இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 18-03-2024

Total Views: 36372

பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி தடதடவென மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் தரணி. முகத்தில் கலவையான உணர்வுகளின் பிரதிபலிப்பு. இதயத்தில் 80 சதவிகிதம் இன்பம் 20 சதவிகிதம் துன்பம் கலந்த புதுவிதமான உணர்வு. இன்பத்தின் பங்கு அதிகம் என்பதால் இதழ் கடையோரம் தன்னை மீறிய புன்னகை. மின்தூக்கியின் வழியே முகிலன் கீழே இறங்கும் முன் தாவி ஓடி அப்பார்ட்மெண்ட்டை விட்டு வெளியேறி தன் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து பறந்திருந்தான் தரணி.


அன்று மதியம் தரணியிடம் கூட சொல்லாமல் முகிலன் வேகமாய் கிளம்பி இருக்க தரணியின் பார்வையில் இருந்து அது தப்பவில்லை. அவன் அவசரமாக எங்கு செல்கிறான் என்பது புரிந்தது. 


‘எனக்கு வாழ்க்கை கொடுக்க போராடுறாரோ இந்த வள்ளல்… அவகிட்ட அடி வாங்கணும்னு நேர்த்திக்கடன் இருக்கும்போது அதை யாரால மாற்ற முடியும்…? ஆனா பாவம்… ஒரு வாரமா அடியா திங்குது நாயி… நம்ம ஆளு வேற ஆழ்கடல் மாதிரி அமைதியாகவே இருக்கா… எப்போ சுனாமி கிளம்புமோ…? பாவம் நம்ம பயலுக்கு ரொம்ப சேதாரம் ஆயிட்டா என்ன பண்றது…?” தனக்குள் எண்ணிக்கொண்டவன் முகிலனை இடைவெளிவிட்டு பின்தொடர்ந்தான்.


அறைக்குள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சுவற்றில் சாய்ந்து நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தான். சப்பென்ற அடி விழும் சத்தம் சுவற்றைக் கிழித்து இவன் கன்னத்தில் இறங்கியதைப் போல் தன்னையும் அறியாமல் தானும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டான். நெனச்சது நடந்துடுச்சே… உள்ளே போகலாமா… என்று யோசித்தவன் அடுத்தடுத்து பூச்செண்டு பேசிய வார்த்தைகளில் செயலற்று நின்று போனான். 


முகிலனை அவள் விரும்புவதாக இவனும் அல்லவா நினைத்திருந்தான். என் மாமன்னா எனக்கு உசுரு என்று கண்கள் மின்ன அன்று அவள் கூறியதன் அர்த்தத்தை இவனும் அல்லவா காதல் என்று நினைத்து விட்டான். அவள் கொண்டது காதல் அல்ல பாசம் என்று தெரிந்தபின் பட்டென்று இதயத்தின் இருபுறமும் இறகு முளைத்தது. விட்டால் உடல்கூட்டை தாண்டி வெளியே பறந்து விடுமோ என்று அஞ்சி நெஞ்சை பிடித்துக் கொண்டான். மகிழ்ச்சியில் மனம் திக்குமுக்காடியது… யாரிடமும் சாயாது நட்டு வைத்த இரும்புக் கம்பியாக இறுக்கமாக இருந்த அவனது இதயம் அந்த கிராமத்துத் தென்றலின் வசம்தானே நாணலாய் வளைந்தது.


அவளைப் பார்த்த நொடியில் இருந்து ஏன் அவளது புதுமையான பெயரை கேட்டபோதே உள்ளுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு. அவர்களது முதல் சந்திப்பே அலாதிதானே… வழுக்கி வந்து அவன் மடியில் அமர்ந்து மயிலிறகு இமைகளால் அவனை மயங்கச் செய்து இதுதான் இனி எனது இருப்பிடம் என்று சொல்லாமல் சொன்னாளோ… சுவாரஸ்யமும் ஈர்ப்பும் தாண்டி அவளிடம் நழுவி விழுந்த இதயத்தை கொன்னுடுவேன் என்று மிரட்டி பயமுறுத்தி அல்லவா வைத்திருந்தான். தன் நண்பனை நேசிக்கிறாள் என்று தப்பிதமாய் அனுமானித்துக் கொண்டபோது உள்ளுக்குள் ஒரு வலி ஏற்பட்டதை உணரத்தானே செய்தான். 


