இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 21-03-2024

Total Views: 36084

“தரணி… இன்னைக்கு ஈவினிங் ஏழு மணிக்கு டாக்டர் வத்சலாகிட்ட மீராவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு… இன்னைக்கு ஸ்கேன் பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்க… நான் அவளை கூட்டிட்டு போயிட்டு நைட் டின்னரையும் முடிச்சிட்டு அவளை டிராப் பண்ணிட்டு வந்துடறேன்… கொஞ்சம் லேட் ஆகும்… நீ சீக்கிரமா கிளம்பி வீட்டுக்கு போயிடு…” கேண்டினில் அமர்ந்து மசால் போண்டாவை சுவைத்தபடியே கூறினான் முகிலன்.


“நான் சீக்கிரமா போய் என்னடா பண்ணப் போறேன்… புது ப்ராஜெக்ட்டுக்கு சில நோட்ஸ் எடுக்க வேண்டியது இருக்கு… நானும் வேலையை முடிச்சிட்டே போய்க்கிறேன்…” டீயை பருகியபடியே பதில் அளித்தான் தரணி.


“பூச்செண்டு தனியா இருப்பாடா…”


“விஜய் சூப்பர் துணைக்கு இருக்கு… உன் அத்தை மக அப்படியே பயந்துக்கிற ஆள் பாரு…” மெலிதான எரிச்சலுடன் கூறியவனை கூர்ந்து பார்த்தான் முகிலன்.


“அவமேல கோபமா இருக்கியாடா…?”


“கோபப்படற அளவுக்கு எனக்கு எந்த உரிமையும் கிடையாது… நீயோ மீராவோ இருந்தா உங்ககூட ஏதாவது பேசுவா… நான் மட்டும் போனா ரூம்ல போய் அடைஞ்சுடுவா. நிம்மதியா டிவி பார்க்கிற சந்தோஷமும் அவளுக்கு போயிடும். அந்த சந்தோஷத்தை நான் ஏன் கெடுப்பானே…?” ஏனோ அவன் விட்டேற்றியாய் பேசியது போல் தோன்றியது முகிலனுக்கு.


“ஏன்டா நீயும் இப்படி அநியாயத்துக்கு விலகி நிற்கிற… ரொம்ப நிதானமானவன் நீ… அவளுக்கான ஸ்பேஸ் கொடுக்கணும் நீதானே சொன்ன…”


“இப்பவும் அதையேதான் சொல்றேன்… அதுக்காகத்தான் தள்ளி நிக்கிறேன்…”


“தள்ளி நிக்கிறதுக்கும் மொத்தமா விலகி நிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. அவ கோபத்துல நியாயம் இருக்குன்னு நீதானே சொன்ன. அவ உன்னை புரிஞ்சுக்கறதுக்கான வாய்ப்பை நீதானே ஏற்படுத்திக் கொடுக்கணும். எதுவுமே பேசாம ரெண்டு பேருமே விலகி இருந்தா எப்போ புரிதல் வர்றது…? முயற்சி எடுக்கணும் தானடா… அவளை மனப்பூர்வமா விரும்பித்தான் தாலி கட்டினேன்னு சொன்ன… அப்போ உன்னோட விருப்பத்தை கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படுத்தினாதானே அவளும் புரிஞ்சுக்குவா. ரொம்ப சின்ன வட்டத்தில வாழ்ந்தவடா அவ… நீதான் அவளை பக்குவப்படுத்திக் கொண்டு வரணும்…” பொறுப்புடன் பேசிய முகிலனை பார்த்து மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தான் பரணி.


“நாளைக்கு நம்ம மொத்த குடும்பமும் வந்து இறங்கப் போகுது… ரெண்டு பேரும் பேச்சுவார்த்தை கூட இல்லாம ஆளுக்கு ஒரு திசையில விலகி நிக்கிறீங்கன்னு தெரிஞ்சா எல்லாருமே வருத்தப்படுவாங்க‌.. பெரியவங்க சந்தோசமும் நமக்கு முக்கியம்டா…”


இழுத்து பெருமூச்சு விட்டவன் “இப்போ என்னை என்ன பண்ணச் சொல்ற…?” நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்தபடி கேட்டான்.


