இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 24-03-2024

Total Views: 25612

அபிலாஷாவிற்கு தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்திருப்பது மனதளவில் மகிழ்ச்சியை தராவிட்டாலும் “வாங்க…” என்று மரியாதைக்காக அழைத்தாள்.

உள்ளே வந்தவர்கள் மோகன்ராம் குடும்பம் உள்ளே இருப்பதை பார்த்து அதிர பார்வதி அக்சயா இருவரும் வந்தவர்கள் யார் என்று குழப்பத்தில் நிற்க

“அம்மா.. இவங்க அபிலாஷாவோட…” என்று நந்தன் அறிமுகப் படுத்த துவங்க

“நான் சுரேந்தர் அபியோட சித்தப்பா இவங்க ரூபவதி என் மனைவி சுகந்தி என் தங்கச்சி அபியோட அத்தை.. அப்பறம் இவரு கிருபாகரன் அபியோட மாமா” என்று தங்களை தானே சுரேந்தர் அறிமுகம் செய்ய 

“வணக்கம்.. வாங்க” என்று கையெடுத்து இன்முகத்துடன் வணங்கி வரவேற்க வீட்டை ஏளனப் பார்வையோடு கண்ணை சுற்றி பார்வையிட்டு விசிறிக் கொள்வதை போல கையை ஆட்டினாள் சுகந்தி.

மோகன்ராம் குடும்பத்தினர் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க “உட்காருங்க எல்லாரும்” என்று சேரை எடுத்து போட்டான் அபிநந்தன்.

“இவங்க நந்தனோட அம்மா பார்வதி அம்மா… இது நந்தனோட தங்கை அக்சயா” என்று அபிலாஷா அறிமுகம் செய்து வைக்க சம்பிரதாயத்திற்கு சிரித்துக் கொண்டனர் நால்வரும். 

“அச்சு வந்தவங்களுக்கு குடிக்க எடுத்திட்டு வா போ…” என்று பார்வதி சொல்ல அடுக்களையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தந்தாள் அக்சயா.

“ஏம்மா அபி… என்னமோ இந்த குடும்பத்துல எல்லாரும் அப்படி இப்படி னு பெருமை பேசிட்டு நம்ம வீட்டை விட்டு வந்த.. இங்க என்னடான்னா வந்தவங்களுக்கு காஃபி டீ குடுக்க கூட வக்கில்லாம தண்ணீயை கொடுக்கிறாங்க…” என்று நக்கலாக ரூபவதி பேச்சை துவங்க இப்போது வந்தவர்களை தவிர மற்றவர்களுக்கு சுர்ரென்று ஏறியது.

அபிநந்தனின் சுயமரியாதை உணர்வை தூண்டி விட்டு ஏதாவது பிரச்சினை உருவாக்கி அபியை இப்போதே கையோடு அழைத்துச் சென்று விட்டால் தங்களுக்கு நல்லது தானே என்ற நல்ல எண்ணம் தான் அவருக்கு…

மற்றவர்கள் யாரும் பதில் பேசும் முன்பு “சித்தி… வந்தவங்களுக்கு காஃபி டீ மட்டும் இல்ல உங்க எல்லாரையும் மூணு நேரமும் உட்கார வைச்சு விருந்தே வைக்க கூட என் நந்தனால முடியும் அவரு மனசு அவ்வளவு விஸ்தாரமானது தான்.. ஆனா வீட்டுக்கு யார் வந்தாலும் முதல்ல தண்ணீ கொடுக்கனும். அதுக்கப்புறம் அவங்க விருப்ப படி சாப்பிட கொடுக்கனும்ன்ற பண்பை அம்மா அக்சயாவுக்கு சொல்லி கொடுத்திருக்காங்க.. அதனால தான் அவ அப்படி செய்தா…

இன்னொரு விஷயம் இனி வசதி அது இதுன்னு என் குடும்பத்துல யாரையும் குறைவா பேசுற பழக்கத்தை விட்டுட்டா உங்க எல்லாருக்கும் நல்லது..” என்று சிரித்த முகத்துடனே எச்சரிக்கை விடுத்தாள் அபிலாஷா.

“ரூபா வந்த இடத்தில என்ன பேசனும் னு யோசிச்சு பேசு… அபி மனசு சங்கடப்படுற மாதிரி ஏன் இப்படி பேசுற?” அதட்டுவது போலே அன்பாய் பேசி காரியத்தை சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் சுரேந்தர்.

