இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 26-03-2024

Total Views: 36191

ஜர்தூசி வேலைப்பாடுகள் உள்ள ஒரே டிசைனில் அமைந்த இரண்டு பிரைடல் லெகங்காக்களை தேர்வு செய்து வைத்தாள் மீரா. இளஞ்சிவப்பு நிறத்தில் ஒன்று… இள நீல நிறத்தில் ஒன்று.


மீரா, “இது ரெண்டுல உனக்கு எந்த கலர் பிடிச்சிருக்கோ அதை நீ எடுத்துக்கோ… இன்னொன்னை நான் வச்சுக்கிறேன்…”


பூச்செண்டு, “ரிசப்ஷனுக்கு இதையாக்கா போடப் போறோம்…”


“ஆமா ஏன்…? பிடிக்கலையா…?”


“புடவை எடுத்துக்கலாமே…”


“நீயும் கல்யாணத்தப்போ புடவைதானே கட்டியிருந்த… எனக்கும் புடவைதான் எடுத்திருக்கு… ரிசப்ஷன் ஈவினிங் டைம்ல வைக்கிறதால ஸ்டோன் எஃபெக்ட்ஸோட இந்த டிரஸ்தான் கிராண்டா இருக்கும்… இந்த டிசைன் உனக்கு பிடிக்கலையா…?”


‘இல்லக்கா… டிரஸ் சூப்பரா இருக்கு… ஆனா நம்ம சொந்தக்காரய்ங்க எல்லாரும் காட்டுப்பயலுக… கண்டமேனிக்கு பேசுவாய்ங்க… இந்த பத்து நாள்ல 18 பட்டியும் என் கல்யாண கச்சேரியைத்தான் இனிக்க இனிக்க பேசிட்டு இருக்கும்… உங்களோட காதல் கல்யாணத்தை இன்னும் ஒரு வாரத்துக்கு வச்சு ஓட்டும்… இந்த மாதிரி ரொம்ப ஸ்டைலா டிரஸ் போட்டீங்கன்னா சொல்லவே வேண்டாம்… காது வலிக்கிற அளவுக்கு காய்ச்சி ஊத்துவாய்ங்க… அதுக்குத்தான் சொல்றேன்…”


“அடுத்தவங்க திருப்திக்காக எல்லா விஷயமும் பண்ண முடியாது. மேரேஜ், ரிசப்ஷன் இதெல்லாம் லைஃப்ல ஒரு தடவைதான்… அடுத்தவங்களுக்காக அந்த சந்தோஷங்களை எல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது… காட்டானுங்கன்னு தெரியுதுல்ல… கண்டுக்காம போயிட வேண்டியதுதான்….” பின்னங்கழுத்தை தேய்த்தபடியே கூறிய தரணி “மீரா… லைட் ப்ளூ கலர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு… என் பொண்டாட்டிக்கு அதை நான் எடுத்துக்கலாமா…?” என்றவன் தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த தன் மனையாளை ஓரப்பார்வை பார்த்து மீராவிடம் திரும்ப 


“ஓகேண்ணா… எனக்கு பிங்க் கலர் பிடிச்சிருக்கு… நான் வச்சிக்கிறேன்…” சிரித்தபடி சொன்னவள் அருகில் நின்றிருந்த முகிலனிடம் ஓகேவா என்ற கண்களை விரித்து கேட்க தன் கண்களை மூடித் திறந்து சிரிப்புடன் தனது சம்மதத்தை தெரிவித்தான்.


“நான் வேண்டான்னு சொல்லும்போது வேணுன்னே வாங்கினா என்ன அர்த்தம்…?” புசுபுசுவென கோபத்துடன் வெடித்தாள் பூச்செண்டு.


“இந்த டிரஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு அர்த்தம்… இந்த டிரஸ்ல என் பொண்டாட்டி ரொம்ப அழகா இருப்பான்னு அர்த்தம்…” சொன்னவன் புன்னகையை இதழில் தேக்கி நாக்கை சுழற்றி கன்னத்தின் உள்பக்கம் வைத்தபடி குறும்பாய் அவளைப் பார்க்க அவளோ வெடுக்கின்று வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.


