இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 19-03-2024

Total Views: 35523

யாருக்காகவும் நேரமும் காலமும் காத்திருப்பதில்லையே… இதோ மூன்று நாட்கள் ஓடிய வேகம் தெரியவில்லை… பெரிய மாற்றங்கள் நிகழவில்லை என்றாலும் பூச்செண்டிடம் சிற்சில மாற்றங்கள். அறையே கதி என்று கிடப்பதில்லை… வீட்டிற்குள் வளைய வரத் தொடங்கினாள்… மெஸ் சாப்பாடு வேண்டவே வேண்டாம் என்று தலைக்கு மேல் கும்பிடு போட்டுவிட்டாள். ‘ச்சே… எப்படித்தான் இதை தின்னு இது ரெண்டும் உயிர் வாழுதுங்களோ…’ சலித்துக் கொண்டவள் தானே சமைக்கத் தொடங்கினாள். தனக்கு தேவையானவற்றை முகிலனிடமே கேட்டாள்‌. பெரிதாக அவனிடம் பேசிக் கொள்வதில்லைதான்… ஆனால் தேவைகள் என்று வரும்போது முகிலனிடம்தான் சென்று நின்றாள்… தரணியில் மனது வேதனை அடைந்தாலும் அதை பெரிதாக காட்டிக் கொள்வதில்லை… முகிலனுக்குத்தான் தர்மசங்கடமாக இருக்கும்.

“அம்மு… தரணி உன் புருஷன்தானே… அவன்கிட்ட கேட்கலாமே… அவனுக்கும் ஆசை இருக்கும்ல…” அதிராமல் அவளிடம் சொல்லுவான்.

“உன் கைக்காசு கரைஞ்சு போகுதுன்னு கவலையா இருக்கா…? இனிமே உன்கிட்ட எதுவும் கேட்கல… விட்டுடு…” வெடுக்கென்று பேசி நகர்ந்து செல்பவளை வேதனையுடன் பார்க்க மட்டுமே முடிந்தது. அறைக்குள் இருந்தபடியே இதனை கேட்டுக் கொண்டிருந்த தரணி வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அவளது தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் மீராவை வைத்து ஒரு பட்டியல் தயார் செய்து அன்று மாலையே அனைத்தையும் கொண்டு வந்து இறக்கி இருந்தான்.

மீரா தினமும் மாலை வேளைகளில் அங்கு வந்து பூச்செண்டுடன் நேரம் செலவிடத் தொடங்கினாள். முதலில் பட்டும் படாமல் பேசத் தொடங்கி இப்பொழுதெல்லாம் அவளிடம் சகஜமாகி இருந்தாள் பூச்செண்டு. இறுக்கமாய் இருக்கும் அவளது முகம் மீராவிடம் மட்டுமே கனியும்… தரணியிடம் மட்டும் வழக்கம்போல் பாராமுகம். காலை இரவு இரு வேளைகளுக்கும் அவளே அனைவருக்கும் உணவினை தயார் செய்வாள்… செய்து உணவு மேஜையில் வைத்துவிட்டு தனக்குத் தேவையானவற்றை பரிமாறிக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொள்வாள். கொடுமையான மெஸ் உணவிலிருந்து விடுதலை கிடைத்து வீட்டு சமையலில் வயிறும் மனமும் நிறைந்துபோனது நண்பர்கள் இருவருக்கும்.

மனைவியின் சமையலை ருசித்து உண்பவன் அவள் கையால் அருகில் இருந்து பரிமாறினால் இன்னும் சுவை கூடுமே என்று ஏங்கிக் கொள்வான். சில சமயங்களில் மீராவையும் வற்புறுத்தி அவளையும் உண்ண வைத்தே அனுப்புவாள் பூச்செண்டு. தங்களிடம் பாராமுகமாய் இருந்தாலும் மீராவிடம் சகஜமாகி இருந்ததில் ஓரளவு நிம்மதி அடைந்தனர் நண்பர்கள். அவர்கள் அலுவலகம் சென்ற பின்பு தொலைக்காட்சியில் விருப்பமாய் திரைப்படங்கள் பார்க்கிறாள் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டான் தரணி. அவன் டிவியை ஆன் செய்யும் போதெல்லாம் விஜய் சூப்பர்தான் திரையில் ஒளிரும்.