“நேரம் காலமா வீட்டுக்கு போ… அவகூட சேர்ந்து சாப்பிடு… ஏதாவது பேச முயற்சி பண்ணு… அவ பக்க நியாயத்தை சொல்லும்போது நீ உன் பக்க நியாயத்தை சொல்லு…”


“என் பக்கம் என்ன நியாயம் இருக்கு சொல்றதுக்கு…?”


“ஏன்டா இப்படி எடக்கு மடக்காவே பேசுற… உன் பக்கம்தானடா எல்லா நியாயமும் இருக்கு… எத்தனை விஷயங்களை சரி பண்ணி இருக்கே… அப்பத்தா கூட உன்னை தலைமேல வச்சுதான் கொண்டாடுது… அப்புறம் என்ன…?”


“அதை அவ புரிஞ்சுக்கணும்ல…”


“நீதான் புரிய வைக்க முயற்சி பண்ணனும்… விலகியே இருந்தா நீ தப்பு பண்ணின மாதிரிதான் தோணும்…” எதுவும் பேசாமல் அமைதியாக நெற்றியை கீறியபடி அமர்ந்திருந்தான் தரணி.


“உன் பொண்டாட்டிதானடா… அட்ஜஸ்ட் பண்ணிக்க மாட்டியா… உன் பொக்கேக்கு ஒரு பொக்கே வாங்கி கொடுத்து கரெக்ட் பண்ணு…” கண் சிமிட்டி சிரித்தான் முகிலன்.


“உன் கேவலமான ஐடியாவை கொண்டு போய் உடைப்புல போடு… இப்போ என்ன… நான் சீக்கிரமா வீட்டுக்கு போகணும்… அவ்வளவுதானே… விடு… நான் பார்த்துக்கிறேன்…” பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டை எடுத்து வாயைத் துடைத்தபடியே எழுந்து கொண்டவன் தன் பணியை தொடர தனது கேபினுக்குள் நுழைந்தான்.


வழக்கமாக வேலை முடிந்து முகிலனும் தரணியும் வீட்டிற்குள் நுழையும்போது இரவு மணி ஏழை தொட்டிருக்கும்‌. இருவரும் குளித்து முடித்து மாற்றுடையுடன் வெளியே வரும்போது அவர்களுக்கான இரவு உணவை தயார் செய்திருப்பாள் பூச்செண்டு. தொலைக்காட்சியை பார்த்தபடியே அவர்கள் உணவு உண்ணும்போது தானும் உணவுடன் அறைக்குள் நுழைந்து கொள்வாள். போனில் ஏதேனும் பார்த்தபடியே படுத்திருப்பாள். எப்போது உறங்குவாள் என்பது தெரியாது. ஏதேனும் தேவை என்றால் முகிலன் இடம் மட்டும் கேட்டுக் கொள்வாள். கடந்த ஒரு வார காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.


இன்று வழக்கத்திற்கு மாறாக ஆறு மணிக்கெல்லாம் வீட்டிற்குள் நுழைந்திருந்தான் தரணி. வழக்கம் போன்றே விஜய் சூப்பரில் ஏதோ ஒரு தெலுங்கு டப்பிங் படத்தை சோபாவின் கைப்பிடியில் கையை ஊன்றி தலையை தாங்கியபடி ஒய்யாரமாய் படுத்துக்கொண்டு பார்த்தபடி இருந்தாள் பூச்செண்டு. அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க தனது லேப்டாப் பையை டேபிளில் வைத்து களைத்த முக பாவத்துடன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே அறைக்குள் நுழைந்து கொண்டான் தரணி.


