இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 03 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 15-03-2024

Total Views: 21597

காதலொன்று கண்டேன்!

தேடல்  03


"பைத்தியக்காரத்தனமா பேசாத தீப்தி..அவர பத்தி உனக்குத் தெரியாது..நீ ப்ரெண்ட் ஆக போனன்னு வை..உன் வேல தான் போயிரும்.."

"ப்ச்ச்..எதுக்கு ப்ரியா இவ்ளோ பயப்பட்ற..காலேஜ்ல எத்தன பேர் என் பின்னாடி சுத்தி இருப்பாங்க..எம் டி ய விட அழகான பசங்க கூட என் பின்னாடி சுத்தி இருக்காங்க.."

"அப்றம் எதுக்குடி..எம் டி ய ப்ரெண்ட் ஆக்கிக்கனும்னு யோசிக்கற..பேசாம அவனுங்க கூடவே கடல போடலாம்ல.."

"ம்ஹும்..அவனுங்க அழகு தான்..என் பின்னாடி சுத்துனானுங்க..ஆனா உங்க எம் டி அழகா இருக்காரு..அவனுங்கள கொஞ்சமே கொஞ்சம் தான் கம்மி..ஆனா எந்தப் பொண்ணயும் முக்கியமா என்ன கண்டுக்கல பாரு..தட்ஸ் வை ஹீ அட்ராக்ட்ஸ் மோர்..நா பிக்ஸ் ஆயிட்டேன்..இன்னும் எண்ணி பத்தே நாள்ல உங்க எம் டி ய ப்ரெண்ட் ஆக்கி காட்றேன்.."

"கிறுக்குத்தனமா பேசாத..எப்டியும் நா சொல்றத நீ கேக்க மாட்ட..என்ன வேணா பண்ணிக்கோ..என்ன இதுல இழுத்து விட்றாத தாயே..எனக்கு வேல தான் முக்கியம்.."

"ம்ம்ம்.." என்றவள் வேண்டுமென்றே கோப்போன்றை தூக்கிக் கொண்டு அவனின் கேபினுக்கு குறுக்கே கடந்து செல்ல அவள் நடந்து செல்வது கண்ணாடித் தடுப்பின் வழியே காளைக்கு தெரிந்தாலும் விழி நிமிர்த்தி பார்க்கவில்லை,அவன்.

"ப்ச்ச்..என்ன இந்தாளு தலய சரி தூக்கி பாக்க மாட்டேங்குறான்.." தனக்குள் முணுமுணுத்த படி மீண்டும் ஒருமுறை குறுக்கே நடக்க அப்போதும் அவன் செயலில் மாற்றம் இல்லை.

பத்து நிமிடங்கள் குறுக்கே நடந்து பார்த்தவளுக்கு கால் வலி வந்தது தான் மிச்சம்.சோர்வுடன் இருக்கையில் வந்து அமர்ந்தவளை எள்ளலாய் பார்த்தன,தோழியின் விழிகள்.

"நா தான் அப்பவே சொன்னேன்ல..கேட்டியா..அவரு கேபின்கு குறுக்க நடந்துட்டு இருந்தங்குறதுக்காக மனுஷன் உன்ன பாக்க மாட்டாரு..எத்தன பேர் ரூட் போட்டு இருப்பாங்க..யார் லைன்லயும் சறுக்காத மனுஷன்..இப்போ உன்ன கண்டிப்பா கவனிச்சு இருப்பாரு..பத்ரமா இரு.." என்று சொல்லி முடிக்கும் முன்னமே "தீப்தி உங்கள எம் டி கேபின்கு வர சொல்றாரு.."  என்று பணிபுரியும் தோழன் ஒருவன் கூறி விட்டுப் போக தீப்திக்கு ஒரு கணம் உறைநிலை தான்.

"என்னடி இது..பயமா இருக்குடி.." இத்தனை நேரம் இல்லாமல் புதிதாய் ஒரு பயம் வந்து முகத்தில் ஒட்டிக் கொள்ள கலவரமாய் பார்த்து வைத்தாள்,தோழியை.

