இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-08 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 21-03-2024

Total Views: 42865

அத்தியாயம்-08


திருமணம் முடிந்து அமைதியாய் ஒரு வாரம் கடந்திருந்தது. அஞ்சனாவும் அவளது கல்லூரி வாழ்வைத் தொடரத் துவங்கியிருந்தாள். என்றும் போல் இன்றும் காலை எழுந்ததும் தன்னவளை எழுப்பும் தலையாயப் பணியில் இறங்கிய யஷ்வந்த் அதில் வெற்றியும் கண்டான்.

“குட் மார்னிங் யஷு மாமா” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டுக் கூறியவள் அவனது பதில் வாழ்த்தை வாங்கிக் கொண்டு குளிக்கச் சென்றாள். அவள் குளித்து வரும்வரை தனது வேலையறையில் அமர்ந்து சில கோப்புகளை சரிபார்த்துக் கொண்டிருந்தவன் அவள் உடைமாற்றும் அறைக்குள் சென்ற அரவம் கேட்டவுடன் தான் குளிக்கச் சென்றான்.

சொற்ப நிமிடங்களில் குளித்து முடித்து டிராக்குடன் வந்தவன் உடை மாற்றும் அறைக்குள் நுழைய, “ஐயோ மாமா நோ” என்றபடி தன் முகத்தை மூடிக் கொண்டு திரும்பி நின்றாள் அஞ்சனா.

அவள் கூச்சல் ஒலியில் அவளை நோக்கியவன் அப்போதே பாதி கட்டிய புடவையுடன் போராடிக் கொண்டிருந்தவள் அவன் வந்ததில் பதறித் திரும்பி நிற்பது புரிந்தது.

முந்தானையை கழுத்தில் மாலை போல சுற்றிக் கொண்டு மடிப்புகளை வைக்கத் தெரியாமல் மடித்து கலைத்து அவள் கசக்கி வைத்திருக்க, முகத்தை இருகரம் கொண்டு மூடி நின்றவள் கண்டு பீரிட்டு வந்த சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது சிரமப்பட்டான். அவளது எழில் அவன் கண்களை சென்றடைந்தளவு கருத்தை சென்றடையாமல் இருந்ததற்கு அவளது குழந்தைத்தனமான செயல் கொடுத்த அடக்க முடியாத சிரிப்பே காரணியானது.

இருவிரல் கொண்டு தன் இதழை அழுத்திக் கொண்டவன் தலையை வேறு புறம் திருப்பி தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த, “போயிட்டீங்களா?” என்று  கேட்டாள்.

'உன்ன பார்த்து எனக்கு எப்படிடி லவ் வரும்? காமெடி பண்ற அஞ்சு’ என்று எண்ணிக் கொண்டவன் அவளை நெருங்கி நின்றவள் அவன் சென்றுவிட்டானோ என்றெண்ணி திரும்பிப் பார்க்க, அவன்மீதே மோதி தடுமாறினாள்.

அவள் கரம் பற்றி நிலைம்படுத்தியவன், “இன்னும் என்ன பண்ற? இவ்வளவு நேரமா டிரஸ் மாத்த?” என்று வினவ, கூச்சத்துடனும் தடுமாற்றத்துடனும்

 “மா.. மாமா” என்றாள். 

தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் என்னவென்று வினவ,

 “இ.. இன்னிக்கு காலேஜ்க்கு புடவை கட்டிட்டு போகனும். எ..எனக்கு கட்டத் தெரியாது” என்றாள்.

“ஏன் நிச்சயம், கல்யாணம், கோவிலுக்கு போறப்பனு கட்டிருந்தியே?” என்று அவன் வினவ, 

“அதுலாம் அம்மா, அத்தை, அக்ஷா க்கா கட்டிவிட்டாங்க” என்று அவள் கூறியதும்,

 “சரி அவங்க கட்டிவிடும்போது நீ கத்துக்கலையா?” என்று கேட்டான்.

