இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 27-03-2024

Total Views: 18028

காதலொன்று கண்டேன்!

தேடல்  10

அவனுக்காக..


"ஆபிஸ்ல எல்லாரும் சொல்லிப்பாங்க..கார்த்திக் சார் ரொம்ப டேலன்டான ஆளு..எம் டி கு எல்லாம் அவர ரொம்ப புடிக்கும்..எம் டி அவர் கூட நல்ல க்ளோஸா பழகுவாராம்..அதனாலயே ஆபிஸ்ல பாதி பேருக்கு புடிக்கிறதில்லன்னு.."

"அப்டியா..?"

"ஆமாம்மா..இன்னிக்கு காலைல நா போகும் போது பஸ்ல அவர பாத்தேன்..அந்த பஸ் கொஞ்சமும் சௌகரியமா இல்லன்னு புரிஞ்சுது..ரொம்ப கஷ்டப்பட்டு வந்த மாதிரி தோணுச்சு..ஆனா"

"ஆனா..?"

"ஆபிஸ்ல அந்தளவு இல்ல..அவருக்குன்னு தனியா ஒரு எடம்..அதுல தான் இப்ப நாங்களும் இருக்கோம்..ஆபிஸ்ல கெத்தா சுத்திட்டு இருந்தாலும் யார் கூடவும் பேசறதில்ல..சாப்புர்துக்கு கேன்டீன் பக்கமும் வர மாட்டேங்குறாரு..என்ன தான் தைரியமா காட்டிக்கிட்டாலும் அவரு ரொம்ப ஒடஞ்சு போய் இருக்குற மாதிரி ஒரு பீல்..ஆனா நானும் இன்னிக்கு ஒன்னு ரெண்டு தடவ பாத்தேன்..ரொம்ப பேர் அவரு பக்கத்துல கூட போகாம இருக்குறது..அவரோட ஸ்கின் டிசீஸ் அவங்களுக்கும் தொத்திக்கும்னு நெனச்சிட்டு இருக்காங்களோ.."

"யாழினி..ஒரு அம்மாவா நா சொல்றேன்..மத்தவங்க மாதிரி நீ நடந்துக்காத..அவங்க சிட்டுவேஷன்ல நா இருந்தேன்னா எனக்கு எப்டி தோணும்னு யோசிச்சு நடந்துக்க..புரியுதுல்ல.."

"அதான் மா..நா கூட சின்னதா பாத்து சிரிச்சேன்..உர்ரு மூஞ்சி பாத்து சிரிக்கவே இல்ல..ஆனா ரொம்ப டெரரான ஆளு மா அவரு..பாத்தாலே பக்கு பக்குன்னு இருக்கும்.."

அவளின் பேச்சை கேட்டு சிரித்த படி சாதத்தை போட்டு தட்டை அவளின் கையில் கொடுக்க அவ்விடத்திலேயே அமர்ந்து சாப்பிடத் துவங்கியவளுக்கு தந்தை வரும் அரவம் கேட்டு திக்கென்றாக நல்ல பிள்ளையாய் உணவு மேசைக்கு சென்ற மகளின் செயலில் அவர் விழிகளில் கனிவு.

இருபத்தி மூன்று வயதாகிறது.இன்னுமே அந்த வயதுக்குரிய பக்குவம் இல்லையென்று தோன்றினாலும் இன்னும் சில நேரங்களில் அவளின் நடத்தையால் அவரின் நினைப்பு பொய்யாகி விடும்.

சராசரி தாயொன்றிற்கு இருக்கும் பயமும் யோசனையும் அவள் விடயத்தில் அவருக்கு நிறையவே இருந்தாலும் ஒரு பொழுதும் அவளிடம் அவர் காட்டிக் கொண்டதில்லை.

அதற்குள் அவளின் தந்தை சமயலறைக்குள் நுழைந்திட  அவருக்கான தேவைகளை கவனிக்கலானார்,அவளின் தாய்.