மீரா அவனது உடன்பிறவா தங்கை… அவளது வாழ்க்கையை காப்பாற்றி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது… இடையில் ஏதேதோ நடந்து முடிந்தது… பிரச்சனை கைமீறிச் சென்றபோது பூச்செண்டிடம் சென்று அன்று இரவே மீராவின் கர்ப்ப விபரம் கூறி அவளை வைத்தே திருமணத்தை நிறுத்தவே திட்டமிட்டான். ஆனால் மாணிக்கவேலுவும் மல்லிகாவும் அடுத்து நடக்கப் போகும் விபரீதம் பற்றி கூற பட்டென அவனது இதயம் அவன் போட்டு வைத்திருந்த கைவிலங்கை அறுத்து எறிந்து தனக்காகவும் வாதிட்டது.


உன் காதலையும் காப்பாற்று… உன் நண்பன் காதலையும் காப்பாற்று… உன் உறவினர்களின் உயிரையும் காப்பாற்று… என் பூச்செண்டை எனக்கு கொடுத்துவிடு என்று இரு கரம் நீட்டி இறைஞ்சியது அவனது இதயம். சடுதியில் தனக்குள் ஏற்பட்ட எண்ண ஓட்டங்கள்தான் அனைத்தும்… நினைத்ததை ஈடேற்றினான்… புகைமூட்டத்தின் நடுவே மானசீகமாய் தன் பொக்கேவை கைப்பிடித்தான்… அந்த மயிலிறகு கண்கள் கழுத்தில் தாலி ஏறும் அந்த நொடிகள் அவன் கண்களை ஆழ நோக்கியிருந்தால் அவன் கொண்ட காதலின் அளவு தெரிந்திருக்குமோ என்னவோ…? ஆனால் எதையும் உணரும் நிலையில் அவள் இல்லையே.


தான் ஆசைப்பட்டவள் தனக்கே உரிமையானாலும் உள்ளூர பெரும் நெருடல்… முகிலனை மனதில் சுமந்தவள் அவனை மறந்து அந்த இடத்தை எனக்கு அளிக்க வேண்டும்… சாத்தியமா…? எப்பொழுது சாத்தியம்…? ஆனாலும் மாறுவாள் என்று நம்பிக்கை. என் காதலை வெளிப்படுத்த இன்னும் காலங்கள் இருக்கின்றன… பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தான். ஆனால் இந்த நொடி அவள் மனதில் அவள் நண்பன் இல்லை… எனக்கான இடம் யாருக்கும் கொடுக்கப்படாமல் பத்திரமாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று தெரிந்தபின் கையை உயர்த்தி குதித்து சத்தமிட்டு கத்தவேண்டும் போல் தோன்றியது. ஓடிச்சென்று அவளை இடுப்போடு அள்ளி அணைத்துக் கொள்ள ஆசை பிறந்தது.