அவன் கேள்வியில் திடுக்கிட்டு நோக்கியவள் “அ..அது.. இல்லை” என்று தடுமாற, 

“ஏன்?” என்றான். அவள் மௌனமாய் தலைகுனிய, 

“அதான் கட்டிவிட ஆள் இருக்கேனு சோம்பேறித்தனம்” என்று கூறினான்.

ஏதும் பேசாது அமைதியாய் நெழிந்தவளைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு “இதை எடு” என்று மாலை போல் தொங்கும் முந்தானையைக் காட்ட,

 “நீ..நீங்க போங்க மாமா. நான் கட்டிப்பேன். இ..இல்லைனா அக்காவை கூப்பிட்டுப்பேன்” என்று கூறினாள்.

“அப்ப எப்ப தான் கத்துப்ப?” என்று காட்டமாய் கேட்டவன், “நான் சொல்லி தரேன் கட்டு” என்க, வேகமாய் வேண்டாமென தலையசைத்தாள். “ஏன்?” என மீண்டும் ஒரே வார்த்தையில் அவன் வினவ,

 “நி..நீங்க சொல்லிதர கூடாது. போங்க” என்றாள்.

அவளைப் புருவம் சுருங்க பார்த்தவன் “அப்படினு யார் சொன்னா?” என்று வினவ, அவள் வாய் திறக்கவே இல்லை. தானே அவள் முந்தானையை எடுத்துவிட்டவன் அவள் கசக்கி வைத்திருந்த மடிப்புகளை இழுத்து சீர் செய்து “இங்க பாரு” என்க, அவனை நோக்கினாள்.

“என்னை இல்ல கீழ பாரு. ரெண்டு மடிப்பு வச்சுக்காட்டுறேன். அதை வைச்சு நீ மடி” என்று கூறியவன் லாவகமாய் மடிப்பு வைத்துக் காட்ட, தானும் அதே போல் செய்தவளுக்கு அது வருவேனா என்றது.

விட்டாள் அழுது விடுவதாய் இடிந்திருந்த அவள் முகம் கண்டு சற்றே மனம் இறங்கியவன் மீண்டும் மடிப்பு வைத்துக் காட்டி, அவளையும் அதேபோல் செய்ய பழக்கப்படுத்த, ஒருவழியாய் வைத்து முடித்தாள்.

அவள் மடிப்புகள் வைத்ததும் அதை சீர் செய்து கொடுத்தவன், “ஃப்ளோட்டிங் விட போறியா, ப்ளீட்ஸ் வைக்க போறியா?” என்று வினவ, ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தாள். ஒரு பெருமூச்சு விட்டவன், அவளை கண்ணாடி முன்பு நிறுத்தி முந்தானையை இரண்டு விதமாகவும் வைத்துக் காட்ட, 

“ஃப்ளீட்ஸ் வைச்சுக்குறேன் மாமா” என்றாள். 

தான் வைத்த மடிப்புகளைக் கலைத்தவன் அவளிடம் கொடுத்து வைக்க சொல்ல, அவனைப் பாவமாய் பார்த்தாள். கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக் கொண்டு “ம்ம்..” என்று அவன் புடவையைக் கண்காட்ட, மீண்டும் சிலபல நிமிடங்களில் முந்தியையும் மடித்து வைத்து ஊக்கிட்டு முடித்தாள். விலகிய இடங்களில் சரிசெய்துவிட்டு அவளை கண்ணாடி பார்க்க வைத்தவன் “ஓகே?” என்க, உற்சாகமாய் தன்னை ரசித்தவள்

“அழகா இருக்கு யஷு மாமா” என்றாள்.

“ம்ம்.. எதாவது ஒன்னு வரலைனா உடனே அது தெரிஞ்சவங்களை புடிச்சு வச்சுகிட்டு யூஸ் பண்ண கூடாது. எல்லா நேரமும் அவங்க நமக்கு உதவிகிட்டே இருக்க மாட்டாங்க சரியா? எதுவும் தெரியலைனா அதை முதல்ல கத்துக்க பாரு” என்று கூற,

 “ஓகே மாமா” என்றாள்.

அவளது வளையல் கப்போர்டை திறத்து அவள் புடவைக்கு ஏற்றார் போல் வளையல் எடுக்க எத்தனித்தவன் அவள் அதை அலங்கோலப்படுத்தியிருப்பது கண்டு மேலும் சினம் பெற்றவனாய் ஆனான்.

