இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 06 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 21-03-2024

Total Views: 21743

காதலொன்று கண்டேன்!

தேடல்  06

அவனுக்காக..


ஏனோ அவனுக்கு அவள் அருகில் அமர மனம் வரவில்லை.

முன்பென்றால் பேரூந்தில் போகப் பழகியிருந்தவன் தான்.நோய் வந்ததில் இருந்து தன் அருகே ஆட்கள் அமரத் தயங்குவது புரிய தந்தையோ காசு இல்லாத போதும் அவனை முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்வதே பழக்கமாகி இருந்தது.

பணியில் சேர்ந்து ஒரு நிலைக்கு வரும் வரை தோழனுடன் அவனின் வண்டியில் பெரும்பாலும் பயணித்துப் பழகியவனோ சிறுக சிறுக சேமித்து தனக்கென ஒரு காரை வாங்கிய பின் அதில் மட்டும் தான் பயணிப்பதே.

இன்று வண்டி பழுதாகி இருக்க தோழனும் ஊரில் இல்லாது இருக்கவே முச்சக்கர வண்டி நிறுத்தும் இடத்துக்கு வந்தான்.

வழமையாய் செல்லும் முச்சக்கர வண்டி உட்பட வேறெந்த வண்டியும் இல்லாது போகவே பேரூந்திற்காக காத்திருந்ததே.

நிறுத்தத்தில் சந்தித்த நபர்களின் நடவடிக்கையே அவனை மீண்டும் தன் கூட்டுக்குள் தள்ளியிருக்க அவளருகில் அமர தயக்கம்.

காயப்பட்டு விட மாட்டான்.பழகிப் போன விடயம் தான்.நீண்ட நாட்களுக்கு பின் காயங்களை சந்திக்க பயப்படுகிறானோ என்னவோ..? அவன் மன எண்ணத்தை அவன் வாய் திறந்து மொழிந்தால் தான் உண்டு.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் சில மனித மனங்களும் அதில் ஒளிந்திருக்கும் குணங்களும் அதற்கு விதி விலக்கில்லை.

நடத்துனரின் தொல்லை தாளாது அவளருகே வந்தமர அவளின் பார்வை அவனைத் தான் தழுவியது.

ஏனோ அந்த விழிகளில் கொஞ்சம் வலி படர யன்னல் புறம் பார்வையைத் திருப்பிக் கொண்டவளின் மனம் அவனுக்காக அந்த நொடி கடவுளிடம் வேண்டுதலையும் வைத்திருந்தது.

தயக்கத்துடன் நெளிந்தவாறு இருந்தவனை சோதிக்கவே பேரூந்தும் திருப்பத்தில் திரும்ப அவள் புறம் சாய்ந்தவனின் நெற்றி அவளின் தோளில்  இடித்த வேகத்தில் நெற்றியோரம் இருந்த கொப்புளம் உடைந்து குருதி கசிய அது அவளின் தோற்பட்டையிலும் ஒட்டிக் கொண்டிருந்தது.

"சாரி..சாரி.." பட்டென தன்னை சுதாரித்து நிமிர்ந்தவனின் பார்வையில் இருந்த வலி அவளுக்குள் மொத்தமாய் இறங்கியதோ என்னவோ..?
அந்த பார்வை அவளுள் ஊடுருவி உயிர் குத்தியது.

"சாரி..தெரியாம.." என்றவனின் விழிகளில் இருந்த பரிதவிப்பு காணாமல் போய் வெற்றுப் பாவம் படர்ந்திருக்க நொடி நேர மாற்றத்தில் வியக்கத்தான் செய்தாள்,அவளும்.

"அட பரவால.." என்ற படி சிநேக பாவத்துடன் சிறு புன்னகையை தந்தவளுக்கு பதிலாய் புன்னகைக்க கூட அவனிதழ்கள் விரியவில்லை.அதே உணர்வின்றிய பாவம்.அவளுக்குத் தான் முகமே வாடி விட்டது.

அவனிடம் சிறு புன்னகையையேனும் அவள் மனம் எதிர்பார்த்திருக்க முரணாய் அல்லவா இருந்தது,அவனின் செயல்.