“உன் அம்மாச்சி செலக்ட் பண்ற ஆரஞ்சு மிட்டாய் கலர் புடவையை கட்டிட்டு வந்து மேடையில நிக்கணும்னு ஆசை இருந்தா போ… அங்கே போனா அந்த புடவை கன்ஃபார்ம்…” அவள் உயரத்திற்கு குனிந்து காதில் கிசுகிசுத்து “முகில்… நாம கோட் சூட் செலக்ட் பண்ண போகலாம்டா…” என்றபடி அவர்களுடன் இணைந்து கொண்டான்.


அவன் சொல்வதும் உண்மைதான்… இது வேண்டாம் என்றால் அது நிச்சயம்… நான் விருப்பப்படும் புடவையை எடுக்கவே விடாது அந்த கிழவி… அத்துடன் தரணி தேர்ந்தெடுத்த அந்த லெகங்கா அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது… இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது… யோசனையுடன் நின்றிருந்தவளிடம் “டிரஸ் பில்லிங் போயிடுச்சு… இனி மாத்தவெல்லாம் முடியாது…” கணீர் என்ற குரல் காதில் பாய வேகமாய் திரும்பினாள்… அருகில் அவள் மணவாளன்தான்.


“மீராவை பாரு… அப/வ புருஷனுக்கு எவ்வளவு பொறுப்பா டிரஸ் செலக்ட் பண்றா… எனக்கு நீதான் கோட் சூட் செலக்ட் பண்ணனும் வா…” அவள் கையை பிடித்து இழுக்க “சும்மா சும்மா கையை பிடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க…” வேகமாய் கையை உதறினாள்.


“அப்போ இடுப்பை பிடிச்சுக்கட்டுமா…?” புருவத்தை ஏற்றி இறக்கியபடி கேட்டான்.


“உங்களை நல்லவர்னு நினைச்சேன்… இவ்ளோ பேசுறீங்க…”


“ஓ… இந்த நல்லவன்மேல நம்பிக்கை இல்லாமதான் கதவை இறுக்கி தாழ் போட்டுக்கிட்டியோ…” கண்களில் கோபத்தின் சாயல்.


“தப்புதான்… விட்ருங்களேன்… அதுக்காக ஏன் இப்படி அட்வான்டேஜ் எடுத்துக்கிறீங்க…?”


“கட்டின பொண்டாட்டி கையை பிடிக்கிறது அட்வான்டேஜா…? இரு… அங்கே ஒரு ஜோடி நிக்கிறாங்க… கிளாரிஃபை பண்ணிட்டு வந்துடறேன்…” வேகமாய் அவளை கடந்து நகர முயன்றவனை இறுக்கமாய் கைப்பிடித்து தடுத்தாள் பூச்செண்டு.


“ஏன் இப்படி பண்றீங்க…? உங்களுக்கு டிரஸ்தானே செலக்ட் பண்ணனும்… வாங்க…” என்றவள் அவன் கையை பிடித்து தரதரவென இழுத்துச் செல்ல சிரித்தபடி பின்தொடர்ந்தான் தரணி.


‘அப்பாவி மாதிரி இருந்துட்டு இப்ப ரொம்பத்தான் அடாவடித்தனம் பண்ணுது பனைமரம்…’


“நான் அப்பாவின்னு உன்கிட்ட சொல்லவே இல்லையே…”


“ஹான்…” மயிலிறகு கண்கள் குடை போல் விரிந்தன.


“எப்படி உன் மைண்ட் வாய்ஸை பிடிச்சேன் பாத்தியா…” கண்சிமிட்டி சிரித்தவனை தன்னை மறந்து ரசித்து நின்றாள் பாவை. அந்த சிரிப்பும் கண்சிமிட்டிய அழகும் அவளை அவனுள் கட்டிப்போட்டன. பிரமித்து நின்றவளின் முன் அவன் சொடுக்கிட தூக்கத்திலிருந்து விழித்தவள் போல் வேகமாய் தலையை உலுக்கிக் கொண்டாள்.


“எனக்கு ஏதோ பட்டப்பெயர் வச்சிருக்கேன்னு தெரியுது… அதையும் சீக்கிரமா பிடிக்கிறேன்…” என்றவன் “கையை விட்டீங்கன்னா சட்டுபுட்டுனு டிரஸ் செலக்ட் பண்ணிடலாம் மேடம்…” என்றதில் பட்டென அவன் கையை விலக்கி படபடப்புடன் தள்ளி நின்றாள்.


