இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 29-03-2024

Total Views: 35918

பூச்செண்டை பார்த்து அர்த்தமாய் புன்னகைத்தபடியே அறையில் இருந்து வெளியேறினான் தரணி. செல்லும் அவனையே துரத்தின அவளது கண்கள். மீண்டும் பார்வையை டிராவல் பேக்கில் பதித்தாள். அனைத்தும் அவளது மேக்கப் கிட். ஒரு சிறப்பான அழகுக் கலை நிபுணரிடம் இருக்கும் அனைத்து பொருட்களும் அவளிடம் உண்டு. தனது சம்பாத்தியத்தில் ஒவ்வொன்றாய் வாங்கிக் கொண்டாள். ஊருக்கு தகுந்தபடி அவளது அலங்காரம் இருக்கும்… கிராமம் என்றால் அதற்கு தகுந்தாற் போல்… நகரம் என்றால் அதற்கு ஏற்றபடி என்று மிகச் சிறப்பான பியூட்டிஷியன் அவள்.


வெறுப்பின் உச்சத்தில் மறந்து வந்தாளா மறுத்து வந்தாளா தெரியாது… அவளது தனித்திறமை முடங்கி விடக்கூடாது என்பதில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி விட்டான் அவளது கணவன்.


“எனக்கே நெனப்பு இல்ல… கிளம்புறதுக்கு மொத நா மாப்ளதான் போன் பண்ணி உன் அலங்கார சாமான் எல்லாத்தையும் மறக்காம எடுத்துட்டு வரணும்னு ரெண்டு மூணு தடவ சொன்னாரு… உனக்கு இங்க ஏதோ கடை பார்த்து வச்சிருக்காராம்… இந்த கல்யாணம் வரவேற்பு வேலை எல்லாம் முடிஞ்ச உடனே உன்னைய கொண்டு போய் உட்கார வச்சிருவாராம்… அவர் பழக்க வழக்கத்துல கொள்ளப் பேர் இருக்காகளாம்ல… இனி என் பொண்டாட்டி எப்பவும் பிஸியா னதான் இருப்பான்டு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு தெரியுமா…? எங்க அப்பன் ஆத்தா செஞ்ச புண்ணியம் உனக்கு இப்படி ஒரு புருஷன் கிடைச்சிருக்காரு… மனசெல்லாம் குளுந்து கெடக்கு… உன் சேட்டை எல்லாத்தையும் குறைச்சுப்புட்டு அவரை புரிஞ்சு நடந்துக்கடி…”


பையின் உள்ளே இருந்த பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்து வெளியில் வைத்தபடி மல்லிகா பேசிக் கொண்டே இருக்க அவரது வார்த்தைகளை முழுதாய் மூளை வாங்கிக் கொண்டாலும் கண்கள் மட்டும் தன்னவனையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன. முகிலனின் தோளில் அடித்து ஏதோ சிரித்துப் பேசியபடி இருந்தான் தரணி.


பளிச்சென்ற அந்த சிரிப்பில் இவள் கண்களில் மின்னல்… இதழ்களோடு கண்களும் சிரிக்குமா…? அவனுக்கு சிரித்தன… சிரித்தபடி அடிக்கடி மீசையை நீவிக் கொண்டான்… ஓடிச் சென்று அந்த வேலையை தான் செய்ய வேண்டும் போல் குறுகுறுப்பு… அலைபாய்ந்த சுருள் கேசத்தை அடிக்கடி கை கொண்டு அடக்கியபடி இருந்தான்… அதனை பிடித்து களைத்து விளையாட கைகள் பரபரத்தன.


‘பனைமரம்… என்னென்னவோ யோசிக்க வைக்குது… பார்க்க அழகாதேன் இருக்கு… என் கண்ணுக்கு தான் அப்படி தெரியுதா…? இல்ல நிஜமாவே அழகா…?’ விரிந்த புன்னகை அவள் இதழ்களில்… முதன்முறையாய் அவனை ரசிக்கிறாள்… கள்ளத்தனமாய் தன்னவனை ரசிப்பதும் தனி போதைதான்.


