இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 22-03-2024

Total Views: 38045

நேரம் இரவு பன்னிரெண்டை கடந்திருந்தது. தரணிக்கு விடாமல் அழைத்துப் பார்த்து ஓய்ந்து போனான் முகிலன். இது போன்ற புறக்கணிப்பு என்றுமே அவனிடம் இருந்ததில்லை. மனதளவில் நிறைய காயப்பட்டு இருக்கிறான்… கோபத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்று தெரிந்தது. தனது அறை வாசலில் சுவற்றில் சாய்ந்தபடி பூச்செண்டும் சோபாவில் தலைசாய்த்த நிலையில் முகிலனும் பேச்சுக்கள் எதுவும் இன்றி அமைதியாக அமர்ந்திருந்தனர். இடையில் உருக்குலைந்து கிடந்த வீட்டை சுத்தம் செய்திருந்தாள் பூச்செண்டு.


“அதென்ன… உன் பிரண்டுக்கு அப்படி ஒரு கோபம்…? ரொம்ப நல்லவன் நல்லவன்னு வாய்க்கு வாய் சொல்ற… நல்லவன் பண்ற வேலை இப்படியா இருக்கும்…” அமைதியை கிழித்து வாயை திறந்தவளை நெருப்புப் பார்வையால் எரித்தான் முகிலன்.


“இதுதான்… இந்த வாய்தான் இத்தனை பெரிய பிரச்சனையை இழுத்து வெச்சிருக்கு. நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் அவன் நல்லவன்தான்  அவன் என் பிரண்டுதான்‌‌… ஆனா இப்போ உன் புருஷன்… நீ அவன்கிட்ட நடந்துக்கிட்ட முறை சரியா…? அவன் பேச்சுல எத்தனை வேதனை தெரிஞ்சது பார்த்தேல்ல…” கோபமாய் சத்தமிட எதுவும் பேசாமல் அவனை முறைத்தபடி அமர்ந்திருந்தாள் பூச்செண்டு.


“கல்யாணத்துக்கு முன்னால கண்ணியம் தவறிப் போனவன் நான்தான்… ஆனா அவன் கல்யாணம் பண்ணியும் இந்த நிமிஷம் வரைக்கும் உன் சுண்டு விரலையாவது தொட்டிருப்பானா… தப்பா ஒரு பார்வை பார்த்திருப்பானா… மனச தொட்டுச் சொல்லு…”


“..............”


“தப்புன்னு பார்த்தா என்மேலதான் எல்லா தப்பும் இருக்கு… அவன் எல்லா தப்பையும் சரி பண்ணினான்… அது புரியலையா…? உன் விருப்பம் இல்லாம உன் கழுத்துல தாலி கட்டிட்டான்னு கோபம் மட்டும்தான் உன் மனசுபூரா நிறைஞ்சிருக்கு. அன்னைக்கு அந்த சூழ்நிலையில நீ கோபமா இருந்த சரி… இன்னைக்கு பத்து நாள் ஆகப்போகுது… இப்போ கூட ஆற அமர அவன் எதனால அப்படி பண்ணினான்னு யோசிக்க மாட்டியா… அவன் அப்படி பண்ணலைனா இன்னைக்கு நம்ம குடும்பம் மொத்தமும் தற்கொலை பண்ணி செத்திருக்கும்… நான் உட்பட…” அழுத்தமாய் கூறியவன் தன் தலையை அழுந்த கோதினான்.


