இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -15 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 26-03-2024

Total Views: 32203

அடுத்து வந்த நாட்களில் நந்தன் மட்டும் நிலா தனியாக சிக்கும் போதெல்லாம் ஏதாவது வேலை சொல்லிக் கொல்லுவான்,  இல்லையா ஏதாவது பேசி அவளை அடிப்பான்.  மற்றபடி மற்றவர்கள் அவரவர்  பள்ளி செல்வதும் வருவதுமாக  இருந்தனர்.

ராமனுக்கு பதினாறாம் நாள் சடங்கு செய்ய வேண்டும், அந்த சடங்கு நடந்துவிட்டால் மலைக் கோவிலைத் தவிர மற்ற  இடங்களுக்கு செல்லலாம் ஆனால் வருஷம் ஆகாமல் திருவிழாக்களில் பங்குப் பெறக் கூடாது.

மார்த்தாண்டம் கொடுத்த பணமெல்லாம் தண்ணீராகச் செலவு ஆனது. பதினாறாம் நாள் முடிந்ததும் விட்ட நாளுக்கு சேர்த்து வேலை செய்து  அவரிடம் வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என மேலும் ஐந்தாயிரம் கடன் வாங்கிருந்தார் ராஜி.

பதினாறாம் நாள் சாப்பாடு முழுவதும் நந்தன் குடும்பத்துடையது என இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மார்த்தாண்டம் வந்து சொன்னார்.

"அதெல்லாம் வேண்டா அண்ணா, நாங்களே பார்த்துக்கறோம் அப்புறம் இதுக்கும் கண்ணு, மூக்கு  காது வெச்சிப் பேச ஆரம்பிச்சிடுவாங்க" என்றார்.

அதுதான் உண்மையும் கூட அவர் நினைத்ததுப் போல தான்  கிருஷ்ணம்மாளின்  வீட்டின் முன் வாசல் இருக்கும் தெருவில் பலப் பெண்கள் பேசிக் கொண்டனர்.

"ஏற்கனவே புருஷன்  எப்போவாது தான் வருவான், அதுவே அவ  மார்த்தியை வளைச்சிப் போட வாகா இருந்தது, இதுல இனி வரவே மாட்டான்னு ஆனதுக்கு அப்புறம் சொல்லவா வேணும் இரண்டுபேருக்கு சவுரியமா போயிடுச்சி,இனி என்ன என்ன கூத்து நடக்கபோகுதோ தெரியல."என வாய்க்கு வந்ததைப் பேச, 

ஏற்கனவே பேசி பேசி தான் கிருஷ்ணம்மாளை அரக்கியாக மாற்றி வைத்திருந்தனர். இதில் மேலும் அவர் மனதில் நஞ்சை விதைப்பது போல் பல பேச்சுகள் அவரை சுற்றி  வந்துக் கொண்டே இருந்தது.

அதன் தாக்கம் வீடு பூச ஆட்கள் வந்தப்போது அவர்களிடம் நேரடியாகவே மனதில் இருந்த நஞ்சை கக்கி இருந்தார் கிருஷ்ணம்மாள்.

இதை நினைவில் வைத்துக் கொண்டு தான் இப்போது பணம் வேண்டாம் என்றார் மார்த்தாண்டத்திடம்.

"இங்கப்பாரு ராஜி ஆயிரம் பேர் ஆயிரம் பேசத் தான் செய்வாங்க எனக்கும் உனக்கும்  மணிக்கும் தெரியும், நம்ப எப்படின்னு? அதுக்காக கவலைப்பட்டுட்டு செய்யறதை வேண்டாம்னு சொன்னினா, இவ்வளவு நாள் என்னைய அண்ணான்னு கூப்பிட்டதுக்கே அர்த்தமில்லாம போய்டும், என்னோட தங்கச்சி புருஷன் செத்துருந்தா இதை தான் பண்ணுவேன். இப்போ பண்ணட்டுமா? வேண்டாமா? நீதான் சொல்லணும் சொல்லு." என முடிவை ராஜியின் கையில் கொடுத்துவிட்டார்.

