இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
வலி தரும் நேசம் - 11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK019 Published on 28-03-2024

Total Views: 20837

பகுதி 11 

அன்று திருமணத்திற்கான நகைகளை பற்றி பெண்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். தனது அறைக்கு சென்று அபிராமி எடுத்து வந்த நகைகளில் இருந்து மெலிதான ஒரு முத்து ஆரத்தையம் தங்க செயினையும் தேர்ந்து எடுத்த மீனா "இது போதும் அத்தை. முன்னாள் மறுநாள் சேலைக்கு ஏற்ற மாதிரி போட்டுக் கொள்கிறேன்." என்றாள்.

அப்போது எதுவும் சொல்லாத அபிராமி எழுந்து செல்லும் போது "தனக்குனு போட்டுட்டு வந்திருந்தா இந்த நிலைமை இருக்குமா? ஒன்னுமில்லாம வந்ததுல இப்படி நின்னு நம்ம வீட்டு மானத்தையும் வாங்க வேண்டியது." என்று முணுமுணுத்தது மீனா கவி இருவருக்குமே கேட்டது. கேட்க வேண்டும் என்று சொன்னது தானே. 

மீனா இதெற்கெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கவிக்கு கஷ்டமாக இருந்தது. அவளிடம் இருக்கும் நகைகளை அணிய தருவாள் தான். ஆனால் விசேஷத்திற்கு வரும் மாலா ஏதாவது சொல்லிவிட்டால் அது மீனாவிற்கு தான் கஷ்டம். என்ன செய்வது என்று யோசித்தவள் இரவு கணவனிடம் பேசினாள்.

"எனக்கு அத்தை அப்படி பேசவும் ரொம்ப கஷ்டமா போச்சுங்க. மீனாக்கா எதுவும் காமிச்சுக்கலை. இருந்தாலும் அம்மா அப்பா இல்லாதவங்களை நாம தானே பார்த்துக்கணும்."

"சரி அதுக்கு இப்போ என்ன செய்ய முடியும் பாரு?" 

"நாம அக்காவுக்கு வாங்கி குடுக்கலாம்ங்க."

"என்னது? வேற வினையே வேணாம். அப்புறம் எங்க அப்பாவும் அண்ணனும் சண்டைக்கு வர்றதுக்கா?"

"ப்ச் அவங்க தான் செய்யலை நாம செஞ்சாலும் கோபிப்பாங்களா?" அலுப்புடன் கேட்டாள் பார்கவி.

"பாரு... எனக்கு என்னவோ நாம இதுல தலையிடாம இருக்கிறதே நல்லதுன்னு நினைக்குறேன். அண்ணனை விடு. எங்க அப்பா அவ்வளவு லேசுல மீனாவை விட்டு தர்றவர் இல்லை. அவரே சும்மா இருக்காருன்னா எதாவது காரணம் இருக்கும். நாம ஒன்னு செய்ய போக அது நல்லதுக்கு தான் அப்படினாலும் அப்புறம் அது அவங்களுக்கு பிரச்சனை ஆக கூடாது." மெதுவாக எடுத்து சொன்னான் தேவா.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க நாளைக்கு என்னோட நகை கடைக்கு வர்றீங்க." மிட்டாய் கேட்கும் குழந்தை போல அடம் பிடித்தாள் பார்கவி.

இவள் சொன்னால் கேட்க மாட்டாள் என்று உணர்ந்த தேவா "சரி ஒன்னு பண்ணு. நீ மீனா கிட்ட பேசு. எப்படியும் அவளுக்கு வாங்க போறது தானே. அவளையும் கூட்டிட்டு போகலாம். " என்றான். இதற்கு மேல் மீனா பார்த்துக் கொள்ளுவாள்.

"அவங்க ஒத்துக்கலைனா?"

"அதை அப்போ பார்க்கலாம். நீ இப்போ தூங்கு."

************

மறுநாள் வேலைக்கு செல்பவர்கள் கிளம்பிய பின் மெதுவாக பேச்சு எடுத்தாள் பார்கவி.

"அக்கா. நான் ஒரு ரூபி ஹாரம் பார்க்கலாம்னு இருக்கேன். நீங்களும் வாங்களேன். உங்களுக்கும் அப்படியே எதாவது வாங்கலாம்."

"நேத்து அத்தை பேசுனதை வச்சு பேசுறியா கவி?" கூர்மையான பார்வையுடன் கேட்டாள் மீனா.

இல்லை என்று தலை ஆட்ட முயன்ற பார்கவி அந்த பார்வையின் கூர்மை தாளாமல் ஆமாம் என்று சொன்னாள்.

பெருமூச்சுடன் அவள் அருகே வந்து உட்கார்ந்த மீனா "அவங்க சொன்னது என்னை காயப்படுதலை கவி. அது மட்டும் இல்லாம அவங்க எடுத்துட்டு வந்து காண்பிச்சது எல்லாமே என் நகைங்க தான். அவங்களது இல்லை."

"அப்புறம் ஏன் கா?"

