இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -13 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 21-03-2024

Total Views: 32331

நிலா தன் தாய் மடியில் படுத்து அழுதுக் கொண்டிருந்தாள், வளவனுக்கு தந்தையின் இறப்பு எந்த விதப் பாதிப்பையும் கொடுக்கவில்லை. 

ஆறுமாதத்திற்கு ஒருமுறை வருபவர் இனி வரவே மாட்டார் அவ்வளவு தானே என்ற ரீதியில் நின்றிருந்தான். 

இறப்புக்குச் செலவு செய்யக் கூட கையில் சுத்தமாக பணமில்லை ராஜியிடம். 

அதை சபையில் சொல்ல முடியுமா? உடனே அருகில் தெரிந்தவர்கள், இவர் கேட்டால் கொடுக்க கூடியவர்கள் என்று அந்த மார்த்தாண்டம் குடும்பத்தினர் தான், ராமனின் உடல் வீட்டில் கிடக்க வெளியே இருந்த மார்த்தாண்டத்திடம் ராஜி வந்தார். 

"அண்ணா.." 

"சொல்லு ராஜி." 

"கையில சுத்தமா பணமில்ல,குழி வெட்டறவனுக்கு காசுக் குடுக்கணும் உங்ககிட்ட இருந்தா கொஞ்சம் தாங்கண்ணா, எல்லாம் சரியாக வேலைக்குப் போனதும் தரேன்" என்றார் தயக்கத்துடன் 

கணவன் இருந்துவிட்டான் அந்த பெண்ணால் கதறி அழக் கூட முடியாமல் நிதிநிலை கழுத்தை நெறிக்க அந்த நிலையிலும் ஓட வைத்தது. 

"நானே கேக்கணும்னு நினைச்சேன் அதுக்குள்ள கூட்டம் சேர்ந்து போச்சி சரி பத்தாயிரம் எடுத்துட்டு வரட்டுமா?" 

"அவ்வளவு வேண்டாண்ணா திருப்பி தர சிரமமா போய்டும்". 

"அதை விட கம்மியா எவ்வளவு செலவு பண்ணுவீங்க தானே." 

"தேவை இருக்க இடத்துல எவ்வளவு குடுத்தாலும் செலவு ஆகிட்டே தான் இருக்கும், இப்போதைக்கு குழி வெட்டி, நைட்டுக்குச் சோறுப் போட காசு இருந்தா போதும்ன்னா.அவ்வளவு மட்டும் குடுங்க" என கேட்டு வாங்கிக் கொண்டார். 

மார்த்தாண்டம் இல்லை என்றால் அன்று ராமனின் இறுதிச் சடங்கை செய்திருப்பது இயலாத காரியம், ராமனின் உறவுகள் கூட செலவு செய்ய யாரும் முன் வரவில்லை . சொல்லப்போனால் ராஜியின் தலையில் இன்னும் என்ன செலவை இழுத்து விடலாம் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

இறுதிச் சடங்குகளை வளவன் செய்ய, "ஏண்டா செத்தது உன் அப்பா, கொஞ்சம் கூட கவலைப் படறமாதிரி தெரியல, உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டுத் தண்ணீ வரல." என்றான் இறப்புக்கு வந்த நண்பன் ஒருவன். 

"கவலைப்பட இந்த ஆளு என்னடா பண்ணுனாரு எங்களுக்கு?. ஒவ்வொரு நாளும் எங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டுச்சின்னு கூட இருந்து பார்த்தவன்டா நான், என்னைய பெத்தக் கடமைக்கு செய்ய வேண்டியதை செய்யறேன் அவ்வளவு தான்" என சொன்னவனை நண்பர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். 

கண்டிப்பாக வளவனின் பேச்சு திமிரு அல்ல, அவன் வயதுக்கு மீறி கஷ்டப்பட்டதால் வந்த வார்த்தைகள் அது. 