அதே நேரம்,

"பாப்புக்குட்டி சாப்ட வாடா.."

"அடேய் பாப்புக்குட்டி.."

"டேய் ராசா..சாப்புட வாடா.." கையில் தோசைக் கரண்டியுடன் அறைக் கதவை தட்டிய படி கத்தியவரின் முகத்தில் கோபம்.

இத்தோடு பத்தாவது முறை பேசியிருப்பார்."வர்ரேன்ன்.." என குரல் கொடுத்தாலும் பையன் இன்னும் வெளியே வந்த பாடில்லை.

"டேய் நெய்தோச ஆறப்போகுது டா..சீக்கிரம் வா.." கத்தி விட்டு அவர் நகர சிறு சிரிப்புடன் கதவைத் திறந்த கார்த்திக்கின் முகத்தில் புன்னகை பூத்திருந்தது.

ஏனோ அந்த நிஜமான புன்னகை அத்தனை அழகு பையனவனுக்கு.

அலுவலகத்தில் காட்டும் அழுத்தம் எல்லாம் வீட்டில் முற்றும் தளர்ந்து போக புன்னகையுடன் தான் இருப்பான்,தந்தையுடனான தருணங்களில்.

அத்தனை பிடித்தம் தந்தை மீது.அவனின் உலகில் அவனுக்கென இருக்கும் இரு ஜீவன்களின் முதன்மையானவர் அவர் தான்.அவருக்கும் மகனைத் தவிர வேறெதும் இல்லை.மகனுக்காக எதை வேண்டுமெனாலும் செய்யத் துணிந்த ஒரு வெகுளித் தந்தையே,
சத்யமூர்த்தி.

"இவ்ளோ நேரம் கத்தறேன்..காதுல விழலயா..எவ்ளோ நேரம் டா கத்தறது..?" சமயலறைக்குள் நுழைந்த மகனைக் கண்டு திட்டினாலும் கவனம் முழுக்க அடுப்பில் இருந்த தோசையின் மீது தான் இருந்தது.

"அதான் சோன்னேன்ல..வர்ரேன்னு நீ எதுக்குப்பா கத்தகிட்டே இருந்த.."

"ஆமாடா ஆமா..உனக்குன்னு மெனக்கெட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேன்ல தேவ தான் எனக்கு.." என்க இரு புருவமுயர்த்தி முறைத்து பார்த்தவனை சட்டை செய்யவில்லை,அவர்.

"எனக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ணப் போற..காலகாலத்துல ஒரு சித்திய பாத்து கல்யாணம் பண்ணி இருந்தன்னா இப்டி பொலம்பியிருக்க மாட்டல.."

"ஆமாடா..அது தான் ஒரு கொறச்சல்..மூடிட்டு சாப்டு..இல்லன்னா தோசக்கல்லுல உன் கைய எடுத்து வச்சிருவேன்."

"நீ செஞ்சாலும் செய்வ..யார் சொன்னா..உன்னெல்லாம் நம்ப முடியாது ஹல்க்கு.." முணுமுணுத்த படி அவனோ தோசையை பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்க தந்தையானவருக்கு அவனிடம் பேச வேண்டிய விடயம் நினைவில் வந்தாலும் மகனின் எதிர்வினை எவ்வாறு அமையும் என்பதில் உள்ளூர சற்றே கலக்கம்.

"தம்பீஈஈஈஈ.." இழுவையாய் அவரின் குரல் வெளிவர அதை வைத்தே அவனுக்குப் புரிந்தது,ஏதோ வில்லங்கமாய்த் தான் கேட்கப்போகிறார் என்பது.

"என்ன..? இப்போ எதுக்கு இப்டி இழுத்துகிட்டு இருக்க..விஷயத்த சொல்லு..அப்றம் பாக்கலாம்.."தலையை நிமிர்த்தாது படபடவென பொறிந்தவனின் செயலில் அவரின் பயம் இன்னும் அதிகமானது தான் மிச்சம்.