“என்ன பண்ணி வச்சிருக்க அஞ்சனா? இப்படி கலைச்சு வச்சிருக்க?” என்று யஷ்வந்த் வினவ,

 “அய்யயோ..” என்றவள் “அ..அது மாமா.. நேத்து எடுக்கும்போது கலைஞ்சுடுச்சு” என்று திக்கினாள்.

“ஒழுங்கா இப்பவே இதை அடுக்கி வை” என்று கூறியவன் தன் உடைகளை எடுத்து அணிய, 

“ஈவினிங் பண்ணவா மாமா?” என்றாள். கடிகாரத்தைப் பார்த்து. 

“இன்னும் நிறையவே நேரம் இருக்கு. இதை இப்பவே கிளியர் பண்ணு” என்று கூறிய அந்த மிஸ்டர்.பெர்பெக்டிடம் இருந்து தப்ப முடியாது அவள் இடிந்த முகத்துடன் அவற்றை சரிசெய்து முடித்துவிட்டு அவனிடம் வந்தாள்.

ஆடவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளை நோக்க “முடிச்சுட்டேன் மாமா” என்றாள். “ம்ம் குட்” என்று அவன் திரும்ப,

 “மாமா..” என்று அழைத்தாள். திரும்பி அவளை ஏறிட்டவன் தன் புருவத் தூக்கலில் கேள்வியாய் நோக்க, “சா.. சாரி” என்றாள்.

அந்த ஒற்றை வார்த்தையைக் கூறுவதற்குள் அவள் தொண்டைக்குழி ஏறி இறங்கி, கண்கள் கலங்கிவிட, முதன் முறை தான் சரியான விடயத்திற்கு கோபம் கொண்டதில் சற்றே வருத்தம் கொண்டான், யஷ்வந்த்.

“நான் இனிமே எல்லாம் ஒழுங்கா வச்சுக்குறேன். சாரி” என்று அவள் கரகரத்தக் குரலில் கூற, வன்மையான தன் கரம் கொண்டு மென்மையாய் அவள் தலை கோதியவன்,

 “ஓகே டா. இன்னும் நீ நிறையா விஷயம் கத்துக்கனும் அஞ்சனா. வாழ்க்கை நீ நினைக்குற போல ரொம்ப சிம்பில் இல்லை” என்றான்.

என்ன புரிந்ததோ ‘’ம்ம்’ என்று தலையாட்டிவிட்டு அவள் நகர, அவள் கரம் பற்றி நிறுத்தியவன், “ஒரு முத்தம் குடுத்துட்டு போ” என்றான். 

எப்போதும் கேட்பது தானே! அவளுக்கு சாதாரணமாய் உணரும் அந்த ஒன்றை எப்போதும் போல் செய்துவிட்டு இதழ் விரித்து சிரித்துக் கொண்டு சென்றாள்.

மேலும் அணிகலன் பூட்டி தனது நீண்ட கூந்தலைப் பின்னலிட்டு அவள் வர, இருவருமாய் கீழே வந்தனர். அவளிடம் புன்னகையுடன் வந்த அக்ஷரா,

 “ஏ அஞ்சு.. அதுக்குள்ள இவ்வளவு அழகா கட்ட கத்துகிட்டியே” என்று கூற, 

எங்கே ‘மாமாதான் சொல்லிக் கொடுத்தாங்க’ என்று உலறி வைப்பாளோ என்று ஒருநொடி ஆனானப்பட்ட யஷ்வந்தே அதிர்ந்து தான் போனான்.

ஆனால் ஏதும் கூறாது புன்னகையான நன்றியுடன் அவள் வந்துவிட, அவன் பிடித்து வைத்த மூச்சை மெல்ல வெளியேற்றினான். யதுநந்தன், யாழினி மற்றும் அஞ்சனாவின் கலகலப்பான பேச்சோடு உணவு வேளை முடிய, அர்ஜுன் உள்ளே நுழைந்தான்.