வாசலையே சில நொடிகள் பார்த்திருந்தவள் ‘பனைமரம் மட்டும் வந்திருக்கு… அதுவும் சீக்கிரமா… இந்த முனி எங்கே போச்சு…?’ யோசனையாய் அமர்ந்திருந்தாள்.


அறைக்குள் தனது உடையை மாற்றி குளிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த தரணிக்கு அவள் போனில் முகிலனிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.


“சொல்லிட்டு போக மாட்டியா…? ……….. எப்போதான் வருவ…?........... தனியா இருப்பேன்னு அறிவு இருக்கா இல்லையா…? ……………….. திட்டம் போடுறதில கில்லாடிதானே நீங்க எல்லாம்… ஏதாவது திட்டம் போட்டு வச்சிருக்கியா….? ……………. வாயை மூடு… எதுவும் பேசாதே… வை போனை…”


போனில் அவள் பேசிய வார்த்தைகள் தரணியில் தன்மானத்தை தூண்டுவது போல் இருந்தது. தனியா இருக்காளா…? அப்போ என்னை மனுஷனா கூட மதிக்கலையா…? திட்டம் போட்டோமா…? அப்போ என்னை கேவலமா நினைச்சுட்டாளா…? சுர்ரென கோபம் தலை தூக்கியது. ஏற்கனவே மெலிதான தலைவலியுடன்தான் உள்ளே நுழைந்திருந்தான். இப்போது வலி இன்னும் கூடியதுபோல் தோன்றியது.


‘புருஷனாக வேண்டாம் மனுஷனாக கூட மதிக்க மாட்டாளா…? எதுவும் பேசாமல் வாய்மூடியே இருப்பதுதான் தவறோ…’ குளிக்கச் செல்ல மனமின்றி தலையை பிடித்தபடி படுக்கையிலேயே அமர்ந்திருந்தான். ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சி அணைக்கப்பட்டது. எழுந்து கொண்டவன் குளிக்கச் சென்றான்… குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வந்தவன் சமையலறைக்குள் நுழைந்தான். அவள் ஏதோ அடுப்பில் வறுத்துக் கொண்டிருந்தாள். உளுந்தம்பருப்பு வறுபடும் வாசம் வந்தது. அமைதியாகச் சென்று பிரிட்ஜில் இருந்த பால் எடுத்து மற்றொரு அடுப்பை பற்ற வைத்து சற்று விலகி நின்று கொண்டான்.


பால் குண்டாவையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் “என்ன வேணும்…?” என்றாள் மெல்லிய குரலில்.


“தலைவலியா இருக்கு… காபி குடிக்கணும்…” எங்கோ பார்த்தபடி பதில் அளித்தான்.


அவனைத் தாண்டிச் சென்று சர்க்கரை டப்பாவையும் காபி பொடி டப்பாவையும் அவள் கையில் எடுக்க “பரவால்ல… நானே போட்டுக்கிறேன்…” அவள் கையில் இருந்தவற்றை வாங்கிக் கொண்டான்.


அவனை ஒரு சில நொடிகள் அமைதியாக பார்த்தவள் எதுவும் கூறாமல் தன் வேலையை தொடர தானே காபி தயாரித்துக் கொண்டு வெளியேறியவன் சமையலறை வாயிலில் நின்று திரும்பி “எனக்கு டிபன் எதுவும் பண்ண வேணாம்… பசி இல்ல…” என்று கூறி சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான். அவள் முகிலனிடம் பேசியவை அவன் மனதை காயப்படுத்துவதாய் அமைந்துவிட அவள் சமைத்ததை உண்ணும் எண்ணம் எழவில்லை.


