இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 08 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 25-03-2024

Total Views: 20203

காதலொன்று கண்டேன்!

தேடல்  08

அவனுக்காக..

தன் முன்னே வந்து நின்ற கார்த்திக்கை அவள் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை என அவள் விழிகளிலேயே தெரிய அதே அதிர்வில் தன் மீது பார்வையை பதித்து நின்றிருந்தவளின் மீது அத்தனை கோபமாய் வந்தது,பையனுக்கு.

"கார்த்திக்..இவங்க தான் உங்க டீம்..ருத்ரா,சவிதா,கர்ணன் அன்ட் யாழினி.." என்று நால்வரையும் அறிமுகப்படுத்தவே கவனம் கலைந்தது,பையனுக்கு.

கர்ணனிடம் மட்டும் சிறு துளிப் புன்னகையொன்றை சிந்தியவனின் முகமோ பெண்களின் புறம் இயல்பாகிட அந்தப் பார்வையிலேயே எட்டி நிறுத்தும் தன்மை.

சவிதாவும் ருத்ராவும் அவனின் இறுகிய முகத்தைக் கண்டு பயந்து நிற்க யாழினியும் உள்ளுக்குள் நடுங்கத் தான் செய்தாள்.வெளியில் காட்டிக் கொள்ளவில்லை,அவ்வளவே.

"கம்ம்ம்ம்..." அழுத்தமாய் உரைத்து விட்டு விடுவிடுவென வெளியேறிட அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் பின்னூடு சென்றனர்,நால்வரும்.

அவனருகிலேயே அவர்களுக்கான இடம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்க கார்த்திக்கிற்கு சரியாய்  நேர் பின்னே தான் அமர்ந்திருந்தாள்,யாழினி.

முதல் நாள் என்பதால் பதட்டமொன்றிருக்க முன்னர் கண்ட கார்த்திக்கின் கடுமை முகத்தை எண்ணி கூடுதலாய் பயமும்.

தவறு ஏதாவது நேர்ந்து விட்டால் காட்டுக் கத்தல் கத்துவானோ..? இல்லை  கன்னத்தில் அறைவானோ..? கன்னத்தில் கையை வைத்தவளுக்கு
விரும்பிய திசையில் சிந்தனை சிறகடிக்க இதயம் படபடத்தது.

அடிக்கடி ஓரப்பார்வையால் அவனைப் பார்த்து எச்சில் விழுங்கிக் கொண்டவளின் விழிகளில் அதீத பயம்.
ருத்ராவும் சவிதாவும் அழும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்க நேரம் பார்த்து சந்தேகமொன்று வந்தது,யாழினிக்கு.

"ருத்ரா..இது என்னமோ எழுதி இருக்கு..என்ன பண்றதுன்னு புரியல..கொஞ்சம் பாருங்களேன்.." அருகே இருந்தவளிடம் கையில் இருந்த கோப்பை காட்டி கிசுகிசுக்க எட்டிப் பார்த்தவளுக்கு இருந்த மனநிலையில் எதுவும் சரியாய் புரியவில்லை.
இயல்பாய் இருந்திருந்தால் எளிதாய் பிரச்சினையை இனங்கண்டு கொண்டு இருக்கலாமோ என்னவோ..?

விழிகளில் கடுமையைத் தேக்கி அவன் காட்டியிருந்த பாவனையில் பயம் தான் மனதில் நிறைந்திருந்தது.இதில் மூவரும் பயந்த சுபாவம் வேறு.

சவிதாவிடம் காட்ட அவளும் பதிலுக்கு உதடு பிதுக்க பதுங்கியிருந்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கார்த்திக்கிடம் கேட்க முயல வார்த்தைகள் வருவேனா என்றதே.

"ச..சார்ர்.." காற்றாய் வெளிவந்த குரல் அவளுக்கே கேட்காத பொழுது அவன் செவியில் எங்கனம் அலைமோதிட..?

"கொஞ்சம் சத்தமா பேசுங்க...அப்போ தான் சாருக்கு கேக்கும்.."

சவிதாவின் அதட்டலில் முறைத்துப் பார்த்தவளின் பார்வையில் "நீ வந்து பேசிடேன்.." என்கின்ற வார்த்தைகள் தான்.