சமையலறை விட்டு வெளியே வந்தவள் அர்ஜுனைப் பார்த்ததும் “ஏ அஜு..” என்று உற்சாகமாய் அவனிடம் வர, உடன்பிறந்தவளை அணைத்துக் கொண்டு

 “குட் மார்னிங் அஞ்சுமா.. எப்படி இருக்க?” என்று வினவினான்.

“என்னமோ உங்க தங்கச்சிய காட்டுல விட்டுட்டு போன மாதிரி விசாரிப்பெல்லாம் பலமா இருக்கு” என்று யாழினி கேலி செய்ய,

 “ரெண்டு நாள் மேடம் பிஸி க்கா. பேசவே இல்லை” என்று கூறிய அர்ஜுன் ‘என் தங்கச்சிய உங்க சிரிக்கத் தெரியாத அண்ணன்‌கிட்ட விடுறதும் காட்டுல விடுறதும் ஒன்னு தான்' என்று நினைத்துக் கொண்டான்.

அதே எண்ணத்தோடு அவன் யஷ்வந்தை நோக்க, எப்போதும் போல் தனது இறுக்கமான முகத்துடன் அலைபேசியில் வினோத்துடன் பேசிக் கொண்டிருந்த யஷ்வந்த் தற்செயலாய் அர்ஜுனைத் திரும்பிப் பார்த்தான்.

அவன் பார்த்ததற்காக அர்ஜுன் வழுக்கட்டாயமாய் புன்னகைக்க, சிறு தலையசைப்புடன் யஷ்வந்த் மீண்டும் திரும்பிக் கொண்டான். அதில் முகம் கோணி தன் தங்கையைப் பார்த்தவன், முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் யாழினியிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு ‘சிரிப்பு மட்டுமே பூசிய என் அஞ்சுக்கு சிரிக்க தெரியாத மிஸ்டர்.பீஸ்ட். ச்ச ஏன்தான் இந்த அம்மா இப்படி பண்ணாங்களோ?' என்று மனதோடு ஆதங்கப்பட்டுக் கொண்டான்.

அஞ்சனா யாழினியிடம் கூறிவிட்டு தான் கல்லூரிக்கு புறப்பட்டதை யமுனாவிடம் கூற, “யஷ்வாட்ட சொல்லிட்டு கிளம்புடா” என்றார். சரியென்று வந்தவள் யஷ்வந்திடம் வந்து, 

“மாமா பை. அஜு கூட காலேஜ் போறேன்” என்று கூற, அர்ஜுனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவன் 

“பார்த்து போயிட்டுவா” என்றுவிட்டு வேலைக்குச் செல்ல,

 “இத்தன நாளா நாங்க தான கூட்டிட்டு போறோம். எங்களுக்கு பார்த்து கூட்டிட்டுப் போகத் தெரியாது?” என்று அர்ஜுன் முனுமுனுத்தது அவனைக் கடந்துச் சென்ற யஷ்வந்த் காதுகளில் தெளிவாகவே விழுந்தது.

அதில் தன் இதழ் மடித்து சிரித்துக் கொண்டவன் செல்ல, இரட்டையர்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றனர்.

“ஹே அஞ்சு பேபி.. வா வா.. பார்த்து எத்தனை நாளாச்சு? கல்யாணம்னு நீ கொஞ்சம் நாள் லீவு போட்டுட்ட. நீ வந்த நேரம் நான் ஊருக்கு போறேன்னு லீவ போட்டுட்டு போயிட்டேன்” என்று படபட பட்டாசை பேசிய மீனா அஞ்சனாவை அணைத்துக் கொள்ள, “ஆமா மீனு” என்று அஞ்சனாவும் அவளை அணைத்துக் கொண்டாள்.

மீனா, அஞ்சனா மற்றும் அர்ஜுன் மூவரும் தான் உற்ற தோழர்கள். இன்னும் சொல்லப்போனால் அஞ்சனா கல்லூரி வந்த பிறகு ஓரளவு பக்குவத்தோடு நடந்துக் கொள்வதே மீனாவின் வழிகாட்டலில் தான் என்றே கூறலாம். அதில் அர்ஜுனுக்கு தான் அத்தனை சந்தோஷம்!