"அப்பவே சொன்னேன்ல..கேட்டியா..? எல்லாத்துலயும் புடிவாதம்..லேட் பண்ணாம கெளம்பு..இல்லன்னா அதுக்கும் திட்டு விழும்.." என்று அவளை எழுப்பி விட ஒரு வித பயத்துடன் தான் தொடர்ந்தது,அவளின் நடை.

"எக்ஸ்க்யூஸ் மீ சார் மே ஐ கமின்..?" நடுங்கும் குரலில் அனுமதி கேட்டவளுக்கு கணிணியில் இருந்து பார்வையை அகற்றாமலேயே தலையசைத்து பதில் கொடுத்தவனின் செயலில் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்த பயம் இன்னுமே கூடியது,அவளுக்கு.

"இந்த பொண்ணு என்ன பண்ணுச்சோ தெரியலியே.." தனக்குள் முணுமுணுத்த தரணிக்கு தீப்தியின் முகத்தில் மின்னிய பயத்தை பார்க்க பாவமாகத் தான் இருந்தது.

காளையிடம் திட்டு வாங்கும் கன்னியரின் கண்ணீரை கண்கூடாகக் கண்டிருப்பவன் ஆயிற்றே.அதனால்,வந்த பரிதாபமோ என்னவோ..?

அந்த ரணகளத்திலும் அவள் விழிகளுக்கு அணையிட்டுத் தடுத்துக் கொள்ள இயலவில்லை,
அவளால்.காளையின் முகத்தை தான் அவள் பார்வை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது.

அளவான நிறம் என்று சொல்ல முடியாது.கொஞ்சம் சிவந்த நிறம் தான்.அந்த நிறம் அவனுக்கு இன்னுமே அழகு சேர்ப்பது போன்றிருந்தது.

உணர்வுக் கோலங்களை புலப்படுத்தாது கத்திமுனைப் பார்வையை பாய்ச்சும் நீள விழிகளின் ஓரங்களில் நின்றிருந்த இமை முடிகள் சற்றே அடர்த்தியாய் நீண்டு வளர்ந்திருக்க இமை சிமிட்டும் போது அவை கன்னத்தை தொட்டு மீண்டு கொண்டிருந்தன.

வார்த்தையின்றி வினாக்களுக்கு கொக்கி போடும் புருவங்கள் தடித்து சீரின்றி வளைந்து கிடந்தாலும் அதிலும் ஏதோ ஒரு வித தனித்துவமான அழகு.

இதழ்கள் அழுத்தமாய் மூடிக் கிடக்க மேலிதழின் மேல் நேர்த்தியாய் கத்தரிக்கப்பட்டிருந்த தடித்த மீசையும் மென் புதராய் கன்னத்திலும் தாடையிலும் விரவிப் பரவியிருந்த தாடியுமாய் அவனிருந்த தோரணை ஏனோ அவளை ரசிக்க வைத்தது.

அவளின் சிமிட்டாத பார்வையை கண்ட தரணிக்குத் தான் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம்.

இருமுறை தொண்டையைச் செருமி அவளைக் கலைக்க தெளிந்தவளின் பார்வை தரணியின் மீது படிய வேண்டாமென சைகை செய்தான்,விழிகளில்.
அந்த விழிகளில் கொஞ்சமாய் கெஞ்சலும் இருந்ததோ என்னவோ..?

தான் பார்த்தததை அவன் கவனித்திருக்க மாட்டான் என்கின்ற அசட்டு தைரியம் துளியாய் அவள் மனதில் எழுந்திருக்க இயல்பாய் காட்டிக் கொண்டு தரணியையும் அவனையும் மாறி மாறி பார்த்தவாறு அவள் நிற்க மொத்தமாய் ஐந்து நிமிடங்கள் கடந்த பின் தான் தலை உயர்த்தி அவளை ஏறிட்டான்,காளையவன்.