உதவி என்றால் ஓடி வந்து செய்யும் உறவு கிடைப்பது அரிதிலும் அரிது.அப்படி கிடைத்திருக்கும் உறவை யாரோ ஒருவரின் வார்த்தைக்கு பயந்து  கெடுத்துக் கொள்ளக் கூடாது. எனத் தோன்ற 

"சரிண்ணா பண்ணுங்க, ஆனா ஐயர், மத்த செலவுலா நான் பார்த்துக்கறேன் வாங்குன காசையும் திருப்பிக் கொடுத்துடுவேன்,அப்படினா பண்ணுங்க இல்லனா வேண்டாம்".

"சரிம்மா தாயே உன்கிட்ட பேச முடியுமா நான் சோறு மட்டும் போட்டுக்கறேன்" என்று விட்டார்.

அதை மணிமேகலையிடம் கலந்து பேசிக் கொள்ளாமல் தான் சொன்னார், மணிக்கு தெரிந்ததும்,  'என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செஞ்சா தான் என்ன? நான் என்ன வேண்டாம்னா சொல்லிடப் போறேன்?'. என்றவருக்கு மனம் சுணங்கிப் போனது கணவனின் செயலில்.

"மணி"

"சொல்லுங்க" என்று  உள்ளே இருந்து மட்டும் குரல் கொடுத்தார்.

"நாளைக்கு பதினாறுக்கு இன்னைக்கு சாயிந்தரம் போய் புள்ளைங்களுக்கும், ராஜிக்கும் துணி எடுத்துட்டு வந்துரு".

"அதுக்கு மட்டும் நான் எதுக்கு? இவரே போய் எடுக்க வேண்டியது தானே" என மனதுக்குள் புலம்பிக் கொண்டாலும் வெளியே "சரிங்க" என்றார். 

"டேபிள் மேல பணம் வெச்சிருக்கேன்" என்றவர், "அம்மிணி வெளியே வந்து பேச மாட்டிங்களோ அவ்வளவு திமிரு கூடிப் போச்சி , நான் கடை வரைக்கும் போய்ட்டு வரேன்" என கிளம்பி விட்டார். 

மார்த்தாண்டம் போனப்பிறகு தான் மணிமேகலை வெளியே எட்டிப் பார்க்க.

"உங்க மார்த்தி போயிச்சு" என்றான் யுகி. 

"வாலு.. வாய் நீளுது. இப்போ வரைக்கும் இங்க தான் இருந்தியா.?" 

"ம்ம்ம் நானும் வரவா ட்ரெஸ் எடுக்கப் போலாம்." 

"எதுக்கு உன் பூனைக்கு எடுக்கணுமோ.?" 

"ஆமா பின்ன நான் எடுக்காம யார் பூனைக்கு எடுப்பா?.." என்று கண்கள் மின்ன சொன்னவனை வளவனைப் பார்த்தது போல் பார்த்தார். 

"என்னடா இது ஒரு பூதம் முடிஞ்சா இன்னொரு பூதம் கிளம்புது. இதையெல்லாம் கரை சேர்க்கறதுக்குள்ள என்னைய ஒரு வழியாக்கிடுவாங்க போலயே" என மனதுக்குள் நொந்து கொண்டவர் 

"உனக்கே உடம்பு முடியலைன்னு தானே லீவ் போட்டுருக்க, அப்புறம் என்ன வேலைக்கு அங்க இங்கன்னு அலையற?. ஒழுங்கா வீட்டுலயே இரு ஷாலு வந்தா காபி போட்டு தருவா, பாட்டியை போட்டு நச்சரிக்காத நான் போய் துணி எடுத்துட்டு வந்துடறேன்". 

"அம்மா ப்ளீஸ்ம்மா பூனைக்கு புடிச்ச மாதிரி எடுக்கணும்ன்னு எனக்கு எவ்வளவு நாள் ஆசை தெரியுமா? கோவிச்சிக்காம கூட்டிட்டுப் போம்மா" 

"யுகி அம்மா சொன்னா கேக்கணும் வீட்டுலயே இரு" என்று தனியாக உடை எடுக்க கிளம்பிவிட்டார். 