அவ்வை சொன்னது போல் கொடிது இளமையில் வறுமை என்பது போல்,வளவனும் நிலாவும் இளமையில் வறுமையை அனுபவித்ததற்கு ராமன் மட்டும் தான் காரணம்.பிள்ளைகளுக்கு உண்ண உணவு இல்லாமல் தவிக்கும் போது, ​​லாட்டரி சீட் வாங்கி பணத்தை ஊதாரித் தனமாக செலவு செய்த தந்தையை, எந்த மகனும் போற்ற மாட்டான். 

பிள்ளை கொடுப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று இருந்தால்,கொள்ளி வைத்ததோடு தன் கடமையும் முடிந்து விட்டது என்று தான் பிள்ளைகள் நினைக்கிறார்கள், வளவன் மட்டும் அதில் விதிவிலக்கு அல்ல.

மிக சிறிய வீடு வாசல் மட்டும் தான் பெரிது, அதை தாண்டி வீதி. அந்த வீதியின் கடைசி வீடு இவர்களுடது, அதுக்கு பிறகு இருக்கும் நந்தனின் வீட்டிருக்கு இவர்கள் பக்கமும் வாசல் இருந்தது அடுத்த தெருவிலும் வாசல் இருந்தது. இப்போது வேறு நந்தனின் வீடு வேலையாகிக் கொண்டிருக்க.. இறப்புக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தெருவில் தான் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர்.

மார்த்தாண்டம், கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை , நந்தன் நால்வருமே அங்குதான் இருந்தனர்.

நந்தனின் கண்கள் அடிவாங்கியதால் உண்டான காயத்திலும், தடயத்திலையுமே இருந்தது.

"என்ன நந்து அங்கப் பார்த்துட்டு இருக்க, அப்பா விசாரிக்காம உன்னைய அடிச்சிருக்கக் கூடாது தப்புதான்" என்றார் தன்மையாக.

விசாரித்திருந்தால் கண்டிப்பாக இதைவிட அடி அதிகமாக விழுந்திருக்கும் என நந்தனுக்கு புரிய, அவன் கண்கள் அழுதுக் கொண்டிருந்த நிலாவின் மீது படர்ந்தது.

அவனுக்கே தெரியும், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டு அடிவாங்க வைக்க காத்துக்கிடக்கிறோம் என்று,  அப்படி இருக்கும் போது எதற்காக? வழிய வந்து தன்னை அடிவாங்குவதில் இருந்து காப்பாற்றினாள் என நந்தனின் மனம் குடைந்தது அதை அவளை தவிர வேற யாராலும் பதில் சொல்ல முடியாது என்று நினைத்தவன், நிலாவிடம் கேட்டுவிட வேண்டும் என முடிவு செய்தான்.

மனம் இப்போதே கேள் கேள் என கூப்பாடுப் போட.. தனியா மாட்டட்டும் கேக்கறேன் என்று எண்ணிக் கொண்டான்.

ராமனை அடக்கம் செய்துவிட்டு வளவனிற்கு மொட்டை அடிக்க,ராஜியை தெருவின் முச்சந்தியில் நாற்காலியைப் போட்டு அமர வைத்தனர்.

கை நிறைய வளையல், நெற்றி நிறைய  பொட்டு, தலை நிறைய பூ, என அமர்ந்திருந்த ராஜியை சடங்குகள் என்ற பெயரில் வளையலை உடைத்தனர். நிலாவிற்கு எதற்கு செய்கிறார்கள் என்று தெரியவில்லை, அதனால் அமைதியாக நின்றாள், வளர்ந்த பையன் வளவனுக்கு அனைத்தும் புரிய தாயின் நிலையைக் கண்டு தவித்தான், இதுநாள் வரையிலும் பூ பொட்டோடு மஹாலக்ஷ்மி போல்  இருந்த தாய் இனி அதெல்லாம் இல்லாமல் விதவைக் கோலத்தில் பார்க்க வேண்டுமே,

இந்த சமுதாயம் இனி  தன் தாயைப் பார்க்கும் கண்ணோட்டமே வேறாகி போகுமே என்ற கவலை, வேதனை ரம்பம் கொண்டு அவனது இதயத்தை அறுத்தது.