"அது வந்து தம்பீஈஈஈஈ"

"ப்பாஆ..வாங்கிக் கட்டிக்கப் போற நீ..விஷயத்த சொல்லு.."

"அது தம்பீ..ஒரு மருந்து இருக்குதாம்..ரேட் கொஞ்சம் கூடுதலா தான் வருமாம்..அது தான் வாங்கலாம்னு.."

"அட கால் வலிக்குத் தானே..உனக்கு வேணுன்னா சொல்ல வேண்டியது தான..அதுக்கு எதுக்கு இப்டி பம்முற.."

"எனக்கில்லடா..உனக்குத் தான்..நா இன்னிக்கி பார்க்ல ஒருத்தர மீட் பண்ணேன்..அவரு தான் சொன்னாரு..இந்த மார்க் எல்லாம் போயிருமாம்.." சொல்லி முடித்து விட்டு அவன் முகம் பார்க்க அவன் பார்வையில் அனல் பறந்தது.

"இங்க பாரு பா..நம்மளோட நெலமய பத்தி உனக்கு தெரியும்ல..அதுல இதெல்லாம் தேவயா..?"

"இல்ல ராசா.."

"ஏன் பா உனக்கும் என்ன பாக்க அறுவறுப்பா இருக்கா..?" அவர் முடிக்கும் முன்னமே கேட்ட மகனின் கேள்வியில் துடித்துப் போய் விட்டார்,அவனின் தாயுமானவர்.

"ஏன் டா இப்டி பேசற..?" கலங்கிய கண்களுடன் கேட்டவரை பார்க்க மகனுக்கு பாவமாய் இருந்தாலும் இப்படி பேசினால் தான் இதற்கு பிறகு இந்த கதை வராது என்றுணர்ந்தே கேட்டிருந்தான்,அப்படி ஒரு கேள்வியை.

அவரின் வைத்திய செலவுக்கு கொடுக்கும் பணத்தை அவன் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று சேர்த்து  வைத்திருப்பது பையனுக்கு தெரிந்த விடயம் ஆயிற்றே.

"இல்ல மச்சீ அக்கவுன்ட்ல இருக்குற பணத்துல அவனுக்கு ட்ரீட்மன்ட் பண்ணலாம்னு பாக்கறேன்.." இன்று யாருடனோ அலைபேசியில் பேசுவதை கேட்டுக் கொண்டே வீட்டில் நுழைந்தவனுக்கு அவனைப் பற்றி மட்டுமே சிந்தித்து தன்னைப் பற்றி சிந்திக்காத தந்தையின் மீது கோபமும் எழாமல் இல்லை.

"போ நா உன் கூட பேச மாட்டேன்.." கண்ணீரைத் துடைத்த படி அறைக்குள் சென்று கதவை படாரென அடைத்துக் கொண்ட தந்தையைப் பார்க்க சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டே கதவைத் தட்டினான்,
பையன்.

"அப்பா கதவத்தெற.."

"யோவ் அப்பா கதவத்தெறயா..என்ன டென்ஷன் பண்ணாம.."

"சத்யமூர்த்தி கதவத் தெறய்யா.."

"அப்பா நீ இப்ப கதவ தெறக்கலனா நா சாப்ட மாட்டேன் போ.." புன்னகையை அடக்கிக் கொண்ட இதழ்களுடன் அவன் கத்த மறுநொடி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவரோ அவனின் முகத்தை பாராதிருக்க யோசியாமல் தந்தையை இறுகக் கட்டிக் கொண்டான்,பையன்.

"சாரிப்பா.." மன்னிப்புக் கேட்டாலும் தன் செயலுக்கு காரணம் சொல்ல அவன் விரும்பவில்லை.காரணம் தெரிந்தால் தந்தையின் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும் என்று அவனுக்குத் தெரியாதா..?