“உன் அத்தை மகளுக்கு சினிமா பார்க்க ரொம்ப பிடிக்குமோ…” வழக்கம்போல் இரவு உணவினை நண்பனுடன் அமர்ந்து உண்டபடி கேட்டான் தரணி.

“ஆமா… ரொம்ப விருப்பப்படுவா… ஊருக்கு போனா ரிலீஸ் ஆன புதுப் படத்துக்கு மதுரைக்கு கூட்டிட்டு போகச் சொல்லி நச்சரிப்பா… டார்ச்சர் தாங்காம நானும் கூட்டிட்டு போவேன்…”

“அப்புறம் என்ன… இங்கே வந்து அஞ்சாறு நாளாச்சு… வீட்டுக்குள்ளேயே தானே இருக்கா… ஊர்ல எப்போ பார்த்தாலும் வண்டி எடுத்துக்கிட்டு சுத்திட்டு இருந்த பொண்ணு… கையை காலை கட்டி போட்ட மாதிரி இருக்கும்… ஏதாவது சினிமாவுக்கு கூட்டிட்டு போயிட்டு வா…” சொன்னபடியே உண்டு முடித்து கை கழுவி வந்தவனை ஒரு மார்க்கமாய் பார்த்தான் முகிலன்.

“எதுக்குடா அப்படி பார்க்கிற…?”

“நான் பேச வேண்டிய டயலாக்கை நீ பேசுற… உன் பொண்டாட்டியை நீதான்டா சினிமாவுக்கோ வெளியிலயோ கூட்டிட்டுப் போகணும்… என்னை கூட்டிட்டு போகச் சொல்ற…”

“அவ என்னை முதல்ல புருஷனா ஏத்துக்கிட்டாளா…? வான்னு சொன்ன உடனே என்கூட வர்றதுக்கு… உன்கூட ஓரளவுக்கு பேசுறாள்ல… எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போயிட்டு வா… அவளுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸிங்கா இருக்கும்…” அக்கறையாய் கூறினாலும் அவனது வார்த்தைகளில் ஒருவித வலி தெரிந்தது. தானும் கை கழுவி வந்து அவனது அருகில் அமர்ந்தான் முகிலன்.

“இந்த நாலஞ்சு நாள்ல அவகிட்ட நிறைய மாற்றம் தெரியுது… மாறிடுவாடா… அதுக்காக நீயும் ஏன் விலகியே இருக்க…? நான் பேச முயற்சி பண்ற மாதிரி நீ ஏன் எந்த முயற்சியும் பண்ண மாட்டேங்குற…? அவகிட்ட போய் ஏதாவது பேசலாமே… நீயும் ஒதுங்கிதானே இருக்க…”

“ஓ… உனக்கு கன்னம் பழுத்த மாதிரி எனக்கும் பழுக்க வைக்கணும்… அதுதான் உன் ஆசையா...?”

“டேய்… என்கிட்ட நடந்துக்கிட்ட மாதிரி உன்கிட்ட நடந்துக்க மாட்டா… அந்த உரிமையை என்கிட்ட மட்டும்தான் காட்டுவா…”

“நீ உரிமைக்காரன்… அப்போ நான்…?” சாதாரணமாக கேட்டிருந்தாலும் முகிலனுக்குள் சுருக்கென்ற ஒரு வலி. அவன் கேட்டதில் தவறில்லையே… கேட்கும்போது அவனது முகத்திலும்கூட வலி தெரிந்ததே… முகிலனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை… அமைதியாய் அமர்ந்திருந்தான்.