மூவரும் புன்னகையுடன் சேர்ந்து அன்றைய நாளை கடக்க, மாலை நேரம் அஞ்சனாவுடன் வழமையான பழக்கத்தின்படி தன் வீடு வந்தவன் “என்னடா அஞ்சு எப்படி இருக்க?” என்ற அன்னையின் கேள்வியில் தான் தன் செயல் உணர்ந்தான்.

அதிர்ச்சியோடு அர்ஜுனைப் பார்த்து சிரித்த அஞ்சு “அஜு.. நானும் மறந்தே போயிட்டேன்” என்று கூற, 

‘நாசமா போச்சு போ’ என்று எண்ணிக் கொண்டவன் “நானும் அஞ்சு” என்று கூறினான்.

சரியென்று தான் இங்கு வந்த விடயத்தை யஷ்வந்துக்கு குறுஞ்செய்தி அனுப்பியவள் அண்ணா மற்றும் அக்காவின் பிள்ளைகளோடு தன் நேரத்தைக் கழிக்க, சில நிமிடங்களில் யஷ்வந்த்தின் லம்போர்கினி அங்கே வந்தது. 

“அஜு.. மாமா கார் சௌண்ட் போல இருக்கு” என்றபடி அஞ்சனா வெளியே ஓட, 

“அவராவே இருந்தாலும் உள்ள வரமாட்டாரா? எதுக்கு இந்த ஓட்டம்?” என்று மால்யதாவிடம் பொங்கினான். அதில் பக்கென சிரித்துவிட்ட மால்யதா “சாரிடா அஜு.. சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியலை” என்று கூற, முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டவனும் அண்ணியைப் பார்த்து சிரித்துவிட்டான்.

வெளியே “யஷு மாமா நீங்க எங்க இங்க?” என்று அஞ்சனா ஆச்சரியமாய் வினவ,

 “ஏன் நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா?” என்று கேட்டான். 

“அப்படிலாம் இல்ல மாமா” என்று அவள் தயங்க, சன்னமான புன்னகையைக் கொடுத்துவிட்டு அவளுடன் உள்ளே சென்றான்.

மால்யதாவும் அமுதாவும் அவனை வரவேற்று உபசரிக்க, ஏனோ அவர்கள் உபசரிப்போடு ஒன்ற இயலாததைப் போல் உணர்ந்தான். ஆனால் அவையெதையும் தன் முகத்தில் காட்டாது சில நிமிடங்களில் தன்னவளுடன் புறப்பட்டவன் தங்கள் வீட்டிற்கு வந்துவிட, அறைக்குள் நுழைந்தவளோ, 

“மாமா எல்லாருமே நான் ரொம்ப அழகா கட்டியிருக்கேன்னு சொன்னாங்க மாமா” என்று பூரிப்போடு கூறினாள்.

புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்ட குழந்தை அதற்கு பாராட்டுப் பெற்று மகிழும் குதூகலம் அவளின் கண்களில் தெரிய அதைக் கண்டு புன்னகைத்தவன் 

“இனிமேல் எதும் தெரியலைனா கத்துப்ப தானே?” என்று கேட்டான்.

“கண்டிப்பா மாமா” என்றவள் சென்று புத்துணர்ச்சி பெற்று வர, தனது கோப்புகள் சிலவற்றை எடுத்து கட்டிலில் வைத்தவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

அவன் பின்னே வந்து நின்றவள் அவனுக்கு உதவலாமா என்ற முயற்சியுடன் அழைக்கவர, சட்டெனத் தான் தேடுவது எங்குள்ளது என்று நினைவு பெற்றவனாய் திரும்பியவன் அவளை எதிர்ப்பார்க்காது மோதி, கட்டிலில் விழ, அவன் மோதியதில் தடுமாறி தானும் அவன் மீதே விழுந்தவள் இதழ் அவனிதழுடன் மோதிக் கொண்டது!

