இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 24-03-2024

Total Views: 36761

மீராவிற்கு நாட்கள் அதிகமாக தொடங்கியதால் திருமணத்தை நடத்துவதில் தாமதம் கூடாது என்பதால் இன்னும் மூன்று நாட்களில் பெங்களூருவில் ஒரு கோவிலில் வைத்து எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் வரவேற்பினை விமரிசையாக நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்தனர். இரண்டு திருமணங்களும் அவசரகதியில் முடிந்திருக்க இரண்டு ஜோடிகளுக்குமே ஒரே நாளில் வரவேற்பை முடித்து விட்டால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார் மாணிக்கவேல்.


முகிலனும் பூச்செண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்… சொந்த பந்தங்கள் பழக்கவழக்கங்கள் என்று மதுரையை சுற்றி கூட்டம் அதிகம். மீராவை பொருத்தவரை அலுவலக நட்பு மட்டுமே. தரணிக்கு நிறைய சொந்தங்கள் உண்டு என்றாலும் அனைவரும் வெவ்வேறு திசையில் உள்ளனர். மூவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்பதால் ஒரு பஸ் பிடித்து அனைவரையும் அள்ளிப் போட்டுக் கொள்ளலாம். தரணியின் சொந்தங்கள் எந்த ஊரில் விசேஷம் நடைபெற்றாலும் தொலைதூரப் பயணம்தான். அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்து மதுரையில் வரவேற்பு வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.


முகிலனின் திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து அதாவது இன்னும் பத்து நாட்களில் வரவேற்பு. அனைத்தையும் பெரியவர்கள் ஏகமனதாக முடிவு செய்ய ‘என்ன இத்தனை வேகமா…?’ என்று விழித்தனர் சிறியவர்கள். வேறு வழியில்லை… காலதாமதம் முகிலனை சந்தி சிரிக்க வைத்துவிடுமே.


“ப்ச்… கல்யாணத்தை பொறுமையா நிதானமா பார்த்து பார்த்து பண்ணனும்னு நெனச்சேன்டா… இப்படி அடிச்சுக்கோ புடிச்சுக்கோன்னு வந்து நிக்குதே…” கன்னத்தில் கை வைத்து கவலைப்பட்டான் முகிலன்.


“இருக்க வேண்டிய விஷயத்தில நிதானமா இருந்திருந்தா இப்படி ஒரு சூழ்நிலை வந்திருக்காதே…” நக்கலாய் கூறினான் தரணி.


எளிமையான முறையில் திருமணம் என்றாலும் நகைகள் துணிமணிகள் தொடர்ந்து வரவேற்பிற்கு தேவையான ஆடைகள் என்று வாங்குவதற்கு தேவையான மிகப்பெரிய பட்டியல் தயாரானது. தரணியின் அம்மா அனுசுயா படித்தவர் கூடுதலாய் வெளி உலக பழக்கவழக்கங்கள் நன்கு அறிந்தவர் என்பதால் மல்லிகா செண்பகத்தின் ஆலோசனைகளுடன் தானே தெளிவாய் அனைத்தையும் பட்டியலிட்டார்.


“அனேகமா நம்ம ரெண்டு பேரும் டிரைவர் வேலை மட்டும்தான் பார்ப்போம்னு நினைக்கிறேன்… பெருசுங்களே எல்லாத்தையும் பண்ணி முடிச்சிடுங்க… டிரஸ் செலக்ட் பண்ற உரிமையாவது நமக்கு கிடைக்குமா…?” முகிலன் கேட்க தரணியோ ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.


“டேய்… டேய்ய்ய்ய்…”


“ஹான்… என்னடா…? என்ன கேட்ட…?”


“ம்… கிரிக்கெட் விளையாட போகலாமான்னு கேட்டேன்…”


“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா…? தலைக்கு மேல இத்தனை வேலை இருக்கு… உனக்கு கிரிக்கெட் கேக்குதா…? இன்னும் எட்டு மாசத்துல ஒரு பிள்ளைக்கு அப்பாவாகப் போற… கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா…” காச் மூச்சென்று கத்த தொடங்கினான் தரணி.