“நான் தப்பான அர்த்தத்துல சொல்லலடா… எதுவும் சங்கடப்பட்டுக்காதே… நான் போய் பேசினா அவ என்கிட்ட பேச மாட்டா… நான்தான் அவ மனசு எல்லாத்தையும் ஏத்துக்கிற வரைக்கும் வெயிட் பண்றேன்னு சொன்னேன்ல… நீதான் தேவை இல்லாம வாயை புடுங்குற… இன்னும் ரெண்டு நாள்ல உங்க வீட்ல எங்க வீட்ல இருந்து எல்லாரும் வராங்க… அவ இன்னும் கொஞ்சம் சகஜமானா நல்லா இருக்கும்… அதுக்குத்தான் அவளை வெளியிலே கூட்டிட்டு போயிட்டு வான்னு சொன்னேன்… மீராவையும் கூட கூப்பிட்டுக்கோ… நாளைக்கு ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டு ரெண்டு பேருமே அவளை வெளியே கூட்டிட்டு போங்க…”

உணர்ச்சி துடைத்த முகத்துடன் பேசியவன் அமைதியாக தனது அறைக்குள் நுழைந்து கொண்டான். மறுநாள் காலையில் மீரா அங்கு வந்திருந்தாள்… காலை உணவு தயாரிப்பில் பூச்செண்டுடன் இணைந்து கொண்டாள்… இருவரும் ஏதேதோ பேசி சிரித்தபடி சமைத்துக் கொண்டு இருந்தனர். அவளது சகஜமான பேச்சுக் குரலையும் சிரிப்போசையையும் கேட்டபோது தரணிக்குள் ஒருவித மகிழ்ச்சி.

“அக்கா… உங்க வாய்க்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க… அந்த மாதிரி சமையல் பண்ணி தரேன்…”

“இன்னும் அந்த மாதிரி வித்தியாசம் பெருசா தெரிய ஆரம்பிக்கல பூச்செண்டு… தோணும்போது கேட்கிறேன்… நீ ரொம்ப நல்லா சமைப்பேன்னு முகி சொல்லி இருக்கார்…”

“என் சமையலைவிட என் அம்மாச்சி சமையல் ரொம்ப பிடிக்கும்… அதிலும் கோலா உருண்டைன்னா அந்த திருவாத்தானுக்கு ரொம்ப பிடிக்கும்…”

“அது யாரு திருவாத்தான்…?”

“அந்த முனிதான்…” என்று சிரித்தாள்.

“அது யாரு முனி…?” குழப்பமாய் புருவம் வளைத்தாள் மீரா.

“திருவாத்தான் முனி எல்லாமே உங்க முகிதான்…”

“ஓ… அவருக்கு நிறைய பட்டப்பெயர் வச்சிருப்ப போலிருக்கு… அப்போ என் அண்ணனுக்கு என்ன பட்டப்பெயர் வச்சிருக்க…?” முழங்கையால் அவளை இடித்துக் கேட்க சிரித்திருந்த அவளது முகம் சட்டென்று கூம்பிக்கொண்டது.

“என்ன… பேச்சையே காணோம்…” அவள் முகத்தை கூர்ந்து பார்க்க “அ..அக்கா உங்களுக்கு தேங்காய் சட்னி வேணாம்… நெஞ்சை கரிக்கும்… நான் புளிச்சட்னி பண்ணித் தரேன்… இதையெல்லாம் எடுத்துட்டுப் போய் டைனிங் டேபிள்ல வச்சிருங்க…” பேச்சை மாற்றியபடி நகர்ந்து சென்றவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்து ஹார்ட் பாக்ஸை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் மீரா.

ஆண்கள் இருவரும் கிளம்பி அறையில் இருந்து வெளியே வந்தனர்… தன் கைக்கடிகாரத்தை கட்டியபடியே சமையல் அறையை எட்டிப் பார்த்தான் முகிலன்.