மகிழ்ச்சியில் கூடுதலாய் முகம் சிவந்து நின்றவன் தன்னை அவள் மன்னிக்க தயாராக இல்லை என்று அவள் வாய் மூலமாக அறிந்தபோது பட்டென்ற வாட்டம் முகத்தில் தோன்றத்தான் செய்தது. தன்மேல் அளவு கடந்த கோபத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது… அந்த கோபத்தில் உள்ள நியாயமும் தெரிந்தது… முகிலன் வெளியே வரும் முன் வேகமாய் அங்கிருந்து வெளியேறி ஓடி இருந்தான். இனி தனது வேலை அவளது கோபத்தை குறைப்பது மட்டுமே என்று முடிவு செய்து கொண்டான். தான் அங்கு வந்ததைப் பற்றியோ அனைத்தையும் கேட்டதைப் பற்றியோ முகிலனிடம் காட்டிக் கொள்ளவில்லை. சிவந்து வீங்கி இருந்த அவனது ஒரு பக்க கன்னத்தை பார்க்கும்போது பொங்கி வந்த சிரிப்பை அடக்கவும் முடியவில்லை… கைக்குட்டையை வைத்து நாசூக்காய் கன்னத்தை மறைத்தபடி அருகில் அமர்ந்திருந்தவனை பார்க்க பார்க்க விரிந்த இதழ்களை குவிக்க முடியவில்லை.


“எங்கேடா போன…? திடீர்னு ஒரு மணி நேரம் ஆளையே காணோம்…” சிரிப்பை உதட்டுக்குள் மறைத்து கணினியில் கண் பதித்தபடியே கேட்டான் தரணி.


“அ..அது மீராவுக்கு மெடிசின்ஸ் வாங்க வேண்டி இருந்தத அ..அதான் வாங்க போயிட்டேன்…” அடி வாங்கிய கன்னம் மறுபுறம் என்பதால் சமாளிப்பாய் பதில் அளித்தான் முகிலன்.


“அப்படியே உனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்திருக்கலாம்ல…” உதட்டை கடித்து சிரித்தபடி கூறினான்.


“எ..எனக்கா…? எ..எனக்கெதுக்கு…?” திருதிருவென விழித்தான் முகிலன்.


“பக்கத்து கன்னம் பழுத்துக் கிடக்கே… என்னாச்சு…? காலைல நல்லாதானே இருந்தது… எங்கேயாவது போய் இடிச்சுக்கிட்டியா…?” நக்கல் தொணியை மறைக்க படாதபாடு பட்டான் தரணி.


“ஓ… அதுவா… அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர்… நீ சின்னப்பையன்… உனக்கெல்லாம் அது தேவையில்ல…” கெத்து விடாமல் கூறியவனை வேலையை நிறுத்தி திரும்பி அமர்ந்து கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான் தரணி.


“நான் சின்னப்பையனா…? இன்ஃபாக்ட் நான் சம்சாரி… எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு… நீதான் கல்யாணம் ஆகாத தண்டுவன்… அது ஞாபகம் இருக்கா…?” புருவத்தை ஏற்றி இறக்கி கூறியவனை பார்த்து பலமாய் சிரிக்க முயன்று கன்னம் வலித்ததால் கன்னத்தில் கை வைத்தபடி அளவாய் சிரித்துக் கொண்டான் முகிலன்.


“ஆனாலும் நான் அனுபவசாலிடா… ஐ நோ எவ்ரிதிங்…” கண்சிமிட்டியவனை பார்த்து த்தூ என்று தரணி துப்ப தெறிக்காத எச்சிலை துடைத்து திரும்பிக் கொண்டான்.


“கன்னம் வீங்குற அளவுக்கு அப்படி என்ன அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர்…?” விடாக்கண்டனாய் கேட்டான் தரணி.


“டேய் பொடிசு… மை டார்லு விடாம குடுத்த அழுத்தமான முத்தத்தில சிவந்து போச்சுடா… அவ்வளவு லவ் என் மேல…” தோளை குலுக்கி சிரித்தவனை அடுத்து கண்களால் காறி துப்பினான் தரணி.


“உண்மை நண்பா…” கைகளை விரிக்க “நம்பிட்டேன்…” தலையை ஆட்டிக் கொண்டான்.


“நீ வேணா இதை உன் பொண்டாட்டிகிட்ட ட்ரை பண்ணிப் பாரேன்… உனக்கும்கூட கன்னம் சிவக்கும்… ரெண்டு கன்னமும் கூட சிவக்கலாம்… யார் கண்டா…?”