போகும் வழியெங்கும் கணவனுக்கு சிறப்பு அர்ச்சனை அதுவும் சிறப்பாகவே நடந்தது. 

எவ்வளவு தான் கணவன் பாராமுகம் காட்டினாலும், கோவமாக பேசினாலும் ராஜிக் குடும்பத்திற்கு உதவினாலும், ராஜியையும் தன் கணவனையும் ஒருநாளும் தவறாக எண்ணியது இல்லை. கணவன் திருமணத்திற்கு முன்பு கூட ஒரு பெண்ணை விரும்புகிறாள் என்பது அவருக்கு தெரியும், ஆனால் திருமணத்திற்கு பின்பு தன்னுடன் மட்டுமே வாழும் ஸ்ரீராமன் என்று. 

துணிக் கடைக்குப் போனவர் யுகி சொன்னதற்காக அல்லாமல் நிலாவிற்காகப் பார்த்துப் புது உடையை வாங்கினார். ஷாலினியும் நிலாவையும் மணிமேகலையால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 

ராஜிக் குடும்பத்திற்கு உடை எடுத்து முடித்தவர், நந்தனின் ஷாக்ஸ் கிழிந்திருப்பதை நேற்று தான் பார்த்தார், அவனாக வந்து மணியிடம் எதையும் கேட்பதில்லை இவராக கவனித்து வாங்கி வைத்தால் வேண்டாம் என மறுக்க மாட்டான், எடுத்துக்கொண்டு போய்விடுவான், ஷாக்ஸ் கிழிந்த நினைவு இப்போது வரவும் உடனே அது இரண்டு செட், உள்ளாடை இரண்டு செட் என வாங்கிக் கொண்டார். 

தனக்காக வாங்க வேண்டிய ஆயிரம் தேவை இருந்தும், அதை எதையும் வாங்கிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தார். 

"ஷாலு காபி கொண்டு வா எவ்வளவு நேரம் கேட்டுட்டு இருக்கறது?" என நந்தன் கத்திக் கொண்டிருந்தான். 

பள்ளியில் சிறப்பு வகுப்பு வைப்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் தான் வந்திருந்தான். 

இது நாள் வரையிலும் நந்தன் வரும்போது யாராவது ஒருத்தர் வீட்டில் இருந்து விடுவார்கள், இன்று யாருமே இல்லாமல் ஷாலினியும், யுகியும் மட்டும் வீட்டில் இருக்க எரிச்சல் உண்டானது.

"டேய் எங்கடா உங்க அம்மா?" 

"துணி கடைக்கு போயிருக்காங்க".

"இப்போ என்ன தேவை இருக்குன்னு, நான் வரும்போது வீட்டுல இல்லாம அங்க போனாங்க". 

"நீ என்ன சின்னக் குழந்தையா? ஸ்கூல்ல இருந்து வந்ததும் உனக்கு சோறு ஊட்டி படிக்க வைக்க. நாங்க இருக்கல, என்ன வேணுமோ ஷாலுகிட்ட கேளு தருவா" என்ற யுகி தொலைக்காட்சியைப் பார்க்க

"ஷாலு காபி கொண்டு வா".என்றான் அதிகாரமாக. 

"அண்ணா படிக்கிற வேலை இருக்கு. 
நீயே போட்டுக்கோ". 

"ஷாலு ஒரு காபி போட்டு குடுக்க எவ்வளவு நேரம் ஆகும் அவன் தான் கரடியா கத்திட்டு இருக்கான்ல வந்துப் போட்டுக் குடுத்துட்டு போவேன்" என்று யுகியும் பேச.. 

"அப்போ நான்  என்ன கரடியா..? எவ்வளோ தைரியம் இருந்தா அப்படி சொல்றது?, சொல்லுடா நான் கரடியா?" என்று யுகியை அடிக்க, 

"ஆமாடா நீ கரடி தான் ஒரு வேலையும் செய்ய தெரியாத சொகுசான கரடி" என யுகியும் நந்தனை அடிக்க என்று அங்கு ஒரு போர்க்களம் நடந்தது. 