“அம்மு .. இன்னும் என்ன நோண்டிட்டே இருக்க…? சீக்கிரமா போய் டிரஸ் மாத்தி கிளம்பு…” 

அரைத்த சட்னியை ஜாரில் இருந்து பாத்திரத்திற்கு மாற்றியவள் “எங்கே…?” என்றாள் நிமிராமல்.

“மீரா உன்கிட்ட சொல்லலையா…? சினிமாவுக்கு போறோம்… சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பணும்… டைம் ஆயிடுச்சு…” 

சினிமா என்றவுடன் அந்த மயிலிறகுக் கண்கள் பட்டென விரிந்தன. சட்னியை எடுத்து வந்து டேபிளில் வைத்தவள் “என்ன படம்க்கா…?” என்றாள் மீராவிடம் ஆர்வமாய்.

“மஞ்சும்மல் பாய்ஸ்…” பக்கவாட்டில் இருந்து முகிலனின் குரல்.

“மலையாளப் படமா…?” கண்களை சுருக்கியபடி அவனிடம் திரும்பினாள்.

“ஆமா… ஆனா நல்லா புரியும்… பாதிக்கு மேல தமிழ்லதான் பேசுவாங்க…”

“ப்ச்… அந்த படத்துக்கு ஏன் புக் பண்ணினே…? என்கிட்ட கேக்க மாட்டியா…? எனக்கு தெலுங்கு டப்பிங்தான் ரொம்ப பிடிக்கும்னு தெரியாதா… நானியோட ஹாய் நான்னா பாக்கணும்னு ஆசை. நான் நானியோட ஃபேன் தெரியுமில்ல…” உதட்டை சுழித்து காதில் உள்ள ஜிமிக்கி ஆட பழைய சவடாலுடன் பேசியவளை உண்ண மறந்து ரசித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் தரணி.

“அந்த படத்துக்கு வேணா நாளைக்கு போகலாம்… இப்போ போய் சீக்கிரமா கிளம்பு… சினிமாவுக்கு போயிட்டு அப்படியே மாலுக்கு போயிட்டு வந்துரலாம்…”

“எல்லாரும் லீவ் போட்டுட்டீங்களா…” கண்களை உருட்டியபடி கேட்டவள் தரணியை ஒரு சிறு பார்வை பார்த்து “யாரெல்லாம் போறோம்…?” என்றாள் ஒடுங்கிய குரலுடன்.

“எல்லாரும்தான் ஏன்..?”

மீண்டும் கண்கள் நிமிர்த்தி அவனை ஒரு பார்வை பார்த்தவள் “நீ..நீங்கெல்லாம் போயிட்டு வாங்க…” என்றாள் மெல்லிய குரலில். 

அவளது பார்வை மாற்றம் பேச்சின் அர்த்தம் உணர்ந்து முகிலனிடன் திரும்பிய தரணி “டேய்… நான் வரேன்னு உங்கிட்ட சொல்லவே இல்லையே… எனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு… நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க…” என்றபடியே கை கழுவ எழுந்து கொண்டான். பசியோடுதான் அமர்ந்தான்… ஏனோ பசி முற்றிலும் தொலைந்து போனது போன்ற உணர்வு.

“நீ இல்லாம நாங்க மட்டும் எப்படிடா…? எல்லாருக்கும் சேர்த்துதானே புக் பண்ணிருக்கேன்…”

“யாரைக் கேட்டு புக் பண்ணின…?” சீற்றமான குரலுடன் திரும்பினான் தரணி. அந்த கோபக் குரலை கேட்டபோதே ஒருவித நடுக்கம் வந்து ஒட்டிக்கொள்ள அவனது முகத்தை நிமிர்ந்தும் பார்க்காமல் தலைகவிழ்ந்து நின்று கொண்டாள் பூச்செண்டு.