“இருக்கிறது ரெண்டு பேரு… நீ திங்கலேன்னா அப்புறம் நான் மட்டும் என்னத்த செஞ்சு திங்கிறது…? தொரைக்கு கோபம் வந்திருச்சு போல இருக்கே… நான் உண்மையைத்தானே சொன்னேன்… என்னை பொம்மையா தானே மாத்தி வச்சுட்டீங்க எல்லாரும்… திட்டம் போடுற கூட்டம்தானே நீங்க எல்லாருமே… என் மன உளைச்சல் எனக்குதானே தெரியும்…” சத்தம் இன்றி வாய்க்குள் முணுமுணுத்தபடி உணவு செய்யும் எண்ணம் இல்லாமல் அனைத்தையும் ஒதுங்க வைத்து வெளியேறி அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டாள்.


பொதுவாக கதவினை முக்கால்வாசி சாத்திய நிலையில்தான் தினமும் படுத்திருப்பாள். தேவையற்று கதவினை தாழிட்டுக் கொள்ள மாட்டாள். முதல்நாள் மட்டும் கோபத்தில் அவ்வாறு செய்தாள். அதன்பின் இதுதான் வழக்கம்… இன்று வெடுக்கென்று தாழிட்டுச் சென்றதில் இன்னும் கூடுதலாய் காயப்பட்டான் தரணி.


‘ஆக என்னை நம்பவில்லை… காமக்கொடூரனை கண்டு பயந்து உள்ளே ஒடுங்கிக் கொள்வதுபோல் இது என்ன வேலை…? நான் தாலி கட்டிய கணவன்தானே… அவள்மேல் தவறான பார்வையைக்கூட இதுவரை செலுத்தியதில்லையே… தாலி கட்டிய பின்பு இன்றுவரை நிமிர்ந்து பார்த்து பேசக்கூட இல்லையே… 20 நாட்களுக்கு மேலாக அருகில் இருந்து என்னை கவனித்துக் கொண்டுதானே இருக்கிறாள்… பின் ஏன் இப்படி ஒரு செயல்…?’


யோசிக்க யோசிக்க மனம் ரணமானது. மனதை அமைதிப்படுத்த ரிமோட்டை அலற வைத்துக் கொண்டிருந்தான். கொந்தளிப்பு கூடியதே ஒழிய குறையவே இல்லை… இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்… அவளிடம் பேசியே ஆக வேண்டும்… தலையை உலுக்கி எழுந்து கொண்டவன் அவளது அறைக் கதவை ஓங்கி தட்டினான்.


விடாது பலமுறை தட்டிய பின்பு “யாரு…?” சட்டமாய் வந்தது அவள் குரல்.


“ஏன்…? நான்தான்…” இவனது குரலும் ஓங்கி ஒலித்தது.


“என்ன வேணும்…?”


“வெளியே வா…”


“எதுக்கு…?”


“வெளியே வா பூச்செண்டு…” ஆத்திரத்தை அடக்க படாதபாடுபட்டான்.


“எதுக்குன்னு சொல்லுங்க வரேன்…” அவனை தூண்டுவது போன்றே அவளும் வம்பு செய்தாள்.


“உன்கிட்ட பேசணும்… வெளியே வா…”


“உங்க கூட பேச எனக்கு ஒன்னும் இல்ல…”


“இப்போ நீ கதவை திறக்கலேன்னா நான் உடைச்சுக்கிட்டு உள்ளே வருவேன்…” வெறியோடு சத்தமிட்டவன் கதவில் ஓங்கி அடித்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்த “ஓஓ‌.‌.. கதவை உடைப்பீங்களோ… பண்ணித்தான் பாருங்களேன்… மாமா வராம நான் வெளியே வர மாட்டேன்…” அவன் கோபத்திற்கு தூபம் போட்டுக் கொண்டே இருந்தாள்.


“உன் மாமா ரொம்ப யோக்கியன்… நான் கேவலமானவனா…? என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல…? என்ன தெரியும் உனக்கு என்னைப் பத்தி…? என்னை அசிங்கப்படுத்துறியா…?” தொண்டை கிழிய சத்தமிட்டவன் வெறி அடங்காமல் கதவனை ஓங்கி உதைத்தான்.