“அவன் வீட்டுக்கு ஒரே பையன்… அவன் கல்யாணத்துல அவனை பெத்தவங்களுக்கு எத்தனை ஆசை இருந்திருக்கும்… நடந்த அத்தனையும் போன் பண்ணி சொன்னான்.‌. அவன் மேல சின்னதாகூட அவங்க கோபப்படல தெரியுமா… ஏன்னா அவங்க பையன் எது செஞ்சாலும் அது சரியா இருக்கும்னு நம்பிக்கை… எத்தனை பெத்தவங்க இங்கே இப்படி இருக்காங்க… இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்…”


குத்துக்காலிட்டு அமர்ந்து தன் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை இரு கைகளாலும் திருகியபடியே முகிலன் பேசிக் கொண்டிருப்பதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


“சுயமரியாதையை சீண்டிவிட்டுப் பார்த்த எந்த ஆம்பளைக்குத்தான் கோபம் வராது… வார்த்தைக்கு வார்த்தை என்னை எல்லாரும் பொம்மையா மாத்திட்டீங்க… என் உணர்ச்சிகளை மதிக்கலேன்னு இதையேதான் சொல்ற… உனக்கு ஒரு உண்மை தெரியுமா..‌ அவன் முழு மனசோட உன்மேல முழு விருப்பத்தோடதான் தாலி கட்டினான்..‌ என் வாழ்க்கையை காப்பாத்துறதுக்காக அவனுக்கு உடன்பாடு இல்லாத விஷயத்தை எப்பவும் செய்ய மாட்டான்… தெரியுமா… அவன் மனசுல நீ முழுசா இருக்க…” சங்கிலியை உருட்டிக் கொண்டிருந்தவள் சட்டென நிறுத்தி பட்டென விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்.


“இந்த நேரத்துக்கு மேல எங்கே போய் என்ன பண்றான்னு தெரியலையே…” புலம்பலுடன் மீண்டும் தரணிக்கு அழைத்துப் பார்த்து அவன் எடுக்காமல் போக எரிச்சலுடன் போனை தூக்கிப் போட்டான்.


“தண்ணி போடறதுக்கு ஏதாவது பார்ல போய் உட்கார்ந்து இருப்பாரோ…” வெகு சிரத்தையாய் அவள் கூற கோபமாய் தன் அருகில் இருந்த மடித் தலையனையை எடுத்து அவள்மேல் எறிந்தான் முகிலன்.


“கொரங்கு கொரங்கு… இதையே அவன் இருக்கும்போது சொல்லு… எதையாவது தூக்கிப் போட்டு உன் மண்டையை உடைப்பான்… நாக்குல சனிடி உனக்கு…” பல்லை கடித்தான்.


“அவரைப் பத்தி எனக்கு என்ன தெரியும்…? பொதுவா வீட்ல சண்டைனா ஆம்பளைங்க அந்த வேலையைத்தானே பண்ணுவாங்க…”


“சினிமாவா பார்த்து ரொம்ப நல்ல நல்ல விஷயங்களா தெரிஞ்சு வச்சிருக்க… தெரிஞ்சுக்க வேண்டியது எதையும் தெரிஞ்சுக்கல… அவனைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ணினியா நீ…” கோபமாய் உறும மீண்டும் அவளிடம் மௌனம்.


“அவன் டீ டோட்டலர்… எந்த கெட்ட பழக்கமும் கிடையாது… அதுக்கே அவனுக்கு நீ கோயில் கட்டி கும்பிடணும் தெரிஞ்சுக்க…”


“அதான் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு வெறி பிடிச்ச மாதிரி கோபம் வருதே… இது ரொம்ப நல்ல பழக்கமோ…” உதட்டை சுழித்தபடி பதில் அளித்தாள்.


“இதுக்கு நீதான் முழுக்க முழுக்க காரணம்… ஆறு வருஷமா அவன்கூட பழகுகிறேன். அவன் எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியும்… இந்த மாதிரி கோபத்தை இதுக்கு முன்னால அவன்கிட்ட நான் பார்த்ததே இல்ல. யார் மேல நிறைய அன்பு வச்சிருக்கோமோ… யார் நம்மை முழுசா புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறோமோ அவங்க நம்ம கேரக்டரை கேவலப்படுத்தி எடுத்தெறிஞ்சு நடந்துக்கும்போதுதான் வெறி பிடிச்ச மாதிரி கோபம் வரும். எல்லார்கிட்டயும் இப்படி நடந்துக்க தோணாது. அவனோட இந்த கோபத்துக்கு கூட உன்மேல உள்ள அன்பும் ஆதங்கமும்தான் காரணம்… நல்லா யோசிச்சு பார்த்தா உனக்கே புரியும்…”