“அட நாயே… அப்போ நீ இந்த உலகத்திலேயே இல்லையா… நான் என்ன சொன்னேன்னு காதுலயே வாங்கலையா…?”


“என்னடா… என்ன…?” எகிறினான் தரணி.


“ஏன்டா நேத்து இருந்து வெறி பிடிச்ச நாய் மாதிரி கொலைச்சுக்கிட்டே இருக்க… கொஞ்சம் கூலாகுடா…” குரலை தழைத்து இரங்கிய குரலில் கூறினான் முகிலன்.


“ஆமா… வெறிதான் பிடிச்சிருக்கு… வா உன்னை புடிச்சு கடிச்சு வைக்கிறேன்…”


“என்னை எதுக்கு கடிக்கணும்…? அதோ அங்கே உட்கார்ந்து இருக்கு பாரு உன் பொண்டாட்டி… அவளை போய் கடிச்சு வை… அங்கே பண்ண வேண்டியதை இங்கே பண்றேன்னு சொல்ற… என்னை கடிச்சு வைக்க மீரா இருக்கா போடா…” முறைத்தபடி முகிலன் கூற பக்கென சிரித்திருந்தான் தரணி.


“லொள்ளு புடிச்சவனே…” சிரித்தபடியே அவனை இழுத்து முதுகில் குத்தினான். தரணியின் சிரிப்பிலும் செல்ல விளையாட்டிலும் நிம்மதி அடைந்தான் முகிலன்.


சற்றுத் தள்ளி அமர்ந்து அனுசுயாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த தன் மனையாளை மெல்ல திரும்பிப் பார்த்தான் தரணி. காலையிலிருந்து அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லையே… இப்பொழுதுதான் பார்க்கிறான்… புடவை கட்டி பாந்தமாய் முகத்தில் சாந்தம் தவழ மென்புன்னகையுடன் அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தாள்.


“சண்டி ராணி… ரொம்ப யோக்கிய சிகாமணி மாதிரி என் அம்மாகிட்ட என்னமா ஆக்ட் கொடுக்கிறா… அனுசுயா… நம்பி ஏமாந்துடாத… உன்னை கவுத்திப் போட பாக்குறா… அது சரியான அராத்து… உன்னால எல்லாம் அதுகூட சண்டை போட்டு ஜெயிக்க முடியாது…மண்ணை கவ்விடுவ… சூதானமா இருந்துக்க…’ மனம் சத்தமாய் பேச கோபம் நிறைந்திருந்த அவன் கண்களில் தற்போது குறும்பு தவழ்ந்தது.


‘நான் பார்த்த அந்த குறும்புக்காரிதான் என் மனசை அசைச்சா… ஆனா இவ திமிரை மட்டும்தான் தலையில வச்சுட்டு இருக்கா… நேத்து என்னை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்தேல்லடி… நான் அப்படி ஒரு மூர்க்கமானவன் கிடையாது… எனக்கே அசிங்கமா இருக்கு… எல்லாம் உன்னாலதான்… இன்னைக்கு புடவையில ரொம்ப அசத்தலா இருக்கியேடி…’


யாரோ தன்னை துளைத்து பார்ப்பதைப் போல் குறுகுறுப்பாய் உணர்ந்த பூச்செண்டு சட்டென தலையை திருப்ப தரணிதான் அவளை அழுத்தமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான். சிலீர் என்று ஏதோ ஒரு உணர்வு… அவன் பார்வையில் இதுவரை ஏற்படாத ஒரு உணர்வு… பட்டென விழிகளை தாழ்த்தி திரும்பிக் கொண்டாள்.


‘இதென்ன…? அடி வயித்துக்குள்ள என்னமோ அசையிற மாதிரி இருக்கு… பனைமரம்… ரசிக்குதா…? முறைக்குதா…? எப்பா… என்னா பார்வை…’ 


மீண்டும் மெல்ல பார்வையை உயர்த்தி அவனைப் பார்க்க என் கடன் பார்த்துக் கொண்டிருப்பதே என்ற ரீதியில் கண் சிமிட்டாது அதே பார்வையுடன் அமர்ந்திருந்தான் அவன்.