"ஐயோ விடுங்க இப்போ என்ன காப்பி தானே வேணும், போட்டு தரேன் அடிச்சிக்கிட்டு செத்துறாதீங்க" என்ற ஷாலினி சமையலறைக்குள் சென்றவள் தான், இரண்டு பேருக்கு காபி போட அரைமணி நேரம் ஆனது.அதற்குள் கடைக்குப் போன மணிமேகலையும் திரும்ப வந்துவிட்டார். 

"இப்போ காப்பி கொண்டு வரியா இல்லியா ஷாலு?" 

"ஐயோ அண்ணா கத்தாத நானே அடுப்பு எரிய மாட்டிங்குதேன்னு பார்த்துட்டு இருக்கேன், சும்மா காபி காபின்னு உயிரை வாங்கற? அவ்வளவு அவசரம்ன்னா நீயே வந்து போட்டுக்க வேண்டியது தானே, எதுக்கு என்னோட உயிரை வாங்குற?"என அடுப்பு எரியாத கோவத்தில் ஷாலினி கத்த..இவர்களின் சத்தம் தான் தெரு வரைக்கும் கேட்டது. 

சத்தத்தைக் கேட்டுக்கொண்டே வந்த மணிக்கு பக்கென்று இருந்தது. 

என்ன தான் நந்தனிடம் பேசமாட்டார் என்றாலும் அவன் இல்லை என்றால் அவனுக்கு அணுவும் அசையாது..முகத்தைப் பார்த்தே அவன் தேவைகளை நிறைவேற்றுபவர். இன்று இல்லை என்றதும் வீடு போர்க்களம் ஆகியிருக்க,  
இதற்கு வேறு, என்ன ரணகளம் செய்யப் போகிறானோ? என்று பயத்துடன் உள்ளே சென்றார். 

"அம்மா டிரஸ் எடுத்துட்டியா?" என ஆர்வமாக கேட்டான் யுகி. 

"டேய் எங்க போய்ட்டு இவ்வளவு நேரம் கழிச்சி வர. கிளாஸ்ல இருந்து வந்தா எனக்கு பசிக்கும் காப்பி குடிப்பேன்னு, சாப்புடுவேன்னு உனக்கு தெரியுமா? தெரியாதா?" என யுகியிடம் பேசுவது போல் மணிமேகலையிடம் கேட்டான். 

நந்தனின் செயலில் அரும்ப இருந்த புன்னகையை அடக்கிக் கொண்டவர்.யார் கேள்விக்கும் பதில் செல்லாமல் சமையலறைக்குள் புகுந்து விட்டார். 

"என்னடி பண்ணி வெச்சிருக்க ரெண்டு பேருக்கு காப்பி போட்டு குடுக்கிறதுக்கு கூட உனக்கு வலிக்குதா?". என ஷாலினியை திட்டிக் கொண்டே அடுப்பைப் பார்த்தார்.அடுப்பின் மேல் நிறைய தீக்குச்சிகள் எரிந்து முடிந்த நிலையில் கிடந்தது. 

"என்னடி இது?.. இவ்வளவு தீக் குச்சியை வேஸ்ட் பண்ணி வெச்சிருக்க. லைட்டர் இருக்கும் போது எதுக்கு இப்போ தீப் பெட்டியை எடுத்த?". 

"என்ன எதுக்கு திட்டறீங்க? ஒரு அடுப்பு கூட ஒழுங்கா எரிய மாட்டிங்குது நானும் பத்த வெச்சி பத்த வெச்சுப் பார்க்கறேன் ஒன்னும் எரிய மாட்டிங்குது லைட்டர்தான் பிரச்சனைன்னு தீப்பெட்டில பத்த வெச்சா அதுலயும் புடிக்க மாட்டிங்குது"

"அறிவு ஜீவனே, வாத்தியார் பையன் மக்குன்னு சொல்ற மாதிரி, எனக்குன்னு வந்து பொறந்து இருக்கியே, அடுப்பு பத்தலைன்னா வேற டூல் மாத்தனும்னு தெரிஞ்ச உனக்கு சிலிண்டர் வால்வு ஓபன்ல இருக்கா கிளோஸ்ல இருக்கான்னு பார்க்கனும்னு தோணுச்சா. நகரு இதுக்கு மேலே லேட் பண்ணா உன் அண்ணன் வீட்டைத் தூக்கி அவசர அவசரமா தெருவுல வெச்சிடுவான்". 