"வாட்ஸ் யுவர் நேம்..?" சொன்னவனின் குரலில் இருந்த அழுத்தத்திலும் முகத்தில் இருந்த இறுக்கத்திலும் இத்தனை நேரம் இருந்த தைரியம் கரைந்தோட கண்களில் நீர் கட்டிக் கொண்டது.

இத்தனை அதட்டலாய் குரலிலேயே கோபத்தை காட்ட முடியுமா என்று இத்தோடு எத்தனையாவது முறை எண்ணுகிறான் என்று தரணிக்கே தெரியவில்லை.

காளையவனின் அதட்டல் மொழிகளைக் கேட்கும் தருணங்களில் எல்லாம் தானாகவே அவனுக்குள் அந்த எண்ணம் எழுந்திடுவது என்னவோ உண்மை தான்.

"கேள்வி கேட்டா பதில் சொல்லனும்.." மீண்டும் ஒரு அதட்டல்.அந்த அதட்டலையும் அதட்டி தனக்குள் ஒடுக்குவதாய் அவனின் விழிமொழி.

அவனின் விழியில் இருந்த கட்டளைக்கு மேலாய் அவளை அதட்ட அந்த வார்த்தைகள் தேவையில்லை என்பது என்னவோ உண்மை தான்.

மொத்தமாய் பயந்து போக தேங்கியிருந்த கண்ணீர் அவள் கன்னம் நனைக்க அப்போதும் அவன் பார்வையில் எந்த வித மாற்றமும் இல்லை.
விழிகளில் தேங்கியிருந்த அலட்சியம் அப்படியே தான் இருந்தது.

அவன் சந்தித்த பெண்கள் அவனுக்குள் புகுத்திச் சென்ற நினைவுகள் அப்படி.அதனாலோ என்னவோ அவனுக்கு பெண்கள் மீது அந்தளவு நன்மதிப்பு இல்லை.அந்த விடயத்தில் அவனிடம் தவறு இருப்பதாய் உரைக்க இயலாது.

ரணம் கண்டு கனம் கொண்டு தினம் அதை சுமக்கும் மனங்களில் மாற்றங்கள் துளிர்ப்பது அத்தனை எளிதான விடயம் அல்லவே..?

"தீ..தீப்தி.."

"ரைட் எதுக்காக  கேபின சுத்தி வர்ரீங்க..?"

"சு..சும்மா சுத்தி.."

"தரணி இதுக்கப்றம் இவங்க இந்தப் பக்கம் வரக் கூடாது..இவங்க வர்க் க்ரவுண்ட் ப்ளோர்ல இருக்குற செக்ஷனுக்கு மாத்தி கொடுங்க.."

"சார்.." இருவரின் குரலும் ஒரு சேர ஒலிக்க தீப்தியின் குரலில் தன் தோழியருடன் இருக்க முடியாமல் போய் விடுமோ என்கின்ற ஏக்கம் நிரம்பிக் கிடந்தது.

"தட்ஸ் ஆல்.."

"சார்.." கெஞ்சலாய் ஒலித்தது,அவளின் குரல்.

"தரணி இவங்களுக்கு இன்னிக்கி ஹாப் அன் அவர் ஓ டி.." கட்டளையாய் மொழிந்து விட்டு அவன் கணிணியில் மூழ்க தன்னை நொந்து கொண்டே கேபினை விட்டு வெளியேறப் பார்த்தவளை தடுத்து நிறுத்தியது,அவனின் செருமல் சத்தம்.

பயத்துடன் அவனை திரும்பி பார்க்க அங்கு வேறு யாரேனும் இருந்திருந்தால் அந்த விழிகளில் தெரிந்த பயத்தைக் கண்டு கொஞ்சமேனும் இளகியிருப்பர் என்பது சர்வ நிச்சயம்.ஆனால்,
அவனிடம்..ம்ஹும் துளியளவும் இளக்கம் இல்லை.

"என்ன யாரும் பாக்கறது எனக்கு புடிக்காது.." வழமையான அவனின் குரலில் சொல்லி விட்டு அவன் பார்வையை எடுக்க அவன் சொன்னதை கிரகித்துக் கொண்டவளுக்கு தான் தலை சுற்றிப் போனது.