‘ஆத்தாடி… பார்வையாலேயே உரிச்சு உப்புக்கண்டம் போடுதே… கோபம் இன்னும் மிச்சம் மீதி இருக்குமோ… இத்தனை பேர் சுத்தி இருக்காங்க… உன் பப்பு ஒன்னும் வேகாது போயா…’ தன்னிச்சையாய் உதட்டை சுழித்துக் கொண்டாள்.


‘உதட்டை சுழிக்கிறா… என்னை பார்த்தா கேனப்பயலா தெரியுதா… அந்த சுழிக்கிற உதட்டை என்ன பண்ணினா சரியா இருக்கும்…?” தீவிரமாய் கண் உயர்த்தி தரணி யோசிக்க “கடிச்சு வச்சிரு…” காதுக்கருகில் கிசுகிசுப்பான குரல் கேட்டது. வேறு யார்…? முகிலன்தான்.


“ஹான்…” அதிர்ச்சியுடன் விழித்தான் தரணி.


“நீதானடா வெறியா இருக்கு கடிச்சு வைக்கணும்னு சொன்ன… அதைத்தானே யோசிக்கிற… பேசாம கடிச்சு வச்சிரு… வெறி குறைஞ்சிடும்…”


“டேய்ய்…’ சட்டென தொற்றிக்கொண்ட நாணத்துடன் தன் பிடரி முடியை புன்னகையுடன் கோதினான் தரணி. பூச்செண்டின் உதட்டை இழுத்து கடிப்பது போல் அவசரமாய் ஒரு கற்பனைக் காட்சி மனதுக்குள் ஓட “அய்யோ… இந்த நாயி தப்பு தப்பா யோசிக்க வைக்கிறானே…” மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி அவசரமாய் அறைக்குள் நுழைந்து கொண்டான்.


“என்ன… இந்த ஓட்டம் ஓடறான்… ஒருவேளை அவனை அவனே கடிச்சுக்க போறானோ… பய நேத்துல இருந்து வேற மாதிரிதான் இருக்கான்…” இழுத்து பெருமூச்சு விட்டுக் கொண்டான் முகிலன்.


அனைவரையும் அள்ளிக் கொண்டு வந்து ஜவுளிக்கடையில் இறக்கியாயிற்று. முகிலனும் மீராவும் கைகோர்த்து தங்களுக்கான உடையை தேர்வு செய்ய எப்போதோ நகர்ந்துவிட்டனர். கோபக்கார ஜோடி மட்டுமே ஒன்றை ஒன்று முறைத்தபடி கள்ளப்பார்வை பார்த்தபடி வட துருவத்தில் ஒன்றும் தென் துருவத்தில் ஒன்றுமாய் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தன.


“தரணி… இங்கே என்னடா பண்ற…? குழந்தைங்க செக்ஷன்ல வந்து நின்னுட்டு இருக்க… அதெல்லாம் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு வருவியாம்… வந்து பூச்செண்டு கூட இருந்து ரிசப்ஷன் டிரஸ் செலக்ட் பண்ணிக் கொடு…” சிரித்தபடி அருகில் வந்து நின்றார் அனுசுயா.


“இங்கே ஓரப்பார்வைக்கே வழி இல்லையாம்… இதுல ஒரு வருஷம் கழிச்சு பிள்ளை பெத்துக்கறது ஒன்னுதான் குறைச்சல்…” எரிச்சலாய் புலம்ப “என்னடா புலம்புற… அவளுக்கு என்ன மாதிரி டிரஸ் எடுக்கிறதுன்னு அவளுக்கே புரியல… வந்து கொஞ்சம் ஐடியா கொடு…” கையோடு அவனை பிடித்து இழுத்துச் சென்றிருந்தார் அனுசுயா.


