இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 09 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 25-03-2024

Total Views: 14728

காதலொன்று கண்டேன்!

தேடல்  09

அவளுக்கென..


கதவைத் திறந்து விட்ட காளையின் கரங்கள் அந்தரத்தில் மிதக்க இருவருக்குமே அது உறைநிலை தான்.

மித்ரா அரண்டு விட்டாள்.காளையின் வீடென்று தெரிந்திருந்தால் காலடியைக் கூட வைத்திருக்க மாட்டாளே.அவனின் வீடு அடுத்த வீடு என்று  நினைத்து தான் தோழியை அனுப்பி வைத்ததே.ஆனால்,நடந்தது என்னவோ தலைகீழாய் இருந்தது.

காளைக்குள் கனவா என்கின்ற எண்ணம் தான் முதலில் எட்டிப் பார்த்தது.இத்தனை நேரம் அவன் சிந்தனைப் பெட்டியில் முட்டித் தள்ளி நிறைந்திருந்திருந்தது,அவள் ஆயிற்றே.

படக்கென விழிகளை இறுகப் பொத்தி மீண்டும் திறந்தவனின் செயலில் ஒரு நொடி அவன் முகத்தில் இயல்பாய் இருக்கும் மொத்த இறுக்கமும் தொலைந்து தான் போயிருந்தது.

அவன் விழி மூடிய சமயமே தப்பித்து ஓடியிருக்க வேண்டும் இருந்த பயத்தில்.ஆனால்,அவளுக்கு அந்த நேரம் அது யோசனையில் எழவில்லை.

விழிகளை இறுக மூடி ஒரு கரத்தை மடக்கி பக்கவாட்டாய் திருப்பி உதடுகளில் அழுத்தி ஏறி இறங்கிய தொண்டைக்குழியுடன் "கனவாய் இருக்க வேண்டும்.." என மனம் வேண்ட இயல்பு தளர்ந்து அவன் நின்றிருந்த தோரணை ஏனோ அத்தனை அழகு.விழியெடுக்காது ரசிக்க வைத்திடும் தனித்துமான அழகு.

அவளோ அவனின் கோபத்தை எதிர்ப்பார்த்திருக்க முரணாய் அல்லவா இருந்தது,காளையின் நடவடிக்கைகள்.

அவள் விழி திறக்கையில் அவளின் புன்னகை இதழ்களுக்குள் ஒளிந்து கொள்ள அமர்த்தலாய் அவனைப் பார்த்தவனின் முகத்தில் அதே இறுக்கம் என்றாலும் அவளின் முன்னே உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தன,அவனின் ஆளுமையும் கம்பீரமும்.

ஒரு நொடி அவனின் குழந்தைத் தனத்தை ரசித்தவளுக்கு அவனின் இறுக்கமான முகம் நடுக்கத்தை தந்தது.

"என்ன விஷயம்..?" கத்தரித்த படி கம்பீரமாய் அவன் கேட்க விழி நிமிர்த்தி அவனைப் பார்த்தவளுக்கு அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியுமாயினும் காளையின் நிலை..?

மிரட்சியும் பயமும் சரி விகிதமாய் கலந்திருக்க ஏதோ ஒரு புரியாத நுண்ணிய உணர்வைத் தேக்கி அவள் பாய்ச்சிய பார்வை அவனை மொத்தமாய் சரித்தே விட்டிருந்தது.

ஆளுமையானவன் தான்.கம்பீரமானவன் தான்.ஆனால்,பெண்ணவளின் ஒற்றைப் பார்வையில் எல்லாம் அடங்கி விடுகிறதே.அர்த்தம் அறியும் முன்னே அவளின் அர்த்தப் பார்வை அவனை அடியோடு கவிழ்த்து விடுவது போல் தோன்றிட உள்ளுக்குள் ஆட்டம் கண்டாலும் நேர்ப்பார்வையைத் தான் பதிலாகத் தந்து கொண்டிருந்தான்.என்னவாயினும் அவன் ஜீவா அல்லவா..?

"சா..சார் டொ..டொனேஷன்..?" அவனின் தடுமாற்றம் புரியாது பயந்த படி கையில் இருந்த உண்டியலை அவனின் முன்னே நீட்டும் போதே கைகள் நடுங்க வார்த்தைகள் தந்தி அடித்தது.