எதிர்பாராத இதழ் முத்தத்தில் தடுமாறிய இருவர் உள்ளமும் அவர்களை நிலை குழைய வைக்க, தெரியாமல் தீண்டிய இதழ் கொடுத்த சுகத்தில் விரும்பியே தீண்டிட எழுந்த ஊக்கத்துடன் பூட்டிக் கொண்டான் அவளிதழை!

அதில் தன் விழிகள் அகல விரித்து உறைந்து போனவள் அவன் சட்டையை இறுக பற்றிக் கொள்ள, முதன் முறை ஒரு பெண்மீது, தன்னவள் என்ற உரிமைக்குள் வசிக்கும் பெண்ணானவள் மீது துளிர்த்த துளியளவு நேசத்தில் இதழ் தீண்டி திண்டாடி நின்றான்!

மூளை திடீரென உணர்த்திய தன் செயலில் அவனின் ஒருமனம் நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருக்கும் என்றாலும் சட்டென தன் செயலை நிறுத்தினான்.

கண்களை இறுக மூடிக் கொண்ட, சிவந்த முகம் துடிக்க, அவன் சட்டைக் காலரை இறுக பற்றிக் கொண்டு நடுங்குபவள் அவன் அழைப்பதற்கு ஏற்றார்போல் கோழிக்குஞ்சைப் போலத்தான் இருந்தாள்.

அதில் தன் செயலில் வருத்தம் கொண்டவனுக்கு மனதில் முனுக்கென்று ஏதோ குத்திய உணர்வு எழ, மெல்ல அவளை அணைவாய் பிடித்தபடி எழுந்தான்.

அவ்வசைவில் திடுக்கிட்டு கண் திறந்தவள் நகர்ந்து அமர, அவள் கண்களின் மருட்சி அவனை மீண்டும் அவ்வலியை உணர வைத்தது.

 'இது என்ன மாதிரியான உணர்வு?’ என்று புரியாமல் தனக்குளாகவே திகைத்தவன் “அஞ்சனா” என்று அழைக்க, தரைநோக்கி தன் பார்வையை வெறித்திருந்தவள் திடுக்கிட்டு அவனை நோக்கினாள்.

ஏதோ சொல்லத் துடித்து அவள் தொண்டைக் குழி ஏறி இறங்குவதைக் கண்டவன் “என்னடா?” என்க, ‘ஒன்னுமில்லை’ என்று தலையசைத்தவள் எழுந்து விறுவிறுவென வெளியேறினாள்.

அன்றைய உணவு பொழுதிலும் ஒன்ற முடியாது அவள் அமைதியோடு உணவை கொறித்துவிட்டு மாமியாரின் கேள்விகளுக்கு தலைவலிப்பதாய் கூறிவிட்டு அவள் அறைக்குள் நுழைந்திட, சில நிமிடங்களில் தானும் வந்தவன் அவள் அருகே அமர்ந்தான்.

ஃசோபாவில் தலையை முழங்காலாகளுக்குள் புதைத்து அமர்ந்திருந்தவள் மெல்ல நிமிர, கலங்கியிருந்த அவள் கண்கள் அவனை பதட்டத்திற்குள்ளாக்கின. “அஞ்சனா.. என்னாச்சு?” என்று அவன் பதட்டத்தை மறைத்த குரலில் வினவ,

“மா..மாமா.. சாரி மாமா” என்றவள் அதற்கு மேலும் அடக்க இயலாது கேவி அழுதாள்.

அவள் அழுகையில் திகைத்துப் போனவன் அவள் முகம் பற்றி, “அஞ்சுமா.. சனா.. எதுக்குடி இந்த அழுகை?” என்று வினவ
 “நா..நான்.. இ.. இது தப்பு மாமா. சாரி” என்றாள்.

முழுதாக கூறாமல் அவள் மென்று விழுங்கும் சொற்கள் கொடுத்த எரிச்சலில் “அஞ்சனா.. என்னனு தெளிவா சொல்லு” என்று அவன் கண்டிப்பாய் வினவ, 

“மு..முத்தம் தப்பு மாமா” என்று அவன் தலையில் பெரிய இடியை இறக்கினாள், அந்த வளர்ந்த குழந்தை.


Leave a comment


Comments


Related Post