நெடுநேரம் இருவரும் விவாதித்து எப்பொழுது தூங்கிப் போனார்களோ. விடாத கைப்பேசி அலறலில் கண் திறந்தான் முகிலன். எதிரில் அறையை ஒட்டி ஒரு கையை நீட்டி அதில் தலை வைத்தபடி நல்ல உறக்கத்தில் இருந்தாள் பூச்செண்டு. கைப்பேசியின் சத்தத்தில் அவளும் மெல்ல கண்விழித்தாள். இரவு உறங்கும்போது எப்படியும் 2 மணிக்குமேல் இருக்கும் என்று தோன்றியது. கைப்பேசியை கையில் எடுத்தபடியே சுவர் கடிகாரத்தில் நேரம் பார்க்க எட்டு முப்பது என்று காட்டியது. 


ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டு போனை பார்க்க அவன் அம்மாவிடமிருந்து அழைப்பு. ஒருவித பதட்டத்துடன் “கடவுளே… ஏழரை மணிக்கெல்லாம் எல்லாரும் ஸ்டேஷனுக்கு வந்திருப்பாங்களே… இப்படி தூங்கி சொதப்பிட்டேனே…” என்று புலம்பியபடியே அழைப்பை ஏற்றான்.


“அ..அம்மா… நான்…” என்று ஆரம்பிக்கும் முன் “முகிலு… நாங்க எல்லாரும் நல்லபடியா வந்துட்டோம். நாங்க வந்த கொஞ்ச நேரத்திலேயே தரணியோட அப்பா அம்மாவும் வந்துட்டாக… தரணி மட்டும்தான் டேஷனுக்கு வந்திருந்துச்சு… உனக்கு ஏதோ வேலையாம்ல…” உறக்கம் முற்றிலுமாய் கலைந்து போயிருக்க ஆங் என்று குழப்பமாய் விழித்தான் முகிலன்.


“இம்புட்டு பேத்துக்கும் பூச்செண்டு ஒருத்தியால சமைக்க முடியாதுன்டு ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்துருச்சு… எல்லாரும் சாப்பிட்டோம்… உன் அப்பத்தா மட்டும்தேன் இன்னும் மெல்ல உள்ள தள்ளிக்கிட்டு இருக்கு… செத்தவடத்துல எல்லாரும் கெளம்பி வந்துருவோம்…”


“அ..அப்பத்தாவுமா வ..வந்திருக்கு…” ஆச்சரியத்தில் அவன் விழிகள் விரிந்தன.


“ஆமா… அதுக்கு என்ன… சும்மா ஜம்முன்னு எந்திரிச்சு உட்கார்ந்துடுச்சு… பேத்திகளையும் பேரன்களையும் பார்க்க துடிச்சுக்கிட்டுல்ல வந்திருக்கு…” சிரித்தபடி செண்பகம் கூற முகிலனுக்கு மகிழ்ச்சியும் பரவசமுமாய் இருந்தது.


“சரி… வேலையை முடிச்சிட்டு வெரசா வீட்டுக்கு வந்துரு… நாங்க வந்துடறோம்…” செண்பகம் இணைப்பை துண்டித்த பின்பும் சிறிது நேரம் சிலையாய் அமர்ந்திருந்தான் முகிலன்.


எப்பொழுது வீட்டிற்கு வந்தான்…? எப்போது கிளம்பிப் போனான்…? இத்தனை கலவரத்திலும் அவனது செயல்பாடுகளில் பொறுப்பும் நெருக்கமும். நண்பனை நினைத்து கர்வம் எழுந்தது. அதேநேரம் நான் என்ன செய்தேன் என்னை எழுப்பி அழைத்துச் சென்றிருக்கலாமே என்ற சிறு கோபமும் எழுந்தது. உடனடியாக அவனுக்கு அழைத்தான். நோ ரெஸ்பான்ஸ். 