என்றுமே அவன் நிதானம் இழந்ததில்லை… எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து பொறுமையாக கையாண்டுதான் பழக்கம்… இன்று அவனது பொறுமை மொத்தமும் காற்றில் பறந்த பொரிகடலையாய் மாறிவிட தன் சுயத்தை இழந்திருந்தான். அவளது அவநம்பிக்கை அவனை மிருகமாக மாற்றி இருந்தது. கண்ணியம் குறைவாக இன்ற வரை எந்த பெண்ணிடமும் நடந்து கொண்டதில்லை. பெண்களின் கண்களை தாண்டி அவனது பார்வை கீழே இறங்கியதே இல்லை… ஏன் அவளைக் கூட அந்த மயிலிறகு கண்களின் வசீகரத்தில் மயங்கி நின்றபோது அந்த கண்களில் தானே தன்னை தொலைத்தான். அவளது இதழ்களை கூட இன்றுவரை ரசித்துப் பார்த்ததில்லையே… 


அப்படிப்பட்ட என்னை எத்தனை கேவலமாக நினைத்து விட்டாள்… தாங்கவே முடியவில்லை… கதவைத் திறந்து வெளியே வந்திருந்தால் கூட அவனது ஆக்ரோஷம் அடங்கி இருக்கும். அவன் இத்தனை தூரம் சத்தமிட்டும் அமுக்குனியாக வெளியே வராமல் அவள் உள்ளேயே அமர்ந்திருக்க அவனது கோபம் பன்மடங்காகியது. ஆஆஆ… ஆக்ரோஷமாய் சத்தமிட்டவன் டைனிங் டேபிளில் இருந்த பாத்திரங்களை வெறியுடன் எடுத்து திசைக்கு ஒன்றாக வீசியிருந்தான். ரிமோட்டை ஓங்கி தரையில் அடித்து உடைத்திருந்தான்… வெளியே சிலிர் சிலிர் என சத்தம் கேட்க குலை நடுங்கிப் போய் அமர்ந்திருந்தாள் பூச்செண்டு.


வீடு ரணகளமாக மாறி இருந்த வேளையில் உள்ளே நுழைந்திருந்தான் முகிலன். வீடு கிடந்த கோலத்தையும் கண்கள் சிவக்க உடல் நடுங்க வெறிகொண்ட முகத்துடன் வேங்கையென நின்றிருந்த தரணியையும் கண்டவன் மூர்ச்சித்து விழாத குறைதான்.


“த..த..தரணி எ..என்னடா ஆச்சு…?” நாக்கு குளறியது… பாய்ந்து அவனது சட்டையை பிடித்திருந்தான் தரணி.


“நான் உன்கிட்ட என்னடா சொன்னேன்.. ‌ வீட்டுக்கு போகல… வேலை இருக்குன்னு சொன்னேனா இல்லையா… பெரிய இவன் மாதிரி அட்வைஸ் மழையா பொழிஞ்சு கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சியே… உன் அத்தை மக என் கேரக்டரையே கேவலப்படுத்திட்டாடா…? எல்லாம் உன்னாலதான்டா… உன்னாலதான்…” பற்களை நறநறத்தபடியே வெறியுடன் கத்தியவன் பிடித்து தள்ளிய வேகத்தில் பூச்செண்டின் அறைக்கதவில் மோதி நின்றான் முகிலன்.


வெளியே பேச்சுக் குரல் கேட்டு பூச்செண்டும் கதவை திறந்திருந்தாள். முகிலன் வந்த பின்தான் வெளியில் வருவேன் என்று சொன்னது போன்றே அவள் வந்து நிற்க இன்னும் ஆவேசமானவன் தண்ணீர் ஜக்கை எடுத்து சுவரில் வீசினான். நடுநடுங்கிப் போய் நின்றிருந்தனர் இருவரும். தரணியின் இந்த அவதாரம் முகிலனுக்கு முற்றிலும் புதிது… அவனது இந்த ருத்ரதாண்டவத்தை இவன் பார்த்ததே இல்லை… தன்னை அடித்தாலும் பரவாயில்லை என்று ஓடிச் சென்று அவனது கரத்தோடு சேர்த்து அழுத்திப் பிடித்தான் முகிலன்.


