இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 28-03-2024

Total Views: 40257

‘அன்னா வின்டோர் காஸ்டியூம் சென்டர்’ என்றழைக்கப்படும் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற ஆடைகளின் அருங்காட்சியகம் நடத்தும் போட்டியே, ‘ஃபேஷன் தி பேஷன் (fashion the passion)’ என்னும் போட்டி.

உலக அளவில் பெரிய பெரிய ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் நான் நீ எனப் போட்டியிட்டு கலந்துகொள்ளும் இப்போட்டிக்கு யாரும் இதுவரை உற்பத்தி செய்திடாத புதுவகையில், அதிகளவு உழைப்பை செலவழித்து கொண்டுவரப்படும் ஆடைகளுக்கே பரிசு!

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கே பல விதிமுறைகள் உண்டு. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இப்போடியில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்களின் சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் கொண்டு பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டோரில் சிறந்த படைப்பாளிகள் மட்டுமே தெரிவு செய்யப்படுவர்.

தெரிவு செய்யப்பட்டோர் நியூயார்க்கில் உள்ள தங்கள் அருங்காட்சியகத்திற்கு அவர்களது படைப்புகளைக் கொண்டுவந்து காட்சிப்படுத்த வேண்டும். அதில் வெற்றி பெருவோருக்கு ‘அன்னா வின்டோர் அருங்காட்சியகம்’ சார்பாக ‘சிறந்த ஆடை வடிவமைப்பாளர்’ என்ற பட்டம் கிடைக்கும்.

(இது கதைக்காக கற்பனை செய்து எழுதப்பட்ட போட்டி)

நான்கு வருடங்கள் முன்பே இப்போட்டியில் கலந்து கொண்டு தோல்வியை மனமுவந்து தழுவி வந்திருந்தான் யஷ்வந்த் கிருஷ்ணா. ஆனால் அந்த தோல்விதான் அவனது உழைப்பின் அடித்தளமாக அமைந்தது. அவ்வருங்காட்சியகம் சென்று வந்தவன் மனதில் தோல்வியின் சாயல் துளியளவும் இல்லையென்றே கூறவேண்டும்.

அங்கு பல அழகிய கலை வடிவங்களுடன் காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகளுக்கு நடுவில் தனது கலை எத்தனை குறைவானது என்று அவனே புரிந்துக் கொண்டான். அவற்றை வியப்போடு பார்த்தவன் மனதில் தோன்றியதெல்லாம் ‘தான் அடையும் இவ்வியப்பை தன்னால் இங்கு கூடிய அனைவரும் அடையும்படி செய்யவேண்டும்’ என்பதுதான்.

அதற்காகவே ஒளியியல் மாயை வரைபடங்களைத் தேடித் தேடி அதில் தனக்கு திருப்தியளித்த புகைப்படத்தை பல மாதங்கள் பயின்று தனக்கு திருப்தி கொடுக்கும் வரைபடத்தை வரைந்து பழகினான்.

முழுமனதாக அவ்வரைபடம் அவனுக்கு மகிழ்வை தந்த பின்னரே அதை நெய்யத் துவங்கினான். சாதாரணமாக ஒரு புடவையை கைத்தறியில் நெய்வதற்கே இருபது நாட்கள் எடுத்துக் கொள்ளும். அப்படியிருக்க இப்படியொரு சவாலான வடிவமைப்பு எளிதில் வந்துவிடுமா என்ன?

பலமுறை முழுதும் செய்து முடித்தும் அதில் திருப்தி இல்லாது மீண்டும் மீண்டும் முயற்சித்தான். அந்த நான்கு வருட முயற்சிக்கு பலனாய் இன்று இந்த புடவையை அழகுபட திருத்தமாய், தன் மனதிற்கு திருப்தி அளிக்கும் விதமாய் நெய்து முடித்திட்டான்.

அவன் முகத்தில் இருக்கும் புன்னகையும் பூரிப்பும் அவனது உழைப்பை எடுத்துப் பேச, அதில் மனதார சந்தோஷம் கொண்ட வினோத், “ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்” என்று கூறினான்.