எழுந்து அமர்ந்து உடலை வளைத்து சோம்பல் முறித்து கொட்டாவியை வெளியேற்றியபடி “போன்ல யாரு முனி…? உன் பிரண்டா…? நான் இருக்கிற வரைக்கும் இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டாரா…” சோம்பலாய் கேட்டபடி எழுந்து நிற்க வேகமாய் அவளை நெருங்கி நங்கென தலையில் குட்டினான். ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச தூக்கமும் பறந்து போயிருக்க தலையை தேய்த்தபடி அவனை முறைத்தாள்.


போன் வந்த விபரம் பற்றி அவளிடம் கூறி “ரெண்டு பேரும் வாய பொளந்துக்கிட்டு தூங்கிட்டு இருந்திருக்கோம்… இப்போகூட அவன்தான் பொறுப்பா வேலையை பார்த்திருக்கான். நீ எகத்தாளம் பேசுற… நாங்க எல்லாருமே உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டோம்… இருடி… உன்னை அவனை கிடுக்கிப்பிடி பிடிக்க சொல்றேன்… நேத்து மாதிரியே ஆல்வேஸ் டெரர் ஃபேஸோடவே இருக்கச் சொல்றேன்… அப்போதான் நீ சரிப்படுவ…” திட்டியபடியே வேகமாய் குளிக்க ஓடினான். அவளும் மடமடவென குளித்து உடைமாற்ற சுடிதாரை கையில் எடுத்தவள் பின் ஏதோ நினைத்தவளாய் புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள்.


“ஏய் பூச்செண்டு… நான் போய் மீராவை கூட்டிட்டு வந்துடறேன்… நமக்கு மட்டும் ஏதாவது சிம்பிளா சாப்பிட ரெடி பண்ணி வை…” சத்தமாய் சொன்னபடி கைச்சட்டையை முழங்கைவரை மடக்கியபடி அறையில் இருந்து வெளியே வந்தான் முகிலன்.


“ஆமா… என்ன நீ… இப்பல்லாம் என்னை நரிச்சின்னக்கான்னு கூப்பிடுறதே இல்ல… ஆச்சரியமா இருக்கு.. திருந்திட்டியா…?” அறைக் கதவில் சாய்ந்து கைகட்டியபடியே கேட்டாள் பூச்செண்டு.


“கூப்பிடக்கூடாதுன்னு உன் புருஷனோட ஆர்டர்… மீறி கூப்பிட்டா இடுப்பு எலும்பை உடைச்சுடுவானாம்…” உதட்டை வளைத்தபடி கூற அவளது முகத்தில் மின்னலாய் ஒரு மாறுதல் வந்து போனது.


“சரிடி நான் கிளம்புறேன்…” சொன்னபடியே வண்டி சாவியை கையில் எடுக்க மீராவிடமிருந்து அழைப்பு வந்தது.


“இதோ கிளம்பிட்டேன்டா… இன்னும் பத்து நிமிஷத்துல…”


“கிளம்ப வேணாம்னு சொல்லத்தான் போன் பண்ணினேன்…”


“ஏன்…? என்னாச்சு…?” திக்கென அவனுக்குள் ஓர் அதிர்வு.


“நான் கிளம்பி பாதி வழி வந்தாச்சு…”


நிம்மதி அடைந்தவன் “நான் வர்றதுக்குள்ள உனக்கு என்னடி அவசரம்…?” செல்லமாய் கடிந்து கொண்டான்


“தனியா வரல முகி… தரணி அண்ணா கூடதான் வந்துட்டு இருக்கேன்…”


“என்ன…?” குழப்பமானான்.