ஏன் அவனிடம் தான் புன்னகையை எதிர்ப்பார்க்க வேண்டும் என்கின்ற எண்ணம் கிளர்ந்தெழ தோளைக் குலுக்கிக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு அவனின் புன்னகைக்காக அவன் கேட்காமலே அவள் போராடத் தான் போகிறாள் என்பது தெரியாதே.

தொலைந்து போன அவனின் புன்னகையை புதுப்பிக்கத் தான் புதிதாய் அவள் வாழ்வியலில் சில மாற்றங்கள் அரங்கேறப் போவது தெரிந்திருந்தால் இன்னும் தன்னை தயார் படுத்திக் கொண்டிருப்பாளோ என்னவோ..?

நெற்றியில் குருதி வழிய துடைப்பதற்கு கர்சீப்பை தேடிக் கொண்டிருந்தவனைப் பார்க்க அவள் மனம் கேட்கவில்ல.தன் பையில் இருந்த டிஷுவை எடுத்து நீட்ட கர்சீப்பை கண்டெடுத்து முகத்தை வெட்டிக் கொண்டு திரும்பியவனின் செயலைக் கண்டவளுக்கு இதழ்கள் முறுவலித்தன.

அவன் முகத்தில் மின்னிய கோபம் புரிந்திட உதடு பிதுக்கிய படி மறுபுறம் திரும்பிக் கொண்டவளுக்கு அவனின் செய்கை தனக்கு வலிக்கவில்லை என்பது புரிந்திருக்கவில்லை,சற்றும்.

அது தான் அவள் காதலுக்கான அடித்தளமாய் இருந்திருக்கும்.

இருக்கை கம்பியில் விரல்களால் தட்டி தனக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டு வந்தவளின் மேல் அவனின் கவனம் பதியாது போக எப்போது இறங்குவோம் என்பது தான் அவனின் முற்றான மன எண்ணமாய் இருந்தது.

ஒவ்வொருவரின் பார்வை ஒவ்வொரு விதமாய் அவனில் படிய பையனுக்கு கோபம் வர விழிகள் செந்தணலென சிவந்து போயிற்று.

இருக்கை கம்பியை இறுகப் பற்றியிருந்தவனின் கரங்களோ இன்னுமே இறுக்க பற்களை கடித்தவனுக்கு தானும் ஒரு மனிதன் தான் என்று கத்த வேண்டும் போல் இருக்கவே வேகவேகமாய் மூச்சு வாங்கியது.

மனம் பாரா மனிதங்களின் பார்வைகளும் வார்த்தைகளும் காலத்தால் மாறா வலிகளையும் எளிதில் ஆறா காயங்களையும் அவனுக்குள் தந்து விட இன்னும் இறுகிப் போனவனுக்கு தன் மீதே ஒரு விதமான கோபம்.

பேரூந்து நிறுத்தத்தில் கண்டு கொள்ளாமல் இருந்தவனால் ஏனோ இந்த சமயம் முடியவில்லை.ஏறும் போது தவறுதலாய் அவன் பார்வையில் விழுந்த பெண்ணால் அத்தனை நேரம் கடைபிடித்து வந்த நிதானம் கொஞ்சமாய் காணாமல் போயிருந்தது,என்னவோ உண்மை தான்.

அவளின் பார்வை அவனின் கரத்தின் மீது தான் படிந்திருந்தது.சிவந்த தோலில் சில இடங்களில் கொப்புளங்கள் இருக்க அவை தவிர்ந்த மற்றைய இடங்களில் தழும்புகள் போல் கடும் கபில நிறத்தில் திட்டுக்கள் நிறைந்திருக்க அவனின் தோலின் நிறம் வெளியே தெரியவில்லை.

முகத்திலும் கழுத்திலும் கூட அப்படித் தான்.முகத்தில் கொஞ்சம் அதிகமாகவே கொப்புளங்கள் நிறைந்திருக்க அது அவனுக்கு சற்று வித்தியாசமான தோற்றத்தை தந்திருந்தாலும் அவளின் பார்வை அவன் மீது இயல்பாய் படிந்ததை அறியவில்லை,பையனவன்.

மெது மெதுவாக ஊர்ந்து சென்றது பேரூந்து.பையனின் முகத்தில் அப்பட்டமான எரிச்சல் பரவியிருக்க அடிக்கடி வியர்வை துடைத்துக் கொண்டிருந்தவனை ஓரப் பார்வையால் தழுவிக்கொண்டிருந்தாள்,அவள்.

