இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 29-03-2024

Total Views: 15484

காதலொன்று கண்டேன்!

தேடல்  11

அவளுக்கென..

காரோட்டிக் கொண்டிருந்தவனின் விழிகளோ அடிக்கடி ஜீவாவை பார்க்க அவனோ விழி மூடி அமர்ந்திருந்தான்,இருக்கையில் சரிந்து.

அன்று போல் இன்றும் அலுவலகம் வரை வண்டியோட்டச் சொல்லி அவனிடம் சாவியை கொடுக்க நாவில் நடனமாடிய கேள்விகளை உள்ளுக்குள் மறைத்தவனோ ஆமோதிப்பாய் தலையசைப்பதை தவிர வேறென்ன செய்திருப்பான்,தரணி.

அடிக்கடி அவனைத் திரும்பி பார்த்தவனின் பார்வையை உணர முடிந்தாலும் காளையவன் எதுவும் கேட்கவில்லை.

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.
"தரணி.." எப்போதும் போல் அழுத்தம் திருத்தமாய் ஒலித்தது,காளையின் குரல்.

"சொல்லுங்க சார்ர்.."

"நீங்க கல்யாணம் பண்ணிக்கறத பத்தி என்ன நெனக்கிறீங்க..?" விரல்களால் இருக்கையின் மேற்பகுதியை தட்டிய படி கேட்டவனின் குரலில் எந்த வித உணர்வும் இல்லை.தரணிக்கு அவன் என்ன மனநிலையில் கேட்கிறான் என்பது புரியாதிருக்க பதில் சொல்லவும் பயமாய் இருந்தது.

"உங்கள தான் கேக்கறேன் தரணி.." மீண்டும் அழுத்தி சொல்ல அதற்கு மேலும் அவனின் மனம் பயந்தாலும் நா பேசாமல் இருக்குமா..?

"நல்ல விஷயம் தான சார்.."

"நல்ல விஷயம்னா..?" நிச்சயமாய் அது வெறுமனே கேள்வி இல்லை.ஏதோ உள்ளொன்று வைத்து கேட்பதாய் அவனுக்குத் தோன்றிற்று.

"இல்ல சார்..நமக்குன்னு ஒருத்தங்க.."

"நமக்குன்னு ஒருத்தங்க வருவாங்க..அதனால கல்யாணம் பண்ணிக்கிறது நல்லதுன்னு சொல்ற.."

"ஆமா..ஆமா சார்.." அவசரமாய் தலையசைத்தவனுக்கு காளையின் வார்த்தைகள் சாதாரணமாய் தோன்றாதிருக்கவே உடனடியான அந்த எதிர்வினை.

"நமக்குன்னு ஒருத்தங்க வருவாங்கன்னு சொல்றீங்க..அது எப்டி நல்லவங்களா இருக்கும்னு சொல்றீங்க..? ஒரு கொலகாரனா கொலகாரியா இருக்கலாம்..சைக்கோவா இருக்கலாம்..பேராச புடிச்சவங்களா இருக்கலாம்..ட்ரக் அடிக்ட் ஆ இருக்கலாம்..உங்கள புரிஞ்சிக்காத ஒருத்தரா இருக்கலாம்..உங்கள ஹர்ட் பண்ற ஒருத்தரா இருக்கலாம்..சந்தேகப் பேயா இருக்கலாம்..எத்தனயோ டைப்பா இருக்கலாம்..லேடீஸ் ஜென்ட்ஸ் ரெண்டுக்கும் காமனா தான் சொல்றேன்..இப்டிலாம் இருக்குறப்போ எப்டி  லைப் பார்ட்னர சூஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறது..அந்த லைப் சக்ஸஸ் ஆகறதுக்கு சான்ஸஸ் ரொம்ப கம்மியா தான இருக்கும்.." நிறுத்தி நிதானமாய் பேசியவனின் வார்த்தைகள் தரணியை குழப்பி விட்டாலும் காளை இத்தனை நீளமாய் பேசுவானா என்கின்ற அதிர்வு அந்த குழப்பத்தை பின்னே தள்ளிற்றே.