"இனி என்னைய அது செய் இது செய்ன்னு சொல்லாதீங்கம்மா, இருடேட் ஆகுது". 

"சமைக்கறதுக்கே இருடேட்டா.. அடுப்பு பத்த வைக்க தெரியாதவளை எவன் கல்யாணம் பண்ணிப்பான். சொல்லு.ஒழுங்கா அப்போ அப்போ கிச்சன் பக்கம் வந்து சின்ன சின்ன டிஸ் செய்ய கத்துக்கோ, இல்லனா கொன்னுடுவேன்" என்று அதட்டியவர் ஷாலினி கையில் ஒரு காபியை திணித்துவிட்டு இரு மகனுக்கு காபியைக் கொடுத்தார். 

"யுகி இப்போ உனக்கு காய்ச்சல் பரவால தானே" 

"என்னம்மா வேலை செய்யனும்.?" 

"தங்கம் அம்மா வேலை சொல்லுவேன்னு கரைட்டா கண்டுபிடிச்சிட்டியே" என யுகியின் கன்னத்தைக் கிள்ள அருகில் இருந்த நந்தன் வேகமாக எழுந்து வெளியே சென்று விட்டான். 

"இந்த காபியை பிளாஸ்க்ல ஊத்தி தரேன் தாத்தாவுக்கும், ஆயாவுக்கும் கொண்டு போய் குடுத்துட்டு வந்துடுடா. இல்லனா இன்னும் காபி வரலைன்னு என்னை தான் பேசுவாங்க." 

"சரி ஊத்தி வைங்க, குடுத்துட்டு பூனையைப் பார்த்துட்டு தான் வருவேன். இப்போ டிரஸ் எப்படி இருக்குன்னு என்கிட்ட காட்டுங்க." 

"அதை அவ நாளைக்கு போடும் போது பார்த்தா ஆகாத.?" 

"ஆகாது. இப்போ காட்டுங்க இல்லனா போக மாட்டேன்."

"சரியா காரியவாதிடா நீ" என்றவர் மூவருக்கும் எடுத்து வந்த துணியை ஷாலினி யுகி இருவரிடமும் காட்டிக் கொண்டிருக்க, உள்ளே வந்த நந்தன். எதுவும் பேசாமல் நின்றான்.

"அண்ணா அது நாளைக்கு வள்ளு அப்பாவுக்குப் பதினாறுல, அதுக்கு தான் அம்மா அவங்களுக்கு டிரஸ் எடுத்துருக்காங்க" என்று சொல்லி முடிக்கவில்லை . , தன் பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்   "எங்கடா போறான்.?"

"எப்போ பார்த்தாலும் பூனையை அடிச்சி வெச்சிறாம்மா அவ அழுற தெரியுமா." என்றவனுக்கு அண்ணனை விட பூனை அழுகிறாளே என கவலையாக இருந்தது.

"அவனைப் பத்தி தான் தெரியும்ல விடுங்க" என்றவர் இரவு உணவை சமைக்கச் சென்று விட்டார்.

நாளை ராமனுக்கு பதினாறு என்பதால்,நிலாவின் வீட்டின் முன் துணிப் பந்தல் போடப்பட்டிருக்க அவர்களின் சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.

தன் பள்ளிப் பையை எடுத்துக் கொண்டு புது வீட்டிற்கு சென்றான் நந்தன்.