“நம்ம பேமிலி மெம்பர்ஸ் எல்லாரையும் கேப் புக் பண்ணி அனுப்பிட்டு என்னை பிக்அப் பண்ண வந்துட்டார். நாங்க எல்லாருமே ஒரே நேரத்துல வீட்டுக்கு வந்துருவோம். எல்லாரையும் மீட் பண்ணப் போறேன்… ரொம்ப எக்சைட்டிங்கா ஒரு மாதிரி படபடப்பா இருக்கு முகி… உங்களுக்கும் பூச்செண்டுக்கும் டிபன் எடுத்துட்டுதான் வரேன்… அவளை எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிருங்க…” 


இவனது பதிலை கூட எதிர்பார்க்காமல் அவள் போனை வைத்திருக்க எதுவும் பேசாது அருகில் நின்றிருந்த பூச்செண்டை திரும்பிப் பார்த்தான் முகிலன். அவளும் அனைத்தையும் கேட்டுக் கொண்டுதானே இருந்தாள். ஃபோன்தான் ஸ்பீக்கரில் இருந்ததே.


“எல்லாத்தையும் அவன் ஒருத்தனே கிழிச்சுட்டான்… என் மேல கோபமா இருக்கானா…? இல்ல அநியாயத்துக்கு பொறுப்பா இருக்கானான்னு ஒரு மண்ணும் புரியல. ஆனா எனக்குதான் ரொம்ப கில்ட்டியா இருக்கு… அப்படிப்பட்ட ஒருத்தனை புரிஞ்சிக்காம நீ அவன் கோபத்துக்கு திரி போட்டு தீமூட்டி வச்சிருக்க…” தொப்பென சோபாவில் அமர்ந்தான்.


“நான் வேணா அவர்கிட்ட மன்னிப்பு கேட்கட்டுமா…” கழுத்து சங்கிலியை வாயில் கடித்தபடியே கேட்டவளை முறைப்புடன் பார்த்தான்.


“அதெல்லாம் ஒன்னும் வேணாம்… அதையெல்லாம் அவன் எதிர்பார்க்கிறவன் கிடையாது… அவன் கிட்ட சகஜமா இரு… அது போதும்…” என்றவன் அப்போதுதான் அவள் புடவை கட்டி இருப்பதை கவனித்தான்.


“அடியேய்… புடவை எல்லாம் கட்டி இருக்க‌… இதென்ன அதிசயம்…?”


“அ..அவரோட அ..அப்பா அ..அம்மா வ..வர்றாங்கள்ல…” என்றாள் மெல்ல தடுமாறியபடி.


“ஓஓ… மாமனார் மாமியாருக்காகவா…? பேஷ்…” புருவத்தை உயர்த்தி தலையை ஆட்ட அவளுக்கோ திடீரென வெட்கம் சூழ அதனை மறைத்தபடி சமையல் அறைக்குள் ஓடி இருந்தாள்.


வீடு முழுக்க கலகலவென சிரிப்புச் சத்தமும் பேச்சுக்குரலுமாய் சொந்த பந்தங்கள் நிறைந்து அமர்ந்திருந்தனர். பக்கத்து பிளாட்டில் அவர்களுடன் நெருக்கமாய் பழகும் வேல்மணி சுந்தரி தம்பதியரும் அங்கு வந்து அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றனர். முகத்தில் எவ்வித கடுமையையும் கோபத்தையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே இருந்தான் தரணி. மீராவை முகிலன் குடும்பத்திற்கும் பூச்செண்டை தரணி குடும்பத்திற்கும் அவ்வளவு பிடித்து போனது. தங்களது மருமகள்களை ஆசையாய் அருகில் அமர்த்தி தலைவருடி வாஞ்சையுடன் பேசிக் கொண்டிருந்தனர் மாமியார்கள்.


ஆண்கள் பொதுவான விஷயங்களைப் பேசி சிரித்து கொண்டிருந்தனர். மறந்தும் கூட பூச்செண்டின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை தரணி. இதனை அவளும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். தான் செய்தது தவறோ என்ற குற்ற உணர்ச்சி எழாமல் இல்லை.