‘எந்த ஆம்பளைய இம்புட்டு நேரம் பார்த்திருக்கேன்… ரசிச்சிருக்கேன்… இது கொரளிவித்தை பார்ட்டிதேன்…’ தளுக்கென்று சிரித்து வைத்தாள். 


மல்லிகா அவளை ஒரு மாதிரியாய் பார்க்க “என் திங்ஸ் எல்லாத்தையும் பார்த்து சந்தோசத்துல சிரிக்கிறேன்… நீ ஏன் இப்படி பார்க்கிற…?” என்றவளின் பார்வை தழுவிச் சென்றது என்னவோ தள்ளி நின்ற பனைமரத்தை.


“ம்க்கும்… உங்கப்பனை நான் பார்த்து ரசிக்காத ரசிப்பைத்தேன் நீ பண்ணிட்டியாக்கும்… என்ன இருந்தாலும் எனக்கு நீ மட்டந்தேன்… ஹூம்… மீசையை முறுக்கிட்டு கைச்சட்டைய கம்பக்கூடு வரைக்கும் மடிச்சுக்கிட்டு… வேட்டிய ஒத்தக் கையில புடிச்சுக்கிட்டு போற போக்குல யாருக்கும் தெரியாம டிடிங்னு ஒத்த கண்ணை அடிச்சிட்டு நடந்து போவாரு பாரு… யாத்தே… இன்னும் நெஞ்சுக் கூட்டுல நெறஞ்சி நிக்குது…”


தாயின் சிலாகித்த காதல் வார்த்தைகளை கேட்டு கண் விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் பூச்செண்டு… இதுபோன்றெல்லாம் பேசும் சூழல் இதற்கு முன் அமைந்ததில்லையே.


“எம்மோவ்… அதெப்படி…? அப்பா உன்னை பார்த்து எப்படி கண்ணடிப்பாரு…?” தலையை ஆட்டியபடியே மல்லிகாவிடம் கேட்க பாரதிராஜா பட நாயகி போல் ஒற்றை கையால் ஒரு பக்க முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்துடன் சிரித்தார் மல்லிகா. அடேங்கப்பா… அம்மாவின் இந்த பரிமாணம்கூட அழகுதான்… தன் தாயையும் அவள் கண்கள் ரசித்தன.


“ஒரே ஒருக்க சொல்லும்மா…” கையைப் பிடித்து இழுத்துவிட்டு ஆசையாய் கேட்டாள்.


“டிடிங்னு அடிப்பாக…” என்று கூறி தன் கண்ணையும் சிமிட்டிக் காட்ட இருவரும் பட்டென வெடித்துச் சிரித்தனர். அவர்களின் சிரிப்பு சத்தத்தில் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களும் திரும்பிப் பார்த்தனர். தரணியும்கூட தலை நீட்டி எட்டிப் பார்த்தான். தாயும் மகளும் தங்களை மறந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.


அன்று திருமணம் முடிந்து பெங்களூர் கிளம்பியபோது கண்ணீருடன் தன் மகளின் தலை வருட வந்த மல்லிகாவின் கரத்தை வெடுக்கென தள்ளிவிட்டு கோப விழிகளால் அவரை முறைத்து “எல்லாரும் என்னை வச்சு விளையாடிட்டீங்கள்ல…” ஒட்டுமொத்த குடும்பத்தையும் பார்த்து கூச்சலிட்டு காரில் ஏறி அமர்ந்த அந்த தருணம் தரணியின் நினைவில் ஓடியது. நிஜம் மட்டுமே நிறைந்த இன்றைய இந்த சிரிப்பு அவனுக்குள் நெகிழ்வை ஏற்படுத்தியது.


‘எல்லாம் சரி… இந்த சண்டிராணியை எப்படி கரெக்ட் பண்றது…? ஆழாக்கு உயரம் இருந்துக்கிட்டு என்கூட எகிறி எகிறி சண்டை போடுறாளே…’ சற்றுமுன் நடந்த அந்த நெருக்கமான சண்டை நிகழ்வு மனதில் வந்து நிற்க ‘நாங்க சண்டை போட்டோமா…? ரொமான்ஸ் பண்ணினோமா…?’ பெரிய சந்தேகம் வேறு எழுந்தது.