“நல்லா பட்டையா அகலமா கரை வச்ச மாதிரி செவேர்ன்டு புடவையை எடுத்து போடுத்தா…” குட்டி நாற்காலியில் அமர்ந்து கொண்டு விற்பனைப் பெண்ணை பெண்டு நிமிர்த்திக் கொண்டிருந்தார் பாட்டி.


“ஏ கெழவி… இந்த செகப்பு பச்சை பஞ்சுமிட்டாய் கலரு இதெல்லாம் நீயே கட்டிக்க… எனக்கு அந்த மாதிரி எடுத்த… உன்னை கொண்டேபுடுவேன்…” பற்களை நறநறத்து பாட்டியை முறைத்தாள் பூச்செண்டு.


“மேடம்… உங்களுக்கு பிடிச்ச மாதிரி லைட் கலர்ஸ்ல நிறைய சாஃப்ட் சில்க் ஐட்டம்ஸ் இருக்கு… அதை பாருங்க…” 


நளினமாய் கூறிய விற்பனைப் பெண்ணிடம் “இங்காரு… நான் கேட்டதை மட்டும் எடுத்துப் போடு… அந்த கிறுக்கு கழுதைக்கு ஒன்னும் தெரியாது… நான் ஒன்னு கேட்டா ஒம்பாட்டுக்கு நீ ஒன்ன சொல்ற… பக்கத்து கடையில கைய புடிச்சு இழுக்காத கொறையா கூப்பிட்டாய்ன்… நான் வேணா அங்க போயிக்கிறேன்…” தண்டட்டி குத்தாட்டம் போட குரலை உயர்த்தினார் பாட்டி.


‘வேலைக்கே வேட்டு வச்சுடும் போல இருக்கே இந்த கிழவி…’


“ஐயோ பாட்டிம்மா… உங்களுக்கு என்ன வேணுமோ அதை கொடுக்கிறதுதான் எங்க வேலை… நீங்க என்ன வேணும்னு சொல்லுங்க… நான் எடுத்துக் காட்டுறேன்…” விற்பனைப் பெண்ணுக்கு வியர்த்து வழிந்தது.


“அந்த ஆரஞ்சு முட்டாய் நெறத்துல பசேர்ன்டு பாடர் போட்டிருக்கு பாரு… அதை எடு…”


பாட்டி ஆராய்ந்து கொண்டிருந்த புடவைகளை பார்க்க பார்க்க பூச்செண்டுக்கு பற்றிக் கொண்டு வந்தது. மற்றவர்கள் தங்களுக்கு புடவை எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். ‘இந்த முனி தெளிவா அது ஆளை தள்ளிட்டு எங்கேயோ போயிருச்சு… நான் இந்த கெழவிகிட்ட சிக்கிக்கிட்டேன்…’


“எடுக்கிற புடவையை நீயே உன் தலையில போட்டுக்கோ…” கோபமாய் முணுமுணுத்து வேகமாய் திரும்பியவள் நங்கென்று எதன்மீதோ மோதி ‘துணிக்கடையில தூண் எதுக்கு வச்சிருக்காங்க…?’ தலையை தேய்த்தபடி நிமிர அங்கிருந்து தூணல்ல… பனைமரம்.


கண்களை சுருக்கி அவளையே குறுகுறுவென பார்த்தவனை ‘இது என்ன… நேத்து இருந்து முறைச்சுக்கிட்டே திரியுது.‌. கோபம் இருந்தா ரெண்டு திட்டு திட்டிட்டு போக வேண்டியதுதான… நெட்டமாடு… பனைமரம்…’


“அப்பத்தா… நீங்க உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ உங்களுக்கு மட்டும் செலக்ட் பண்ணிக்கோங்க… என் பொண்டாட்டிக்கு நான் செலக்ட் பண்ணி கொடுத்துக்கிறேன்…” என்றவன் பாட்டியின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் பூச்செண்டின் கையை அழுத்தமாய் பற்றி வேறு எங்கோ இழுத்துச் சென்றான்.