நா வரண்டு தொண்டைக்குழி வற்றிப் போக அவனைப் பாராது அங்கிங்கே பார்வையை அலைய விட்ட படி கஷ்டபட்டு இழுத்து ஒட்டிக் கொண்ட புன்னகையுடன் கேட்டவளுக்கு அதீத பயத்தில் உடலெல்லாம் வியர்த்திருந்தது.

"வன் மினிட்.." பிசிர் தட்டாமல் சொன்னாலும் அந்த இரு வார்த்தைகளையும் உதிர்க்க அவனின் உதடுகள் செய்த சதியை தகர்க்க அவன் பட்ட பாடு அவனுக்கல்லவா தெரியும்.

விருட்டென உள்ளே நடந்தவனின் செயலை அவள் கோபமாய் நினைக்க மறுபுறம் திரும்பிய காளையின் விரல்களோ நெஞ்சை அழுத்தமாய் நீவி விட்டுக் கொண்டது.

"என்னாச்சு பையா..ரிலாக்ஸ்.." இதழ்கள் இதயத்துக்கு அறிவுரை கூற நெற்றியோரமும் கழுத்தோரமும் வியர்வைத் துளிகள்.

அவனைப் பாராது இருந்த பொழுது அவனின் விழிகள் அவளை மட்டுமே பார்த்ததையும் அந்தப் பார்வையை விலக்கிக் கொள்ள முடியாமல் தவித்ததையும் அவள் அறிந்திட வாய்ப்பில்லை.

போகும் வழியிலியே மேசையில் இருந்த நீர்க்குவளையை எடுத்து நீரை  வாய்க்குள் சரித்தாலும் உயிருக்குள் உண்டான படபடப்பு ஊமையாகி உறங்க மறுத்ததே.

கையில் காசுத் தாள்களுடன் வெளியே வந்தவனுக்கு அவளின் பார்வையை எதிர் கொள்ளும் தைரியம் கொஞ்சமும் இல்லாது போக மீண்டும் அவள் தன் விழிகளை பார்க்கக் கூடாது என வேண்டியவனாய் அவளருகே வந்து பணத்தை நீட்டப் பார்க்க விரல்கள் நடுங்கிற்று.

"டில்ல காட்டுங்க.." தன் குரலை இயல்பாக்கி  அவன் சொல்லிட அவள் கூர்ந்து கவனித்திருந்தால் அதில் இருந்த வித்தியாசம் அவளுக்கு புரிந்திருக்கும்.

"சரி சார்.." என்ற படி உண்டியலை நீட்ட அதை வாங்கி தன் வயிற்றோடு சேர்த்த படி அழுத்த பணத்தாளை போட்டவனின் கரங்கள் நடுங்க இதழ்கள் பிளந்து சுவாசத்தை இலகுவாக்கின.

ஏதோ இனம் புரியா படபடப்பு அவள் முன்னே தோன்றி அவனை இம்சித்தது.

திடுமென  தான் எந்த காரணமும் கேளாது பணத்தை கொடுப்பது நினைவில் வர தன்னையே  கடிந்து கொண்டவனுக்கு இத்தனை நேரம் அவன் அவனாய் இல்லை என்பது புரியத்தான் செய்தது.

"என்ன ரீசன்காக டொனேஷன் கலெக்ட் பண்றீங்க..?"

"இங்க ஹோம்ல இருக்குற பசங்களுக்காக சார்.."

"எந்த ஹோம்..?"

"தெரேஸா ஹோம் சார்..இங்க முச்சந்தி பக்கத்துல இருக்குறது.."

"ம்ம்ம்ம்.." என்றவனுக்கு அவளை அதற்கு முன்னர் அந்த அநாதை ஆசிரமத்தில் கண்டதில்லை என்கின்ற சிந்தனை வேறு.மாதத்திற்கொருமுறை சென்று வருவது அவனின் வழக்கம் ஆயிற்றே.

"தேங்க் யூ சார்.." பணத்தை போட்டு விட்டு நிமிர்ந்தவனின் விழி பார்த்து அவள் சொல்ல மீண்டுமாய் அவனிதயத்தை முட்டி மோதிய பொருள் புரியா பார்வையில் மொத்தமாய் சிதறித் தான் போனான்,காளையவன்.