‘டெய்லி இப்படியே கண்டினியூ பண்ணுவோம்… சண்டையா ரொமான்ஸானு சீக்கிரம் ஒரு கிளாரிஃபிகேஷன் கிடைச்சிடும்… குட்டச்சி… வெயிட்லெஸா வேற இருக்கா… நல்லா ஹெல்தியான ஃபுட்ஸ் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விடணும்… இடுப்புல சதை பத்தல… இழுத்துப் பிடிச்சு கிள்ள இன்னும் கொஞ்சம் சதை வேணுமே… ஆனா ரொம்ப வாசமா இருக்கா… பெர்பியூம் யூஸ் பண்ற மாதிரி தெரியலையே… நேச்சுரலாவே இவ்ளோ வாசமா இருக்காளா…? மயக்குறாளே மண்டோதரி…’


ஏதேதோ நினைத்தபடியே தூங்கிப் போனான் தரணி. அதிகாலையிலேயே எழுந்து அனைவரும் திருமணத்திற்கு தயாராகத் தொடங்கினர். பட்டுப்புடவைகளும் அளவான நகைகளுமாய் பெண்கள் ஒவ்வொருவராய் வெளியேறி வர ஆண்களும் கிளம்பி இருந்தனர். பொடி நிற பட்டுப்புடவையை முன் கொசுவம் வைத்து கட்டி இருந்தார் பாட்டி. பட்டு வேட்டி பட்டு சட்டையில் மாப்பிள்ளைக்கான அனைத்து அம்சங்களுடன் தயாராகி வந்தான் முகிலன். முகிலன் எப்பொழுதும் தனி அழகுதான்… திருவிழாவிற்கு ஊருக்கு சென்றால் அவனையே வட்டமிட்டு சுற்றுவர் கிராமத்துப் பைங்கிளிகள்.


“வருஷம் பூரா நாம சீன் போட்டு சுத்தினாலும் எப்பவாவது வந்து புள்ளைகளை கவுத்தி போட்டுட்டு போயிடுறான்டா இந்த முகிலுப் பய… மங்கிப்போன சட்டையும் அழுக்கு லுங்கியுமா தோட்டத்துக்குள்ள வேலை செஞ்சு வைரம் பாய்ஞ்சு கெடக்கிற நம்மளைவிட ஏசிக்குள்ள உக்காந்து வேலை பார்த்து முக்கா டவுசரும் நெஞ்ச புடிச்ச மாதிரி பனியனும் போட்டுட்டு நெகுநெகுன்டு சாக்லேட் மாதிரி இருக்கிற இவய்ங்களத்தேன் பட்டிக்காட்டு கழுதைகளுக்கு கூட புடிக்குது…” ஆதங்கமாய் அங்கலாய்த்துக் கொள்வான் முகிலனின் பள்ளித் தோழன் பரமசிவன்.

(வெசனப்படாத பரமு… உன் பின்னாடியே எந்நேரமும் சுத்திட்டு திரியிற மாதிரி ஒரு மெத்தப் படிச்ச வெள்ளத் தோல் புள்ளைய கொண்டாந்து எறக்கி உன்ன ஹீரோவா போட்டு அடுத்த கதைல கலக்குறோம்)


மாப்பிள்ளை கோலத்தில் வந்து நின்ற தன் பேரனை கன்னம் வழித்து கண்கள் கலங்க நெட்டி முறித்தார் பாட்டி. தனது மேக்கப் கிட் கையில் இருந்ததால் மீராவை தேவதை போல் அலங்காரம் செய்திருந்தாள் பூச்செண்டு.