"உனக்கு எங்க அம்மாவை பத்தி எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு தெரியாது. அவங்க ஒரு நகை பைத்தியம். அதனால எப்போவுமே விதவிதமா போட ஆசை படுவாங்க. எங்க அப்பா சம்பாதிச்சு அவங்க போட்டா பரவாயில்லை. ஆனா எங்க அப்பா என்னைக்குமே சம்பாதிச்சதில்லை. இங்க தாத்தா போட்ட நகைகளை எல்லாம் வித்த பிறகு மாமா கிட்ட கேட்டு வாங்குவாங்க. அதையும் எங்க அப்பா வித்துடுவார். மாமா மறுபடியும் வாங்கி கொடுப்பார். நான் வயசுக்கு வந்த பிறகு என் பெயர் சொல்லியும் மாமா கிட்ட கேட்க ஆரம்பிச்சாங்க.அந்த நகையையும் எங்க அப்பா வித்து செலவு செஞ்சிடுவார். ஒரு கட்டத்துல தாங்க முடியாம நானே மாமா கிட்ட சொன்னேன். எனக்கு நீங்க வாங்க நினைச்சா வாங்குங்க. ஆனா குடுக்காதீங்க. எப்போ நிஜமான தேவை வருதோ அப்போ அதாவது என் கல்யாணத்துக்கு குடுங்க அப்படினு. மாமாவுக்கும் சரினு பட்டதால அப்படியே செஞ்சார். அன்னைக்கு எனக்கும் எங்க அம்மாவுக்கும் அவ்வளவு பெரிய சண்டை. என்னவோ நான் நகைக்கு ஆசைப்பட்டு சுயநலமா பதுக்கி வைக்க முயற்சி பண்ற மாதிரி பேசுனாங்க. எனக்கு என்னவோ அன்னைக்கு வெறுத்திடுச்சு. அப்படி பட்ட நகை நமக்கு வேணாம். இது மேல ஆசை வச்சா அது சரி இல்லைனு தோணிடுச்சு. அதுக்கு அப்புறம் நான் தேவைக்கு போடுறது தான். ஆசைக்கு இல்லை. அத்தைக்கு அதுல கொஞ்சம் மன வருத்தம். நான் ஏன் இப்படி இருக்கேன்னு அவங்களுக்கு தெரியாது. நான் சொல்லவும் இல்லை. சொன்னா அவங்களுக்கு புரியாது. இப்போ என்ன  இப்படி கொஞ்சம் பேசுவாங்க. அவ்வளவு தானேனு நான் கடந்து போயிடுறேன். நாம நமக்காக எடுக்குற முடிவுகள் எல்லாருக்கும் புடிக்கணும்னு அவசியம் இல்லையே."

"ஆனா அக்கா நீங்க இப்படி நகை போடாம இருந்து நான் போட்டா பேச மாட்டாங்களா?"

"யாரு பேசுவா? என்ன பேசுவாங்க? என் கிட்ட இல்லை அப்படினு தானே? பேசிட்டு போகட்டும். எங்க அப்பா ஒரு ஊதாரினு இந்த ஊருக்கே தெரியும். அப்போ என் கிட்ட எப்படி நிறைய நகை இருக்கும்? எங்க வீட்டுக்காரர் வாங்கி குடுக்கலைனு சொல்லுவாங்களா? அவர் எனக்காக என்ன செஞ்சார் செயலைனு எனக்கு தான் தெரியும். அவங்க சொல்லி தெரிய தேவை இல்லை. பேசுறவங்களை நீ அதுக்கு அப்புறம் எத்தனை தடவை பார்த்திட போற? அவங்க பேசுறதுக்காக நமக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை ஏன் செய்யணும்?"

"பெரிய மச்சான் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?"

"இதுவரைக்கும் சொன்னது இல்லை. என் இஷ்டம் போல தான் இருக்கவிட்டிருக்காங்க. இப்போ முணுமுணுத்தாலும் அத்தையும் என்னை வற்புறுத்தலை பார்த்தியா? ஏன்னா போடுறதும் போடாததும் என் இஷ்டம். ஒரு பொண்ணு போடுற நகையில அந்த வீட்டோட கவுரவத்தை வைக்கிறதே தப்பு. அப்படி யோசிக்கிறதுனால தான் டௌரி பிரச்சனை வருது. அப்படி இல்லாம அவ முகத்துல இருக்குற சந்தோஷத்தை வச்சு நிர்ணயிக்கணும். அந்த குடும்பம் நல்ல குடும்பமா இல்லையானு. நகை அப்படிங்கிறது நமக்கு நம்மளை அழகா காட்ட உபயோக படுத்துற ஒரு பொருள். ஒரு விதத்துல அதனோட விலையினால ஒரு விதமான முதலீடும். அதுக்கு மேல அதுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது."

"இப்போ நான் போடவா வேண்டாமா?" என்று பரிதாபமாக கேட்டாள் பார்கவி.

"ஏய். இப்போ தானே சொன்னேன். போடுறதும்  போடாததும் உன் இஷ்டம்."

"அப்போ சரி. ஆனா இவர் அப்போவே சொன்னார். மீனா நகை போடாம இருக்கிறதுக்கு எதாவது காரணம் இருக்கும். நீ தலையிடாதேன்னு. நான் தான் சும்மா இல்லாம பேசிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க கா."

"நீ கேட்டதுல எந்த தப்பும் இல்லை கவி. என் மேல இருக்குற அக்கறையில பாசத்துல தானே கேட்குற. இப்போ உனக்கு என்னை பற்றி தெரிஞ்சிக்க இது ஒரு வாய்ப்பு. அவ்வளவு தான்." 

பார்கவி எழுந்து சென்ற பின் பெருமூச்சுவிட்டாள் மீனா. இவையெல்லாம் காரணம் தான் என்றாலும் அவள் நகைகளை ஒதுக்குவதற்கு முக்கிய காரணம் அவள் கணவனும் மாமியாரும் தானே!!! அதை அவளால் சொல்ல முடியுமா???? 

 


Leave a comment


Comments


Related Post