“ச்ச் அபி உங்க சித்தியை பத்தி உனக்கு தெரியும் தானே… பட்டுனு யோசிக்காம பேசிடுவாங்க… சரி அவ பேசுனதை விடுங்க நீ வந்த அப்பறம் வீடு வீடாவே இல்ல அபி.” பாசவலையை விரித்தார் சுகந்தி.

“ம்கூம் நான் இருந்தப்போ கூட வீட்ல ஒரு மனுஷியா இல்லையே அத்தை பணம் சம்பாதிக்கிற மிஷினா பிஸ்னஸை கவனிச்சிக்கிற ரோபா மாதிரி தானே இருந்தேன்.” என்று அபி சொல்ல

“என்ன அபி மா பட்டுனு இப்படி சொல்லிட்ட?” என்று கண்ணீர் வருவதை போல கண்ணை கசக்கி நாடகத்தை துவங்கினர் சுகந்தியும் ரூபவதியும்..

“இருக்கிறதை தானே சொன்னா… ஆமா அபி வீட்டை விட்டு வந்து மூணு நாள் வரைக்கும் தேடி வராம என்ன பண்ணீங்க?” என்று மோகன்ராம் கேட்க

“அது அது… ஏதோ கோபத்துல கிளம்பி போனா திரும்ப வருவாள்னு நினைச்சோம்.” என்று சப்பையாக ஒரு காரணத்தை சுகந்தி சொல்ல

“அப்போ அபிமேல இருக்கிற அக்கறை அவ்வளவு தான் இல்ல… சின்ன வயசுல இருந்து அபி அன்புக்கு எவ்வளவு ஏங்கி இருப்பா கொஞ்சமாவது அவளை பொண்ணா மதிச்சு அன்பா பாசமா இருந்திருப்பீங்களா? அவ காலேஜ்ல படிக்கும் போதே ஆஃபிஸ் பிஸ்னஸ் னு எல்லாத்தையும் அவ தலையில கட்டி… இப்போ கூட எதுக்கு வந்திருப்பீங்க… அபியோட சைன் இல்லாம உங்களால ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது. அதனால தானே?” கோபத்தோடு ப்ரதீப் பொரிந்து தள்ள

‘உண்மையை எப்படி கண்டுபிடிச்சான்’ என்ற அதிர்ச்சி தான் அவர்களுக்கு. “என்ன ஃப்ரதீப் இது? அதான் உங்க அப்பாவோட ஃப்ரண்ட் அபியோட அப்பா சொந்தக்காரங்க எங்க யாரையும் நம்பாம சொத்து மொத்தத்தையும் குழந்தையா இருந்த அபி பெயர்ல எழுதி வைச்சிட்டு போனது அவரு தானே…” என்று கிருபாகரன் சொல்ல

“ப்ரதீப் இப்போ எதுக்கு இதெல்லாம் விடு.. அபி வாழ்ற இடம் நல்ல இடம். இனி அவ சந்தோஷமா இருக்கனும் இது மட்டும் தான் நமக்கு எண்ணமா இருக்கனும்.” என்று ப்ரதீப்புக்கு சொல்வது போல வந்தவர்களுக்கு சொன்னார் பத்மாவதி.

“ஆமா… அதுதானே எங்க ஆசையும்.. அபி.. நீ ஏன் மா இந்த சின்ன வீட்டுல இருந்து கஷ்டப்படனும்? மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்திடு மா…” என்று அன்பாக உரைத்தார் சுரேந்தர்.

“மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டா? என்ன சொல்றீங்க சித்தப்பா அப்போ அம்மாவும் அச்சுவும்?” ஒற்றை புருவம் உயர்த்தி கூர் பார்வையோடு அபிலாஷா கேட்க

“அது… அவங்களையும் தான் சொல்றாரு அபி” என்று திருத்தினார் ரூபவதி.