‘என் மேக்கப்பை பத்தி கேவலமா பேசினேல்ல பனைமரம்… உன் தொங்கச்சி அழகுல நீ மயங்கி விழணும்… நான் ஓடி வந்து உன்னை தாங்கி புடிக்கணும்…’


‘அப்போ கூட ஓடிப் போயி கட்டிப்பிடிக்கிறதுலயே கருத்தா இருக்கியே கூமுட்ட கழுத… ரொம்ப கெட்டு போய்ட்டடி நீ…’ விரல் நீட்டி கண்களை உருட்டி மிரட்டிய மனசாட்சியை நோக்கி மூக்கை சுழித்து நாக்கை நீட்டி பழிப்பு காட்டி துரத்தி அடித்தாள்.


மீராவைக் கிளப்பி வெளியே அனுப்பி வைத்து அதன்பின் தானும் கிளம்பித் தயாரானாள். எதிரெதிர் அறைகள் இரண்டும் ஒரே நேரத்தில் திறந்தன. பட்டு வேட்டி பட்டு சட்டை உடுத்தி கைச்சட்டையை முழங்கை வரை மடித்தபடியே வெளியே வந்தான் தரணி. பட்டுப்புடவையில் அழகு ஓவியமாய் மெலிதான அலங்காரத்துடன் தலையில் சூடி இருந்த மல்லிகை சரத்திற்கு இன்னும் கூடுதலாய் ஒரு பின்னை பக்கவாட்டில் குத்தியபடியே வெளியே வந்தாள் பூச்செண்டு.


அண்ணலும் நோக்கினான்… அவளும் நோக்கினாள்… பழைய வரலாற்றுப் படங்களில் போர் காட்சிகளில் இருபுறம் இருந்தும் எய்யப்படும் அம்புகள் ஒன்றுடன் ஒன்று டமாரென மோதி தீப்பிழம்புகளை கக்கி வெளியேற்றுமே… நிறைய பார்த்திருக்கிறோமே… இங்கு எய்யப்பட்ட பார்வை அம்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி மலர்களை சொரிந்தன.


‘இது என்ன…? பட்டு வேட்டி சட்டையில மாப்பிளையாட்டம் வந்து நிக்குது நம்ம ஆளு… கல்யாணம் முனிக்குத்தான… அடியாத்தி… என் புருஷன் வேட்டி சட்டையில ஏன் இம்புட்டு அழகா இருக்கியான்…? இந்த வித்தைக்காரன் என்னை எந்நேரமும் பல்டி அடிக்க வச்சுக்கிட்டே இருக்கானே…’


இளம் பச்சை நிறத்தில் இங்க் ப்ளு நிற பார்டரில் அவளுக்கென்றே தரணி ஆசையாய் தேர்வு செய்திருந்த பட்டுப்புடவையை உடுத்தியிருந்தாள் பூச்செண்டு. அந்த புடவையை தன் தாயிடம் கொடுத்து அவர் எடுத்து கொடுப்பது போல் கொடுக்கச் சொல்லி இருந்தான்.


‘என் மாமியா நல்ல ரசனைக்கார பொம்பளதேன்…’ புடவை கட்டும்போது புன்னகைத்துக் கொண்டே கட்டினாள்.


‘ராட்சஸி… இவ எதுக்கு இப்போ இவ்ளோ மேக்கப் பண்ணிக்கிட்டா… மீராவை டாமினேட் பண்ணிடுவா போல தெரியுதே…’ கூர்ந்து அவள் முகம் பார்த்தான்.


‘இல்லையே… அளவாதானே மேக்கப் பண்ணி இருக்கா… அப்புறம் ஏன் இவ்வளவு அழகா தெரியுறா…? இந்த எருமை மேய்க்கி எப்பவுமே அழகுதான… டரியல்… இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்… குனிஞ்சு முத்தம் கொடுத்தா கழுத்து வலி வந்துரும்… நேத்து மாதிரி வயித்துல தூக்கி உட்கார வச்சிக்கிறதுதான் வசதியா இருக்கும்…’


இரண்டு கைகளையும் பின் மண்டையில் வைத்து பூ குத்துவதில் மும்முரமாய் இருந்தாலும் கள்ளவிழிப் பார்வையால் தன்னவனை கபளீகரம் செய்தபடி இருந்தவளின் முகத்தில் படிந்திருந்த அவனது பார்வை பனிச்சறுக்கில் வழுக்கி விழுந்தது போல் நேராக இடுப்பு பள்ளத்தில் வந்து விழுந்து நின்றது. நீல நிற ரவிக்கைக்கு கீழ் பளிச்சென வெண்ணெய் கட்டியாய் கொஞ்சமே கொஞ்சம் சதைப்பற்றுடன் கண் சிமிட்டி சிரித்தது உடுக்கை இடுப்பு.


