இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 16-03-2024

Total Views: 37630

தன் அறையின் பால்கனியில் நின்று கண்ணிற்கு தெரிந்தவரை விரிந்திருந்த பெங்களூருவின் அழகை வெறுமையான விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தாள் பூச்செண்டு. உடலை அழுத்தமாய் அடித்துச் சென்ற காற்று தலைமுடியை கலைத்து விளையாடி முன் நெற்றியிலும் முகத்திலும் விழச் செய்து வம்பு செய்து கொண்டிருக்க எதனையும் கண்டுகொள்ளாது கைகளை மார்பிற்கு குறுக்கே கட்டியபடி இலக்கற்று எங்கோ வெறித்தபடி நின்றிருந்தாள்.


“அம்மு…” அன்பான அழைப்பு யாரென்று உணர்த்தினாலும் திரும்பாமல் சலனமற்று நின்றிருந்தாள்.


அன்று காலை தரணியும் முகிலனும் அலுவலகத்திற்கு கிளம்பும்வரை அவளது பூட்டிய அறை திறக்கப்படவே இல்லை.


“என்னடா 8:30 மணி ஆச்சு… இன்னும் வெளியே வராம இருக்கா…” தரணிக்குள் ஒருவித பதட்டம்? முகிலனுக்கும் கூட மெலிதாய் பயம் பிடித்தது. பலம் கொண்ட மட்டும் கதவை தட்டினான்.


“என்ன வேணும்…?” அதிகாரமான குரலை கேட்ட பின்புதான் இருவருக்கும் உயிரே வந்தது.


“நாங்க சாப்பிட்டோம்டா… உனக்கும் டிபன் வாங்கிட்டு வந்து வெச்சிருக்கோம்… லஞ்சுக்கு வர மாட்டோம்… ஆபீஸ் கேண்டீன்லயே சாப்பிட்டுப்போம்… உனக்கு நீயே சமையல் பண்ணி சாப்பிட்டுக்கிறியா…? இல்ல ஏதாவது அரேஞ்ச் பண்ணனுமா…?” கதவை பார்த்தபடியே முகிலன் சத்தமான குரலில் கேட்க எந்த பதிலும் இல்லை.


சில வினாடிகள் அமைதியாய் நின்றவன் “அவ பசி பொறுக்க மாட்டாடா…? ஏதாவது செஞ்சு சாப்பிட்டுப்பா… நாம கிளம்பற வரைக்கும் வெளியே வர மாட்டான்னு நினைக்கிறேன்… போகலாம்…” என்று கூறி முன்னே நடக்க ஆயாசமாய் அந்த அறைக் கதவை ஒரு பார்வை பார்த்து தானும் வெளியேறினான் தரணி.


கதவு வரை சென்றவன் மீண்டும் வந்து “பூச்செண்டு… வந்து வெளிக் கதவை லாக் பண்ணிக்கோ… வீட்டை திறந்து போட்டு வைக்கிறது சேஃப்டி இல்ல…” மென்மையான குரலில் கூறி வெளியேறி இருந்தான். 


காரிடாரின் மூலையில் இருக்கும் மின்தூக்கியின் அருகில் சென்றவர்கள் மனது கேட்காமல் திரும்பிப் பார்க்க பட்டென்று கதவு அறைந்து சாத்தப்படும் சத்தம் கேட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து தலையை உலுக்கிக் கொண்டு மின்தூக்கிக்குள் நுழைந்தனர்.