“இந்த முறையும் அந்த கான்டெஸ்டுக்கு அப்ளை பண்ணிருந்தேன் வினோத். அப்ரூவ் ஆயிடுச்சு. போட்டி டேட் அனௌன்ஸ் பண்ணலை. அதுக்குள்ள நமக்கு ஒரு மாடல் வேணும். ரேம்ப் வாக்கெல்லாம் இருக்காது. ஜஸ்ட் சாரி கட்டிட்டு நிற்குறதுக்கு தான். ரொம்ப அல்ட்ரா மாடலா இல்லாம சிம்பிள் அன்ட் எலிகெண்ட் லுக் உள்ள பொண்ணு வேணும். விசாரி” என்று யஷ்வா கூற, “ஓகே சார்” என்று கூறிச் சென்றான். 

அந்த புடவையைத் தன் கைகளில் ஏந்தியவன் அதை தன் நுனிவிரல் கொண்டு வருட, அதில் அத்தனை சிலிர்ப்பு ஏற்பட்டது அவனுக்கு. தன் முதல் குழந்தையை முதன் முறை கையிலேந்தி வருடம் தந்தையின் சிலிர்ப்பது!

அதை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டவன் அடுத்தடுத்து செயல்பட வேண்டியதை யோசிக்க, சட்டென ஒருவனின் நினைவு அவன் எண்ணத்தில் உதித்தது.

அவன் எண்ணதில் உதித்தவனோ தனது நிறுவனத்தில் தோரணையாய் அமர்ந்துகொண்டு மேஜையில் எழுதுகோல் வைத்துத் தட்டிக் கொண்டிருந்தான். 

அவனது உதவியாளன் குணா அவனது சொல்லுக்காகக் காத்திருக்க, யோசனையிலிருந்து மீண்டவன் யஷ்வந்த் வைத்ததைப் போல் ஒரு காகிதப் பையை எடுத்து வைத்தான்.

“சார்..” என்று குணா இயம்ப, “எடுத்துப் பாரு குணா” என்று கூறியது அர்ஷித் பிரசாத்தைத் தவிர யாராக இருந்திட இயலும். குணா அந்த பையை எடுத்துப் பார்க்க, அழகிய நீள்சட்டை (long gown) இருந்தது.

அதை கண்கள் விரியப் பார்த்த குணா, “சார்.. இட்ஸ் ஜஸ்ட் அமேசிங்” என்று கூற, அவன் இதழில் ஒரு கர்வப் புன்னகை!

மேலை நாட்டு ஆடை வடிவமைப்புக் கலையின் ஆராய்ச்சி கடிதங்களிலும் பண்டைய வெளிநாட்டு மகாராஜா மற்றும் ராணியின் ஓவியங்களிலும் வசீகரிக்கப்பட்ட அர்ஷித்துக்கு அவர்களின் ஆடைக் கலைகளில் அப்படியொரு பிடித்தம். நேர்த்தியாகவும், நாகரீகமாகவும் உடை உடுத்தும் அவர்களின் கலைநயம் அவனுக்கு ரசோபாவத்தை மென்மேலும் கூட்டியிருந்தது.

ஆங்கிலேயர்கள், இந்தியர்களின் செல்வ செழிப்பில் இந்தியாவை அடைய வந்து ஆட்சி நடத்திய இந்தியர்களின் சில கொடுமை பக்கங்களிலும் மினுமினுக்கும் சிற்சில நல்ல செயல்கள் ரயில் பாதை, ஆங்கில மொழி மற்றும் உடை நாகரீகம்.

அந்த நேர்த்தியான நீள்சட்டை தயாரிப்புப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தும், நேரில் சென்று அதன் தயாரிப்புப் பற்றித் தெரிந்துகொண்டும், அங்குள்ள ஓவியங்களைக் கண்டு வந்தும் தனது ரசனைகளைத் தூவி அவ்வாறான ஆடை ஒன்றை தயாரித்திருந்தான்.

ஆனால் இங்கு அற்புதம் அதுமட்டுமல்ல! மேற்கத்திய உடை நாகரீகத்தில் இந்த நீள்சட்டை அவனை கவர்ந்தாலும் இந்திய உடை நாகரீகத்தினை விரும்பாதவன் அல்ல அவன்! தமிழும் ஆங்கிலமும் இன்றளவும் போட்டி மொழிகளாகவே கருதப்பட்டு வரும் காலத்தில், தனது கலையில் தமிழையும் ஆங்கிலத்தையும் இணைக்கும் விதமாய் இப்படைப்பை எடுத்துக் கொண்டான்.