அவளின் விழிமொழியிலே தலை தாழ்த்தி சவிதா தன் வேலையில் ஆழ ஆழ மூச்செடுத்து எச்சில் விழுங்கி மீண்டும் "சார்ர்ர்ர்" என்றவளின் குரல் தற்சமயம் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது.

"யெஸ்ஸ்ஸ்ஸ்.." வழமையான தன் தொனியில் அழைத்துக் கொண்டே அவன் திரும்ப அவனின் முகத்தை கண்டதும் அவளின் மொத்த தைரியமும் கரைந்து காணாமல் போயிருக்க பேந்த பேந்த விழித்தாள்.

"மிஸ்.யாழினீஈஈஈஈ.." அவன் கேட்க அவசரமாய் தன் கையில் இருந்த கோப்பை அவன் புறம் நீட்டியவளைக் கண்டு அவனின் புருவங்கள் இடுங்கின.

"என்ன ப்ராப்ளம்..?" கோப்பை வாங்காமலே அவன் கேட்க பையனின் அதிகாரத் தொனியில் வெகுவாய் பயந்து விட்டாள்,அவளும்.

"இதுல போர்..போர்த் பேஜ்ல என்..என்ன இருக்குன்னு புரில.." திக்கித் திக்கிக் கேட்க அவளைப் பாராமல் கோப்பை வாங்கியவனுக்கு அதில் ஏதும் குழறுபடி இருப்பதாக தெரியவில்லை.

அனைவரையும் பயமுறுத்தி விட்டு பையன் தெளிவாய் அல்லவா இருந்தான்.

"போர்த்ல எந்த ப்ராப்ளமும் இல்லயே.."

"அப்போ பிப்த்.." நடுங்கிய குரலில் முற்றாய் குழம்பியவளோ உளறிக் கொட்ட விழி நிமிர்த்தி பார்த்தவனின் பார்வையில் சத்தியமாய் அவளுக்கு கண்கள் கலங்கியே விட்டன.

"தெளிவா சொல்லுங்க போர்த்தா பிப்தா..?" அவனின் தொனியே இதுவென்று தெரியாதவளுக்கு கண்ணீர் வழிந்தே விட்டது.

அவளின் கண்ணீரைக் கண்டு அவனுக்கு கோபமாய் வர "அப்றமா கேளுங்க.." அதட்டலாய் சொல்லி விட்டு திரும்ப வழிந்த கண்ணீரை துடைத்த படி மறு புறம் திரும்பிக் கொண்டவளின் மனநிலை முற்றிலும் மாறிப் போய் இருக்க விண் விண்ணென்று வலிக்கத் துவங்கியது,தலை.

இடைவேளை நேரம் என்பதால் சிற்றுண்டிச் சாலையில் ஆட்கள் நிரம்பியிருக்க தூணின் அருகே போடப்பட்டிருந்த மேசையை பிடித்து அமர்ந்திருந்தனர்,பெண்கள் மூவரும்.

யாழினி தான் இலக்கின்றி வெறித்த படி காபியை பருகிக் கொண்டிருக்க அவளின் முகத்தில் இன்னும் கலக்கம் மிச்சமிருந்தது.

"யாழினீ இப்போ நீங்க ஓகேவா..?" சவிதாவின் கேள்விக்கு மேலும் கீழும் தலையசைத்தாலும் அவளோ முழுதாய் இயல்பு நிலை மீண்டிருக்கவில்லை,என்பது என்னவோ உண்மை தான்.

"ரொம்ப பயந்துட்டீங்களா ஆஆஆஆ..?" கனிவாய் கேட்ட ருத்ராவுக்கு தலையாட்டியவளுக்கு பயத்தில் மீண்டும் கண்கள் நனையும் போன்றிருந்தது.

"ஏன் தான் சார் இப்டி இருக்காறோ தெரியல..என்னம்மா அதட்டுறாரு..கண்ணால கூட திட்றாரு..மொத நாளே இவ்ளோ மோசமா இருக்கும்னு நா கனவுல கூட நெனச்சு பாக்கல.."