போகும் வழியில் தான் நிலாவின் வீடு இருக்க, ஒரு நொடி அவன் வீட்டின் முன் அவனது கால் நின்று பின் சென்றது போல் இருந்தது. இது அங்கிருந்து பார்த்த யாருக்கும் தெரியாது என்பதால் அவனை பெரியதாக யாரும் கண்டு கொள்ளவில்லை.

தன் அத்தை பையனோடு விளையாடிக் கொண்டிருந்த நிலாவைக் கண்டு கொண்ட நந்தன். அவளை நோக்கி கை அசைத்து தன்னிடம் வருமாறு அழைத்தான்.

நந்தன் என்றாலே நிலா காத தூரம் ஓடுவாள், இதில் அவனே அழைக்கிறான் என்று சும்மா இருப்பாளா கை கால்கள் வெடவெடக்க அவன் முன் சென்று நின்றாள்,அவளுக்கு நன்றாகவே தெரியும் எதையாவது கேட்டு அவள் பதிலே சொன்னாலும் அடித்தோ கொட்டியோ வைப்பான் என்று.

அதனால் பயந்துக்கொண்டே நிற்க.

"நாளைக்கு உங்க அப்பாவுக்கு பதினாறா?" என்றான்

"ம்ம் ஆமாங்க"

"ஏண்டி என்னைய கூப்பிடல நீ?" என்றவாறே அவளது முடியைப் பிடித்து இழுக்க

"அம்மா... அம்மா கூப்பிட்டு இருப்பாங்கன்னு".என்று அழுதுக் கொண்டே கூற, 

"அவங்க கூப்பிட்டா நீ கூப்பிட மாட்டியா? அவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டியா?. உங்களுக்கு செய்யறதுல  நாங்க, ஆனா நீங்க எங்களை மதிக்காம சுத்துவீங்க". என அவளது தலையில் கொட்ட.

வலித்த மாதிரியும் இருந்தது வலிக்காத மாதிரியும் இருந்தது அந்த கொட்டு.

இருந்தாலும் சொல்லி வைப்போம் என "வலிக்குதுங்க விடுங்க" என எப்போதும் போல் அழுக ஆரம்பித்துவிட்டாள்.

"ஏய் மூச் சத்தம் வெளியே வந்தது தொண்டைக் குழிய புடுங்கி வெளியப் போட்டுருவேன் ஜாக்கிரதை. இனி எதுவா இருந்தாலும் நீதான் வந்து என்னைய முதல் ஆளா கூப்பிடனும் சரியா?".

"இது என்னடா புது புது ரூல்சா போடறான்' என புரியாமல் ம்ம்ம் என கண்ணை துருத்தி முழித்துப் பார்த்தாள்.

"என்ன ம்ம்ம் மகாராணி வாய் தொறந்து பேச மாட்டிங்களா?, கூப்பிடறேன்னு சொல்லுடி".

"கூப்பிடறேங்க."

"அது. சரி போ", என்றவன் திரும்பி நடக்கப் போன நிலாவின் முடியை மீண்டும் இழுத்து விட்டு தான் அங்கியிருந்து போனான்.

நிலா அழுதுக்கொண்டே அங்கிருந்து செல்ல.அவளது அத்தை பையன் நாகராஜ்.

"எதுக்கு அவன் உன்னை அடிக்கிறான். வா அத்தைக்கிட்டையே சொல்லி வைக்கலாம்."என கோவமாக சொன்னவனின் கையைப் பிடித்து நிறுத்தியவள்  "இல்லை வேண்டாம் சொன்னாலும் அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க, அவங்க எப்போமே அப்படி தான் என்னைய அடிச்சிட்டே இருப்பாங்க" என்று கண்களை துடைத்தவளுக்கு நந்தனின் இந்த மாதிரியான செயலே அவன் மீது வெறுப்பை உண்டாக்கியது.

வீட்டிற்குச் சென்று பையைப் போட்டவன்,  வீட்டில் இரண்டு மாடி வீடுகள் முடிந்துவிட்டன..
நந்தனை பார்த்ததும்  "எப்போ ராசா வந்த?" என்றார் கிருஷ்ணம்மாள் 

 "நான் அப்போவே வந்துட்டேன் இன்னைக்கு பெட் ரூமை பூச சொல்லியிருந்தார்ல அப்பா,ஏன் பூசாம போட்டு வெச்சிருக்காங்க".