அதுதான் ஆங்கிலேயர் ஆடை கலைகளில் உடையை உருவாக்கி, அதில் ரவிவர்மன் தீட்டிய ஆயிழையையும் அன்னத்துப் பறவையையும் கொண்ட ஓவியங்களைப் பல வருடம் வரையப் பழகி அதில் தீட்டியிருந்தான்.

'painted gown' எனப்படும் சாயம் கொண்டு கைப்பட வரையப்பட்ட உடையதில் ரவிவர்மனின் ஓவியங்கள் அலங்கரித்திருந்தன. ரவிவர்மன் அல்ல, யார் ஒருவர் வரைந்த ஓவியத்தையும் நகலெடுப்பதைப் போல் இன்னொருவரால் வரைய இயலாது. இது வரைபட நியதி! ஆனால் அந்த ஓவியத்தை ஒத்தளவு தொன்னூறு சதவீதம் கொண்டுவர இயலும். அந்த தொன்னூறு சதவீதத்திற்காக காகிதத்தில் சில ஆண்டுகள் பயிற்சி செய்து, சில ஆண்டுகள் துணிகளில் பயின்று இன்று இந்த படைப்பை உருவாக்கியுள்ளான்.

“சார்.. கண்டிப்பா இந்த முறை நீங்க ஜெயிப்பீங்க சார். அவ்வளவு அற்புதமா இருக்கு” என்று குணா கூற, தன் தலையை இடவலமாய் ஆட்டி சிரித்த அர்ஷித்,

 “குணா.. அடிப்பட்டு மருந்திட்டு வந்த புலி நான். ஆனா அதேபோல அடிபட்டு, அந்த கலைகளின் வியப்பில் மருந்திட்டு வந்த கருஞ்சிறுத்தை ஒன்றும் இருக்கு. சாதாரணமா எடைபோடும் மனிதனில்லை அவன்” என்று கூறினான்.

குணா புரிந்தும் புரியாது விழிக்க, “யஷ்வந்த்” என்று அர்ஷித் கூறவும், அங்கு இதேபோன்ற பாராட்டு வார்த்தைகளுக்கு அர்ஷித்தைப் போலவே பதில் கூறி புரியாது முழித்த வினோத்திற்கு “அர்ஷித்” என்று யஷ்வந்த் பதிலளித்தான்.

அந்த இரண்டு உதவியாளர்களுக்கும் தங்கள் முதலாளிகள் உண்மையில் எதிரிகளா நண்பர்களா என்று ஆச்சரியமாகவே இருந்தது. தொழிலில் எதிரி போன்று ஒருவருக்கு ஒருவர் முட்டி மோதி போட்டியிடுகின்றனர். தனிப்பட்ட வாழ்வில் இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வதில்லை என்றாலும் போட்டி என்று வந்துவிட்டால் முழுநேர எதிரிகள் தான். 

தனிப்பட்டு இவர்களுக்கு இடையில் செயல்படும் அந்த ஒரு ஜீவன் தான் இவர்களை எதிரியாக காட்டுகின்றதோ!?

இரவு வீடு வந்தவன் குளித்து உடைமாற்றிவிட்டு வர, அஞ்சனா அவனுக்காகக் காத்திருந்தாள். இருவருமாய் கீழே சென்று தங்கள் உணவை முடித்துவர, வந்தவுடன் அலுப்பாய் படுத்தவள் அருகே வந்தவன், “ஏ கோழிக்குஞ்சு..” என்றான்.

“ப்ச்.. என்ன பாத்தா கோழிக்குஞ்சு மாதிரியா மாமா இருக்கு” என்று பாவம் போல் அவள் கேட்க, “நூறு.. இல்ல இல்ல ஆயிரம் பர்சன்ட் அப்படி தான் இருக்க” என்றான்.

கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்த போதும் ‘அப்படி அழைக்காதே' என்றெல்லாம் அவள் கூறவில்லை.  

“என்ன மாமா?” என்று அவள் வினவ, 

“ஒன்னுமில்ல” என்றுவிட்டு திரும்பிப் படுத்தான்.