"விட்றா என்ன..நீ திட்டுவ..அப்றம் வந்து சாரி கேப்ப..நா மன்னிச்சிரனுமா..விட்றா.." திமிறியவரை இன்னுமே இறுக அணைத்துக் கொண்டவனின் செயலில் அதற்கு மேலும் அவரால் கோபத்தை இழுத்துக் கொள்ள முடியவில்லை.

"பாப்புக்குட்டி இப்டிலாம் பேசாதடா..அப்பாக்கு அழுக அழுகயா வருது.."

"நீயும் இப்டி கேக்காத.. பாப்புக்குட்டிக்கு கோவம் கோவமா வருது.." அவரைப் போன்றே சொல்ல பையனின் வாதத்தில் பிழை சொல்ல முடியவில்லை,அவரால்.

"சரி..அப்டி பேச மாட்டேன்.." கூறியவாறு
முதுகைச் சுற்றி கரத்தை படரவிட்டு அவனை அணைத்துக் கொள்ள மறுகரமோ அவனின் முதுகை வருடி விட குழந்தையாய் மாறிப் போயிருந்தான்,அந்த ஆறடி ஆடவன்.

தந்தை  மகள் இடையே இந்த அணைப்புக்களும் கொஞ்சல்களும் இருப்பது யதார்த்தமான நிகழ்வு.
வளர்ந்த பின்னும் தந்தையை கட்டிக் கொள்ளும் இந்த மகனின் பிணைப்பில் இருப்பது என்னவோ ஆத்மார்த்தமான உணர்வு.

வழமையாய் நடப்பது என்றாலும் ஏனோ மகனின் செயலில் அவருக்கு கண்கள் கலங்கி விடும்.இப்போதும் கூட நீர் கோடிட்டிருக்க "பாப்புக்குட்டி லவ் யூ" வெகுளித் தனமான சிரிப்புடன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தவரின் செயலில் புன்னகை அரும்பியது,பையனுக்கு.

"ஐ டூ லவ்யூப்பா.." கூறிய படி கன்னத்தை எச்சில் படுத்தினான்,அவரின் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை.

வெறுமனே தந்தை என்றால் அவர்களின் பிணைப்பு இப்படி இருந்திருக்காதோ என்னவோ..?ஆனால்,
அவனுக்கு அவர் தாயுமானவர் அல்லவா.

பெண்மையிலும் ஆண்மை உண்டென்றால்,நிச்சயம் ஆண்மையிலும் தாய்மை உண்டே.

மறுநாள் பொழுது விடிய பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தான்,பையன்.

கழுத்தில் டையை கட்டிய படி தந்தையின் அறைக்கதவை திறக்க மாத்திரைகளின் வீரியத்தில் ஆழ்ந்த நித்திரை அவருக்கு.

"அப்பா..அப்பா..எந்திரிப்பா.." கன்னம் தட்டியவனின் கத்தலில் பாதி விழி திறந்தவருக்கு மகனின் முகம்  மங்கலாய்த் தான் தெரிந்தது.

"அப்பா..காபி இருக்கு சூடு பண்ணி குடிச்சிக்க..டிபன் பண்ணி வச்சிட்டேன்..இட்லி ஹாட் பாக்ஸ்ல இருக்கு..சட்னி ப்ரிட்ஜ்ல இருக்கு..மத்யானத்துக்கு எல்லாம் பண்ணி வச்சிட்டேன்..சாதமும் பண்ணிட்டேன்.."

"ம்ம்ம்ம்..நீ போ நா பாக்கறேன்.." உளறிக் கொட்டியவருக்கு மகன் பேசியது காதில் விழுந்ததா என்றால் நிச்சயம் இல்லை.ஆனாலும்,பதில் சொல்வது வழக்கம்.