என்னதான் வீட்டிலிருந்தே வேலைகளை செய்திருந்தாலும் 15 நாட்களாய் நிலுவையில் உள்ள மற்ற வேலைகள் அவர்களை முழுமையாய் இழுத்துக் கொண்டன. தரணி முழுமையாய் வேலைக்குள் மூழ்கிப் போனான். மீராவும் வேலைக்கு வந்திருந்தாள். முகிலனால் மட்டும் மனம் ஒன்றி வேலையில் ஈடுபட முடியவில்லை. மனம் முழுக்க பூச்செண்டே ஆக்ரமித்து இருந்தாள். வாய்விட்டுந் பேசி சண்டை போட்டு அடித்து அழுது இப்படி ஏதேனும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தாலாவது மனது அமைதி அடைந்திருக்கும். ஆனால் ஓட்டை பானைக்குள் நண்டை விட்டதைப் போல் எந்நேரமும் வளவளத்து உற்சாகமாய் திரிபவள் இறுகிய பாறையாய் அமைதியாய் சுற்றி வருவது மனதிற்குள் பெரும் குடைச்சலைக் கொடுத்தது.


‘அவள் மனதில் நான் ஆழமாய் பதிந்து போனதால் வந்த ஏமாற்றமா…? இனி அவள் தரணியின் மனைவி அல்லவா… என் மனதிலும் மீராதானே இருக்கிறாள்… எங்களது திருமணமும் விரைவில் நடக்கப் போகிறதே… இவள் இப்படியே இருப்பது நல்லதல்லவே… தரணி பாவம் அல்லவா… அவன் இருக்க வேண்டிய இடத்தில் இன்னும் நானே இருப்பது அவனுக்கும் பெரிய உறுத்தலை கொடுக்குமே… என்னை காப்பாற்றத்தானே அனைத்தும் தெரிந்தும் அவள் கழுத்தில் தாலியை கட்டினான். அவள் தன்னை மாற்றிக் கொள்ளாது இப்படியே இருந்தால் அவனது நிலை மோசம் அடையுமே. நிதர்சனம் புரிந்த பின்னும் இதே இறுக்கத்துடன் இருக்கிறாளே… இவளை எப்படியேனும் சமாதானம் செய்ய வேண்டும்…’


முடிவு செய்து கொண்டவன் மதியம் மூன்று மணிக்கெல்லாம் ஹெச்ஆரிடம் அனுமதிக் கடிதம் கொடுத்து தரணியிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி இருந்தான். அவன் வீட்டிற்கு நுழைந்த போதுதான் பூச்செண்டு பால்கனியில் நின்றிருந்தாள்.


“அம்மு…” இன்னும் அழுத்தமாய் அழைத்தபடி அவளுக்கு பக்கவாட்டில் சென்று நின்றான் முகிலன். அவனை திரும்பியும் பார்க்காது கோபமாய் அவள் அறைக்குள் நடக்க தானும் அவள் பின்னே வேகநடை போட்டுச் சென்றவன் அவள் கைப்பற்றி நிறுத்தினான். தன் கையை வேகமாய் அவனிடமிருந்து உதறி விலகி நின்றவள் அவனை பார்வையால் எரித்தாள்.


“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கோபத்தை இழுத்து பிடிக்கப் போறடி…? கிளிப்பிள்ளைகிட்ட சொல்ற மாதிரி உன்கிட்ட எல்லாத்தையும் சொன்னேனே… உனக்கு புரியலையா…?” அவனது குரலிலும் சற்று கடுமை கூடி இருந்தது. எதுவும் பேசாது கண்களை உறுத்து விழித்து அவனை அமைதியாய் பார்த்தபடி நின்றிருந்தாள் பூச்செண்டு.


“காதல் வேற… பாசம் வேற… இப்பவும் உன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன்… உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்… நீ சந்தோஷமா இருக்கணும்… அதை எப்பவுமே விலகி நின்னு பார்த்து சந்தோஷப்படணும்னு மட்டும்தான் நினைச்சேனே ஒழிய உன்னோட சேர்ந்து உன் புருஷனா அனுபவிக்கணும்னு நான் நினைச்சதே இல்ல… உன் பார்வையில இன்னைக்கு நான் கேவலமான ஒருத்தனா நிக்கிறேன்‌.. ஆனா நான் பண்ணின விஷயம் எனக்கு அசிங்கமா தெரியலடி… மீரா மேல நான் வெச்சிருக்கிற காதலோட உச்சம்தான் அது. ஒரு பொண்ணா இன்னொரு பொண்ணோட மனசை உன்னால புரிஞ்சுக்க முடியாதா…? நீ இப்படி இருந்தா நாங்க யாருமே சந்தோஷமா இருக்க முடியாது… மீராவும் ரொம்ப கில்ட்டியா ஃபீல் ஆவா‌.. உடனடியா உன்னை தரணியோட குடும்பம் நடத்த சொல்லல… முதல்ல சகஜமான மனநிலைக்கு வா… எங்ககிட்ட எதார்த்தமா இரு… இப்படி முகத்தை தூக்கி வெச்சிட்டு இருக்காதே… அவன் பாவம்…” ஆற்றாமையுடன் கூறியவன் அவளை நெருங்கி அவள் தாடையை பற்றி தன்புறம் திருப்பினான்.