தந்தை இறந்ததற்காக அழாதவன் தாயின் நிலையைக் கண்டு தேம்பி தேம்பி அழுதான். அதுவும் யாருக்கும் தெரியாமல் தான்.

வெள்ளை புடவை கொடுத்து ராஜியை ஒரு மூளையில் அமர வைத்துவிட்டனர்.

வந்த சொந்தங்கள் ஏதோ விசேஷத்தில் சோறு போடுவது போல சாப்பிட்டு விட்டு அவரவர் வீட்டை நோக்கிக் கிளம்பிவிட்டனர்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்  தான் சொந்தங்களைப் போல் உதவிக்கு வந்து நின்றனர்.

"ராஜி துக்கம் நடந்த வீட்டுல அடுப்ப பத்த வைக்ககூடாது. காபி தண்ணி எது தேவைனாலும் என்கிட்ட கேளு, நான் கொண்டுவரேன்" என சாலைக்கு எதிர்ப்புற வீட்டில் இருந்து பூங்கொடி சொல்ல.

"சரி பூங்கொடி ஏதாவது தேவையின்னா வளவன் கிட்ட சொல்லிவிடறேன்" என்றார்.

ராஜி கேக்க கூச்சப்படுவார் என பூங்கொடியே நேரம் ஆனால் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார்.
இரண்டு நாள் ஓரிரு சொந்தங்கள் இருந்தது அதன்பிறகு அவையெல்லாம் இருந்த சுவடே தெரியாமல் போய்விட. எவ்வளவு நாள் கடையில் வாங்கி வந்து சாப்பிட முடியும், காலையில் இருக்கும் பணத்தை 16 ஆம் நாள் சடங்கு செய்ய தேவை. அதுவரையிலும் வேலைக்கும் செல்ல முடியாது இருக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என எண்ணிய ராஜி. தானே சமைக்க நினைத்தார்.

"வளவா இதுல 50 ரூபாய் இருக்கு கொஞ்சக் காய்கறியும் மளிகை சாமானமும் வாங்கிட்டு வந்துரு சரியா?".

"அம்மா பூங்கொடி அத்தை தான் சொல்லுச்சே சமைக்கக் கூடாதுன்னு அப்பறம் எதுக்கு இதெல்லாம்?"

"அதுக்குன்னு எத்தனை நாளைக்கு கடையில வாங்கி சாப்பிட முடியும், கையில காசு இல்லப்பா"

"சரிம்மா நான் போய் வாங்கிட்டு வரேன்". என்றவன் தன்னுடைய மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வர.

"எங்கடா கிளம்பிட்ட மண்ணு தள்ளுன பையன் நேரம்கட்ட நேரத்துல வெளியேப் போகக்கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது?" என கிருஷ்ணம்மாள் சத்தம் போட.

"ஆயா கடைக்கு தான் போறேன் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்"

"அங்க என்ன வேலை?". என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மணிமேகலை சாப்பாட்டுடன் வந்துவிட்டார்.

"வளவா இதை வாங்கிட்டு போய் உள்ளே வை"

"என்ன அத்தை இது?" என்று கேட்டுவிட்டு அப்போது தான் அருகில் இருந்த கிருஷ்ணம்மாளைப் பார்க்கவும்,அப்படியே வாயை அடக்கிக் கொண்டான்.

"சாப்பாட சோறுக் கொண்டு வந்துருக்கேன் கொண்டுபோய் உள்ளே வை."

"இல்லை அத்தை அது அம்மா" என்றவனுக்கு வாங்குவதா?வேண்டாமா? என்று தெரியவில்லை.