"அவரு திட்னது கூட பரவால..நா அழுதது தான் என்னால ஏத்துக்க முடியல..நா அப்டி சட்டுன்னு அழுதுர மாட்டேன்..அதான் அவமானமா இருக்கு.." உதடு பிதுக்கிய படி காபி டம்ளரை மேசையில் வைத்தவளின் பார்வை அவர்களில் இருந்து இரண்டு மேசை முன்னே அமர்ந்திருந்தவர்களின் மீது படிய தலையாட்டி சிரித்தவாறு தட்டில் இருந்த வடையை கையில் எடுத்தவளை யோசனையுடன் பார்த்தாள்,ருத்ரா.

"எதுக்கு யாழினி அந்த லவ்வர்ஸ பாத்து சிரிக்கிறீங்க..?" என்கவே அவளின் பார்வை போன திசையில் கவனித்துப் பார்த்த சவிதாவுக்கும் அதே கேள்வி தான்.

ஆணொருவனும் பெண்ணொருத்தியும்  கைகளை கோர்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்க ஒரே கண்ணாடிக்குவளையில் இரண்டு ஸ்ட்ரோ போடப்பட்டு அவர்களின் மேசையில் வைக்கப்பட்டிருந்தது.

"உங்களுக்கு லவ் மேல நம்பிக்க இல்லயா யாழினி..?"

"ச்சே அப்டிலாம் இல்ல..இப்டி லவ் பண்றதுல கொஞ்சமா நம்பிக்க இல்ல..அவ்ளோ தான்..அதுக்குன்னு நா இந்த லவ்வ தப்பா சொல்லல..நா அவ்ளவா நம்ப மாட்டேன்.."

"சத்தியமா ஒன்னும் புரியல..ருத்ரா கேட்ட கேள்வி தான் என் மண்டக்குள்ளயும் ஓடிகிட்டு இருக்கு.."

"தெளிவா சொல்லனும்னா சைவக்காதல் மேல தான் நம்பிக்க..இப்டி தொட்டுகிட்டு பேசறது எல்லாம் எனக்கு புடிக்காது..புடிக்காது பா..புடிக்காது மட்டுந்தான்..அது சரியா பிழயான்னு பேச வர்ல.."

"வாட்ட்ட்ட்..ஆர் யூ மேட்..? பழய காலத்துல இருக்கீங்க.."

"ஏன்..?பழய காலத்துல புதுசா யோசிச்சவங்க இருக்கும் போது இப்போ இருக்குறவங்க பழய காலத்து லவ்வ விரும்பக் கூடாதா என்ன..?"

"அப்போ லவ் அட் பர்ஸ்ட் சைட்ட்ட்ட்.."

"அரேன்ஜ் மேரேஜ் மாதிரி யாராச்சும் பாத்ததும் ஸ்பார்க் அடிக்கலாம்..ஆனா லவ் வர்ரது..என்னோட தாட் படி இம்பாஸிபில்..என்னோட தாட் படி பா.." இறுதியை அழுத்தி சொல்ல அதில் தொனித்த அழுத்தத்தில் மற்றைய இருவருக்கும் புன்னகை துளிர்த்தது.

"இந்த காலத்துல சைவக்காதல் இருக்கும்னு தோணுதா..?"

"அந்த காலத்துல அசைவக்காதல் இருந்ததுன்னா இந்தக் காலத்துல சைவக்காதல் இருக்கத் தானே செய்யும்..என்ன மாதிரி யோசிக்கிற ஒருத்தராவது இருக்க மாட்டாங்களா..?"

"அப்போ உங்களுக்கு ரொமான்டிக் பர்ஸன்ஸ் மேல அவ்ளவா நம்பிக்க இல்லியா..?ரொமான்ஸ் இல்லன்னா லவ்வே இல்லல"

"ம்ம்ம்ம்..இல்லன்னு தான் சொல்லலாம்..பட் தெரில..அது மட்டுல்லாம லவ்வ பீல் பண்ண வக்கிறதுக்கு ஒரு பார்வ போதும் ல..வீட்ல கூட தான் அப்பா அம்மா இருக்காங்க அவங்களுக்குள்ள லவ் இல்லாமயா இருக்குது..இல்லன்னா வன் சைட் லவ்..அதுவும் லவ் தான..அதுல ரொமான்ஸ் இருக்க மாட்டேங்குது தான.."