"இன்னிக்கு கிச்சன் பூசி ஹால் பூசவே நேரம் சரியா போச்சி ராசா,. எங்க வேலை செய்யறாங்க. நம்ப கூடவே இருந்தா தான் மடமடன்னு வேலை செய்யறாங்க, இல்லனா ஒன்னு போட்டுட்டு உக்கார்ந்துடறாங்க, இல்லனா சொவத்த நீவிட்டே இருக்காங்க,"

"புடுச்சி சத்தம் போட்டு விட வேண்டியது தானே ஐயா."

 "சத்தம் போட்டா நாளைக்கு வேலைக்கு வர மாட்டாங்க, அப்புறம் நம்ப நினைச்ச நேரம் பால் காய்ச்ச முடியாதுடா ராசா."

"அதுக்காக. வெட்டியா சம்பளம் குடுக்க முடியுமா?" என கோவமாக பேசிய பேரனின் ஆளுமையை ரசித்த கிருஷ்ணம்மாள்.

"என்னோட அப்பனை பார்க்கற மாதிரியே இருக்க ராசா,அந்த கம்பீரமும் திமிரும் உன் கிட்ட அப்படியே இருக்குது" என கன்னம் வழிச்சி நெட்டி முறித்தார்.இதை சொல்லி தான் நந்தனை எதற்காகவும் யாருக்காவும் கீழே இறங்கி வராதவாரு வளர்த்து வைத்திருக்கிறார்..


"சரி தாத்தா எங்க ஆயா.?"


"அவர் மணல் நாலு லோடு வருதுன்னு சொன்னாங்கன்னு வீட்டுக்கு வழி சொல்ல பிள்ளையார் கோவில் வரைக்கும் போனார்."

"ஓ எனக்கு தெரிஞ்சிருந்தா நானும் அங்கயேப் போயிருப்பேன்" என்றவன் தன்னுடைய வீட்டுப்பாடத்தை படிக்க ஆரம்பித்து விட்டான்.

"ஆயா காபி இந்தா.?"என யுகி வந்து காபியை நீட்ட,

"உனக்கே காய்ச்சல் வந்து கிடக்கு இந்த பனிக்காலத்துல எதுக்குடா அலையற?" என்றார்.

"அப்போ அங்க வர வேண்டியது தானே இங்க என்ன வேலை இருக்குன்னு உக்காந்து கிடக்கற?. வந்து குடிச்சிட்டுப் போகக்கூட கஷ்டமா இருக்கு உனக்கு, அம்மா அங்க ஸ்கூல் போய்ட்டு வந்து அவ்வளவு வேலைப் பார்க்குதுல."

"டேய் ஒன்னு சொன்னா அதையே புடிச்சிட்டு உங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்துடுவியே  போடா". என்றவர், "போகும் போது அந்த  நிலா வூட்டுக்குப் போய்ட்டு இருக்காம நேரா வூட்டைப் பார்த்துப் போ" என்றார்..

"ஏன் போகக்கூடாது நான் போவேன்". கிருஷ்ணம்மாள் செய்ய வேண்டாம் என்று சொல்லும் விஷயத்தை தான் யுகி முதல் ஆளாக செய்வான்.

"உன்னையலாம் திருத்த முடியாது.நந்து பாரு எவ்வளவு நல்லப் பையன் பொட்டாட்டோ நான் சொல்றதைக் கேட்டுக்கறான்", 

"திருத்துறதுக்கு நான் என்ன எக்ஸாம் பேப்பரா. போ கிழவி என்னைய சொல்றதுக்கு முன்னாடி நீ திருந்தப்பாரு..ஊர் உலகத்த கெடுக்கறதே உன்ன மாதிரி  பத்து கெழவிங்க தான்"   என சொல்லிக்கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டான்.



Leave a comment


Comments 1

  • J JumailJumaan
  • 3 months ago

    Wow wow semmmma soooooper


    Related Post