தலையை உலுக்கிய படி அவளிடம் உண்டியலை நீட்டியவனின் கைதவறி அவனின் காலடியில் விழுந்த உண்டியலோ "டம்ம்ம்ம்ம்.."என்ற சத்தம் அவ்விடத்தை நிரப்பி விட்டது.

"ஐயோ சாரி சாரி சார்.." தவறு தன் மீது இல்லையென்றாலும் மன்னிப்பு கேட்ட படி குனிந்து எடுத்தவளோ அவனிடம் ஒரு இயல்பான புன்னகையை வீசி விட்டு கடந்து சென்றிட கதவை அடைக்க மறந்து   எத்தனை நேரம் நின்றிருந்தானோ..?

அவளாய் இருப்பவளின் அருகாமையில் மட்டும்..
மட்டுமே மட்டும் அவன் அவனாய் இல்லை.

அடித்த அலைபேசி சத்தத்தில் தான் சிந்தனை மீண்டது,காளைக்கு.

            ●●●●●●●●●

அந்தி நேரம் என்பதால் மங்கிய சூரிய வெளிச்சம் அவ்விடத்தில் பரவி ஒரு வித தனி அழகைக் கொடுத்தது.

அந்த பெரிய வீட்டின் மொட்டை மாடியில் நின்று அஸ்தமனத்தை பார்க்கும் போது மனம் அமைதியடைவதை காளையும் உணர்ந்து தான் இருக்கிறான்.

மொட்டை மாடியின் விளிம்பில் நின்றிருந்த கட்டில் உள்ளங்கைகளை பதித்து வானத்தை விழிகளால் உரசிக் கொண்டிருந்தாலும் அடிக்கடி மித்ராவின் நினைவுகள் மனதில் வந்து போயின.

"என்ன ஜீவா..பெரிய யோசனயா இருக்க போல..?" ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டவாறு அவனருகே வந்து நின்றார்,ஜெயகிருஷ்ணன்.

அடங்காத காளையவனை கொஞ்சமாய் அதட்ட அவன் அதிகாரம் கொடுத்திருக்கும் ஒரே நபர்.அவர் பேச்சைக் கேட்டுத் தான் அவன் இங்கு வந்திருப்பதே.

"சொல்லுங்க மாமா..என்ன விஷயம்..?" அவர் கூப்பிட்டதன் காரணம் தெரிந்தாலும் வினாத் தொடுத்திருந்தான்.அவரின் வாயால் கேட்க வேண்டும் என மனம் கங்கணம் கட்டிக் கொண்டதோ என்னவோ..?

"நா எதுக்கு கூப்டேன்னு உனக்கு தெரியாதா..?" எப்படியும் அவன் கண்டு பிடித்திருப்பான் எனத் தெரிந்தவரோ ஆழ்ந்த குரலில் சொல்ல வெற்றுப்பார்வை பார்த்தாலும் சலிப்புடன் மெதுவாய் அவனிதழ்கள் விரிந்தன.

"உங்களுக்கு எத்தன தடவ மாமா சொல்றது..இந்த கல்யாணம் கன்றாவி எல்லாம் எனக்கு செட் ஆகாதுன்னு.." என்றவனின் விழிகளுக்குள் மித்ராவின் விம்பம் வர கொஞ்சம் அதிர்ந்து போயிட சட்டென சுதாரித்துக் கொண்டவனுக்குள் உணர்வுகளின் ஆர்ப்பாட்டம்.

"ப்ச்ச்..ஜீவா இப்போ உனக்கு சரி வராதுன்னு தோணலாம்..ஆனா ஒரு கட்டத்துல நமக்குன்னு ஒருத்தங்க வேணும் பா..புரிஞ்சிக்கோடா.."

"மாமா..என்னவோ சொல்லுங்க..ஆனா எனக்கு இந்த மேரெஜ் கமிட்மண்ட்ஸ்ல கொஞ்சமும் இன்ட்ரஸ்ட் இல்ல..நா கல்யாணம் பண்ணா அந்த பொண்ணோட வாழ்க்கயும் சேந்து தான் வீணாம போகும்.."