"நம்மள பாக்கவே இல்லயே..அப்றம் எப்டி கண்டு புடிச்சிருக்கும்..கேமரா ஏதாச்சும் இருக்கோ.." அவனின் கேபினை விழிகளால் அலசிய படி அவள் வெளியேற அந்த செயல்கள் தரணிக்கோ ஏனோ சிரிப்பைத் தந்தன.

"சார்.."

"சொல்லுங்க தரணி.."

"பாவம் சார் அந்த பொண்ணு..இப்ப அது இருக்குற டீம்ல அவ ப்ரெண்ட்ஸ் தான் இருப்பாங்க..ஆனா சேஞ்ச் பண்ண டீம்ல இருக்குறது எல்லாம் ஓல்ட் ஸ்டாப்ஸ்..அந்த பொண்ணுக்கு மிங்கிள் ஆக கஷ்டமா இருக்கும்..ஒரு தடவ மன்னிச்சு விட்டீங்கன்னா.." அதற்கு மேல் அவனுக்கு என்ன சொல்வதேன்றே தெரியவில்லை.

கணினித் திரையில் பார்வையை பதித்து இருந்தாலும் தரணியின் பேச்சுக்கு செவி சாய்க்கத் தான் செய்தான்,காளையும்.
ஆனால்,அவன் முகமோ எந்த வித உணர்வுகளையும் பிரதிபலிக்காது இறுகி இருந்தது,எப்போதும் போலவே.

"மனுஷன் கேக்கறாரா..? இல்லயா ஒன்னுமே புரியலியே.."

"நீங்க சொல்றத கேட்டுட்டு தான் இருக்கேன்..பாக்கலாம்.." என்றவனின் குரலிலேயே தெரிந்து போனது,அவன் எடுத்திருக்கும் முடிவில் மாற்றம் இல்லையென்பது.

அவன் அப்படித் தான்.
மற்றையவரின் பேச்சுக்கு செவிசாய்த்தாலும் அவன் நினைத்தால் மட்டுமே பதில் சொல்வான்.எல்லாவற்றுக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்கின்ற எண்ணம் அவனுடன் சேர்ந்து வளர்ந்தது ஆயிற்றே.சடுதியாய் எப்படி அதை மாற்றிக் கொள்ள இயலும்..?

"சின்னதா முணுமுணுத்தாலும் கண்டு புடிக்கிறாரு..பாம்புக் காது.."நினைத்த படி தன் இடத்திற்கு சென்றான்,
தரணிவேந்தன்.

              ●●●●●●●●

இருள் படர்ந்து குளிர் காற்று வீசிக் கொண்டிருக்க யன்னலோரமாய் போடப்பட்டிருந்த கட்டிலில் தலை சாய்த்து அதன் இதத்தில் லயித்து கண் மூடியிருந்தாள்,தீப்தி.

உடலுக்கு இதமாய் இருந்தாலும் மனதுக்குள் காளையவன் அவளிடம் நடந்து கொண்ட முறை தான் மீண்டும் மீண்டும் அலையடித்துக் கொண்டிருக்க ஏனோ அத்தனை கோபமாய் வந்தது.

"மனுஷனா அவன்..ஒரு பொண்ணுன்னு கூட பாக்காம அந்த கத்து கத்தறான்..ம்ஹும் கத்தல..ஆனா எப்டி பேசுனான்..கொஞ்சங் கூட எரக்கமே இல்லாம.." 

"என்ன தீப்தி..யாருக்கு இவ்வளோ சத்தமா திட்டிட்டு இருக்க.."குளியலைறயில் இருந்து வெளியே வந்து தலையை துவட்டிக் கொண்டிருந்த சித்தி மகளின் கேள்வியில் அப்படியே எழுந்தமர்ந்தவளுக்கு தன் மன ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க ஒருத்தி கிடைத்து விட்டாள்,என்கின்ற நிம்மதி.

