இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 05 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 19-03-2024

Total Views: 17999

காதலொன்று கண்டேன்!

தேடல்  05

அவளுக்கென..

சாமி சன்னிதியில் நின்று மனமுருக வேண்டிக் கொண்டிருந்தாள்,மித்ரா.

மனதுக்குள் பல எண்ணவோட்டங்கள் நிரம்பி வழிய சாமி தரிதனம் தான் அதற்கு ஒற்றை வடிகாலாய் இருந்தது.

அவள் வாழ்க்கை எதை நோக்கி போகிறதென்று அவளுக்கு தெரியவில்லை.அதை புரிந்து கொள்ள முயன்று தோற்றுப் போக வாழ்க்கையின் போக்கிலே வாழப் பழகியவளுக்கு மனம் முழுக்க ஏதோ ஒரு வெறுமை மண்டிக் கிடந்தது,உண்மை.

அலுப்பும் சலிப்பும் மட்டுமே அவளின் வாழ்க்கையில் நிறைந்திருப்பதாக தோன்ற மனதின் அடி ஆழத்தில் புதைந்திருந்த வலிகள் எல்லாம் மீண்டும் நினைவில் வந்து ரணப்படுத்த அதை தவிர்க்கும் வழி தெரியவில்லை.

வலிகள் வலித்தாலும் தகும்.இவளைத் தான் விடமால் வதைத்து உயிர்ப்பை புதைத்து விடுகிறதே.அதைத் தான் அவளால் ஏற்க முடியவில்லை.

"முருகா..நா உன்கிட்ட கேட்டது ஒன்னே ஒன்னு தான்..ஆனா நீ அதக் கூட இல்லாம பண்ணிட்ட..சத்தியமா முடில..மனசு முழுக்க ஒரே வெறுமயா இருக்கு..நீ தான் என்னோட மனச சரி பண்ணனும்.." இதழ்களால் உச்சரித்த படி வேண்டிக் கொண்டிருந்தவளின் மன எண்ணம் கடவுளுக்கும் கேட்டதோ என்னவோ..?
அதை அவள் அறிந்திருக்கும் சாத்தியம் இல்லை.

வேண்டுதலை முடித்து விட்டு நெற்றியில் குங்குமத்தை கீற்றாய் இட்டுக் கொண்டு திரும்ப அவளைப் பார்த்திருந்த அவளின் சித்தியில் முகத்தில் தான் கவலையின் சாயல்.

அவளைப் பற்றி முழுதாக அறிந்து கொண்டவருக்கு அவளின் வாழ்க்கை திசைமாறிப் போனதை  ஏனோ ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

"மித்ரா..இந்தா அத வச்சுக்க..நா கொஞ்சம் ஐயர் கிட்ட பேசிட்டு வந்துர்ரேன்..வீட்ல பூஜ பண்ண வேண்டி இருக்கு.."  என்ற படி அர்ச்சதை தட்டையும் கையில் இருந்த குங்குமத்தையும் அவள் கையில் கொடுக்க சரியென்பதாய் தலையசைத்து வாங்கிக் கொண்டவளுக்கு கோயிலுக்கு வெளியே நின்றால் தேவலை என்கின்ற எண்ணம்.

"சித்தி நா வெளில நிக்கறேன்..நீங்க பேசிட்டு வாங்க.."

"அப்டிங்குறியா..சரி நீ போ அப்போ..காருக்குள்ள பேபர் இருக்கும்..அதுல இந்த குங்குமத்த மடிச்சி வச்சுடு..சித்தப்பா தந்துட்டுப் போனது.." என்பதாய் இதழ்களில் வெட்கச்சிரிப்புடன் சொல்ல முறைக்கத் தான் முடிந்தது,அவளால்.

"இந்த கெழட்டு வயசுலயும் உங்க ரெமான்ஸுக்கு மட்டும் கொறச்சல் இல்ல.." கடுப்புடன் மொழிந்தாலும் இதழோரம் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது,மறுக்கக் கூடியதல்ல.

"அதெல்லாம் ஒனக்கு புரியாது..கல்யாணம் பண்ணிப்பாரு புரியும்.."