“பார்றா இந்த பயல…” வெற்றிலைக் காறையில் சிவந்த பற்கள் தெரிய சிரித்து வாயில் விரலை வைத்தவர் “பொடி கலர்ல பொடவை இருந்தா அதெல்லாம் எடுத்து போடுத்தா…” என்று சிக்கிய அந்த அப்பாவிப் பெண்ணை அலற வைக்கத் தொடங்கினார்.


“எங்கே இழுத்துட்டு போறீங்க…? கையை விடுங்க…” பற்களுக்குள் வார்த்தைகளை மென்றவளிடம் “நேத்து பண்ணின கூத்துக்கு பனிஷ்மெண்ட் பாக்கி இருக்குல்ல… அதை கொடுக்கப் போறேன்…” என்றான் அவளிடம் திரும்பாமல் வேகமாய் நடந்தபடி. 


அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடியவள் “அதான் வீடு பூரா எல்லாத்தையும் இறைச்சு வச்சு விடிய விடிய இடுப்பொடிய என்னை வேலை வாங்கியாச்சுல்ல… அப்புறம் என்ன…?” சீறியவளிடம் வேகமாய் திரும்பியவன் “அது உன் திமிர் பேச்சுக்கான பனிஷ்மெண்ட்… அது நீயா தேடிக்கிட்டது… நான் ஒன்னும் பண்ண முடியாது…” அசட்டையாய் பதிலளித்து லிப்ட் இருக்கும் திசை நோக்கி நடந்து வந்தவன் இறுக்கிப் பிடித்த அவள் கையை மட்டும் விட்டான் இல்லை.


“இதென்ன புதுக்கதையா இருக்கு… வகை வகையா பனிஷ்மெண்ட்டை பிரிச்சு வச்சிருக்கீங்களோ…” முறைத்தபடி கேட்டாள்.


“ஆமா… தேவையில்லாம என்னோட கோபத்தை கிளறி நான் செய்யாத வேலையெல்லாம் செய்ய வச்சதுக்காக ஹெவி பனிஷ்மெண்ட் இன்னும் பாக்கி இருக்கு…” என்றவன் லிப்டின் பட்டனை அழுத்தி காத்திருக்க “துணிக்கடையில வச்சு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கப் போறீங்க…? கண்டவங்களும் பார்த்து கைகொட்டி சிரிக்கணுமோ…” என்றவளிடம் பதில் பேசாது திறந்து கொண்ட லிப்டிற்குள் அவளை தள்ளி தானும் உள்ளே நுழைந்திருந்தான்.


நான்கு என்ற எண்ணை அழுத்தியவன் சுவற்றோடு நின்றவளின் இருபுறமும் கை வைத்து நெருக்கமாய் நின்று அவளை அழுத்தமாய் பார்க்க “எ..என்ன…? எ..எதுக்கு இ..இப்படி…? எ..என்னை கிஸ் பண்ணி பனிஷ்மெண்ட் குடுக்கப் போறீங்களா…? இங்கே கேமரா வச்சிருப்பாய்ங்க… நாளைக்கே நெட்ல போட்டு நாறடிச்சுருவாய்ங்க… அப்போ உலகமே கை கொட்டி சிரிக்க போறது உறுதி… அய்யய்யோ… என் மானம் மரியாதை எல்லாம் காத்துல பறக்கப் போகுது… கதவை தொறக்க மாட்டேன்னு சொன்னதுக்கு இத்தனை கூத்து கட்டணுமா…? உங்களை போய் ரொம்ப நல்லவர்னு அந்த முனி…” என்று முடிக்கும் முன் நான்காவது தளம் வந்து கதவு திறந்து கொண்டது. எதுவும் பேசாமல் மீண்டும் அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தான்.


“ஆக்சுவலா நான் வேறொரு பனிஷ்மெண்ட்தான் பிளான் பண்ணி இருந்தேன்… நீ சொன்னதுக்கு அப்புறம்தான் இதையே எக்ஸிக்யூட் பண்ணலாம்னு தோணுது… நல்லாதான் இருக்கு… எனிஹௌ தேங்க்ஸ் ஃபார் யுவர் சஜஷன்… வீட்ல போய் இன்னைக்கே அந்த பனிஷ்மெண்டை குடுக்கிறேன்…” அவள் கையை விடுத்து பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்தபடி நடக்கத் தொடங்கினான்.


