயிடுவா… எங்களை ஃபேஸ் பண்ணும்போது சங்கடம் இருக்காது பாரு… இதையெல்லாம் சம்மந்திகிட்ட சொல்லிட்டேன்…”


பல விஷயங்களை யோசித்திருக்கும் தன் தந்தையை நினைக்கையில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் முழுக்க இறங்கி இருந்தது. பெற்றவர்கள் உற்ற துணையாக இருக்கும்போது வேறென்ன வேண்டும்…? இனி பொக்கேவை சரி பண்ற வேலையை மட்டும் பார்க்கணும்… நிறைய நன்றிகளை பெற்றவர்களுக்கு அள்ளித் தெளித்து நிறைந்த மனதுடன் இணைப்பை துண்டித்திருந்தான். நிம்மதியாக உதடு குவித்து மூச்சு விட்டான்… நேரத்தை பார்த்தான்.


‘ஆஹா அந்த நாய்க்கு கொடுத்த டைம் முடிஞ்சுதே. இன்னும் வராம என்ன பண்றான்…?’ மீண்டும் போனை எடுத்து முகிலனுக்கு அழைத்தான்.


“தரணீதர பெருமானே… வந்துட்டேன்… வந்து வாசல் கதவை திற…” எரிச்சலாய் பேசிய முகிலனின் வார்த்தைகளில் சிரித்தபடியே அறையில் இருந்து வெளியேறி வீட்டின் கதவை திறந்தான்.


உள்ளே நுழைந்து தளர்வாய் சோபாவில் அமர்ந்து பூச்செண்டின் அறையை ஒரு பார்வை பார்த்து “சொர்க்கவாசல் திறக்கவே இல்லையா…?” என்றவனிடம் இல்லை என்று தலையசைத்தபடியே அருகில் அமர்ந்தான் தரணி. தன் பெற்றோரிடம் பேசிய விபரங்களை அவனிடம் கூறினான்.


“சோ எவ்ரிதிங் ஆல்ரைட்… நம்ம மங்கம்மாவை மட்டும் மலை இறக்கினா போதும் .. இல்லையா…” கைகள் இரண்டையும் பிடரியோடு கட்டி சோபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்தபடியே கூறினான் முகிலன்.


“அது கொஞ்சம் கஷ்டம்தான்டா… டைம் ஆகும்… பார்க்கலாம் விடு…” தானும் உடலை சற்று தளர்த்தி சாய்ந்து அமர்ந்து கொண்டான் தரணி.


“அதனாலதான் நாளையில இருந்து மீராவை இங்கே வந்து தங்கிட சொல்லிட்டேன்… அவ கூட இருந்தாதான் பேசி பேசி இவளை சரி பண்ண முடியும்…”


“இவளை சரி பண்றதுக்காக வரச் சொன்னியா… இல்ல உன் வேலையை உல்லாசமாக பார்க்கலாம்னு வரச் சொன்னியா…”


“டேய்ய்ய்…”


“நீ செய்யக்கூடிய ஆளுதானடா… எல்லா நேரமும் என் கூடவேதான் இருந்த… ஒன்னாவேதான் ஆபீஸ் போனோம்… ஒன்னாவேதான் வீட்டுக்கு வந்தோம்… சினிமாவுக்குகூட நாம சேர்ந்துதானடா போனோம்… எந்த கேப்ல உன் காதல் லீலைகள் எல்லாம் கட்டவிழ்ந்து போச்சுன்னு இப்போ வரைக்கும் எனக்கு புரியவே இல்லடா… உன்னை எல்லாம் நம்ப முடியாதுடா சாமி…”


“போதும்டா… மூணு நாளா மானங்கெட என்னை எல்லாரும் வச்சு செஞ்சுட்டுதானே இருக்கீங்க… இனி கல்யாணம் முடியிற வரைக்கும் கண்ணியமாதான் அவகிட்ட நடந்துக்குவேன்… போதுமா…”


“இனி வளர்மதி வயசுக்கு வந்தா என்ன…? வராட்டி என்ன…? செய்ய வேண்டியதை எல்லாம் சிறப்பா செஞ்சிட்டியே… உன் கண்ணியத்தை கொண்டு போய் கடல்ல கொட்டு… அதெல்லாம் கல்யாணம் முடியாம அவ இங்கே வந்து தங்க வேண்டாம்…”


“டேய்… அவ கன்சீவா இருக்காடா… அவளையும் தனியா விட முடியாது… இந்த நரிச்சின்னக்காவையும் தனியா விட்டுட்டு ஆபீஸ் போக முடியாது…”


“ஓய்… என்ன நரிச்சின்னக்கா பொரிச்சின்னக்கான்னு உன் இஷ்டத்துக்கு கூப்பிடற… ஒழுங்கு மரியாதையா என் பொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடு… பூச்செண்டுன்னு அழகா பேர் வச்சுருக்காங்கல்ல…” நீட்டி இருந்த கால்களில் குதிங்காலை தரையில் அழுத்தி ஆட்டியபடியே கூறியவனை ஒரு மார்க்கமாய் பார்த்தான் முகிலன்.