‘குரங்கு… எப்படி கோர்த்து விடுது பாரு… யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்… நல்ல எண்ணம்… அஸ்க்கு புஸ்க்கு… நானாவது சிக்கறதாவது…’


“என்னடா… பேச்சையே காணோம்…” அமைதியாக அமர்ந்திருந்த தரணியின் தோள் தொட்டான் முகிலன்.


“இல்ல… கன்னத்தை சிவக்க வைக்கிறதை பத்தி யோசிச்சேன்… நீ சொல்றதும் நடக்கும்… எனக்கு இல்ல… என் பொக்கேக்கு… அப்படியே காதலால அவளை திணறவச்சு வெக்கத்தோட அவ கன்னம் சிவக்கறதை பார்க்கணும்…” நிஜமான ஆசையுடன் சிலாகித்துக் கூறியவனை புன்னகையுடன் பார்த்தான் முகிலன். அது நடந்தால் இவனுக்கும் பேரானந்தம்தானே.


“தரணி…”


“ம்ம்…”


“பூச்செண்டை நிஜமாவே உனக்கு பிடிச்சிருக்காடா…”


“இது என்னடா கேள்வி…? பிடிக்காமலா தாலி கட்டினேன்…”


“தவிர்க்க முடியாத சூழ்நிலையில வேற வழி இல்லாமதானே அவ கழுத்துல தாலி கட்டின…”


“தவிர்க்க முடியாத சூழ்நிலைதான்… ஆனா மனப்பூர்வமாதான் அவ கழுத்துல தாலி கட்டினேன் .. என் மனசு ஏத்துக்காத விஷயத்தை என்ன நடந்தாலும் நான் செய்ய மாட்டேன்னு உனக்கு தெரியும்தானே…” 


ஆம் என்று தலையசைத்தான் முகிலன்.


“அப்புறம் என்ன சந்தேகம்…?”


“நான் பண்ணின தப்புனால உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் பலி கொடுத்துட்டேனோன்னு மனசுக்குள்ள ரொம்ப நெருடலா இருக்குடா…” 


சற்று முன் இருந்த குறும்புத்தனம் மாறி முகிலனின் கண்கள் மெலிதாய் பனித்திருந்தன. தனது ரோலிங் சேரை அவனுக்கு நெருக்கமாய் நகர்த்தி அவனது தோளோடு அழுத்தமாய் கை போட்டுக் கொண்டான் தரணி.


“அதெல்லாம் ஒன்னும் இல்ல… எங்க கல்யாணத்தை நம்மள சேர்ந்த எல்லாருமே ஏத்துக்கிட்டாங்க… பூச்செண்டை பிடிச்சுதான் நானும் தாலி கட்டி இருக்கேன்… அவளுக்கு மட்டும்தான் கோபம்… அவ இடத்தில யார் இருந்தாலும் இப்படித்தான் இருப்பாங்க… அவ கோபமும் கொஞ்சம் கொஞ்சமா குறையும்… என்னை மனப்பூர்வமா ஒருநாள் ஏத்துக்குவா… எனக்கு நம்பிக்கை இருக்கு…” நம்பிக்கையுடன் பேசிய நண்பனை தழுவிக் கொண்டான் முகிலன்.


“அப்படி ஒரு நாள் வந்தா உன்னைவிட நான்தான்டா அதிகமா சந்தோஷப்படுவேன்…” அவர்கள் இருவரும் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த இடம் ஒரு தனி கேபின். அப்போது உள்ளே நுழைந்தாள் மீரா.


“என்ன இது… நண்பேன்டா ரேஞ்சுல ரெண்டு பேரும் தோளோடு தோள் இடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க…” சிரித்தபடியே கேட்டவள் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.


“மீரா… டேப்லட்ஸ் போட்டுட்டியா…” அக்கறையாய் கேட்டான் முகிலன்.