"உங்க தாட் படி லவ் பண்ண ரொமான்ஸ் தேவயில்ல..?"

"ம்ம்..அப்டிங்கலாம்..நீங்க சொல்ற ரொமான்ஸ் தேவயில்ல..அது தான் அவசியம் இல்லன்னு சொல்றேன்.."

"புரியல.."

"மெதுவா சொல்றேன் கேட்டுகோங்க..யாராச்சும் கேட்டுட்டு எனக்கு அடிக்க வர போறாங்க..ஜஸ்ட் ஒரு லுக்ல லவ்வ காட்டி அவங்கள பாத்தாலும் அது ரொமான்ஸ் தான்..ஆனா இப்போ அத யாரும் ஏத்துக்க மாட்டாங்க..இப்போ பொதுவா..பொதுவா பா..ரொமான்ஸ்னு சொல்றது நீங்க நெனக்கிற விஷயங்கள தான்..அது தான் தேவயில்லன்னு சொன்னேன்.."

"வெளில போய் வாயத் தெறந்துராதீங்க யாழினி..காமெடி பண்ணி கலாய்ச்சி வச்சி செய்வாங்க.." என்க தன்னாலே அவளிதழ்களில் மெல்லிய முறுவல் பூத்தது.

"பண்ணி தான் இருக்காங்க..அதுக்காக என்னோட தாட்ட மாத்திக்க முடியாதுல..நா அவங்க தாட்ட தப்புன்னு சொல்லல..அது மாதிரி என்னோட தாட்டும் பிழ கெடயாது..அப்போ யாருக்கும் கலாய்க்கிற உரிம கெடயாதுல.."

"அது சர் தான்.."

தொட்டுரசி உருகி வழிந்து முத்தங்களாலும் அணைப்புக்களாலும் பகிரப்படும் காதலில் ஆழம் அதிகம் என்பதில் அவளுக்கு ஏனோ அவ்வளவாய் நம்பிக்கையில்லை.

அதிலும் பார்த்தவுடன் காதல் வருவது என்றால் அத்தனை கசக்கும் பெண்ணவளுக்கு.

அவளை பொறுத்த வரையில் காதல் என்பது உயிரின் அடி ஆழத்தில் ஊற்றெடுத்து இதயம் முழுவதும் பிரவாகமெடுக்கும் அழகிய உணர்வுகளின் குவியலுடனான ஒரு அழகியல்.

அந்த அழகியலை உணரவோ உணர்த்தவோ கவிதை உரைகளும் தேக உராய்வுகளும் தேவையில்லை என்பது அவளின் ஆணித்தரமான கருத்து.

ஆத்மார்த்தமான தம்பதிகள் அடிக்கடி சீண்டிக் கொண்டும் தீண்டிக் கொண்டும் இருப்பதில்லையே.ஆனாலும்,அவர்களிடையே வலுவாய் பின்னப்பட்ட அடுத்தவர் கண்ணுக்குத் தெரியாத காதல் இழையொன்று இருக்கத் தானே செய்கின்றது.

காதலின்றி முத்தங்களும் அணைப்புக்களும் இருக்கும் பட்சத்தில் முத்தங்களும் அணைப்புக்களுமின்றி காதல் இருக்காதா என்ன..? அது தான் அவளின் கருத்து.

அப்படிபட்ட மனநிலையில் இருப்பவளுக்கு பார்த்தவுடன் காதல் தோன்றுவதில் எல்லாம் துளியேனும் நம்பிக்கை இல்லை.மடத்தனம் என்பாள்.

அதையும் பிழை சொல்ல முடியாது.
காலத்துற்கேற்ப காதலே மாறிக் கொண்டு வருகையில் காதல் பற்றிய எண்ணவோட்டங்கள் தனி மனிதனுக்கேற்ப மாறு படத்தானே செய்யும்..?
அதில் பிழை சொல்ல எதுவும் இல்லையே.அவரவருக்கேற்ப காதலின் வரைவிலக்கணமும் அதன் வரையறையும் வேறுபடத் தானே செய்யும்.