"நா சொல்றது சரியா..? தப்பா..?" மூடிய விழி வழியே கருமணியை உருட்டிய படி காளை கேட்க "ஆ..ஆமா..சார்.." திக்கிய படி பதில் சொன்னவனுக்கு இத்தனை நீளமாய் பேசும் ஜீவா சத்தியமாய் புதிது தான்.

"அப்றம் எப்டி கல்யாணம் நல்லதுன்னு சொன்னீங்க.."

"அ..அது இப்டிலாம் நா யோசிக்கல சார்ர்ர்ர்.." சொன்னவனுக்கு இன்னும் அதிர்வு அடங்க மறுத்ததே.

அதற்குள் அலுவகத்திற்கு வந்திருக்க கதவைத் திறந்து கொண்டு இறங்கிச் சென்றவனை புதிராய்ப் பார்த்திருந்தான்,தரணி.

சிறிது நேரம் கழிந்திருக்கும்.

கணினியில் ஆழ்ந்து இருந்தவனுக்கு தரணி அனுமதி கேட்பது புரிய ஆமோதிப்பாய் தலையசைத்தவனின் முன்னே வந்து பிதுங்கிய விழிகளுடன் நின்றான்,தரணி.

"என்ன தரணி..? எனி இம்பார்டன்ட் திங்..?"

"கம்பியூட்டர்ல இருந்து கண்ண எடுக்காம பேசறத பாத்தாலே பக்கு பக்குன்னு இருக்கே.."

"தரணி என்ன சைலன்டா இருக்கீங்க..விஷயத்த சொல்லுங்க.."

"சார்ர்ர்ர்..ஜெயகிருஷ்ணன் சார்..உங்களுக்கு போன் பண்ணாராம்..நீங்க அட்டன்ட் பண்ணுறீங்க இல்லயாம்.."

"யெஸ்ஸ்ஸ்..அதனால என்ன இப்போ..?" சாவகாசமாய் கேட்டவன் தானே,அவரின் அழைப்புக்களை வேண்டுமென்றே புறக்கணித்தது.

நிச்சயம் திருமண விடயம் பற்றி ஏதாவது கதைக்க தான் அவனுக்கு அழைப்பெடுத்திருப்பார் என்று அவனுக்குத் தெரியாதா..?

"சார்..நீங்க பொண்ண பாக்க போக சொன்னா காரணம் சொல்லி தள்ளிப் போட்டு லேட் பண்ணுவீங்களாம்..அதான் பொண்ண இங்க அனுப்பி இருக்காராம்.." மூச்சு விடாமல் சொல்லி முடித்தவனோ மறந்தும் காளையவனின் முகம் பார்க்கவில்லை.தவறியேனும் விழி நிமிர்த்தி நோக்கினால் பார்வையாலே எரித்து விடுவானே..?

அவன் நினைப்பு ஒன்றும் பொய்யாகவில்லை.கோபத்தில் முகம் இறுக விழிகள் இரண்டும் செக்கச் செவேலென சிவக்க ருத்ர மூர்த்தியாய் தான் மாறி இருந்தான்,அடங்காத காளையவனும்.அனலாய் தகித்தது,தேகம்.

"ஹவ்டேர்ர்ர்ர்..இவருக்க்க்க்க்க்கு..ஷட்ட்ட்ட்ட்ட்ட்.." கத்தவில்லை என்றாலும் வார்த்தைகளில் அப்படி ஒரு அழுத்தம்.

மேசையில் இருந்த பேபர் வெயிட் சுவற்றில் பட்டு தெறிக்க கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு தன் கோபத்தை தணிக்க முயன்று தோற்றுத் தான் போனான்.

"வர சொல்லுங்க தரணி.." ஆழமாய் சுவாசித்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கடுமையாய் மொழிந்தவனின் விழிகளில் ஒரு தந்திரம்.