"மனுஷன் இருக்குற நெலமைல கல்யாணம் ஒன்னு தான் கொறச்சல்..அங்க தொட்டு இங்க தொட்டு இதுல வந்து நிள்ளுங்க எல்லாரும்.." முறுக்கிக் கொண்டு கிளம்பினாலும் குங்குமம் பறக்காதிருக்க கையை இறுகப் பொத்தித் தான் இருந்தாள்.

ஒரு கரம் இறுகப்பொத்தியிருக்க மறு கையில் அர்ச்சதை தட்டுமாய் நடந்து வந்தவளுக்கு சேலை கட்டியிருந்ததால் நடக்கக் கொஞ்சம் தடுமாற்றமாய் இருக்க தட்டுத் தடுமாறி நடந்து படிக்கட்டை அடைந்தவளுக்கு சேலையுடன் கீழே இறங்குவதற்கு பயமாம் இருந்தது,சற்றே.

தடுக்கி விழுந்து விட்டால் உருண்டு கொண்டு தான் செல்ல வேண்டும் என்பது புரிய குங்குமம் இல்லாத கையால் கொஞ்சமாய் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நடப்பவளை ஓரிருவர் புருவம் சுருக்கிப் பார்த்து விட்டுத்தான் கடந்து போயினர்.

"இந்த தீப்தி சொன்ன மாதிரி..மத்த சாரிய கட்டிருக்கலாம்..இது இவ்ளோ இழுபடுதே.." தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு நடந்தவளுக்கு ஒரு கணம் கால் தடுக்கி விட்டது.

"ஆஆஆ.." கத்திக் கொண்டே பக்கத்தில் இருந்த நபரின் கையை பற்றிக் கொண்டு சுதாரித்த படி படியிலேயே அமர்ந்து விட அர்ச்சதை தட்டு எங்கோ பறந்து போய் விழுந்தது.

ஒரு கணம் தான்.ஒரே ஒரு கணம் தான் எடுத்தது,தன்னிலை மீள.வெடுக்கென கரத்தை எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவளின் அருகே உக்கிரமான விழிகளுடன் நின்றிருந்தான்,காளையவன்.

பெண்களுக்கு கண்ணியம் கொடுக்கத் தெரிந்தவன் என்பதற்காக பெண்கள் மீது அவனுக்கு கோபம் வராமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.

நேற்றும் அவனின் கோப முகத்தை வீதியில் வைத்துக் கண்டிருந்தவளுக்கு "இவரா..?" என்கின்ற பயமே,விழிகள் முழுவதும்.

சத்தியமாய் அவனின் முறைப்புக்கான காரணம் புரிந்திடாமல் மலங்க மலங்க விழித்தவளின் விழிகளில் இருந்த மிரட்சி அவனின் மனதின் ஓரத்தை கொஞ்சமே கொஞ்சமாய் அசைத்திட முயன்றிட அதற்கு விடுவானா அவன்.ம்ஹும் துளியும் அசரவில்லையே அவன்.

அவன் *ஜீவானந்தம்..!*

"இப்ப எதுக்கு இப்டி மொறச்சிகிட்டு இருக்காரு.." என்ற படி அவனை ஆராய அப்போது தான் புரிந்தது,அவளின் இளநீல நிற சட்டையின் முழங்கைக்கு சற்று மேலே ஒட்டிக் கொண்டிருந்தது குங்கமம்.வெண்ணிற வேஷ்டியையும் சில துகள்கள் ஆக்கிரமித்திருந்தன.

"சாரி..சாரிங்க..தவறுதலா.." அவள் மன்னிப்பு கேட்க இன்னும் பார்வையை மாற்றாதவனை கண்டு உடன் நின்றிருந்த தரணிக்குத் தான் கலவரமானது.

மன்னிப்பு கேட்ட படி எழப் பார்த்தவளுக்கு எழ முடியவில்லை.தசை பிசகி இருக்கும் போலும்,கணுக்காலில் அப்படி ஒரு வலி.

ஜீவா பதிலேதும் பேசாது விடுவிடுவென கீழே இறங்கிச் சென்றாலும் அவனின் நடையே பறைசாற்றியது,காளையவனின் கோபத்தை.

அதிலும் இறங்க முன் முறைத்த அந்த விழிகளில் இருந்த கோபம்.மித்ராவுக்கு ஒரு கணம் அந்த கோபத்தில் உடல் சில்லிட காளையின் கோப அவதாரத்தை நினைத்த படி எழ முயன்றவளின் தடுமாற்றத்தை கண்டு பதறிக் கொண்டு ஓடி வந்தார்,அவளின் சித்தி.