"ராஜி ராஜி"

"அக்கா"

"அடுப்ப பத்த வைக்கக்கூடாதுல அதான் நான் சாப்பாடு கொண்டு வந்தேன் இனி 16 முடியற வரைக்கும் அங்க இருந்து மூனு நேரமும் வந்துடும் என்ன அத்தை நான் சொல்றது?" என மணிமேகலை தன் மாமியாரையும் உள்ளே இழுக்க.

"அவ வேண்டாம்ன்னு வேற சொல்லுவாங்களா நீ வெச்சிப்புட்டு ஸ்கூல் கெளம்பற வழியைப் பாரு" என்று சொல்ல,  அந்த வீதியில் இருக்கும் பவளக்கொடி என்ற மற்றொரு பெண்ணும் உணவோடு வந்தார்.

"இது என்ன பவளா.?"

"சோறு தான் எத்தனை நாளைக்கு கடையில வாங்கி சாப்பிடுவீங்க, ஏதோ நேத்து வரைக்கும் சொந்தபந்தம்னு நாலு பேரு இருந்தாங்க நீ கடையில வாங்குன சரி,  இப்போதான் யாருமே இல்லையே, உங்க மூனுப் பேருக்கு எதுக்கு கடையில வாங்கணும்? அதான் நானே கொண்டு வந்துட்டேன்."

"அது,  மணி அக்கா கொண்டு வந்துட்டாங்க" என தயக்கமாக சொன்னாலும், 'ஒரு கஷ்டத்தில் சொந்தங்கள் கூட துணைக்கு நிற்காமல் ஓடி விட்டது, எந்த சொந்தமும் இல்லாதவர்கள் நான் செய்கிறேன்' என போட்டிப் போட்டு செய்வதைப் பார்க்கும் போது மனம் நிறைந்து போனது.

"அவங்க கொண்டு வந்தா என்ன இதை மதியாணத்துக்கு வெச்சிக்கோ.இனி மதிய சாப்பாட்டை நான் கொண்டு வந்தர்றேன், நீ காலையில நைட்டுக்கு அங்க சாப்புட்டுக்கோ" என்றார்.

"சரி பவளா"  என்றவருக்கு கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.அதை சுண்டி தூக்கி எறிந்தவர், "வளவா நீயும் பாப்பாவும் சாப்பிடுஙக போங்க" என குழந்தைகளை அனுப்பி வைத்தார்.

ராமன் இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது, பிள்ளைகளின் பள்ளிப் படிப்பு வேற தடைப்பட்டது போல் நிற்கவும் வளவனையும், நிலாவையும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

"உனக்கு கொஞ்சமாச்சும் கூறு இருக்கா.. மண்ணு தள்ளுனவனை ஸ்கூலுக்கு அனுப்பிருக்க இரண்டு நாள் போகலைன்னா  என்ன குடிமுழுகிடப் போகுது."என கிருஷ்ணாம்மாள் ராஜியை சத்தம் போட்டார்.

"செத்துப் போனவனுக்கு ஏங்கிட்டு என்னோட புள்ளைங்க படிப்பை கெடுக்க முடியாதும்மா, எனக்கு ஒரு அறிவும் இல்ல, நாலு எழுத்து படிச்சிருந்தா ஒரு இடத்துல கணக்கு எழுதியாவது புள்ளைங்களுக்கு  அரைவயிறு கஞ்சி ஊத்திருப்பேன்,  படிப்பு இல்லாம போனதுல தானே இவ்வளவு கஷ்டமும், அவனாவது படிச்சி ஒரு நல்ல வேலைக்குப் போகட்டும் "

"என்ற அனுபவத்துல சொல்றேன் பொறவு உன் பாடு எனக்கு என்ன வந்துச்சி, நாளைக்கு பையனுக்கு அது ஆகிடுச்சு இது ஆகிடுச்சுன்னு சொல்லிட்டு வராத" என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் கிருஷ்ணம்மாள்.