அவனின் விழிகளில் மின்னும் தந்திரம் எல்லாம் அவள் விழிகள் அவனுக்கு இட்டிடும் மந்திரத்தின் முன் எம்மாத்திரம்..?

இங்கு மித்ராவுக்கு இதயம் தொண்டைக்குழிக்குள் வந்து துடித்துக் கொண்டிருந்தது.

விரித்துப் போட்டிருந்த துப்பட்டாவை மீண்டும் ஒரு தடவை சரிபார்த்துக் கொண்டவளின் விழிகள் அந்த இடத்தை ஆராயவும் மறக்கவில்லை.

ரிசப்ஷனில் இருந்த பெண் அவளை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்ல ஏனோ அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.

ஜீவாவைப் பற்றி தெரிந்தாலும் இந்த திருமண விடயத்தில் அவனின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் அவளால் கொஞ்சமும் கணிக்க முடியவில்லை.
அவள் கணிப்பதற்கு ஏதுவாக அவன் நடத்தைகளும் இல்லையே.

"மேம்..சார் உங்கள வர சொல்றாரு.." ரிஷப்ஷனில் இருந்த பெண் அலைபேசியை காதில் பொருத்திய படி சொல்ல திடுக்கிட்ட மனதுடன் நடந்தாள்,அவள்.

இரண்டு தண்ணீர்ப் போத்தல்களை கொண்டு வந்து மேசையில் வைத்தவனை விட்டால் அடித்திருப்பான்,காளை.

"விட்டா ஸ்வீட் எல்லாம் கொண்டு வந்துருவான் போல.." இதழ்களுக்குள் முணுமுணுத்த காளையின் வார்த்தைகள் தரணிக்குப் புரியவில்லை.

அவனின் அருகே ஒரு தண்ணீர்ப்போத்தலை வைக்க முறைத்தவனை பாவமாய் பார்த்தவனுக்கு காளையின் விழிகளில் இருந்த கேள்வி புரியாமல் இல்லை.

"கிருஷ்ணா சார் தான்..கல்யாண விஷயம் பேச போறீங்க..நர்வஸா இருக்கும்..தண்ணி வக்க சொன்னாரு.." சொல்லி முடிக்க பற்களை நறநறத்தவனுக்கு இன்னுமே கோபம் ஏறத் தான் செய்தது.

"எனக்கு வாட்டர் பாட்டில் தேவயா இருக்காது..அத எடுத்துரு.." என்க அதற்கு எதிர்ப்பேச்சு ஏது..?

"சார் ஜூஸ் ஏதாச்சும் வேணும்னா சொல்லுங்க.." பட்டென சொல்லி விட்டு அவன் வெளியேற அப்படியே சுழல் நாற்காலியில் சாய்ந்து மறுபுறம் திரும்பினான்,காளையவன்.

பேச வேண்டிய விடயங்களை பட்டியல் படுத்திக் கொண்டு அவன் நிதானித்த கணம் செவியில் நுழைந்தது, "எக்ஸ்க்யூஸ் மீ.." என்கின்ற அழைப்பு.

நேற்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டதன் விளைவாக மித்ராவின் தொண்டை கட்டியிருக்க கரகரப்பாய் ஒலித்த குரலால் அவளை யாரென்று இனங்காண முடியாமல் தான் போனது,காளைக்கு.

"யெஸ்ஸ்ஸ்ஸ்..கமின்.." கம்பீரமாய் குரல் கொடுத்தவனோ சுழல் நாற்காலியை அவள் புறம் திருப்ப எத்தனிக்கவில்லை.யாரென்று அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம் கொஞ்சமேனும் மனதில் இருந்திருக்க வேண்டுமே..?

அவளின் காலடிச்சசத்தத்தை வைத்தே மேசையின் அருகே அவள் வந்திருப்பதை புரிய வைத்திட "டேக் யுவர் சீட்.." என்றான்,அவளைப் பாராமலே.