பாவமா..?
பரிதாபமா..?
இல்லை இயல்பான மனிதாபிமானமா..?
தானாய் இருக்கும் மென்மையா..?
ஒட்டியிருக்கும் அன்பின் தன்மையா..?
சட்டென ஊற்றெடுத்த தாய்மையா..?
ஏதோ ஒன்று அவனின் புறம் அவளின் பார்வையை திருப்பி விட்டிருந்தது மறுப்பதற்கல்ல.

இத்தனைக்கும் பையன் ஏதும் செய்யவில்லை.அவன் பாட்டில் அவனின் சிந்தனையில் லயித்து இருந்தான்.

முதன் முதலாய் அவளின் பார்வை அந்நியனின் ஒருவனின் மீது  துளியாய் துளிர்த்த ஆர்வத்துடன்  படிந்தது.

காரணம் என்னவோ..?

பேரூந்து நிறுத்தத்தில் நிற்க அவளிறங்குவதற்கு விழி விட்டவனை கண்டு இளமுறுவல் சிந்தியவள் இறங்க பேரூந்தும் கிளம்பிச்சென்றது.

அந்த நிறுத்தத்தில் இருந்து பத்து நிமிட நடைத் தூரத்தில் அவளின் அலுவலகம் என்று நினைப்பிருக்க நடந்தவளுக்கு அலுவலகம் மட்டும் கண்ணில் படவேயில்லை.

சுற்றித் தேடி பார்த்தவளுக்கு காலும் வலிக்க தாள மாட்டாமல் தோழிக்கு அழைப்பெடுத்தவளின் விழிகள் இன்னும் சுழன்று கொண்டிருந்தன,இல்லாத அலுவலக கட்டடத்தை தேடி.

ஓரிரு நிமிடம் காக்க வைத்து விட்டு அழைப்பை ஏற்ற தோழிக்கு வசை மாரி பொழிந்து விட்டு தன் நிலையை சொல்ல அவள் சொன்ன செய்தியில் ஐயோவென்றானது.

"நீ எறங்க வேண்டிய ஸ்டாப்கு முன்ன இருக்குறதுல எறங்கி இருக்க..சீக்கிரமா ஆட்டோ ஏதாச்சும் புடிச்சி வா.."

"ம்ம்.." என்பதோடு அழைப்ப துண்டித்து விட்டவளின் நேரத்துக்கு வந்தது,முச்சக்கர வண்டியொன்று.

அலுவலக வாயிலில் இறங்கியவளின் விழிகள் பிரமிப்பில் விரிந்தன,அந்த கட்டடத்தின் அளவை பார்த்து.

நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தாலும் பதட்டத்தில் இருந்த படியால் இவற்றை எல்லாம் கவனிக்க நேரமிருக்கவில்லை.

"யெம்மா உள்ள போமா..கேட்ட சாத்தனும்ல.." நுழைவாயிலில் நின்றிருந்த காவலாளியின் கத்தல் அவளின் செவிகளில் ஏறவில்லை.

"அம்மாடி.."

"சாரி..சாரி தாத்தா.." என்ற படி அந்த வயதான தாத்தாவை பார்த்த படி அவரின் பார்வை இவளை சுட்டெரித்தது.

"என்ன பாத்தா தாத்தா மாதிரியா இருக்கு.."

"அட தாத்தா..இப்ப எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க..உங்கள தாத்தான்னு கூப்டாம எப்டி கூப்டனும் சொல்லுங்க..கூப்புர்ரேன்.."

"ஒன்னும் தேவல..லேட்டா வந்துட்டு இவ்ளோ நேரம் நிக்கற..இதுல தாத்தான்னு வேற கூப்புர்ர.."

"சரி சரி சாரி..சாரி..இனிமே நா உங்கள தாத்தான்னு கூப்டல..அங்கிள்னு கூப்புர்ரேன்..இல்லன்னா அண்ணான்னு கூப்டவா..?"

"அட கலாய்க்கிறியா..?" என்றவருக்கு புன்னகையுடன் பேசியவளை பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று.