“போய் மீராகூட ஜாயின் பண்ணிக்கோ… நீதான் எனக்கு செலக்ட் பண்ணனும்… நான் ஓரமா போய் உட்காரப் போறேன்…” அவன் நகர இவள் தன்னைப்போல் மீராவிடம் சென்றாள்.


‘என்னது இது…? கொரளி வித்தைக்காரன் கிட்ட மயங்கி நிக்கிற மாதிரி இந்த பனைமரம் பேச்சுக்கெல்லாம் நான் ஆட ஆரம்பிச்சுட்டேன்… இது எங்கே போய் நிக்கப் போகுதோ…’


“வேற எங்கே போய் நிக்கும்…? காதல்ங்கிற ஸ்டாப்பிங்லதான்…” காதுக்குள் சூடான மூச்சுக்காற்றுடன் கிசுகிசுப்பான காந்தக் குரல். துள்ளி விழுந்தாள்… சிரித்தபடி முகிலனை நோக்கி சென்று கொண்டிருந்தான் தரணி.


‘அடியாத்தே… இந்த நெட்டமாடு எனக்கு நெஞ்சுவலி வர வைக்காம விடாது போல இருக்கே…”


“மேடம்… இந்த கலர் பாருங்க…” சேல்ஸ்மேன் குரலில் களைந்து உடைத் தேர்வில் கவனம் பதித்தாள் பூச்செண்டு.


அனைவருக்கும் உடை எடுத்து முடித்து திருமணத்திற்கான திருமாங்கல்யம் இன்னும் சில நகைகள் எடுத்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர். அடுத்தடுத்த இரண்டு நாட்கள் திருமண பரபரப்பு அனைவரையும் அழுத்திப் பிடித்தது. முகிலனுக்கும் தரணிக்கும் நிற்கக்கூட நேரமில்லை… விடிந்தால் முகிலன் மீரா திருமணம்… அன்று இரவுதான் சற்று ஆசுவாசமாய் அமர்ந்தனர் இருவரும். மறுநாள் கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டியவற்றை பாட்டி தெளிவாய் அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்க அதன்படி பெரியவர்கள் அந்த வேலையில் ஈடுபட்டிருந்தனர். அறையில் அமர்ந்து மீராவிற்கு நகப்பூச்சு பூசிக் கொண்டிருந்தாள் பூச்செண்டு. அறைக்குள் முகிலன் நுழைய அவனை பின்தொடர்ந்து தரணியும் உள்ளே நுழைந்தான்.


“ஆஹா…” கையை உதறி தலையில் கை வைத்தான் முகிலன்.


“என்ன…!” கோரசாய் மூவரும் கேட்க “இத்தனை வேலையை கரெக்டா பண்ணி மேக்கப்புக்கு சொல்லாம விட்டாச்சேடா… இப்ப போய் யாரை புக் பண்றது…? எப்படி புடிக்கிறது…?” இடுப்பில் கைவைத்தபடி குறுக்கும் நெடுக்குமாய் நடந்த முகிலனை கொன்று போடும் வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு.


“முகி… பூச்செண்டு ஒரு பியூட்டிஷியன்… மறந்துட்டீங்களா…?” மீரா சிரித்தபடி கூற “அட ஆமால்ல…” என்று முகம் மலர்ந்தான் முகிலன்.


“உனக்கு எம்புட்டு எகத்தாளம்…?” எழுந்து நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் பூச்செண்டு.


“சாரிடி அம்மு… சுத்தமா ஞாபகம் இல்ல…” அவள் கன்னத்தில் செல்லமாய் கிள்ள அவன் முதுகில் தொப்பென அடி விழுந்தது. நண்பன் வெளிப்படுத்திய பொறாமையின் பிரதிபலிப்பு.


“ஏன்டா…?” முதுகை தேய்த்தபடி பரிதாபமாய் கேட்டான்.


“எனக்கு தெரிஞ்ச நல்ல பியூட்டிஷியன் இருக்காங்க… அவங்களை புக் பண்ணிடலாம்…” பார்வையை பூச்செண்டின்மேல் பதித்தபடியே முகிலனிடம் கூறினான் தரணி. அவளது கண்களிலோ தீப்பொறி பறந்தது.


“ஏன்டா உன் பொண்டாட்டிக்கு வேலை வைக்கிறோம்னு சங்கடமோ…?”