“ம்ஹ்ம் தேவையில்லை சித்தி.‌.. இது என் கணவரோட அப்பா அவங்க குடும்பத்துக்காக கட்டின வீடு இந்த குடும்பத்துல இப்போ நானும் ஒருத்தி… என் கணவரோட வசதிக்கு தகுந்த மாதிரி வாழ எனக்கும் தெரியும். எனக்கு தேவையான சௌகர்யத்தை ஏற்படுத்தி கொடுக்க அவருக்கும் தெரியும்.” நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல அபிலாஷா சொல்ல நால்வர் முகமும் இருட்டடைய அபிநந்தனும் பார்வதியும் பெருமையாக பார்த்தனர் அபியை…

“அது சரி மா… இருந்தாலும் அது உன் வீடு தானே…” பசப்பு சிரிப்போடு சுகந்தி சொல்ல

“அதே தான் நானும் சொல்றேன் அத்தை… அது வீடு இது என் குடும்பம். என் குடும்பத்தோட இருக்கிறது தான் எனக்கு பெருமை… கவலைப்படாதீங்க நான் அந்த வீட்டை விட்டு வந்ததால உங்க யாருக்கும் எந்த பாதிப்பும் வந்திடாது. 

என் குடும்பத்துல இருந்து யாரும் உங்களை வெளியே போய்ட சொல்ல மாட்டாங்க. கம்பெனி வொர்க்கர்ஸோட நலனுக்காக நான் அந்த பொறுப்பை பார்த்துப்பேன். அதுக்காக அந்த லாபத்தை என் குடும்பம் என்னைக்கும் சொந்தம் கொண்டாடப் போறதில்லை.” என்று அபி சொல்ல

“அப்போ நாங்க சொத்துக்காக தான் உன்னை சுத்தி வரோம்னு சொல்றியா அபி?” கிருபாகரன் கேட்க

“நான் அப்படி சொல்லல மாமா ஆனா உங்களுக்கு இருக்கிற அந்த ஸ்டேட்டஸ் பார்த்து பழகுற குணம் என் நந்தனுக்கோ இல்ல அம்மா அச்சு னு யாருக்கும் இல்ல.. அதை சொன்னேன்.” என்று அபி சொல்ல

“அபி மா… ப்ராப்பர்ட்டி சொத்து இதெல்லாம் உங்கப்பா எழுதின உயிலோட அடிப்படையில நாளைக்கு கோபாலனை பார்த்து அவரு மூலமா பேசி தெரிஞ்சுக்கலாம். இப்போ அந்த பேச்சு எதுவும் வேண்டாம்.” என்று முடித்து வைத்தார் மோகன்ராம்.

“சரி வந்தவங்க யாருக்கும் எதுவும் தரவே இல்லை… கொஞ்சம் இருங்க நான் போய் ஏதாவது செய்து எடுத்திட்டு வரேன்…” என்று பார்வதி சொல்ல

“பார்வதி எதுக்கு இந்த ஃபார்மாலிட்டிஸ்… வேண்டாம் விடுங்க” பத்மாவதி சொல்ல

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. இருங்க ஒரு பத்து நிமிஷம்” என்று அக்சயாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற பார்வதி துணைக்கு சென்ற அபியை வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

இருபது நிமிடங்களில் வெங்காயம் உருளைக்கிழங்கு வைத்து போண்டாவும் காபியும் கொண்டு வர அபி வாங்கி அனைவருக்கும் கொடுக்க மோகன்ராம் குடும்பத்தினர் மகிழ்வாக எடுத்துக் கொள்ள அபிலாஷா வீட்டில் இருந்து வந்தவர்கள் முகஸ்துதிக்காக சிரித்து விட்டு எடுத்துக் கொண்டனர்.

“பார்வதி போதும் நீங்க வந்து கொஞ்சம் உட்காருங்க” என்று பத்மாவதி அழைக்க அபிநந்தனுக்கும் அபிலாஷாவுக்கும் பார்வதி எடுத்து வந்தவர் அபிக்கு எல்லோரையும் விட குறைவாக வைத்து தந்திருக்க

“அபிஷா உனக்கு ஏன் கம்மியா கொண்டு வந்திருக்காங்க எனக்கு தெரியாம ஏதாவது டயட்ல இருக்கியா என்ன?” ப்ரதீப் தோழியை வம்பிளுக்க

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ப்பா.. நேத்து இப்படி தான் அபி ஃப்ரண்ட்ஸ் எல்லாம் வந்தாங்க னு இப்படி ஸ்நாக்ஸ் பண்ணி கொடுத்தா அதை சாப்பிட்டு நைட்டு சாப்பாடு வேணாம் னு படுக்க போய்ட்டா… அப்பறம் நான் தான் ரெண்டு அதட்டு போட்டு ரெண்டு இட்லியை ஊட்டி விட்டேன். அதான் இன்னைக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு டின்னர் வேணாம்னு சொல்லிடுவா ன்னு தான் குறைவா கொடுத்தேன்.” என்று பார்வதி சொல்ல