"இல்ல இல்ல நெஜமா சொல்லுங்க.."

"அம்மா தாயி லேட் ஆகுது ஆபிஸ் உள்ள போ..அப்றம் பேசலாம்.."

"அப்போ நீங்க நெஜமாவே கோபம் இல்லயா..?"

"இல்ல தாயி.." என்றவருக்கு அவளின் முகபாவனையில் சிரிப்பு வந்து விட யாரோ அலுவலக கட்டடத்தில் இருந்து டிப்டாப்பாய் வெளியே வருவது புரிய விடுவிடுவென நடந்து சென்றாள்,இயல்பாய் காட்டிக் கொண்டு.

                ●●●●●●●●

"ஓகே காய்ஸ்..இவ்ளோ நேரம் கம்பனி ரூல்ஸ் அன்ட் ரெகியுலேஷன்ஸ் பத்தி சொன்னது புரிஞ்சி இருக்கும்னு நம்பறேன்..நீங்க எல்லாம் ப்ரெஷர்ஸ்..ஸோ உங்கள நாங்க டீமா டிவைட் பண்ணி எங்க ஆபிஸ்ல இருக்குற நல்லா பர்பார்ம் பண்ற எம்பாளைஸ் கீழ வர்க் பண்ண வக்கப் போறோம்..ஆர் யூ எக்ரீ வித் இட்.."

"யெஸ் சார்.."

"ஓகே..இப்ப எங்க கம்பனி எம்ப்ளாய் மிஸ்டர்.திரு நீங்க யாரோட டீம்னு இன்பார்ம் பண்ணுவாரு..ஸோ யூ ஆல் கென் லீவ் நவ்.."

"தேங்க்யூ சார்.." என்று விட்டு புதிதாய் சேர்ந்திருந்த பத்து பேரும் வெளியே வர அவர்களை புன்னகை முகத்துடன் வரவேற்ற அங்கிருந்த சிறு அறைக்கு அழைத்துச் சென்றான்.

அறை என்ற அமைப்பை கொண்டு வர வேண்டும் என்பதற்காக வெறும் பலகைத் தடுப்புக்களால் சூழப்பட்டிருக்க உள் நுழைவதற்கு மட்டும் சிறு கதவொன்று.

அவனுடன் இன்னும் இருவரும் வந்திருக்க அவர்களின் முகத்தில் மெல்லிய நட்பான புன்னகையொன்று ஓடிக் கொண்டிருந்தது.

"ஓகே..ஆர் யூ ரெடி.."

"யெஸ் சார்.."

"ஓகே..மிஸ்டர்.ப்ரித்வி,ரவி அன்ட் மிஸ்.புவனா நீங்க மிஸஸ் ராகவியோட டீம்.."

"நெக்ஸ்ட் அக்ஷயா,பிருந்தா,சரத் நீங்க மூணு பேரும் மிஸ்டர்.கிஷோரோட டீம்..அவங்க ரெண்டு பேரும் இங்க இருக்காங்க.."

"நெக்ஸ்ட் மிஸ்.ருத்ரா,சவிதா அன்ட் கர்ணன் நீங்க மூணு பேரும் மிஸ்டர்.கார்த்திக்கோட டீம்..ஓகோ டன் அப்போ நா கெளம்புறேன்..இப்ப நீங்க உங்க லீடர்ஸ் கூட ஜாயின் பண்ணிக்கலாம்.."

"சார்ர்ர்ர்.."பதபதைப்பான அவளின் குரலில் புருவம் சுருக்கிப் பார்க்கலானான்,திரு.

"யெஸ்ஸ்ஸ்..சொல்லுங்க மிஸ்ஸ்ஸ்ஸ்.."

"யாழினி..என்னோட பேர சொல்லல சார்.." என்றவளுக்கு தான் இந்த வேலையில் இல்லையோ என்கின்ற பயம் வேறு.

"யாழினீஈஈஈஈ..சாரி சாரி..நா மிஸ் பண்ணிட்டேன்.." என்றவனுக்கு சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்திட அவளை யாரிடம் ஒப்படைப்பது என்கின்ற குழப்பம்.

"வன் மினிட்.." என்றவனின் பார்வை நின்றிருந்த இருவரையும் துழாவ அவர்களின் முகத்தில் எதிர்மறையான பாவனை இல்லை.