“ஏத்தா… நல்லா வல்லுவதக்குன்னு திங்க மாட்டியா… இப்படி வெரத்தண்டில இருந்தா புள்ள பெத்துக்க என்ன சத்துமானம் இருக்கும்…? கல்யாணம் முடிஞ்ச கையோட பேசாம எங்களோட ஊருக்கு வந்துரு… நானும் உன் மாமியாரும் உன்னை நல்ல உருப்படியா ஆக்கிடுவோம்…” மீராவை இழுத்து அருகில் வைத்து பாட்டி கூற அந்த வெள்ளந்திப் பேச்சில் நெகிழ்ந்து போனாள் மீரா. தன்னவளை ஆளாளுக்கு தாங்குவதில் முகிலனுக்கோ பரமானந்தம். தன் நண்பன் மட்டும் தன்னிடம் பாராமுகமாய் இருப்பதில் வருத்தம்.


“என்மேல என்னடா கோபம்…? என்னை கூட கூப்பிடாம நீயே போய் எல்லாரையும் கூட்டிட்டு வந்துட்ட… அத்தனை தடவை கூப்பிட்டேனே… ஒரு காலையாவது அட்டென்ட் பண்ணியா… நைட்டெல்லாம் எங்கே போன…? எப்ப வந்த…? உன் பொண்டாட்டி மேல இருக்கிற கோபத்தை என்கிட்ட ஏன்டா காட்டுற…?” சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தவனை நெருங்கி அமர்ந்து சங்கடமாய் மெல்லிய குரலில் கேட்டான் முகிலன்.


“உன் மேல எந்த கோபமும் இல்ல… அமைதியா இரு…” தானும் அமைதியாய் பதிலளித்தான்.


“அப்போ உன் பொண்டாட்டி மேல கோபமா…?”


“ப்ச்… எனக்கு யார் மேலயும் கோபம் இல்ல… விடு…” சற்று எரிச்சலாய் பதில் அளித்தான்.


“நேத்து நைட் அவளை புடிச்சு காச்சு காச்சுன்னு காய்ச்சிவிட்டுட்டேன் தெரியுமா…? உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்னு சொன்னா…” தரணியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.


“அப்புறம்…” மீண்டும் ஏதோ சொல்ல வாய் எடுக்க “இந்த பேச்சை இதோட விடுறியா…’ என்று எழுந்து கொண்டவன் சமையலறைக்குள் நுழைய அங்கு மீராவும் பூச்செண்டும் சேர்ந்து அனைவருக்கும் ஜூஸ் தயாரித்துக் கொண்டிருந்தனர்.


“மீரா…” அவனது குரலில் இருவருமே வேகமாய் திரும்ப அவனது பார்வை மீராவிடம் மட்டுமே.


“ரொம்ப தலைவலியா இருக்குடா… எனக்கு ஜூஸ் வேணாம்… ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு கொடு…” என்று கூறி வெளியேறி இருந்தான்.


இந்த தலைவலிக்கு காரணமே நான்தானோ என்ற கவலை ஒருபுறமும்… தன்னை திரும்பியும் பார்க்கவில்லையே என்ற வருத்தம் ஒருபுறமும்… தன்னிடம் உரிமையாய் கேட்கவில்லையே என்ற கோபம் ஒருபுறமமாக புதுமையாய் தோன்றிய உணர்வுகளுடன் நின்றவள்… இன்னைக்கு போட்டிருக்கிற இந்த பிங்க் கலர் சட்டையைத்தானே நான் முதன்முதலில் பார்த்து மடியில போய் விழுந்தப்போ போட்டிருந்தார்… மனம் வேறு ஏதோ கணக்கு போட… நினைத்த மாத்திரத்தில் உடலுக்குள் ஜிவ்வென்று சிலிர்ப்பு… உதடு கடித்து தன்னை மீறிய புன்னகை.


“பனைமரம்… ரொம்பத்தான் பண்ணுது…” உதட்டுக்குள் முணுமுணுத்தபடி மீராவை முந்திக்கொண்டு வேகமாக காபி தயாரிக்கத் தொடங்கினாள்.


Leave a comment


Comments


Related Post