‘அய்யோ… வான்டடா போயி வங்குல சிக்கிக்கிட்டேனே… முனி சொன்ன மாதிரி எனக்கு நாக்குலதான் சனி. இந்த ஆளை தேவையில்லாம தூண்டிவிடறதே என் வேலையா போச்சே… ஆமா… வீடு பூரா சொந்தக்கார கூட்டமா இருக்கு… எங்க வச்சு என்னை கிஸ் பண்ணனும் இந்த பனைமரம்…? ஒருவேளை அங்கேயும் லிஃப்டுக்குள்ள தள்ளிட்டு போயிடுமோ…? அதுலயும் கேமரா இருக்குமே… நெட்ல போட்ருவாய்ங்களே… ஆங்… மாடிப்படி திரும்புற இடத்துல குட்டியா சந்து மாதிரி ஒரு இடம் இருக்கு… வேணா அந்த இடத்தை சஜஸ்ட் பண்ணி குடுக்கலாம்… அடச்சீ… அறிவுகெட்ட முண்டம்… நீயே ரூட் போட்டு கொடுக்கிற… அந்த ஆளுகிட்ட முத்தம் வாங்க ரெடியா இருக்கியாடி… புத்தி கெட்ட பேச்சிறுக்கி… அய்யய்யோ… என் மூளை இந்த ஆளுக்கு ஃப்ரண்ட் ஆயிருச்சு போலயே… இப்படி வடிவேலு ரேஞ்சுல புலம்ப விடுதே பக்கி…’


உடன் வந்தவளை காணாது நின்றவன் திரும்பிப் பார்க்க சற்றுத் தள்ளி ஒற்றை விரலால் நெற்றியை அழுத்தியபடி நிற்பவளை தனக்குள் தோன்றிய புன்னகையுடன் பார்த்தான் தரணி.


“சும்மாவாவது மிரட்டிட்டு அப்புறமா சாரி கேட்கலாம்னு பார்த்தா பொக்கேவோட திங்கிங் வேற லெவல்ல இருக்கே… எல்லாம் தெலுங்கு பட உபயம் போல… இதுவும் கூட நல்லா இருக்கே‌.. இருடி… இதை சொல்லியே உன்னை கதற விடுறேன்…” சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியபடி அவளிடம் நெருங்கினான்.


“என்ன… இங்கேயே நின்னுட்ட… ஓகே… அப்போ பனிஷ்மெண்ட்டை இங்கேயே கொடுத்துடலாம்…” என்றபடி இன்னும் நெருக்கமாய் முன்னேற “வே..வேண்டாம் அதுக்கு நான் வேற ஒரு ப்ளேஸ் அரேஞ்ச் பண்ணிட்டேன்…” வேகமாய் கண்களை உருட்டி உளறினாள்.


“ஹான்…” அவன் புரியாமல் புருவத்தை உயர்த்த ‘இந்த வெளங்காத வாயை வெறகு கட்டையாலதான் சாத்தணும்… எனக்கு என்னமோ ஆயிடுச்சு…’


“இ..இல்ல… அ..அது… நா..நான்… வ..வந்து…” கண்களை நாலாபுறமும் சுழற்றியபடி வார்த்தைகள் தந்தி அடிக்க நின்றவள் தொலைவில் மீரா நிற்பதை கண்டுகொண்டு “மீராக்கா… என்னையும் உங்க கட்சியில இணைச்சுக்கங்க…” என்றபடி வேகமாய் அவளை நோக்கி ஓடி இருந்தாள். 


அகலமாய் சிரித்தபடி அவளையே பார்த்தவன் “பொக்கே பேக் ட்டு ஃபார்ம்…” என்றபடி தானும் அவ்விடம் நோக்கி நகர்ந்தான்.






Leave a comment


Comments


Related Post