“என் தங்கச்சியை காப்பாத்தணுமேன்னு அக்கறை…”


“என்ன…?”


“கலர் பவுடர் காஜல் லிப்ஸ்டிக் இப்படி புதுசா நாலு ஐட்டம்ஸை கொண்டு போய் மேக்கப் பண்றேன்னு கிராமத்து ஜனங்களை வேணா ஏமாத்தலாம்… பெங்களூர் பீப்பிள் ஏமாற மாட்டாங்க… நீயே அடையாளம் தெரியாம ஆள் மாத்தி தாலி கட்டிட்டா விபரீதம் ஆயிடும்… நாளைக்கு கோவில்ல நாலு முகூர்த்தம் இருக்கு… எதுக்கு இந்த விபரீத முயற்சி…? வேற நல்ல பியூட்டிஷனை புக் பண்ணிடுவோம் சரியா…” தரணி பேசும்போதே வேகவேகமாய் வெளிவந்த பூச்செண்டின் உஷ்ணமான மூச்சுக்காற்றின் வெப்பத்தில் முகிலனும் மீராவும் நெளிந்தபடிதான் அமர்ந்திருந்தனர்.


“என்னடா முழிக்கிற…? எந்திரிச்சு வாடா…” முகிலன் கையை பிடித்து இழுக்கப் போக சட்டென மின்காந்த சக்தியால் இழுக்கப்பட்டவன் போல் வேகமாய் இழுக்கப்பட்டு சுவற்றோடு தள்ளப்பட்டிருந்தான் தரணி. 


அவனை நெருக்கமாய் உரசியபடி அவனது சட்டைக் கலரை இறுக்கமாய் பற்றி அவன் உயரத்திற்கு கால்களை எக்கிய நிலையில் நின்று அவனை வெறியுடன் முறைத்துக் கொண்டு இருந்தாள் பூச்செண்டு‌. மீராவை அழைத்துக் கொண்டு பூனை நடைபோட்டு வெளியேறி இருந்தான் முகிலன். எதிர்பாராத தாக்குதலுடன் எதிரில் நெருக்கமாய் அவள்… தன்னிச்சையாய் அவன் கைகள் அவள் இடையை அழுத்தியிருக்க எக்கிய நிலையில் இன்னும் முறைத்துக் கொண்டு இருந்தாள் பூச்செண்டு.


அவன் எங்கே அந்த முறைப்பை எல்லாம் சட்டை செய்தான். வேகமாய் உருண்ட விழிகளைச் சுற்றி இருந்த அந்த மயிலிறகு இமைகளையும்… கோபத்தில் சிவந்திருந்த அந்த கூர் நாசி நுனியையும்… அவளது பற்களால் மாறி மாறி காயப்படும் அந்த அழகான செப்பு இதழ்களையும்… சிறியதாக முளைத்த ஒற்றை பருவுடன் செழுமையாய் வழவழத்த கன்னங்களையும்… உச்சி வகிட்டில் உருத்தாது வைத்துக்கொண்ட குங்குமத்தையும் அல்லவா அவனது கண்கள் அளவெடுத்துக் கொண்டிருந்தன.


“என் மேக்கப்பை கேவலப்படுத்துறீங்களா…? என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்…? நான் எவ்வளவு ஃபேமஸான பியூட்டிஷியன் தெரியுமா…? எங்கிட்ட டேட் கிடைக்காம வேற வழியில்லாம மத்தவங்களை புக் பண்ணி இருக்காங்க தெரியுமா…? என் போன்ல பாருங்க… நான் மேக்கப் பண்ணினவங்க போட்டோஸ் எல்லாத்தையும் தனி கேலரில போட்டு வச்சிருக்கேன்… எல்லாம் தெரிஞ்ச மாதிரி என்ன வேணா பேசுவீங்களா…?”


பட்டாசாய் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தவள் நுனி விரல்கள் வலிக்காமல் போக ஆச்சரியமாய் தலையை குனிந்து பார்க்க பாதங்கள் அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்தன. சுகமாய் அவன் கழுத்தை கோர்த்தபடி அவன் முகத்திற்கு நேரே முகம் வைத்தபடி தொங்கிக் கொண்டிருந்தாள்.