இயலாமையில் ஏற்பட்ட கோபத்தை கண்மூடித் திறந்து கட்டுப்படுத்திக் கொண்டவன் “முகில்… புரிஞ்சுக்கோ… நான் வரலேன்னு நேத்தே உன்கிட்ட சொல்லிட்டேன்… எனக்கு வேலை இருக்கு… நான் ஆபீஸ் கிளம்புறேன்…” குரலை சற்று மென்மையாக்கி இருந்தான்.

தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த வாலட்டை வெளியே எடுத்து கத்தையாய் சில ரூபாய் தாள்களை எடுத்து மீராவின் கையில் திணித்து “என்ன வேணுமோ வாங்கிக்கோங்க…” என்றவனை வெறியுடன் மறித்தான் முகிலன்.

“என்னடா… பணம் கொடுத்து என்னை அசிங்கப்படுத்துறியா…? நான் செலவு பண்ண மாட்டேனா…?” கண்கள் சிவக்க பேசியவனை அமைதியான பார்வை பார்த்தான் தரணி.

“இது என்னோட திருப்திக்காக… புரிஞ்சுக்கோ… அ..அவளுக்கு எ..என்ன பிடிக்கும்னு கேட்டு வா..வாங்கி கொடு… உன்னை அவமானப்படுத்தலடா… எ..என்னோட சின்ன ஆசை… அவ்வளவுதான்…” மெல்லிய குரலில் கூறினாலும் ஏனோ குரல் அடைத்துக் கொண்டு வந்தது போல் தோன்றியது முகிலனுக்கு.

“தரணி… நீயும் வாடா ப்ளீஸ்… அவ சின்னப் பொண்ணு… போகப் போக சரியாயிடும்…” கண்கள் சுருக்கி கெஞ்சலாய் கூறியபடி அவன் கைப்பிடித்தான் முகிலன்.

‘நானும் அதைத்தான் சொல்றேன்… இந்த அளவுக்கு விருப்பமா வெளியே கிளம்பறாளே… அதுவே பெருசு… நான் கூட வந்தா ரொம்ப இன்கன்வீனியன்ட்டா ஃபீல் ஆவா… உங்க ரெண்டு பேர்கிட்டயும் சகஜமாதானே இருக்கா… கூட்டிட்டுப் போங்க… எனக்கு எந்த வருத்தமும் இல்ல…” 

அவன் தோளை தட்டி அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறி மீராவிடம் திரும்பி “பத்திரமா போயிட்டு வாங்கடா… நீ பக்கத்துல இருக்குற மிதப்புல ஏரோப்ளேன்னு நினைச்சுக்கிட்டு காரை விரட்டப் போறான்… வயித்துல குழந்தை இருக்கு… அந்த நினைப்பு இருக்கட்டும்…” 

தன்னை சகஜமாய் காட்டிக் கொள்வதற்காக வலிய சிரித்தபடி கூறியவன் பக்கவாட்டில் கீழ் பார்வை பார்த்தபடி நின்றிருந்த தன்னவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து தனது மடிக்கணினிப் பையை எடுத்து தோளின் குறுக்கே போட்டுக் கொண்டு பைக் சாவியை எடுத்து கையில் சுழற்றியபடி வேகமாய் வெளியேறினான். முகிலனுக்கும் மீராவிற்கும் மனதிற்குள் மிகுந்த சங்கடம்.

“இன்னும் ஏன் நின்னுட்டே இருக்க… சீக்கிரமா கிளம்பு அம்மு…” அவள்மேல் எழுந்த கோபத்தை காட்டிக் கொள்ளாமல் அடக்கப்பட்ட குரலுடன் கூறினான் முகிலன்.

“இ..இல்ல நா..நான்…” என்று அவள் ஏதோ சொல்ல வர “பூச்செண்டு… எதுவும் பேசாம கிளம்பு… இப்போ நீ வரலேன்னா தரணி அண்ணா இன்னும் சங்கடப்படுவாரு…” மீரா எழுந்து வந்து அவள் அருகில் நின்றபடி கூற ஒருவித தடுமாற்றத்துடன் அறைக்குள் சென்று சுடிதார் மாற்றிக் கொண்டு கிளம்பி வெளியே வந்தாள்.