"மித்ரா..என்னாச்சு..?"

"உங்க காதல காப்பாத்த போய் கால் தடுக்கிட்டேன்.."

"அடியேய் என்னடி சொல்ற..? கால்ல ஏதும் அடிபட்ருச்சா..?"

"லைட்டா வலிக்கிது..ஆனா சித்தி உங்க குங்கமம் தான் பறந்து போயிருச்சு.." சொன்னவளின் குரலில் சிறு குற்றவுணர்ச்சி கலந்திருந்தது.

"சரி அத விடு..வா காருக்கு போலாம்..கால வேற அடிச்சிகிட்ட சின்னப் புள்ள மாதிரி." என்றபடி அவளின் கரத்தைப் பற்றிக் கொள்ள அவருடன் கெந்திக் கெந்தி நடந்தவளின் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போனது,காளையவளின் கனல் விழிப்பார்வை.

              ●●●●●●●

காரில் காத்துக் கொண்டிருக்க தரணிக்கு ஜீவா ஏதும் எதிர்வினை ஆற்றிடாமல் அகன்று வந்தது புதிதாய் மட்டுமல்ல,புதிராகவும்இருந்தது.

நிச்சயம் அந்த இடத்தில் ஒரு ஆடவன் இருந்திருந்தால் கன்னம் பழுத்திருக்கும்.பெண் என்றால் கை நீட்டாவிடினும் குறைந்த பட்சம் அதட்டலுடன் கூடிய எச்சரிக்கை ஒன்றையாவது விடுத்திருப்பான்.ஆனால்,முரணாக அமைதியாய் அவளை கடந்து வந்தது தரணியின் மனதில் ஏதேதோ  எண்ணங்களுக்கு வழிகோலிட்டது.

கோயிலில் இருந்து நேரே வீட்டுக்கு வந்தவனோ உடை மாற்றி விட்டு வருவதாக உள்ளே சென்றிருக்க ஸ்டியரிங்கில் தாளம் தட்டிய படி அவனைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான்,தீவிரமாய்.

சொன்னது போல் பத்து நிமிடத்தில் தயாராகி வந்து காரில் ஏறிக் கொள்ள வண்டியை தரணிக்கே செலுத்தச் சொன்னவனிடம் "ஏன்" என்று கேட்டி மனம் உந்தினாலும் நா எழ வேண்டுமே.

கண்மூடி இருக்கையில் சாய்ந்திருந்த காளையின் மனதில் இருந்து மித்ராவின் நினைவு தற்காலிகமாய் ஒதுங்கி இருக்க வேறேது நினைவுகளின் வசம் மனம் தொலைந்து இருந்தாலும் அவனின் முகத்தில் ஏதும் பிரதிபலிக்காமல் இருப்பது தான் அவனின் தனித்துமான குணம்.ஏன் பலமும் கூட.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றாலும் காளையின் குணத்துக்கு அந்த கருத்தை தள்ளி வைக்க வேண்டியது என்னவோ நிஜமே.

ஆர்ப்பரிக்கும் அலையாய் உள்ளுக்குள் உணர்வுகள் எழும்பி கொந்தளித்தாலும் அது விழிகளில் வெளிப்படாமல் மறைத்துக் கொள்வதில் கை தேர்ந்த கலைஞன்,காளையவன்.

அடிக்கடி தரணியின் ஓரப்பார்வை அவனை தொட்டு மீண்டிட மனதால் குழம்பியவனின் பார்வையின் தீண்டலை காளையும் உணர்ந்திருப்பான் போலும்.

"ரோட்ட பாத்து வண்டி ஓட்டுங்க தரணி.." இயல்பான குரலில் சொல்ல அதட்டலாய் தான் தரணியின் செவிகளில் ஒலித்தது.

"சரி" என்பதாய் தலையசைத்து விட்டு திரும்பிக் கொண்டவனுக்கு தான் தலையசைத்தால் அவனுக்கு விளங்காது என்கின்ற எண்ணமே வரவில்லை,கண்மூடியிருந்தும் காளை தன்னை கண்டு கொண்ட கலவரத்தில்.