“தரணி கட்டின தாலியை நீ சுமக்க ஆரம்பிச்சுட்ட… இன்னமும் என்னை உன் மனசுல சுமந்துட்டு இருக்கிறது தப்பில்லையா…? துரோகம் இல்லையா…?” 


சத்தமான குரலில் அழுத்தமாய் கூற தன் கன்னத்தை பற்றி இருந்த அவன் விரல்களை வேகமாய் விலக்கியவள் அவன் கன்னத்தில் பளார் என விட்டாள் ஒரு அறை. தலையை சுற்றிலும் பட்டாம்பூச்சிகளும் காதுகளை சுற்றிலும் வண்டுகளின் ஙொய் என்ற ரீங்காரமுமாய் கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது முகிலனுக்கு. கன்னத்தை பிடித்தபடி அவன் ஸ்தம்பித்துப் போய் நிற்க கண்களை அகலமாய் விரித்து பத்ரகாளியாய் மாறி அவன் முன் வந்து நின்றாள் பூச்செண்டு.


“என்ன சொன்ன…? திரும்ப சொல்லு…” கண்கள் இடுங்க அவனை பார்த்துக் கேட்க அவனோ எச்சில் கூட்டி விழுங்கியபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.


“உன்னை என் மனசுல சுமந்துட்டு இருக்கேனா…? துரோகம் பண்ணிட்டு இருக்கேனா…?” தலையை ஆட்டியபடி புருவத்தை ஏற்றி இறக்கி இகழ்ச்சியுடன் இதழ் வளைத்தாள்.


“என் மனசு பூரா நீதான் இருக்க… உன்னை நான் காதலிக்கிறேன்னு எப்பவாச்சும் உன்கிட்ட சொல்லி இருக்கேனா…? ஹான்…” நெற்றி சுருங்கக் கேட்டவளை புரியாத பார்வை பார்த்தான் முகிலன்.


“நீ பெரிய மன்மதராசா… உன்னை உருகி உருகி காதலிச்சேன்னு நினைச்சியோ… உன்ன…” நாக்கை மடக்கி துருத்தி கை முஷ்டியை இறுக்கி அவனை குத்துவது போன்று பாவனை செய்ய தன்னிச்சையாய் கண்மூடி கை கொண்டு முகத்தை மறைத்திருந்தான்.


“நீ என்னை புரிஞ்சுக்கிட்ட லட்சணம் அந்தளவுல இருந்திருக்கு… எந்த காலத்திலேயும் நான் உன்னை காதலிச்சதும் இல்ல… புருஷன்னு கற்பனை பண்ணிக்கிட்டதும் இல்ல… தெரியுமா உனக்கு…” அவளது அதிரடியான வார்த்தைகளில் ஆச்சரியமாய் அவள் முகம் பார்த்தான் முகிலன்.


“பெருசுங்க வீட்ல கண்டதையும் பேசி இருக்கலாம்… அதையெல்லாம் கண்டுக்காம கடந்து போய்டுவேன்… நீ என்னை எந்த மாதிரி நினைச்சிருந்தியோ அதே மாதிரிதான் நானும் இருந்தேன்…” சொன்னவள் ஒரு நொடி ஆழ்ந்த மூச்சுவிட்டு அவன் முகத்தை ஏறிட்டாள்.