மித்ராவுக்கும் அது பெருத்த நிம்மதியாய் இருந்தது.தன்னை சமப்படுத்திக் கொள்ள நேரம் கிடைத்தது போல் உணர்ந்தது,அவள் மனம்.

காளையவனுக்கு எப்படியாவது பேசி வந்திருப்பவளை முடியுமானவரை வேகமாக கிளப்பி விட வேண்டும் என்கின்ற எண்ணமே மனம் முழுவதும் வியாபித்திருக்க பேசத்துவங்கினான்,காளை.

"நா ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு வர்ரேன்..எனக்கு இந்த மேரேஜ் கமின்ட்மண்ட்ஸ எல்லாம் கொஞ்சமும் நம்பிக்க இல்ல.." திணறாமல் சொன்னாலும் விழிகளுக்குள் மித்ராவின் விம்பம் தான் நிறைந்திருந்தது.

"அங்கிள் சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உங்கள மீட் பண்ண ஒத்துகிட்டேன்..ஸோ இந்த மேரேஜ நிறுத்.." என்ற படி மறுபுறம் திரும்பியனின் விழிகள் பேரதிர்வில் விரிந்து கொண்டன,தான் சொல்வதை தீவிரமாய் செவிமடுத்த படி தன் முன்னே அமர்ந்திருப்பவளைக் கண்டு.

எதிர்பாரா தருணங்களில் இதயத் துடிப்பை எகிற வைக்கும் விதமாய் அவளின் தரிசனம்.
இதயம் துடிக்க இமைகள் தடுக்க மறக்க மூச்சு விட மறந்தான்,காளை.

அவனின் நினைவுகளை களவாடியவள் நிகழையும் எடுத்துக் கொள்ள முயன்று அமர்ந்திருப்பது அவனுக்கு ஒரு உறை நிலையை தோற்றுவிக்காமல் இல்லை.என்றுமில்லாமல் எதிர்பாரா விதமாய் "க்க்..க்க்.."திடுமென விக்கத் துவங்கியது,காளையவனுக்கு.

"சாரி..சா க்க்..சாரி.." என்ற படி தண்ணீர்ப் போத்தலை தேட தன்னருகே வைக்கப்பட்டிருந்ததை அவன் புறம் தள்ளி வைத்தவளை கண்டு ஆசுவாசப்பட்டாலும் அதை முகத்தில் வெளிப்படுத்தவில்லையே,சிறிதேனும்.

சட்டென இழுத்தெடுத்து திறந்து "மடக்..மடக்.." என்ற ஓசையுடன் இடையிடையே விக்கலுடன் நீரைப் பருகிட போத்தலை பற்றியிருந்த அவனின் விரல்கள் நடுக்க நீர்த்திவலைகள் ஆடையில் சிதறின.

நல்ல வேளை அவளுக்கு முதுகுகாட்டும் விதமாய் மறுபுறம் திரும்பியது.இல்லையென்றால்,காளையவனின் தடுமாற்றத்தைக் கண்டு அவளுக்கு விக்கல் எடுத்திருக்கும்.

பாதி போத்தலை காலி செய்திருந்தான்.விக்கலுக்ககாக குடித்தானா..? பதட்டத்தில் விழுங்கித் தொலைத்தானா..? அவனல்லவா பதில் சொல்ல வேண்டும்.

விக்கல் மட்டும் நின்றபாடில்லை.
"க்க்..க்க்.." விக்கிக் கொண்டே இருக்க மீண்டும் நீரை அருந்தியவனின் விரல்கள் நெஞ்சை நீவிட "ரிலாக்ஸ்ஸ் ஜீவா.." தனக்கே சொல்லிக் கொண்டாலும் விக்கலும் நின்றபாடில்லை.பதட்டமும் அடங்கியபாடில்லை.

இதற்கு மேலும் அவள் புறம் திரும்பி அமராது இருப்பது சரியில்லை என்று தோன்றிட அவள் புறம் திரும்பியவனில் இருந்து மீண்டும் ஒரு "க்க்..".