தரணி என்ன செய்திருப்பான் என்று ஊகித்துக் கொண்டவனும் தன் சிந்தனையில் ஆழ சிறிது தூரம் கார் நகர்ந்திருக்கும்,வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டு வண்டி நின்றது.

ஹாரன் சத்தம் பெரும் இரைச்சலை கிளப்பிக் கொண்டிருக்க கண்ணாடியை கீழிறக்காததால் பெரிதாய் எரிச்சலை தரவில்லை,வண்டிக்குள் இருந்த இருவருக்கும்.

கிழிந்த உடையுடன் சிறுவனொருவன் பணம் கேட்டு தட்டை நீட்ட ஜீவாவின் மனம் பாரமாகிட கண்ணாடியை இறக்கி பணத்தை கொடுத்து விட்டு அந்தப் பையனை பார்த்து புன்னகையொன்றை சிந்த சிரித்துக் கொண்டு அவனும் நகர்ந்து விட அந்த புன்னகையில் அப்படி ஒரு அழகு.

இடது கடையிதழை கொஞ்சமாய் வளைத்து மீசை தாங்கிய மேலுதட்டை பிரித்து அவன் தவழ விட்ட புன்னகை அத்தனை வசீகரமாய் இருக்க அதைக் கண்டு அவர்களின் எதிரே நிறுத்தியிருந்த காரில் அமர்ந்திருந்த மித்ராவின் சித்தியின் இதழ்களிலும் புன்னகை சேர்ந்தது.

"என்ன சித்தி..? தனியா சிரிக்கிறீங்க..?"

"மித்ரா..இங்க பாரேன்..ஒரு பையன் சிரிக்கும் போது அழகா இருக்கான்..செம்ம ஹேன்ட்ஸம்.."

"இந்த கெழட்டு வயசுல இதெல்லாம் தேவ தான்.." என்றவளின் தலையை பிடித்து பார்க்கச் செய்ய முயல அதற்குள் கண்ணாடியை ஏற்றி விட்டு இருக்கையில் சாய்ந்து கொண்டிருந்தான்,காளை.

"சித்தி விடுங்க..வர வர ரொம்பத் தான் ஓவரா பண்றீங்க..சித்தப்பா கிட்ட சொல்றேன்.." திமிறிய படி விடுபட்டவளைக் கண்டு உதட்டைச் சுளித்துக் கொண்டார்,அவர்.
 
               ●●●●●●●●
இரவு ஏழு மணி இருக்கும்.

இன்று வேலைகளை சீக்கிரமாய் முடித்து விட்டாலும் வீட்டுக்கு கிளம்ப மனம் வரவில்லை,காளைக்கு.

பகலில் எல்லாம் தொழிலும் அலுவலகமுமே கதி என கிடப்பவனுக்கு இரவு எப்போதுமே பிடிக்காத ஒன்று தான்.

அந்த தனிமையும் வெறுமையும் அவனின் பழைய நினைவுகளை கிளரும் ஆயுதங்களாய் இருக்க அதில் சிக்கிக் கொள்ள விரும்புவதில்லை,காளை.

இரவுகள் ஜனிக்க நினைவுகள் துளிர்க்க அது ஒன்று போதுமே,
மனமது கனக்க.

குற்றம் செய்தால் மட்டுமா தண்டனை கிடைக்கிறது..?

வழக்கின்றி வாதாடாமல் குற்றம் செய்யாவிடினும் ஆயுள் தண்டனையை வழங்க சில நினைவுகள் போதும்.ஆயுள் முழுக்க மனதில் இருந்து குத்தி குத்தியே வலியைத் தரும்.அவனுக்கும் அவ்வாறான சில நினைவுகள் இருக்கிறதே.

வலிகளும் காலப்போக்கில் மாறலாம் என்பது உண்மையென்றால் வலிகளாலும் மாறலாம் என்பது சத்தியமான உண்மை.

வலிகள் மாறவும் செய்யும்.இயல்பை மாற்றவும் செய்யும்.
அவனை மாற்றி விட்டு இன்னும்  மாற்ற முனைகிறதே.

இரவின் மடியில் தனிமையின் பிடியில் இயல்புகள் மலர இறுக்கங்கள் தளர தொய்ந்து அமரும் ஜீவாவை அவனுக்கே பிடிப்பதில்லை.