“ம்ம்…போட்டாச்சு… தூக்கம் தூக்கமா வருது… ஒரே இடத்தில உட்கார முடியல… அதான் அப்படியே இங்கே எந்திரிச்சு வந்தேன்…”


“இதுக்குதான்டா சொன்னேன்… இவ ரெஸ்ட்ல இருக்கட்டும்னு… நீதான் கேட்க மாட்டேங்கிற…” தன் நண்பனைப் பார்த்து சலித்துக் கொண்டான் முகிலன்.


“ரொம்ப டயர்டா இருக்காடா… வேலை பார்க்க ரொம்ப சிரமமா இருக்கா…?” அவள் தலை வருடியபடி கனிவாய் கேட்டான் தரணி.


“அதெல்லாம் இல்லண்ணா… ஆனா முன்ன மாதிரி இருக்க முடியல… படுத்து தூங்கலாம் போல இருக்கு… ஆனா இப்போ இருந்தே லீவ் எடுக்க முடியாதுல்ல… நான் முடிச்சு கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட்ஸ் இன்னும் பெண்டிங் இருக்கு… அதோட அடிக்கடி லீவ் போட்டா எல்லாரும் தேவையில்லாம கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க…”


“அதுக்குதான்டா நானும் யோசிச்சேன்… இந்த வார கடைசியில ஊர்ல இருந்து எல்லாரும் வர்றாங்க… எப்படியும் லேட் பண்ணாம உங்க கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணிடுவாங்க… அதுக்கு அப்புறம் நீ வீட்ல இருந்துகூட வேலையை பாரு…” பொறுப்பான ஒரு சகோதரனாய் அவன் பேச அவளும் ஆர்வமாய் தலை அசைத்தாள்.


“அண்ணா… பூச்செண்டு ரொம்ப க்யூட்… உங்களுக்கு பொருத்தமா அழகா இருக்கா… டமடமன்னு வாயடிப்பான்னு முகி சொன்னார்… ஆனா இப்போ ரொம்ப சைலன்ட்டா இருக்காளே… ரொம்ப மன வருத்தத்தில இருக்காளோ…? அவ பொருளை நான் பறிச்சுக்கிட்டேன்னு கோபம் ஆழமா தங்கிப் போச்சோ…? எனக்கே ரொம்ப கில்ட்டியா இருக்குண்ணா…” கவலையாய் கூறினாள் மீரா.


“ஏய் அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல… நாமதான் அப்படி தப்பா நினைச்சுட்டோம்… அவ என்னை லவ் பண்ணவே இல்ல… நீ தரணி பொண்டாட்டி… நான் மீரா புருஷன்… இன்னமும் என்னையே மனசுல நினைச்சுட்டு இருக்காதேன்னு சொன்னதுக்கு போளேர்னு ஒன்னு கன்னத்துல வெச்சா பாரு… அப்படியே பொறி கலங்கிப் போச்சு…” 


ஆர்வக்கோளாறில் அவசரமாய் உளறியவனை மற்ற இருவரும் கண்கள் சுருக்கிப் பார்க்க வேறு வழியின்றி வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான் முகிலன். புதிதாய் கேட்பவன் போல் தரணியும் கேட்டுக் கொண்டான். அவன் கன்னத்தை திருப்பி பார்த்தாள் மீரா… கன்றி சிவந்து கிடந்தது… அவன் பரிதாபமாய் விழிக்க பக்கென சிரித்து வைத்தனர் இருவரும்.