“சின்ன வயசுல இருந்து ஒன்னாவே வளர்ந்தோம்… அடிதடி சண்டை ரகளைன்னு ஆயிரம் இருந்தாலும் என் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்… நீயும் என்மேல நிறைய பாசம் வெச்சிருக்கேன்னு தெரியும். என் மனசுலயும் நீ இருந்ததில்ல… உன் மனசுல நானும் இல்லைன்னும் தெரியும்… இதுதான் பரஸ்பர புரிதல்… காதல் வரையறைக்குள்ள சிக்காத ரத்தபாசம்… அவ்வளவுதான்… நான் உன்னை புரிஞ்சுக்கிட்ட அளவு நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லையே… அதுதான் என் மனசை குத்தி காயப்படுத்திருச்சு…” குரல் கமற கூறியவளை இன்னும் குழப்பமாகவே பார்த்தான்.


“ஆ..ஆனா அ..அன்னைக்கு வீ..வீட்ல உன்கிட்ட என் காதல் விஷயத்தை சொன்ன உடனே நீ ஏன் கோவிச்சுக்கிட்டு கிளம்பி போயிட்ட…? அ..அதுக்கப்புறம் என்கூட நீ பேசவே இல்ல… அ..அப்புறம் நான் வேற எப்படி நினைக்கிறது…?” தயங்கி தயங்கி சொன்னவனை அவள் மீண்டும் கோபக் கண்களால் பார்க்க எங்கே மீண்டும் கன்னம் பழுத்துவிடுமோ என்று கன்னத்தில் கை வைத்தபடி சற்று விலகி நின்றான்.


“கோவிச்சுக்காம என்ன பண்ணுவேன்…? அல்லக்காது குத்திக்கிட்டதை கூட ஆசையா உனக்கு போன் போட்டு சொல்றவ நான். எதையாவது என்னைக்காவது உன்கிட்ட மறைச்சிருக்கேனா…? எதுவாயிருந்தாலும் உன்கிட்டதானே முதல்ல சொல்லுவேன்… அவ்வளவு வெளிப்படையாதானே உன்கிட்ட எப்பவும் இருந்திருக்கேன்… ஆனா நீ…? உன் காதல் விஷயத்தை மூனு வருஷமா என்கிட்ட மறைச்சிருக்க… என் மாமா எப்பவும் என்கிட்ட வெளிப்படையா இருக்கும்னு என் நினைப்புல ஒரு லாரி மண்ணை அள்ளிப்போட்டியே… அதை எப்படி என்னால தாங்கிக்க முடியும்…?” 


“அப்போ நான்தான் லூசு மாதிரி இருந்திருக்கேன்… நீ தெளிவா விலகித்தான் இருந்திருக்க… என்கிட்ட முன்கூட்டியே எல்லாத்தையும் சொல்லி இருந்தா நானே வீட்ல கொஞ்சம் கொஞ்சமா எல்லார்கிட்டயும் பேசி சமாதானம் ஆகலேன்னாலும் சண்டை போட்டாவது உன்னையும் அந்த மீரா அக்காவையும் சேர்த்து வச்சிருப்பேன். உனக்கு என் மேல நம்பிக்கை வராம போயிடுச்சேன்னு கோபத்திலதான் உன் மூஞ்சியிலேயே முழிக்காம இருந்தேன். அதை நீ காதல்னு தப்புக் கணக்கு போட்டுட்ட… அந்த விஷயத்துலயும் என்னை புரிஞ்சுக்கலையேன்னு இன்னும் கூடுதலான கோபம்…”