“எவ்வளவு நேரம் எக்கி நின்னே சண்டை போடுவ…? கால் வலிக்குமே… இனி பிரச்சனை இல்ல… யூ கண்டினியூ… எவ்ளோ நேரம் வேணாலும் சண்டை போடு… ஐ கேன் மேனேஜ்…” குறும்புச் சிரிப்புடன் கூறியவன் அவளை இன்னும் வாகாக இடுப்போடு அழுத்தி தூக்கிப் பிடித்திருந்தான். 


அவனது நெருக்கமும் அவன் வாசமும் கொள்ளை கொள்ளும் அந்த வசீகரப் புன்னகையும் முகத்தில் உரசிச் சென்ற அவன் மூச்சுக்காற்றும் அப்போதுதான் அவள் பெண்மைக்கு உறைத்தது போலும். கோபத்தில் தான் செய்த வேலையில் இப்படி நெருக்கமாய் அவனோடு பின்னிப் பிணைந்து நிற்பதை உணர்ந்து கொண்டவள் கோபம் வடிந்து வெட்கம் சூழ உடல் முழுக்க சிவப்பேறி பட்டென கண்களை தாழ்த்திக் கொண்டாள்.


“என்னாச்சு…? இன்னும் உன்கிட்ட நிறைய எதிர்பார்த்தேனே… கமான்… ப்ரஸீட்…” அவள் காதுமடலில் அவன் மீசைக் கம்பி மெல்ல உரச ஜிவ்வென மின்சாரம் பாய்ந்ததில் அவன் பின்னங்கழுத்தை இன்னும் இறுக்கமாய் பற்றினாள். நான்கு கண்களும் நேருக்கு நேராய் மோதி நயன பாஷையில் புரியாத மொழிகள் பேச அழகாய் மொழிபெயர்த்துக் கொண்டது இதயம்.


“பூச்செண்டு…” சத்தமாய் அழைத்தபடி அறைக்குள் நுழைந்த மல்லிகா அவர்கள் நின்றிருந்த கோலத்தில் சங்கோஜமாய் உடல் நெளித்து நாணி கோணி புதுமணப் பெண்போல் நாணத்துடன் சிரித்து தன் கையில் கொண்டு வந்த பெரிய பையை ஓரமாய் வைத்து விட்டு வேகமாய் வெளியே ஓடி இருந்தார்.


“அய்யோ… அம்மா…” என்றபடி அவசரமாய் அவனிடம் இருந்து குதித்து இறங்கியவள் “அம்மா முன்னால இப்படித்தான் பண்ணுவீங்களா…? அய்யோ…” ஒரு குதி குதித்து அவன் தலையில் குட்டினாள்.


“ஸ்ஸ்…ஆஆ… பிடாரி… நீதானடி ஓடிவந்து என் சட்டை கலரை பிடிச்சு தொங்கின…” தன் தலையை தேய்த்தபடியே கூறினான்.


“ஆனா நீங்க ஏன் என்னை இடுப்பை பிடிச்சு தூக்கினீங்க…?”


“நீ குட்டை கத்திரிக்காயா இருக்கியே… சண்டை போட சிரமப்படுறியேன்னு தூக்கினேன்…”


“ஆமா… அதென்ன பேச்சுவாக்குல டி போட்டு கூப்பிட்ட மாதிரி தெரிஞ்சது…”


“ஆமாடி… கூப்பிட்டேன்டி… இப்போ என்னடி அதுக்கு…?”


“பூச்செண்டு…”


அவர்களது சண்டையை கலைத்தது வெளியில் இருந்து வந்த மல்லிகாவின் குரல்.


_உள்ளே இருக்கிற பொருள் எல்லாம் சரியா இருக்கான்டு பாத்துக்கடி… மாப்ள… நீங்க சொன்ன மாதிரியே எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டேன்… நீங்களும் பாத்துக்கங்க…” அறை வாயிலில் இருந்து குரல் மட்டுமே. 


குழப்பமாய் கண்களை உருட்டியபடி அந்த பெரிய ட்ராவல் பையின் ஜிப்பை நீக்கி உள்ளே பார்த்தாள் பூச்செண்டு. கண்கள் விரிய திரும்பியவள் தன் கணவனை பார்க்க தன் கைகள் இரண்டையும் மார்பிற்கு குறுக்கே கட்டியபடி அவளைப் பார்த்து அதே வசீகரச் சிரிப்புடன் நின்றிருந்தான் அவள் மணவாளன்.




Leave a comment


Comments


Related Post