“எ..என்னாச்சுடா தரணி…? நீ..நீ இப்படி எல்லாம் நடந்துக்கிற ஆள் இல்லையே… உனக்கு இப்படி எல்லாம் கூட கோபம் வருமா…? பூச்செண்டு ஏதாவது தப்பா பேசிட்டாளா…?” வியர்த்து வழிந்த முகத்தை தோளை உயர்த்தி துடைத்தபடியே கேட்டான்.


“விலகி நிக்காதே… மனசு விட்டுப் பேசுன்னு சொன்னியே… என்மேல நம்பிக்கை இல்லாம கதவை தாழ் போட்டு உள்ளே போய் உட்கார்ந்துருக்கா… போன்ல உன்கிட்ட என்னடா சொன்னா…? திட்டம் போட்டீங்களானு கேட்டாளா இல்லையா…? அதுக்கு என்னடா அர்த்தம்…? உடம்பு வெறிபிடிச்ச மிருகமாடா நான்… தனியா இருக்கேன்னு சொல்றா… அப்ப நான் யாருடா…? புருஷனா வேண்டாம் ஒரு மனுஷனாக்கூட என்னை மதிக்கலையா…? தெளிவா சில விஷயங்களை பேசலாம்னுதான் வெளியே வரச் சொன்னேன்… என் மாமா வராம நான் வெளியே வரமாட்டேன்னு சொல்லி என்னை கேடு கெட்டவனா சித்தரிச்சு அசிங்கப்படுத்திட்டாடா…”


வெறியில் கன்னம் துடிக்க பேசியவன் டேபிளில் இருந்த கைக்கடிகாரத்தை தூக்கி சுவற்றில் எறிய அது சுக்கல் சுக்கலாய் உடைந்து கீழே விழுந்தது. தலையை இரு கைகளாலும் அழுந்த கோதியபடி வேகமாய் திரும்பி நடந்தவன் எதிரில் இருந்த நாற்காலியையும் ஓங்கி உதைத்து தன் அறைக்குள் நுழைந்தான். அடுத்த சில நொடிகளில் உடை மாற்றி சட்டை பட்டன்களை போட்டபடியே வெளியே வந்து பைக் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியேறினான்.


“தரணி… நில்லுடா… எங்கே போற…?” அவனை துரத்தியபடியே பின்னே ஓடிய முகிலன் தன்னை திரும்பியும் பார்க்காது லிப்டில் நுழைந்திருந்தவனை ஆயாசமாய் சில நொடிகள் பார்த்தது மீண்டும் வீட்டுக்கு நுழைந்தான். அனுமன் அழித்த இலங்கையின் கிஷ்கிந்தையாக காட்சி அளித்தது வீடு. அறை வாசலிலேயே முகம் வெளிறி அசையாமல் நின்றிருந்தாள் பூச்செண்டு. நடந்து வந்து சோபாவில் தளர்ந்து அமர்ந்தான் முகிலன். 


தரணியின் தன்மானத்தை சுரண்டி இருக்கிறாள்… அவன்மேல் அவநம்பிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறாள்… கௌரவமான ஆண்மகனுக்கு இயல்பாய் எழும் கோபம்தான்… எதற்கும் எல்லை உண்டு அல்லவா… சாது மிரண்டால் காடு கொள்ளாது… அதுதான் நடந்திருக்கிறது…முகிலனுக்கு நன்றாக புரிந்துபோனது. தன்னால் தனது நண்பனின் இயல்பான குணம் கூட மாறிப்போனதோ… யார் மேல் குற்றம் சொல்வது…? என்னால்தானே அனைத்தும்… வேதனையுடன் இதழ்களை கடித்தபடி யோசனையாய் அமர்ந்திருந்தான்.




Leave a comment


Comments


Related Post