அவளின் கருத்து மற்றையவர்களுக்கு பிழையாகிப் போனாலும் அவள் கருத்தில் பிழை இல்லையே.பெரும்பான்மையினர் ஒத்துக்கொள்ளவில்லை என்று சரி பிழையாகிடாதே.

அப்படியே அவர்களின் கதை நீள ருத்ராவும் யாழினியும் கொஞ்சம் நெருக்கமாகி விட்டிருந்தாலும்  சவிதா அந்தளவு பேசிக்கொள்ளவில்லை.

சட்டென யாருடனும் பழகிவிடும் ரகம் இல்லையே,அவள்.

உண்ட களைப்புடன் மீண்டும் தம்மிடத்துக்கு வந்து வேலையில் ஆழ யாழினிக்குத் தான் மதிய நேர தூக்கம் கண்ணை சுழற்றியது.

வேலைக்கு சேரும் வரை மதிய நேரத்தில் உணவுக்குப் பின் அடித்துப் போட்டது போல் உறங்கிப் பழகியிருந்தவளுக்கு அந்த பழக்கமே வினையாகிடப் போவது தெரியாதே.

கொட்டாவி விட்ட படி வேலை செய்து கொண்டிருந்தவளின் கரங்களோ அடிக்கடி தண்ணீர்ப் போத்தலை எடுத்து வாய்க்குள் சரித்துக் கொண்டிருக்க அவளின் நிலை புரியாது போகுமா பையனுக்கு..?

"ஆஆஆஆஆ.." வாயை புறங்கையால் மூடிய படி கொட்டாவி விட்டவளுக்கு கண்ணீரும் வழிய "மிஸ்.யாழினி.." காட்டமாய் ஒலித்தது,அவன் குரல்.

திடுமென கேட்ட பையனின் அழைப்பில் அதிர்ந்து அரண்ட விழிகளுடன் சுழல் நாற்காலியை அவன் திருப்பிய படி எழுந்து நிற்க அவளின் பரபரப்பான செயல்களால் தள்ளப்பட்ட சுழல் நாற்காலி இன்னொரு நாற்காலியில் மோதியே அசைவை நிறுத்திற்று.

தூக்க கலக்கம் மிகுந்த விழிகளில் பயத்தையும் தேக்கி அவள் பார்க்க இன்னுமே உறுத்து விழித்தன,அவனின் விழிகள்.

"என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க..?"

"............."

"தூங்குறதுன்னா வீட்ல பண்ணிக்கோங்க..இங்க புல் போகஸ் வர்க்ல தான் இருக்கனும்..?  புரிஞ்சுதா..?" ஆட்காட்டி விரலை நீட்டி அவன் எச்சரிக்க ஆமோதிப்பாய் தலையசைத்தவளுக்கு மீண்டும் கண்ணீர் சேர்ந்து கொண்டது.

               ●●●●●●●●

"ஆனாலும் அவர் அப்டி பண்ணிருக்க கூடாதுமா..ஒரே அதட்டல் மெரட்டல்..நா அழுதுட்டேன்..ஆனாலும் நா பாத்ததுல ஒரு டிபரன்டான கேரக்டர்.." சமையற் கட்டில் ஏறி அமர்ந்து காபியை பருகிய படி சொன்னவளின் வார்த்தைகளில் மெலிதாய் சிரித்துக் கொண்டார்,மீனாட்சி.

"ஆமா நீ எதுக்கு அழுதுட்டு வந்த..?" அடுப்பில் இருந்த குழம்பை கரண்டியால் கிளறிய படி கேட்டவரை முறைத்து தள்ளினாள்,
யாழினி.

"அப்டி கத்து கத்துன்னு கத்துனா நா என்ன பண்றது..?" விட்டேற்றியாய் கேட்டவளுக்கு தாயின் கேள்வியின் சூட்சுமம் புரிந்திட வாய்ப்பில்லை.

"ஆனாலும் அந்த ஆளு பாவம் மா..ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பாக்கறாங்க..ஆபிஸ்ல கூட நெறய பேருக்கு அவர் மேல பொறாம.." என்றவளின் குரலில் உண்மையான வருத்தம் இழையோடியது.

 தேடல் நீளும்.

2024.03.25


Leave a comment


Comments


Related Post