அவளுக்கும் பதட்டம்.
இத்தனை நேரம் ஆகியும் அவனின் விக்கல் அடங்கவில்லை என்பதில்.

"சொ..சொல்..க்க்..சொல்லுங்க மி..க்க்..மிஸ்.." திக்கலும் விக்கலுமாய் காளையவன் பேசுவதை கண்டிருந்தால் தரணி மனதுக்குள்ளாலாவது நக்கலடித்திருப்பான்.

"தண்ணி எல்லாம் தீந்துருச்சா..?" சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்டவளுக்கு தலையசைப்பை பதிலாக கொடுக்கும் தருணத்தில் மீண்டும் ஒரு "க்க்..".

தன் பையில் இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து அவன் புறம் நீட்ட தரணிக்கு அழைப்பெடுக்கச் சென்றவனின் செயல் பாதியிலே தடைப்பட வாங்கிக் குடித்தவனின் செயலில் அத்தனை பதட்டம்.

அவளோ பரிதவிப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருக்க அவளின் பார்வையை உணர்ந்தவனுக்கு இன்னும் விக்கல் அதிகமாவது போல் இருக்க ஓர விழிகளால் அவளின் விழிகளை ஏன் தான் ஆராய்ந்தானோ..?

மடமடவென உள்ளுக்குள் இறங்கிய நீரும் அவனின் விக்கலை கட்டுப்படுத்த தவற "எக்ஸ்.. க்க்..க்யூஸ்மீ..க்க்.." என்ற படி அறையை ஒட்டியிருந்த அவனின் அறைக்குள் நுழையப்போக காளையவனை தடுத்து நிறுத்தியிருந்தது,அவளின் குரல்.

"சார்..கண்ணு காது மூக்கு வாய் எல்லாத்தயும் ஒரே தடவைல பொத்திகோங்க..விக்கல் நின்றும்.." சொன்னவளுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்து விட்டு உள்ளே சென்று அவள் சொன்னதை செய்த பின் விக்கல் அடங்கியது.

நிலைக் கண்ணாடியில் தன் விம்பத்தை பார்த்து நெஞ்சை நீவிய படி "ஜீவா ரிலாக்ஸ்.." தனக்குத் தானே எத்தனை முறை சொல்லிக் கொண்டானோ..?

"அவ யாரோ ஒரு பொண்ணு தான்..ஒன்னுல்ல..ஜஸ்ட் ரிலாக்ஸ்.." தடுமாறிய மனதிடம் அறிவுறுத்தியவனுக்கு தெரியாதே,ஜீவாவின் ஜீவனாய் அவள் மாறப் போவது.

தடுமாற்றம் எப்போதும் தடம் மாறப் போவதன் முதல் படியல்லவா..?

ப்ளேசரை கழற்றி கதிரையில் விரித்து வைத்து விட்டு ஷர்ட்டின் கையை முட்டி வரை மடித்து விட்டுக் கொண்டே அவன் வெளியே வர அவளின் பார்வை அந்த அறையை ஒரு வித பிரமிப்புடன் அலசிக் கொண்டிருந்தது.

"சாரி.." கம்பீரமான குரலில் சொல்லிக் கொண்டு வந்து அமர்ந்தாலும் அவனின் ஆணிவேர் ஆடிக்கொண்டிருப்பதை ஆடவன் மட்டுமே அறிவான்.

மன்னிப்பை கூட இத்தனை கம்பீரமாய்  கேட்க முடியுமா என நினைத்தவளோ பதிலாக சிறு புன்னகையை கொடுக்க இதழ் பிரிக்காது புன்னகைத்தான்,காளையவன்.

"நீங்க சொல்றது சரி தான் சார்..எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல..அதனால நீங்க சொன்ன மாதிரி மேரேஜ ஸ்டாப் பண்ணிர்லாம்.." சுருக்கமாய் அவள் பேச அவனின் பார்வை அவளை கூர்மையாய் அளவிட்டது.

தேடல் நீளும்.

2024.03.29


Leave a comment


Comments


Related Post