"ட்ரெஸ்லாம் கழுவி ட்ரையர் பண்ணி வச்சுருக்கேன்..முடியும்னா பின்னால விரிச்சு காயப்போட்டு விடு..பக்கேட்ட தூக்கிட்டு மாடிக்கு ஏறாத சரியா..அப்போ நா கெளம்பறேன்.." டையை கட்டிக் கொண்டு ஷர்ட் கையை சரி செய்த படி பேசியவனோ வீட்டையும் பூட்டிக் கொண்டு கிளம்ப வண்டி கிளம்பிய சத்தம் கேட்டதும் நன்றாய் இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தார்,மனிதர்.

பத்து நிமிடங்களுக்கு முன்னே அலுவலகத்திற்குள் நுழைய பையனுக்கு வியர்த்து ஊற்றியது.வியர்வையை கர்சீப்பால் துடைத்த படி அவன் நடந்து  செல்ல பார்வையோ சுற்றத்தை ஆராய மறக்கவில்லை.

வீட்டு வேலைகளை முடித்து விட்டு வெளியேறி அலுவலகத்திற்குள் நுழையும் வரை அவன் மனதுக்குள் பரபரப்பாக இருக்கும்.இதுவரை பலமுறை ஆராய்ந்து பார்த்தாலும் அந்த பதட்டத்துக்கும் பரபரப்புக்கும் அவனுக்கு காரணம் புரிந்ததில்லை.

தன்னிடத்துக்கு வந்தவனின் விழிகளில் சிறு அதிர்வோடு பெரும் முறைப்பு.யாழினியைத் தவிர வேறு யாரும் வந்திருக்கவில்லை.

பையன் வந்ததை கூட கவனியாமல் சாப்பிட்டுக்கொண்டு அலைபேசியில் ஓடிக்கொண்டிருந்த காணொலியில் கவனமாயிருந்தாள்,யாழினி.

"வாவ்வ்வ்வ்..இவ்ளோ அழகா இருக்கு.." உப்பிய கன்னங்களுடன் அவள் முணுமுணுத்தது,பையனவனுக்கும் புரியத் தான் செய்தது.

காணொலியில் ஓடிய காட்சியை அவள் வெகுவாய் ரசிப்பது அவளின் முக பாவத்திலேயே வெளிப்பட இரு புருவமுயர்த்தி பார்த்த பையனின் முகத்தில் சலிப்பான பாவம்.

"வந்தவுடனே சாப்டனுமா..?" முணுமுணுத்த படி கைக்கடிகாரத்தை பார்த்தவனோ இன்னும் அலுவலக நேரத்துக்கு ஏழெட்டு நிமிடங்கள் மீதமிருந்ததால் தான் அமைதி காத்ததே.வேலை நேரத்தில் இது நடந்திருந்தால் அவளின் டிபன் பாக்ஸ் பறந்திருப்பது நிச்சயம்.

இருபுறமும் தலையாட்டி பெரு மூச்சு விட்டவனோ தன்னிடத்தில் வந்து அமரப் பார்க்க கதிரை இழுபடும் சத்தத்திலேயே கவனம் கலைந்தது,அவளுக்கு.

விழிகள் தெறித்து விரிய "நாம எதிர்பாக்காத நேரத்துல என்ட்ரி குடுக்குறதே இவருக்கு வேலயா போச்சு.." மனதுக்குள் நினைத்தவாறு எழுந்து நின்றவளின் இதழ்களினோரத்தில் உணவுத்துகள்கள் ஒட்டியும் இருந்தன.

பையன் எதுவும் பேசவில்லை.கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிய படி வீசினான்,அழுத்தமான ஒற்றைப் பார்வையை.

அந்த பார்வை சுமந்து நின்ற தீட்சண்யம் தந்த பயத்தில் புரையேறிட தலையை தட்டிக் கொண்டே மறுபுறம் திரும்பியவளுக்கு இருமல் வேறு.

"க்கும்..க்கும்..க்கும்.." தலையை தட்டிய படியே அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டவளின் கரமோ நெஞ்சை நீவி விட்டுக் கொள்ள பயத்தில் அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

தேடல் நீளும்.

2024.03.27


Leave a comment


Comments


Related Post