“ன்னா…? ன்னாடா லுக்கு…?”


“நீ மட்டும் பொக்கேன்னு சொல்ற…” 


“என் பொண்டாட்டியை நான் என்ன பேர் வேணாலும் சொல்லி கூப்பிடுவேன்டா…” 


நண்பனின் பேச்சில் பொய்யாய் அவனை முறைத்திருந்தாலும் முகிலனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் ஆர்ப்பரித்தது. எனக்காக அல்லாமல் தனக்காகவும் இந்த வாழ்க்கையை அவன் மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதிகமாய் ஆனந்தம் கொள்ளப்போவது நான்தானே. பூச்செண்டின் மேல் இவன் மனதார நேசம் வைத்து அவளும் இவனை இதயத்தில் ஏற்றிக் கொண்டால் மட்டும்தானே என் இதயத்தில் எந்நேரமும் அழுத்திக் கொண்டிருக்கும் குற்றமும் குறுகுறுப்பும் நீங்கும். அந்த நாள் வெகுவிரைவில் வரவேண்டும்… இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாய் வாழ்வதை நான் பார்க்க வேண்டும்‌. திடீரென ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனின் முகத்தின் முன்னே சொடுக்கிட்டான் தரணி.


“என்ன… என் பொண்டாட்டிக்கு வேற என்ன பேர் வைக்கலாம்னு யோசிக்கிறியா…?”


“நான் பூச்செண்டுன்னு கூப்பிட்டா அவளுக்கு பிடிக்காதுடா... ரொம்ப பிரியமா இருந்தா அம்முன்னு கூப்பிடுவேன்… அப்படியாவது கூப்பிடலாமா…? அனுமதி உண்டா…?” வேண்டுமென்றே பவ்யமாய் உடலை வளைத்து கேட்டவனை பார்த்து சத்தமாய் சிரித்தான் தரணி.


“நீ கிட்ட போனாலே உன்னை எட்டி உதைப்பா… இதுல அம்முன்னு வேற கூப்பிடுவியா… சரி உன் இஷ்டம்…” தோளை குலுக்கிக் கொண்டான்.


“நாளைக்கு நாம ரெண்டு பேருமே ஆபீஸ் போயிடுவோம்… இவ கூட மீரா வந்து இருக்கட்டும்டா…”


“மீரா ஆபீஸ் வரமாட்டாளா…?”


“அவ லீவு போட்டு ரெஸ்ட்ல இருக்கட்டும்…”


“இப்ப இருந்தே ரெஸ்ட் தேவை இல்ல… கல்யாணம் முடியட்டும்… மெட்டனிட்டி லீவுக்கு இன்னும் நாள் இருக்கு… இப்பவே அவளை வீட்ல இருக்க வச்சு ஆபீஸ் பூரா நீயே விஷயத்தை காட்டி கொடுத்துடாதே… டைம் கிடைக்கும்போது அவ இங்கே வரட்டும்… பொக்கே கூட இருக்கட்டும்… ஆனா நைட் இங்கே ஸ்டே பண்ற வேலை வேண்டாம்…”


“அப்போ நீ என்னை நம்பல… அப்படித்தானடா… ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடறேன்… நீயும் பூச்செண்டும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்காம இனி என் விரல்கூட மீரா மேல படாது…” சற்று ஆவேசமாய் பேசிய முகிலனின் தோளில் கை போட்டு மென்மையாய் புன்னகைத்தான் தரணி.


“அந்த சபதம் எல்லாம் வேணாம்டா… அப்புறம் நீ ரொம்ப காய்ஞ்சு போயிடுவ…”


“அவ மனசை நான் மாத்தி காட்டறேன்டா…”


“ம்ஹூம்… மனசு தானாதான் மாறணும்… ஒருத்தர் சொல்லி மாறக்கூடாது… ஐ கேன் வெயிட்…” இரண்டு கண்களை சிமிட்டியபடி சொன்னவன் “குட் நைட்…” என்று கூறி படுக்கைக்கு சென்றிருந்தான்.


“நீ வெயிட் பண்ணுவ… நான் பண்ணனுமே… ருசி கண்ட பூனையோட கஷ்டம் உனக்கு எங்கே தெரியப்போகுது… அதுவும் இல்லாம எனக்காக உன் வாழ்க்கையை மாத்தி அமைச்சிருக்க… அப்படிப்பட்ட உன் வாழ்க்கையை சந்தோஷமா மாத்த வேண்டியது என் பொறுப்பு… நரிச்சின்னக்கா கிட்ட நான் கண்டிப்பா பேசுவேன்டா…”


தனக்குத்தானே சூளுரைத்தபடி தானும் அறைக்குள் நுழைந்து கொண்டான். மறுநாள் அவளிடம் கன்னம் பழுக்கப் போவது தெரியாமல் மீராவுடன் கனவில் கட்டிப்புரண்டு கொண்டிருந்தது பக்கி.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post