சிறுத்தை படத்தில் தமன்னாவின் இடுப்பை பார்க்கும்போது கட்டுப்பாடுகளை இழக்கும் கார்த்தியின் விரல்கள் போல் என்னை விடு நான் அங்கே போகணும் என்று அந்த இடுப்பை குறி வைத்து செல்லம் கொஞ்சின அவன் விரல்கள். எச்சில் கூட்டி விழுங்கினான். 


‘காலங்காத்தால என்னை ரொம்ப டெம்ப்ட் பண்றாளே… கையை காலை தூக்கி கண்டதையும் காட்டுறாளே…’


‘அப்படியா நல்லவனே… உன் நொல்லக்கண்ணு ஏன் அங்கே பாக்குது…? அது தப்பில்லையா ராசா…’ காதை திருகியது மனசாட்சி.


‘என் மனைவி… என் உரிமை… உன் வேலையை பார்த்துட்டு போடா என் வெண்ட்ரு…’


ஓடத் தயாரான விரல்கள் ஒவ்வொன்றையும் கடித்து தண்டனை கொடுத்து கட்டுப்படுத்தியபடி அவளை கடந்து போனவனுக்கு முக்கியமான ஒரு அங்கம் ஆப்பு வைத்திருந்தது… ஆம்… கையை கட்டுப்படுத்தினான்… கண்ணை கவனிக்காது போனானே.


“டிடிங்…” நெருக்கமாய் அவளிடம் ஒற்றைக் கண் மட்டும் அவசரமாய் ஆசையை வெளிப்படுத்தி இருந்தது.


‘பனைமரம் என்னை பார்த்து கண்ணடிச்ச மாதிரி இருந்ததே…’ அவள் உணர்ந்து முடிக்கும் முன் அவன் ஓடியே போயிருந்தான்.


“பூச்செண்டு…” அன்பான அழைப்பில் கவனத்தை பக்கவாட்டில் திருப்பினாள். சிரிப்புடன் நெருங்கி வந்தார் அனுசுயா. தன் கையில் இருந்த நகைப் பெட்டியை திறந்து முந்தைய நாள் அவளுக்கென்று மகனுடன் இணைந்து வாங்கிய ஆன்ட்டிக் மாடல் நெக்லஸை அவள் கழுத்தில் அணிவித்தார்.


“அ..அத்த…”


“கல்யாணத்தப்போ மருமகளுக்கு நகை போடணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்… அன்னைக்கு போட முடியாத சூழ்நிலை… இன்னைக்குத்தான் போட முடிஞ்சது… பிடிச்சிருக்கா…?” பிரியமாய் கேட்டார்.


“ரொம்ப அழகா இருக்கு அத்த…” தன் கழுத்தில் உள்ள நெக்லஸை வருடியபடியே ஆசையாய் கூறினாள்.


“உன் புருஷன் செலக்சன்தான்…” பெருமையாக சொல்லி சிரித்தார். உடல் முழுக்க இன்பமான சிலிர்ப்பு… கண்கள் அவனை தேடின… அவன்தான் அவன் கண் செய்த வேலைக்கு பயந்து காரில் போய் அமர்ந்து கொண்டானே.


“இந்த புடவைகூட அவன் செலெக்ஷன் தான்… சொல்ல வேண்டாம்னு சொல்லி இருந்தான்…” என்று நேர்த்தியாக போட்டுக் கொடுத்தார்.