"இங்க பாரு ஜீவா..நீ சொன்னங்குற ஒரே காரணத்துக்காக நா ஒனக்கு பொண்ணு பாக்கல..ஆனா இதுக்கு மேலயும் அப்டி இருக்க முடியாது..ஒரு பொண்ண பாத்துட்டேன்..போய் அந்த பொண்ண பாரு..புடிச்சி இருந்ததுன்னா மேற்கொண்டு பேசலாம்.."  என்க அவரைப் பார்த்து நக்கலாய் சிரித்தான்,காளையவன்.

"பொண்ணு எனக்கு புடிச்சிருந்தா தான கல்யாணம் நடக்கும்..புடிக்கலனா எப்டியும் நடக்காதுல.."

"பர்ஸ்ட்டு பொண்ண பாரு..அதுக்கப்றம் வந்து முடிவ சொல்லு.."

"எப்டியும் என்னோட பதில் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சி தா இருக்கும்..ஆனாலும் உங்க பேச்ச தட்டாம நா போய் பொண்ண பாக்கறேன்.." எள்ளல் தொனிக்க கூறி விட்டு கார் சாவியை சுழற்றிய படி விசிலடித்துக் கொண்டு நகர்ந்தவனைக் கண்டு அவரிதழ்களில் அர்த்தப் புன்னகை.

அதே நேரம்,

கையில் இருந்த ஜீவாவின் புகைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்த தீப்திக்கு அதிர்வு அடங்கியபாடில்லை.

"மித்ரா..இந்தாளோட கேரக்டர் பத்தி இவ்ளோ சொல்லியும் போய் மீட் பண்றேன்னு சொல்லிருக்க..நெஜமாவே புடிச்சிருக்கா..இல்லன்னா வீட்ல சொன்னதுக்காக ஒத்துக்கிறியா..?" ஆராய்ச்சியாய் அவள் கேட்க தீயென முறைத்தாள்,மித்ரா.

"எதுக்குடி இப்டி மொறக்கிற..நெஜமா தான் சொல்றேன்..ரொம்ப டேன்ஜரான ஆளு..கன்னாபின்னான்னு கோபம் வரும்..நா பயந்து பம்மிட்டு வந்துருக்கேன்..நல்லா யோசிச்சு முடிவ எடு..போன தடவ மாதிரி தப்பு பண்ணாம.." தீப்தி அழுத்தி சொல்லவும் மித்ரா முகம் ஒரு வித அழுத்தத்தை தத்தெடுத்துக் கொண்டது.

சடுதியாய் மாறிய அவளின் மனநிலையைக் கண்டு தீப்திக்கு முகம் கசங்கினாலும் மீண்டும் அவள் வாழ்க்கை பிழையாகாது இருக்க இதை சொல்ல வேண்டும் என அவள் உணர்ந்து தான் இருந்தாள்.

"நா சொல்றதுன்னு தப்பா எடுத்துக்காத மித்ரா..போன தடவயும் பெரிய ப்ராப்ளம் ஆச்சு..உனக்கு புரியுதுல..திரும்ப அப்டி ஏதும் உனக்கு நடந்துடக் கூடாதுன்னு தான் சொல்றேன்.."

"ஜீவா சார் நீ திங்க் பண்ற மாதிரி கேரக்டர் இல்ல..அவருக்கு ரொம்ப கோபம் வரும்..கண்ணு மண்ணு தெரியாத கோபம்..எல்லாத்தயும் தனியா பேஸ் பண்ணி வந்த மனுஷனுங்குறதால திமிரும் எக்கச்க்கமா இருக்கு.."

"நா ஆபிஸ்ல ஜாய்ன் பண்ணி ரெண்டு மூனு நாள் தான்..ஆனா ஏற்கனவே இருந்தவங்க சொல்லித் தான் இருக்காங்க..ரொம்ப ரகட் பர்சன்னு..யாராச்சும் சைட்டடிச்சா கூட அவருக்கு அவ்ளோ கோபம் வரும்..பல பேரு லவ் லெட்டர் கொடுத்து வாங்கி கட்டிகிட்டு இருக்காங்க.." அவள் தீவிரமாய் சொல்ல அவன் அறைவதாய் நினைத்துப் பார்த்தவளுக்கு மெல்லிய புன்னகையொன்று ஓடியது,இதழ்களில்.

"ப்ச்ச்..நா இவ்ளோ சீரியஸா பேசறேன்..நீ எதுக்கு சிரிச்சிகிட்டு இருக்க..?"