அனைவரும் கிளம்பி காரில் ஏறி முக்கியச் சாலைக்குள் திரும்பி பயணிக்க போக்குவரத்துள்ள ஒரு இடத்தில் சிக்னலுக்காக காத்திருக்கும் போது எதார்த்தமாக பக்கவாட்டில் திரும்பிய பூச்செண்டு சற்றுத் தள்ளி நின்றிருந்த தரணியை கவனித்தாள். முன்னிருக்கையில் முகிலனும் மீராவும் அமர்ந்து ஏதேதோ சுவாரஸ்யமாய் பேசியபடி இருந்ததால் அவர்கள் அவனை கவனித்திருக்கவில்லை. பைக்கில் அமர்ந்தபடி கால்கள் இரண்டையும் தரையில் ஊன்றி ஹெல்மட்டை கழற்றி டேங்க் கவரின் மேல் வைத்து தன் தலையை கோதியபடி அமர்ந்திருந்தான் தரணி. அவனும் இவர்களை கவனிக்கவில்லை.

கீழ் உதட்டை கடித்து ஒற்றை விரலால் நெற்றியை அடிக்கடி தேய்த்து அழுத்தமாய் மோவாயை துடைத்து உதடு குவித்து மூச்சுவிட்டு கண்கள் அலைப்புற அமர்ந்திருந்தவனை தெளிவாய் அவதானித்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு. அனைத்துமே அவனது சங்கடத்திற்கான வெளிப்பாடு என்பது தெரிந்தது… தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் என்பதும் புரிந்தது. திருமணம் முடிந்தபின் அவன் மேல் எழுந்த அதீத கோபத்தில் இன்றுவரை அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை… இப்போதுதான் ஆழமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவனது சங்கடத்திற்கான காரணம் தான்தான் என்பது புரிந்தது. மெலிதாக குற்ற உணர்ச்சி எட்டிப் பார்த்தது… அடுத்த நொடி வாயாடி பூச்செண்டு வரிந்து கட்டிக்கொண்டு வந்து நின்றாள்.

‘ஏய் லூசு… நீ எதுக்குடி சங்கடப்படுற…? இந்த ஆளு பண்ணினது ரொம்ப சரியோ… மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடற மாதிரி பொசுக்குன்னு தாலியை கட்டி தியாகிப் பட்டம் வாங்கிட்டா இந்த ஆளு ரொம்ப யோக்கியமோ… உன்னை பத்தி யோசிச்சாரா…? இந்த ஆளு பண்ணின வேலைக்கு ஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு கைகோர்த்து சினிமாவுக்கு போகணுமோ‌‌. மூஞ்சிய பாரு… பனைமரம்… பனைமரம்‌‌… தலை நிறைய முடி இருக்குன்னு திமிரு… பக்கத்துல சொட்டை தலையோட ஒருத்தன் பரிதாபமா பார்க்கிறான்… அவனை சீண்டி பாக்குறதுக்காகவே அடிக்கடி ஸ்டைலா தலையை கோதுது பாரு… அடுத்தவங்க உணர்ச்சியை புரிஞ்சுக்க தெரியுதா… பாரேன்… வண்டியை கூட ஸ்டைலா ஓட்டிட்டு பறக்கறத… எங்களை மெதுவா போகச் சொல்லிட்டு எந்த கோட்டையை பிடிக்க இது இப்படி பறக்குது… மெதுவா போறதுக்கு என்ன கேடு…?’

கழுத்து வலிக்கும்வரை தங்களைக் கடந்து பறந்திருந்தவனை எட்டி எட்டி பார்த்தபடி மனதிற்குள் வறுத்தெடுத்தபடி இருந்தவளுக்கு அவளையும் மீறிய ஒரு வருத்தம் எழாமல் இல்லை.







Leave a comment


Comments


Related Post