“மீரா… உனக்கு ஒன்னு தெரியுமா…? கன்னத்தில் என்னடி காயம்னு கேட்டதுக்கு இது வண்ணக்கிளி செய்த மாயம்னு வேற மாதிரி என்கிட்ட புளுகி வச்சான் இந்த எரும… என்று அவன் சொன்னதைக் கூற “அண்ணா… கொஞ்ச நேரம் வெளியில இருக்கீங்களா… இன்னொரு கன்னம் ஃப்ரீயாதானே இருக்கு… இந்த வண்ணக்கிளி என்ன மாயம் செய்யறேன்னு இப்போ காட்டுறேன்…” 


கண்கள் துடிக்க உள்ளங்கையை தேய்த்துக்கொண்டு கையை விரித்து ஊதி அடுத்த கன்னத்தை சிவக்க வைக்க அவள் தயாராக “நான் கேன்டீன் போய் வடை சாப்பிட்டு டீ குடிச்சிட்டு வரேன்… உனக்கு வடை வாங்கிட்டு வரேன்… இவனுக்கு டீ மட்டும் வாங்கிட்டு வரேன்… பாவம்… வடை மெல்ல முடியாதுல்ல…” சிரித்தபடி சொன்ன பரணி விசில் அடித்தபடி எழுந்து கொண்டான்.


“அடேய் பாவி… கெழவி வரைக்கும் எல்லாரோட கையாலயும் அடி வாங்கிட்டேன்டா… இவ மட்டும்தான் என்னை அடிக்காம இருந்தா… இப்படி கோர்த்து விட்டுட்டு போறியே… இது நியாயமா…?” அப்பாவியாய் கெஞ்சினான் முகிலன்.


“நான் எங்கேடா கோர்த்துவிட்டேன்…? நீதானே உளறினே… இஞ்சி டீ வாங்கிட்டு வரேன்… தொண்டைக்கு இதமா இருக்கும்… மீராக்குட்டி… யூ கண்டினியூ…” என்றவன் கதவை சாத்திவிட்டு வெளியே செல்ல முகிலனை முறைத்தபடி எழுந்து அருகில் வந்தாள் மீரா.


“செல்லோ… அத்தான் பாவம்தானே… நரிச்சின்னக்கா அடிச்சதே இன்னும் வலிக்குதுடி… இதுல நீ வேறயா…?” முகத்தை சுருக்கியபடி சொன்னவனை ஓங்கி அறைவதுபோல் கையை வீச அவன் அனிச்சையாய் கண்மூட அடுத்த நொடி பழுத்திருந்த கன்னம் இச் இச் என்ற ஈர முத்தங்களால் ஒத்தடம் இடப்படுவதை உணர்ந்து படக்கென கண் திறந்தவன் இதழ்கள் விரிய அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.


“ரொம்ப வலிக்குதா…?” கனிவுடன் அவன் கன்னத்தை வருடியபடியே கேட்டாள்.


“ம்ம்…”குழந்தை போல் சிணுங்கலாய் சொன்னவன் அந்த கன்னத்தை அவளிடம் திருப்பி இன்னும் முத்தம் என்று உதடு குவித்து கேட்க வெட்கமாய் சிரித்தவள் அந்த கன்னத்தை விட்டு மற்றொரு கன்னத்தில் சிவக்க சிவக்க முத்தமிட்டாள்.


அங்கு என்ன நடந்து கொண்டிருக்கும் என்பதை புரிந்து கொண்டு தனக்குள் சிரித்தபடி டீ பருகிய தரணி “பொக்கே… எனக்கும்கூட இதே மாதிரி வேணும்… நீ அடிச்சாலும் நான் வாங்கிக்க தயார்தான்… அப்படியாவது உன் விரல் என்மேல படும்ல… என்மேல அவ்ளோ கோபமாடி.‌. உன் கோபத்தை காதலா மாத்தி காட்டுறேன்… முகில் உன் மனசுல இருக்கான் அதனால கொஞ்சநாள் விலகித்தான் இருக்கணும்னு நினைச்சேன்..‌ இப்போதான் அங்கே யாருமே இல்லைன்னு தெரிஞ்சு போச்சே… அது எனக்கான இடம்… லேட் பண்ணாம உள்ளே குடியேறிடுறேன்… ஐ லவ் யூ டி…” வாய்விட்டே மெல்லிய குரலில் கூறிக் கொண்டான்.


Leave a comment


Comments


Related Post