உதடு கடித்து சிரித்துக்கொண்டவள் எதிரில் இருந்த ஆளுயிர கண்ணாடியில் தன்னை முழுவதுமாக பார்த்தாள். பின்னிருந்து அவள் இடுப்போடு கட்டிக்கொண்டு அவள் தோளில் நாடியை குற்றியபடி “செமையா இருக்கேடி என் பொண்டாட்டி…” காதுக்குள் மீசை உரச கிசுகிசுத்து டிடிங்… சற்றுமுன் செய்தது போன்றே ஒற்றைக் கண் சிமிட்டி கன்னத்தில் நச்சென ஒரு இச். ஜிவ்வென சிலிர்த்து வேகமாய் திரும்பினாள்.


“என்னாடி…? யாரை தேடுற…? இன்னும் எம்புட்டு நேரம் அழகு பாப்ப… எல்லாரும் காருக்கு போயாச்சு… அப்படியே என்னை கைத்தாங்கலா புடிச்சு கூட்டிட்டு போ… நேரமாச்சு…” பாட்டிதான் பக்கவாட்டில்.


‘சே… கற்பனையா…? கன்னத்துல ஈரம் பட்ட மாதிரியே இருந்துச்சே… என்னை பாடாப்படுத்தி வைக்குதே இந்த பனைமரம்… அய்யோ…’ தலையில் அடித்துக் கொண்டாள்.


“ஏன்டி தலையில அடிச்சிக்கிற…? என் கையை புடிச்சு கூட்டிட்டு போனா உன் பகுமானம் குறைஞ்சிடுமோ… காருக்கு போயி உன் புருஷன் கையை கோர்த்து புடிச்சுக்க… யாரு வேணான்டா…” புலம்பியபடியே வந்த பாட்டியை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு ஓடினாள்.


“மெல்ல போடி… புடிச்சு தள்ளி விட்றாத… உன் புள்ள குட்டிகளையும் வளர்த்து உன்ன மாதிரியே ஆளாக்கணுமில்ல…”


“கெழவி…ஆனாலும் உனக்கு அநியாயத்துக்கு ஆசைதேன்… உயிர் வாழணும்னு ஆசை இருக்கலாம்… ஆனாலும் இம்புட்டு ஆசை ஆகாது…” வாய்மூடிச் சிரித்தாள்.


மின்தூக்கியில் இருவரும் ஏறிக்கொள்ள அவள் கன்னத்தை ஆசையாய் வருடிய பாட்டி “எப்படியும் இன்னும் 8 மாத்தைக்கு (மாதத்திற்கு) அப்புறம் முகிலு பொண்டாட்டி புள்ள பெத்துருவா… நீயும் வெரசா நல்ல சேதி சொல்லிருத்தா… தரணி தங்கம் பெத்த புள்ள… இன்னும் கோணப் பார்வையும் கோக்குமாக்கு புடிச்ச புத்தியுமா இருந்து அந்த புள்ளைய ரொம்ப நாளைக்கு தள்ளி வச்சுட்டே இருந்திராத… வீட்டுல வக்கனையா ஆக்கி வச்சு பரிமாற மாட்டேன்டு சொன்னா பசி எடுத்தவன் ஓட்டலுக்கு சேவ நடைய கட்டிருவியான்… பார்த்து பதுவுஸா நடந்துக்க…” இலைமறை காயாய் பாட்டி கூற


“அதெல்லாம் விதவிதமா வக்கனையா நாக்கை சப்பு கொட்டிட்டு சாப்பிட்டுத்தான் இருக்காரு உன் பேராண்டி… புடிக்கலைன்னு ஹோட்டலுக்கு போனா கட் பண்ணி விட்ற மாட்டேன்…”


“என்ன்ன்னாது…?”


“நாக்கை சொன்னேன் கெழவி…” 


பாட்டிக்கு போன உயிர் திரும்பி வந்தது.


“எதுக்கு இவ்ளோ ரியாக்ஷன் கொடுக்குது இந்த கெழவி… நான் சரியாத்தானே சொன்னேன்… நான் எம்புட்டு ருசியா சமைக்கிற ஆளு… நான் ஆக்கி திங்காம போயிருமா அந்த பனைமரம்…” இல்லாத காலரை ஏற்றி விட்டுக்கொண்டு வீறுநடை போட்டுச் சென்றவளை எந்த கணக்கில் சேர்ப்பது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி.




Leave a comment


Comments


Related Post