“அபி சின்ன வயசுல இருந்து அம்மா கூட இல்ல னு வெளியே சொல்லாட்டியும் உள்ளுக்குள்ள ரொம்ப வருத்தப்பட்டிருக்கா பார்வதி… அதை மொத்தமா நிவர்த்தி செய்ய தான் நீங்க அவளுக்கு மாமியாரா கிடைச்சிருக்கீங்க…” என்று பத்மாவதி உணர்வு பூர்வமாக பேச

“அபியும் எனக்கு ஒரு மகள் தானே ம்மா…” என்று ஆதூரமாக அவள் தலை கோதினார் பார்வதி.

‘இதெல்லாம் பார்க்க வேண்டியது தங்கள் விதி போல’ என்று மனதுக்குள் நொந்து கொண்டு அமர்ந்திருந்தனர் சுரேந்தர் ரூபவதி கிருபாகரன் சுகந்தி நால்வரும்.

“சரி பார்வதி அம்மா… அபிநந்தன் அபிலாஷா கல்யாணத்தை நீங்க பார்த்திட்டீங்க… ஆனா நாங்க கூட இல்லையே அப்போ… அதனால அவங்களுக்கு ஒரு ரிஷப்ஷன் ஏற்பாடு செய்யலாம் னு இருக்கேன்.” மோகன்ராம் சொல்ல 

“ஆமா ஆமா நாங்களும் இதை பத்தி பேச நினைச்சோம்..” என்று மெப்பனையாக சுரேந்தர் சொல்ல

“சார்… அது வந்து இது அவசியமா?” என்றான் அபிநந்தன்.

“என்ன அபிநந்தா இப்படி கேட்டுட்ட… அபி என் நண்பனோட பொண்ணு… எனக்கும் பொண்ணு மாதிரி தான் இது என் கடமை ப்பா… எல்லா செலவுகளும் என்னோடது.” என்று மோகன்ராம் சொல்ல

“இல்ல சார் என்னால எவ்வளவு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம். ஓகேவா லாஷா?” என்றிட அவளும் சரி என்றாள்.

“என்னப்பா இது? அதான் நான் சொல்றேனே… இது என் கடமை.. அபி மா உங்க அப்பா சுகுமாரன் இருந்தா இதெல்லாம் செய்தா வேணாம்னு சொல்லுவியா?” என்று மோகன்ராம் கேட்க அமைதி காத்தாள் அபி.

“அபிநந்தா… இதுக்கு முன்னாடி வேலைக்கு சேர்ந்த உடனே நான் உனக்கு ஆஃபிஸ் க்வார்ட்டஸ் ஆஃபிஸ் கார் னு கொடுத்த போது எல்லாம் மறுத்திட்ட.. இப்போ என் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிருக்க இது நான் செய்ய வேண்டிய முறை. நீ அமைதியா தான் இருக்கனும்.” என்று அன்பு கட்டளை விதிக்க அமைதியானான் அபிநந்தனும்.

“சரி கூடிய சீக்கிரம் டேட் ஹால் எல்லாம் நான் பிக்ஸ் பண்றேன். பத்மா நீ அபி அக்சயாவை கூட்டிட்டு போய் நீங்க லேடிஸ் எல்லோருக்கும் பர்ச்சேஸ் எல்லாம் பார்த்து பண்ணிடு. ப்ரதீப் நீ மாப்ளைக்கு அதாவது உன் தங்கச்சி அபியோட கணவர் அபிநந்தனுக்கு தேவையான எல்லாம் நீ பார்த்துக்கோ.. மத்த அரேஞ்ச் மெண்ட் எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” என்று கடகடவென்று மோகன்ராம் சொல்ல

“அட எல்லாம் நீங்க கவனிச்சா நாங்க தானே பொண்ணு வீட்டு ஆளுங்க…” சுகந்தி வாயெடுக்க

“நீங்க எல்லாரும் குடும்பத்தோட வந்து எந்த குழப்பமும் பண்ணாம கலந்துக்கிட்டு சிறப்பிச்சிட்டு போங்க..” என்று ப்ரதீப் துடுக்காக சொல்ல சட்டென்று சிரித்திருந்தாள் அக்சயா.

குடும்பத்தோடு வந்து மூக்கறு பட்டது போல முகம் கறுத்து போயினர் நால்வரும்.

தொடரும்…


Leave a comment


Comments


Related Post