எதற்கு அழைத்தான் எதற்கு சென்றான் என்று புரியாது ‘கோபித்துக் கொண்டாரோ?’ என்றெண்ணியவள் எழுந்து வந்து அவன் கன்னத்தில் காலை கொடுக்காத அந்த முத்தத்தை கொடுத்துவிட்டு “குட் நைட் மாமா” என்று படுத்துக் கொண்டாள்.

அவன் பார்வையை சந்திக்க இயலாது என்று அவள் மனம் கூறியது போலும் திரும்பிப் படுத்துக் கொண்டவளைப் பார்த்தவன் இதழில் அழகாய் ஒரு சிரிப்பு குடிகொண்டது.

அங்கு தன்னறையில் படுத்திருந்த யாழினி அலைப்பேசியில் மின்னஞ்சலில் வந்த அப்புகைப்படத்தை இமைக்க மறந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தாள். அலங்கார பொம்மைக்குப் போட்டுவிடப்பட்ட அந்த அழகிய நீள்சட்டையை பார்த்தவளுக்கு விழிகளைத் தான் மூட மறந்தது கூட நினைவில் இல்லை.

“எவ்வளவு அழகா பண்ணிருக்காரு” என்று அவள் மெல்ல வாய்விட்டுக் கூற, “ஹே ஸ்வீட்டி.. ஹவ் இஸ் மை பிராடக்ட்” என்று அடுத்த மின்னஞ்சல் செய்தி வந்தது. அவனிடம் அவளது அலைப்பேசி எண் இல்லாமலா? ஆனால் ஏனோ அந்த மின்னஞ்சல் வழி தொடர்பு தான் அவன் விரும்பியது!

எப்போதும் போல் இப்போதும் அவள் பதில் கூறவில்லை.

 'நீ பார்த்துட்டனும் எனக்கு தெரியும், என்னை பாராட்டிருப்பனும் எனக்கு தெரியும் டார்லிங்’ என்று அடுத்த மின்னஞ்சல் வரவும், மூச்சுமுட்டப் பெற்றவள் போல் அலைபேசியை அணைத்துப் போட்டாள்.

மூச்சுவாங்க பால்கனிக்கு வந்து நின்றவள் நெஞ்சத்தில் கண்சிமிட்டி சிரிக்கும் அவன் பிம்பம். அவளுக்கு என்றுமே அவன் எட்டாத கனிதான். அவனுடனான தொடர்பே அவள் வெறுக்கவும் செய்கின்றாள், சில சமயங்களில் அவளையும் அறியாமல் விரும்பவும் செய்கின்றாள்.

ஆழ்மனதில் அமிழ்ந்து கிடக்கும் உணர்வுகளை அவ்வப்போது அவன் தட்டியெழுப்புகையில் அவ்வுணர்வுகளைப் பற்றிய சிறு ஆய்வு கூட நடத்தாமல் மீண்டும் அவற்றை புதைத்துவிட அவள் படும் பாடுதான் எவ்வளவோ?

'எதுக்கு இவருக்கு இந்த வேண்டாத ஆசை? எட்டாகனிக்கு கொட்டாவி விட்டுகிட்டு இருக்கார்’ என்று அவள் மனம் எண்ண, அவனை நறுக்கென்று நாலு வார்த்தை பேசிடவும் அவளுக்கு மனமில்லை. 

அவனை அவமதித்து அவள் பேசாதிருக்க ஒரே காரணம் அந்த ஒரு ஜீவன் தான். அந்த ஜீவனை நினைக்கையில் அவள் கண்களில் ஏக்கமும் பாசமும் கொப்பளிக்க ஒருதுளி கண்ணீர் உருவானது.

'கூட்டிட்டு போய் வச்சுகிட்டு இன்னும் அனுப்ப மாட்டேங்குறாங்க. அண்ணா கல்யாணத்துக்கு கூட அனுப்ப தோனலையே. ச்ச என்ன மனுஷங்களோ' என்று அவள் மனம் வேதனையுடன் புலம்ப, அவள் அலைபேசி சப்தமிட்டது.

பாவையவள் அதை சென்று பார்க்க, ‘’டோன்ட் வொரி ஸ்வீட்டி.. ஷி வில் பி பேக் சூன்' என்ற மின்னஞ்சலும், அவள் எண்ணத்து ஜீவனின் அழைப்பும் ஒரே நேரத்தில் வந்தது!


Leave a comment


Comments


Related Post