"அது யாரும் இல்லடி..எங்க எம் டி தான்..மனுஷனா அது..பேய்.."

"என்னடி இது..இன்னிக்குத் தான் அங்க ஆபிஸ்கு போன..மொத நாளே இந்த திட்டு திட்ற..என்னாச்சு..?"

"அது ஒன்னுல்ல பாக்க அம்சமா அழகா இருந்துச்சு..நானும் எப்பவும் போல சைட் அடிச்சி வச்சேனா..திட்டுச்சு..ம்ஹும் அது பேசுனத திட்றதுன்னும் சொல்ல முடியாது..கூப்டு அதட்டுச்சு..நா தான் அழுதுட்டேன்.."

"எதேஏஏஏஏ..?"

"ஆமாடி..கண்ணாலயே மெரட்டும்..அவ்ளோ பவர் அந்த கண்ணுல..எனக்கு பாத்ததும் அவ்ளோ பயம்..அழுதுட்டேன்..மனுஷனா இல்ல ரோபோவான்னே தெரியல.."

"அட..நீயே பயப்பட்ற மாதிரி ஒரு ஆளா..நா பாக்கனும்.."

"யம்மா தாயே..நீ தப்பித் தவறி ஆபிஸ் பக்கம் வந்துராத..அப்றம் அழுதழுது மயங்கி தான் விழுவ..ரொம்ப டெர்ர பீஸு டி..நாம நெனக்கிற மாதிரி இல்ல.."

"சர்தான்..சர்தான்..பாக்கலாம்.." என்ற படி கட்டிலில் சாய்ந்து கொண்டாள்,மித்ரா.

தீப்தியின் சித்தி மகள்.
சொந்த ஊரை விட்டு வேலைக்காக சென்னைக்கு வந்தவளோ தீப்தியின் வீட்டில் தான் தங்கி இருந்தாள்,தாயின் கட்டளைப் படி.

ஊரில் இருந்தால் திருமணப் பேச்சு எடுபடும் என்றறிந்து வேலையை சாக்காய் வைத்து இங்கு வந்தவளுக்கு மனதில் ஏதோ ஒரு வித நிம்மதி.

அவள் வாழ்க்கையில் நினையாயது எல்லாம்  நடந்திருக்க இப்போது வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்கப் பழகி இருந்தாலும் அவளுக்குள்ளும் இன்னும் ஆறாத காயங்கள் இருக்கத் தான் செய்தது.

கிடைக்காமல் போன ஏக்கங்களால் மனதுக்குள் உண்டான காயங்கள் அவை.
அத்தனை எளிதில் அவளால் மறந்திட இயலாதவை.

கட்டிலில் படுத்தாலும் தூக்கம் வரவில்லை.ஏதோ ஒரு வித இறுக்கமும் அழுத்தமும் அவளைச் சூழ்ந்திருப்பதை உணர்ந்தாலும் அதை இல்லாதொழிக்கும் வலி தான் தெரியவில்லை.

மூடிய விழி வழியே அங்குமிங்கும் உருண்ட கருமணிகளை அவளுக்குள் ஏதோ ஒரு சிந்தனை ஓடுவதை புரிந்து கொள்ள முடிந்தது,தீப்தியால்.

"மித்ரா என்ன யோசிக்கற தூங்காம..? பழசயே நெனச்சிகிட்டு இருக்கியா..? அதெல்லாம் முடிஞ்சி போச்சுல..இப்ப தான் எல்லாம் ஓகே ஆகிடுச்சுல.."

"ச்சே..பழசு மைன்ட்ல வர்ல..ஏதோ கொஞ்சம் யோசன..அதெல்லாம் நா எப்பமோ மறந்துட்டேன்.." என்றவாறு தீப்திக்கு முதுகு காட்டி திரும்பி படுத்தவளுக்கு தெரியும்,தான் சொன்னதில் துளியும் உண்மை இல்லை என்பது.

தேடல் நீளும்.

2024.03.15


Leave a comment


Comments


Related Post