அன்று மாலை நந்தன் வீட்டின் வெளியே நின்ற நிலா. "யுகி யுகி" என கத்திக் கொண்டிருந்தாள்.

யுகி இருந்தால் தானே வருவதற்கு, அவன் இல்லாமல் போக, நந்தன் தான் வெளியே வந்தான்.

"ஏய் என்னடி அவனோட பேர் சொல்லிக் கூப்பிடற? உன்னய விட வயசுலையும் தகுதிலையும் அவன் பெரியவன்னு உனக்கு தெரியாதா.?" என மிரட்டலுடன் வந்தான் நந்தன்.

"ஹா அது அவங்க.. என்ன?"தடுமாறியவள்.

என்ன கேக்க வந்தோம் என்பதையே மறந்து வீட்டிற்குச் செல்ல முயன்றாள்.

"ஏய் நில்லு எங்க ஓடற இங்கவா?"

"ஹுஹும் வந்தா நீங்க அடிப்பீங்க."

"வரலைனாலும் அடிப்பேன்" என்றவன் எட்டி அவளது ஜடையை பிடித்து இழுத்து அவன் அருகில் கொண்டு வந்தான்.

"ஸ்ஆஆஆஆ வலிக்குது விடுங்க"

"வலிக்கட்டும்" என்றவன் இப்போது ஜடையை விட்டுவிட்டு அவளது காதைப் பிடித்து திறுகி, "எப்போல இருந்து பொய் பேச பழகுனடி." என்றான் அதிகாரமாக.

"நான் பொய், இல்லை. பேசல" என திக்கி திணறி "வலிக்குது" என்றாள் மெல்லிய குரலில், அந்த சிணுங்களின் மெல்லிய ஓசை நந்தனை புயலாக தாக்க மெதுவாக திறுகிய காதை வேகமாக திறுக ஆரம்பித்து விட்டான்.

"என்கிட்டயே பொய் சொல்றியா. நான் போன் வந்ததை உங்கிட்ட சொல்லவே இல்ல, அங்க எதுக்கு எல்லாருக்கு முன்னாடியும் அப்படியே நல்லவ மாதிரி பேசுன,  என்ன? என்னையக் காப்பாத்தி தியாகி ஆகலாம் பார்க்கறியா.? நான் கேட்டனாடி என்னைய வந்து காப்பாத்துன்னு" 

"ஹும்ஹும் நீங்க அடி வாங்குறீங்களேன்னு தான்" என்று சொல்லி முடிப்பதற்குள் மேலும் வேகமாக  காதை திறுகியவன், "நீ வந்து காப்பாத்தி தான் நான் அடி வாங்கறதுல இருந்து தப்பிக்கணும் அவசியமே இல்லை,  இனி இப்படி பொய் பேசிட்டு இருந்த கொன்னுடுவேன் ஜாக்கிரதை" என நாக்கை மடித்து மிரட்ட மிரண்டு விட்டாள் நிலா...

'என்ன மாதிரியான ஜென்மம்டா இவன்,?  அடி வாங்கறான்னேன்னு பாவம் பார்த்து சொன்னதுக்கும்  என்னய அடிக்கிறான்' என எண்ண மட்டுமே முடிந்தது. வலியில் தலை விண்ணேன்று வலிக்க சத்தம் போடாமல் அழுதாள்.



Leave a comment


Comments 1

  • F Fajeeha Fathima
  • 3 months ago

    அடப்பாவி நீ என்ன பைத்தியமாடா நந்தா உன்னை காப்பாத்தினதுக்கு அந்த பொண்ணு காதை பிச்சு எடுக்க போற அடப்போடா லூசு பயலே இன்னும் என்ன எல்லாம் செய்ய காத்து இருக்கியோ போ

  • பிரியாமெகன் @Writer
  • 3 months ago

    நந்தன் அப்படி பட்ட மேக்


    Related Post