“அம்மாச்சி சாகுற விளிம்பில நின்னு கல்யாணம் பண்ணனும்னு சொன்ன உடனே என்னால எதுவுமே பேச முடியல. ஆனா நீ உன் காதலுக்காக போராடுவேன்னு நினைச்சேன்… அதுலயும் என்னை ஏமாத்திட்ட… ஐயோ இந்த கல்யாணம் நடந்திடக் கூடாது… எப்படியாவது நின்னு போயிடணும்னு நான் வேண்டாத சாமி இல்ல. ஆனா நீ ஜம்முனு வந்து மணவறையில உட்கார்ந்து இருந்த… எரியிற ஓம குண்டத்துல உன்னை புடிச்சு தள்ளி விடணும்ங்கிற அளவுக்கு கோபம் வந்துச்சு. நீ தாலி கட்டுறதுக்கு முன்னாடியே உன் கையை முறிச்சுப் போட்டு கன்னம் கன்னமா அறையணும்னுதான் நினைச்சேன்…” 


“ஆனா திடீர்னு புகை மண்டலமும் கிறுகிறுப்புமா அந்த ஐயரும் நெருப்புல என்னத்தையோ போட்டு சதி பண்ணி நான் சுதாரிக்கிறதுக்குள்ள என் வாழ்க்கையே வேற மாதிரி ஆகிப்போச்சு. உன் நண்பன் உன்னை காப்பாத்துறதுக்காக என்னை பொம்மையா மாத்திட்டாரு… அதுக்கு என்னை பெத்தவங்களும் உடந்தை… ஆக மொத்தத்துல என் மன உணர்வுகளையோ நான் என்ன நினைச்சிருக்கிறேனோ யாருமே தெரிஞ்சுக்க விரும்பல. என்னை சேர்ந்த எல்லாருமே என்னை ஏமாத்திட்டீங்க… பூச்செண்டு எல்லார்கிட்டயும் தோத்துப் போயிட்டா…”


மடிந்து அமர்ந்து முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள் பூச்செண்டு. அவளை வலி நிறைந்த பார்வை பார்த்தவன் தானும் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளை விலக்கி அவள் முகத்தை கைகளில் ஏந்தினான். 


கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவனைப் பார்த்தவள் “உன்மேல எனக்கு அன்பு மட்டும்தானே மாமா இருந்தது… அதை காதல்னு நீயும்கூட தப்பா நினைச்சுட்டியே… அப்ப நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லையா…? என் கோபத்துக்கான காரணம் என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்கவே இல்லையா…?” கதறலாய் கூற அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் முகிலன். அவன் கண்களிலும் கடகடவென கண்ணீர் வடிந்தது.


“சா..சாரிடா தங்கோ… சாரி… என் அம்முக்குட்டி எப்பவும் எனக்கு குழந்தைதான்… நான்தான் அவளை சரியா புரிஞ்சுக்காம போயிட்டேன். இன்னும் கூட என்னை நாலு அடி சேர்த்து அடிச்சுடு… என்னை மன்னிச்சிருடா அம்மு…” 


அவள் முதுகை வருடியபடி கூற சில நிமிடங்கள் அழுது முடித்து எழுந்து கொண்டாள். தானும் கண்களை துடைத்தபடி எழுந்து கொண்டவன் “என் மனசு இப்போதான் லேசா இருக்கு அம்மு… ரொம்ப நெருடலா இருந்தது… மாமாவை மன்னிப்பியா…?” குனிந்து அவள் முகம் பார்த்து கேட்க “நிறைய தப்பு பண்ணி இருக்க… அவ்வளவு சீக்கிரம் உன்னை மன்னிக்க முடியாது…” சொன்னபடி முகத்தை திருப்பிக் கொண்டாள். 


மெல்ல புன்னகைத்துக் கொண்டவன் “சரி… என்னை மெதுவா மன்னிச்சுக்கோ… ஆனா தரணியை…” என்று சொல்லும் முன் உக்கிரமாய் திரும்பி வேகமாய் கையை அவன் முன் நீட்டி அவன் பேச்சை இடைமறித்தவள் “உன்னை கூட மன்னிச்சிருவேன்… ஆனா உன் ஃபிரண்டை என்னால மன்னிக்க முடியாது…” அழுத்தம் திருத்தமாய் கூறி குளியலறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.




Leave a comment


Comments


Related Post