"ஓகே யாழினி..உங்களுக்கு மட்டும் ஒரு சாய்ஸ்..நீங்க விரும்புன டீம்கு போலாம்..யாரோட டீம்கு போகப் போறீங்க..?கிஷோரா,கார்த்திக்கா,ராகவியா..?" புன்னகையுடன் கேட்டான்,திரு.

"நமக்கு எப்பவும் ரெண்டாம் நம்பர் தான் லக்கீஈஈஈஈ..அத சொல்லிர்லாம்.."என்ற மனசாட்சியின் குறுக்கு புத்திக்கு அந்த நிமிடம் அவள் மொத்தமாக கட்டுப்பட்டது தான் விதியின் பாதையோ..?

எதார்த்தமாய் சொன்ன அவனின் பெயரே அவளின் எதிர்காலமாய் மாறப் போவது பற்றி அவளிடம் யார் எத்தி வைப்பது..?

வார்த்தை ஒன்றில் வாழ்க்கை தங்குவதற்கு அவள் தான் தகுந்த உதாரணம்,போலும்.

"ரெண்டாவது சார்..கார்த்திக்.." என்க திருவின் புருவங்கள் உயர்ந்து மீள முகத்தில் மெல்லிய அதிர்வலைகள் பரவின.

"ம்ம்..நீங்க கார்த்திக்கோட டீம்.." என்க அவளின் முகத்தில் தன்னாலே ஒரு புன்னகை பூக்க அதைக் கண்ட ராகவியும் கிஷோரும் தான் அவளை பாவமாய் பார்த்து வைத்தனர்.

கார்த்திக்குடன் இத்தனை நாள் பணி புரிபவர்கள் ஆயிற்றே.

அழுத்தமாய் சில காலடிச்சத்தங்கள்.அந்த ஓசையே அமைதியாய் இருக்கச் சொல்வது போல் இருக்க சடுதியாய் ஒரு அமைதி அவர்கள் நின்றிருந்த இடத்தில்.

யாழினிக்குத் தான் ஆர்வம் தாளவில்லை.
தடுப்பு மறைத்திருக்க அதற்கு மேலாய் கால்களால் எம்பி எட்டிப் பார்த்தவளுக்கு பையனின் சிகை மட்டும் தான் கண்ணில் பட அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருந்ததை கண்டு அவள் விழிகளில் சிறு மினுமினுப்பு.

சுற்றி நின்ற மற்றவர்களுக்கு அவளின் செயலில் சிரிப்பு வர சவிதாவின் விரல்கள் அவளின் கரத்தைப் பற்றவுமே இருக்குமிடம் புரிய நெற்றியில் அறைந்தவாறு தலை குனிந்து நின்றவளை வித்தியாசமாய் தான் பார்த்தனர்,இருந்த மொத்தப் பேரும்.

அதிலும் கிஷோரின் விழிகள் அவளின் பார்வையில் இருந்த ஆர்வத்தையும் விழிகளில் வந்து போன மினுமினுப்பையும் தெளிவாகவே படம் பிடித்துக் கொண்டன.

ஷர்ட்டின் ஸ்லீவை பையன் முழுதாய் இழுத்து விட்டு பட்டன் இட்டிருக்க அது மணிக்கட்டை இறுகப் பற்றியிருந்தது.

கையில் ஒரு கறுப்பு நிறக் கைக்கடிகாரம் பாந்தமாய் பொருந்தியிருக்க அந்த விழிகளில் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தது போல் வெற்றுப் பாவம்.

"எக்ஸ்க்யூஸ் மீ.." என்ற கணீர்க்குரலில் ஒரு கணம் யாழினி வியப்படைந்து கவரப்பட்டது உண்மை.

"யார்ரா இது..?" அவள் விரிந்த விழிகளுடன் திரும்ப கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஐடி கார்டை விரல்களால் அங்குமிங்கும் அசைத்தவாறு உள்ளே வந்தான்,கார்த்திக்.

அவளின் விழிகள் பையனில் நிலைக்குத்தி நிற்க இமைகள் இமைக்க மறந்தன.

தேடல் நீளும்.

2024.03.21


Leave a comment


Comments


Related Post