"ஒன்னுல்ல நீ சொல்லு.."

"அதான்டி..உன்னோட கேரக்டருக்கும் அவரோட கேரக்டருக்கும் கொஞ்சமும் செட் ஆகாது டி..அவர் உன்ன சரியா வச்சு பாத்துக்க மாட்டாரோன்னு தோணுது..ஏன்னா அவரு அப்டி தான் நடந்துக்குறாரு..பொண்ணுன்னு கூட பாக்காம திட்டு விட்றாரு..பொண்டாட்டின்னா கைய நீட்ட மாட்டார்னு என்ன கேரண்டி..?"

"தீப்தி..ஒருத்தர் நம்ம கிட்ட நடந்துகிட்டத வச்சி அவரோட கேரக்டர ஜட்ஜ் பண்ணக் கூடாது டி.."

"ஐயோ நீ வேற..தத்துவம் பேசிகிட்டு..அவரெல்லாம் ரோபோ மாதிரி டி..எந்த எக்ஸ்ப்ரஷனுமே காட்ட மாட்டாரு..அவ்ளவா பேசக் கூட மாட்டாரு..அவர கட்டிகிட்டு அவர புரிஞ்சிகிறதுக்கு மூஞ்ச உத்துப் பாத்துகிட்டே உன்னோட வாழ்க்க போயிரும்..அவ்ளோ தான் நா சொல்லிட்டேன் நீ டிசைட் பண்ணு.." கூறி விட்டு மித்ராவின் முகம் பார்க்க அவள் முகத்தில் கோபத்தின் ரேகைகள்.

"இப்போ எதுக்கு கடுப்பாகி இருக்க..?"

"ஒன்னுல்ல.." என்றவளின் முகத்திலும் குரலிலும் கோபம் வெளிப்படத்தான் செய்தது.

பழையது ஏதாவது நினைவில் வந்திருக்கக் கூடும் என்று சரியாய் கணித்துக் கொண்டாள்,தீப்தி.
அவள் ரணத்தை கிளறி விட்டதை எண்ணி தீப்திக்குமே சற்று சங்கடமாக இருக்க மன்னிப்பு கேட்டவளுக்கு மென் புன்னகையொன்றை பதிலாகக் கொடுத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு மனம் வலித்தது.

கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவளுக்கோ இதழ்கள் பிதுங்க விழிகளில் மெல்ல மெல்ல நீர்த்திரள் எழத் துவங்கியிருந்தது.

நிஜமாகவே தீப்தியின் வார்த்தைகள் அவளின் பழைய ரணத்தை கீறி விட்டிருக்க இன்னும் அந்த நினைவுகளின் தாக்கத்தில் மனம் வலித்தது.

அவள் மட்டும் அந்த நேரம் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கண்டிருந்தால் நிச்சயம் அவளின் வாழ்க்கை இப்படி இருந்திருக்காதே.

நினைக்கையிலேயே யாரோ குத்தீட்டியால் மனதை தாக்கும் வலி.
கண்ணீர் வழிந்தோடியது.

எல்லோர் வாழ்விலும் சில காயங்கள் இருக்கத் தான் செய்கின்றன,
காலத்தில் கரைந்திடாமல்..
நினைவில் இருந்து கலைந்திடாமல்..

அவளின் வாழ்வொன்றும் அதற்கு விதி விலக்கு இல்லையே.
விழிகளை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவளின் இதழ்களில் மீண்டும் அதே புன்னகை,உயிர்தொடும் வலிகளை உள்ளிருத்தி உயிர்ப்பாய் காட்டிக் கொள்ள.

இதழுக்கும் வலிக்காத புன்னகையில் அநேகமாய் மறைக்கப்படுவது என்னவோ வலிக்க வலிக்க கொல்லும் காயங்கள் தான்.

புன்னகையுடன் கடந்திடுபவர்களுக்கு வலிக்காது என்றெல்லாம் இல்லை.
அவர்களுக்கும் வலிக்கும்.ஆனால்,அந்த புன்னகையை தளர்த்தி விட்டு கதறியழும் சூழ்நிலையில் அவர்கள் இல்லை,அவ்வளவே.

அப்படி ஒரு சூழ்நிலைக் கைதி தான் அவளும்.

தேடல் நீளும்.

2024.03.25


Leave a comment


Comments


Related Post