அதனால் தான் வேலை முடிந்தாலும் பல நாட்கள் அலுவலகத்திலேயே இருப்பான்.தனிமைக்கு அவனுடன் இருக்க முயலும் தரணியையும் இருக்க விடுவதில்லை.

அவனின் தனிமையும் வெறுமையும் அவனுடனேயே கடந்து போகட்டும் என்கின்ற நினைப்போ என்னவோ..? யாருக்குத் தெரியும்..?

விழிகளில் கூட உணர்வுகளை பிரதிபலிக்க மறுத்து அடக்கிக் கொள்ளும் அழுத்தக்காரன்,காளையவன்.அவனின் நினைப்பை அத்தனை எளிதில் யாரால் கண்டு பிடித்திட இயலும்..?

சுழல் நாற்காலியில் சாய்ந்து அசைந்து கொண்டிருந்தவனை எட்டிய பாதச் சத்தங்களைக் கேட்டதும் ஏனோ கோபம் வந்தது.இந்த நேரத்தில் அவனைத் தேடி வருவது யாரென்று தெரியாமல் போகுமா..?

"ஏன் தரணி இன்னும் போகாம இருக்கீங்க..?" விழி திறவாமல் ஒலித்த அவனின் அதட்டலான குரலில் சலிப்பாய் வந்தது,அவனுக்கு.

"ப்ச்..யாரயும் கிட்டவே விட மாட்டேங்குறாரு.."

"தரணி..தனியா பேசாம விஷயத்த சொல்லுங்க.."

"சார் இன்னிக்கி தீனதயாளன் சார் வீட்டுல டின்னர்கு இன்வைட் பண்ணி இருந்தாங்கல பிஸ்னஸ் விஷயமா பேச.."

"ம்ம்..ஐ கென் ரிமெம்பர்..ஆனா நாம தான் இன்னொரு நாள் பேசலாம்னு கேன்சல் பண்ண சொன்னோமே..நீங்க அவர் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டீங்க தான.."

"ஆமா சார்..நா சொன்னேன்..ஆனா அவரோட அப்பா தான் கம்பள் பண்றாரு..என்னாலயும் கன்வின்ஸ் பண்ண முடியல..நீங்க கொஞ்சம் பேசி பாருங்க.." என்க விழி திறந்தவனுக்கு தீனதயாளனின் தந்தையிடம் மறுப்பு சொல்வது கடினம் தான்.

தனியாய் நின்றிருந்த நேரங்களில் பலமுறை தோள் கொடுத்து உதவிய மனிதர்.சட்டென அவரிடம் தன் பிடிவாதங்களை காட்ட முடிவதில்லை.

முயன்று பார்க்கலாம் என அழைப்பெடுக்க அவரின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியவில்லை.

அலைபேசியை மேசையில் வைத்தவனோ தரணியின் முகத்தைப் பார்க்க அவனுக்கு புரிந்தாலும் காளையின் வாய் வார்த்தைக்காக காத்து நின்றான்,அமைதியாய்.

"டின்னர்கு போலாம் தரணி..உங்களுக்கு ரிப்ரெஷ் ஆகனும்னா உங்க வீட்டுக்கு பொய்ட்டு போகலாம்.." என்றவனின் வார்த்தைகள் அறிவிப்பாய் தெரிந்தாலும் குரல் என்னவோ கட்டளை தான்.

எட்டு மணி போல் கிளம்பிச்செல்ல தீனதயாளனின் வீட்டை அடைந்திடும் போது அரை மணி நேரம் கடந்திருந்தது.

"நீங்க போங்க தரணி..நா கார பார்க் பண்ணிட்டு வர்ரேன்.."

"சார்ர்ர்ர்..ஒரு விஷயம்.."

"என்ன தரணி.."

"தீன தயாளன் சாரோட தங்கச்சி நம்ம ஆபிஸ்ல தான் புதுசா வந்துருக்காங்க..தயா சார் தான் ட்ரான்ஸ்பர் பண்ண சொன்னதா அவங்க கிட்ட காட்டிக்க வேணான்னு சொன்னாரு சார்.." என்றவனின் பேச்சை கேட்டு வெறுமனே தலையசைப்பு மட்டுமே அவன் பதிலாய்.

தேடல் நீளும்.

2024.03.19


Leave a comment


Comments


Related Post